ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2

இரு பாகங்களாக வெளிவரும் கட்டுரையின் இரண்டாவது (நிறைவுப்) பகுதி இது.

முதல் பகுதியை இங்கே படிக்கலாம்: பகுதி 1

stamp3
Sibelius Stamp released by Finland Government

சிம்போனி என்ற இசை வடிவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் சிபேலியஸ். இவர் தன் முதல் சிம்பொனி (E Minor) மூலம் உலகத்திற்கு கட்டுப்போன வடிவத்தை அறிமுகப் படுத்தினார். சிம்பொனி இசை வடிவத்தின் மூலம் தாளத்தையும், சுரஸ்தானங்களையும் சேர்ந்து ஒலிப்பதற்கான வடிவத்தை வகுத்ததும் இவரே.

தன் முதல் இரு சிம்பொனிக்களையும் 1898, 1902 ஆம் ஆண்டுகளில் எழுதி முடித்ததுமில்லாமல் அவற்றைப் பற்றிய விரிவான விவாதத்தையும் தொடங்கி வைத்தார். மேலோட்டமாகப் பார்க்கும்போது நாடகத்தன்மைகளான ரொமாண்டிஸிஸம், மதிப்பீடுகளுக்காக உருவாக்கும் பகுதிகளென தோற்றம் கொண்டாலும், இந்த இரு சிம்பொனிகளும் அவற்றின் மெளனமான கருத்தாக்கங்களாலேயே மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த இசைக்கோப்பு முழுவதும் ஒரு தொடர் முணுமுணுப்பைப் போலவும், மெல்ல அது மேலெழுந்து பெரிய சலசலப்பை உருவாக்கும் காற்றாறு போலவும் சிபேலியஸ் வடிவமைத்திருந்தார். இசை ஒருங்கிணைப்பாளர் கஜானுஸ் – ‘இந்த காலகட்டத்திலிருக்கும் நீதி மற்றும் ஒழுக்கக்கேட்டுக்கு எதிர்ப்பாக அழும் இதயம் உடைந்த ஆன்மாவின் குரலாக’ இந்த சிம்பொனியை உருவகப்படுத்தினார்.

கொஞ்சம் கொஞ்சமாக சிபேலியஸின் சிம்பொனிகள் ஃபின்லாந்து நாட்டின் விடுதலை எழுச்சியுணர்வை எழுப்பும் அமைப்புகளாக மாறியது. சிபேலியஸ் முதலில் இதை எதிர்த்தாலும், ஃபின்லாந்து நாட்டில் அப்போது நிலவிய ரஷ்ய ஆதிக்கத்துக்கு எதிர்ப்பாகச் செயல்பட தன்னாலான முயற்சியென அதை ஆதரிக்கத்தொடங்கினார்.

இதற்குப் பிறகு பெரிய எதிர்ப்பார்புடன் வெளியான மற்றொரு இசைத் தொகுப்பு – Valse Triste என்னும் வயலின் இசைத் தொகுப்பாகும். இதை வயலின் கான்செர்ட்டோ எனக் குறிப்பிடுவர். கான்சர்ட்டோவின் அமைப்பு சிம்பொனியிடமிருந்து மாறுபட்டது. மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் கான்சர்ட்டோவில், பொதுவாக இருக்கும் ஆர்க்கெஸ்ட்ரா வாத்தியக் கருவிகளுடன் ஏதாவதொரு வாத்தியக்கருவி முதன்மையாக இசைக்கப்படும். இந்த வாத்தியத்தை lead என்று பரவலாக குறிப்பிடுவர். சிம்பொனியில் இத்தகைய ஒரு கருவிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. கான்சர்ட்டோவில் வயலின், புல்லாங்குழல், செல்லோ (Cello) போன்றவை முதன்மையாக இருக்கும்.

இதையெல்லாவற்றையும் தாண்டி அமெரிக்காவையும் இவர் பக்கம் திருப்பிய இசை மூன்றாம் சிம்பொனியே ஆகும். இதில் அவர் இசை முழுமையை அடைந்ததாக இசை ஆர்வலர்கள் கூறுவர். முதல் சிம்பொனியைப் போல தொல்லிசை சார்ந்ததோ, இரண்டாவதைப் போல கவித்துவ எழுச்சியோ இந்த மூன்றாவதில் கிடையாது. அகவயமான மனித மனத்துடன் போராட்டம் மெளனமாக நிறுவப்பட்ட இசை வடிவம். இசைக்கான மீமொழியில் புனையப்பட்டது. அதேசமயம் இது சிம்பொனி என்ற பழங்கால வடிவத்தையும் சற்று புரட்டிப் போட்டது எனலாம்.

மாஹ்லெருக்குக் கூட உவப்பாக இல்லாத இந்த உருவ சிதைத்தலை வடிவ நேர்த்தியாக எல்லா இசைக் கலைஞர்களும் இன்று கையாண்டு வருகின்றனர். அப்படி என்ன செய்தார் நம் நாயகன்?

பொதுவாக சிம்பொனி வடிவங்களில் நான்கு பகுதிகள் இருக்கும். பல சிம்பொனிகளின் கரு இந்த பகுதிகளில் ஒளிந்திருக்கும்.

1. அல்லெக்ரோ (Allegro)
2. அடாஜியோ (மிக மெதுவான Adagio)
3. செர்ஷோ (வேகமான Sherzo)
4. அல்லெக்ரோ (மெதுவானது)

நடு இரண்டு பகுதிகளில் மட்டுமே சில மாற்றங்களை இசையமைப்பாளர்கள் செய்து வந்தனர். ஆனால், சிபேலியஸோ கடைசிப் பகுதியை வேகவேகமாகத் தொடங்கி, சீரான ஒரு ராணுவ அணிவகுப்பு போலத் தொடர்ந்து, கடைசியில் பிரம்மாண்டமாக முடித்திருந்தார். இந்த மாற்றத்தை மாஹ்லர் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `சிம்பொனி என்பது  மாற்றங்களே இல்லாத ஒரு உலகம் போன்றது, எல்லாவற்றையும் அது தன்னுள் இழுக்க வேண்டுமே தவிர அதிலிருந்து புது அர்த்தங்களை வெளிக்கொணர ஒன்றுமேயில்லை` – என வாதிட்டார்.

இதனால் சிபேலியஸ் ஒன்றும் மனம் தளரவில்லை. தொடர்ந்து ஐரோப்பாவில் ஷோன்பெர்க், ஸ்ட்ராவின்ஸ்கி போன்றோரால் நடக்கும் இசைப் புரட்சியை கவனித்து வந்திருந்தார். ஜெர்மன் இசை மாற்றங்களினால் சோற்வுற்ற சிபேலியஸ் தன் தாய் நாட்டுக்கே திரும்பச் சென்று, இயற்கை அழகுகளோடு இருந்த அய்னோலா (Ainola) என்ற ஊரில் தன் வாழ்நாள் முடியும் வரை வாழ்நதார்.

நான்காவது சிம்பொனி ஐரோப்பாவே பார்த்திராத ஒன்று. இப்போது சிபேலியஸ் செய்தது தாளம் அல்லது நேரத்திலான புரட்சி.

நான்காவது சிம்பொனி ஐரோப்பாவே பார்த்திராத ஒன்று. இப்போது சிபேலியஸ் செய்தது தாளம் அல்லது நேரத்திலான புரட்சி. இசையின் அடிப்படை நுணுக்கத்தின் ஊடாகவே சிபேலியஸின் புரட்சி நிகழ்ந்து வந்துள்ளதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். தாளம் இசையின் ஆதாரம். அந்த ஆதாரத்தை வேரோடு மாற்றாமல், அதன் உபயோகத்தை மாற்றினார். C, D, F-Sharp, E என சுரக்கோர்வையின் மூன்றாம் சமன்பாட்டை மட்டுமே உபயோகித்தார் (Third triad). ஆனால் இந்த நோட்ஸ்களுக்கு மத்தியிலிருந்த நேரத்தை மட்டும் மாற்றிக்கொண்டே சென்றார். முதலில் முக்கால் நேர அளவு ஆரம்பித்து, பின்னர் அதற்கும் பாதியாய் குறைந்து, மீண்டும் பாதி அளவு நேர வித்தியாசத்தில் தாளத்தை மாற்றிக்கொண்டேயிருந்தார். இதன் மூலம், சிம்பொனி ஒலிகள் குறுகி, விரிந்து ஒருவித புவியீர்ப்பு சக்தியினால் ஈர்க்கப்படுவதைப் போல மெல்ல மெல்ல மெளனத்தை நோக்கி மெதுவாக பயணித்தது.

இசை ஒலிகளில், குறிப்பாக சிம்பொனி போன்ற பல்லிசை (Polyphony) இசைத் தொகுப்புகளில் conflict எனப்படும் முரணியக்கம் முக்கியமான ஒன்றாகும். ஒரு இசைக் கருவி மேல் ஸ்தாயிக்களில் ஒலிக்கும்போது, மற்றொன்று அதே நேரத்தில் கீழ் ஸ்தாயியில் ஒலிக்கும். இது ஒருவித முரண்பாட்டை விளைவித்தாலும், கேட்பதற்கு இனிமையாகவே இருக்கும். இவை இரண்டும் ஒலித்து முடியும் வரை கேட்பவருக்கும் இந்த நெருக்கடி இருக்கும். இதைப் போன்ற நெருக்கடியை உருவாக்குவதே ஒரு நல்ல இசைப் படைப்பின் அடிநாதமாகும். அந்த நெருக்கடி கடைசியில் ஆதார சுருதி இசைக்கப்படும்போதே விடுவிக்கப்படும். அதனாலேயே, tonal இசை வடிவங்கள் எங்கு தொடங்கினாலும் ஆதார சுருதியை நோக்கியே பயணிக்கும்.

இதைக் கச்சிதமாக சிபேலியஸ் பயன்படுத்தினார். C-யில் தொடங்கும் இந்த முதல் பகுதி, F-Sharp க்கு வர பல மாற்றுப் பயணங்களை மேற்கொள்ளும். F-Sharpஇல் ஒலிக்கும் இசை நெருக்கடியை ஏற்படுத்தி, திரும்ப எப்போது C என்ற நோட்ஸுக்கு வருமென ஏங்கவைக்கும். இந்தப் பாணியை மேற்கொண்டே சிபேலியஸ் நான்காவது சிம்பொனியில் வெற்றி பெற்றார். இதைப் போல் மெதுவாகத் தொடங்கும் இந்த சிம்பொனி, கடைசிப் பகுதியில் அனைத்து வாத்தியக் கருவிகளும் முழங்க ஒரு பெரிய ஆரவாரத்துடன் முடிவடையும்.

தன் ஐந்தாவது சிம்பொனியின் கருவை சிபேலியஸ் இயற்கையிலிருந்தே பெற்றுக் கொண்டார். அவர் இருந்து வந்த அய்னோலா வீட்டைச் சுற்றி அற்புதமான ஏரி இருந்தது. அந்த ஏரியைச் சுற்றி பல மரங்களுடன் ஒரு காடும் இருந்தது. அந்த மரத்தினூடாக வெளிவந்து, ஏரி மேல் பறக்கும் அன்னம் உருவாக்கிய பிம்பங்களை இந்த சிம்பொனியில் உபயோகப்படுத்தியுள்ளார் சிபேலியஸ். ஒரு நாள் தன் சிறு குறிப்பேட்டுடன் நடைப் பயிற்சிக்குச் சென்றிருந்த சிபேலியஸ் பதினாறு அன்னங்கள் ஒரே போன்றதொரு இறக்கை விரிப்புடன் அந்த ஏரி மீது பறந்த காட்சியைப் பார்த்தார். பல நிமிடங்கள் இந்தக் காட்சியை பார்த்த சிபேலியஸ் அன்னத்தின் பாடல்கள் என அதை வருணித்தார்.

Lake near Sibelius' house
Lake near Sibelius house

‘நான் அன்று பார்த்த பறவைகள் என் நினைவில் தங்கிவிட்டன. என் வாழ்வின் ஜீவாதாரமே அவர்கள் தான். இந்த உலகத்தில் இசை, கலை, இலக்கியம் போன்ற எதுவுமே எனக்கு முக்கியமில்லை. இந்த பறவைகள் காண்பித்த காட்சி, அதன் சத்தம் மட்டுமே போதும்’ – எனத் தன் நாட்குறிப்பில் எழுதியிருந்தார். இந்த பறவைகளின் பயணம், அவற்றின் ஒலிகள் கிளப்பிய எண்ண ஓட்டங்களே இந்த ஐந்தாவது சிம்பொனி.1915களில் வடிவமைக்கப்பட்ட இந்த சிம்பனியில், இசைப் புரட்சி வடிவங்களின் எந்த பாணியிலும் இல்லை. கடிகார முட்கள் போல ஒரே வித சுழற்சியைக் காணும் பறவைகள். அவற்றைப் பற்றிய இசையில் இயக்கவியலின் முதல் பரிணாமங்களை இப்போது இசை விமர்சகர்கள் காண்கிறார்கள்.

ஆறாவது மற்றும் ஏழாவது சிம்பொனி, டாபையோலா (Tapiola) என்ற இசைக் கவிதை மட்டுமே எஞ்சிய நாட்களில் அவர் அமைத்த சில இசை கோப்புகள். அவை மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தன் வாழ்நாளின் கடைசி வரை எட்டாவது சிம்பொனிக்காக உழைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் மனைவின் கூற்றுப்படி, தான் இறப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னாலேயே அந்த கோப்புக்களை எரித்து விட்டதாகவும், அதன் மேல் தனக்கு நம்பிக்கை போய்விட்டதெனவும் கூறியிருக்கிறார்.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்

சிபேலியஸ் Valse Triste எழுதிய 1910ஆம் காலகட்டத்திலேயே குடிப்பழக்கத்திற்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டார். சீராக வெளியான இவர் படைப்புகளில் அதன் தேக்கம் தெரியாவிட்டாலும், இவர் புழங்கி வந்த நட்பு வட்டாரம் இவரை ஒதுக்கத் தொடங்கியது.ஒரே காலகட்டத்தில் மிகத் தெளிவாகவும், அதே நேரத்தில் குழப்பமான மனநிலையிலும் இருந்து வந்ததாக இவரும், இவர் நண்பர்களும் எழுதிய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன்.

ரஷ்ய அரசிடமிருந்து விடுதலை பெற, ஃபின்லாந்து ஜெர்மனியை ஆதரித்தது. 1939 ஆம் ஆண்டு ஹிட்லர் போலந்தை ஆக்கிரமித்து, ஃபின்லாந்தை பகடைக் காயாக மாற்றினார். இதனால், சிபேலியஸ் உட்பட ஃபின்லாந்து மக்கள் , ரஷ்ய ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தால் போதுமென, ஹிட்லரை ஆதரிக்கத் தொடங்கினர். நாஜிப் படைகளை சிபேலியஸ் ஆதரித்தபோது, இசை உலகம் ஸ்தம்பித்தது. பின்னர் தன் நாட்குறிப்புகளில் இதைப் பற்றி குறிப்பிட்டு – `எப்படி ஆர்ய எண்ணங்களுக்கு துணைப் போகிறாய், சிபேலியஸ்? ` என தன் செயல்களையே கடிந்து கொண்டார். அதே சமயம் கழிவிரக்கத்தால் மனம் நொந்து போனார். இவை அனைத்திற்கும் தீர்வாகக் குடிப்பதை மட்டுமே நாடினார்.

இங்குதான் மாஹ்லர், ஸ்ட்ராவின்ஸ்கி போன்ற கலைஞர்களுடன் வேறுபடுகிறார் இவர். மாஹ்லர் தன் எல்லாவித துன்பங்களுக்கும் வடிகாலாக, தன்னுள்ளே இசையைத் தேடி, அதை மெருகேற்றி அனுபந்தம் அடைந்தார். ஸ்ட்ராவின்ஸ்கியோ ரஷ்ய கொடுங்கோலாட்சியில் இசைக்க மாட்டேன் என சபதம் செய்து அதை நிறைவேற்றியும் காட்டினார். சிபேலியஸ்ஸிடம் இந்த இரு குணங்களும் காணப்படவில்லை. அவர் இசையும் சரி, நடத்தையும் எந்தவிதமான அகவய, புறவய எதார்த்தங்களை சந்திக்க முடியாமலேயே இருந்தது.

கலைக்குண்டான குணாதிசயம் – மனித மனங்களை மேன்மைப்படுத்துவது. அந்த உயரிய ஓர் உண்மையை அடையவே தொல்லிசை ஆவணங்களும், இசை அமைப்பாளர்களும் பாடுபட்டனர். உணர்வுமயமான இசைப் பாடல்கள், தெளிவான  கரு முதலியவையே அந்த மேன்மையை உருவாக்க முடியும். மாஹ்லரின் இசையிலும், பாக்கின் இசையிலும் இதைக் கண்டெடுத்த மக்கள் சிபேலியஸ்ஸிடம் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பை ஏமாற்றத்துடனேயே சந்தித்தனர்.

ஆனால் இவர்கள் யாரும் காணாத ஒன்றை சிபேலியஸ் தன் வாழ்நாளில் பார்த்தார். புரட்சிகரமான atonal வகை இசைகள் சிதைந்து போனதையும், மக்களுக்கு மெலடி என்ற அமைப்பின் மேல் திரும்ப வந்த பற்றும் தான் அது. முப்பது வருடங்கள், போர் நடக்கும் போது avant-garde போன்ற புது வடிவ முயற்சிகளை வேடிக்கை மட்டுமே பார்த்த இவர், சாகாத புரட்சியை தன் இசை மூலம் நிரூபித்தார். திரும்பவும் 1940 களின் முடிவிலேயே சிபேலியஸ் அமெரிக்க மற்றும் ஐரோப்பா இசை மேதைகளால் போற்றப்பட்டார். தான் வாழும் காலத்திலேயே போற்றப்படுவதும், மீட்டெடுக்கப்படுவதும் பல இசை மேதைகளுக்கு நடக்காத ஒன்றாகும்

1957 ஆம் ஆண்டு, தன் தொண்ணூற்றி ஒன்றாம் வயதில் இறந்த சிபேலியஸ், தன் சாவை ஆரோக்கியமான மனப்பக்குவத்துடனே எதிர்கொண்டார் – `குடிக்காதே, புகைப்பிடிக்காதே என எனக்கு அறிவுரை செய்த வைத்தியர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை` – என தன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.

Stravinsky lays flowers on Jean Sibelius's grave
Stravinsky lays flowers on Jean Sibelius's grave

மார்டோன் பெல்ட்மேன், 1984 ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள ஒரு பயிற்சிப் பள்ளியில் சிபேலியஸின் ஐந்தாவது சிம்பொனியை இசைப்பதற்கு முன் கூறியது: `தங்களைப் புரட்சியாளர்கள் என அறிவித்தவர்கள் உண்மையிலேயே பழமைவாதிகள், தங்களைப் பழமைவாதிகளாகக் கண்டவர்களின் படைப்புகளே புரட்சிகரமாக உள்ளன`.

One Reply to “ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2”

Comments are closed.