பசியும் பரிவும்

இளங்கோ கிருஷ்ணனின் “காயசண்டிகை”  கவிதை நூல் விமர்சனம்

இளங்கோ கிருஷ்ணன் முக்கியமான இளங்கவிஞர்களில் ஒருவர். இவர் கவிதைகளில் காணப்படும் வசீகரமான சொற்செட்டும் ஒரு கதைத்துணுக்குபோல அமைந்துவிடுகிற வடிவமைப்பும் வாசகர்களை உடனடியாகக் கவனிக்கத் துண்டும் கூறுகள். கவிதையின் பொருள் எழுத்துத்தளத்திலிருந்து மிக இயல்பாக வாழ்க்கைத்தளத்தை நோக்கி நகர்பவையாக உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்ட “காயசண்டிகை” தொகுப்பில் நல்ல கவிதைகள் பல உள்ளன.

sleepfire“திறக்கப்படாத கதவின்முன் நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்” என்று தொடங்கி அதே வரிகளோடு முடிவடையும் கதவு கவிதை குறிப்பிடத்தக்க ஒன்று. மூடிய கதவுக்குப் பின்னால் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது காத்திருப்பவருக்கு முதலில் ஐயமாக உள்ளது. பின்னர்,  அவ்வப்போது காதில் விழுகிற உரையாடல் சத்தங்களும் மற்றும் வேறு சில ஓசைகளும் உள்நடமாட்டத்தை உறுதிப்படுத்தி ஐயத்தைப் போக்குகிறது. அதுவே காத்திருப்பதற்கு முதன்மையான காரணம். திறப்பதற்காக வருவதுபோல கதவுவரை வேகமாக நடந்துவந்து மறைந்துவிடுகிற காலடியோசைகள் அதற்கடுத்த காரணம். முதல் முறை திறக்காதவர்கள் இரண்டாவது முறை வரும்போது திறந்துவிடலாம். இரண்டாவது முறையும் திறக்காதவர்கள் மூன்றாவது முறையிலாவது திறந்துவிடலாம் என்று நம்பிக்கை நீண்டுகொண்டே செல்கிறது. காத்திருப்பின் நீட்சியில் கதவு அழகான ஒரு படிமமாக மாற்றமடைகிறது. கதவுக்கு மறுபுறம் இருப்பது ஒரு வாய்ப்பு.   நம் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் தீராத துயரங்களிலிருந்து ஒரு விடியலையும் தரக்கூடும் என்று நம்பிக்கையூட்டுகிற வாய்ப்பு. அல்லது ஒரு துணை. நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று வேறொரு திசையில் செலுத்தத்தக்க ஒரு சக்தி.  இத்திசையில் எண்ணங்கள் விரிவடையும்போது கவிதையின் தளம் விரிவாகிறது. உலகில் எல்லாருமே ஒருவகையில் ஏதேனும் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் அல்லவா? கல்விக்காக, உணவுக்காக, வேலைக்காக, நல்ல துணிமணிகளுக்காக, ஊதியத்துக்காக, காதலுக்காக என காத்திருப்பதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

கதவு கவிதையின் நீட்சியாக விளைந்திருக்கும் “குழந்தை” கவிதையும் முக்கியமான ஒன்று. தவறான வழிகாட்டலின் அடிப்படையில் பிழையான ஒரு கடையின்முன்னால் நிற்கிறது ஒரு குழந்தை.  அது தேடிவந்த பொருள் அக்கடையில் இல்லை அல்லது அப்பொருளுக்குத் தரவேண்டிய அளவுக்குப் போதுமான தொகை தன்னிடம் இல்லை என்பதை அங்கு வந்த பின்புதான் புரிந்துகொள்கிறது. சலனமின்மையும் நிராகரிப்பும் அடர்ந்த கடைக்காரரின் முகத்தை ஒருவிதமான இயலாமையோடு கண்திரளப் பார்க்கிறது. வேறு வழியில்லை. திரும்பிச் செல்லத்தான் வேண்டும். குழந்தையை முன்வைத்துச் சொல்லப்பட்டாலும் கவிதை குழந்தையைப்பற்றியது மட்டுமல்ல.  நம்பிக்கையை வழங்கக்கூடிய ஒரு வாய்ப்பு அல்லது வெளிச்சத்துக்கான ஒரு சுடர் எந்த மூலையிலிருந்து உதிக்கக்கூடும் என்று அடர்ந்த இருளில் நித்தமும் தடுமாறி உழல்கிற, ஏமாற்றத்தில் துவண்டுபோகிற மனிதர்களைப் பற்றியதாகவும் விரிவுபடுத்திப் பார்க்கலாம். கவிதையில் அதன் பிரச்சனை திரும்பிச் செல்வதல்ல, வெறும்கைகளோடு திரும்பிச் செல்வதே என்னும் வரிகள் முக்கியமானவை.

இதை இப்படிச் சொல்லிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. “கும்பல் கூடுகிற ஏதோ ஒரு இடத்தில் நிறைய தேநீர் விற்கும், போ..” என்று விவரம் சொல்லி  நடமாடும் விற்பனையாளனாக உள்ள தன் நண்பனை அனுப்பிவைக்கிறார் ஒருவர் என்று எடுத்துக்கொள்வோம். எதிர்பார்ப்போடு போன இடத்தில் கூட்டம் இருந்ததென்னமோ உண்மை. அந்தக் கூட்டத்தில் சாதாரணமாகவே ஐம்பது தேநீர் விற்கமுடியும் என்பதுவும் உண்மை. துரதிருஷ்டவசமாக, அந்த அளவுக்கு விற்பனை நிகழவில்லை. நினைத்ததில் கால்பங்கு அளவே விற்பனையாகிறது. விற்ற தொகையோடு திரும்பச் செல்லவேண்டியிருக்கிறது. இது ஒருவகையான திரும்புதல்.  பல மணிநேரங்கள் அலைந்து திரிந்தாலும் ஒரு தேநீர்கூட விற்பனையாகாமல் வெறும்கையோடு திரும்புதல் என்பது இன்னொரு வகை.

வழிகாட்டல் சில சமயங்களில் நல்ல பயன் தருகிறது. சிலசமயங்களில் பயனில்லாமல் போய்விடுகிறது. இதற்காக வழிகாட்டியவரை நொந்துகொள்ள முடியாது. வழிகாட்டி இல்லாமல் இருக்கவும் முடியாது. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார்கள். அதன் பிரச்சனை திரும்பிச் செல்வதல்ல, வெறும்கைகளோடு திரும்பிச் செல்வதே என்னும் வரியை மறுபடியும் நினைத்துக்கொள்ளலாம். திரும்பிச் செல்வது ஏன் அந்த அளவுக்கு உக்கிரமான பிரச்சனையாக இல்லை என்பதற்குக் காரணம், மீண்டும் இன்னொரு இடத்தைநாடி அல்லது அந்த இடமும் ஏமாற்றமளிக்கும் நிலையில் மற்றுமொரு இடத்தை நாடிச் செல்கிற வாய்ப்புக்கு அத்தருணத்தில் வழியிருக்கிறது என்பதுதான். வெறும்கையோடு செல்லாத அளவுக்கு அந்த வாய்ப்புகள் வழிவகுத்துக்கொடுக்கக்கூடும் என்பதால் அது பிரச்சனையாக அமைவதில்லை. ஆனால் வெறும்கையோடு திரும்புவது என்பது எல்லா வாய்ப்புகளும் ஏமாற்றத்தில் முடிவுற்றதால் விளைகிற இறுதிக்கணம். அடுத்து என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. ஆகவே அது பிரச்சனையாக அமைந்துவிடுகிறது.

kalachuvadu_ksவெறும்கையோடு திரும்புகிற ஒருவரைப்பற்றிய சித்திரமொன்றும் இத்தொகுப்பில் இறுதியாக வீடுதிரும்புதல் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அது எவ்வகையில் பிரச்சனையாகிறது என்பதற்கு இக்கவிதையில் இன்னும் அழுத்தமான காரணங்கள் உள்ளன. ஒரு குடும்பத்தலைவனாக இருப்பவன் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டதுமே, வீட்டில் உள்ள மற்றவர்கள் ஒருவித எதிர்பார்ப்பை தேக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். எளிய உலகியல் உண்மை இது. தேவைகளைமுன்னிட்டு அந்த எதிர்பார்ப்புகள் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. பசிக்கான உணவு என்பதுதான் முதல் தேவை. வேட்டைக்குக் கிளம்பிய குடும்பத்தலைவன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் எந்த வேட்டையும் கிட்டாமல் கவிதையில் வெறும்கையோடு திரும்புகிறான். கவிதையை சுவாரசியப்படுத்துவதற்காக, கவிதை முன்னிலைத்தன்மையில் சொல்லப்படுகிறது. ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல தொடர்ந்து ஐந்தாவது நாளாக அவனுக்கு எந்த வேட்டையும் அமையால் போய்விடுகிறது. ஐந்து நாட்களாக பட்டினி என்பது எவ்வளவு பெரிய கொடுமை. வயதான பெற்றோர், மனைவி, பிள்ளைகள் எல்லாருடைய வதங்கிய முகங்களையும் ஒருகணம் நினைத்துப் பார்த்துக் கொள்கிறான். வெறும்கைக்கோலம் அவர்களுடைய உயிரை பலிவாங்க உள்ளது. அதனால் அவர்களுக்காக வழியில் மரத்தடிகளில் கிட்டுகிற நாவற்பழங்களையும் மரவள்ளிக்கிழங்குகளையும் சேகரித்துக்கொள்கிறான். வறுமையென்னும் இருளிலிருந்து மீட்சியில்லாத வாழ்க்கையை அன்றைய பொழுதின் இருள் சூழ்ந்துகொள்கிறது. மீண்டும் ஒரு விடியல் வரும். மீண்டும் அவன் காட்டுக்குள் செல்லக்கூடும். அன்றாவது அவனுடைய வேட்டைக்குப் பலன் கிடைக்குமா? பொம்மைகளின் சாகசங்களையெல்லாம் செய்து காட்டியும் ஒரே ஒரு பொம்மையைக்கூட விற்பனை செய்ய இயலாமல் வெறும்கையோடு பாதையோர அட்டைப்பெட்டிக் கடையை மூடத்தொடங்குகிறவனைச் சித்தரிக்கிற “பொம்மைகள் விற்பவன்” கவிதையும் கிட்டத்தட்ட வேறொரு திசையில் இதே அனுபவத்தை வழங்குகிறது.

உப்புக்காற்றுபோல பசியால் அரிக்கப்படுகிற ஒருவனைப்பற்றிய காட்சி “நெய்தல்” என்னும் கவிதையில் இடம்பெறுகிறது. உரைநடைச் சொல்லோவியம் போல எழுதப்பட்ட கவிதை. எவ்வளவு இட்டாலும் நிறையவே நிறையாத கடலைவிட பெரிய வயிறு உள்ளவன் கட்டுமரமேறி கடலில் மீன்பிடிக்கச் செல்கிறான். ஒருமுறையும் மீன் கிடைப்பதில்லை அவனுக்கு. குழந்தையின் அழுகிய சடலம் அல்லது வேறு ஏதாவது வந்து வலையில் சிக்கிக்கொள்கிறதே தவிர, கிடைக்கவேண்டிய மீன் கிடைப்பதே இல்லை.  பசிநெருப்போ அவனை வாட்டுகிறது. இறுதியில் வலைகளின்மீது நம்பிக்கை இழந்து ஒரு தூண்டிலை வீசிவிட்டு ஒரே இடத்தில் காத்திருக்கிறான். முள்ளில் புழுவுக்குப் பதிலாக தன் இதயத்தையே மாட்டிவைத்துவிட்டு மீனின் வரவுக்காகக் காத்திருக்கிறான். வாய்ப்புக்காகக் காலமெல்லாம் காத்திருக்கும் வாழ்க்கையின் தகிப்பும் கசப்பும் ஒவ்வொரு சொல்லிலும் இறங்கியிருப்பதைக் காணலாம். காத்திருப்பின் கசப்பு படர்ந்திருக்கும் இன்னொரு கவிதை “பிடாரன்”.

கதவுக்கு மறுபுறம் நிற்பவன், வெறும்கையோடு திரும்பிச் செல்வதை பிரச்சனையாக நிராசையோடு நினைத்துக்கொள்கிற குழந்தை, வேட்டையே கிடைக்காமல் ஏமாற்றத்தோடும் ஐந்துநாள் பட்டினியோடும் திரும்புகிற வேட்டைக்காரன், கூவிக்கூவி விற்றாலும் ஒரு பொம்மையைக்கூட விற்கமுடியாத பொம்மைக்காரன், வலைவிரித்தாலும் மீன பிடிக்கமுடியாதவன், ஒரேஒரு உடலத்துக்காக காலமெல்லாம் காத்திருக்கும் பிடாரன் என தொகுப்பில் நிறைந்திருக்கும் ஏராளமான சித்திரங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வலியை வெவ்வேறு குரலில் அல்லது வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்துகின்றன. காத்திருப்பின் கசப்பு ஒருகணம் மூர்க்கமாக வெளிப்படுகிறது. இன்னொரு கணம் முனகலாக வெளிப்படுகிறது.

தலைப்புக் கவிதையான “காயசண்டிகை” அன்பின் ஆழத்தையும் தாய்மையையும் உணர்த்தக்கூடிய ஒரு கவிதை. இந்த உலகத்தின் பசிப்பிணியை அறுத்த தாய் காயசண்டிகை.  முகவாட்டத்தின் வழியாகவே  மற்றவர்கள் பசியை அறிந்து அமுதூட்டியவள். மனிதர்களை விலங்காக மாற்றக்கூடிய சக்திமிக்கது பசி. பசி வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பது உலகவாக்கு. பசியைத் தணிப்பதொன்றே மனிதர்களை மனிதர்களாக நடமாடவைக்கக்கூடிய செயல். காயசண்டிகையின் பசிதணிக்கும் பணி மனிதகுலம் மனிதகுலமாகவே தொடர வழிவகுத்த மாபெரும் காரியம். தாய்மைக்கும் கனிவுக்கும் அவள் பெயர் ஒரு  படிமமாக வரலாற்றின் நினைவில் படிந்திருக்கிறது. இளங்கோ கிருஷ்ணன் காயசண்டிகையின் படிமத்தை மனப்பிறழ்வுள்ள ஒரு பெண்ணின்மீது படியவைக்கிறார். இந்த உலகம்பற்றிய ஞானமே அவளுக்கில்லை. இருளோ பகலோ தௌiவில்லை. தன்னைச் சூழ மனிதர்களின் இருப்போ, இன்மையோ தெரிவதுமில்லை. தன் பிச்சைப் பாத்திரத்தை நீர்த்தொட்டியில் அமிழ்த்தெடுத்து, ஏதோ அமுதசுரபியை நிரப்பிக்கொண்டதுபோல, அமுதமுண்ணுங்கள் அமுதமுண்ணுங்கள் என யாருமில்லாத வெட்டவெளியில் சுற்றியுள்ள தரைமீது வாரியிறைக்கிறாள். யாராலும் கையேந்தி வாங்கப்படாத அந்த அமுதத்துளிகள் தரைமுழுக்க இறைந்துகிடக்கின்றன.  மனிதர்கள் அருந்தாத அந்த அமுதத்துளிகளை வானத்திலிருந்து இறங்கிவந்த நிலா  பருகுகிறது.  புறஉலகம்பற்றிய பிரக்ஞையே இல்லாத ஒரு பித்துமனத்தில் தளும்பத்தளும்ப நிறைந்திருக்கிற தாய்மையுணர்வையும் பரிவையும் உணர்த்துகிறார் இளங்கோ கிருஷ்ணன். மிகச்சிறந்த இக்கவிதை மிகச்சிறந்த ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. சுயபிரக்ஞையே இல்லாத ஒருவரிடம் மிகஇயல்பாக இருக்கிற தாய்மையுணர்வை சுயஉணர்வுள்ள நாம் எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் அக்கேள்வி.

(காய சண்டிகை. இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள். காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோயில்-1. விலை.ரூ45)

One Reply to “பசியும் பரிவும்”

Comments are closed.