
ரகுராம் அஷோக். 26 வயது இளைஞர். இந்தியாவின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர். இந்தியாவெங்கும் நடைபெற்ற பல புகைப்படக் கண்காட்சிகளில் இவருடைய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தாலியில் நடைபெறும் பிரபலமான சர்வதேச புகைப்படக் கண்காட்சியிலும் இவருடைய படைப்பு இடம்பிடித்திருக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான புகைப்படக் கண்காட்சிகளில் ஒன்றான ‘Frames of Mind’ என்ற வருடாந்திர கண்காட்சிகளின் அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். பெங்களூரில் வசிக்கும் தமிழர். பல தலைமுறைகளாக கர்நாடகாவிலேயே தங்கிவிட்ட தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரை சொல்வனம் இதழுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு மழைத்தூறல் நிறைந்த மாலை வேளையில் ஒரு காஃபி கடையில் சந்தித்து பேட்டி கண்டேன். ஜாக்கெட், ஹெல்மெட், முதுகில் புகைப்படங்களடங்கிய அம்புறாத்தோணி என வந்திறங்கினார். மணிரத்னத்தின் குறு, குறு நாயகர்களை நினைவு படுத்தும் தோற்றம். பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் உரையாடத் தொடங்கினோம்.
உங்களுக்குப் புகைப்படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
சிறுவயதிலிருந்தே எனக்குப் புகைப்படங்கள் எடுப்பதில் பெரும் ஆர்வம் இருந்தது. என்னுடைய அப்பா புகைப்படங்கள் எடுப்பதில் தணியாத ஆர்வம் கொண்டவர். தன்னுடைய மனைவியையும், குழந்தைகளையும் மட்டுமே அவர் புகைப்படம் எடுப்பார். அதைப் போலவே வீட்டு விசேஷங்களையும் ஒரு ஆவணப்படுத்துதலுக்காகப் பதிவு செய்து வந்தார். என் வீட்டில் கேமரா என்பது அலமாரிக்குள் இல்லாமல், சாதாரணமாகக் கைக்கெட்டுவது போல் வெளியே கிடைக்கும். அதனால் கேமரா என்பது ஒரு விளையாட்டுப்பொருள் போல எனக்கு எப்போதும் கிடைத்ததொரு விஷயமாக இருந்தது.
கல்லூரி நாட்களிலிருந்து நான் தொடர்ந்து புகைப்படங்களெடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய compositional தேர்வுகள் முன்னேறி வருவதை என்னால் உணர முடிந்தது. நீங்கள் எடுத்த பழைய புகைப்படங்களைத் தூக்கிப் போடாமல் பத்திரப்படுத்தி வைப்பது மிக அவசியம். நீங்கள் அவற்றைப் புரட்டிப் பார்க்கும்போது உங்களுடைய வளர்ச்சி உங்களுக்கே புரியும். புகைப்படங்கள் நான் உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றின.
நீங்கள் என்னவிதமான புகைப்படங்கள் எடுப்பதை விரும்புகிறீர்கள்? உங்கள் புகைப்படங்கள் பெரும்பாலும் தெருவாழ்வையும், மக்களையும் பிரதிபலிக்கின்றன. உங்கள் அப்பாவைப் போல மனிதர்களைப் புகைப்படமெடுப்பதைத்தான் அதிகம் விரும்புகிறீர்களா?
புகைப்படங்கள் நான் முன்பே சொன்னது போல என்னை என்னைச் சுற்றிய உலகுக்கு மிக நெருக்கமானவனாக மாற்றிவிட்டன. நான் மனிதர்களின் முகபாவங்கள், உணர்வுகள், செய்கைகளைக் கவனிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவன். எனவே இயல்பாகவே எனக்கு மனிதர்களைப் புகைப்படமெடுப்பதில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய பெரும்பாலான புகைப்படங்களில் ஏதேனும் ஒருவிதத்தில் மனிதர்களைத் தொடர்புபடுத்தியிருப்பேன். கோயில்களையும், புராதனமான கட்டடங்களைப் பதிவு செய்வதிலும் எனக்கு ஆர்வம் உண்டு.
உண்மைதான். உங்களுடைய சிறந்த புகைப்படங்கள் மனித முகங்களை நீங்கள் பதிவு செய்ததுதான். பல புகைப்படங்கள் ஆளறியாப் புகைப்படங்கள் எனப்படும் சப்ஜெக்ட்டுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட candid shots. உங்களுடைய புகைப்படங்களில் மனிதர்கள் வெகு இயல்பானவர்களாக இறுக்கமற்று இருக்கிறார்கள். என்னுடைய அனுபவமெல்லாம் கேமராவைப் பார்த்தாலே மக்கள் வெகு இறுக்கமாகி ஒருவித செயற்கைத்தன்மையை முகத்தில் கொண்டுவந்துவிடுகிறார்கள்.
நான் எடுத்தவுடனே கேமராவைக் காட்டி புகைப்படம் எடுக்கப்போகிறேன் என்று சொல்லி ஆரம்பிப்பதில்லை. பொதுவாக மக்களோடு கொஞ்ச நேரம் பேசி நட்பாகி, அவர்களுடைய இறுக்கத்தைத் தளர்த்தி விடுவேன். பின் ஆட்களை எடுக்காமல் சுற்றி இருக்கும் மரம், செடி, கொடி, கட்டடம் எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு எடுத்து கேமராவைக் குறித்த அவர்களுடைய பிரக்ஞையை நீக்கி விடுவேன். அதன்பின் அவர்களே சகஜமாகிவிடுவார்கள். சிறுவர்கள், குழந்தைகளைக் கூட நான் அவர்களுடனே விளையாடி ஒரு நண்பனாகிவிட்டுதான் புகைப்படமெடுப்பேன். சில சமயங்களில் என் கேமராவைக் கூட அவர்களிடம் கொடுத்து விடுவேன்.
என்ன? கேமராவை சிறுவர்கள் கையில் கொடுத்து விடுவீர்களா? உங்களுக்கு தைரியம் அதிகம்தான்.
(சிரிக்கிறார்). அதிர்ஷ்டவசமாக இதுவரை கேமராவுக்கு எந்த சேதமும் ஆனதில்லை. ஆகவும் ஆகாது.சிறுவர்களிடம் கேமராவைக் கொடுத்து என்னைப் புகைப்படமெடுக்கச் சொல்வேன். பின்பு அவர்களே என்னிடம் அவர்களைப் புகைப்படமெடுக்கச் சொல்வார்கள். நல்ல புகைப்படங்கள் எடுப்பதற்குக் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துத்தான் தீர வேண்டியிருக்கிறது. Nicolas Chorier என்றொரு புகைப்பட நிபுணரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பட்டத்தில் கேமராவைக் கட்டி உயரப் பறக்க விட்டுப் புகைப்படம் எடுப்பார். அப்படி மிகச்சிறந்த பல “aerial view” புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். சமயங்களில் கேமரா உடைந்தும் போயிருக்கிறது. ஆனால் அவர் எடுத்ததைப் போன்ற தாஜ்மஹால், கங்கை நதிப் புகைப்படங்களை இதுவரை யாரும் எடுத்ததில்லை.
எனக்கின்னும் அத்தனை தைரியம் வரவில்லை. நீங்கள் என்ன கேமரா உபயோகிக்கிறீர்கள்?
நான் மிகவும் விலை உயர்ந்த மாடல்களையோ, லென்ஸ்களையோ உபயோகிக்கவில்லை. ஒரு நல்ல புகைப்படத்துக்கு கேமராவை விட Composition முக்கியம் என்று நினைக்கும் கட்சி நான். என்னிடம் ஒரு கேனான் ரெபல் (Canon Rebel – Film based), நிக்கான் D70s, (DSLR), சோனி சைபர்ஷாட் DSC-S60 ஆகிய கேமராக்கள் இருக்கின்றன.
இவை தவிர புகைப்படக்கலைஞராக இருந்த என் அம்மாவின் தாத்தா உபயோகித்த 1950-களின் Voigtlander கேமரா என்னிடம் இருக்கிறது.
எனக்கு புகைப்படச்சுருள்(film) கேமராவில் புகைப்படம் எடுப்பது மிகவும் பிடித்திருக்கிறது. ‘Slide film’ தொழில்நுட்பத்தில் அமைந்த வெல்வியா புகைப்படச்சுருளை உபயோகித்தபோது மிகவும் அசந்து போனேன். அதன் high saturation தொழில்நுட்பம் மிக அற்புதமான வண்ணச் சேர்க்கையை அளிக்கிறது. கிட்டத்தட்ட என் டிஜிட்டல் கேமராவையே ஒதுக்கி வைத்து விடலாம் என்று கூட தோன்றியது. ஆனால் slide film processing மிகவும் செலவு பிடிக்கும் விஷயம்.
என்னிடம் உள்ள லென்ஸ் வகைகள்: Canon 28-70 f4-5.6, Nikon 50mm f1.8, Sigma 17-70 f2.8-5.6, Nikon 55-200 f4-5.6, Nikon 70-300 f4-5.6
படச்சுருள் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் பேசும்போது நினைவுக்கு வருகிறது. டிஜிட்டல் புகைப்படங்களின் வரவால் புகைப்படக் கலையே அழிந்து விட்டதென்று ஒரு கருத்து வெகு தீவிரமாக இப்போது பரவியிருக்கிறது. புகைப்படக்கலை செத்து விட்டது’ என்று நியூஸ்வீக் ஒரு கட்டுரை வெளியிட்டது. அதற்கு பதில் தரும் வகையில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இன்றைய புகைப்படக்கலைஞர்கள் எதிர்கொள்ளுமொரு கேள்வி: ‘நீங்கள் உங்கள் புகைப்படங்களை சாஃப்ட்வேர் உபயோகித்து மாற்றுகிறீர்களா?’ அதைக் கேட்கும்போதே கேள்வி கேட்பவர் மிக எரிச்சலூட்டக்கூடியதொரு புன்னகையை முகத்தில் ஏந்தியிருப்பார். இந்தக் கேள்வியை நீங்களும் பல முறை எதிர்கொண்டிருப்பீர்கள். Digital photography-யைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
“இந்தப் புகைப்படத்தை photoshop செய்து மாற்றினீர்களா?” என்ற கேள்வியைத் தவிர்க்க விரும்பாத புகைப்படக் கலைஞரே இருக்க முடியாது. ஏனென்றால் கேள்வி கேட்பவரின் கண்ணோட்டம் எப்படிப்பட்டது என்று நம்மால் யூகிக்க முடியாது. ‘ஆம்’ என்று பதில் சொன்னால் பெரும்பாலானோர் புகைப்படத்தின் மொத்த அழகுமே photoshop மூலம்தான் வந்தது, யதார்த்தம் என்பது துளியும் இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் சாதிக்கமுடியும் பெரும்பாலான விஷயங்கள், படச்சுருள் காலத்திலும் Dark room தொழில்நுட்பத்திலேயே சாத்தியமான விஷயங்கள்தான். இப்போது டிஜிட்டல் கலைப்பொருளாக அறியப்படும் படைப்பு அப்போது ‘Photo montage’ என்றறியப்பட்டது. பல புகைப்படங்களைக் கத்தரிக்கோலால் வெட்டி ஒட்டி ஒரு சர்ரியலிஸ படைப்பை அந்நாட்களில் உருவாக்க முடிந்தது. இப்போது கத்தரிக்கோலுக்கு பதிலாக நாம் ஒரு மென்பொருளை உபயோகிக்கிறோம், அவ்வளவே!
என்னிடம் இந்த பிரபலமான கேள்வியைக் கேட்கும் பட்சத்தில் நான் உண்மையாக எந்த அளவு மென்பொருளை உபயோகித்தேனோ அதைச் சொல்லிவிடுவேன். மேலும் நான் சில எளிய மாறுதல்களுக்காத்தான் மென்பொருளை உபயோகிக்கிறேன். உண்மையில் புகைப்படங்களால் என் கம்ப்யூட்டர் ததும்பி வழியும் வரை எனக்கொரு புகைப்பட மென்பொருளின் அவசியமே இருந்திருக்கவில்லை. இப்போது ஒழுங்காக வகைப்படுத்தி வைப்பதற்காக ‘Adobe Lightroom’ மென்பொருளை உபயோகிக்கிறேன். சில எளிய எடிட்டிங் தேவைகளுக்கு ‘Adobe photoshop’ மென்பொருளை உபயோகிக்கிறேன்.
மிகக் குறைந்த நேரத்தில் புதியதொரு உருவத்தையே ‘உருவாக்கிவிட’ முடிவதால்தான் டிஜிட்டல் தொழில்நுட்பம் எல்லோராலும் பரிகசிக்கப்படுகிறது. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வரவால் நமக்கு கேமரா வகைகள், சேகரத் தொழில்நுட்பம் (storage techiniques), மேன்மைப்படுத்தும் மென்பொருள், அச்சுத் தொழில்நுட்பம் போன்றவை மிக எளிதாகக் கிட்டுகின்றன. முன்பெல்லாம் புகைப்படக்கலைஞர்கள் சரியான தகவல்களும், கருவிகளும் இல்லாமல் நிறைய திண்டாடியிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை புகைப்படக்கலை என்பது யதார்த்தத்தைப் (realism) பெருமளவு பிரதிபலிக்க வேண்டும். புகைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது உண்மையான ஒரு விஷயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். டிஜிட்டல் யுகத்துக்கு முன்னர் அது பெருமளவு அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரு புகைப்படத்தைப் பார்த்தவுடனே அது உண்மையானதா, உருவாக்கப்பட்டதா என்று ஒரு தேர்ந்த நிபுணரால் கூட சொல்லிவிட முடிவதில்லை. புகைப்படத்திலிருக்கும் சில விஷயங்கள் சேர்க்கப்பட்டனவா, நீக்கப்பட்டனவா என்று சொல்வதெல்லாம் மிகவும் கடினமான விஷயம்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நம் வாழ்க்கை மிகவும் எளிதானதாக ஒன்றாக இருக்கிறது. மார்க்கெட்டிங் துறைக்கு அது ஒரு பெரும் வரப்ரசாதம். லிட்டர், லிட்டராக ரசாயனப் பொருட்களும், புகைப்படத்தை வெளிப்படுத்தும் Dark room-ம் இருந்த இடத்தில் இன்று ஒரே ஒரு கம்ப்யூட்டர்தான் இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வைத்து சில மேலோட்டமான மாறுதல்கள், சரிப்படுத்தல்களைச் செய்யலாம். ஆனால் சப்ஜெக்ட்டையே முற்றாக மாற்றுவது, சில விஷயங்களை செயற்கையாக சேர்ப்பது, நீக்குவது இதையெல்லாம் செய்து விட்டு அதைப் ‘புகைப்படம்’ என்று சொல்ல முடியாது. அதை டிஜிட்டல் கலைப்பொருள் (Digital art) என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நீங்கள் சொல்வதைப் போல இன்று புகைப்பட மார்க்கெட்டிங் மிக எளிதான ஒன்றாக இருக்கிறது. Flickr வலைத்தளம் வழியாக பெரும்பாலான அமெச்சூர் புகைப்படக்கலைஞர்கள் நிறைய கவனத்தைப் பெருகிறார்கள். Hamad Darwish என்ற குவைத் புகைப்படக் கலைஞரை Flickr வழியாகக் கண்டறிந்த மைக்ரோசாஃப்ட், பெரும் விலை கொடுத்து அவருடைய புகைப்படங்களை விண்டோஸ் விஸ்டா wallpaper-ஆக வாங்கியிருக்கிறது. இதுபோன்ற பல கலைஞர்கள் இன்று Flickr வழியாகத் தங்களுக்கான வெளியைக் கண்டடைந்திருக்கிறார்கள். நான் கூட உங்களைக் கண்டறிந்ததே Flickr இணையப்பக்கம் வழியாகத்தான். உங்களுக்கு எந்த விதத்தில் Flickr உதவியாக இருக்கிறது?
ஒரு காலத்தில் நான் என்னைப் போன்ற புகைப்பட ஆர்வலர்களைத் தேடி அலைந்திருக்கிறேன். விளம்பரப் பக்கங்களில் புகைப்படக் குழுவின் விளம்பரம் ஏதாவது தென்படுகிறதா என்று தேடிக்கொண்டிருந்திருக்கிறேன். Flickr, Photojo, DPReview, Photo.net போன்ற வலைத்தளங்களின் வரவால் பிற ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்வது வெகு எளிதாகிப்போனது. கேமரா வகைகளின் விமர்சனங்கள், ஆர்வலர் குழுக்கள், கடைகள், போன்றவற்றை வெகு எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் Flickr குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய இணையதளம். அதன் வழியாக எனக்குப் பல தொடர்புகள், நட்புகள் கிட்டியிருக்கின்றன. அதிலும் ஏராளமான புகைப்படங்களைப் பார்க்கையில் தானாகவே ஒரு நல்ல ரசனையும், உந்துதலும் கிடைக்கிறது. அதைப் போலவே Flickr-இல் இருக்கும் பல குழுக்கள் வழியாக பல கண்காட்சிகள், போட்டிகள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. இங்கிலாந்திலிருக்கும் ஒரு பிரபலமான புத்தக நிறுவனம் என்னுடைய சில புகைப்படங்களை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். அது நடந்ததும் Flickr வழியாகத்தான்.
ப்ரெஸ்ஸனின் ஒரு புகைப்படத்தின் உந்துதலான, உங்களுடைய “An ode to Bresson” என்ற புகைப்படம் என்னுடைய விருப்பமான புகைப்படங்களுள் ஒன்று. நானும் கூட சில சமயங்களில் பிற நல்ல புகைப்படங்களைப் பிரதியெடுக்க முயன்றிருக்கிறேன். இன்று நமக்கு பல இணைய தளங்கள் வழியாக நல்ல புகைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது இல்லையா?
அது உண்மைதான். Flickr போன்ற தளங்கள் வழியாக ஒரு க்ளிக்கில் உலகின் சிறந்த பல புகைப்படங்களைப் பார்த்து விட முடிகிறது. அப்படிப்பட்ட பல புகைப்படங்களைப் பார்ப்பதன் மூலம், அது எடுக்கப்பட்ட சூழலைக் குறித்தும், தொழில்நுட்பம் குறித்தும் சிந்திப்பது நமக்கு புகைப்படங்களைப் பற்றிய நல்ல பாடமாக இருக்கிறது. நாமும் அதே போன்ற composition-களையும் முயற்சித்துப் பார்க்க உதவியாக இருக்கிறது. ஆனால் இந்த வசதியைத் தவறாகப் பயன்படுத்தி, மீண்டும், மீண்டும் நல்ல புகைப்படங்களைப் பிரதியெடுப்பதைவிட நாம் அந்த புகைப்படங்களை விட இன்னும் சிறப்பாக எடுக்க முயற்சிக்க வேண்டும்.
ப்ரெஸ்ஸன் பல சிறப்பான இந்தியப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அவரைப் போல பல வெளிநாட்டுப் புகைப்படக் கலைஞர்கள் இந்தியாவை மிகச்சிறப்பான புகைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்தமான இந்தியப் புகைப்படங்கள் என்னென்ன என்று குறிப்பிட முடியுமா?
Steve McCurry எடுத்த ‘தாஜ்மஹால்’ புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தாஜ்மஹாலை எத்தனையோ பேர், எத்தனையோ விதமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இருந்தாலும் அதிலும் ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தைத் தந்த ஸ்டீவ் மெக்குர்ரியின் இந்த புகைப்படம் அதன் compostional மதிப்புக்காகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
இந்தியாவின் ஆரம்பகால விண்வெளி ஆராய்ச்சி நாட்களை நினைவு படுத்தும் ப்ரெஸ்ஸனின் இந்த புகைப்படமும் எனக்கு மிக விருப்பமான ஒன்று.
உங்களுடைய ‘Ancestor’s thirst’ என்ற புகைப்படம் இத்தாலியில் நடக்கும் பிரபலமான புகைப்படக் கண்காட்சிக்குத் தேர்வானது இல்லையா? அதைக் குறித்துக் கூறுங்களேன்.
அது நான் எடுத்த புகைப்படங்களில் மிகச்சிறப்பானது என்று கூற மாட்டேன். ஆனால் அது சொல்லும் கதைக்காகவோ, உணர்வுக்காகவோ சர்வதேசப் புகைப்படக் கண்காட்சிக்குத் தேர்வானதென்று நினைக்கிறேன். அது ஒரு மனிதன் தன் சுற்றுச்சூழல் மேல் கொண்டிருக்கும் அக்கறையைப் பிரதிபலிக்கிறது.
மதுரைக்கருகிலுள்ள ஒரு மலைக்கோயிலில் நான் எடுத்த புகைப்படம் அது. அந்தக் கோயிலில் ஒரு பெரிய குரங்குக்கூட்டமே இருந்தது. அந்தக் கோயிலிலிருந்த சாது ஒருவர் அந்தக் குரங்குகளுக்கு தேங்காய், வாழைப்பழம் போன்ற உணவுப் பொருட்களைத் தந்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து ஒரு குரங்குக்குத் தன்னிடமிருந்த தண்ணீரைத் தந்தார். அது ஒரு சிறந்த புகைப்படத் தருணமென்று யூகித்து அதைப் பதிவு செய்தேன். நான் முன்பே சொன்னது போல Flickr இணையதளம் புகைப்படக்காரர்களுக்கான சிறந்த தகவல் தொடர்புத்தளம். அந்தத் தளத்தின் ஒரு குழுவின் வழியாக இத்தாலியில் நடக்கும் பிரபலமான புகைப்படக் கண்காட்சியைப் பற்றித் தெரிந்து கொண்டு இந்தப் புகைப்படத்தை அனுப்பி வைத்தேன். அதுவும் தேர்வானது.
நீங்கள் பெங்களூரில் நடைபெறும் “Frames of Mind” என்ற கண்காட்சிகளின் முக்கியமான உறுப்பினராக இருக்கிறீர்கள். அது எப்படித் தொடங்கியது?
பெங்களூர் ஃபோட்டோகிராஃபி க்ளப் 2004-இல் ஒரு யாஹு குழுமமாக வெறும் ஐந்து நபர்களோடு ஆரம்பமானது. இன்று இந்தியா மற்றும் உலகெங்கும் பரந்து விரிந்து 2000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு இருக்கிறது. இந்தியாவிலிருக்கும் மிக உத்வேகமான புகைப்படக்குழுக்களில் இதுவும் ஒன்று.
உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடியவுடன் எங்களுடைய புகைப்படத் திறமைகளை நாங்கள் வெளியுலக்குக்குக் கொண்டுவருவது அவசியம் என்று தோன்றியது. 2005-இல் நாங்கள் ஒன்று சேர்ந்து அந்த வருடத்தின் காலண்டரை உருவாக்கினோம். 2006-இல் மிக முக்கியமான நிகழ்வான கண்காட்சியை நடத்தினோம். விருப்பமிருக்கும் உறுப்பினர்கள் ஒரு தேர்வுக்குழுவுக்கு புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும். தேர்வுக்குழு சிறந்த புகைப்படங்களைத் தேர்வு செய்து கண்காட்சிப் பொருட்களை முடிவு செய்தது. ஒவ்வொரு வருடமும், புகைப்படங்கள், உறுப்பினர்கள், பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இன்று பெங்களூரில் இருக்கும் ஒவ்வொரு ஐந்து புகைப்படக் கலைஞர்களிலும் இருவராவது இந்தக் கண்காட்சியில் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
பொதுமக்களின் ஒத்துழைப்பும் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. Epson & Pixtera எங்களுடைய அதிகாரபூர்வ ப்ரிண்ட் ஸ்பான்ஸர்களாக இருந்தார்கள். 2008-இல் நாங்கள் எங்களுடைய அடுத்த முயற்சியான ‘பெங்களூரு மண்டி’ என்ற புகைப்படப் புத்தக ப்ராஜக்டை ஆரம்பித்தோம். பெங்களூரிலிருக்கும் மார்க்கெட்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு சிறந்த புகைப்படங்களை ஒரு புகைப்படப் புத்தகமாக 2009-இல் மாக்ஸ் முல்லர் பவனில் வெளியிட்டோம்.
அந்தப் புத்தகத்தை இங்கே பார்க்கலாம்:
http://bangalorephotographyclub.com/activities/bengaluru-mandis.html
பிரமிப்பாக இருக்கிறது. ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு புகைப்பட ஆர்வத்தையும் மிக வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறீர்கள். பொதுவாக பிரபல ஊடகங்களில் ஐ.டி பணியாளர்களை எப்போதுமே ஊதாரிகளாகவும், எந்தவித பொறுப்புணர்வும் இல்லாதவர்களே மீண்டும், மீண்டும் பிம்பப்படுத்தி வருகிறார்கள். புகைப்படங்கள் தவிர வேறெதிலும் ஆர்வமிருக்கிறதா?
எனக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. புல்லாங்குழல் வாசிப்பேன். பள்ளி நாட்களிலிருந்து கர்நாடக சங்கீதம் கற்று வருகிறேன். பெங்களூரில் நடக்கும் தியாகராஜ ஆராதனைகளில் வாசித்திருக்கிறேன். இப்போது என் கம்பெனியில் நண்பர்ளுடன் சேர்ந்து ‘Canorus’ என்ற இசைக்குழுவை ஆரம்பித்து சில ஃப்யூஷன் முயற்சிகள் செய்து வருகிறோம்.
இசையில் ஆர்வம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னவுடன், இசை கேட்பீர்களாக்கும் என்று நினைத்தேன். இசைக்கலைஞராகவும் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. உங்களுக்குப் பிடித்த இசைக்கலைஞர்கள் யார்?
மாலி, மைசூர் நாகராஜ், ஷஷாங்.
திரைப்பட இசையில் ஆர்வம் உண்டா?
இல்லை. எனக்குத் திரைப்பட இசை அவ்வளவாக ஆர்வமூட்டுவதில்லை. நான் பெரும்பாலும் கர்நாடக இசையைத்தான் விரும்பிக் கேட்கிறேன்.
எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?
நிறைய ஊர் சுற்றியலையும் புகைப்படக் கலைஞராக விரும்புகிறேன். பயண எழுத்தாளராவதும் என் கனவுகளில் ஒன்று. நம் இந்தியாவில் பதிவு செய்யப்படாமல் அழிந்து கொண்டிருக்கும் பல கலைகளும், சிறந்த சாதனையார்களும் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மைசூரில் மிகப் பிரபலமாக இருந்த நம்முடைய பூர்வ விளையாட்டுக் கலையான குஸ்திப் போட்டி இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் மேற்கொள்ளும் விளையாட்டுப் பயிற்சியாகிவிட்டது. அவர்களும் வேறெந்த வருமானமும் இல்லாத நிலையில் மிகுந்த சிரமத்துக்கிடையேதான் அந்தக் கலையை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய நிலை என்னை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கியது. அவர்களைப் பற்றியதொரு புகைப்படக் கட்டுரையை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.
அதைப் போலவே ஹம்பியைக் குறித்ததொரு புகைப்படக் கட்டுரையை அதன் வரலாற்றோடு சேர்த்து எழுதினேன். அதை ஒரு பிரபலமான புகைப்படப் பத்திரிகைக்கும் அனுப்பி வைத்தேன். அவர்கள் அந்த வரலாற்றையெல்லாம் நீக்கி விட்டு, புகைப்படத் தொழில்நுட்பத்தைக் குறித்து எழுதித் தருமாறு கேட்டார்கள். ஹம்பியின் வரலாற்றை நீக்கிவிட்டு அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்கவே தேவையில்லை என்று நிர்தாட்சயண்மாக மறுத்து விட்டேன். நம்மிடையே இருக்கும் பல புகழ்பெற்ற கட்டடக்கலை சாதனைகளை நாம் வெகு மோசமாக அழிய விட்டிருக்கிறோம். என்னால் முடிந்த அளவுக்கு இந்த சீரழிவுகளைக் குறித்த புரிதலை மக்களிடையே ஏற்படுத்த நினைக்கிறேன்.
உங்களைச் சந்தித்து உரையாட முடிந்தது எனக்குப் பெரிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது ரகுராம். ஒரு பிரபலமான பத்திரிகையின் வேண்டுகோளையும் நிராகரிக்க முடிந்தது உங்களுடைய தன்னம்பிக்கையையும், மரபின் மீதிருக்கும் தணியாத காதலையும் காட்டுகிறது. புகைப்படம், இசை, எழுத்து என அனைத்துத் துறைகளிலும் மேன்மேலும் சிறந்து விளங்க சொல்வனம் இதழ் சார்பாக என்னுடைய வாழ்த்துகள்.
நன்றி சேதுபதி.