அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – ஓர் அறிமுகம் – பகுதி 1

“What would happen to the world without those who do, think, work, produce?”

அய்ன் ராண்ட்
அய்ன் ராண்ட்

தமிழில் அய்ன் ராண்ட் குறித்த பார்வைகள் அவ்வளவாக இல்லை என்ற ஜெயமோகனின் கட்டுரை வாக்கியம் இந்த கட்டுரைத் தொடருக்கு உந்து சக்தியாக அமைந்தது. அவருக்கு நன்றிகள். இது ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையல்ல. அய்ன் ராண்டின் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதத்தைப் பற்றிய அறிமுகத்தை தோற்றுவித்தலே இந்த கட்டுரைத் தொடரின் நோக்கமாக அமையும்.

தத்துவங்களும் சித்தாந்தங்களும் நாவல்கள் வாயிலாகவும் பிற கலை வடிவங்களின் வாயிலாகவும் முன் வைக்கப்படுவதை நாம் காலம் காலமாக பார்த்து வருகிறோம். அப்படி முன் வைத்தல் ஒரு வகையில் நல்ல உத்தி என்று நான் சொல்வேன். எதையும் ஒரு கதாபாத்திரத்தின் மூலமாகவோ வினையின் மூலமாகவோ சம்பவத்தின் மூலமாக எளிதாகப் புரியவைத்து விடலாம். அப்படியே அய்ன் ராண்டின் நாவல்கள் புறவயவாதத்தை அணுக ஏதுவாக அமைகின்றன.

மனிதர்களை ஒரு பொதுவான தளத்தில் வைத்து எடை போடும் போது இரண்டு நிலையினராக பிரிக்க முடியும். அறிவு சார்ந்து இயங்குபவர்கள், உணர்வு சார்ந்து இயங்குபவர்கள். பெரும்பாலும் நாம் அனைவருமே இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு விகிதாசாரங்களில் இயங்குகிறோம். இதில் புறவயவாதிகள் முழுமையான அறிவு சார்ந்த இயக்கத்துக்கு சொந்தக்காரர்கள்.

அய்ன் ராண்டின் முக்கியமான நாவல்களாக கருதப்படும் Fountain Head மற்றும் Atlas shrugged இரண்டிலும் நாயகர்கள் புறவயவாதிகள். இவர்களின் மூலம் தனது தத்துவத்தை நிறுவ முயற்சிக்கிறார் அய்ன் ராண்ட். இவர்களின் நாயகர்களுள் Fountain Head-இன் நாயகன் Howard Roark புறவயவாதத்தின் மனித வடிவம் என்று சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாத்திரம். அய்ன் ராண்டின் நாவல்களில் பொதுவான அம்சங்கள் என்று சில விஷயங்கள் இருக்கும் – உலகத்தின் இயக்கத்தை முன்னின்று நடத்திச் செல்லும் அமைப்புகளும் சித்தாந்தங்களும் எவ்வகையானவை என்ற பார்வை புறவயவாதியின் கோணத்திலிருந்து சொல்லப்படும். பிறகு அந்த அமைப்புகளையும் சித்தாந்தங்களையும் முற்றிலும் மறுதலிப்பவனாக அசாத்திய மன வலிமையுடனும் ஆற்றலுடனும் விளங்கும் ஒரு நாயகன் தோன்றுவான். அந்த நாயகன், அமைப்புகளை புறந்ததள்ளுவதுடன் அவற்றை எதிர்த்து ஒரு போர் நிலையிலிருந்து செயலாற்றத் துவங்குவான். பின்னர், கடைசியில் போராட்டத்தில் வெற்றி பெற்று உலகத்தின் இயக்கத்தை காப்பாற்றுபவனாக ஸ்தாபிக்கப்படுவான். அவன் சார்ந்த புறவயவாதம் வென்றதாக நிறுவப்படும். நாவலின் இறுதியில் கதாநாயகன் தன் மௌனத்தைக் கலைத்து தன் செயல்களுக்கான காரணங்களை அறிவின் துணை கொண்டு நிறுவுவான் – அந்த உரைகள் பெரும்பாலும் புறவயவாதத் தத்துவத்தின் பொழிப்புரைகள் என்று கொள்ளலாம்.

அய்ன் ராண்டின் நாவல்களில் நாம் காணும் புறவயவாதிகளின் குணங்களைக் கொண்டே புறவயவாதத்தை அணுக முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு சில குணங்கள் இருக்கும்.

“Howard Roark built a temple to the human spirit. He saw man as strong, proud, clean, wise and fearless. He saw man as a heroic being. And he built a temple for that. A temple is a place where man is to experience exaltation? He thought that exaltation comes from the consciousness of being guiltless, of seeing the truth and achieving it, of living up to one’s highest possibility, of knowing no shame and having no cause for shame, of being able to stand naked in full sunlight. He thought that exaltation means joy and that joy is man’s birthright. He though that a place built as a setting for man is a sacred place. That is what Howard Roark thought of man and exaltation.”

— Dominique Francon in Fountain Head

 • அறிவு சார்ந்து மட்டுமே இயங்குபவர்கள்.
 • பொது புத்திக்கோ, அமைப்புகளுக்கோ, சமுக விதிகளுக்கோ கட்டுப்படாதவர்கள்.
 • பந்த பாசங்களுக்கு அப்பார்பட்டவர்களாக அவர்கள் மனம் அறிந்த உண்மையை மட்டுமே சார்ந்து இருப்பவர்கள்.
 • அசாத்திய துணிவு கொண்டவர்கள் – போராளிகள்.
 • குழப்பமில்லாத முடிவு எடுக்கக் கூடியவர்கள் – அவர்கள் தங்களுக்காக யாரையும் முடிவெடுக்க சொல்வதுமில்லை; பிறருக்கான முடிவுகளை அவர்கள் எடுப்பதுமில்லை.
 • இரண்டாம் தர வாழ்வு நிலைகளுக்குத் தன்னை எப்போது தள்ளிக் கொள்ளாதவர்கள்.
 • பிறரது உழைப்பை/ உணர்வைத் திருடி வாழும் நிலையையும் வாழ்பவர்களையும் முற்றிலுமாக நிராகரிப்பவர்கள்.
 • அகவயப்பட்டவர்கள்- தன்னில் நிறைந்தவர்கள்.
 • முதலாளிகள்- பணம் என்பது அவர்களுக்குக் கெட்ட வார்த்தை கிடையாது.
 • செயல் வீரர்கள் – செயலால் விளையும் பதவியும் பணமும் அவர்களின் இலக்கு கிடையாது. தனக்குத் தேவையான மகிழ்ச்சியை செயலாற்றுவதன் மூலமே அடைந்து விடுபவர்கள்.
 • மரியாதை, நட்பு, உதவி என்பவை சம்பாதிக்கப்படுவன என்று கருதுபவர்கள் – யாருக்கும் எளிதில் கொடுப்பதுமில்லை எதிர்பார்ப்பதுமில்லை.
 • மதத்தில் போதிக்கப்படும் சரணாகதி, கேள்வி கேட்காத விசுவாசம் போன்றவைகளை எதிர்ப்பதால் – மதத்தின் மூலம் முன் நிறுத்தப்படும் இறையருள் தத்துவத்தை பின்பற்றாதவர்கள். மதம் என்பது இவர்களைப் பொருத்தவரை ஒரு தத்துவமே.

புறவயவாதிகள் முன்னிறுத்தும் இரண்டாம் தர வாழ்வு நிலைகளில் வாழ்பவர்கள் என்று பகுக்கப்படுபவர்களின் குணாதிசயங்கள்:

“We are poisoned by the superstition of the ego. We cannot know what will be right or wrong in a selfless society not what we’ll feel, not in what manner. We must destroy the ego first. That is why the mind is so unreliable. We must not think. We must believe. Believe, Katie, even if your mind objects. Don’t think, Believe. Trust your heart, not your Brain. Don’t think. Feel. Believe.”

— Ellsworth Thoohey in Fountain Head

 • உண்மையல்ல – உண்மை போன்ற தோற்றமே அவர்களுக்கு முக்கியமானது.
 • மனிதனாக பிறந்தவன் பிற மனிதனின் மேல் கட்டுபாடற்ற அன்பையும் ஆதரவையும் பொழிய வேண்டும் என்று நினைப்பவர்கள்.
 • தனது வாழ்வை தன்னைச் சுற்றியிருப்பவர்கள் சார்ந்தே அமைத்துக் கொள்பவர்கள்.
 • மனிதன் என்பவன் ஆற்றலற்றவன் என்றும் மன்னித்தலும் மன்னிக்கப்படுதலுமே மனிதனின் மிக உயரிய குணங்கள் என்றும் கருதுபவர்கள் – சோம்பேறிகளையும் துரோகிகளையும் ஊழல்காரர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லர்.
 • தொடர்ச்சியாக ஒரே மாதிரியாகச் செய்ய வேண்டிய பணிகள் இருந்தாலும் (எந்த விதமான படைப்புத் திறனும் தேவைப்படாத செயல்கள் – தனக்கு சொல்லித்தரப்பட்ட செயல்களை அவ்வகையிலேயே செய்பவர்கள்) அதைச் செய்வதில் அவர்களுக்கு அப்படி ஒன்றும் அசதி தோன்றிவிடாது.
 • சமுகம் விதித்திருக்கும் கட்டுபாடுகளையும் சட்ட திட்டங்களையும் கேள்வி கேட்காமல் மதித்து அதன் படி செயல்படுபவர்கள்.  ஆள்பவன் வலிமையானவன் – நம்மால் என்ன செய்ய முடியும், நம் விதியை நொந்து கொள்வதைத் தவிர என்ற மன போக்கு உடையவர்கள்.
 • அறிவு சார்ந்த இயக்கமாக இந்த உலக வாழ்வு மாறிவிட்டால், கருணை, பாசம், கொடை, அன்பு ஆகிய விலைமதிக்க முடியாத உணர்வுகள் முற்றிலுமாக அழிந்து விடும் என்று பதறுபவர்கள்.
 • தியாகிகள் – கருணைக்காக நீதியையும், கடமைக்காக மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்திற்காக தனி மனித சுதந்திரத்தையும், நம்பிக்கைக்காக அறிவையும், பிறரின் தேவைக்காக செலவத்தையும் தியாகம் செய்பவர்கள்.
 • அறிவு என்பது அழிவைத் தேடி தரும் சாதனம் என்று நினைப்பவர்கள்- ஆனால் அந்த அறிவினால் விளைந்த நன்மைகளை சுவீகரிக்க எந்த வகையிலும் தயங்காதவர்கள்.
 • படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை சமுக நன்மைக்காக, மக்களுக்காக அர்பணிப்பதிலேயே படைப்பூக்கம் பெற முடியும் என்று நம்புபவர்கள் – அப்படி செய்யாதவர்கள் தங்கள் சுயநலத்தால் சமுகத்தை சீரழிப்பவர்கள் என்று ஸ்தாபிப்பவர்கள்.
 • மேற் சொன்ன வகையிலேயே சமுகமும் செயல் பட வேண்டும் என்றும் நினைப்பவர்கள்.

அய்ன் ராண்டின் நாவல்கள், மேலே சொன்ன குணங்கள் கொண்ட இரண்டாம் தர மனிதர்களால் நடத்தப்படும் சமுகம் அறிவாளிகளை எப்படி கருணையின் பெயரால், மதத்தின் பெயரால், சகோதரத்துவத்தின் பெயரால், தியாகத்தின் பெயரால் அடிமைப்படுத்த முயற்சிக்கிறது என்று பறை சாற்றுகின்றன. அவ்வகை சமுகத்தில் செயல்வீரர்களையும், சுய சிந்தனையாளர்களையும், தன் கட்டை விரலுக்கு அடியில் வைத்து அழுத்தும் பொருட்டு இரண்டாம் தர மக்களால் ஆன அதிகார மையம் படைப்பாளிகளின் படைப்பின் பயன் வெகுஜன மக்களுக்குக் கிடைக்க உதவுவது போன்ற ஒரு மாயத்திரையை உண்டாக்கி படைப்பாளிகளிடமிருந்து அவர்களின் உழைப்பை, திறமையை, கலையைத் திருடுகின்றது. படைப்பிலக்கியங்கள் தேசிய மயமாக்குதலுக்கு மேற் கொள்ளப்படும் முயற்சிகள் என்னைப் பொறுத்தவரை இவ்வகையிலானவையே.

ayn-rand-quoteஅறிவாளிகளும், திறமையானவர்களும், அறிவற்றவர்களையும் திறமையற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை எப்படி காலம் காலமாக அறிவாளிகளின் மேல் திணிக்கப்படுகின்றது என்ற கோபக்குரல் அய்ன் ராண்டின் நாவல்கள் அனைத்திலும் ஒலிக்கின்றது. அந்நாவல்கள் மனிதன் என்பவன் யார் என்று விளக்க முற்படுவதில்லை. மனிதன் எப்படிப்பட்டவனாக இருக்க முடியும், இருக்க வேண்டும் என்றே உரக்கச் சொல்கின்றன.

தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் குரு திரைப்படத்தை நான் ஒரு Objectivist திரைப்படம் என்று சொல்வேன். சில சமயம் அந்தக் கடைசி கோர்ட் சீன் Fountain Headஇல் ரோர்க் கடைசியில் பேசும் காட்சியை மனதில் வைத்து செய்யப்பட்டதோ என்று கூட தோன்றும். அய்ன் ராண்டின் Fountain Head மற்றும் Atlas Shrugged-ஐ கையில் வைத்துக் கொண்டு அதன் மூலம் புறவயவாதத்தை நாம் கண்டடைய முயற்சிக்கலாம். தமிழில் மொழி பெயர்க்கப் பட வேண்டிய அதி முக்கிய நூல்கள் பட்டியலில் நான் இந்த இரண்டு நாவல்களையும் சொல்வேன். இனி பின் வரும் பகுதிகளில் புறவயவாதம் முன் வைக்கும் சில அம்சங்களைப் பார்க்கலாம்.

3 Replies to “அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – ஓர் அறிமுகம் – பகுதி 1”

Comments are closed.