மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள்

மொழிபெயர்ப்பு: சாமிநாதன்
Flash தயாரிப்பு: செல்வம் நாராயணன்

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் நாடு அல்லது தேசம் என்ற கருத்தாக்கம் வலுவடைந்தது. அதன் பின்னர்தான் யுத்தமும், மோதலும் தொடங்கின என்று சிலர் சொல்கின்றனர். ஆனால், என்னுடைய கருத்தோ மாறுபட்டது. ஓர் இந்தியனாக இருப்பதால் ஏற்படும் நன்மை இதுவாகக்கூட இருக்கலாம். இந்தியர்கள் உறங்கும்முன் சொல்லும் கதைகளில் நிரம்பி வழியும் அதிரடிச் சம்பவங்கள், இந்தியப் பண்பாட்டின் பிற எந்த விஷயத்தையும் போலவே, பல நூற்றாண்டுக் காலப் பாரம்பரியம் கொண்டவை.

ஒரு விதத்தில், பிழைத்துக் கிடப்பதால் ஏற்படும் ஆதாயங்களை உறுதிப்படுத்திக்கொள்ள இயல்பூக்கத்தின் அடிப்படையில் மனிதர்கள் எடுக்கின்ற நடவடிக்கையே யுத்தம் எனலாம். இது இயல்பூக்கம் சார்ந்தது என்பதே இங்கு முக்கியமானது. தான் பிழைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை மனிதன் உணர்ந்துகொண்ட நாளிலேயே போர் என்ற கருத்தாக்கம் வலிமை பெற்றுவிட்டதாக நான் கருதுகிறேன். மானுட இயல்பூக்கத்தை வெளிக் கொணரக்கூடிய எதுவும் ஒரு கலைவடிவமே. அது பின்னர் ஒரு வித்தையாக மாறுகிறது.

இந்தியப் புராணக் கடவுளர்கள் தனுர்வேதம் எனப்படும் வில்வித்தையைக் கையாண்டு துஷ்ட சக்திகளை அழித்திருக்கின்றனர். அதற்குப் பல ஆண்டுகள் பின்னர் வில்வித்தை என்பது ஒரு பிரமிக்க வைக்கும் கலையாக மலர்ந்திருப்பதைக் காண்கிறோம். வீர தீரத்தை முன்வைக்கும் களறிப்பயட்டு, மல்யுத்தம், குஸ்தி, வஜ்ர முஷ்டி போன்ற வித்தைக் கலைகள் தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றித் தரப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன. ஆனால், வெகு சிலரே இவற்றை ராமாயண, மகாபாரத காலங்களிலிருந்தே இருந்துவரும் மரியாதைக்குரிய வித்தைகளாகக் காண்கின்றனர்.

குஸ்தி விளையாட்டுப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, நான் மைசூர்

தசரா விழாவில் நடக்கும் குஸ்திப்போட்டி
தசரா விழாவில் நடக்கும் குஸ்திப்போட்டி

சென்றேன். அங்கு ‘கரடி மனே’* என்ற பெயரில் அமைந்திருந்த உடற்பயிற்சிக் கூடங்கள் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு அருகில் டீக்கடை வைத்திருக்கும் ஜெயராம் என்பவரைத் தற்செயலாகச் சந்தித்தேன். மைசூரில் இருக்கும் பல வகைப்பட்ட கரடிகள்(Garadi) பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார். அவருடைய சிறிய கடையில் மல்லர் ஒருவரின் படம் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் இருப்பவரைப் பற்றி விசாரித்தபோது, அது தன் சித்தப்பாவின் இளம் வயதுச் சித்திரம் என்றார். மைசூரில் இருக்கும் மல்லர்களின் இன்றைய பரிதாபகரமான நிலை பற்றியும், அவர்களை ஆதரிக்கப் போஷகர்கள் இல்லாதது பற்றியும் விரிவாக அவருடன் பேசியபின், அப்படத்தில் இருப்பது அவர்தாம் என்பதை ஜெயராம் ஒப்புக்கொண்டார். குஸ்தி விளையாட்டின்மீது மைசூர் நகரத்துக்கிருந்த காதலைக் குறித்து விரிவாகப் பேசுகினார். குஸ்திக் கலை மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு காலத்தில் தாம் மல்லராக இருந்ததைப் பிறரிடம் சொல்லிக்கொள்வது அவருக்கு அவமானமாக இருந்தது. தன்னுடைய கம்பீரமான கலைவடிவம் ஒன்றை மறந்துவிட்டு, தளுக்கு நிறைந்த நகரமாக இன்று தன்னைக் காட்டிக்கொள்ளும் மைசூரில், நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் ஒருவரிடம் நான் பேசிய சந்தர்ப்பம் அது.

முன்பு, மைசூர் நகரத்தில் 100க்கும் மேற்பட்ட கரடிகள் இருந்தன. இப்போது இருக்கும் சுமார் 40 கரடிகளில், சிலவற்றில் மட்டுமே குஸ்திச் சண்டை பயிற்றுவிக்கப்படுகிறது. இவையும்கூட ஜிம்னாஸியம் எனப்படும் நவீன உடற்பயிற்சிக் கூடங்களுக்குமுன் தாக்குப்பிடிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. பயில்வான் லோகேஷ் ஜெய்ஸிம்மா என்பவர் என்னிடம் கரடிகளின் முக்கியத்துவம் பற்றியும், மல்லர்களின் வாழ்க்கை பற்றியும் விரிவாகப் பேசினார். அவர் மிகச் சிறு வயதிலேயே பெஸ்தர் கலன்நவர கரடியில் பயிலத் தொடங்கியவர் என்பதோடு மைசூர் நகரின் மிகச் சிறந்த மல்லர்களுள் ஒருவராகவும் திகழ்பவர். மல்லர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களான கண்டீரவா, தசரா கேஸரி, பாரத் குமார் மற்றும் மைசூர் அர்ஜூன் ஆகியவற்றை 29 வயதுக்குள்ளாகவே வென்றிருக்கிறார்.

பெஸ்தர் கலன்நவர கரடி மைசூரின் சுன்னடகேரி பகுதியில் அமைந்துள்ளது. பெரும்பாலான கரடிகள் ஒத்த அழகுணர்வுடன்கூடிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளன. அரச மர நிழலில் அமைக்கப்பட்ட முற்றமும், கிணறும் எல்லா கரடிகள் மற்றும் அகடாகளில் காணப்படும் முக்கியமான அங்கங்கள் ஆகும். பூமி, காற்று, நீர் மற்றும் தண்ணீர் ஆகியவையே கரடிகளின் ஆன்மாவாக விளங்குகின்றன. அவற்றின் சுவர்களை அனுமனின் தீரம்மிக்க, வண்ணமயமான சித்திரங்களும், கருடனின் உருவமும், இந்துப் புராணக் காட்சிகளும் அலங்கரிக்கின்றன. அனுமன் அல்லது ஆஞ்சநேயர் எனப்படும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலயமாகவே அது கருதப்படுகிறது. தைரியத்திற்கும், உடல் வலிமைக்கும் உரிய கடவுளாகவே அவர் இங்கு கருதப்படுகிறார்.

பெரியோர்கள் முற்றத்துக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஆசுவாசமாக அமர்ந்தபடியே குஸ்தியைக் கண்டு களிப்பர். குரு அல்லது உஸ்தாத் என அழைக்கப்படும் ஆசானும் இங்கிருந்தபடியே தினசரிப் பயிற்சிகளை மேற்பார்வையிடுவார். முற்றத்தில் வண்டல் மண் நிரப்பப்பட்ட குழி ஒன்று வெட்டப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான இக்குழி 12 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டது. இக்குழியிலேயே மல்லர்கள் ஒருவருடன் மற்றொருவர் கட்டிப் புரண்டு குஸ்திச் சண்டை பயில்கின்றனர். குழியில் செம்மண் வண்டல் நிரப்பப்படுகிறது. பயிற்சி தொடங்குவதற்குச் சற்று முன்னர் இம்மண் உழப்பட்டதுபோல நன்றாகக் கிளறிவிடப்படும். பயிற்சி முடிந்தபின்னர் வண்டல் நிரவப்பட்டுச் சமதளமாக்கப்படும். விதைப்புக்காக உழப்படும் நிலத்தின் பக்குவத்தில் வண்டல் கிளறிவிடப்படும். சில நேரங்களில், நறுமணத்துக்காக ரோஜா, மல்லிகை இதழ்களும் இக்குழியில் தூவப்படுவதுண்டு. இந்த மண்ணே வலிமையின் சாரத்தைக் குறிக்கிறது. முற்றத்துக்கு எதிரிலேயே ‘நால்’ எனப்படும் பளு தூக்கும் கற்களும், ‘ஜோரி’ எனப்படும் மரத்தாலான கதாயுதமும் வைக்கப்பட்டிருக்கும். சுவர்களில் இந்துக் கடவுளர்களின் உருவங்களும், புகழ்பெற்ற முன்னாள் மல்லர்களின் சித்திரங்களும் தீட்டப்பட்டிருக்கும்.

அன்று மாலை நடைபெறும் குஸ்திப் பயிற்சியைப் பார்க்க என்னை பஹெல்வான் (பயில்வான்) ஜெய்ஸிம்மா அழைத்திருந்தார். அதற்கு முன்னர் நான் குஸ்திச் சண்டையை பார்த்ததே இல்லை என்பதால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். அவருடன் பஹெல்வான் சதீஷ், பஹெல்வான் சந்திரசேகர் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.

கரடியில் நுழைந்ததுமே, அவர்கள் தங்கள் உடைகளைக் களைந்துவிட்டு, லங்கோடு அணிந்துகொண்டனர். எண்ணெய் தேய்த்து நீவிவிடுதல் (மசாஜ்) என்பதும் அவர்களுடைய அன்றாடப் பயிற்சியில் ஒரு முக்கியமான அம்சமாகும்.

முதலில் அவர்கள் ஒருவருக்கொருவர் வெண்ணெய் தேய்த்து நீவிவிட்டுக் கொள்கின்றனர். இது அவர்களுடைய சருமம் உலர்ந்துவிடாமல் பாதுகாப்பதோடு, அதை வழுவழுப்பாகவும், தளர்ச்சியற்றதாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மசாஜுக்குப் பிறகு, மல்லர்கள் பஸ்கி, தண்டால் போன்ற உடலை ஆயத்தப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதன் பிறகு, அவர்கள் தம் உடல்களில் வண்டல் மண்ணைப் பூசிக் கொள்கின்றனர். உடல் விரைவில் குளிர்ச்சியடையாமல் பாதுகாக்க இது உதவுகிறது. அதே நேரத்தில், மற்றவர்கள் வண்டல் குழியைக் குஸ்தி நடத்த ஏதுவாகக் கிளறி விடுகின்றனர்.

குஸ்தி ஆரம்பிப்பதற்கு முன்னர் அனுமார் வழிபாடு நடத்தப்படுகிறது. மல்லர்கள் ஆசானின் காலைத் தொட்டு வணங்கி அனுமதி பெற்றுக்கொள்கின்றனர். இரண்டு மல்லர்களும் குழியின் நடுப்பகுதிக்கு வந்து, கைகுலுக்கிக் கொள்கின்றனர். பிறகு குஸ்திக்குத் தயாரான நிலையில் இருவரும் நிற்கத் தொடங்குகின்றனர். குஸ்தி ஆரம்பமாகின்றது. ஒருவர் கைகளை மற்றவர் பிடித்தும், ஒருவர் உடலை மற்றொருவர் இறுக்கியும் குஸ்தி நடத்துகின்றனர். ஒருவரை ஒருவர் நிலை தடுமாறச்செய்து கீழே விழ வைக்க முயல்கின்றனர். உடலில் ஆறாகப் பெருகும் வியர்வையும், எண்ணெய்ப் பிசுக்கும் இக்காரியத்தைக் கடினமாக்குகின்றன. ஒரு மல்லர் மற்றொருவரின் முதுகில் வண்டலைப் பூச முயல்கிறார். அப்படி வண்டல் பூசப்பட்ட உடல் பகுதியைப் பிடி நழுவாமல் எளிதில் பற்றிக்கொள்ள முடியும். பெரு மூச்சொலிகளும், சிங்கம் போன்ற கர்ஜனைகளும் அந்த இடத்தின் அமைதியைக் குலைக்கின்றன. அந்த மல்லர்கள் ஓய்வெடுக்கத் தொடங்கும்போது, மற்றொரு ஜோடி மல்லர்கள் குஸ்தியைத் தொடங்குகின்றனர். குஸ்தியின் முடிவில் கரணம் போடுதல், அந்தர் பல்டி அடித்தல் போன்ற (aerobics) பயிற்சிகளோடு, பளு தூக்கும் பயிற்சியையும் செய்து முடிக்கின்றனர். தினசரி அதிகாலையிலும், மாலையிலும் இப்பயிற்சிகளை அவர்கள் செய்கின்றனர். நல்ல தூக்கம் என்பதும் இப்பயிற்சியின் ஒருங்கிணைந்த பகுதியே. மல்லர்கள் தூக்கத்தை எந்தக் காரணத்திற்காகவும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது. குஸ்திப் பயிற்சி மிகக் கடுமையானது என்பதால் மல்லர்கள் ஒரு நாளைக்குப் பத்து மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

மறைந்துகொண்டிருக்கும் ஒரு கலையைக் காப்பாற்ற அவர்கள் மேற்கொண்டிருக்கும் முழுமையான அர்ப்பணிப்பும், சிரத்தைபூர்வமான பயிற்சியும் என்னை வியக்க வைக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் பிழைப்புக்காக வெவ்வேறு தொழில்களைச் செய்பவர்கள். ஜெய்ஸிம்ம ஒரு வாழைப்பழ வியாபாரி. சதீஷ் மர வியாபாரம் செய்பவர். தான் இல்லாமல் வியாபாரத்தை வேறு எவரும் கவனிக்க முடியாது என்ற நிலையில், தொடர்ந்து குஸ்தியில் ஈடுபடுவது சிரமாக இருப்பதாக சதீஷ் வருத்தத்துடன் சொல்கிறார். பயிற்சி செய்ய நேரமும், அதற்கேற்ப பகல் நேரத்தில் ஓய்வெடுப்பதும் அவசியம். ஜீவனத்திற்காக வேறு தொழில்களைச் செய்ய வேண்டி நேரும்போது இது எப்படிச் சாத்தியமாகும்?

குஸ்திப் பந்தயங்கள் இப்போதெல்லாம் மிக அரிதாகவே நடைபெறுகின்றன. பந்தயத் தேதிகள் குறிக்கப்படுவதில்லையானாலும் இந்த மல்லர்கள் பொறுமையுடன் தம் நேரத்தைப் பயிற்சியில் செலவிடுகின்றனர். ஆனாலும், போதுமான புரவலர்கள் இல்லாததால் இவர்களுடைய அர்ப்பணிப்பு உணர்வுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. தசரா மல்யுத்தப் போட்டியே கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பெரிய அளவிலான நிகழ்வாகும்.

மைசூர் நகரைப் பெருமை கொள்ளச் செய்யும் ஒரு பெயர் ’டைகர் பாலாஜி’ என்பதாகும். தென்னிந்தியாவையே கிடுகிடுக்கச் செய்த மல்லர்களுள் இவர் முக்கியமானவர். 53 வயதாகும் இவர், சுன்னடகேரி பகுதியிலுள்ள பூதய்யா கரடியின் புரவலர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். வஜ்ர முஷ்டி பாணியில் இவர் ஒரு ஜாம்பவான் என்பதோடு, கன்னடத் திரைப்படம் ஒன்றில் ராஜ்குமாரை எதிர்கொள்பவராகவும் நடித்துள்ளார். பல விருதுகளையும், பதங்களையும் வென்றுள்ளார். கையில் வேறு எந்தத் தொழிலும் இல்லாததால், இன்று இவர் அன்றாடங் காய்ச்சியாகவே வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. மல்லர்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய எட்டு முட்டைகள், 10 லிட்டர் பால், நெய், முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை ஒரு காலத்தில் இவரால் சாப்பிட முடிந்தது. “ஒரு மல்லர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அவருடைய சாப்பாட்டுச் செலவுக்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் 500 ரூபாய் செலவாகும். அப்படி இருக்கும்போது, அவருடைய குடும்பத்தை யார் கவனித்துக் கொள்வார்கள்?” என்று கேட்கிறார் பாலாஜி. உணவுக்காகும் செலவோடு மல்லுக்கட்ட முடியாததாலேயே பலரும் குஸ்தியிலிருந்து விலகிவிடுகிறார்கள். நெய், பால், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை மட்டுமாவது தங்களுக்கு மலிவு விலையில் வழங்கவேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை. பாலாஜி மட்டுமல்லாமல், நான் சந்தித்த பெரும்பாலான மல்லர்களும் இக்கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

குஸ்திப் பந்தயங்களைப் பிரபலப்படுத்துவது குறித்து பஹெல்வான் சதீஷுடன் பேசினேன். கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து முதலிய விளையாட்டுகளைப் போலவே குஸ்தியும் மக்களின் கவனத்தைப் பெறவேண்டும் என்றே அவர் ஆசைப்படுகிறார். பாரம்பரிய இந்தியக் கலை ஒன்று பிறரின் கவனத்தை வேண்டிக் கெஞ்சிக் கூத்தாடும் பரிதாபகரமான நிலையிலிருப்பது அவமானத்துக்குரியது. குஸ்திப் பந்தயங்கள் நடத்த ஐந்து லட்ச ரூபாய்கள் இருந்தாலே போதுமானது. பிற விளையாட்டுப் பந்தயங்களைப்போலத் திரைப்பட நட்சத்திரங்களின் வழிமொழிதலோடு, கோடிக்கணக்கில் பணம் செலவிடவும் தேவையில்லை.

ஒரு குஸ்திப் பந்தயத்தை நடத்த என்னென்ன செய்ய வேண்டும்?

· காவல் துறையிடமிருந்து அனுமதி பெறவேண்டும்.

· மைதானம் ஒன்றை வாடகைக்கு எடுக்கவேண்டும்.

· போட்டியில் பங்குபெற கரடிகளை அழைக்கவேண்டும்.

குஸ்திக்குப் புத்துயிரூட்டி, ஒரு காலத்தில் இருந்தது போன்ற வரவேற்பைப் பெறவைப்பது உடனடியாகச் செய்துவிடக்கூடியது காரியம் அல்ல. பள்ளிகளில் குஸ்தியைப் பயிற்றுவிப்பது இதற்கானதொரு முக்கியமான உபாயமாக இருக்கும். பாரம்பரிய அகடாக்களைவிட நவீன உடற்பயிற்சிக் கூடங்களையே விரும்பும் இன்றைய தலைமுறையினரின் போக்கு காரணமாக குஸ்திப் பந்தயங்களின் எண்ணிக்கையும், பாரம்பரியமும் வெளிப்படையாகவே பாதிக்கப்பட்டுள்ளன.

மாதம் தவறாமல் பந்தயங்களை நடத்துவதன்மூலம், மக்களின் மனதில் குஸ்தியின் மீதான ஆர்வத்தை விதைக்க முடியும் என்கின்றனர் மல்லர்களான சதீஷும், ஜெய்ஸிம்மவும். மறக்கப்பட்டுவிடும் நிலையிலிருக்கும் குஸ்தியைக் காப்பாற்ற இவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிட்டிருக்கின்றனர். மற்றொரு பாரம்பரியக் கலையும் காற்றிலே கரைந்து மறைந்துவிடுவதற்குள், நாம் இவர்களுக்கு உதவி செய்வது அவசியமான, அவசரமான தேவையாகும்.

இக்கட்டுரை தொடர்பான புகைப்படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

* ‘களரி’ என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே ‘கரடி’ என்று ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் தெரிவிக்கிறார். – மொழிபெயர்ப்பாளர்.

2 Replies to “மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள்”

Comments are closed.