கனவுகளின் நிதர்சனங்கள்

புத்துலகம் குறித்தான கனவுகளும் முயற்சிகளும் மனித குல வரலாறெங்கும் நிகழ்ந்திருக்கின்றன. சில முயற்சிகள் வெற்றிக்கும், சில முயற்சிகள் தோல்விக்கும் இட்டுச் சென்றிருக்கின்றன. வள விநியோகம், அதிகாரப் பகிர்வு போன்றவை இந்த புதிய முயற்சிகளின் அடிநாதமாக அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலானவை, அந்நோக்கங்களின் எதிர்மறைப் புள்ளியை சென்றடைவது வரலாற்றின் ஆகப்பெரும் முரண்நகை. நடைமுறையில் இருக்கும் அமைப்புகளை எதிர்த்தும், சமூகத்தின் மதிப்பீடுகளை எதிர்த்தும் துவங்கப்படும் இம்முயற்சிகள் மீண்டும் மீண்டும் முந்தைய அமைப்பின் வடிவத்தையும், செயல்பாடுகளையுமே வந்தடைந்துவிடுகின்றன. மன்னராட்சி, தொழில் புரட்சி, கம்யூனிஸம், உலகமயமாக்கம்… என்று, போதும் போதும் எனும் அளவிற்கு காலம் தன் வரலாற்றை நம்முன் விரித்தபடியே உள்ளது. இவ்வனைத்து அமைப்புகளுக்கும் பொதுவான தன்மை ஒன்று உண்டு. இவ்வமைப்புகள் யாவும் ஒரு குறிப்பிட்ட சாரரை எந்த அதிகாரமும் இல்லா வெறும் பார்வையாளர்களாக மாற்றிவிடுகின்றன. ஆட்டத்தின் அனைத்து சீட்டுகளும் அதிகார(பொருளாதார & அரசியல்) மையங்களிடம் மட்டுமே இருக்கும். வெகுஜன மக்களிடம் எந்த சீட்டும் இருப்பதில்லை. இந்த ஆட்டங்களால் அவர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் எப்போதைக்குமான பார்வையாளர்கள் மட்டுமே.

bremmer_base
Courtesy : foreignaffairs.com

சென்ற சில பத்தாண்டுகளாக கோலோச்சி வந்த உலகமயமாக்க முதலியம்(Capitalism), தேச எல்லைகளைக் கடந்து சுதந்திரமாக இயங்கினாலும், ஒவ்வொரு நாட்டின் அரசியல் சூழலுக்கு தகுந்தவாறே தனது செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. முதலிய அமைப்புகளின் திட்டங்களும், வழிமுறைகளும் அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, எல்லா வகையிலும் அந்நாட்டு அரசு வகுத்த முறைமைகளை ஒட்டியே நடந்து கொள்ளவேண்டிய சூழலில் இருந்தன.

1960-களை தொடர்ந்த காலக்கட்டங்களில், இவ்வமைப்புகள், சமூகத்தின் அனைத்து தளங்களையும், அரசு/கலாச்சார பிடியிலிருந்து விடுவித்து, தன் செயல்பாடுகளுக்கான சட்ட திட்டங்களையும் தாமே நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெறும் புது வழிமுறையை முன்வைத்தன. அந்த வழிமுறை, புது-சுதந்திரவாதம்(Neoliberalism) என இன்று அறியப்படுகிறது. புது-சுதந்திரவாதம் எனும் இவ்வழிமுறை ஒரு தனிநபரின் செயல்பாடுகளுக்கான முழு சுதந்திரத்தை முன்வைக்கும் ஒரு கருத்தியல். இக்கருத்தியல் அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு அமைப்பில், ஒரு அரசின் கட்டுபாடுகளுக்கு அடிபணிய அவசியமில்லாத, குறிப்பாக அதன் பொருளாதார/அரசியல் கொள்கைகளுக்கு செவிசாய்க்காது தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய சுதந்திரத்தை இந்த அமைப்புகள் பெறும் வழியே புது-சுதந்திரவாதம். இவ்வழியில் சமூகத்தின் எந்தவிதப் பிரச்சினையிலும் ஒரு அரசின் செயல்பாடு என்பது மற்றுமொரு பிரச்சினையாகவே கருதப்படும். தனக்கான அறத்தையும் மதிப்பீடுகளையும் தான் இயங்கும் சமூகத்திலிருந்து  பெறாமல், தன்னளவிலேயே அறம் மிகுந்ததும், தன்னளவிலேயே தனக்கான மதிப்பீடுகள் கொண்டதாகவும், அதே சமயம் ஒட்டுமொத்த மனித குலத்தையும் வழிநடத்தக்கூடியதாகவும், முந்தைய சமூகத்தின் அறம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு மாற்றாகவும் தன்னை அறிவித்துக் கொண்டது இந்தப் பார்வை. ”அரசாங்கங்களைப் புறக்கணிப்போம்” என்பதே இவ்வழியின் நோக்கு. இந்த அடிப்படையில், மக்களின் அடிப்படைத் தேவைகள் யாவும், சுகாதாரம், உணவு, பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, தொலைத் தொடர்பு,பொருளாதாரம், போன்ற யாவும் தனியார் துறையினரின் கைகளில் எஞ்சும். இதன் மூலம், மனித குல முழுமையையும் தனியார் அமைப்புகள் சென்றடைந்து, அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்று இந்தக் கருத்தியல் சொல்கிறது.

புது-சுதந்திரவாதம் விமர்சனங்களையும் சந்தித்தது. எந்தவித கட்டுபாடுமில்லாமல் தாம் விரும்பிய பொருட்களைத் தயாரிக்கவும், நுகர்வதுமான இப்போக்கு, சமூகத்தின் அறம்/நீதி/உறவுகள் அனைத்தையும், பொருளாதார அடிப்படையில் மட்டுமே நிர்ணயித்து, சமூகத்தை பெரும் வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்று விமர்சிக்கப்பட்டது. மேலும், போலியான சந்தோஷத்தையும், அதே சமயம், தன்னுள் வெறுமையை மட்டுமே கொண்ட சமூகத்தை கட்டமைக்கும் என்றும் விமர்சிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரமான நதியை, ஒரு தனி நபரின் தொழிற்சாலையின் கழிவுகள் மாசுபடுத்தும் பட்சத்தில், அந்த நதியில் இறக்கும் மீன்களுக்கான தொகையைத் திருப்பித்தருவதினால் கணக்கை நேர் செய்துவிடலாம் என அறிவிக்கும் இவ்வமைப்பு இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வதில் எந்த ஆச்சரியமுமில்லை தான். ஏனெனில், ஆட்டத்தின் அனைத்து சீட்டுகளையும் ஒருவர் மட்டுமே வைத்துக்கொள்ளும் ஒரு அமைப்பின் இந்த விளையாட்டில் பணயம் வைக்கப்படும் யாவும் முக்கியமானவை.

—oo000oo—

state_capitalismஉலகெங்கும் நிலவும் பொருளாதாரத் தேக்க நிலை, தனியார் நிறுவனங்களை அரசின் ஆதரவுடன் மட்டுமே மீண்டெழமுடியும் எனும் முரணான சிக்கலில் தள்ளிவிட்டது. பல்வேறு அரசுகளும் தத்தம் நாடுகளின் நலிவடைந்துள்ள தனியார் நிறுவனங்களை தக்க பொருளாதார உதவியுடன் மீண்டெழ உதவிபுரிகின்றன. ஆனால், இந்நிகழ்வு, அடுத்த புதிய அரசியல்/பொருளாதார யுகத்தின் திறப்பை கொண்டதாக கருதுகிறார் இயன் பிரெமர்(Ian Bremmer).

சென்ற சில ஆண்டுகளாக, தற்போதைய சுதந்திர சந்தைப் பொருளாதாரம் (free-market economy)  முற்றிலும் சிதைந்து விடும் முன்பே, ஒரு புதிய போக்கு தோன்றியுள்ளது. அரசு-முதலியம்(State Capitalism). அரசு-முதலியம் எனும் இந்த பொருளாதார அமைப்பில் அரசாங்கம் தன் நாட்டின் பொருளாதார சந்தையின் முக்கிய சக்தியாக செயல்பட்டு, வணிகச் செயல்பாடுகளை தனக்கு சாதகமான முறையில் வளைத்து, அதன் மூலம் தனக்கு சாதகமான அரசியல் சூழ்நிலைகளை உருவாக்க முயலும். உதாரணம் : சீனா, ரஷ்யா, வியத்நாம், வெனசுவெலா, (ஓரளவுக்கு) பிரேசில், மற்றும் பல எண்ணெய் வளமுள்ள அரபிய நாடுகள், அனைத்து அரசாங்கங்களும் இப்புதிய அமைப்பை மனமுவந்து ஏற்கக் காரணம், இதன் மூலம் ஒரே சமயத்தில் இரட்டைத் தேவைகளை அடைந்துவிட முடியும். ஒன்று, பொருளாதாரத் தேவை, இரண்டு, அரசியல் தேவை. மேலும், இந்தியா போன்றதொரு நாட்டின் பரந்து விரிந்துள்ள வளங்கள் யாவும் ஒரு சில அரசு அதிகாரிகளின் கையில் சென்றடைவதன் மூலம், அவர்களின் அரசியல் மூலதனங்கள் எப்போதைக்குமாக எந்த வித சேதமுமில்லாமல் பாதுகாக்கப்படும்.

மேலும், சந்தையின் செயல்பாடுகளை கட்டுபடுத்துவதன் மூலம், உள்நாட்டில் மட்டுமன்றி, உலக அரங்கிலும் ஒரு அரசு பிற நாடுகள் மேல் தன்னுடைய நேரடி அதிகாரத்தை செலுத்த முடியும். ஒரு நாட்டின் மீதான யுத்தம் என்பது உயர்-தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களால் நடைபெறாமல், பொருளாதார அளவில் மட்டுமே நடைபெறும் சாத்தியம் மிக அதிகம். நேரடியாகவும் மறைமுகமாகவும் வேறொரு நாட்டின் நீண்ட கால/குறுகிய கால நடவடிக்கைகளை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும். காலனிய நடவடிக்கைகள் மீண்டும் புதிய போர்வையில் நடைபெறும். பல ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் செயல்பாடுகளே இந்த வாதங்களுக்கு அத்தாட்சி. தன்னுடைய முதலீடுகளின் மூலம் அந்நாடுகளின் பெருமளவு பொருளாதாரத்தை சீனா கட்டுப்படுத்துகிறது. சீனாவின் அரசியல் முடிவுகளை ஒட்டியே தன்னுடைய திட்டங்களை வகுத்துக் கொள்ளவேண்டிய நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன.

அரசியல் அதிகாரத்தையும், பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் ஒரு அமைப்புக்கே வழங்கிவிடும் இந்தப் பாதை, ஒரு பாசிச-சோசியலிச அமைப்பாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகளைத் தன்னளவில் கொண்டிருப்பதாக கருத முடிந்தாலும், இயன் பிரெமர் அதை திட்டவட்டமாக மறுக்கிறார். இவ்வமைப்பின் நோக்கம், நீண்ட கால அரசியல்-ஆதாயங்களை மனதில் வைத்து, வணிக செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதே என்கிறார். மேலும் எந்த ஒரு பாசிச-சோசியலிச அமைப்பிற்கான கொள்கையை முன்னிருத்தும் பாரத்துடனும், எந்த ஒரு தனி-நபரின் குறு-மதமாகவும் இது செயல்படாது என்றும் கூறுகிறார். மேலும், தற்போது நிலவும் சுதந்திர-சந்தை பொருளாதாரத்தையும் இது எந்தவிதத்திலும் முற்றிலுமாக அழித்துவிடாது என்றே கருதுகிறார். ஆனால் ஒரு வகையில், இத்தகைய செயல்பாடுகளால், உலகமயமாக்கத்தின் வளர்ச்சியும் பெருமளவு பாதிக்கப்படும் எனக் கூறுகிறார். ஏனெனில், இவ்வமைப்பு பல்வேறு நாட்டைச் சேர்ந்த மக்களிடையே நிலவும் பலதரப்பட்ட பரிமாற்றங்களை (தகவல், பணம், பொருள், சேவை) பெருமளவு மட்டுப்படுத்தும்.

தற்போதைய பொருளாதாரத் தேக்கம், சுதந்திர சந்தை மீதான நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிடவில்லை. இருந்தபோதும், தற்போதைய பொருளாதார அமைப்பில் நிலவும் நிலையற்ற தன்மையையும், அதன் விளைவாக எழக்கூடிய உயர்-அபாயத்தைக்(high-risk) கையாளவும், அரசின் பங்கெடுப்பு அவசியம். இத்தகைய சூழல் அரசு-முதலியத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தியுள்ளது.

—oo000oo—

இந்த இரு அமைப்புகளுக்கும் பல பொது அம்சங்கள் இருப்பது மிகத் தெளிவான ஒன்று . இந்தியா போன்ற ஊழல் நிரம்பிய வளரும் நாடுகளில், லஞ்ச/ஊழலிருந்து பெருமளவு விலகியிருப்பது தனியார் நிறுவனங்களே. அரசு-முதலியம் இதையும் மாற்றியமைத்துவிடும் என்றே எண்ணுகிறேன். சீன அதிகார வர்க்கத்தின் தனிமனித சுரண்டல்களும், அதன் மீது இன்றளவில் உள்ள ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும் இதற்கான முன்னறிவிப்பே. கல்வித் தகுதி ஒன்றை மட்டும் முன்னிருத்தி வேலை வாய்ப்புகள் வழங்கும் தற்போதைய தனியார் நிறுவனங்கள், பல்வேறு அடையாள மற்றும் வரலாற்று வழி அரசியல்களின் யுத்தகளமாக மாற்றப்படும். அரசாங்கமும் பொருளாதாரமும், ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றினால் ஒட்டு மொத்த சமூகத்திலும், தனிமனித அளவிலும் முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தும் நோக்கம் கொண்டவையாகவே இருக்க முடியும். ஆனால், இந்தப் புதுப்பாதையான அரசு-முதலியத்தில் இரு அமைப்புகளும், பொதுமக்களால் எந்த வழியிலும் தட்டிக் கேட்கப்பட முடியாத ஒரு சிறுபான்மைக் குழுவிடம் மொத்த அதிகாரத்தைக் குவித்துவிடுகின்றன. இத்தகைய அதிகாரக் குவிப்பு, ஜனநாயகம் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் வெகுஜன மக்களிடம் இருக்கும் ஒரு சில அதிகாரங்களையும் பெருமளவு கட்டுப்படுத்தும் என்றே கருதுகிறேன். தமது அன்றாட நடவடிக்கைகள் தவிர வேறெதை குறித்தும் கவலைப்பட நேரமும், ஊக்கமுமில்லாத இந்திய ஜனத் திரள் தன்னிடம் இருக்கும் ஓரளவு உரிமையும் மெல்ல மெல்ல பறிக்கப்படுவதை குறித்தும் கவலைப்படப் போவதில்லை. உயிருள்ள தவளையை பாத்திரத்து நீரில் வைத்து மெல்ல மெல்ல சூடாக்கும் தந்திரம் போன்றது இது.

பரிந்துரை : http://www.mckinseyquarterly.com/Strategy/Globalization/State_capitalism_and_the_crisis_2403