என் நண்பர் ஒருவர் தமிழ்ச் சிற்றிதழ்களின் தீவிர வாசகர். கல்லூரிப் பருவத்திலிருந்தே விடாமல் சிறு பத்திரிகைகளை வாசித்து வருபவர். 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் சிற்றிதழ்கள் நிரம்பிய ஜோல்னாப் பை ஒன்றைத் தோளில் மாட்டியிருப்பார். சில ஆண்டுகளுக்குமுன், நவீன லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கினார். அதை வைக்கும் தோள்ப் பையிலேயே சிறு பத்திரிகைகளையும் வைத்துக்கொண்டு வலம் வருவார்.
அந்த நண்பர் நான் வசிக்கும் பகுதிக்கு வரும்போதெல்லாம் என் வீட்டிலிருந்து பொடிநடைத் தூரத்தில் இருக்கும் ரெஸ்டாரண்ட் எனப்படும் உணவகத்துக்கு வந்துவிடுவார். என்னையும் அங்கு வரச் சொல்லிவிடுவார். கடந்த முறை அப்படி நண்பரைச் சந்தித்துவிட்டுக் கிளம்பினேன்.
அந்த ரெஸ்டாரண்டுக்குப் பக்கத்திலேயே டாஸ்மாக் கடை ஒன்று உண்டு. அதுவரை இல்லாத அதிசயமாக டாஸ்மாக் கடையில் நுழைந்தார் நண்பர். அவ்வப்போது நண்பர்கள் குழாம் நடத்தும் பார்டிகளில் கட்டிங் விடுபவர்தான் என்றாலும் அவரைக் குடிகாரர் என்று சொல்ல முடியாது. சற்றே ஆச்சரியத்துடன் நானும் பின்தொடர்ந்தேன்.
ஓல்ட் மாங்க் கோல்ட் ரிசர்வ் ரம் ஒன்றை வாங்கிக் குவார்ட்டர் போத்தலை லேப்டாப் பையில் சிற்றிதழ்களுக்கு நடுவிலேயே பொதிந்து வைத்துக்கொண்டார் நண்பர். அவராகவே விஷயத்துக்கு வந்தார். சமீப காலத்தில் சிற்றிதழ்களின் போக்கு மிகவும் மாறிவிட்டதாகவும், சிறு வயதிலிருந்தே அவற்றைப் படித்துப் பழகிவிட்டதால் வழக்கத்தை விடமுடியவில்லை என்றும் சொன்னார். இப்போதெல்லாம் ராஜமார்த்தாண்டன் ஸ்டைலில் ரெண்டு லார்ஜ் உள்ளே தள்ளினால்தான் சிறு பத்திரிகைகளைப் படிக்க முடிகிறது என்றும் குறைபட்டுக்கொண்டார்.
”என்ன ஸ்வாமி இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? டீ-அடிக்ஷன் ப்ரோகிராம்களில் மதப் புத்தகங்களுக்கு மாற்றுச் சரக்காகச் சிற்றிதழ்களை வைத்துக் கொள்ளலாமா அல்லது ஸைட்-டிஷ்ஷாகப் பரிந்துரை செய்யலாமா என்று விவாதம் நடப்பதாகக் கேள்விப்பட்டேனே? நீங்கள் இப்படித் தலைகீழாகச் சொல்கிறீர்களே?”, என்றேன் நான்.
சற்று நேரம் மௌனமாக இருந்தார் நண்பர். பின்னர், தம் இளம் வயதுக் குழந்தை தரையில் கிடக்கும் குப்பைகளையெல்லாம் எடுத்து வாயில் போட்டுக் கொள்வதாகக் குறைபட்டுக் கொண்டார். எனக்குச் சட்டென்று, சில மாதங்களுக்கு முன் புது யார்க் டைம்ஸ் பத்திரிகையில் படித்த ஜேன் ப்ரோடியின் மருத்துவக் கட்டுரை ஒன்று நினைவுக்கு வந்தது. அவரிடம் விஷயத்தை எடுத்துச்சொல்லி அது பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் சொன்னேன். “சரி. ஏதோ சொல்கிறாய். பிரச்சினை எதுவும் இல்லையென்றால் சரிதான். நான் போய் இந்த மாதச் சிற்றிதழ்களைப் படிக்கிறேன்” என்று கிளம்பினார் நண்பர்.
– – – – – – – – – – – – – – – –
குழந்தைகள் ஏன் தரையில் கிடக்கும் பொருள்களைப் பொறுக்கி எடுத்து வாயில் போட்டுக்கொள்கின்றன என்ற கேள்வியை அக்குழந்தைகளின் அன்னையர்களிடம் கேட்டுப் பாருங்கள். ”இது என்ன கேள்வி? குழந்தைகள் அப்படித்தான் செய்யும்” என்பதே பெரும்பாலானவர்கள் சொல்லும் பதிலாக இருக்கும். சிலர் மட்டும், “அது குழந்தைகளின் உள்ளுணர்வு சார்ந்தது – குழந்தைகள் அப்படித்தான் மண்ணியல் ஆய்வு செய்கின்றன” என்று சொல்லக்கூடும். பார்த்தோ, கேட்டோ, தொட்டோ அல்லது முகர்ந்தோ பொருள்களை எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும். அப்படி இருக்க ஏன் வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்?
நியூ யார்க் போன்ற நகரங்களில், சுவையான தின்பண்டங்களைக் கண்டு வாயை இறுகப் பொத்திக்கொள்ளும் சிறு குழந்தைகள்கூட, தாம் தெருக்களில் நடத்தும் நிலவியல் ஆய்வுகளின்போது ஜல்லிக்கல் பொடியையோ அல்லது நாயின் உலர்ந்த மலத்தையோ வாயில் போட்டுக்கொள்வது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
எல்லா உள்ளுணர்வுபூர்வமான குணாம்சங்களும் பரிணாமவியல் அடிப்படையில் நன்மை செய்பவையே. அப்படி இருப்பதால்தான் அக்குணங்கள் மறைந்து போய்விடாமல், பல லட்சம் வருடங்களாகத் தொடர்ந்து வருகின்றன. நாம் ஓர் உயிரினமாக ஜீவித்திருக்க உதவும் ஒன்றாகவே கண்டதையும் பொறுக்கி வாயில் போட்டுக்கொள்ளும் இத்தகைய குணம் அமைந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அசுத்தமான பொருள்களைத் தின்பது நமக்கு நன்மை தரக்கூடியதே என்பதைப் பல ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன.
அசுத்தங்களுடன் சேர்ந்து உடலில் நுழையும் பல லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் சிறு புழுக்கள் போன்றவை நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாக Hygiene hypothesis எனப்படும் சுகாதாரக் கருதுகோள் ஆய்வுகளில் ஈடுபடும் ஆய்வாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் ஒவ்வாமை எனப்படும் அலர்ஜிகள், ஆஸ்துமா போன்ற குறைபாடுகளுக்குக் காரணமான பாழ்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கச் சிறு புழுக்கள் உதவக்கூடும் என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேற்படி ஆய்வுகளும், தொற்று நோய்கள் சம்மந்தமான பிற ஆய்வுகளும் நோய் எதிர்ப்பு சக்தி சீர்கெடுவதால் ஏற்படும் தசை நோயான சங்கிலித் தொடர் ஸ்க்லொரோசிஸ், வகை 1 நீரிழிவு, குடல் அழற்சி நோய், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய்கள் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கணிசமாக அதிகரித்து வருவதன் காரணத்தை நமக்கு விளக்குகின்றன.
நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்பியல் ஆய்வாளரான மேரி ரூபுஷ் ”அசுத்தம் ஏன் நல்லது” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ”கண்டதையும் வாயில் போட்டுக்கொள்ளும் குழந்தையினுடைய நோய் எதிர்ப்புச் சக்தி, தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் அதன் சுற்றுச்சூழலை ஆராய முனைகிறது. அப்படிப்பட்ட எதிர்வினைக்குத் தேவையான பயிற்சியை அளித்து பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் எவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது நல்லது என்பதையும் முதிர்ச்சியடையாத அந்த இயக்கத்துக்குச் சொல்லித் தருகிறது.
பாஸ்டன் நகரத்திலுள்ள டஃப்ட்ஸ் மருத்துவ மையத்தின் இயக்குனரான டாக்டர் ஜோயல் வி. வீன்ஸ்டாக், பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு இயக்கத்தைப் ப்ரோக்ராம் செய்யப்படாத ஒரு கம்ப்யூட்டருடன் ஒப்பிடுகிறார். மேலும் அவர், “பொதுச் சுகாதார நடவடிக்கைகளான தண்ணீர் மற்றும் உணவுச் சுத்திகரிப்பு போன்றவை பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளன என்றாலும் நமக்கு நன்மை செய்யக்கூடிய பல நுண்ணுயிர்களும் சுத்திகரிப்பின்போது அழிந்துவிடுகின்றன” என்கிறார்.
”மிகவும் சுத்தமான சுற்றுச்சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு, நோயெதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்தி வளர்தெடுக்க உதவும் நுண்ணுயிர்களின் அறிமுகம் கிடைக்காமலே போய்விடுகிறது” என்றும் அவர் கருதுகிறார்.
வளர்ந்த நாடுகளில் மட்டும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் மற்ற நாடுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் உடல் புழுக்களே நோய் எதிர்ப்புச் சக்தியை ஒழுங்குபடுத்திச் சரியாகச் செயல்படச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை அயோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணரான டாக்டர் டேவிட் எல்லியட்டுடன் இணைந்து டாக்டர் வீன்ஸ்டாக் நடத்திய ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் தாக்குதல்களுக்கும் இத்தகைய பங்குண்டு என்றாலும் அவை அந்த அளவுக்குத் தீவிரமானவை என்று சொல்ல முடியாது.
”பெரும்பாலான புழுக்கள் மனிதர்களுக்கு, குறிப்பாகப் போஷாக்கானவர்களுக்கு எந்தக் கெடுதலையும் செய்வதில்லை. அவற்றால் நமக்கு ஏற்படும் நோய்கள் மிகவும் குறைவே. புழுக்களால் பிரச்சினைகள் ஏற்படாதபடி நம்மைப் பெருமளவுக்குத் தயார்படுத்திக் கொண்டுவிட்டோம்” என்கிறார் டாக்டர் எல்லியட்.
அவர்கள் இருவரும் எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகளில் நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடுகளால் ஏற்படும் வியாதிகளைத் தடுக்கவும், குணப்படுத்தவும் புழுக்களையே பயன்படுத்தினர். சங்கிலித் தொடர் ஸ்க்லொரோசிஸ் தசை வியாதியால் பீடிக்கப்பட்டிருப்பவரின் உடலில் நாக்குப் பூச்சி போன்ற மனிதச் சாட்டைப்புழுக்கள் (human whipworm) இருந்தால் அவ்வியாதியின் கடுமை மிகக் குறைவாகவே இருப்பதாகவும், இந்நிலை சுமார் நாலரை ஆண்டுகள் நீடித்ததாகவும் அர்ஜெண்டைனா நாட்டு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக டாக்டர் எல்லியட் தெரிவிக்கிறார். அமெரிக்காவின் மாடிஸன் நகரத்திலுள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணரான டாக்டர் ஜான் ஃப்ளெமிங்கும் பன்றிச் சாட்டைப்புழுவைக் கொண்டு ஸ்க்லொரோசிஸ் நோயின் கடுமையைக் குறைக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவின் சில கிராமங்களில், புழுக்கள் ஒழிக்கப்பட்டதன் காரணமாகக் குழந்தைகளுக்குத் தோல் சம்மந்தப்பட்ட ஒவ்வாமைகள் அதிகமாயின என்று டாக்டர் எல்லியட் தெரிவிக்கிறார். குடல் அழற்சி நோய்களான க்ரோன் வியாதி, குடல் அழற்சியால் ஏற்படும் புண் ஆகியவற்றைக் குணப்படுத்தக் குடல் பாதையில் சில காலம் வாழக்கூடிய பன்றிச் சாட்டைப்புழு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சொல்கிறார்.
நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும் புழுக்கள் எவ்வளவு இருக்கும்? இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொற்றுநோயியல் ஆய்வாளர் டேவிட் பி. ஸ்ட்ராசன் 1989ஆம் ஆண்டில் சுகாதாரக் கருதுகோள் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியபோது இருந்ததைவிட நோய் எதிர்ப்பு சக்தியை முறைப்படுத்துதல் என்பது இப்போது மிகவும் சிக்கலாகிவிட்டது. பெரிய குடும்பங்களை ஆஸ்துமாவும் ஒவ்வாமையும் குறைவாகவே பாதித்திருப்பதை டாக்டர் ஸ்ட்ராசன் கவனித்திருந்தார். தற்போது, ’உதவும் T செல்’ என்பவற்றால் உருவாக்கப்பட்ட நான்கு முனை பதிலடி அமைப்பு ஒன்றை நோய் எதிர்ப்பியல் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். Th 1, Th 2, Th 17 மற்றும் ஒழுங்குபடுத்தும் T ஆகிய செல்களைக் கொண்டதே அந்த அமைப்பாகும். இவற்றுள் Th 2 மற்றும், Th 17ஆகியவற்றின் செயல்பாட்டை Th 1ஆல் தடுக்க முடியும். Th 1 மற்றும் Th 17 ஆகியவற்றின் செயல்பாட்டை Th 2ஆல் தடுக்க முடியும். ஒழுங்குபடுத்தும் T செல்லால் மற்ற மூன்றின் செயல்பாடுகளையும் தடுக்க முடியும்.
சங்கிலித் தொடர் ஸ்க்லொரோசிஸ், க்ரோன் வியாதி, குடல் அழற்சியால் ஏற்படும் புண் மற்றும் ஆஸ்துமா போன்ற அழற்சி நோய்கள் Th 17இன் செயல்பாட்டால் உண்டாகின்றன. எலியின் உடலில் புழுக்களைச் செலுத்தினால் Th 17இன் அளவு நம்பமுடியாத அளவுக்குக் குறைவதோடு, ஒழுங்குபடுத்தும் T செல்லின் செயல்பாடும் கணிசமாக அதிகரிக்கிறது.
”நாம் கொஞ்சம் ஓவராகத்தான் சுத்தம் பார்க்கிறோமா?” என்ற கேள்விக்கு, “அசுத்தத்துக்கு கொடுப்பது போன்றே சுத்தத்துக்கும் நாம் ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. 1850களில் இருந்ததைப் போன்ற நோய்க் கிருமிகள் நிறைந்த ஒரு சுற்றுப்புறத்துக்கு நாம் திரும்ப வேண்டும் என்பதில்லை. சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் உயிரிகள் நம்மை எப்படிப் பாதுகாக்கின்றன என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியுமானால், அதே விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு தடுப்பூசியையோ அல்லது தீங்கில்லாத ஊக்க மருந்தையோ உருவாக்கிப் பயன்படுத்தமுடியும்” என்று பதில் சொல்கிறார் டாக்டர் எல்லியட்.
”அசுத்தம் ஏன் நல்லது” புத்தகத்தை எழுதிய டாக்டர் மேரி ரூபுஷ், நாம் குப்பை மேட்டிலேயே குடியிருக்க வேண்டும் என்று ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், அவர் பாக்டீரியாக்கள் நமக்கு வெளியேயும், உள்ளேயும், நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் பரவியிருப்பதைச் சரியாகவே சுட்டிக்காட்டுகிறார். பெரும்பாலான நுண்ணுயிர்கள் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை என்பதோடு, ஜீரண மண்டலம் போன்றவற்றில் குடியிருக்கும் நுண்ணுயிர்கள் நம் ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன.
ஒரு சராசரி மனித உடல் 90 லட்சம் கோடி (டிரிலியன்) நுண்ணுயிர்கள் தங்க இடமளிக்கிறது. பல்வேறு வகைப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நுண்ணுயிர்களே பல நேரங்களில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
சமீபத்திய மோஸ்தரான, பாக்டீரியாக்களை ஒழிப்பதற்காகச் சந்தையில் உலா வரும் நூற்றுக்கணக்கான புதிய பொருள்களைப் பற்றிச் சொல்லும்போது, அவை பாக்டீரியாக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது பற்றிய தவறான உணர்வை ஏற்படுத்துவதாகவும், ஆன்டிபயாடிக்குகள் எனப்படும் எதிர்-உயிரிகளை வீரியமில்லாமல் செய்துவிடக்கூடிய, நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அவை வளர்த்துவிடக்கூடும் என்று டாக்டர் ரூபுஷ் கவலை தெரிவிக்கிறார். சாதாரணமான சோப்பும், தண்ணீருமே நாம் சுத்தமாக இருக்கப் போதுமானவை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கழிப்பறையை உபயோகித்த பிறகும், சாப்பிடுவதற்கு முன்னரும், குழந்தைகளின் அசுத்தமான ஆடைகளை மாற்றிய பிறகும், உணவுப் பொருள்களைத் தொடுவதற்கு முன்னரும் பின்னரும் உங்கள் கைகளைக் கழுவிக்கொள்வது நல்லது என்கிறார் டாக்டர் ரூபுஷ். ’ரன்னிங் வாட்டர்’ எனப்படும் குழாயிலிருந்து கொட்டும் தண்ணீர் அல்லது ஓடும் தண்ணீர் இல்லாத இடங்களில் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால், ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்படும் கை சுத்தம் செய்யும் பொருள்களைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் யோசனை சொல்கிறார்.
டாக்டர் வீன்ஸ்டாக்கோ இன்னமும் அதிகமாகவே சொல்கிறார்: ”செருப்புப் போடாமல் வெறும் காலுடன் அசுத்தமான இடங்களுக்குச் சென்று விளையாட குழந்தைகளை அனுமதிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், அவர்கள் திரும்பி வரும்போது கைகளைக் கழுவாமலேயே சாப்பிடவும் அனுமதிக்க வேண்டும்.” பண்ணைகளில் வளரும் குழந்தைகளை, அங்கிருக்கும் பண்ணை விலங்குகளின் உடலில் வசிக்கும் புழுக்களும், பிற நுண்ணுயிர்களும் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. அதனால் அவர்களுடைய நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. அதன் காரணமாக அவர்கள் ஒவ்வாமைகளாலும், நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாட்டு வியாதியாலும் மிக மிகக் குறைவாகவே பாதிக்கப்படுவதை அவரும், டாக்டர் எல்லியட்டும் சுட்டிக்காட்டுகின்றனர்.
”குழந்தைகளுடன் இரண்டு நாய்களையும், ஒரு பூனையையும் வளர்ப்பது இன்னமும் உதவியாக இருக்கும். அப்படிச் செய்வதால் குழந்தைகளுக்குக் குடல் புழுக்கள் தொற்றி அதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழிவகுக்கும்”, என்கிறார் டாக்டர் வீன்ஸ்டாக்.
(நன்றி: 1. புறநானூறு பா. 20 2. நியூ யார்க் டைம்ஸ்)