கிரகர் சோம்சா எனும் கரப்பான்பூச்சி
கிரகர் சோம்சா
எனும் கரப்பான் பூச்சிக்கு
இன்று நிறைய
கடமைகள் உள்ளன
சந்தித்தாக வேண்டிய
வாடிக்கையாளர்கள் பட்டியலை
சரிபார்த்துவிட்டு
அதிகாலையிலேயே
இருசக்கர வாகனத்தில்
கிளம்பி விட்டது
இருளும் தூசும் அடர்ந்த
பரணின் சாலை-சிக்னல்களில்
காத்திருக்க பொறுமையற்று
கைகடிகாரத்தை
பார்த்து பார்த்து
சலித்துக்கொள்கிறது
கடும் வெக்கையிலும்
கழுத்துப் பட்டியை
மேலும் இறுக்குகிறது
அதன் அறையில்
அதற்காக
பல ஒளியாண்டுகளாக
காத்திருக்கிறார்கள்
தாஸ்தயெவ்ஸ்கியியும் பீத்தோவானும்
நூலகத்திற்கு
செல்லும் பாதைகள்
அதன் வரைபடத்திலிருந்து
திருடப்பட்டன
சிறுநீர் கழிக்கவும்
சிகரெட் பிடிக்கவும்
அனுமதி கேட்டு
சமர்ப்பிக்கபட்ட
விண்ணப்பங்களுக்கும்
நினைவூட்டல்களுக்கும்
இன்று வரை
ஒரு பதிலுமில்லை
இந்த பாழடைந்த கட்டிடத்தில்
தன் விடுதலையின் கழிப்பறை
எங்குள்ளதென
அதற்குத் தெரியும் ஆனால்
அந்த இடத்தில்
தலைகீழாய் கவிழ்த்து வைக்கப்படும்
அபாயத்தை எண்ணி
ஊர்ந்தும்
பறந்தும் திரிகிறது
கவிழ்ந்து கிடப்பது
போன்ற பறத்தல் அது.
வேடன்
கவை நிறைய அம்பிருந்தும்
ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன்
அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது
செம்போத்துப் பறவை ஒன்றை பார்த்தான்.
பகலெல்லாம் அவன் விரட்டிய போதும்
கிளை கிளையாய்த் தாவி மறைந்த அதனை தேடியவாறு
காடெங்கும் அலைந்தான்.
வெறுங்காற்றில் புரண்டு படுக்க
சரசரக்கும் சருகுகளுக்கிடையே
தாழம்பூ வாசம் மிளிர நெளியும் நச்சரவங்கள் நிறைந்த
மூங்கில் காட்டுக்குள் அவன் நுழைந்த போது
வானில் முழுநிலவு வந்துவிட்டிருந்தது.
அவன் விரட்டிய அப்பறவை நிலவில் அமர்ந்திருக்கக் கண்டவன்
தன் வில்லில் நாணேற்றி ஒரு அம்பை எய்து விட்டு காத்திருக்கத் துவங்கினான்.
அந்த அம்போ அவனை ஏமாற்றிவிட்டு
வெளியின் திக்கற்றத் திக்கில் பறந்து கொண்டிருக்கிறது ஒரு செம்போத்தே போலும்.
ஒரு மரத்தை நம் வழிக்கு கொண்டுவர

முதலில் அதை வெட்டிச்சாய்க்க வேண்டும்
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல
ஆயுதங்களை எவ்வளவு மூர்க்கமாக பயன்படுத்த முடியுமோ
அவ்வளவு பயன்படுத்த வேண்டும்.
எப்படியாவது அதை வேரோடு சாய்த்துவிட்டால் போதும்
பிறகு அலட்டிக் கொள்ள ஏதுமில்லை.
வான் தொட தினவெடுத்து
வெளியெங்கும் கிளைபரப்பியிருந்த
அதன் பிரம்மாண்டமும் கம்பீரமும் சிதைக்கப்பட்டன
வெயிலைத்தின்று மதர்ந்திருந்த
அதன் சாத்தானின் பற்களும் நகங்களும் பிடுங்கப்பட்டாயிற்று
இனி அது தீங்கற்றது
மரணத்தின் வாட்டமுற்று நிறமிழக்கும்
பச்சையிலைகளை ஆடுகள் மேயட்டும்
சிறு கிளைகளை சுள்ளிகளை விறகுகளாக்குவோம்
பருத்த அதன் பாகங்களை
என்ன செய்வதென முடிவெடுக்கும் ஏகபோகமும் நமதே
சன்னல்களாக்குவோம்
கதவுகள்
நாற்காலிகள்
மேசைகள் அல்லது சவப்பெட்டிகள்
என்ன வேண்டுமானலும் செய்வோம்
இனி அது நமது கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
காப்பி நதி
காப்பி நதியின்
கரையில்
அமைந்துள்ளது
உன் நகரம்
கரையெங்கும்
கிளைக்கும் தாவரங்கள்
காய்ந்தபின்
காப்பி நிறத்திற்கே
திரும்புகின்றன
காப்பி வாடை வீசும்
மனிதர் உதடுகளில்
உருள்வது
காப்பியின் மொழி
காப்பி வண்ண மண்ணில்
அனைத்தும்
காப்பியின் ரூபம்
சந்திர சூரியர் ஒளியில்
காப்பியின் பிசுப்பு
மின்னலின் ருசியில்
காப்பியின் கசப்பு
காப்பி நதி குடிக்க வயிறு உண்டோ யயாதி
காப்பி நதி கடக்க தோணி உண்டோ யயாதி
காப்பி நதி கடந்தால் காலம் உண்டோ யயாதி
அநாதரவு
நினைவுதப்பி மதுவிடுதியிலேயே
விழுந்து கிடப்பவனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறது
அவன் தூக்கி வந்த குழந்தை
தன் பெயரும் அறியாத
அதன் நடை கனியா பாதங்கள் திரும்பிச் செல்லும்
வழியறியாதவை
அவனோ எளிதில்
திரும்பவியலாத ஒரு தேசாந்தரத்திற்கு
வழி நடத்தப்பட்டான் மதுவின் வசியத்தால்
நேரம் செல்லச் செல்லப் பீதியில்
அழத்துவங்கிவிட்ட அதன் அநாதரவு பொருட்டு
நீங்கள் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை
அனுதாபங்கொள்வதும் காத்திருப்பதும் தவிர
2 Replies to “கிரகர் சோம்சா எனும் கரப்பான்பூச்சி”
Comments are closed.