…மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒரே நோக்கத்துடன் செயல்படும் இடம் ’நாடாளுமன்ற உணவகம்’ மட்டுமே என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ”சப்பாத்திக்குத் துணையாகச் சாம்பார் பரிமாறப்படும் என்று நினைக்கிறேன், அதனால் தான் அங்கு மொழி சார்ந்த பிரிவினைகள் இல்லை” என்று என் நண்பன் சொல்வதையும் நான் புறக்கணிக்க விரும்பவில்லை. ஆனால் சென்ற சில நாட்களாக உணவகத்தில் மட்டுமன்றி, பிற நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும், எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் பேசியிருக்கின்றன. இந்த ஆச்சரியமான நிகழ்விற்கு முக்கிய காரணம், இந்திய அரசின் சமீபத்திய (தவறான)செயல்பாடுகள்.

Manmohan Singhகாகிதங்களை நீட்டிய போதெல்லாம் கையெழுத்திடுவது நடிக/நடிகைகளுக்கு அழகு. ஆனால் பிரதமருக்கு அது அழகல்ல. கடந்த சில தினங்களில் உலக நாடுகள் நீட்டிய அனைத்து காகிதங்களிலும் நமது பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். ”அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? நாட்டின் எதிர்காலத்தை எந்த அளவிற்கு அது பாதிக்கும்? இந்தியாவின் வளர்ச்சியை இது எவ்வகையில் பாதிக்கும்?”, என்ற எந்த பிரக்ஞையும் அவரை உறுத்தியதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானுடனான ஒப்பந்தம், பூகோள சூடேற்றம்(Global Warming) குறித்த உடன்படிக்கை, திருத்தியமைக்கப்பட்ட அமெரிக்க உடனான அணு எரிசக்தி ஒப்பந்தம் என இம்மூன்று ஒப்பந்தங்களிலும் இந்திய அரசு மிகப்பெரும் தவறிழைத்துள்ளது.

முதல் சறுக்கல் இத்தாலியில்(L’Aquila) நடைபெற்ற G8 கூட்டமைப்பில் நிகழ்ந்தது. உலகமெங்கும் பூகோள சூடேற்றம் குறித்த விவாதங்கள் மிக உக்கிரமாக நடைபெறும் தருணமிது. இந்நிலையில், இக்கூட்டமைப்பில் அதிகரித்துவரும் பூகோள-சூடேற்றத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்காவின் cap-and-trade எனும் வழிமுறை பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழிமுறையின்படி அனைத்து நாடுகளும் தாங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து, பூகோள-சூடேற்ற விகிதத்தை 2 டிகிரிக்குள்ளாக கட்டுக்குள் வைக்கவேண்டும் என்றும், அப்படி செய்யாத நாடுகள் மீது பிற நாடுகள் வர்த்தகத் தடைகளை செயல்படுத்தலாம் என்றும் கூறுகிறது. இப்பரிந்துரை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இரண்டுக்கும் பொதுவானதாக இருந்த போதும், பிரத்தியேகமாக வளரும் நாடுகள் மட்டுமே உயர்-அபாயத்தை சந்திக்கும். ஏனெனில், வளர்ந்த நாடுகள் மீது விதிக்கப்படும் வர்த்தகத் தடைகள் எந்தவித பாதிப்பையும் அந்நாடுகளில் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகள், இத்திட்டத்தில் கூறியுள்ளபடி உடனடியாகத் தங்கள் தொழிற்மயமாக்கத் திட்டங்களை நிறுத்திவிட முடியாது. ஆகையால், ஒப்புக்கொண்டபடி வெப்பநிலை விகிதத்தை 2 டிகிரிக்குள்ளாகக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால், உலக நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் மிகப்பெரும் ஆபத்தைச் சந்திக்கும். பிரதமரும், அவரது அலோசகருமான ஷ்யாம் சரண், இத்தகைய விளைவுகளை மறுத்த போதும், இவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், வருங்காலங்களில் உலக அரங்கில் இந்தியாவை மிக எளிதாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

warming-cartoon1

மேலும், வரலாற்று ரீதியாகவும், இப்பரிந்துரை எந்தவித நேர்மையுமின்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே GHG(Green House Gas) எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் நச்சுத்தன்மை நிறைந்த புகையை வெளியிட்டு, தனக்கான “கரியமில வெளி”(Carbon Space)-யை விடவும் அதிகளவில் ஆக்கிரமித்த அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும், கடந்த சில தசாப்தங்கள் மட்டும் இத்தகைய புகையை வெளியிடும் வளரும் நாடுகளையும் சமமாகப் பாவிப்பது எந்த விதத்திலும் சரியல்ல. மேலும், தற்சமயத்தில், ஒப்பீட்டளவில், எந்த வளரும் நாடுகளை விடவும் வளர்ந்த நாடுகள் அதிக அளவு சூழலை மாசுப்படுத்தும் நச்சுப்புகையை வெளியிடுகின்றன. அமெரிக்கா – 20.4 மெட்ரிக் டன். UK மற்றும் ஜெர்மனி – 9.7 மெட்ரிக் டன். சீனா – 3.8 மெட்ரிக் டன். இந்தியா – 1.2 மெட்ரிக் டன். இச்சூழ்நிலையில், நம் பூமியைக் காக்கும் பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு அதிகம் உண்டு. இந்நிலையில், இவ்வருட இறுதியல் கோபன்ஹேகனில் நடைபெறும் கூட்டமைப்பில், சீனா, பிரேசில் போன்ற பிற வளரும் நாடுகளுடன் இணைந்து இந்தியா தனக்கான “கரியமில வெளி”-யை மீட்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இராண்டவது சறுக்கல், எகிப்த்தில் நடைப்பெற்ற அணிசேரா நாடுகளின் 15-ஆவது கூட்டமைப்பில்

Courtesy : newsx.com
Courtesy : newsx.com

நிகழ்ந்தது. பாகிஸ்தான் பிரதமருடன் இந்தியப் பிரதமர் வெளியிட்ட கூட்டறிக்கையின் காரணமாக உலக அரங்கில் இந்தியாவின் நிலை மீண்டும் பின்னடைவை சந்தித்தது. பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினையான பலுசிஸ்தான் குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியா உடன்படுவதாக இக்கூட்டறிக்கையில் இடம் பெற்றது. இவ்வரிகள், இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பின. எதிர்க்கட்சிகள் இந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தன. பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை மறந்துவிட்டு, பலுசிஸ்தான் பிரச்சினையைக் குறித்துப் பேச ஒப்புக்கொள்வது காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவிற்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது வீணாகவில்லை. கூட்டறிக்கை வெளியிடப்பட்ட அடுத்த நாளே பலுசிஸ்தானில் நடைபெறும் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு குறித்த ஆதாரங்கள்(?!) அடங்கிய ஆவணத்தை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்தியப் பிரதமர் இத்தகவலை முற்றிலும் மறுத்தப்போதும், பாகிஸ்தானுடனான உடன்படிக்கையில் சில “ஷரத்து வடிவமைப்புப் பிழைகள்” நேர்ந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

இந்திய அரசின் இந்த தவறான செயல்பாடு, வருங்காலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும், காஷ்மீரில் பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் குறித்தும் விவாதிப்பதற்கான வாய்ப்புகளை பெருமளவு குறைத்துவிட்டது என்பது நிதர்சனம். ஏனெனில், இவ்விஷயங்கள் குறித்து இந்தியா பேச முற்படுகையில், பலுசிஸ்தானில் இந்தியாவின் பங்கு குறித்து பேசி பாகிஸ்தான் உலக நாடுகளின் கவனத்தைத் திசை திருப்ப முயலும். இந்த தவறிலிருந்து மீள்தல் அவ்வளவு எளிதல்ல.

manmohan_hillaryஇந்திய நாட்டிற்கான பின்னடைவு இத்துடன் நின்றுவிடவில்லை. சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஹிலாரி கிளிண்டன், இந்தியா-அமெரிக்கா இடையேயான அணு எரிசக்தி ஒப்பந்தத்தின் ”இறுதி-பயனர் கண்காணிப்பு உடன்படிக்கை”(End User Monitoring Agreement)-யை நிறைவேற்றினார். இந்த உடன்படிக்கையின்படி, அமெரிக்காவால் அளிக்கப்படும் அணுபொருட்களை செரிவூட்டத் தேவையான உபகரணங்களை, அவை நிறுவப்பட்ட தளங்களுக்கே சென்று அமெரிக்க அரசு மேற்பார்வை இடலாம். அதனால் என்ன பிரச்சனை? அமெரிக்காவால் அளிக்கப்படும் உபகரணங்கள் அனைத்தும் இந்தியாவின் ரகசியமான ராணுவ தளங்களில் நிறுவப்பட்டு செயல்படுத்தப் படும். இந்தத் தளங்களின் கதவை அமெரிக்காவிற்கு இந்தியா திறந்துவிட்டுள்ளது. புஷ் அரசுடனான உடன்படிக்கையில் உபகரணங்களை மட்டும் சோதனையிடும் வாய்ப்பிருந்தது. ஆனால் தற்போதைய உடன்படிக்கையின் மூலம், இந்த உபகரணங்களை உபயோகப்படுத்தும் அமைப்பின் மொத்த செயல்பாட்டையும் அறியும் உரிமை அமெரிக்கா வசம் உள்ளது.

இந்திய அரசின் இச்செயல் நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்று அனைத்து எதிர்கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்த்துள்ளன. ஒரு வகையில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவிடம் அவுட்சோர்ஸ் செய்து விட்டதாகக் கூட கருதலாம்.

—oo000oo—


அதிகார மையங்களில் நடைபெற்றுவிடும் சின்னஞ்சிறு தவறுகள் கூட ஒரு நாட்டை தடுக்கமுடியாத பேரழிவிற்கு இட்டுச்சென்று விடும். மேற்கூறியவையெல்லாம் மெத்த படித்த மேதைகளால் நிரம்பியிருக்கும் இந்தியத் தலைமைப் பீடம் அறியாமல் நிகழ்த்திய தவறுகள் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும், ஒவ்வொரு இந்தியனின் எதிர்காலத்தின் மீதும் அரசாங்கத்தின் அக்கறையின்மையும், இந்தியாவை நல்ல எதிர்காலத்திற்கு இட்டுச்செல்ல முயலாத பொறுப்பின்மையுமே முக்கிய காரணங்கள்.

இக்கட்டுரையின் தலைப்பு ஒரு திருக்குறளின் இரண்டாவது அடி. இக்குறளின் அர்த்தத்தை இந்திய அதிகார மையங்களுக்கு எப்படியேனும் உணர்த்திவிட வேண்டிய அவசர தருணமிது.