வாசகர் எதிர்வினை

cwindowsdesktop3429aசுகாவின் ‘சில்வர் டோன்ஸ்’ மிகவும் நகைச்சுவையாக இருந்தது. அது என்னுடைய ஆர்க்கெஸ்ட்ரா நாட்களை நினைவுபடுத்தியது. பல முறை நானே என்னுடைய கிடார் வரிகளை மறந்து போய், கீபோர்டிஸ்ட் என்னைக் காப்பாற்றியிருக்கிறார். சுகா குறிப்பிடும் பிரபாகர் ‘நெல்லை பிராபகர்’ என நினைக்கிறேன். 80களில் அவர் வெகு பிரபலமாக இருந்தார். தெருமுனைகளில் நடக்கும் மெல்லிசைக் கச்சேரிகளுக்கு அப்போது பெரும் முக்கியத்துவம் இருந்தது. அதை சுகா நன்றாக எழுதியிருக்கிறார்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது என்னுடைய ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து ஒரு இசைக்குழு வைத்திருந்தோம். என்னுடைய ஆசிரியர் ஒருவர் பெரிய டி.எம்.எஸ் விசிறி. இன்னொருவர் P.B.ஸ்ரீனிவாஸைப் போலவே பாடுவார். இருவரும் சேர்ந்து பாடும் ‘பெண்ணொன்று கண்டேன்…’, ‘அவள் பறந்து போனாளே…’ போன்ற பாடல்கள் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. எங்களுடைய NSS குழுமம் தங்கியிருக்கும் சிறு கிராமங்களில் நாங்கள் கச்சேரிகள் நடத்துவோம். TMS பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெரும். சில பாடல்களை இரண்டு முறையெல்லாம் விரும்பிக் கேட்பார்கள்.

பல மகிழ்ச்சியான நினைவுகளை மீட்டுத் தந்தது சுகாவின் கட்டுரை.

மிக்க நன்றி.

அன்புடன்,

ஓப்லா விஷ்வேஷ்

—000OOO000—-


சேதுபதியின் வெர்ரோனிக்கா கட்டுரை சில எண்ணங்களை ஏற்படுத்தியது. இந்த முழு திரைப்படமும் ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ளலாமா? எதைக் குறித்த குறியீடு? இந்த இருப்பு அனைத்தினுடையவும் அடிப்படை இயற்கை குறித்த குறியீடாக. க்வாண்டம் இயற்பியல் முன்வைத்த தரிசனம் பொருண்மையின் புறவய இருப்பினைக் கேள்விக்குள்ளாக்கியது. குறிப்பாக க்வாண்டம் இயற்பியலுக்கு கொடுக்கப்பட்ட கோபன்கேஹன் வியாக்கியானம். அதே நேரத்தில் சில நிகழ்வுகளை க்வாண்டம் இயற்பியல் சிறப்பாகவே விளக்கியது. எனவே ஐன்ஸ்டைன் க்வாண்டம் இயற்பியலை ஒரு முழுமையான விளக்கமாக எடுத்துக்கொள்ள மறுத்தனர். க்வாண்டம் இயற்பியலின் முழுமையின்மையை நிரூபிக்க 1935 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சக இயற்பியலாளர்களான போரிஸ் போடடீல்ஸ்கி மற்றும் நாதன் ரோஸன் ஆகியோருடன் இணைந்து ஒரு கற்பனை பரிசோதனையை உருவாக்கினார். க்வாண்டம் இயங்கியலின் முழுமையின்மையைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பரிசோதனை இது. க்வாண்டம் இயற்பியலின் ஒரு முக்கிய அடிப்படை, ஒரு அணு உட்துகளின் திசைவேகம் மற்றும் அதன் இடம் ஆகிய இரண்டையும் துல்லியமாக அறியமுடியாதென்பது. இது நம் அறிதல் உபகரண குறைபாட்டால் எழுவதல்ல. மாறாக
இயற்கையில் அடிப்படையாகவே ஊடுறையும் ஒரு தன்மை என்கிறது க்வாண்டம் அறிவியல். க்வாண்டம் இயற்பியலின் இந்த நிலைபாட்டின் அடிப்படையில் முரண்-விளைவை உருவாக்கும் முடிவுகளை தரும் ஒரு பரிசோதனையை வடிவமைப்பதன் மூலம் க்வாண்டம் இயற்பியல் ஒரு முழுமையான சித்தாந்தம் அல்ல என நிறுவ முற்பட்டது இம்மூவரணி.

க்வாண்டம் கருவில் இறுக்கமாக இணைந்திருக்கும், ஆனால் தனித்தனியான, இரு பருப்பொருள் அமைப்புகளை (physical systems: உதாரணமாக, இரு ப்ரோட்டான்கள் அல்லது ஃபோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்கள்) எடுத்துக்கொள்வோம். அவை வெளியில் பல ஒளிமைல்கள் தூரம் பிரிக்கப்பட்ட பின்னும் அவை தமது க்வாண்டம் இணைப்பிலிருந்து விடுபடாது (அதாவது ஒரே ஸ்க்ராட்டிஞ்சர் அலைச் சமன்பாட்டால்தான் அவை இரண்டுமே வரையறுக்கப்படும்.)  எனவே இந்த இரட்டைக்  குழந்தை துகள்களில் ஒன்றின் க்வாண்டம் இயல்பின் அடிப்படையிலேயே மற்ற துகளின் இயல்பும் அமையும். இந்த இயல்பு எப்படி உருவாகிறது? க்வாண்டம் இயற்பியல் அறிதல் எனும்  என்றால் ஒரு துகளை அறிதலின் போது அதன் ஒரு குணாதிசய மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறதோ அதைப்பொறுத்து **அதேதருணத்தில்** மற்றொரு துகளின் இயல்பு உருவாகும். உதாரணமாக நம் அறிதலின் விளைவாக ஒருதுகளின் சுழல் மதிப்பு (spin value) ‘மேல் ‘ மதிப்பை அடைந்தால் அத்தருணத்தில் மற்றொரு துகளின் சுழல் மதிப்பு ‘கீழ் ‘ நிலையை அடையும். இது, அந்த மற்றொரு துகள் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நிகழவேண்டும் என்பது மட்டுமல்ல ‘உடனடியாக ‘ நிகழ வேண்டும். ஆனால் பிரபஞ்ச வேகத்தடையாக ஒளியின் வேகம் உள்ளது என்பதை நமக்கு சிறப்பு சார்பியல் தேற்றம் (Special theory of relativity) கூறும். மேலும் இயற்பியலின் அடிப்படையான அறிதலில் ஒரு நிகழ்வுக்கு அதனோடு தொடர்புடையக் காரணிகளையே சொல்ல முடியுமே தவிர இத்தகைய எவ்வித பௌதீகத் தொடர்புகளும் இல்லாத உறவு இழைகளால் பிணிக்கப்படுவதை கருத முடியாது. ஐன்ஸ்டைன் க்வாண்டம் இயற்பியலின் முழுமைத்தன்மையைக் குறித்து பேசும் போது “கடவுள் பிரபஞ்சத்துடன் பகடை ஆடுவதில்லை” என்கிறார்.

ஒருவிதத்தில் வெரோனிக்காவின் மற்றோர் வாழ்க்கை இந்த அடிப்படைத்தன்மையை தொட்டுச்செல்கிறது. இறுதியில் அதனை பொம்மலாட்டக்காரரிடம் முடிக்கும் விதம் இதனை மீண்டும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. க்வாண்டம் இயற்பியல் காட்டும் பிணைப்புக்கள் அந்த நுண்ணலகு உலகையும் தாண்டி பிரபஞ்சமெங்கிலும் பரந்து இழைகளாக பலவற்றை பிணைக்கின்றனவா? பொம்மலாட்டாக்காரர் அறிவாரா? அல்லது அவரும் அறியமாட்டாரா?

அன்புடன்,

அரவிந்தன் நீலகண்டன்

—-oooOOOooo—-

தங்களது சொல்வனம் இதழின் மூன்று இதழ்களை பார்த்து வருகிறேன். நல்ல தரத்துடன் சிறந்த கட்டுரைகளைக் கொண்டு வெளிவருகிறது. தமிழில் வெளிவரும் புதிய இலக்கியப் பத்திரிக்கையாக இதைச் சொல்லலாம். எல்லோரும் ஏதோ ஒரு இசத்தின் பின்னால் செல்ல, தனிப்பாதையில் செல்ல விரும்பும் சொல்வனத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங்

பொதுவாக இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளை தாண்டிச் செல்லவே நான் விரும்புவேன். அதையே முதல் இரண்டு இதழ்கள் வெளியான போதும் செய்தேன். ஆனால் மூன்றாம் இதழில் அப்படி என்னதான் இருக்கிறது எனப் படிக்க முற்பட்டபோது எவ்வளவு அருமையான கட்டுரைத் தொடரை இழக்க இருந்தேன் எனத்தெரிந்தது.

தலைப்பே பாதி விஷயத்தைச் சொல்லிவிட்டது. மீதமுள்ளதெல்லாம் எப்படி என்ற விளக்கம் மட்டுமே.

குளோபல் வார்மிங் என்ற வாதத்தை/பதத்தைக் கேட்காமல் நாம் யாரும் இன்றைய தினத்தைக் கழித்துவிட முடியாது என்பதைப்போல தினசரிகளி்ல் வெளியாகும் கட்டுரைகளிலும், அறிவியல் புஸ்தகங்களிலும், காட்சி மற்றும் பேச்சு ஊடகங்களிலும் எங்கெங்கும் இறையைப் போல நீக்கமற நிறைந்துவிட்டது இந்த குளோபல் வார்மிங் என்ற பூச்சாண்டி.

ஆனால் இது எவ்வளவு போலியான வாதம், இதனை உண்மை எனக்கொள்வதற்கான முகாந்திரம் எத்தனை சதவீதம் என்பதனை கட்டுரை ஆசிரியர் எளிமையாக விளக்கி இருக்கிறார்.

இந்த குளோபல் வார்மிங் என்ற பதத்தைக் கட்டி எழுப்பி அதனை எப்படி வளர்ச்சியடைந்த நாடுகள் இதர வளரும் நாடுகளிடமும், ஏழைநாடுகளிடமும் கொள்ளையடிக்கப் போகின்றன.. அதற்கான திட்டம் எப்படி தீட்டப்பட்டது, அதன் இன்றைய நிலை என்ன?? எனபதைக் குறித்தான தெளிவான விளக்கங்களுடன் இருக்கிறது இக்கட்டுரை.

அறிவியல்பூர்வமாய் குளோபல் வார்மிங் குறித்தான கேள்விகளை எழுப்புவோர்க்கும், அவர்களது கணிப்புகள் தவறும்போது புதுப்புது சாக்குப் போக்குகளையும், புதுவித தொழில்நுட்ப வார்த்தைகளை மட்டுமே உற்பத்தி செய்து எப்படி உலகை ஏமாற்றி வருகின்றனர் என்பதையும், வளரும் நாடுகளுக்கு இன்றைக்கு கொடுப்பதுபோலக் கொடுத்துவிட்டு நாளைக்கு நுகத்தடியை எப்படிக் கட்டப்போகிறார்கள் என்பதையும், சீனா எப்படி அராஜகமாக இதிலிருந்து தப்பி வெளிவரும் என்பதையும், அதனை அடக்க இதரநாடுகள் முடியாத பட்சத்தில் இந்தியாவைக் குறிவைத்துத் தாக்கும் என்பதையும் இந்தியாவின் மென்மையான போக்கால் எப்படி இதில் சிக்கி சீரழியப்போகிறது என்பதைக் குறித்த அச்சத்தையும் மிக அருமையாக பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதி இருக்கிறார் அருணகிரி அவர்கள்.

அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது. எழுதிய அருணகிரிக்கும் வெளியிட்ட சொல்வனத்திற்கும் வாழ்த்துக்கள்.

திரு.பாவண்ணன் எழுதிய என்ற புஸ்தக விமர்சனம் ”வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி ” மனதைக்கொள்ளை கொண்டதென்றால் அது மிகை இல்லை. அதைப்பற்றிய எனது எண்ணங்கள் இவை.

நல்ல புஸ்தக விமர்சனம் என்பதற்கான குறியீடாக இந்த விமர்சனத்தைச் சொல்வேன்.

நல்ல புஸ்தகங்களோ, கதைகளோ அதற்கான வாசகர்களை காலப்போக்கில் கண்டடையும் என்ற பொதுவான கருத்தை நிரூபிக்கின்றன இதைப்போன்ற புஸ்தகங்களும், அதனை இவ்வாறு அறிமுகம் செய்தலும்.

கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்பு சிவராம காந்த் எழுதிய நாவல் இது என்கிறார் பாவண்ணன்.அப்போது வெளிவந்த  இந்த சிவராம காந்தின் கன்னட நாவலின் சூழல் இன்றைக்கும் நாம் அன்றாடம் கானும் வாழ்வில் பார்க்க முடிகிறது. இந்தக் கதை நமக்கு சொல்லும் செய்தி மலைவாழ் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான நமது எண்ணங்களோ, சமூக மதிப்பீடுகளோ  எண்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றளவும்  மாறவில்லைஎன்பதே. நாம் வெட்கப்படவேண்டிய சூழல் இது. நாகரீகம் அடைந்துவிட்டோம், தொழில்நுட்ப ரீதியாக இந்தியா உச்சத்தில் இருக்கிறது என பீற்றிகொண்டாலும் நமது அடிப்படை அசிங்கங்கள் எண்பது ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருக்கிறது என்பது எவ்வளவு கேவலம்.???

பாவண்ணனின் சிறந்த வரிகள் இந்த புஸ்தக விமர்சனத்தில்:-

காட்டுக்குடிகளின் வம்ச வரலாற்றை ஒரு நீண்ட நூலாக உருவகித்தால் அதன் ஒரு நுனி சிவன். இன்னொரு நுனி எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட சோமன். எவ்வளவு பெரிய முரண். அதை அடையாளம் காட்டியபடி விரிகிறது சிவராம காரந்த்தின் நாவல்.

ஒரு கணநேரத்தில் மதமாற்ற முடிவை எடுத்துவிடுகிறான். தற்செயலாக கண்களில் பட்ட கோயில் காட்சி, அவன் மனத்தை மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்து விடுகிறது.

மதம் மாறியவர்கள் இடம் மாறி எங்கும் செல்வதில்லை. அதே தெருவில், அதே வீட்டில், அதே தரத்தில், அதே சூழலில்தான் அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஆனால் சமூகச் சட்டத்தின் விரல்கள் மட்டும் அவர்கள்மீது படுவதில்லை.

சாதிவெறியும், தீண்டாமையும் எவ்வளவு உச்சகட்டத்தில் இருக்கிறது என்பதைச் சொல்லும் இடமாக சோமனின் மகன் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வையும் மற்றவர்கள அதை வேடிக்கைப் பார்ப்பதையும் சொல்லலாம்.

”சோமனை” நல்ல விதமாய் அறிமுகம் செய்து அவசியம் படிக்க வேண்டிய நூலின் வரிசையில் சேர்த்து விட்டார் பாவண்ணன் அவர்கள். எவ்வளவு ஆழ்ந்து படித்திருந்தால் இவ்வளவு உணர்வுபூர்வமாய் எழுத முடியும்?? விமர்சனத்தில் எங்கேயும் எழுத்தாளரையோ, நூலையோ உயர்த்திப்பிடிக்கும் மிகையான, போலியான புகழ்ச்சிகள் இல்லை. நாவலை உள்வாங்கி  தனது பார்வையிலிருந்தே பாவண்ணன் எழுதி இருப்பதுதான் இந்த விமர்சனத்தின் சிறப்பு.

ஜெயக்குமார்

—000OOOO000—

சொல்வனம் படித்தேன்.நன்றாக உள்ளது.கவிதை தேர்வு சிறப்பு.ஹைக்கூ கவிதைகளும் வெளியிடுங்கள்.மற்ற பகுதிகளும் அருமை.

* கி.சார்லஸ் *