கோலுக்கு கை கொடுப்போம்

” “

‘கோல்’ என்ற தமிழ் சொல்லுக்கு நாட்டிய மரபில் பெரும் முக்கியத்துவம் உள்ளது. வடமொழியில் பரத முனியால் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரத்தில் (நாடகவியல்) ஒரு இதிகாசக் கதை உண்டு, அதில் பரதபுத்திரர்கள் நாடகம் நடத்தும்போது, அங்கு அதைப் பார்த்துக்கொண்டிருந்த அசுரர்கள் விக்னங்களை ஏவி நாடகத்தைத் தடை செய்ய முயன்றனா. அப்பொழுது இந்திரன் தனது ஜர்ஜரை எனப்படும் இந்திர த்வஜத்தைக் கொண்டு அவ்விக்னங்களை அடித்து விரட்டியதால், நாட்டிய (நாடக) அரங்கில் ஜர்ஜரை பூஜை செய்யும் சம்பிரதாயம் உருவாயிற்று. இந்த ஜர்ஜரை பூஜை விதிகள் நாட்டிய சாஸ்திரத்தின் பூர்வாங்க விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மரபில், அகஸ்திய முனி, தென்திசையை நோக்கி வரும்போது தம்முடன் பதினெட்டு யாதவ அரச குமாரர்களை அழைத்து வந்து இங்கு தங்க வைத்ததாகத் தொல்காப்பியத்தின் உரையில் கூறப்படுகிறது. இந்த யாதவர்கள் குலத்திற்கும் கிருஷ்ணருக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே. ஆனால், பசு மேய்க்கும் இக்குலத்தவர்கள் கண்ணன் பிறப்பிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே ‘ராச்’ என்னும் கோல் ஏந்திய நடனத்தை ஆடிவந்தனா;. இந்த ‘ராச்’ கிருஷ்ண வழிபாட்டுச் சமுதாயத்தின் காலத்தில் விரிவடைந்து கண்ணன் கோபிகா ஸ்திரீகள் ஆடும் நடனமாக உருவெடுத்தது. குஜராத்தில் ‘கர்பா’ எனப்படும் நாட்டியமும் இக்கிருஷ்ண வழிபாட்டுச் சமுதாயத்தில் வளர்ந்த கலையே. ஆண்கள் கிருஷ்ணனாகவும் பெண்கள் கோபியராகவும் வேடம் தரித்து ஆடும் நடனம் ‘தண்டராச்’ அல்லது ‘கோப்-வேணி-பத்ததி’ எனப்படும்.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் மாதவிக்கு அளிக்கப்பட்ட ‘தலைக்கோலி’ பட்டமும் மரபும் ‘கோல்’ அல்லது ‘இந்திர ஜர்ஜரையை’க் குறிப்பதாகும். நாட்டிய நங்கையருக்குத் தலையில் கோல் வைத்துப் பட்டப்பெயா சூட்டும் பத்ததி (வழக்கம்) பதினெட்டாம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்தது. பல தேவரடியார்கள் தலைக்கோலி எனும் அடைமொழி பெற்று விளங்கினர். சிலப்பதிகாரத்தில், வினோதக்கூத்து வகைகளில் கலிநடம் எனும் வகையில், ’கோல்ஆட்டு’ எனும் கோல் ஏந்திய நடனமும் அதற்கான விதிமுறைகளும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘ராச்’ நடனம், ஆயச்சியர் குரவை எனும் பகுதியில் இடையர்கள் கண்ணனை வேண்டிப் பாடி ஆடும் ஆடல்களில் ஒன்றாகக் காணலாம். இவை தவிரப் பல பண்டைய தெலுங்குப் படைப்புகளிலும், மராட்டி மொழி நூல்களிலும் (தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்) கோலாட்டம் மற்றும் பின்னல் கோலாட்டம் பற்றி விவரித்துள்ளனர். திருஞானசம்பந்தப் பெருமானின் திருவையாற்றுப் பதிகத்தில் (புலனைந்தும் பொறிலங்கி…) கோலேந்தி ஆடும் நாட்டிய நங்கையர்கள் பற்றி விவரித்துள்ளார்.

“கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவி முலையார் முகத்தில் நின்று
சேலோடச் சிலையாட சேயிழையார் நடமாடும் திருஐயாரறே” – (ஒன்பதாம் பாட்டு)

வட இந்தியாவில் யமுனை நதிக் கரையிலும், துவாரகையிலும், பிருந்தாவனத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் கோபிகளுடன் ஆடும் நடனம் தண்டராசகம். இன்றும் தசரா பண்டிகையின்போது இது ‘டாண்டியாராச்’ என ஆடப்படுகிறது.

திருவலம் கோயில்: 13-ஆம் நூற்றாண்டுக் கற்பாத்திரத்தில் கோலாட்டம்
திருவலம் கோயில்: 13-ஆம் நூற்றாண்டுக் கற்பாத்திரத்தில் கோலாட்டம்

தென் இந்தியாவில் இந்து சமய வழிபாடுகளின் ஓர் அம்சமாக இந்நடனம் ஆடப்பட்டது. மார்கழி, தை பண்டிகைகளிலும் மற்றும் மகர நோன்பு அல்லது மானம்பு நவராத்ரி (மகாநவமி அல்லது தசரா) எனும் தினங்களிலும் தண்டராசகம் ஆடப்பட்டன. ‘திப்பிரி’ எனும் குட்டைக் கோல்கள் ஏந்தி ஆடும் நாட்டியம் இது. இதில் பல வகை உண்டு. ‘ராச்’ அல்லது ‘ரசா’ எனும் வார்த்தைக்கு கலை அம்ச அனுபவம் எனும் அர்த்தம் கூறலாம். ரசனை எனும் சொல்லின் திரிபு அது. ஆகவே ஆண்களும் பெண்களும் ‘திப்பிரி’ கொண்டு இசைக்கேற்பக் கூடி ஆடும்பொழுது அவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அது ரசானுபவத்தை அளிக்கிறது. இந்நடனத்தின் அடைவுகளும் அசைவுகளும் நின்றபடியும், அமர்ந்தபடியும், நடந்தபடியும் அமைந்திருக்கும். நாட்டியமணிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து இசைக்கேற்ப வகுக்கப்பட்ட அடைவுகளைச் செய்துகொண்டு கோலை எதிராளியுடன் தட்டியவண்ணம் ஆடுவார்கள்.

தாளமும், தாள வாத்தியங்களுமே இதில் பிரதானம். இதில் அபிநயம் (முகபாவங்கள்) மிகக் குறைவு.

கோலாட்டத்தின் ஒரு முக்கிய வகை பின்னல் கோலாட்டம். பல வண்ண துணிகளையோ அல்லது கயிற்றையோ உத்தரத்திலிருந்து தொங்கவிட்டு அதை நடனமணிகளின் இடக் கைக்கோலில் கட்டி அவர்கள் அசைவுகளைச் செய்யும்பொழுது மெதுவாகக் கயிறுகள் ஓர் அழகிய பின்னலாக பின்னப்படும். பிறகு ஆடிய முறையின் நேர் எதிர் முறையில் ஆடிப் பின்னல் அவிழ்க்கப்படும். இதுவே ‘கோப் வேணி’. வேணி என்றால் பின்னல் என்று பொருள். இதற்குக் கிருஷ்ண லீலை பற்றிய பாடல்கள் இசைக்கப்படும். ஆடும் ஆண்களும் பெண்களும் வண்ண ஆடை அலங்காரங்கள் செய்து கொள்வார்கள்.

தஞ்சாவூரில் ’மகரநோன்புச்சாவடி’ (மானம்புச்சாவடி) எனும் ஓர் இடம் உள்ளது. அங்கே தஞ்சை மன்னர்கள் காலத்தில் கோலாட்டமும், பின்னல் கோலாட்டக் கச்சேரிகளும் நடைபெற்றனவாம். இன்றைக்கும் ஒரு சில கிராமங்களில் விடியற்காலை சூரிய உதயத்திற்கு முன்னால் கோயில்களில் பெண்கள் கூட்டமாகக் குழுமித் ‘திருப்பாவை’ போன்ற பாடல்களைப் பாடித் தோழிகளை அழைத்துக் கோலாட்டம் போடுகின்ற மரபைப் பார்க்கலாம்.

சென்னை அருகேயுள்ள வாயலூர் பல்லவர் காலக் கோயில் மண்டபத்தில் கோலாட்டக் காட்சி. புகைப்படம் உதவி: சந்திரசேகரன்
சென்னை அருகேயுள்ள வாயலூர் பல்லவர் காலக் கோயில் மண்டபத்தில் கோலாட்டக் காட்சி. புகைப்படம் உதவி: சந்திரசேகரன்

‘ஜவ்வந்திரை’ எனும் ஒர் மரபு சார்ந்த சடங்கில் ஊரில் உள்ள பணக்காரார்கள் வீட்டில் ஊர்க் கன்னிப் பெண்களெல்லாம் கூடிக் காமதேனுவை வணங்கி, தண்ட-ராசகம் ஒரு மாதமோ அல்லது ஒரு பக்ஷமோ தினமும் விடியற்காலையில் ஆடுவார்கள். அம்மாதம் முழுவதும் அவர்களுக்குப் புத்தாடைகளும் மற்றும் பல பரிசுகளும் அக்கணத்தலைவன் அளித்து நோன்பைப் பூர்த்தி செய்வது வழக்கம்.

கோயில் திருவிழாக்களிலும், திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளிலும் பல வகைக் கலை நிகழ்ச்சிகளில் கோலாட்டமும், பின்னல் கோலாட்டமும் இன்றியமையாதவை. மன்னர்களும் அரசவை நாயகர்களும் இக்கலைக்கு மிகுந்த ஆதரவு அளித்து வந்தனர்.

தஞ்சை நால்வர் குடும்பத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பழமையான அரியதொரு புகைப்படம் இது. தஞ்சையில் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் சிறுமிகள் கோலாட்டம் ஆடுவதைக் காணலாம். பின்னணியில் வயலின் வித்வான் வடிவேலுவுக்கு ஸ்வாதித் திருநாள் மகாராஜா பரிசளித்த தந்த வயலினையும் காணலாம். இது ஸ்ரீ பொன்னையா நாட்டியக் கல்லூரியின் எட்டாம் ஆண்டு விழாப் புகைப்படம் - திரு.பொன்னையா, திரு.K.P.S.சந்திரசேகரன், திரு.எஸ்.சிவக்குமார் குடும்பத்தின் தனிப்பட்ட சேகரத்திலிருந்தது.
தஞ்சை நால்வர் குடும்பத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பழமையான அரியதொரு புகைப்படம் இது. தஞ்சையில் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் சிறுமிகள் கோலாட்டம் ஆடுவதைக் காணலாம். பின்னணியில் வயலின் வித்வான் வடிவேலுவுக்கு ஸ்வாதித் திருநாள் மகாராஜா பரிசளித்த தந்த வயலினையும் காணலாம். இது ஸ்ரீ பொன்னையா நாட்டியக் கல்லூரியின் எட்டாம் ஆண்டு விழாப் புகைப்படம் - திரு.பொன்னையா, திரு.K.P.S.சந்திரசேகரன், திரு.எஸ்.சிவக்குமார் குடும்பத்தின் தனிப்பட்ட சேகரத்திலிருந்தது.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஒரு சுவடியில் மராட்டி மொழியில் பின்னல் கோலாட்ட விதிமுறைகளும் அதன் வகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் இருபத்தொரு வகைப் பின்னல் கோலாட்ட முறைகளை விவரிக்கின்றனர். ஒவ்வொரு வகைக்கும் எத்தனை நடனமணிகள் தேவை, எந்தத் திசைகளில் அவர்கள் நிற்கவேண்டும், என்ன அடைவுகள் செய்ய வேண்டும் என விவரிக்கின்றனர். இவற்றுள் ஆறாம் வகைக்கு ‘நாகபந்தனம்’ என்று பெயர். இவ்வகையில் பின்னல் இரு பாம்புகள் பின்னியது போல் அமையும். இதற்குத் ‘தா தை தா’ எனும் சொற்கட்டு பயன்படுத்தப்பட வேண்டும். ஒன்றில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வகையிலும் எண்ணிக்கை கூடி அடைவு வகைகளும் நடன அமைப்பும் மிக நுட்பமாகச் சேர்க்கப்பட்டு வருவதைப் பார்க்கலாம். ஆடுபவர்கள் மிகக் கவனமாகப் பின்னல் போட வேண்டும். ஒருவர் தவறினாலும் பின்னல் பிசகிவிடும். அதேபோல் போட்ட பின்னலை அவிழ்க்க, கடைசியில் நின்றவர்கள் முதலில் நகர ஆரம்பிக்க வேண்டும். எதிரில் உள்ளவர்களைச் சந்திக்கையில் எப்பொழுதும் அவர்களின் இடதுபுறமாகச் செல்ல வேண்டும். இப்படிக் குறிப்பிட்ட விதிமுறைப்படி அமைந்த நடனம் பின்னல் கோலாட்டம்.

பரதர் கூறும் ‘பிண்டி பந்தம்’ எனப்படும் கூட்டு நடன முறைகளில் ஒன்றாக இப்பின்னல் கோலாட்டத்தைக் கருதலாம். பரதநாட்டிய பத்ததியில் பின்னல் கோலாட்டமும் ஒரு வகையாக இருந்தது. தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்த பந்தணை நல்லூரின் நெல்லையப்ப நட்டுவனார் ஓர் அழகிய ஸ்வரக் கோர்வைக்கு இப்பின்னல் கோலாட்டத்தை நடனம் அமைத்ததாகச் செவிவழிச் செய்தி உண்டு. எட்டிலிருந்து இருபது நாட்டிய நங்கையர் வரை கோலாட்டம் போட நாட்டியம் அமைத்தாராம். இந்த உருப்படி இன்று வரை தஞ்சை மராட்டிய மன்னர்களின் சபைக் கலைஞர்களாகத் திகழ்ந்த தஞ்சை நால்வரின் தலைமுறையில் வரும் நட்டுவனார்களால் கற்றுத் தரப்படுகிறது.

வட இந்தியாவில் தாண்டியாராச் கிருஷ்ண லீலைப் பாடல்களுக்கு ஆடும்பொழுது, இங்கு ஸ்வரக் கோர்வைக்கு ஆடும் மரபு இக்கலையின் தேசி (வட்டார) வளர்ச்சியைக் குறிக்கிறது. ஆனந்த பைரவி ராகத்திலும் திஸ்ர நடையிலும் அமைந்த ஸ்வரக் கோர்வை பெரும்பாலும் ஊரில் கர்ப்பிணிப் பெண்களின் வளைகாப்பின்போது ஆடப்படும். பின்னல் கோலாட்டமும், வீணைக் கச்சேரிகளும் கர்ப்பிணிகளுக்கு மரபு வழி வந்த ஓரு காப்பாகக் கருதப்படுகின்றன.

நாகப்பட்டினம், தரங்கம்பாடி முதலிய ஊர்களில் மீனவர் சமூக ஆண்கள் வட்டமாகக் கூடிநின்று, திரைப்படப் பாடல்களையோ, அப்பாடலின் மெட்டுகளில் தாங்களே இயற்றிய பாடல்களையோ பாடிக்கொண்டு சிலம்பக் கழிகளைச் சுழற்றிக்கொண்டே கோலாட்டம் ஆடுவதுண்டு. கோயில் திருவிழாக்களில் இந்நிகழ்ச்சி நடைபெறும். இது பின்னல் கோலாட்ட மரபின் வட்டாரத் தழுவல் ஆகலாம்.

வேந்தனும் மக்களும் இக்கலையை ஆதரித்ததாலும், கோயில் சடங்குகளில் இது இடம் பெற்றதாலும், பெண்கள் கோலாட்டம் மற்றும் பின்னல் கோலாட்டம் போடும் காட்சிகள் சிற்பங்களாகப் பல கோயில்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன. வட ஆர்க்காடு மாவட்டம் திருவலம், ஸ்ரீ வில்வநாதர் கோயிலின் நுழைவாயிலின் முன் மண்டபம் வலப்புறத்தில் அமைந்திருக்கும் வட்டமான கல் தொட்டியில் செதுக்கப்பட்டுள்ள அழகிய சிற்பத்தில் பெண்கள் கோலாட்டக் கோல்களுடன் ஆடுவது போலக் காட்டியிருக்கிறார்கள். இதே போல் தாராசுரம் கோயிலின் மண்டபத்தினுள் நாயக்கர் காலச் சித்திரங்களில் கோலாட்ட நடனத்தைக் காணலாம். தஞ்சை அரண்மனை தர்பாரில் பல நாயக்கர் காலக் கோலாட்டச் சித்திரங்களைக் காணமுடியும்.

இப்படிக் கோலாட்டம் மற்றும் பின்னல் கோலாட்டம் எனும் நாட்டிய மரபு இந்தியாவில் மிகத் தொன்மையான காலந்தொட்டு இருந்து வந்ததை அறிகிறோம். ஆனால், இக்கலை இப்பொழுது அழிந்துவரும் அபாயத்தில் இருக்கிறது. கோயில்களிலும் இதை ஆடும் மரபு அழிந்துவிட்டது. ஆண்களும், பெண்களும் நவநாகரிக ‘பப்’களுக்குச் சென்று இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் பொழுதைக் கழிக்கிறார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுக்கிடையே நல்லதொரு நட்பு வளர நம் கலை சார்ந்த கலாசாரமே முக்கிய வழிகாட்டி ஆகும். அதில் இப்படிப்பட்ட கூட்டு நடன முறைகள் மகிழ்ச்சி மட்டும் அல்லாது சமத்துவம், நட்பு, சமூக ஒழுக்கத்தையும் அவர்களுக்குள் வளர்க்கும். நம் கலைகளில் உள்ள நல்ல உற்சாகம் தரும் நடன வகைகள் தெரிந்தால், அது தரும் சந்தோஷம் புரிந்தால் அவை இன்றைக்கு வேகமாக வளர்ந்துவரும் ‘டிஸ்கோ தேக்’ கலாசாரத்தை விவேகத்துடன் எதிர்கொள்ள முடியுமே!

” “

One Reply to “கோலுக்கு கை கொடுப்போம்”

Comments are closed.