தொடர்ந்து சுருங்கும் இந்திய எல்லைகள்

india-indep-1947-2ஆகஸ்ட் 1947ல் இந்தியாவின் சரித்திரத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

14ம் தேதி, இயற்கை, பூகோளம், வரலாறு எல்லாவற்றுக்கும் எதிராக தேசம் இரண்டாகப் பிளக்கப்பட்டது. பாகிஸ்தான் என்று ஒரு டொமினியன் பிறந்தது. “என் இதயத்தைப் பிளப்பதுபோல் உணருகிறேன்” என்று காந்திஜி அங்கலாய்த்தார். இரண்டு வார முன்பு வந்த ஆனந்தவிகடன் தலையங்கம்  “இன்னும் பதினைந்து நாட்களுக்குப் பின்னர் நம் நாட்டினர் எவரும் தன்னை இந்தியன் என்று அழைத்துக்கொள்ள முடியாது; ஹிந்துஸ்தானியன் அல்லது பாகிஸ்தானியன் என்றுதான் கூறிக்கொள்ள முடியும்” என்று வருத்தப்பட்டது. (நல்லவேளையாக அப்படி ஆகவில்லை).

அதேநாள் நடுநிசியில், 12 மணி அடித்து ஆங்கிலக் காலண்டர் பிரகாரம் 15ம் தேதி தொடங்கியவுடன் பிரிவினைக்கப்புறம் மீதியிருந்த நாடு (முழு இந்தியாவில் ஏறக்குறைய முக்கால் பங்கு) இந்தியன் யூனியன் என்றபெயருடன் இன்னொரு நாடாக உதயமாயிற்று. அதற்கு முன் ஜோதிட ரீதியில் நாள் நன்றாக இல்லையாம். பாகிஸ்தான் பிறந்தவேளை மரண யோகம் என்றும் சொன்னார்கள். அடுத்த அறுபத்தியிரண்டு ஆண்டுகால வரலாற்றைத் இன்று திரும்பிப் பார்ததால் அது சரியாக இருக்கலாம் என்று தோன்றவும் செய்யலாம்.

சுதந்திரதினத்தன்று காலை எங்கள் பள்ளிக்கூடத்தில் (தாராபுரம் போர்டு ஹைஸ்கூல்) ஒரு விழா இருந்தது. அது லீவு நாள்தானே என்று யாரும் வராமலிருக்கவில்லை. வாத்தியார்கள் பையன்கள் எல்லோருமே ஏதோ ஒரு மிதப்பில் இருந்தார்கள். சீனிவாசன் என்று ஒரு சீனியர் வகுப்புப் பையன் ‘வந்தேமாதரம்’ (ஸுஜலாம் ஸுபலாம்) என்ற தேசீய கீதம் பாடினான். நாற்பது வருடங்களாக அப்பாட்டு தடைசெய்யப்பட்டிருந்ததாக எங்கள் ஹெட்மாஸ்டர் தன் பிரசங்கத்தில் (இப்போதெல்லாம் ‘உரை’ என்கிறார்கள். அப்போதெல்லாம் ‘பிரசங்கம்’) சொன்னார். அப்படித்தான் இருக்கவேண்டும். அதுவரை அந்தப்பாட்டு எங்கும் கேட்கவில்லை. ஆனால் என் அம்மாவிடம் ‘சுதேச கீதங்கள்’ என்று இரண்டு பாகங்களில் இருந்த (ஒவ்வொரு பாகமும் விலை ‘ஆறு அணா’ ) பாரதியாரின் கவிதைத்திரட்டில் இதையும் அதற்குப் பாரதியார் எழுதிய இரண்டு தமிழாக்கங்களையும் பார்த்திருந்தேன். அவற்றில் ஒன்று ‘இனியநீர் பெருக்கினை இன்கனி வளத்தினை’ என்று ஆரம்பிக்கும் என்று ஞாபகம்.

சுதந்திரத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன் விசாகப்பட்டணத்தில் எம்.எஸ்ஸி படித்துக்கொண்டிருந்த என் தமையன் ஒரு நல்ல வேலை கிடைத்து கல்கத்தா போய்ச்சேர்ந்திருந்தார். அப்போது கல்கத்தாவில் வகுப்புக்கலவரங்கள் நடந்து கொண்டிருந்த சமயம். அவர் ரயிலில் போய் ஹௌரா ஸ்டேஷனில் இறங்கிய அன்றைக்கு 19 பேர் கொல்லப்பட்டார்கள் என்று அப்பா கவலையோடு சொன்னார். ஆனால் சில நாட்களில் மகாத்மா கல்கத்தாவுக்கு வந்து உண்ணாவிரதம் மேற்கொண்ட பின்னர் சகஜ நிலை திரும்பிவிட்டதாகவும் சுதந்திர தினம் சுமுகமாக எல்லா வகுப்பினராலும் கொண்டாடப்பட்டதாகவும் இனி கவலை வேண்டாம் என்றும் அண்ணாவிடமிருந்து தந்தி வந்தது. தவிர, சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் ஜலஜோகா என்ற பிரசித்தி பெற்ற கல்கத்தா ரசகுல்லாவும் ஒரு டப்பா தபால் பார்சலில் அனுப்பினார். அந்த அதிசயத்தை நாங்கள் அனைவரும் அப்போதுதான் முதல்முதலாகப் பார்க்கவே செய்கிறோம். ஆம், அன்று நம்மூரில் ரசகுல்லாவெல்லாம் கிடையாது. ஆனால் எல்லோரும் த.நா.குமாரஸ்வாமியால் அழகாக மொழிபெயர்க்கப்பட்ட வங்காளி நாவல்கள் மூலம் ரசகுல்லாவைப் பற்றி கேள்விப்பட்டு நாக்கைச் சப்புக்கொண்டிருந்த காலம்.

பிரிவினைக்கு முன் இந்திய வரைபடம்
பிரிவினைக்கு முன் இந்திய வரைபடம்

‘ராஜ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சாம்ராஜ்யத்தின் கடைசி பத்தாண்டுகாலத்தில் (செயற்கையாக இந்தியாவில் இணைக்கப்பட்டிருந்த பர்மா 1937ல் தனிநாடு ஆனதிலிருந்து), பதினோரு மாகாணங்களும் (‘பிரிட்டிஷ் இந்தியா’) மற்றும் அறுநூற்றுச் சொச்சம் ‘சுதேச சமஸ்தானங்களும்’ (Native States) இருந்தன. நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய சுதேச சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட மகாராஜாக்கள் மற்றும் நவாபுகள் என்ற குறுநில மன்னர்களால் ஆளப்பட்டன. இவர்களில் சிலருக்குத் தனிப் பட்டப் பெயர்கள் இருந்தன. மஹாராணா பிரதாப்பின் வம்சத்தில் வந்த உதயப்பூர் மகாராஜா ‘ராணா’ என்றறியப்பட்டார். ஹைதராபாத் நவாப் நிஜாம் என்று அழைக்கப்பட்டார். கொள்கை ரீதியாக வெளியுறவு, பாதுகாப்பு இரண்டையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்த பின் உள்ளாட்சியில் சமஸ்தானாதிபதிகளுக்கு முழு அதிகாரமும் உண்டென்றாலும் நடைமுறையில் அப்படி இருந்ததென்று சொல்லமுடியாது. காஷ்மீர், ஹைதராபாத் இரண்டும் பரப்பில் மிகப்பெரியவை. அடுத்தபடியாக மைசூர், பரோடா, குவாலியர் முதலிய நடுத்தர சைஸ் ராஜ்யங்கள் சிலவும் புதுக்கோட்டை, சாந்தூர் போன்ற சிறிய சமஸ்தானங்கள் பலவும் இருந்தன. சமஸ்தானம் ஒவ்வொன்றுக்கும் ‘திவான்’ என்று சொல்லப்பட்ட ஒரு பிரதமமந்திரி இருந்தார். அவர் மகாராஜாவால் நியமிக்கப்பட்டாலும் வைஸ்ராயின் ஒப்புதலும் அவசியம். தவிர ‘ரெஸிடெண்ட்’ என்ற பிரிட்டிஷ் பிரதிநிதியும் சமஸ்தானத்திலேயே இருந்து ஏகாதிபத்திய நலன்களைக் கண்காணித்துவந்தார். திருவாங்கூர், மைசூர், பரோடா மூன்றும் மிக முன்னேற்றமடைந்த ராஜ்யங்கள். காந்தி பிறந்த கத்தியவார் என்றழைக்கப்பட்ட சௌராஷ்டிரம் முழுதுமே சமஸ்தானங்கள்தான், பிரிட்டிஷ் இந்தியாவே கிடையாது. அன்று ராஜ்புதானா என்றழைக்கப்பட்ட ராஜஸ்தானமும் (சிறிய அஜ்மீர் நீங்கலாக) அப்படித்தான்.

அன்றைய மாகாணங்கள் இன்றைய மாநிலங்களை விட மிகப்பெரியவை. தெற்கே அமைந்த ஒரே மாகாணமான சென்னை; தமிழகம், ஆந்திரம், தென்கன்னடம், வடகேரளம் (மலபார்) ஆகியவை சேர்ந்தது. மேற்கே பம்பாய் மாகாணமானது வட கர்னாடகம், மராட்டியம், குஜராத் (1936 வரை சிந்து கூட) என்று வியாபித்திருந்தது. அதையொட்டிக் கிழக்கே அமைந்திருந்த மத்திய மாகாணம் (தலைநகர்: நாக்பூர்) என்பது இன்றைய மராட்டியத்தின் விதர்ப்பாவும் சட்டிஸ்கர் மாநிலமும் .  வடக்கே சிந்து, பஞ்சாப், எல்லைமாகாணம், ஐக்கியமாகாணம் (பின்னாள் உத்தரப்பிரதேசம்), கிழக்கே, பீகார், ஒரிஸ்ஸா, வங்காளம், (இன்றைய மே.வங்கமும் வங்கதேசமும்), கிழக்குக்கோடியில் அஸ்ஸாம் (இன்றைய அஸ்ஸாம், மேகாலயா, மிசோராம், நாகாலந்து, இன்று வஙதேசத்திலிருக்கும் ஸில்ஹெட் அடங்கியது) ஆக பதினோன்று.. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு பிரிட்டிஷ் கவர்னர் உண்டு. இவை தவிர குடகு, அஜ்மீர் என்று இரண்டு கமிஷனர் ஆட்சிப் பிரதேசங்கள்.  (இன்றைய யூனியன் பிரதேசங்கள் போன்றவை). மற்றும் பிரிட்டிஷ் அரசியல் ஏஜண்ட் மேற்பார்வையிட்ட பலுசிஸ்தான், வடகிழக்குஎல்லை ஏஜன்சி (NEFA, இன்றைய அருணாச்சல்) என்ற பழங்குடிப் பிரதேசங்கள்.

இந்தியாவின் இப்போதைய தேசப்படத்தையும் அப்போதையதையும் ஒப்பிட்டால் ஆச்சரியமான அளவுக்கு வேறுபட்டிருக்கும். உதாரணமாக கேரளா என்று ஒன்று அப்போதில்லை. கன்னியாகுமரியில் இருந்து ஆலப்புழை வரை திருவாங்கூர் மன்னரின் சமஸ்தானம். கொச்சியிலிருந்து திருச்சூர் தாண்டி கொச்சி சமஸ்தானம். பாலக்காடு, கோழிக்கோடு, மங்களூர், மூகாம்பிகையின் கொல்லூர் எல்லாமே சென்னை மாகாணம். இன்றைய பாகிஸ்தான் பஞ்சாப் (மூல்தான், லாகூர், ராவல்பிண்டி), மற்றும் நமது பஞ்சாபின் அமிர்தசரஸ், லூதியானா, ஹரியானாவின் அம்பாலா, ஹிமாசலப்பிரதேசத் தலைநகர் சிம்லா அத்தனையும் அன்று பஞ்சாப் மாகாணம். அதன் தலைநகரம் ஹிந்து-சீக்கியர்களும் முஸ்லிம்களும் சரிசமமான ஜனத்தொகையில் இருந்த லாகூர் நகரம்., இத்தியாதி. நம்மைப் பொருத்தவரை குமரிமுனை நீங்கலாக தமிழ்நாடு முழுதும் ஒன்றாக இருந்தது. அதே சென்னை மாகாணத்தில் ஆந்திரர்களும் நம்முடன் இருந்தார்கள். ஆக குமரிமுனை இல்லாவிடினும், வடவேங்கடம் நமது மாகாணத்தில் இருந்தது.

1937-லேயே மாகாணங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு முழு அதிகாரம் மாற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு ஆங்கிலேய வைஸ்ராயின் கையிலேயே 1946 வரை நீடித்தது. 1946ல், சுதந்திரத்துக்கு முதற்படியாக, மத்தியில் ஒரு ‘இடைக்கால சர்க்கார்’ (காங்கிரஸ்+முஸ்லிம் லீக்) நிறுவப்பட்டது. ஆறு காங்கிரஸ் மந்திரிகள், ஐந்து லீக் அமைச்சர்கள். அரசின் ‘தலைவர்’ வைஸ்ராய். உபதலைவர் ஜவஹர்லால் நேரு. உள்துறை அமைச்சர் சர்தார் படேல். நிதியமைச்சர் முஸ்லிம் லீகின் லியாகத் அலிகான் (வருங்கால பாகிஸ்தானின் முதல் பிரதமர்).  தலைவர் என்ற பெயர் இருந்தாலும் தலையிடுவதில்லை என்று வைஸ்ராய் வாக்கு கொடுத்திருந்தார்.அதைக் காப்பாற்றவும் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

அதே சமயம் மாகாணங்களிலும் தேர்தல்கள் நடந்து காங்கிரஸ் (பெஷாவரைத் தலைநகராகக் கொண்ட எல்லைமாகாணம் உட்பட) ஏழு மாகாணங்களையும், ஜின்னாவின் முஸ்லிம் லீக் இரண்டையும் (வங்காளம், சிந்து) கைப்பற்றின. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இன்று பாகிஸ்தானில் இருக்கும் மாகாணங்களில் (ஆம், அவர்கள் இன்னும் மாகாணம் -province- என்ற வார்த்தையைத்தான் வைத்திருக்கிறார்கள்) சிந்து ஒன்றைத்தவிர வேறெங்கும் (பஞ்சாப், எல்லைமாகாணம்) முஸ்லிம்லீக் வெற்றி பெற்றிருக்கவில்லை என்பதே.

ஆசிரியர் குறிப்பு:
சுங்க ஆணையளாராக இந்தியாவின் பல பகுதிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் சிறுபத்திரிகை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்தியாவின் வரலாற்றை சுவாரசியமான நடையில் தன்னுடைய செறிவான அனுபவத்தோடு எழுதுகிறார். ‘அது அந்தக் காலம்’, வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள் ஆகிய புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

One Reply to “தொடர்ந்து சுருங்கும் இந்திய எல்லைகள்”

Comments are closed.