பஞ்சம்

இந்தச் சிறுகதை அசாமியில் திரு.பாபேந்திராநாத் சைகியா அவர்களால் எழுதப்பட்டது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர். பாபேந்திர நாத் சைகியா நாவலாசிரியராக, சிறுகதையாளராக மற்றும் திரைப்பட இயக்குனராக அறியப் பட்டவர். சைகியா பிப்ரவரி 20, 1932ல் அசாம் மாநிலம் நாகாவ் டவுனில் பிறந்தார். இயற்பியல் பிரிவில் காட்டன் காலேஜ் ஆப் குவாஹத்தியில் B.Sc. பட்டமும் பின் பிரசிடென்சி காலேஜ் ஆஃப் கல்கத்தாவில் M.Sc பட்டமும் பெற்றார். பின் லண்டன் பல்கலைக் கழகத்தில் Ph.D மற்றும் டிப்ளோமா படிப்புகளை முடித்து விட்டு சிப்சாகர் கல்லூரியில் துவங்கி பின் குவாஹத்தி பல்கலைக் கழகத்திலும் விரிவுரையாளராக பணியாற்றினார். b_n_saikia

அசாமிய இலக்கிய உலகில் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் மற்றும் சிறுவர் இலக்கியம் என்று சைகியா அவர்கள் குறிப்பிடும்படியாக பலப் படைப்புகளை வழங்கியுள்ளார். அசாமி மொழியில் இவரது இலக்கியப் பங்களிப்பிற்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது.             ‘ஜீவன் பிரிட்டா’ என்ற சுயசரிதம் உட்பட சுமார் இருபத்தொன்பது புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

சொபுரா என்ற சிறுவர் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் மேலும் பிராந்திக் என்ற பத்திரிகையிலும் ஆசிரியர் பணியாற்றியுள்ளார். அசாமி திரைப்பட உலகின் முன்னோடியாக கருதப்படும் சைகியா இயக்கிய எட்டுத் திரைப்படங்களில் ஏழு படங்கள் மாநிலமொழிப் படப் பிரிவில் ரஜத் கமல் விருதால் கவுரவப் படுத்தப் பட்டுள்ளது. ஒரெயொரு இந்திப் படம் இயக்கியுள்ளார். ’அக்னிஸ்நான்’ திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதையாசிரியர் விருதையும் பெற்றுள்ளார். இவர் இயக்கியத் திரைப்படங்கள் பல வெளிநாட்டு பட விழாக்களில் தேர்வு செய்யப் பட்டு திரையிடப் பட்டுள்ளன.

இவருக்கு சாஹித்ய அகடமி விருது (1976) உட்பட பல இலக்கிய விருதுகள் கிடைத்துள்ளன. இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இருபத்தியோராம் நூற்றாண்டின் சிறந்த இருபத்தியொரு மனிதர்களில் ஒருவராக சைகியாவை அசாம் மாநில பத்திரிகை ஒன்று தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

இவர் திரைப்படம், நாவல் மற்றும் பதிப்பகம் போன்ற பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பாளாரக இருந்திருக்கிறார். சைகியா அவர்கள் ஆகஸ்டு 13, 2003ம் ஆண்டு குவாஹத்தியில் மறைந்தார். சிறார் முன்னேற்றத்திற்காக ஆரோஹன் என்ற பெயரில் தன்னார்வ அமைப்பு ஒன்றை நிறுவினார். அது இன்றளவும் இயங்கி வருகிறது.

—oo000oo—

அசாமியில்: பாபேந்திர நாத் சைகியா

துர்க்கையை பூசைப் பந்தலில் பார்த்து அதன் உருவத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டாள். ஒருநாள் கடவுளர்கள் அனைவரும் தங்கள் பீடத்திலிருந்து இறங்கி நந்தினியை சூழ்ந்து கொண்டது போல் இருந்தது. தேவி துர்க்கை நேரில் வந்திருந்தாள். இவர்களுடன் சரஸ்வதி, லட்சுமி, கார்த்திகா மற்றும் கணேஷா ஆகியோரும் வந்திருந்தனர். அரக்கர்கள் வந்திருந்தனர். சிங்கம், அழகான மயில் மற்றும் அவலட்சணமாக ஆந்தையும் எலியும் கூட வந்து வந்திருந்தன. வாழைமரம் மற்றும் தாமரைக் கொடிகள் மட்டுமல்லாது விவரிக்க முடியாத பல தாவர மற்றும் புஷ்ப இனங்களும் இருந்தன. இவை அனைத்திற்கும் மேலாக மிகத் தெளிவாக வசீகரத்துடன் போலேநாத் அமர்ந்திருந்தார்.

நந்தினி இன்னும் ஒரு நிமிடத்திற்கும் தாமதிக்கவில்லை. இத்தனை பேர்கள் அவளை சுற்றி இருப்பதை அவள் இதுவரை கண்டதில்லை, உணர்ந்ததில்லை.

நந்தினியின் வீட்டில் அவளது அப்பா பரிதோஷ்பாபு, அம்மா சீதா தேவி, தங்கை மானசி மற்றும் ஒன்பது வயது தம்பி புல்புல் ஆகியோர் இருந்தனர். பக்கத்து வீட்டார் என்று சொல்லப் போனால் ஜகரு மற்றும் துபானி ஆகிய இருவரும் இரண்டு அறை கொண்ட ஒரு சிறிய குடிசையில் இருந்தனர். அவர்கள் நண்பர்களாக மட்டுமல்ல இவர்களுக்கு இடையிலிருந்த வெறுமைகளை அவர்கள் தான் நிரப்பினார்கள். மலைமுகடுகளிலும் காட்டிலும் உறைந்திருக்கும் கன அமைதியை சிதைக்கும் பொறுப்பையும் பெற்றிருந்தார்கள். எப்பொழுதாவது முள்ளம்பன்றியோ அல்லது பாம்போ அவர்களது காம்பவுண்டில் நுழைந்து விட்டால் பலத்த கோஷத்துடன் அவர்கள் வெளியேறுவார்கள். அவர்கள் மட்டுமல்ல அப்பகுதியே நடுங்கிப் போகும். கயிறு அறுந்து போனால் அல்லது கிணற்றில் வாளி விழுந்து விட்டால் அதனை எடுபத்தில் ஜருகு உதவியாய் இருப்பான்.

அசிஸ்டன்ட் ஸ்டேஷன் மாஸ்டர் பரிதோஷ்பாபு இந்த ரயில்வே ஸ்டேஷனை விட சிறியதாக வேறு ஒரு ஸ்டேஷன் இருக்காது என்பதில் உறுதியாக இருந்தார்.  பகல் முழுவதிலும் ஒரு ஜோடி ரயில்களை மட்டுமே காண முடியும். ஒன்று போகும் மற்றொன்று வரும். இந்த இரண்டு ரயில்களும் இரண்டு நிமிடங்கள் அந்த சிறிய ரயில் நிலையத்தில் நிற்கும். மிக அபூர்வமாக யாராவது இறங்குவார்கள். பரிதோஷ்பாபுவுக்கு இந்தப் பணி ஆயுள் தண்டனை போல் இருந்தது. யாருடைய முகத்தையும் பரிதோஷ்பாபு ஏறிட்டுப் பார்த்ததில்லை. ரயில் நிலையப் பணி முடிந்த பின் வேகமாக வயல்வெளியில் பாய்ந்து சென்றுவிடுவார்.

சில நேரங்களில், ஒன்றோ அல்லது இரண்டோ பயணிகள் கிழங்குகளையும் சோளத் தானிய மூட்டைகளையும் தாங்கியபடி ரயில் பிடிக்க வருவார்கள். இந்த சமயங்களில் அவர்கள் கிழங்குகளையும் தானியங்களையும் கொடுத்து விட்டுப் போவார்கள். சில சமயங்களில் பயணிகள் ரயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதலில் போக வேண்டி சரக்கு ரயில்கள் வழிவிட்டு நீண்ட நேரத்திற்கு ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டி வரும். இவ்வாறான நேரங்களை மிகப் பொன்னான வாய்ப்பாக கருதிக் கொண்டு பரிதோஷ்பாபு கார்டுடன் மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பார். ” அப்படியானால், உங்களுக்கு பினோதே பாபுவை தெரியும் அல்லவா? அய்யோ! அவர் எத்தனைக் கொடுமைக்காரர். அவருக்குக் கீழ் வேலை பார்ப்பவர்கள் நரக வேதனையை அனுபவிக்க வேண்டும். அப்படியெல்லாம் வேலை பார்த்தும் பயனில்லைதான். ப்ரமோஷனை விட்டுத்தள்ளுங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சம்பள உயர்வும் இல்லை.” என்று சலித்துக் கொண்டார்.

காஞ்சிராபாடாவின் தீனதயாள்பாபுவை சரக்கு ரயிலின் கார்டுக்கு தெரிந்து இருந்தது. பரிதோஷ்பாபுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. என்ன? அப்படியானால் அவர் ரிடையர் ஆகி விட்டாரா? அவருடைய தலையில் ஒரு நரை மயிர் கூட கிடையாதே. அவருடைய முப்பத்திரெண்டு பற்களும் இன்னும் உறுதியாக இருந்தனவே. அவர் ரிடையர் ஆகி விட்டார் என்பதை யார்தான் நம்புவார்கள். அவருக்கு மந்தைகள் போல் ஆறு பெண் பிள்ளைகள் உண்டே, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தாரா? அப்படியா? முதல் மூன்று பெண்களுக்காவது திருமணம் செய்து வைக்க முடிந்ததே. பரவாயில்லை, இதையாவது அவரால் செய்ய முடிந்ததே.

இந்த உரையாடல் நீண்டு கொண்டே போனது. இடையில் நந்தினி வந்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த வாழைப் பழங்கள், பப்பாளிப் பழத்தின் மெல்லியத் துண்டுகள் மற்றும் தண்ணீர் கலந்த பால் ஆகியன கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனாள். சரக்கு ரயில் கார்டு இந்த உபசரணைகளால் புது உற்சாகம் பெற்று அரட்டையில் முழு ஈடுபாடு காட்டினார். ” இப்படித்தான் நடக்குமென்று இருக்கையில், கியான் கோஷ் அல்லது பிசி சென் செய்ததில் என்ன தவறு இருக்கப் போகிறது, சொல்லுங்கள்?” என்றார்.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ்- போவது மற்றும் வருவது என மொத்தமாய் நான்கு இருந்தும் அவற்றில் எதுவும் இந்த ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இந்த ரயில்கள் இங்கிருந்து கடக்கும் போது, பரிதோஷ்பாபு கொக்கியில் தொங்கவிடப் பட்டிருக்கும் சீருடை மேல்கோட்டுக்குள் புகுந்து கொள்வார். கோட்டுக்கு உள்ளே என்ன அணிந்திருக்கிறார் என்பது குறித்து எந்த அக்கரையுமில்லை. கோட்டை மாட்டிக் கொண்டு கையில் பச்சைக் கொடியை வைத்துக் கொண்டு தனது அலுவலகத்தின் முன் அசையாமல் நிற்பார். மிகவேகமாக ரயில் கடந்து சென்றதும் அவரது கடமை முடிந்து விடும். உடனே தனது வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டத்தில் மண்வெட்டியுடன் இறங்கி விடுவார். நந்தினி அல்லது புல்புலின் பெயரை உரக்க அழைத்துக் கொண்டு கொடியில் காய்த்திருந்த வெள்ளரிக்காயை பறித்தது யார் என்று கத்துவார்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் பரிதோஷ்பாபுவின் மனதில் பலவித கவலைகள் வந்து குடைந்து கொண்டிருக்கும். ஒருவேளை அவர் இந்த இடத்திலேயே நிரந்தரமாக தங்கும்படியாகி விட்டால் என்ன செய்வது? இங்கு அருகில் பள்ளிக்கூடம் இல்லை, அதனால் தனது மற்றொரு மகள் மானசியை தனது சகோதரன் வீட்டில் தொலைவில் தங்க வைக்க வேண்டியதாக உள்ளது. அங்கு அவள் மிக சிரமத்துடன் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் இங்கே வரும்போதெல்லாம் மனக்கஷ்டத்துடன் தனது கதையைச் சொல்லி அழுவாள். அங்கு சகோதரன் வீட்டில் அனைத்து வேலைகளையும் இவள்தான் செய்ய வேண்டியதாய் உள்ளதாம். வீட்டில் சித்தியும் பள்ளியில் ஆசிரியரும் திட்டித் தீர்ப்பதாக தெரிவித்தாள்.

”இந்த வருடம் போகட்டும். எனக்கு பிரமோஷனாவது கிடைக்க வேண்டும்” என்று பரிதோஷ்பாபு தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்வார். இப்படியாகவே மூன்று ஆண்டுகள் ஓடி விட்டது. புல்புல் ஐந்து மைல் தொலைவில் பள்ளிக்கு போக வேண்டும். துபானி தனது சைக்கிளில் வைத்து கூட்டிச் செல்வார். நந்தினி வீட்டில் தான் இருப்பாள். தனது சகோதரன் வீட்டில் ஒரு வேலைக்காரியைப் போல் திட்டு வாங்கிக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் மானசியை விட வீட்டில் திருமணமாகாமல் இருக்கும் தனது இந்த மகளைப் பற்றித்தான் அதிக கவலையாக இருக்கும். ஆனால் பரிதோஷ்பாபுவால் எதுவும் செய்ய முடியாத நிலை. சரக்கு ரயிலில் வரும் கார்டுகள் பலரிடம் பல முறை இது குறித்து சொல்லியாயிற்று. ஆனால் சரக்கு இறக்கி விட்டு வரும் பெட்டிகளைப் போல் அனைவரும் வெறுங் கையோடு வந்தனர். தனக்கு டிரான்ஸ்பர் வேண்டுமென்று எத்தனையோ முறை கோரிக்கையும் அவை குறித்த நினைவூட்டல் கடிதமும் அனுப்பியாயிற்று. ஆனால் அவை உரிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்ததற்கான அறிகுறி கூட இல்லை. அவர் கடுமையான மனக் குழப்பத்தில் இருந்தார்.

சில சமயங்களில் தோட்டவேலையில் நந்தினி அவருக்கு உதவ முற்படுவாள். ஆனால் அதை அவர் மறுத்து விடுவார். தனது மகள் இவ்வாறு தோட்டத்தில் வேலை பார்ப்பதை அவர் விரும்பவில்லை. கண்டிப்பாய் தடுத்து விடுவார்.

நந்தினிக்கு அதிக வேலை இல்லை. ஆனால் பகலில் அப்படி இப்படி எதாவது வேலை அமைந்து விடும். காலை ஏழு மணிக்கு, மெயில் ஒன்று வழக்கமாக இங்கிருந்து கடந்து போனது. அது ஒரு நீண்ட ரயில். அதில் எப்பொழுதும் பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும். இரவு முழுவதும் நன்றாக ஓய்வு எடுத்து பின் காலையில் கழுவித் தெளிந்து இதற்கு முந்தைய ரயில் நிலையத்தில் மிகச் சிறப்பான காலை உணவை முடித்துக் கொண்டு பயணிகள் உற்சாகமான மன நிலையில் இந்த ரயில் நிலையத்தைக் கடப்பார்கள். பெரும்பாலானோர்கள் ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுக்காமல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தபடி பயணிப்பார்கள். இரவு முழுவதும் இருட்டில் இருந்து சலித்துப் போனவர்களுக்கு இது பெருங்காட்சியாக இருக்கும். இந்த ரயில் வரும் நேரத்த்தில் காலையில் அம்மா குளித்துவிட்டு போட்டு வைத்திருக்கும் ஈரத் துணிகளை காயப் போடுவதற்காக நந்தினி வெளியில் வருவது வழக்கமாய் இருந்தது.

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தோட்டத்தை சுற்றிப் போடப் பட்டிருக்கும் மூங்கில் வேலி தங்கம் போல் பிரகாசிக்கும். இந்த வேலிக்கு ஐம்பது கஜம் தொலைவில் ரயில் போகும். இந்த முறை கூட நந்தினியின் நீண்ட தலைமுடி அவள் பின்னால் காற்றாடி போல் படர்ந்திருந்தது. இரவில் படுக்கையில் அவள் கட்டிக் கொள்ளும் பழைய சேலை சுருக்கங்கள் ஏதுமற்ற அவளது உடலில் ஒழுங்கற்று சுற்றப் பட்டிருந்தது. அந்த ரயில் கடக்கும் போது அவளைக் காணாத ஜோடிக் கண்களே இருக்காது எனலாம். அவளைப் பார்ப்பவர்களில் சிலர் விதவிதமாக சத்தங்களை எழுப்பினார்கள். சிலர் சைகை செய்தார்கள். சிலர் ரயிலின் வாசலில் நின்று கொண்டு அவளை நோக்கி தகாத ஜாடைகளை செய்தார்கள். அவளைப் பார்க்கத் தவறியவர்கள் விஷயம் தெரிந்ததும் திரும்பிப் பார்த்தார்கள். ஜன்னல் வழியாக பார்க்க முயன்றார்கள். இன்னும் சிலர் வாசல் கம்பியில் தொங்கிக் கொண்டு அவளை இன்னும் முழுமையாகக் காண முயன்றார்கள்.

il_430xn_52516544

ரயில் தூரமாய் போய் மறைந்ததும், தனது அம்மாவிடம் செல்வதற்கு முன் திடீரென நந்தினிக்கு தனது சேலை அலங்கோலமாக இருப்பது நினைவுக்கு வந்தது. இதையெல்லாம் அவள் ஏற்கனவே தவிர்த்து விட்டிருந்தாள். ஒரு முறை நந்தினியின் அப்பா கோபால்கஞ்சின் டெலகிராப் அலுவலகத்தில் பணியில் இருந்த போது அவளது தோழி ஜஹனாரா ” நீ ஏன் ஓடும் ரயிலில் உள்ள பயணிகளைக் கண்டு வெட்கப் படுகிறாய்? உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வெகுவானவர்களை உன்னால் கவர முடியுமென்றால் அது மிகப் பெரிய வாய்ப்பு அல்லவா?” என்று சொல்லியிருக்கிறாள். ஜஹனாராவின் எண்ணங்கள் நந்தினிக்கு சரியாகப் படவில்லைதான்.

காலை ஒன்பது மணிக்கு எதிர் திசையிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்பொழுதுக்கெல்லாம் நந்தினி குளித்து முடித்திருந்தாள். தலை வாரியிருந்தாள். துவைத்த தூய்மையான சேலைக் கட்டிக் கொண்டாள். அவள் ஈரமான துணிகளை உலர்த்தப் போட வெளியில் வருவதற்கும் அடுத்த ரயில் கடப்பதற்கும் சரியாக இருந்தது. அதற்குள் அவளது அம்மாவின் துணிகள் பாதி உலர்ந்து இருந்தது. அவைகளை ஓரத்தில் தள்ளி விட்டு தனது துணிகளை போட இடம் ஏற்படுத்திக் கொண்டாள்.

பொழுது விடிந்து வெகுநேரமாகி விட்ட காரணத்தால் இதற்கு முந்தைய நிலையங்களில் பயணிகள் சாப்பிட்டு விட்டு வந்திருக்க வேண்டும். அவர்களின் வயிறுகள் நிறைந்து இருந்தது அவர்கள் செய்வதற்கு எதுவுமில்லாமல் சஞ்சலத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் சூரியன் மிகவும் பிரகாஷமாக இருந்தது. பயணிகளின் கண்களும் அப்படியே காட்சியளித்தன. குளித்து புதுசான நந்தினி சூரிய ஒளியில் நனைந்தபடி நூற்றுக் கணக்கான பயணிகளின் பசித்த பார்வைகளைப் பார்த்தாள்.

மதியம் மூன்று மணியளவில், வேலியருகே போட்டிருந்த துணிகள் நன்றாக காய்ந்து விட்டிருந்தது. அவைகளை உள்ளே எடுத்து வருவதற்கான நேரம். இதற்கு ஒரு மணி நேரம் முன்புதான் நந்தினி தனது மதிய தூக்கத்தை முடித்து எழுந்திருந்தாள். அடுத்து தோட்டப்பக்கம் கால்களை நீட்டியமர்ந்து உப்பும் பச்சை மிளகாயும் கலந்து புளிப்பான ‘கார்டோய்’ தயாரிக்க உட்கார்ந்தாள். பின் முற்றத்திற்கு வந்து காய்ந்த துணிகளை எடுத்துச் சென்றாள். அந்த நேரம் அடுத்த மெயிலின் சத்தம் கேட்டது. மீண்டும் அதே உணர்வுகள் அவளைத் தொற்றிக் கொண்டன. ரயில் முன்பு வந்ததது போல் நீண்ட ரயிலாகும்.

மாலை நான்கு மணியளவில் நந்தினி ஆடை மாற்றிக் கொண்டாள். அவள் எங்கும் வெளியில் செல்வதாய் இல்லைதான். ஆனால் அந்த நாளை மகிழ்வுடன் வழியனுப்பி வைக்க அவள் இவ்வாறு மெல்லிய அலங்காரம் செய்து கொண்டாள். இதனை ஏனோதானோ என்று செய்து விட முடியாது அல்லவா. அவள் கோபால்கஞ்சில் இருக்கையில் தினமும் மாலை வேளையில் ஆடை மாற்றிக் கொண்டு ஜஹனாராவுடன் உலாவச் செல்வது வழக்கமாக இருந்தது. ஜஹனாராதான் இவளுக்கு முடிந்து போகும் ஒரு நாளை எங்ஙனம் வழியனுப்பி வைப்பது என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தாள். தனது அப்பா ரயில்வே கார்டிடம் பலமுறை கெஞ்சி நந்தினிக்காக வாங்கி வரச் சொல்லியிருந்த சில அலங்காரப் பூச்சுப் பொருட்களை பரப்பி வைத்திருந்தாள். சலவை செய்த சேலை ஒன்றை கட்டிக் கொண்டாள். புல்புல் பள்ளியிலிருந்து திரும்பியதும் அவனை கூட்டிக் கொண்டு ரயில் தண்டவாளங்களின் ஓரமாக உள்ள வயல் வெளிகளில் நடக்கச் செல்வாள். நடக்கிறாளா இல்லை ஓடுகிறாளா என்று குழம்பும் வகையில் புல்புல் அவளை இழுத்துக் கொண்டு போவான். அவள் இப்படி இழுக்கப் படுவதால் கன்னம் சிவந்தாள். அந்த நேரம் ரயில் அங்கிருந்து கடந்தது. அந்த சிறிய மலைப் பகுதியில் மிக அழகான, தனிமையான மதியம் கடந்த பின் இந்த ரயிலின் வருகை நந்தினியின் முகத்தில் மேலும் புதிய வண்ணம் சேர்த்தது. ரயிலில் இருந்த பயணிகளைக் கண்டு அவள் புது உற்சாகம் கொண்டாள். புல்புல் பலமுறை வெகுளித்தனமாக ”அக்கா, அவர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்பான். நந்தினி தனக்குள் இருக்கும் மாறுபட்ட ஒரு சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு ” அவர்கள் அசிங்கமாகப் பேசுகிறார்கள்” என்று பதிலளிப்பாள்.

மெதுவாக மாலை முடிந்து கொண்டிருந்தது. அம்மா சீதா தேவி பூசை செய்ய உட்காரும் நேரம் இது. தனது உடல் மற்றும் ஆத்மாவை முழுவதுமாக ஈடுபடுத்தி சங்கை எடுத்து ஊதி கேட்பாள். நந்தினியும் சுவற்றில் தொங்க விடப் பட்டுள்ள போலேநாத்தின் படத்தின் முன் மண்டியிட்டு வணங்கினாள். நகர்ந்து வரும் துர்தேவதைகளைப் போல் அப்பகுதியை சூழ்ந்திருந்த மலைகள், காடுகள் மற்றும் வயல் வெளிகளிலிருந்து அமைதி படர்ந்து கொண்டிருந்தது. வீட்டிற்கு பின்புறம் இருக்கும் காய்கறித் தோட்டத்திற்கு காட்டுப் பூனைகளும் சில சிறிய வகை மிருகங்களும் வந்து சேரும். துபானி அந்த பழைய பாடலையே மீண்டும் மீண்டும் உறக்கப் பாடிக் கொண்டிருந்தான். அந்தப் பாடல் காதல் மற்றும் நட்பை மையமாகக் கொண்ட வரிகளை உடையது. அதில் ”நீ ஒருவருக்கு காதலை உறுதி கொடுத்திருந்தால் அது உங்கள் இதயத் துடிப்பைப் போல் என்றும் உங்களுடன் இருக்கும் …. நாம் இருவரும் அன்னியர்கள், அன்பே!  நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். ஓ! என் தோழமையே , நான் என்ன செய்வேன். எனது காதல் இன்னும் திரும்பவில்லையே” என்று வரிகள் இருந்தன.

இரவுச் சாப்பாடு செய்ய அம்மாவுக்கு உதவியாக காய்கறிகளை வெட்டிக் கழுவி வைப்பதோடு நந்தினியின் வேலை முழுவதும் முடிந்து விடும். பெரும்பாலும் சமையல் பணி முடியும் முன்னரே நந்தினியும் அவளது சகோதரனும் ஆழ்ந்து தூங்கி விடுவார்கள். இவ்வாறான வாழ்க்கையோட்டத்தில் எப்பொழுதாவது மக்கள் கூட்டத்தைப் பார்க்க நேர்கையில் நந்தினி தனது இயல்பிலிருந்து விலகி உற்சாகம் பெற்று விடுகிறாள்.

சீதாதேவி முன்தினமே மானசியைப் பார்க்கச் சென்று விட்டாள். மறுநாள் தான் வருவாள். வீட்டின் முழுப் பொறுப்பையும் கவனித்துக் கொள்ளும் பணி நந்தினியிடம் வந்து விட்டது. வீட்டைத் தனது கவனிப்பில் வைத்திருக்கும் அந்த நாளில் தான் இது நடந்தது.

நந்தினி தங்கியிருந்த ஸ்டேஷனுக்கும் அடுத்த ஸ்டேஷனுக்கும் இடையில் ஒரு பாலம் இருந்தது. அந்தப் பாலத்தில் விஷமிகள் சிலர் வெடிகுண்டு வைத்து விட்டனர். அந்த குண்டு வெடிப்பால் யாரும் பாதிக்கப் படவில்லை ஆனால் பாலம் சேதமடைந்து விட்டது. ரயில்வே முக்கிய அதிகாரி இரண்டு  பெட்டிகளுடன் கூடிய அவசர ரயில் ஒன்றை எடுத்துக் கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரணைக்காகவும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் வந்தார். இந்தப் பணிகளில் தனக்கு உதவியாக பரிதோஷ்பாபுவையும் உடன் வைத்துக் கொண்டார். சீரமைப்புப் பணிகளைக் கவனிக்க அவர்கள் சென்று விட்ட நிலையில் அவ்வேளை அந்த வழி கடக்கும் ரயில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் அங்கேயே நிற்கும்படியாகி விட்டது. மேற்கொண்டு ரயில் எப்பொழுது கிளம்பும் என்பது பற்றி யாராலும் யூகிக்க முடியவில்லை.

நந்தினிக்கு குதூகலமாக இருந்தது. இது பூஜை விழாவுக்கான துவக்கத்தைப் போல் இருந்தது. நந்தினி புல்புலுடன் மூங்கில் வேலி ஓரமாகச் சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கலானாள். அவள் ரயிலின் நீளம் முழுமையும் தனியாக நடந்து பார்வையிட வேண்டும் என்று நினைத்தாள் ஆனால் அந்த யோசனையைக் கைவிட்டாள். நந்தினியின் குடிசைக்கு எதிராக இருந்த ரயில் பெட்டியில் இளைஞர்கள் பட்டாளமாய் இருந்தது. அவர்கள் நீண்ட தூரத்திலிருந்து பயணம் செய்து கொண்டிருந்தவர்களைப் போல் காணப் பட்டார்கள். அவர்கள் வீட்டில் இருப்பது போல் ஆடையணிந்து இருந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் அணிந்திருந்த ஆடையை வைத்துப் பார்க்கையில் அவர்கள் ராணுவ வீரர்களாக இருக்கலாம் என்று தெரிந்தது.

நந்தினி வேலியோரத்தில் வந்து நின்றதும் அனைவருடைய கண்களும் அவள் மேல் குவிந்தது. ஏற்கனவே சுமார் பத்து பேர் ரயிலிலிருந்து இறங்கி விட்டிருந்தார்கள். நந்தினியைப் பார்த்ததும் மேலும் பத்து பேர் குதித்து இறங்கினார்கள். இதற்கு முன் ரயில் வேகமாக கடக்கையில் தனது ஆடை குறித்து அத்தனை அக்கறை கொண்டதில்லை. ஆனால் தற்போது நிலை வேறு மாதிரியாக இருந்தது. நந்தினி விரைந்து வீட்டிற்குள் வந்தாள். புல்புல் மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவன் அங்குமிங்கும் திரிகையில் இளைஞன் ஒருவன் அவனை நோக்கி ”டேய், பையா இங்கே வா” என்று அழைத்தான்.

சிறிது நேரத்தில் ஸ்டேஷனுக்கு முன் இருந்த இடத்தில் பயணிகள் கூடி விட்டார்கள். நேரம் கடந்து கொண்டே போனது. கடந்த ஸ்டேஷனில் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி விட்டிருந்தது. அவர்களுக்கு பசிக்கத் துவங்கி இருந்தது. சிலருக்கு தாகம் அதிகமாகி விட்டிருந்தது.

நந்தினியின் குடிசைக்கு நேர் எதிரே ரயில் பெட்டியிலிருந்து ஒருவன் புல்புலை அழைத்து அவனிடம் ”போ, போய் உன் அக்காவிடம் சொல்லி எனக்காக ஒரு கிளாஸ் தண்ணீர் வாங்கி வா” என்றான்.

வீட்டின் சுவற்றில் இருந்த துவாரம் வழியாக புல்புல் பளிச்சென்றிருக்கும் பித்தளை கிளாசில் தண்ணீர் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த அழகான இளைஞன் நந்தினி கொடுத்தனுப்பிய தண்ணீரைக் குடித்து விட்டு கிளாஸை திருப்பிக் கொடுக்கையில் புல்புலிடம் எதையோ சொன்னான்.

அதே நேரத்தில், ஆண்கள் சிலர் புல்புலை சுற்றி வளைத்துக் கொண்டு அவன் குடும்பத்தைப் பற்றி அனைத்து விபரங்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விபரம் ஆகிய குறித்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

காலி கிளாஸை எடுத்துக் கொண்டு புல்புல் ஓடி வந்தான். நந்தினியிடன் கிளாஸைக் கொடுத்தபடி ” அக்கா, இன்னொறு கிளாஸ் தண்ணீர் வேண்டுமாம் இந்த முறை நீ தண்ணீர் கொண்டுப் போக வேண்டுமாம். அப்படி நீ தண்ணீரைக் கொண்டு போய்க் கொடுத்தால் தண்ணீர் இன்னும் சுவையாக இருக்குமாம், அந்த ஆள் சொன்னார்” என்றான்.

”டேய்! வாயை மூடு. நீ ரொம்ப கெட்டுப் போய்ட்ட” என்று நந்தினி புல்புலைத் திட்டினாள். ஆனால் அவள் கோபம் கொண்டதாய் தெரியவில்லை. உடனடியாக அவளது குரல் மாறி விட்டது. சற்று நேரத்தில் பெரும்பாலான ரயில் பயணிகளுக்கு தாகம் உண்டாகி விட்டது. அந்த தூரத்து ரயில் நிலையத்தில் குடிதண்ணீருக்கான ஏற்பாடு இல்லை. ஆனால் அவர்களுக்கு எப்படியோ ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டிருகில் கிணறு இருப்பது தெரிய வந்தது. முதலில் ஒருவர் இருவராக வந்து கொண்டிருந்தார்கள் பின் கூட்டம் கூட்டமாக வரத் துவங்கி விட்டார்கள்.

முதலில் துபானி தண்ணீர் இறைத்துக் கொடுத்தான். அவனது கைகள் வலிக்கத் துவங்கியதும் நிறுத்திக் கொண்டான். பின் ஜகாரு உதவி செய்தான். பின் பயணிகள் தாங்களாகவே தண்ணீர் எடுத்து குடிக்கத் துவங்கினார்கள். பூணூல் அணிந்த நல்ல பருத்துக் கொழுத்த பிராமணன் ஒருவன் தண்ணீர் எடுத்து பரிதோஷ்பாபு ஆசையுடன் பராமரித்து வந்த புதினா பாத்திகளின் அருகில் வைத்து குளிக்கத் துவங்கினான்.

பயணிகள் கடும் பசிக்கு உள்ளானார்கள். பயணிகளில் ஒருவன் காய்த்து விட்டதா என்று பரிசோதிப்பது போல் வெள்ளரிக்காய்களை பறித்து தின்றான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் தோட்டத்தில் இருந்த வெள்ளரிக்காய், பப்பாளி என கிடைத்ததையெல்லாம் எடுத்து சாப்பிடத் துவங்கினார்கள். துவக்கத்தில் துபானி மற்றும் ஜகரு இருவரும் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் பயணிகளின் வெறிச் செயல் அவர்களை அமைதியாக ஒதுங்கி விடும்படி செய்து விட்டது.

நந்தினி தன்னை வீட்டிற்குள் அடைத்து வைத்துக் கொண்டாள். ஆனால் துவாரத்தின் வழியாக வெளியில் நடந்து கொண்டிருக்கும் அமளி-துமளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில பெண்கள் தனது வீட்டை நோக்கி வருவதைக் கண்டதும் நந்தினி வெளியில் வந்தாள். அவர்கள் கிணற்றுக்கு அருகில் போகாமல் நந்தினியை நோக்கி வந்தார்கள். வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி விசாரித்து விட்டு குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அவர்களில் ஒருவர் கிணற்றடியில் நடக்கும் கும்மாளத்தை சுட்டிக் காட்டி தற்போதைய தலைமுறையின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசினாள். நந்தினி தங்கள் தோட்டத்தின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்தாள். உடனடியாக வயது முதிர்ந்த பெண் ஒருவர் தனது பொறுமையை இழந்தவளாய் எல்லோரையும் முந்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தாள். கிணற்றடிக்கு அருகில் சென்று ”உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கிறதா? உங்களுக்கு வெட்கமாயில்லை? இந்த மாதிரி சூழ்நிலையில் தண்ணீர் கிடைப்பதே எத்தனை பெரிய காரியம். போதும் என்று போகாமல் இந்த தோட்டத்தை இப்படியா சேதப் படுத்துவது?” என்று கோபம் பொங்க கத்தினாள்.

கோபத்தில் அந்த பெண் துர்கை தேவியைப் போல் காட்சியளித்தாள். இதனைக் கண்ட கும்மாளக் கூட்டம் கொஞ்சம் மிரண்டது. தோட்டத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியில் வந்தார்கள். பலரும் அவளை அந்த வீட்டின் எஜமானி என்றே நினைத்துக் கொண்டார்கள். வயிறு பெருத்த ஒருவன் நந்தினியை நெருங்கி தனது கையைத் தூக்கி அவளை ஆசிர்வதித்தது யானை முகக் கடவுள்  தும்பிக்கை தூக்கி ஆசிர்வதித்தது போல் இருந்தது. பின் அவனும் போய் விட்டான்.

கோபமான பெண் மீண்டும் கூட்டத்தை நோக்கி கத்தினாள். ”ஏய், உங்களைத்தான். தண்ணீர் குடித்து முடித்தாயிற்றா? கிளம்புங்கள். போய் உங்கள் பெட்டியில் உட்காருங்கள்” என்றாள். பின் வீட்டருகில் வந்து ” நான் இங்கேயே இருக்கிறேன். இவர்கள் இத்தனை தொலைவில் இருந்தாலும் இவர்கள் நம் மக்கள்.  ரயில் கிளம்ப தயாராகும் வரை நான் இவளுடன் இருப்பேன். அவள் தனியாக இருக்கிறாள். கடவுள் புண்ணியத்தில் அந்தப் பெண்ணுக்கு எந்த தொந்தரவும் வந்து விடக் கூடாது” என்றாள்.

வெளியில் கத்தி விட்டு வந்த பெண் நந்தினியைப் பார்த்து ” என்னம்மா நீ, உங்கம்மா வீட்டில் இல்லையென்றால் உனது அப்பாவை வெளியில் போக ஏன் அனுமதித்தாய்? உன்னைப் போல் இளம் பெண் இப்படி தனியாக இருக்கலாமா? பாய் இருந்தால் தா, நான் கொஞ்சம் படுத்துக் கொள்கிறேன். எனது உடம்பெல்லாம் வலிக்கிறது. ஏய், அங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று முடித்தாள்.

அந்தப் பெண்ணுடன் இருந்த மற்றப் பெண்கள் கிளம்பி விட்டனர். வசியப்பட்டவளைப் போல் நந்தினி பாயை எடுத்து வந்து விரித்துக் கொடுத்தாள். அப்பொழுது புல்புல் ஓடி வந்தான். அவன் நந்தினிக்காக சாக்லேட் கொண்டு வந்திருந்தான்.

” இந்தா இது உனக்கு. அந்த ஆள் என்ன சொன்னான் தெரியுமா?” புல்புல் சொல்லத் துவங்கினான்.

” நிறுத்து” நந்தினி அவனது பேச்சை சடீரென துண்டித்தாள். அதே சமயத்தில் அவளது கன்னத்தில் சிவப்பேறியது.

வயது முதிர்ந்த அந்தப் பெண் தன்னை சவுகரியமாக சாய்த்துக் கொண்டாள். ”இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறது. வெளியில் இவ்வளவு நேரம் நடந்து கொண்டிருந்த கூச்சலையும் கும்மாளத்தையும் அடக்கி விட்டேன் பார்த்தாயா?” என்று அவள் பெருமைப் பட்டுக் கொண்டாள். மேலும் நந்தினியிடம் தனது இலக்கு பற்றியும் எதிர்காலத் திட்டம் பற்றியும் சொல்லத் துவங்கினாள். பெண்கள் சிலர் இணைந்து செய்து வரும் சமூக சேவை அமைப்பு ஒன்றின் தலைவியாக இருக்கிறாளாம். தனது அமைப்பிற்கான உறுப்பினர்களை அவள்தான் தேர்வு செய்தாளாம். அவர்கள் அனைவரும் சிறந்த குணங்களை உடையவர்களாம். பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறாளாம். மேலும் நந்தினியை இப்படி தனியான ஒரு ரயில் நிலையத்தருகே விட்டுப் போக அவளுக்கு மனமில்லையாம். அவளும் நந்தினியின் பிரதேசத்தை சேர்ந்தவளாம். இப்படி தகல்களை அடுக்கினாள்.

நாள் நகர்ந்து கொண்டே இருந்தது. ரயில் எப்பொழுது கிளம்பும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. பரிதோஷ்பாபு வீடு திரும்பும் நேரமாகி விட்டது. புல்புல்லை சாப்பிட்டுக் கொள்ளும்படி நந்தினி கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் உள்ளேயும் வெளியேயுமாய் ஓடிக் கொண்டிருந்ததில் சாப்பிடுவதை மறந்து விட்டிருந்தான். அவனால் வீட்டிற்குள் சிறு பொழுது கூட தங்க முடியவில்லை. சிறு இடைவேளைகளில் அவன் நந்தினியிடம் வந்து எதையோ சொல்ல முற்பட்டான் ஆனால் நந்தினி கடுமையான பார்வையாலும் சொற்களாலும் அவனை தடுத்து விட்டிருந்தாள். அவன் சொல்லவேண்டியது எக்கச்சக்கமாய் சேர்ந்து போய் விட்டதை அவள் தெரிந்திருக்கவில்லை.

அந்தப் பெண் நந்தினியுடன் நாள் முழுவதும் இருந்தாள். ஒரு தட்டு நிறைய வெட்டிக் கொடுக்கப் பட்ட பழுத்த பப்பாளி மற்றும் நான்கு வாழைப் பழங்களை ரசித்து விழுங்கி விட்டு பெண்களுக்கு சுயக்கட்டுப்பாடு இருக்க வேண்டியதின் அவசியம் பற்றி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தாள். புத்தங்களிலிருந்து பல உதாரணக் கதைகளையும் சொன்னாள். பழங்களின் தித்திப்பு மற்றும் சுவை குறித்து அவள் சொல்ல மறந்து விட்டிருந்தாள். சமையலறையில் நந்தினி மேலும் இரண்டு பப்பாளிப் பழங்களை வைத்திருந்தாள். அதில் பெரிதானதைத் தேர்வு செய்து அவள் எடுத்துச் செல்லக் கொடுத்தாள். அந்தப் பெண் முதலில் மெல்லிய குரலில் மறுத்தாள். பின் வாங்கிக் கொண்டாள். மேலும் நந்தினியை சிறந்த பெண் என்று புகழ்ந்து பேசினாள்.

சூரியன் மறைவதற்கிருந்தது. நந்தினியால் பகலில் சாப்பிட இயலவில்லை. அவளைப் போலவே ரயிலில் வந்த பலரும் சாப்பிடாமலேயே இருந்தது அவளுக்கு வருத்தமாக இருந்தது. தனது வீட்டின் மூலையில் மற்றும் கூரைப்பகுதியில் லேசாக இருள் படர்ந்தது கண்டு அவளுக்கு லேசான அச்சம் பரவியது. சில ஆண்கள் கூடி கைகளைத் தட்டி பாட்டுப்பாடிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. அவர்கள் ”நான் என் இதயத்தைக் கொடுத்தேன்… அதற்குப் பதிலாக வலியைத்தான் பெற்றேன்” என்று பாடிக் கொண்டிருந்தார்கள். புல்புல் அந்த ஆண்களின் கூட்டத்துடன் தான் இருக்க வேண்டும் என்று அவளுக்குப் பட்டது.

திடீரென அந்த செய்தி வந்தது. ஆமாம், ரயில் புறப்பட தயாராகி விட்டது. பெண்கள் குழுவிலிருந்து இரண்டு பேர் வந்து இந்தப் பெண்மணியிடம் தகவல் தெரிவித்துச் சென்றார்கள். அந்த பெண்மணி போகுமுன் நந்தினியை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் பதித்தாள். நந்தினி தன் உடலில் ஒருவித நடுக்கத்தை உணர்ந்தாள்.

சிறிது நேரத்தில் இரண்டு பெட்டிகள் கொண்ட மீட்பு பணிக்கான ரயில் வந்தது. பரிதோஷ்பாபு அதிலிருந்து இறங்கினார். அதன் பின் இதுவரை காத்துக் கிடந்த ரயில் புது உற்சாகத்துடன் அலறிக்கொண்டு கிளம்பியது. அந்த அரையிருள் பொழுதில் நந்தினி வேலியோரத்தில் நின்று ரயில் கிளம்பிப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கை புல்புலின் தோளில் உணர்வில்லாமல் கிடந்தது. நகர்ந்து கொண்டிருந்த ரயிலிலிருந்து பல குரல்கள் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தன. ஆனால் அந்தக் குரல்களை எழுப்புபவர்களின் முகங்களை அவளால் தெளிவாகக் காண முடியவில்லை.

அதன்பின் உண்டான அமைதி பீதியை ஏற்படுத்தியது. இன்று தூபானி பாடவும் இல்லை. பரிதோஷ்பாபு இன்று சீக்கிரமாகவே இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டார். களைப்புடனும் கவலையுடனும் தனது காய்கறித் தோட்டத்தில் டார்ச் வெளிச்சத்தில் சோதனையிட்டார்.

il_430xn_83565302நந்தினி படுக்கையில் படுத்துக் கொண்டாள். புல்புலைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு ”ஹேய்! சொல்லுடா, அந்த ஆள் என்ன சொன்னான்? தயவுசெய்து சொல்லுடா, அந்த ஆள் சொன்னதை எல்லாம் சொல்லுடா?” என்று கேட்டாள்.

நாள் முழுவதும் அங்குமிங்கும் ஓடி விளையாடிய காரணத்தால் புல்புல் களைத்துப் போயிருந்தான். அவனுக்குத் தூக்கம் கண்ணைக் கட்டியது. ”அவர் உன்னை…..” என்று முனங்கினான். வாக்கியத்தை முடிக்காமல் நந்தினிக்கு முதுகைக் காட்டி திரும்பி போலேநாத் படம் மாட்டியிருந்த சுவற்றிற்கு முகம் காட்டி படுத்தான். அப்படியே ஆழ்ந்து தூங்கி விட்டான்.

”என்னையா? என்னைப் பற்றி என்ன சொன்னார்?” நந்தினி மிகுந்த ஆவலுடன் கேட்டாள். நந்தினி நீண்ட நேரம் விழித்துக் கிடந்தாள்.

ஆங்கிலத்தில்:  ரஞ்ஜிதா பிஸ்வாஸ்                 தமிழில்:  மதியழகன் சுப்பையா