விழித்திருக்கும் தூக்கம்

vertcornmoonboatவிழித்திருக்கும் தூக்கம்

நெற்றி விளிம்பில் நெருடல்,
விளிம்பில் வழியக்
காத்திருக்கும் தூக்கம்,
வார்த்தைகள் வடிந்து
கனத்திருக்கும் முகம்,
சருகாய்,
அசைய மறுக்கிறேன்.
இமை அசைவில்
மீண்டும் தளும்புகிறது.
நகர்வின் நிதானத்தில்
வற்றிவிடுமென
நகர்ந்து கொண்டே
இருக்கிறேன்.

யாரிடம் சொல்ல?

இங்குதான் இருந்திருக்கக் கூடும்
யாரும் பார்க்கவில்லை போலும்
எழுத்துக்களாய் கோர்த்துப் பார்க்கிறேன்,
பெருமிதம் காற்றென என்னை
ஊதித் துளைக்கிறது -இருந்தும்
யாரிடம் சொல்ல, என் ‘கடவுச் சொல்லை’?

காத்திருப்பு

ஓயாமல் பறந்துக்கொண்டே
இருக்கின்றன வார்த்தைகள்;
விரல்களினூடே நழுவுகின்றன;
மூளையைத் துளைத்துச் செல்கின்றன;
கால்களில் மிதிபட்டிருக்கலாம்;
வார்த்தைக் காட்டின்
அடர்த்தியின் தனிமையில்
அலைபேசி சிலிர்த்து கண்விழிக்கிறது.

பயணம்

சிறு கதவுகளில்
சிறு வாழ்க்கைகள்,
சுவரில் அகப்பட்டச்
சித்திரங்களாய்.
ஒற்றைப் பரிமாணத்தில்
நகர்கின்றன..

அந்தரத்தில் நிற்கும்
பாலங்கள்,
நதிகளிருந்த
மணல்வெளிகள்,
உறக்கமற்ற
ஒற்றைக் கடைகள்..

இரைச்சல்களின்
உறக்கத்திற்கப்பால்,
மலைச்சரிவின்
அடிவயிற்றில் விழித்துக்கொண்டேன்;
ஒற்றைப் பெரிய கரிய
மலையினின்று இன்னொன்று;
அதன் பின்னே
இன்னொன்று -அதன்
பின்னிருந்து
நெருப்பணைந்த
அனல் உருண்டை
நகர்வின் நேர் கோட்டில்
தொடர்ந்தது,
இரவின் இருள் வரை.