வன்முறையின் வித்து – இறுதிப்பகுதி

சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் வன்முறையாளர்களான ஸ்டாலின், மாஓ இருவருக்கிடையேயான இணைத்தன்மையைக் குறித்து Jung Chang(JC), Jon Halliday(JH) மற்றும் Simon Sebag Montefiore(SSM) ஆகியோர் நடத்திய உரையாடலின் மொழிபெயர்ப்பு இது. மூன்று பகுதிகளாக வெளிவந்த தொடரின் இறுதிப்பகுதி இது.

ஆங்கில மூலத்தை இங்கே படிக்கலாம்.

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2

SSM: ஸ்டாலினின் ஆட்சியில் முற்றிலும் மன்னிக்கப்படாத விஷயம் என்னவெனில், ஸ்டாலின் பொது மக்களுடன் அமர்ந்திருக்கும் போது, அவர்களில் எவரேனும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டதாகச் சொல்வதோ, அவர்களை விடுவிக்கக் கோருவதோ, அவர்களை மரணத்திற்க்கே இட்டுச் செல்லும். ஏனெனில் அது ஸ்டாலின் ஓய்வெடுக்கும் தருணம். மேலும், தனது ஆட்சியில் நிகழும் எந்த நிகழ்விற்க்கும், எந்தக் கசப்புணர்வையும் மக்கள் வெளிப்படுத்துவதை அவர் ஏற்கவில்லை. Kavtaradze என்பவரின் மனைவியை ஸ்டாலின் சந்தித்த தருணம் குறிப்பிடத் தகுந்தது. Kavtaradze-யின் மனைவி மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரண வாசலை நெருங்கிவிட்டவர்.

ஸ்டாலின் - ஹிட்லர் - மாஓ
ஸ்டாலின் - ஹிட்லர் - மாஓ

மேலும் அவரது கணவரும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். இப்படிப்பட்டச் சூழலில், ஸ்டாலின் அவரை சந்தித்தார். “நீங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டீர்களா?”, என்று ஸ்டாலின் அந்தப் பெண்மணியை வினவினார்.  அவர் “ஆம்” என்றார். ஸ்டாலின், “சரி, இப்போதெல்லாம் நம் நாட்டில் பலரும் சட்டத்திற்கு எதிராக எந்தக் கேள்வியும் எழுப்பாமல், சட்டத்திற்கு அடிபணிந்து நடக்கிறார்கள்” என்றபடி, “நீங்கள் இதை எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்டார். அந்தப் பெண்மணி, இந்த கேள்விக்கான பதில் தன் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போவதை உணர்ந்திருந்தார். தான் மிகவும் பாதிக்கபட்டதாகக் கூறினால், அடுத்த சில நாட்களில் அவர் மீண்டும் சிறைபிடிக்கப்படுவது நிச்சயம். அதனால் புத்திசாலித்தனமாக, “உங்களின் இந்த நடவடிக்கைகளை ஏற்காதவர்கள் எவராயினும், அவர்களது கண்களைப் பறித்து விடுங்கள்” என்று பதிலளித்தார். இந்த பதிலால்,அவர் ஸ்டாலினை விட அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தார்.

ஸ்டாலின் எந்த உணர்வையும் வெளிக்காட்டாதவராகவும், உணர்வு ரீதியாக எதனாலும் எளிதில் தூண்டப்படாதவராகவும், தனக்கான தனிப்பட்ட ஆளுமை எதுவும் இல்லாததொரு “இரும்பு மனிதராக” அறியப்பட்டார். ஆனால் உண்மையில் அவருடைய வாழ்க்கையும் மாஓ-வினுடையதைப் போன்றது தான். இருவரும், தங்கள் இயல்பிலேயே மிகுந்த நாடகத்தன்மை கொண்டவர்களாகவும், தமது ”அரங்கு” குறித்தும், தமது ”நடிப்பு” குறித்தும் மிகுந்த மதிப்பை கொண்டிருந்தனர். மேலும், துயரங்கள் நேரும்போது ஸ்டாலின் இந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்க மிகுந்த விருப்பம் காட்டினார்.  தனது முதிய வயதில், ஸ்டாலின் மேற்குலகத்தாரைப் பெரிதும் விரும்பினார். John Wayne-னை மிகவும் விரும்பினார், மேலும் அவரது திரைப்படங்கள் தன்னையே பிரதிபலிப்பதாக அவர் உணர்ந்தார் என்று நினைக்கிறேன்.  ஒரு நகரத்தில் நீதியை நிலைநாட்ட துப்பாக்கியைத் தவிர வேறெதுவுமில்லாத, தனக்கென ஒரு குடும்பம் இல்லாத, யாராலும் விரும்பப்படாத ஒரு பெயரற்ற மனிதனாக ஸ்டாலின் தன்னை உருவகித்துக் கொண்டதாலேயே அவர் இந்தத் திரைப்படங்களைப் பெரிதும் விரும்பினார்.

JC: சுய-பச்சாதாபம்

SSM: தனித்து விடப்பட்ட, சுய-பச்சாதாபம் நிரம்பிய, ஆனால், அராஜகமான முறையில் நியாயத்தை நிலைநாட்டி, பின் அந்நகரத்திலிருந்து வெளியேறும் ஒரு வரலாற்று நாயகன். வரலாற்றில் தன்னைக் குறித்ததான பிம்பம் இப்படிப்பட்டதாக இருக்கவே ஸ்டாலின் விரும்பினார். தன் அராஜகம் நிரம்பிய செயல்பாடுகளுக்கு அவரது கற்பனை நிரம்பிய கற்பிதங்கள் இவை.

JC: ஸ்டாலினிடமிருந்து மாறுபட்டு, மாஓவிற்கு மேற்கத்தியவர்கள் மீது எவ்வித பற்றுதலும் இருக்கவில்லை. அவர் திரைப்படங்களின் மீது எவ்வித ஆர்வமும் கொண்டிருக்கவில்லை.

SSM: ஆனால், அவரது சுய-பிம்பம் ஸ்டாலினை போன்றதே.

JC: ஆம். அவரும் இதே உணர்வில்தான் உழன்றார். சீனக் கவிதைகள் மீதான பற்றும் இருந்தது. அவர் ஒரு கவிஞரும் கூட.

JH: எனது புரிதலில் மாஓவின் ஆரம்ப காலத்திய கவிதைகள் சிறப்பானதே. ஆனால் அதிகாரத்தை அடைந்து, அதை தொடர்ந்த காலங்களில் எழுதப்பட்டக் கவிதைகள் அவ்வளவு சிறப்பானது என்று தோன்றவில்லை. இத்தாலியை சேர்ந்த மொராவியா(Moravia) இந்த கவிதைகளின் ஒரு தொகுப்பை வெளியிட்டார். மாஓவின் கவிதைகள் மக்கள் மனதில் அவருக்கென ஒரு உயர்ந்த ஸ்தானத்தை வழங்கியது.

JC: ஆம். பலரும், ஒரு கவிஞன் கொடூரமான கொலைகாரனாக இருக்கச் சாத்தியமில்லை என நம்பி, “ஓ, மாஓ ஒரு சிறந்த கவிஞர் அல்லவா!” என்று ஆச்சிரியப்படுவதுண்டு. ஆனால், அது சாத்தியமே. ஒருவன் மிகச்சிறந்த கவிஞனாக இருந்தபடியே, லட்சக்கணக்கானோரை கொன்றவனாகவும் இருக்கமுடியும்.

SSM: ஸ்டாலினின் கவிதைகள் ஜார்ஜிய மொழியில் இருப்பதால் அவற்றை என்னால் வாசிக்க முடியவில்லை. ஆனாலும் அவை சிறப்பானவை என்றே கேள்விப்பட்டிருக்கிறேன்.  பலரும் அவருடைய கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவருக்கு உதவ முன்வந்தனர். 1907-ல் Tiflis எனும் இடத்தில், ஒரு மிகப்பெரிய வங்கியைக் களவாட அவர் மேற்கொண்ட முயற்சியில், ஸ்டாலினின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த வங்கியில் பணியாற்றிய ஒருவரே அவருக்கு உதவினார் என்பது நம்பமுடியாத செய்தி. மேலும், ஸ்டாலின் இந்த வங்கித் திருட்டிற்காக உலகெங்கிலும் பரவலாக அறியப்பட்டவர்.

DJ: மேற்குலகில் இவர்கள் எவ்வாறு அறியப்பட்டனர்?

சே குவாரா - மாஓ
சே குவாரா - மாஓ

JC: மேற்குலகில் மாஓவின் தாக்கம் பரவியிருக்க முக்கியமான காரணம், அவரது மிகச் சிறந்த சுய-விளம்பர உத்தி தான். ”இனிமையான மற்றும் கருணையுள்ளம் கொண்டவர்” என்ற  பிம்பம், மாஓ மிகுந்த பிரயத்தனத்திற்குப் பிறகு தேர்ந்தெடுத்த எட்கர் ஸ்நோ-வினால்(Edgar Snow) ஏற்பட்டது. எட்கர் ஸ்நோ மாஓவின் இடத்திற்கே சென்று, அவரைப் பேட்டி கண்டது தற்செயல் நிகழ்வல்ல. ஸ்நோ தன் புத்தகம் மூலமாகக் கூற முனைந்தவை அனைத்தின் மீதும் மாஓவின் கடுமையான தணிக்கை இருந்தது. ஸ்நோவின் இந்தப் புத்தகம் மேற்குலகில் மிகுந்த வரவேற்பு பெற்றதால் மாஓ இப்புத்தகத்தை சீன மொழியில் மொழிபெயர்க்கச் செய்தார். புத்தகத்திற்கான தலைப்பு நடுநிலைமையுடன் இருக்குமாறு பார்த்துகொண்டார். “Red Star Over China” போன்ற தலைப்புகளை தவிர்த்து, “Journey to the West” என்று அந்நூல் பெயரிடப்பட்டது. மாஓ 1930-களில் இப்புத்தகத்தை வெளியிட்டு,  அதன் மூலம் அடுத்த இரண்டு தலைமுறையைச்  சேர்ந்த துடிப்புமிக்க சீன இளைஞர்களிடம் (என் பெற்றோர் உட்பட) தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தினார்.  மாஓவின் அடுத்த சுய-விளம்பரம் 1960-களில் சீனாவில் கொடிய பஞ்சம் நிலவிய காலகட்டங்களில் பெரிய அளவில் நடைபெற்றது. அந்த வருடத்தில்(1960) மட்டும் 20 மில்லியன் மக்கள் பசியால் மடிந்தனர். அதே காலகட்டத்தில் மாஓ பிறநாடுகளில் இருந்த இடது-சாரி அமைப்புகளுக்கு பணத்தை வாரி வழங்கி வேற்று நாட்டு மக்களிடமும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார். இந்த காலகட்டம் தான் ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த கவனத்திற்க்கு உட்படுத்தப்பட வேண்டியதாக கருதுகிறேன்.

Courtesy: www.sacu.org/dresspolitics.html
Courtesy: http://www.sacu.org/dresspolitics.html

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு – மாஓவின் ஆட்சிக்காலத்தில் மக்கள் அனைவரும் தங்களுடைய பாரம்பரிய உடையை விடுத்து ஒரே விதமான வடிவமைப்பைக் கொண்ட ஆடைகளை அணியுமாறு வற்புறுத்தப்பட்டார்கள். அதைக் குறித்ததொரு கார்ட்டூன்.)

மாஓ 1960-களில் தன்னைக் குறித்த பிரச்சாரத்தைத் துவங்கக்  காரணம், அவர் குருஷேவுடனான தனது உறவைத் துண்டித்துக் கொள்ள முடிவெடுத்தார். குருஷேவுடனான உறவைத் துண்டிப்பதினால் மட்டுமே தனக்கான ஒரு கூட்டத்தை ஏற்படுத்த முடியும் என்ற அவர் கருதினார். ஆகவே இந்த வருடம் முதல் தன் பீடத்தின் கீழ் ஒரு குறு-மதத்தை உருவாக்கும் எண்ணத்துடன் இப்படிப்பட்ட விளம்பர முயற்சிகளை மேற்கொண்டார்.

DJ: மேலும் அந்த காலகட்டங்களிலேயே அணுகுண்டுகள் அவர் வசம் இருந்தது, அல்லது அத்தகைய அணுகுண்டுகளை தயாரிக்கும் முயற்சியில் பெருமளவு வெற்றி கொண்டுவிட்டார் என்றே கூறலாம்.

JC: அவரது அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையே அவரது அணுசக்தி சம்பந்தபட்ட முயற்சிகள் யாவும் அவர் விரும்பியப்படி பலனளிக்காமல் போனதற்கான சில காரணங்களை முன்வைக்கின்றன. அணு ஆயுதம் செய்யத் தேவையான அனைத்தும் அவரிடம் இருப்பதாகக் கூறப்பட்டது. அவரது விஞ்ஞானிகளும் தங்களது ஏவுகணைகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அவரிடம் ஏவுகணை தயாரிக்கத் தேவையான தொழில்நுட்பம் இருக்கவில்லை.

மாஓ, குருஷேவுடனான பிரிவிற்குப் பிறகு இரு முரண்பட்ட காரியங்களை நிறைவேற்ற விரும்பினார். ஒன்று, குருஷேவை அழித்து உலகில் தனக்கான ஒரு கூட்டத்தை உருவாக்குவது. இரண்டு, குருஷேவிடமிருந்தே தனக்கான தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை பெறுவது. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது சாத்தியமல்ல. குருஷேவுக்குப் பின் அதிகாரத்திற்கு வந்த பெரஷ்னெவ்வின்(Brezhnev) ஆட்சிகாலத்தில், மாஓ Zhou Enlai என்பவரை ரஷ்யாவிற்க்கு அனுப்பி அணுஆயுதத்திற்குத்  தேவையான தொழிற்நுட்பங்களைப் பெற முயற்சித்தார். அப்போதைய ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சரான மலிநோவெஸ்கி(Malinovsky), Zhou Enlai-யிடமும், சீனாவின் அப்போதைய ராணுவ அமைச்சரிடமும் “நாங்கள் குருஷேவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றியதைப் போல, மாஓ விஷயத்தில் நீங்களும் ஏன் செயல்படக் கூடாது?” என்று கேட்டார். இது சீன வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. ஏனெனில் “கலாசாரப் புரட்சி”-க்கான தூண்டுதலாக இந்நிகழ்வு இருந்தது. இதன் பிறகு தனக்கு ஏவுகணையின் அவசியம் இருந்த காலகட்டங்களில் கூட மாஓ ரஷ்யாவுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

DJ: சீனாவும் ரஷ்யாவும் இன்னும் ஏன் தங்களை இந்தக் கொடுங்கோலர்களின் பிடியிலிருந்து முற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியவில்லை?

JC: சீனாவில் இன்றும் தியானென்மென் சதுக்கத்தில் மாஓவின் உருவப்படமும், தியானென்மென் நுழைவாயிலில் பதப்படுத்தப்பட்ட அவரது சடலமும் மக்களின் “வழிப்பாட்டிற்காக” வைக்கப்பட்டுள்ளது. சீன அரசியலமைப்புச் சட்டத்தில், சீனாவின் வழிகாட்டியாக மாஓ அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சீனர்கள் தங்கள் சமகாலத் தலைவர்கள் குறித்தான விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கக்கூடிய காலகட்டத்திலும், மாஓ குறித்த விமர்சனங்களைப் பொதுவில் பேச தடை நிலவுகிறது.  மாஓ குறித்தான பயம், சீனர்களின் பிரக்ஞையில் கலந்துவிட்டது. ஆதலால் ஸ்டாலினின் நிலையைவிட மாஓவின் நிலை வேறுபட்டது. சீன அரசால் இன்றளவும் மாஓ மிக உறுதியுடன் முன்னிருத்தப்படுகிறார். சீன அரசால் மாஓவின் பெரும்பாலான அரசியல் நடவடிக்கைகள் இன்று நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், ஒரு சில விஷயங்கள் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்கள் மீதான சீன அரசின் கட்டுப்பாடு அதில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முந்தைய நிலையைவிட இன்றைய சீனாவில் கருத்து சுதந்திரத்தின் நிலை சீரழிந்துவிட்டது.

SSM: ரஷ்யாவின் நிலை முற்றிலும் வேறு. ஏனெனில் 1961-ல் குருஷேவ் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, அவரைப்  பீடத்தில் இருந்து தூக்கி எறிந்தார். ஆனால், அதன் பின் ரஷ்யாவில் பல விநோதங்கள் அரங்கேறின. ஸ்டாலின் தன்னை கம்யூனிஸத்தின் ஜார் மன்னராகவும், மார்க்ஸியத்தின் தலைமைப் பீடாதிபதியாகவும் கருதினார். ஆனால் அவரின் மார்க்ஸிய அடையாளம் மட்டும் அகற்றப்பட்டது. ஒட்டுமொத்த ரஷ்யாவிலும் கம்யூனிஸம் அகற்றப்பட்டு, தற்போதைய அரசு எந்தவிதத்திலும் கம்யூனிஸ அடையாளத்துடனும் செயல்படவில்லை. ஆனால் அது மிகப்பெரும் ஏகாதிபத்தியமாக பரிணமித்தது. ஸ்டாலின் விரும்பியபடியே, ரஷ்ய அரசு அதிகாரக் குவியலாக மாறிப்போனது. 1990-களில்  ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் புரிந்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, மேலும் ரகசிய ஆவணக்கூடங்கள் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டு, அவரால் கொல்லப்பட்ட பல லட்சக்கணக்கானவர்களின் விவரங்கள் பொதுவில் வைக்கப்பட்டன. ஆனால், தற்போது இவையல்லாம் மறக்கப்பட்டு 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் நகைமுரணை நாம் கண்டுகொண்டிருக்கிறோம் :  ஜார்ஜியாவில் பிறந்த ஸ்டாலின், ரஷ்ய வல்லமையின் குறியீடாகவும், ரஷ்ய ஏகாதிபத்திய வெற்றியின் குறியீடாகவும் முன்னிருத்தப்படுகிறார்.

தற்கால ரஷ்யர்கள், குறிப்பாக புடின் தலைமுறையை சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், ஸ்டாலினை ரஷ்யாவின் வெற்றி நாயகனாக கருதுகின்றனர். புடினால் முன்னுரை எழுதப்பட்ட ஒரு பள்ளிப் பாட புத்தகத்தில், “ஸ்டாலின் 20-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ரஷ்ய தலைவராக விளங்கினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 20-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய அற உணர்வை அடிப்படையாகக் கொள்ளாத முறைமைகளை கொண்டு ஸ்டாலினை நோக்கினால், சந்தேகமில்லாமல் ஸ்டாலின் தன்னிகரற்ற தலைவர் தான். மேலும் அந்த புத்தகங்களில் ஸ்டாலின் அதிகார வர்க்கத்தையும், அறிவுஜீவிகளையும் தன்னுடைய கட்டளைக்கு அடிபணிந்து நடக்கச் செய்வதற்காக அடக்குமுறையைக் கைகொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெர்லினிலிருந்து மங்கோலியா வரையிலான, ஸ்டாலின் விட்டு சென்ற ரஷ்ய கண்டம் எந்த ஜார் மன்னருடைய ஆளுகையை விடவும் பெரியது. ஆதலால், ரஷ்யரல்லாத ஜார்ஜியரான ஸ்டாலின், ரஷ்ய பாடப்புத்தகங்களில் வரலாற்று நாயகராக முன்னிருத்தப்பட்டுள்ளார். 50 வருடத்திற்க்குப் பிறகு நடக்கும் என்று நான் நினைத்தது, இப்போதே அரங்கேறியிருக்கிறது.

JC: ஆம். சீனாவில் நமது புத்தகம்[4] கள்ளச் சந்தையில் அச்சடிக்கப்பட்டு், இணையத்தில் பதிவேற்றப்பட்டு பலராலும் அது தரவிறக்கி வாசிக்கப்படுகிறது. எதிர்வினைகளும் வந்தபடியே இருக்கின்றன. ஆனால், மாஓவின் கொடூர நடத்தைகள் குறித்து கவலைப்படுவோர் பலர் இருந்தாலும், ஒரு சில சீனர்கள், நீங்கள் குறிப்பிட்ட ரஷ்யர்களைப் போல, ”ஆனாலும் மாஓ எங்கள் நாட்டிற்க்கு அணு ஆயுதத்தை தந்தார்” என்கிறனர். ஏதோ ஒரு அணு குண்டிற்க்காக பல லட்சக்கணக்கான மனித உயிர்கள் கொன்றழிக்கப்படுவதில் எந்த தவறுமில்லை என்பதைப்போல.

————————

தொடுப்புகள் :

1. http://en.wikipedia.org/wiki/Jung_Chang

2. http://en.wikipedia.org/wiki/Jon_Halliday

3. http://en.wikipedia.org/wiki/Simon_Sebag_Montefiore

4. Mao: The Unknown Story – http://en.wikipedia.org/wiki/Mao:_The_Unknown_Story

————————