வாசகர் எதிர்வினை

1900-களின் ஒரு தபால்காரர்
1900-களின் ஒரு தபால்காரர்

இந்த இதழில் வெளியான மைசூர் பட்டணத்து மல்லர்கள் குறித்த எனது எண்ணங்கள் கீழே..

நமது பாரம்பரியம், நமது சொத்து என எண்ணாத மக்களிடம் இருக்கும் ஒரு கலை புரவலரின்றி அழியும். அதன் நீட்சியே இன்று நாம் காணும் மல்லர்கள். அவர்கள் குறிப்பிடும் அளவுள்ள சத்துள்ள உணவுகளை உண்ண தினமும் ஐநூறு ரூபாய் ஆகும் நிலையில் எளிய மக்கள் எவ்வாறு இதைத் தொடர்ந்து பயில முடியும்.. ?? தினம், தினம் நாட்களைக்கடத்தவே சிரமப்படும் இவர்களை கைதூக்கிவிடுவதன் மூலமே நமது பாரம்பரியக் கலைகளைக் காப்பாற்ற இயலும்.

இதைப்போலவே ஆதரவின்றி அழிந்தகலைகளில் முக்கியமானதாக நான் நினைப்பது பாவைக்கூத்து. எத்தனை கிராமங்களில் ராமாயணத்தையும் , மஹாபாரதத்தையும், நல்லதங்காள் கதையையும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். சரியான ஆதரவில்லாததால் இன்று அவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நகர நாகரீகத்திற்கும், நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் நாம் கொடுத்த மிகப்பெரிய விலை நமது பாரம்பரியம் நமது கன்முன்னே அழிவது.

இந்த இதழில் வெளியான சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி என்ற திரு வைத்தியநாதனின் கட்டுரை நிதர்சனங்களை முன்வைக்கிறது. நம்மால் ஆகாத காரியத்தை சீனா செய்வதன்மூலம் நமக்குக் கிடைக்கப்போகும் பலன்களை பட்டியலிடுகிறார்.

இஸ்ரேலைப் போலவோ, சீனாவைப் போலவோ முதலிலும் அடிப்பதில்லை. அடிவாங்கிய பின்னரும் திருப்பி அடிப்பதில்லை நாம்.. என்றைக்குத்தான் திருந்தப்போகிறோமோ.

சந்திரசேகரன் கிருஷ்ணனின் அயன் ராண்ட் நூல்களின் மூலம் முன்னிறுத்தப்படும் புறவயவாதம் பற்றிய அறிமுகம் நன்று. என்னைப்போன்ற எந்த வாதமும் அறியாதவர்களுக்கு படிக்க எளிதாய் இருக்கிறது.

துகாராம் கோபால்ராவ் அவர்களின் சீனாவின் உய்குர் இனப்பழங்குடிகளுக்கும், ஹான் சீனர்களுக்குமான பிரச்சினையைப் பார்க்கும்போது நமது கஷ்மீரத்துப் பண்டிட்டுகள்தான் ஞாபகம் வருகிறார்கள். சொந்த நாட்டில் அகதிகளாய் வாழும் கொடூரம் அவர்களுக்கு. இதே நிலையில் இன்று உய்குர் இனப் பழங்குடிகள். அருமையான கட்டுரை.

ஜெயக்குமார்

—oo000oo—

ஆரம்பகால தபால்காரரை கெளரவித்து இந்தியத் தபால்துறை வெளியிட்ட அஞ்சல்தலை
The Early Postman

31.07.09
பெங்களூர்

வணக்கம்.

இதழை நிறைவாகக் கொண்டுவருகிறீர்கள்.  மல்லர்கள்பற்றிய கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஹரன் பிரசன்னா கதை நன்றாக வந்திருக்கிறது. ஒரு சமயத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்கிறவர்கள் உயிருடன் இருந்தாலும் பிறகு ஒருநாளும் தேவைப்படாமல் போய்விடுகிறார்கள் என்பது கொடுமையான விஷயம்.

அன்புடன்,

பாவண்ணன்.

—000OOOooo—

சொல்வனம் இதழைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

மைசூர் பட்டணத்து மல்லர்கள் புகைப்பட கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. ஒரு புதிய உலகம் புகைப்படமாக ஆவணமாக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துகள்.

அன்புடன்,

சுரேஷ் சுப்ரமணியன்.

—oo000oo—

ஆசிரியருக்கு வணக்கம்.
சொல்வனம் நான்காவது இதழ் வாசித்தேன். அலை சிறுகதையில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஹரன்பிரசன்னா அருமையாகக் கொண்டு வந்துள்ளார். அறிவியல் சார்ந்த பகுதியானது பள்ளிமாணவர்களுக்கும் சென்றடைந்தால் மிக்க பயனாக இருக்கும்.  கவிதைகள் இடம் பெறவேயில்லை. (என்ன ஆச்சு சொல்வனத்திற்கு?).
கி.சார்லஸ்
நாகை.மாவட்டம்