இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம்

தமிழில் அணி இலக்கணம் என்பது செய்யுளின் சொல்லழகையும் பொருளழகையும் மேம்பட வைக்கும் ஒரு உத்தி.  வேற்றுப் பொருள் வைப்பணி, இல்பொருள் உவமையணி என சிறு வயதில் தமிழ் வாத்தியார் பிடறியில் அடித்து கற்பித்தது மனதில் இன்றளவும் ஆழமாகப் பதிந்து கிடக்கிறது. வஞ்சப் புகழ்ச்சியணி மிகவும் பிரபலமாக இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தற்குறிப்பேற்ற அணி. இது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றி கூறும் உத்தி.

கம்ப இராமாயணத்தில் ஒரு இடம். உனக்கு ஆபத்து வந்துவிட்டது என கோள் மூட்ட கூனி புறப்பட, கைகேயி சாதாரனமான ஆண் மகனைப் பெற்ற யாருமே கவலையின்றி வாழ்கையில், இவ்வுலகிற்கே வேதம் போன்ற ராமனை ஈன்ற எனக்கு ஏது துன்பம்? என எள்ளி நகையாடுவாள்.

பராவரும் புதல்வரைப் பயக்க, யாவரும்
உராவருந் துயரைவிட்டு, உறுதி காண்பரால்;
விராவரும் புவிக்கெலாம் வேத மேயன
இராமனைப் பயத்த எற்கு இடர் உண்டோ ?

சாதரணமான ஆண் மகனைப் பெற்ற எந்த பெற்றோரும் கவலையின்றி வாழ்வர் என்ற அன்றைய காலகட்டத்தின் இயல்பான ஒரு நியதியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, “நான் பெறாவிடினும் இராமன் என் மகனே!” என பூரிக்கும் அளவிற்கு கைகேயி இராமனிடம் அன்பு கொண்டிருந்தாள் என்கின்ற தனது குறிப்பை கம்பர் மிக அழகாக சொல்லியிருப்பார்.

இதே போல் சிலப்பதிகாரத்திலும் ஒரு காட்சி:

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

காற்றிலே பாண்டியனின் மீன் கொடி அசையும் ஒரு இயல்பான நிகழ்வை, அது கோவலனையும் கண்ணகியையும் மதுரையினுள் வந்தால் ‘உமக்கு தீங்கு நேரிடும். ஆகையால் வராதீர்’ என எச்சரிப்பதாக இளங்கோ அடிகள் எழுதியிருப்பார்.

கவிஞர்களுக்கு ஒரு செய்யுளின் கருத்தை மெருகூட்ட இதைப்போல் பல அணிகள் உண்டென்றால் ஒரு இசையமைப்பாளனுக்கு என்ன ஆயுதம் இருக்கிறது? திரைக்கதையைப் பொருத்து ஒரு பாடலில் எவ்வளவோ இயல்பான அதே சமயத்தில் நுணுக்கமான நிகழ்வுகள் சாத்தியம். பல்லவியிலோ அல்லது சரணத்திலோ இவை நிகழ்ந்தால் அதைப் பாடல் வரிகளைக் கொண்டு சொல்லி விடலாம். ஆனால் தொடக்க இசையின் போதும் இடைஇசையின் போதும் வரும் நிகழ்வுகளைப் பூடகமாகவோ நேரடியாகவோ சொல்வது எப்படி? ஒரு பாடலை நாம் கண் மூடி கேட்டால் காட்சியமைப்புகளை இயல்பாக நிகழும் விஷயங்களாகக் கொண்டு வருதல் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. இது ஒரு இயக்குனரின் மற்றும் இசையமைப்பாளரின் அடிப்படைத் திறனை பொருத்தது மட்டுமல்ல, இவ்விரு படைப்பாளிகளின் இடையேயான கூட்டுறவையும் நிர்ணயிக்கும் ஒரு அளவு கோல்.

ஒரு உதாரணமாகத் தமிழ் சினிமாவுக்குள் காலைப்பனியில் ஓட்டப்பயிற்ச்சி செய்யும் இயல்பான நிகழ்வில் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் அரும்பும் உன்னதமான சூழலும் உண்டு. பெண் பார்க்கும் படலித்தின் போது வெற்றிலை இடிக்கும் பெரிசுகள் கொண்ட சிக்கலான சூழலும் உண்டு. இதில் முதல் சூழலுக்கு காலடி ஓசையை மட்டுமே தாளமாகப் பயன்படுத்துவதும் இரண்டாம் சூழலுக்கு வெற்றிலை உரலுக்கும் மிருதங்கத்திற்கும் நடுவில் ஒரு தனி ஆவர்த்தனத்தைப் புகுத்துவதும் இசையமைப்பாளரின் திறமை.

இவை அனைத்தையும் விட, திரைப்பாடல்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தபடும் ஒரு சுவாரஸ்யமான சூழல், ரயிலை மையமாக வைத்து அமைக்கப்படும் பாடல்கள். பச்சை விளக்கின் “கேள்வி பிறந்தது அன்று” -பாடலிலிருந்து, ஹிந்தியின் ‘மேரே ஸப்னோன்கி ராணி’ தொடர்ந்து இன்றைய ‘சய்யா சய்யா’ வரை இரயிலில் படம் பிடித்த பாடல்கள் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்துள்ளன. ஆனால் ரயிலைச் சார்ந்த பாடல்கள் என்றாலே பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் எந்த பரிசோதனைகளிலும் ஈடுபடாமல் அந்தச் சூழலைத் தாள அமைப்பை மட்டுமே கொண்டு உணர்த்துகிறார்கள்.

Ooty train

இந்த வகையில் இளையராஜா சற்று மாறுபட்ட இசை அமைப்பாளராகவே இருக்கிறார். ரயில் என்றால் அது நம் காதுகளுக்குப் பழக்கப்பட்ட சத்தத்தை மட்டுமே கொண்டு அமைய வேண்டும் என்ற எழுதப்படாத விதியைத் தகர்த்தெறிந்து வயலின், கிடார், ஷெனாய் எனப் பல்வேறு வர்ணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இவை மட்டுமல்லாது இவர் இசை அமைத்த பெரும்பாலான ரயில் பாடல்களின் கோணங்களும் பல வித்தியாசமான சூழல்களில் அமைந்தவை. [இரயில் பெட்டியில் அமைந்த இவரின் பாடல்களில் நாயகனுக்குக் காதலும் வரும்; ஞானமும் வரும்; குசும்பும் வரும்; குமுறலும் வரும்]. காட்சியமைப்பைப் பொருத்தவரை இரயில் பெட்டி ஒன்றே பின்னணியாக இருப்பினும், பல்வேறு உள்ளார்ந்த உணர்வுக்கோர்வைகளை இசையின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயம் இளையராஜாவிற்கு இருந்திருக்கிறது.

ரயிலோடு பின்னிப்பிணைந்து அமையும் கதைகளில் அவர் ரயிலை ஒரு கதாபாத்திரமாகவே உருவகித்து இசை அமைக்கிறார். இதை ‘ஆலாபனா’ என்ற தெலுங்குப் படத்தின் பின்னணி இசையிலிருந்து எளிதாக அறியலாம். இதில் கதாநாயகன் ஒரு ரயில்வே தொழிலாளி. நாயகி ஒரு பரத நாட்டிய நர்த்தகி. ரயில் நிலையத்தை மையமாகக் கொண்டு இவர்கள் இடையே அரும்பும் காதலை, ஒரு ரயில் எப்படி மெதுவாகத் தொடங்கி போகப்போக வேகம் பிடிக்குமோ அதே போல் இசையையும் அமைத்திருப்பார். அவர்களின் காதல் தொடக்க நிலையில் இருக்கும்போது வரும் பின்னணி இசை இது. பின்னர் அது சூடு பிடித்ததும் வரும் இசை இது. அதன் பின் அது கனிந்து் காதலியின் பரத நாட்டியப் பின்னணிக்கேற்ப மாறுபட்டு கர்நாடக சங்கீதமாய் வரும் இசை இது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. சூழலின் துணை கொண்டு மறைமுகமாக இயக்குனர் சொல்ல வந்த கருத்தை அசகாயமாக இசை வடிவில் வெளிப்படுத்தி காட்சிக்கு உறுதுணையாய் நின்றது. தவிர ஒரே மெட்டை மேற்கத்திய Swing Waltz இசைக்கும் தென்னிந்திய கர்நாடக இசைக்கும் பாலமாகப் பயன்படுத்தி தன் இசைப் புலமையையும் தெளிவு படுத்தியிருப்பது.

இவ்வாறான சவால்களை தன் தொழில்துறை வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இளையராஜா ilayarajaஇலகுவாக சமாளித்திருக்கிறார். “கிழக்கே போகும் ரயிலில்” வரும் ‘பூவரசம் பூ பூத்தாச்சு‘ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. மேலோட்டமாக அனைவரும் அறியும்படி சாதாரணமான ரயிலின் தாளம் இப்பாடலில் காணப்பட்டாலும், சரணத்தில் அந்தத் தாளத்தோடு ஒன்றிப் பிறந்ததை போல டேப்பு வாத்தியம் என்கின்ற ஒரு கிராமிய தப்பட்டையை சேர்த்து, இடை இசைகளில் ஒற்றை வயலின், சேக்சோபோன், மாண்டலின், சைலோபோன் போன்ற மேற்கத்திய இசை கருவிகளைப் பேசவிட்டு, ஜானகியின் அபார பாட்டுத்திறனை ஜொலிக்க வைத்து, இவை அனைத்திற்கும் பின்னால் பாடலின் மெட்டை தந்திரமாக சுத்த தன்யாஸி-யில் மறைத்து அமைத்திருப்பார். லண்டனிலிருந்து இருக்குமதியாகி சுத்தமாக நடிக்க வராத கிராமியப் பெண்ணாக ராதிகா வலம் வந்த போதும், இந்த பாடல் அனைவரையும் சென்றடைந்து வெற்றி கண்டதென்றால் அதற்கு இளையராஜா அமைத்த இசைக் கோலாகாலம் ஒரு முக்கியமான காரணம்.

அதே போல் ஆரம்பத்தில் தான் இசையமைத்த “மஞ்சள் நிலாவுக்கு” என்னும் பாடலில் , ரயிலின் வேகத்திற்கு ஈடாக ட்ரம்ஸ்-இன் சிம்பலையும் ரிதம் கிடாரையும் ஓட விடுவது அனைவரும் கையாளும் முறை என்பதால், அதற்கு மேல் சுசீலா போன்ற ஒரு மூத்த பாடகியை ரயிலின் ஒலிப்பானைப் போல பாட வைத்தது ஒரு புது வகை முயற்சியே.

(மென்பொருள் துணை கொண்டு மாயஜாலம் காட்ட முடியாத காலகட்டத்தில் வந்த இப்பாடலுக்கு மாங்கு மாங்கு என ரிதம் கிடார் வாசித்த அந்த இசை கலைஞருக்கு எவ்வளவு மூச்சு இறைத்திருக்குமோ!)

அதன் பின் வந்த மூன்றாம் பிறையில், இளையராஜா ஒட்டு மொத்தமாக அனைத்து படைப்பாளிகளின் வரையறையையும் உயர்த்தினார். பூங்காற்று புதிதானது என்ற பாடலின் இரண்டாவது இடை இசை ஒரு அதீத இசைப் பரிசோதனையாகும். இரண்டு வயலின் குழு மற்றும் ஒரு செல்லோவும் + டபுள் பாஸ் அடங்கிய கீழ் ஸ்தாயியில் வாசிக்கும் ஒரு மூன்றாவது குழுவையும் கொண்ட ஒரு தந்தி வாத்திய குழுமத்தை (Strings Emsemble) மட்டுமே வைத்து, நம்மை அறியாமலே பின்னால் வரும் ஒரு ரயிலின் விளையாடுத்தனமான திகிலுணர்வை உண்டு செய்தது அவரின் நுணுக்கமான இசை அறிவைப் பறை சாற்றுகிறது.

இதைத் தொடர்ந்து அவர் குங்குமச் சிமிழ் (கூட்ஸ் வண்டியிலே), கடலோரக் கவிதைகள் (போகுதே போகுதே) போன்ற பாடல்களிலும் ரயில் இசையைப் பல்வேறு விதங்களில் கொடுத்து மாய்ந்திருக்கிறார். இதற்கு நடுவில் தமிழ் சினிமாவில் மட்டுமே வரும் பல அபத்தமான சூழ்நிலைகளுக்கு இசை அமைக்கும் நிர்பந்தம் வேறு. “மெட்டி” என்ற திரைப்படத்தில் “ஓடும் ரயிலில் வெளி நாட்டவர் மந்திரம் சொல்லித்தான் எனக்கு திருமணம்” என்கின்ற மடத்தனமான கதாநாயகிக்கும் சரி, வீட்டின் அருகில் ஓடும் ரயிலின் காரணமாக புரண்டு வந்து கட்டிக்கொள்ளும் காதல் ஜோடிகளைக் கொண்ட முட்டாள்தனமான காட்சிகளுக்கும் சரி, இளையராஜா தரம் குறையாமல் தந்த பாடல்கள் கணக்கிலடங்காதவை.

வயலின் வாசிப்பில் double stop என்று அழைக்கப்படும் இரண்டு தந்திகளில் ஒரே நேரத்தில் வாசிக்கும் உத்தியை ரயிலுக்காக இளையராஜா பலமுறை உபயோகித்திருக்கிறார். குறிப்பாக தளபதி படத்தில் வரும் “சின்னத்தாயவள்” என்ற பாடலின் இடை இசையில் தண்டவாளத்திற்கு ஒரு தந்தி வீதம் போல் அந்த “டபுள் ஸ்டாப்” வயலின் இரண்டு தண்டவாளங்களையும் தொடர்ந்து கொண்டே வந்து சாரங்கியில் முடிந்து உயிரை உருக்கும். இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் என ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்ட ஒரு பாடல் காட்சி அது.

ரயில் ஊர்கையில் உருவாகும் சத்தம் என்னவோ எனக்கு ஒரு ஒழுங்கான தாளமாகவே தோன்றுகிறது. சிறு வயதில் ரயில் பயணங்களின் போது ஜன்னலோரம் உட்கார்ந்து அந்த சத்தத்தை சந்தமாகப் பிரித்து அது என்ன தாளம் என ஆராய்வது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு பொழுதுபோக்கு. அதிகமாக அந்த சந்தம் “தகிட தகிட தகிட தகிட” என திச்ர ஏக தாளத்திலோ அல்லது “தக தகிட தக தகிட” என கண்ட சாப்பிலோ அமையும். சில சமயங்களில் அந்த ரயிலின் தடம் பாலத்திலோ அல்லது சல்லி கல் குறைந்தோ அல்லது அதிகமாகவோ இருக்கும் தளத்திற்கு மாறும்போது அதன் சத்தமும் கூடும். அல்லது குறையும். அப்போது அதன் தாளமும் மாறிவிடும். மறுபடி புது தாளத்தின் சமத்தைக் கண்டுபிடித்து தட்டி எண்ணும் போது ஏற்படும் பூரிப்பை சொற்களால் வர்ணிக்க முடியாது.

ஒரு ரயிலின் சத்தம் ஒரே நிலையில் இல்லாது மாறும் என்பதை இளையராஜாவின் “தாலாட்டு கேட்காத” என்ற பாடலை கேட்டால் உணரலாம்.

இதில் “பாட்டுக்கு நான் அடிமை” என தொடங்கும் வரியில் தாளம் சன்னமாக இழைந்து பின்னர் fullscreen-capture-862009-95950-amவேகம் பிடிக்கும் விதம் இயற்கையிலேயே ரயிலின் சத்தம் தேய்ந்து வளர்வதை போல் இருக்கும். பல்லவியின் வரிகளுக்கிடையில் வரும் புல்லாங்குழல், ரயிலின் ஒலிப்பானை போலவே இருக்கும். இந்த பாடலின் பல்லவி மற்றும் சரணம் முடியும் போது தாளத்தில் வைக்கும் தீர்மானங்களும் (fill-ins) ரயில் ஏதோ பாலத்தின் மீது போகும்போது பிறக்கும் சமம்மல்லாத ஒலி போல் இருக்கும். இடை இசையில் ரயிலின் ஒலிப்பானை போல் கேட்கும் pan flute – ட்டுக்கும் அந்த கேள்விக்கு மறுபடியும் “டபுள் ஸ்டாப்” உத்தியால் பதில் அளிக்கும் வயலினுக்கும் இடையில் ஒரு சிறிய call and response-ஐ அமைத்திருப்பார். அதற்குப் பின் கீரவாணியில் தொடரும் அந்த ஒற்றை வயலின் மனதைப் பிழிந்து விடுவது என்னமோ உண்மை. மேலும் இப்பாடலில் ரயிலின் தாளத்திற்கு ட்ரம்ஸ்-இன் சிம்பலை விட ஸ்நாரை (Snar) அதிகமாக பயன்படுத்தி இருப்பதும் ஒரு புதிய முயற்சியே. இப்படி அனைவரையும் போல் சாதரண ரயிலின் சத்தத்தை வைத்து மட்டும் ஒரு பாடலை எண்ணாமல் அது நகரும் போது நிகழும் பல நுணுக்கமான விஷயங்களையும் பிரதான இசை வடிவத்துடன் கோர்த்து கொடுத்தது வியக்கத்தக்கது.

முன்னமே கூறியதை போல், ரயிலின் “சிக்கு புக்கு” சத்தம் என்றால் ஒரு மொரொக்கோஸ் அல்லது ட்ரம்ஸ்-இன் சிம்பல் என்றும், அதன் ஒலிப்பான் என்றால் புல்லாங்குழல் என்றும் நிலவிய வரையறைகளை தகர்த்து, ஏனைய பிற இசைக்கருவிகளையும் இளையராஜா இந்த பின்னணிக்கு பயன் படுத்தி உள்ளார். “தீர்த்தகரையினிலே” என்ற படத்தில் வரும் “கொட்டி கிடக்குது” என்ற பாடலை நான் இதுவரை ஒளி ஊடகத்தில் பார்த்ததில்லை. அனால் இந்த பாடலின் தொடக்க இசையில் ஓட்ட பந்தயத்தில் அடித்து பிடித்து ஓடுவதை போல சீறிப்பாயும் அந்த இரட்டை வயலினை கேட்ட மாத்திரத்திலேயே, இது ரயில் சம்பந்தப்பட்ட பாடலாகத்தான் இருக்க வேண்டும் என எனக்குள் ஒரு உந்துதல். அந்த சந்தேகம் பாடலின் இரண்டாம் இடை இசையைக் கேட்ட உடன் நீங்கிவிட்டது. ஒரு பாஸ் கிடாரைக் கூட ரயிலின் தாளத்திற்கு சமமாக ஆர்பீஜியோ எனும் மேற்கத்திய பாணியில் உபயோகித்து அசர வைக்கிறார். அதே போல் “சக்கரக்கட்டி சக்கரக்கட்டி” என வரும் பாடலின் தொடக்க இசையில் ஒற்றை கிடாரை மட்டுமே பின்னணியில் ரயிலின் தாள ஓட்டம் போல் பாவித்து, ஷெனாய் மற்றும் வயலினின் துணை கொண்டு ஒரு நகரும் ரயிலை கண்முன் நிறுத்தி விடுகிறார்.

ஒரு தேர்ந்த கைவினைக் கலைஞர் களிமண்ணைத் தன் விருப்பத்துக்கேற்ப வளைத்து அழகான கலைப்படைப்பைத் தருவதைப் போல, எந்த ஒரு மெட்டையும் தான் விரும்பும் சூழலுக்கு மாற்றி அமைக்கும் திறன் பெற்றவர் இளையராஜா. “தேவதை போல் ஒரு” என அனைவரும் அறிந்த ஒரு சாதாரண பாடலை ரயிலின் சூழலுக்குத் தக்கவாறும் கதையில் வரும் மர்மத்தை முன்னரே எடுத்துரைக்கும் வர்ணத்திலும் மாற்றி அமைத்திருப்பார். பி.சி.ஸ்ரீராம் எனும் மற்றொரு திறமையான கலைஞரும், இளையராஜாவும் சேர்ந்து தீட்டும் இந்தக் காட்சி தமிழ் சினிமாவின் மிகச்சிறப்பான திரைவடிவங்களில் ஒன்று.

எப்போதும் ரயிலின் ஓசையை இசைக்கருவிகளால் மட்டுமே இளையராஜா வெளிப்படுத்துவதில்லை. ரயிலின் சுய சத்தத்தை அப்படியே இசையாக பாவித்தும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாகியது உண்டு. “மௌன ராகம்” திரைப்படத்தின் உச்ச கட்டம். ரயிலிலே போகும் ரேவதியை, மோகன் துரத்தி பிடிக்கும் காட்சிகளில், ஒரு பிரளயத்தை உண்டு செய்வது போல் ஒரு வயலினும் அவருடன் தொடர்ந்து ஓடும். அந்த ரயிலை அவர் எட்டி பிடித்ததும், ரயில் பெட்டியின் ஒரு மூலையில் ரேவதியும் மறு மூலையில் மோகனும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷத்தில் ஆசுவாசப்படும் அவ்வேளையில் அதுவரை அனைவரையும் நாற்காலியின் முனைக்குக் கொண்டு வந்திருந்த அந்த வயலின் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். ஒரு இரண்டு வினாடிகளுக்கு சுத்தமான ரயிலின் சத்தம் மட்டும் நாத மண்டலத்தை ஆக்கிரமிக்கும். பார்க்கும் ரசிகர்கள் யாவரும் அந்த இரு வினாடியில் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டு “ஹப்பா” என நிம்மதி அடைதலுக்கு அந்த மௌனம் காரணம். அந்த ரயிலின் சுய சத்தம் காரணம்.

தன் மதிய உணவு இடை வேளையின் போது கிடைத்த உபரி நேரத்தில் பொழுது போகாமல் இளையராஜா தனக்காக இசை அமைத்த “நத்திங் பட் விண்ட்” என்ற இசைத்தொகுப்பில் அதே பெயரைக்கொண்ட ஒரு இசைக்கோப்பை அமைத்திருப்பார். இதில் இந்த உலகம் தற்போதய அறிவியலின் வளர்ச்சி காரணமாக பிற்காலத்தில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மனித இனமே அழிந்து போனாலும் காற்றும் இசையும் நிரந்தரமாக ஜீவிக்கும் என்ற ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தைச் சொல்லிருப்பார். இதிலும் ரயிலின் சுய சத்தம் இசையோடு இசையாய் ஊடே வரும்.

அதே போல் மூன்றாம் பிறை படத்தின் உச்ச கட்டத்திலும், கமல் நடைமேடையை ஏறும்வரை நம்மை கட்டிப்போடும் பின்னணி இசை, அவர் ஸ்ரீதேவியைக் கண்டவுடன் சட்டென்று மௌனமாகி விடும். கமலின் சிறப்பான நடிப்பின் போது பின்னால் நிகழும் இயல்பான நிகழ்வுகளுக்கு இசை பொருந்தி இருக்காது. இதை ஒரு வைத்தியன் நம் நாடி துடிப்பைக் கண்டறிவது போல் யூகிக்கும் இளையராஜா, அந்த ரயில் நகரும் வரை இசையைத் தொடங்க மாட்டார். அந்த ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து கண்ணுக்கெட்டும் தூரத்திலிருந்து மறைந்து, அதன் சத்தம் தேயத் தேய, பெய்யும் லேசான மழையுடன் சேர்ந்து யேசுதாஸ் “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” என பின்னணியில் தொடங்குவார். அப்போது உங்கள் இதயம் கனக்கவில்லை எனில் எதற்கும் நீங்கள் Dr. செரியனிடம் ஒரு முறை காண்பித்து அது இருக்கிறதா இல்லையா என சரி பார்த்துக் கொள்ளுதல் நலம்.

இசை அமைப்பாளர்கள் தாங்கள் எப்போது இசைக்க வேண்டும், எப்போது மௌனிக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறியவில்லையெனில் அது இடம்பெறும் காட்சி பாழாவது நிச்சயம். இந்தக் கருத்தை தனது ரயில் சார்ந்த காட்சிகளையும் பாடல்களையும் வைத்து இளையராஜா இனி வரும் இசை சந்ததியருக்கு ஒரு பாடமே நடத்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது. இந்தியத் திரையுலகில் ரயிலை மையமாக வைத்து இசையமைக்கப்பட்ட பாடல்கள், பின்னணியிசைக் கோப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது இளையராஜாவின் இடம் அதில் நிச்சயம் முதன்மையானதாக இருக்கும். முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தீவிரமாக இயங்கிவரும் இளையராஜாவின் படைப்புலகம் பண்ணைப்புரம் ஸ்டேஷனில் கிளம்பி சீராகத் தன் தாளகதியில் சென்றபடியே இருக்கிறது. பயணிகளாகிய நாம்தான் வெகு அதிர்ஷ்டசாலிகள்.

fullscreen-capture-862009-101005-am


One Reply to “இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம்”

Comments are closed.