மூலம்: பேராசிரியர் ஆர் வைத்தியநாதன்
(இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை )
மொழியாக்கம் : ஜடாயு
சமீபத்தில் முன்னாள் அமெரிக்க உள்துறைச் செயலர் மேடலைன் அல்பிரைட் பாகிஸ்தானை ”சர்வதேசத் தலைவலி” என்று மிகச் சரியாகவே அழைத்திருக்கிறார். ஆனால் தனது பதவிக்காலம் முடிந்து வெகுநாட்கள் கழித்து அவருக்கு இது தோன்றியிருக்கிறது. அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை, ஆனால் என்ன ரொம்பவே தாமதாகச் சொல்லியிருக்கிறார், அவ்வளவு தான். இவர்கள் எல்லாம் ஜாம்பவானகள், ஓய்வுக் காலத்தில் தான் புத்திவந்து உபதேசம் செய்யத் தொடங்குவார்கள்! (‘war’ veterans, namely ‘wise after retirement’).
அதை விடுங்கள். இப்போது சீனாவுக்குத் தலைவலி அதன் சின்கியாங் (Xingkiang) மாகாணத்திலிருந்து. தனியுரிமை பெற்ற இந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். காரணம் ஹுன் இன சீன மக்களுக்கும் (Hun Chinese – இவர்கள் சீனாவில் பெரும்பான்மையாக உள்ள சீன இனக்குழுவினர்), வீகுர்கள் (Uyghurs) என்கிற, ஒருவகையான சூஃபி இஸ்லாத்தைப் பின்பற்றும், ஆனால் தற்போது அடிப்படைவாத இஸ்லாமுக்குள் வந்துகொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான மோதல்.
வீகுர் என்ற பெயராலும் அழைக்கப் படும் சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த மாகாணம் கனிம வளமும், பெட்ரோலியக் கிணறுகளும் கொண்டது என்பதால் சீன அரசு ஏராளமான தொழிற்சாலைகளை அங்கு அமைத்து வருகிறது. 1950களில் இதன் மக்கள் தொகையில் 70% வீகுர் முஸ்லிம்கள், 30% ஹூன் சீனர்கள். இப்போது இது அப்படியே நேர்மாறாகியிருக்கிறது (70% ஹூன் சீனர்கள், 30% வீகுர் முஸ்லிம்கள்). சீன அரசு ஹுன் சீனர்களை தொடர்ச்சியாக ஊக்குவித்து அங்கு குடியேற்றம் செய்து வந்ததே இதற்குக் காரணம். அந்த மாநிலத்தில் வேறு பற்பல சிறிய இனக்குழுக்களும் உள்ளன. ஆனால், மற்ற அனைத்து இனமக்களும் ஹூன் சீனர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும், எதிரிகளாகவுமே பார்க்கின்றனர்.
முன்பு வீகுர் கிழக்கு துர்கிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்து, “புரட்சி”யின்போது சீனாவுடன் இணைக்கப் பட்டது. அப்போது சீனப் புரட்சி நாயகர் மாவோவைச் சந்தித்து இணைப்பு பற்றிப் பேச்சு வார்த்தை நடத்த கிழக்கு துர்கிஸ்தானிய தலைவர்கள் சீனத் தலைநகர் பீஜிங்குக்குப் புறப்பட்டு வந்ததாகச் சொல்லப் படுகிறது. ஆனால் அவர்கள் வந்த விமானம் “விபத்துக்குள்ளாகி” அத்தனை தலைவர்களும் ஒட்டுமொத்தமாக இறந்து விட்டனர் ! சில உள்ளூர் வீகுர் தலைவர்கள் உடனடியாக இணைப்புக்கு ஆதரவு தெரிவிக்க, வீகுர் சீனாவின் மாகாணமாக இணைந்து விட்டது. சீனாவின் அகராதிப் படியான “தனியுரிமை”யே வழங்க வேண்டி வரும் என்பதால், மிக்க மகிழ்ச்சியுடன் சீனா தனியுரிமைக்கான வீகுர் தலைவர்களின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டது.
கடந்த சில ஆண்டுகளில், வீகுர் இன மக்களிடையே புகைந்து கொண்டிருந்த எதிர்ப்புணர்வு வெளியில் வர ஆரம்பித்திருக்கிறது. “சீனாவை அதற்குரிய இடத்தில் வைப்பதற்கான” அமெரிக்கக் கொள்கையின் ஒரு அங்கமாக அமெரிக்க ஆதரவும் இருப்பதால், வீகுர் மக்கள் கிழக்கு துர்கிஸ்தான் கோரிக்கை பற்றிய பேச்சையும் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் – கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல.
கிளர்ச்சி செய்யும் மாநிலங்களைக் கையாள்வதற்கு, நேர்த்தியான வழிமுறைகளெல்லாம் சீனாவுக்கு வேண்டாம். உடனே படைகளை அனுப்பு, கிளர்ச்சியாளர்களுக்கு பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் என்று பெயரிடு, அவர்களைத் தாக்கி அழி – அதுதான் கொள்கை. வீகுர் பிரசினை அடிப்படையில் ஒரு இனக்குழு பிரசினை என்றும், இஸ்லாமிய மதவெறிக்கும், கம்யூனிச சீனாவுக்கும் இடையேயான மோதல் என்றும் இரண்டு விதமாகவும் சொல்லப் படுகிறது.

உலக இஸ்லாத்தின் ஒளிவிளக்காகத் தன்னைப் பிரகடனம் செய்துகொள்ளும் பாகிஸ்தான், தப்பித் தன் நாட்டிற்கு வரும் வீகுர் முஸ்லிம் தலைவர்களை பத்திரமாகப் பிடித்து சீனாவிடம் ஒப்படைக்கிறது. சீனா பாதுகாப்புடன் அவர்களைத் தூக்கிலிடுகிறது. ஆனால் இதே பாகிஸ்தான் தன் நாட்டிலிருந்து கொண்டு திட்டமிட்டு மும்பையின் மீது பயங்கரத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் விஷயத்தில் ஒன்றுமே செய்யாமல் இருக்கிறது!
ஆரம்பத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஜீன்ஸ் போட்ட ஜிகாதிகள் இதையே தான் சொன்னார்கள்: காஷ்மீரின் எல்லா இனக்குழு சமூகங்களும் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு எதிராகத் திரண்டெழுகின்றனர் என்று. ஆனால் உடனடியாக, அதிவேகமாக காஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாதத்தின், இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தலைமையகமாக ஆனது. சந்தேகமில்லாமல் வீகுர் மாநிலமும் இதே பாதையில் தான் செல்லும்.. அப்போது அது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கும், கம்யூனிச சீனாவுக்கும் இடையேயான போராகவே உருவெடுக்கும்.
வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஹிட்லர் ரஷ்யாவின் மீது படையெடுத்தார், பாசிஸம் ஸ்டாலினிசத்துடன் மோதியது. ஆனால், மேற்குலகம் தப்பியது!
இதை நினைவில் கொள்ளவேண்டும். இந்திய நாடு மற்றும் இந்தியப் பண்பாட்டின் எதிர்காலமே இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும், மாவோயிச சீனாவிற்கும் இடையேயான போரினால் பாதிக்கப் படக் கூடும். ரஷ்யாவிற்கு எதிராக ஜிகாதிகளை வளர்த்து விட்டது போன்றே, அமெரிக்கா இந்தப் போரிலும் ஜிகாதிகளுக்குப் பண உதவி செய்யும், அவர்களை வளர்த்து விடும். இந்தியாவின் உள்ளூர் இடதுகள் (இவர்கள் இப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக காண்டீனில் மட்டுமே பிழைத்திருப்பதாக சொல்லப் படுகிறது) திடீரென்று இஸ்லாமியத் தீவிரவாதம் எப்பேற்பட்ட மனித விரோத சக்தி என்பதை உணர்வார்கள். ஹிட்லர் ரஷ்யாவைத் தாக்கிய போது, சர்வாதிகாரத்திற்கான போர் தடாலடியாக “மக்கள் யுத்தமாக” ஆகி விடவில்லையா, அந்த மாதிரி! பாகிஸ்தான் ராணுவம் அதர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்ளும் – ஒரு பக்கம் “நிரந்தர நண்பன்” சீனா, இன்னொரு பக்கம் உலக இஸ்லாமிய உம்மா. வீகுர் பிரச்சினையின் விளைவாக, காஷ்மீர் பற்றிய சீனாவின் நிலைப் பாட்டில் அதிர்ச்சிகரமான மாற்றங்கள் வந்தால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை.
உள்ளூர் செங்கொடிக்காரர்களிடமும் இதனால் பயங்கர மாறுதல்கள் வரும். இந்தியா இதில் ”இரட்டை ஆட்டம்” (டபுள் கேம்) ஆடுவது தான் சாலச் சிறந்தது. ஒருபுறம், இந்தியா வீகுர்களின் போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டும், மறுபுறம் சீனாவின் ஆதர்சத்தைப் பின்பற்றி, உ.பி, பீகார் மாநிலங்களிலிருந்து ஏராளமான குடியானவர்களக் கொண்டு சென்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியமர்த்த வேண்டும். துருக்கியுடனும், “ஸ்தான்” என்று முடியும் எல்லா *மத்திய* ஆசிய நாடுகளுடனும் இந்தியா ஒரு குழுவாக இணைந்து கிழக்கு துர்கிஸ்தானையும், அதன் சூஃபி இஸ்லாமிய மரபுகளையும் ஆதரிக்க வேண்டும். சீனாவின் வடக்குப் பகுதியில் மங்கோல் இன மக்கள் மூலமாக சீனாவிற்குள் பிரசினை உருவாக்கவும் இந்தியா முயற்சி செய்ய வேண்டும். இதனால் சீனா தெற்கு (திபெத்), மேற்கு (வீகுர்), வடக்கு (மங்கோல்கள்) என்று எல்லாப் பக்கங்களிலும் பிளவு சக்திகளை எதிர்கொள்ள நேரிடும்.
அமெரிக்கா தாலிபான்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்து, பாகிஸ்தானை அவர்கள் கையில் கொடுத்து “ஜமாய் ஜிகாதி” என்று சீனாவுக்கு எதிராகத் திருப்பாத வரை, சின்கியாங் மாகாணத்தில் எந்த அளவு நிலைமை தீவிரமடைகிறதோ, அந்த அளவு இந்தியாவுக்கு நல்லது. முன்பு சொன்னது நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. மற்ற நாடுகளைப் பொருத்த வரையில் அவை ”உபயோகித்து விட்டு கடாசுவதற்காகவே” உள்ளன என்பதே அமெரிக்காவின் தெளிவான கொள்கை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
காண்டம்கள் மாதிரி அல்ல, டாய்லெட் பேப்பர்கள் மாதிரி. ஏனென்றால், முதலில் சொன்னவை உபயோகிப்பதற்கு முன்பு நல்லவிதமாகவே கையாளப் படும். ஆனால் இரண்டாவது வகை சமாசாரங்கள் உபயோகத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி மோசமாகவே கையாளப் படும். தாலிபான் பாகிஸ்தானை ஆண்டால் என்ன, ஆப்கானிஸ்தானை ஆண்டால் என்ன அமெரிக்காவுக்கு எந்தக் கவலையும் இல்லை, தன் மீது பயங்கரவாதத் தாக்குதல் நிகழாமல் இருக்கவேண்டும் என்பது ஒன்றே அதற்குக் குறி.
எது எப்படியானாலும், இன்றைக்கு பாகிஸ்தான் என்று அறியப் படும் ஜந்து இன்னும் சில வருடங்களில் இல்லாமல் போகும் என்பது மட்டும் நிச்சயம். ஏனென்றால் இருபக்கமும் அடி வாங்கும் மத்தளத்தில் நிலையில் தான் அது இருக்கும் – ஒரு பக்கம் சீனா, இன்னொரு பக்கம் அமெரிக்க ஆதரவு பெற்ற, ”தூய” (அல்லது ”தீய”) தாலிபான்கள். இன்றைக்கு இருக்கும் பாகிஸ்தான் திடீரென்று காணாமல் போகும்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு ஜீன்ஸ் ஜிகாதிகளுக்கும் திடீரென்று ஞானோதயம் வரலாம் – “ஆஜாதியை (விடுதலை) விட ஜீன்ஸைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியம்” என்று.
ஒரே ஒரு எதிர்மறையான சாத்தியம் என்னவென்றால் அமெரிக்கா பாகிஸ்தானோடு சேர்த்து காஷ்மீர்ப் பள்ளத்தாக்கையும் தாலிபான்கள் கையில் கொடுக்க முற்படலாம்.. ஆனால், அப்படி ஒரு நிலை வந்தால், நாம் சீனாவோடு சேர்ந்து கொண்டு, நம் இரு தேசங்களையும் பிளக்க முற்படும் சக்திகளை ஒரே போடாகப் போட்டுத் தாக்கலாம்.
எப்படியோ, சீனாவின் தலைவலி, காஷ்மீர் விஷயத்தில் நமக்கு ஒரு நிவாரணி தான் என்பதில் சந்தேகமில்லை.
[கட்டுரை ஆசிரியர் ஆர். வைத்தியநாதன் பெங்களூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM – Indian Institute of Management) நிதி நிர்வாகத் துறைப் பேராசிரியர். இங்கு குறிப்பிடப் பட்டவை அவரது சொந்தக் கருத்துக்கள், நிறுவனத்தினுடையவை அல்ல].
One Reply to “சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?”
Comments are closed.