சிதலும் எறும்பும் மூவறிவினவே

antnest1என்னுடைய அமெரிக்கத் தமிழ் நண்பர் ஒருவர் ‘நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழைப் ‘புது யார்க் டைம்ஸ்’என்றே குறிப்பிடுவார். கேட்டால், ‘நியூ டெல்லி’யைப் ‘புது தில்லி’ என்று சொல்லும்போது ‘நியூ யார்க்’கைப் ‘புது யார்க்’ என்று சொல்வதில் என்ன தவறு என்று வில்லங்கமாகப் பதில் சொல்வார். நானும் வேடிக்கைக்காக அப்படிச் சொல்ல ஆரம்பித்து, அதுவே வாடிக்கையாகவும் ஆகிவிட்டது.

நான் அமெரிக்கா சென்ற புதிதில், புது யார்க் மாநகரை ஒட்டி அமைந்திருந்த புது ஜெர்ஸி மாநிலப் பகுதியில் தங்கியிருந்தேன். என்னுடைய அலுவலகத்தின் துணைத் தலைவர் எனக்குப் பல வருடங்கள் முன்பே அங்கு குடியேறியிருந்த பீஹார் மாநிலத்தவர். Resumé என்பதனை ரெஜ்யூம் என்றும், business என்பதனை பிஜினஸ் என்றும் உச்சரிப்பார். இந்த லட்சணத்தில் புதிதாக இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு அமெரிக்க ஆங்கிலம் பற்றி உபதேசம் செய்வார். அமெரிக்க ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் தினமும் நியூ ஜெர்ஸி 101.5 வானொலியைக் கேட்கவேண்டும் என்றும், ஒரு குவார்டருக்கு (25 சென்ட்களுக்கு) விற்கப்பட்ட ஸ்டார் லெட்ஜர் என்ற உள்ளூர்ப் பத்திரிகையைத் தவறாமல் படிக்க வேண்டும் என்றும் ஆலோசனை சொல்வார். போன புதிது என்பதால் விவரம் தெரியாமல் அவர் சொன்னபடி அந்தக் கண்றாவிகளைச் சில வாரங்கள் சகித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள், பேச்சுவாக்கில் புது யார்க் நண்பரிடம் மேற்கண்ட விஷயத்தைச் சொல்லிவிட்டேன். இன்னாரின் உபதேசப்படியே இப்படிச் செய்கிறேன் என்பதைச் சொல்லாமல், சுயபுத்தியின் காரணமாகவே இவற்றைத் தேர்ந்தெடுத்தேன் என்றுவேறு சொல்லிவிட்டேன். அவ்வளவுதான். ஞானக்கூத்தனின் மேல் நாட்டு சரக்கோடு உள்நாட்டு சரக்கை ஒப்பிட்டால் தலையில் தலையில் அடித்துக்கொள்ளத் தோணுதே” – கவிதை ஸ்டைலில் தலையில் அடித்துக்கொண்டார் நண்பர். நல்ல ஆளய்யா நீ! சென்னையில் இருந்தபோது தினமணியையும், சிறு பத்திரிகைகளையும்தானே படித்துக் கொண்டிருந்தாய்? காசிக்குப் போனாலும் கருமம் விடாது. அதனால்தான் இங்கு வந்தும் இவ்வளவு தண்டமான காரியங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய். பேப்பர் படிப்பதென்றால் புது யார்க் டைம்ஸிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதானே? ரேடியோ கேட்க வேண்டுமானால் உள்ளூர் என்.பி.ஆர். கேட்டுத்தொலை என்று சொல்லிப் புது யார்க்கிலிருந்து ஒலிபரப்பாகும் WNYC 93.9 என்ற வானொலியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்படி ஏற்பட்ட வழக்கம்தான் புது யார்க் டைம்ஸ். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆறு ஆண்டுகள் அண்டிக் கெடுத்தது போதும். oliviajudsonஇனி வழக்கம்போல ஊரிலிருந்தபடியே கைங்கரியத்தைத் தொடரலாம் என்று சூளுரைத்துவிட்டுச் சென்னை திரும்பிச் சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும், நியூ யார்க் டைம்ஸை இணையத்தில் மேயத் தவறுவதில்லை. அதேபோல WNYC-யின் இணைய ஒலிபரப்பில் என் அபிமானத்துக்குரிய ப்ரயன் லெரெர், லென்னர்ட் லோபேட் ஆகியோரின் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது கேட்பதுண்டு.

சில நாள்களுக்கு முன், புது யார்க் டைம்ஸை மேய்ந்துகொண்டிருந்தபோது, பரிணாமவியல் உயிரியலாளரான ஒலிவியா ஜட்ஸன் எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில்பட்டது. எறும்புகள் தமக்குள் தகவல் பரிமாறிக் கொள்வதைப் பற்றியது அது.

– – – – – – – – – – – – –

ஒரு பரிசோதனையைப் பற்றிய தகவலுடன் ஆரம்பிக்கலாம். அது கொஞ்சம் பழைய பரிசோதனைதான். 1870களில் நடத்தப்பட்டது என்றாலும் இன்னமும் அதைப் பற்றிப் பேச முடிவது சற்று விசித்திரமானதாகத் தோன்றலாம்.

அந்தப் பரிசோதனையைச் செய்தவர் சர் ஜான் லுப்பொக் என்பவர். யார் இவர்? சந்தடி மிகுந்த லண்டன் நகர வாழ்க்கையிலிருந்து விலகி இருக்க விரும்பி, விஞ்ஞானி டார்வின் நாட்டுப்புறத்தில் குடியேறியபோது, அவருடைய வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்த சிறுவனே ஜான்.

1841ஆம் வருடம். ஒரு மாலை நேரத்தில் தன் வீட்டிற்குள் மிகவும் பரபரப்புடன் நுழைந்தார் ஜானின் அப்பா. தான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போவதாகவும், அது என்னவென்று யாரேனும் ஊகிக்க முடியுமா என்றும் பீடிகை போட்டார். அவர் தனக்காக ஒரு குதிரைக் குட்டியை வாங்கி வந்திருப்பதாச் சிறுவன் ஜான் விளையாட்டாகச் சொன்னான். அன்றைய இங்கிலாந்தின் பண்ணை வீடுகளில் குதிரைகள் வளர்க்கப்படுவது சகஜமே. அப்பாவோ, தான் சொல்ல வந்தது அதைவிட நல்ல செய்தி என்றும், விஞ்ஞானி டார்வின் நம் வீட்டுக்குப் பக்கத்திலேயே குடிவரப் போவதாகவும் சொன்னார். சிறுவன் ஜான் ஏமாந்து போயிருப்பான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஆனால், ஜானும் டார்வினும் சீக்கிரமே நல்ல கூட்டாளிகளாக ஆகிவிட்டனர். ஜான் சிறுவனாக இருந்தபோதே டார்வின் செய்த ஆய்வுகளில் பங்குபெற்றார். வளர்ந்தபின், சொந்தமாகவே ஆய்வுகளை நடத்தினார். எறும்புகள், தேனீக்கள், குளவிகள் ஆகியவை பற்றிய நம்முடைய புரிதலை மேம்படுத்தியதில் அவருடைய பங்களிப்பு அபாரமானது.

எறும்புகள் பெரும்பாலும் வாசனையை வைத்தே தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பது இப்போது நமக்குத் தெரிந்ததுதான். பிணவாடை அடிக்கும் ஓர் எறும்பு, சாகாமல் இன்னமும் உயிருடன் துடித்துக் கொண்டிருந்தால்கூட புற்றிலிருந்து வெளியே தள்ளப்பட்டுவிடும். அன்னிய வாடை வீசும் எறும்பை மற்றவை கட்டம் கட்டி, பின்னர் கொல்லவும் செய்துவிடுகின்றன.இவை பற்றிய மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் ஈ. ஓ. வில்சன் என்பவர் எழுதியுள்ள பூச்சி சமூகங்கள்’ (The Insect Societies, Belknap Press) என்ற சுவாரசியமான புத்தகத்தைப் படிக்கலாம்.

மற்ற பிராணிகள், குறிப்பாகப் பூச்சிகள் ஒன்றுடன் மற்றொன்று எப்படித் தகவலைப் பரிமாறிக் கொள்கின்றன என்பது பற்றி 1870களில் நமக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. உதாரணமாக, தகவலைப் பரிமாறிக்கொள்ள எறும்புகள் ஒலியெழுப்புகின்றனவா என்பது போன்ற விவரங்கள் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். இதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பிய ஜான், லினய்ன் சங்க ஆய்விதழில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

எறும்புகள் மற்ற எறும்புகளுக்குக் கேட்கும்படியாகச் சப்தம் கிப்தம் போடுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தொலைபேசியைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று முடிவுசெய்தேன்.”

antnest2டெலிஃபோன்கள் அப்போதுதான் உபயோகத்துக்கு வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கம்பிகள் மூலம் நேரடியாக இணைக்கப்பட்ட இரண்டு தொலைபேசிகளை ஜான் தோட்டத்துக்கு எடுத்துச் சென்றார். ஒரு தொலைபேசியை முதலாவது எறும்புப் புற்றுக்கு அருகில் வைத்தார். மற்றொன்றை இரண்டாவது புற்றின் பக்கத்தில் வைத்தார். பின்னர், முதல் எறும்புப் புற்றை லேசாகக் கலைத்தார். அதிலிருந்த எறும்புகள் கூட்டத்தில் குழப்பம் ஏற்படத் தொடங்கியதும் அங்கிருந்து ஓடி இரண்டாம் புற்றுக்கு வந்தார். அங்கிருந்த எறும்புக் கூட்டத்தில் ஏதேனும் சலனம் தென்படுகிறதா என்று பார்த்தார்.

முதல் புற்றில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அங்கிருந்த எறும்புகள் ஏதேனும் கூச்சல் போட்டிருந்தால், அது தொலைபேசி வழியாக இரண்டாவது புற்றை அடைந்து அங்கும் சலசலப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஓர் எறும்புப் புற்றில் ஏற்பட்ட குழப்பம் இன்னொரு புற்றில் சிறு பாதிப்பைக்கூட ஏற்படுத்தவில்லை. இதே பரிசோதனையை மூன்று, நான்கு தடவைகள் திரும்பத் திரும்ப முயற்சித்துப் பார்த்தபோதும் முடிவு ஒன்றாகத்தான் இருந்தது, என்றார் ஜான்.

இத்தகைய ஒரு பரிசோதனை வசீகரமாக இருந்தாலும், எறும்புகள் ஃபோனில் பேசுவதெல்லாம் கொஞ்சம் அசட்டுத்தனமாகவே தோன்றக்கூடும்.

விஞ்ஞானிகளைப் பொருத்தவரை, இத்தகைய ஆய்வு செய்யக்கூடாத ஒன்றல்ல. எறும்புகள் எப்படித் தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன என்பது பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரிந்துவிடாத காலகட்டத்தில், அவற்றிடம் சப்தம் போட்டுப் பேசுவது அல்லது அவற்றுக்குப் பியானோ வாசித்துக் காட்டுவதுகூட சிறந்த பரிசோதனைகளாகவே அமையும். சப்தம் போடுபவர்களை எறும்புகள் கண்டுகொள்ளவில்லை. அவை பியானோவின்மீது நின்றுகொண்டிருக்காத பட்சத்தில் பியானோ எழுப்பும் ஒலியையும் கண்டுகொள்ளவில்லை. அப்படி நின்றுகொண்டிருந்த எறும்புகளும், பியானோவில் ஏற்படும் அதிர்வுகளைக் கண்டு அஞ்சினவே தவிர, அதில் எழும் இசையையோ, அபஸ்வரத்தையோ சற்றும் சட்டை செய்யவில்லை.

இந்தப் பரிசோதனைகள் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பின: எறும்புகளால் காற்றில் வரும் ஓசைகளைக் கேட்க முடியுமா? அல்லது பியானோவைப் போன்ற திடப் பொருள்களின் வழியாக உருவாக்கப்படும் அதிர்வுகளை மட்டுமே அவற்றால் உணரமுடியுமா? அவை தங்களுக்குள் பேச, ஒலிகளை மேற்கண்ட எந்த வழியிலேனும் எந்த அளவுக்கு உபயோகிக்கின்றன? இவை பற்றிய உண்மைகளை நாம் இன்னமும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம்.

பல வகை எறும்புகள் ஒரு விசேஷமான உடல் உறுப்பைப் பெற்றிருக்கின்றன. Stridulatory Organ எனப்படும் இதன் உதவியால் ஒருவித கிரீச் சப்தத்தை அவை உண்டாக்க முடியும். நாம் அந்தச் சத்தத்தை நவீன ஒலி உபகரணங்களின் உதவி இல்லாமல் கேட்கமுடியாது. அல்லது, ஒலி எழுப்பும் எறும்பை நம் காதில் விட்டுகொண்டால் மட்டுமே அதை நம்மால் கேட்க முடியும். எறும்புகளே அச்சத்தத்தைக் கேட்பதில்லை என்றும் இலை, மண்துகள் அல்லது வேறு ஒரு திடப்பொருள் வழியாக ஏற்படுத்தப்படும் அதிர்வுகளாகவே அவ்வொலியை எறும்புகள் உணர்கின்றன என்றும் அவை பற்றி ஆராய்ச்சி செய்யும் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Stridulating எனப்படும் இத்தகைய ஒலியதிர்வுகளைப் பல்வேறு எறும்பு வகைகள் வெவ்வேறு காரணங்களுக்காக எழுப்புகின்றன. மண் சரிவு போன்ற காரணங்களால் எங்கேனும் ஏடாகூடமாகச் சிக்கிக்கொண்ட எறும்புகள், “நான் இந்த இடத்தில் புதைந்து கொண்டிருக்கிறேன். உடனே வந்து என்னைக் காப்பாற்றுங்கள்என்று ஒலியதிர்வுகள் மூலம் தகவல் அனுப்புகின்றன. antஅதிக அளவில் சாப்பாடு கிடைக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் எறும்புகளும் ஒலியதிர்வுகள் மூலமே அத்தகவலைப் பிற எறும்புகளுக்கு அறிவிக்கின்றன. ஒரு வகை யூரோப்பிய எறும்புகளுள், ராணி எறும்பு உண்டாக்கும் ஒலியதிர்வுகள் வேலைக்கார எறும்புகள் எழுப்பும் ஒலியதிர்வுகளிடமிருந்து வேறுபட்டதாக இருக்கின்றன. ஒலிபெருக்கி ஒன்றின் வழியாக ‘அரச கட்டளையைப் பிறப்பித்தால் போதும். வேலைக்கார எறும்புகள் விழுந்தடித்துக்கொண்டு உதவிக்கு ஓடிவரும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விஞ்ஞானி ஜானிடம் சரியான யோசனை இருந்தது என்றாலும், அவர் பரிசோதனையில் உபயோகித்தது தவறான உபகரணத்தையே.

பூமியாகிய நம்முடைய கிரகச் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கங்களே எறும்புகள். அண்டார்டிகா தவிர மற்ற எல்லாக் கண்டங்களிலும் அவற்றை நாம் பார்க்கலாம். சில வெப்ப மண்டலப் பகுதிகளிலுள்ள எல்லா மிருகங்களையும் ஒரு தராசில் நிறுத்தி எடைபோட முடியுமென்றால், மொத்த எடையில் கால் பங்குக்கும் மேல் எறும்புகளே இருக்கும். இதை எறும்புகளின் உயிர்நிறை (biomass) என்று குறிப்பிடுவர். இந்த ஒரு காரணத்திற்காகவேனும், நாம் எறும்புகள் பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பெரும்பாலான உயிரினங்கள் எப்படித் தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பது பற்றி நாம் இதுவரை அறிந்தது கைமண் அளவே. தெரிந்துகொள்ள வேண்டியதோ மிகவும் அதிகம். உதாரணமாக, சில வகைத் தவளைகள் வௌவால்கள் உபயோகிக்கும் மீயொலி எனப்படும் சாதாரணக் காதுகளால் கேட்கமுடியாத அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்திக் கூச்சல் போடுகின்றன எனச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். மிருகங்கள் மட்டுமல்லாமல், தாவரங்களும் பாக்டீரியாக்களும்கூட தமக்குள் தகவல்தொடர்பு வைத்துக்கொள்கின்றன. விலங்குகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் சிலவகைத் தாவரங்கள், சில ரசாயனப் பொருள்களை வெளியிட்டு அக்கம் பக்கத்திலுள்ள தாவரங்களை எச்சரிக்கை செய்வதாகக் கண்டுபிடித்துள்ளனர். இப்படி எச்சரிக்கப்படும் தாவரங்கள் தாம் விஷச் செடிகள் போலத் தோன்றும் விதத்தில் தங்கள் இலைகளின் கட்டுமானத்தை மாற்றி அமைத்துக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது. இதேபோல பாக்டீரியாக்களுக்கிடையே நடைபெறும் தகவல்தொடர்பும் ஆழமானதே. பாக்டீரியாக்கள் தமக்குள் நடத்தும் இரசாயன உரையாடல்களே, ம்னிதர்களுக்கு ஏற்படும் சில நோய்களின் மூல காரணமாக அமைகின்றன என்பதை மட்டும் நாம் இப்போதைக்குத் தெரிந்துகொண்டால் போதுமானது.

ஒரு முக்கியமான விஷயத்தை மட்டுமாவது நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மானிடர்களே இந்த பூமிப் பந்தை ஆளப் பிறந்தவர்கள் என்றே நாம் நம்ப விரும்புகிறோம். நம்மைப் பொருத்தவரை பியானோ எழுப்பும் ஒலியைச் செவிடர்களைத் தவிர அனைவராலும் கேட்ட முடியும். ஆனால், ஓர் எறும்பால் அந்த ஒலியைக் கேட்க முடியாது. அதேபோல, இந்த உலகமே நம்மால் எளிதில் கேட்கமுடியாத சப்தங்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. இதைப் பற்றி யோசிப்பது இந்த உலகத்தை மேலும் விஸ்தாரமாகவும், மர்மம் சூழ்ந்ததாகவும் ஆக்குகிறது. ஒட்டுமொத்த உலக நிகழ்வுகளில் ஒரு சிறு பகுதியையே மானுடர்களாகிய நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

(நன்றி:     1. தொல்காப்பியம் 3:9:30 2. நியூ யார்க் டைம்ஸ்)