HIV கிருமியை எதிர்க்க புது வழி?

Niemann-Pick Type C (NPC) என அறியப்படும் அரிய வகை நோய்க்கும், எயிட்ஸ் நோய்க்கும் உண்டான பொது குணாம்சத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு நோய்களும் தம்மைத் தாமே பெருக்கி கொள்ள மனித உடலின் கொழுப்பை பெரிதும் உபயோகப்படுத்துகின்றன. இக்கொழுப்பை கடத்திச் செல்லும் செல்களே இந்நோய் பரவ காரணமாகின்றன. இச்செல்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வழியை ஆராய்ந்த விஞ்ஞானி ஒருவர், தற்போது அந்த வழியைக் கண்டடைந்து விட்டதாக அறிவித்துள்ளார்.
தென்-கொரியாவில் பொருளாதாரத் தேக்கம்
தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்கத்தால், சமூக/தனிமனித அளவில் பல விநோத மாற்றங்களைச் சந்திக்கின்றன. நல்ல வருமானம் ஈட்டித்தரக்கூடிய, வியர்வை சிந்த அவசியமில்லாத, மூளையை மட்டுமே பெரிதும் உபயோகிக்கும் வேலையில் இருந்தோரின் நிலையில் மாற்றம் ஏற்பட்டு, இதற்கு நேர் எதிரான வேலைகளில் ஈடுபடுகின்றனர். தென்-கொரியாவில் இது போன்ற மாற்றங்களால் அலைக்கழிக்கப்படும் பல்வேறு இளைஞர்கள் குறித்த கட்டுரை இது. பன்னாட்டு நிறுவனங்களில் மிகப்பெரும் பொறுப்புகளை கவனித்து வந்த இவர்கள், இன்று மீன்பிடிக்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாற்றங்களால், பொருளாதார அளவில் அவர்கள் பெரும் பின்னடவைச் சந்திக்காத போதும், தங்கள் கெளரவமும், சமூகத்தில் தங்கள் மதிப்பும் பெருமளவு பாதிக்கப்படுவதாக வருந்துகின்றனர்.
வன்பொருட்கள் உதிரும் காலம்
பல ஆங்கிலத் திரைப்படங்களில் காட்டப்பட்டது போல முக்கியமான ஆவணங்களையும், தகவல்களையும் கொண்ட பல hard-drive-கள் அமெரிக்காவில் காணாமற் போயிருக்கின்றன. Cloud computing குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு மென்பொருளை நிறுவ அல்லது சில தகவல்களை சேமித்து வைக்க, உங்களுக்கு எந்தவித வன்பொருளின் அவசியமுமில்லை. இணையத்தின் ஒவ்வொரு மூலையிலும் சிதறி கிடக்கும் பல்வேறு வன்பொருட்களில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தி உங்கள் பணியை செவ்வனே நிறைவேற்றி விடலாம். வன்பொருட்களில் சேமிக்கப்படும் பல தகவல்கள் திருடுபோகின்றன. அவற்றை மீட்பதும் கடினம். இந்த நிலையில், Cloud computing எந்த வகையில் உதவிகரமானது? அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு தகவல் திருட்டின் பின்ணனியில் இது குறித்துப் பேசுகிறது இக்கட்டுரை
சீனாவின் சமீபத்திய “திபெத்”
உலகளவில் தன்னுடைய ஆக்டபஸ் கைகளை விரித்து வரும் சீனா, உள்நாட்டில் மக்களிடையே அவ்வப்போது கொந்தளிப்புகளைச் சந்தித்து வருகிறது. ”ஜனநாயகக் கிருமி”களை வளரவிட சீனாவிற்கு விருப்பமில்லை. சோவியத் ரஷ்யா சென்றடைந்த புள்ளியைத் தானும் சென்றடைய சீனா விரும்பவில்லை. சமீபத்திய உள்நாட்டு கலவரத்தை மிகுந்த பதற்றத்துடன் சீனா கையாண்ட விதம், அதன் கைப்புண்ணிற்கு சாட்சி. ”சீன அரசின் ஸ்திரத்தன்மை”-யைக் காக்கவும், “அரசின் எதிரிகளை” அடக்கவும் சீனா முனைந்த விதம் குறித்த கட்டுரை இங்கே.
வரலாற்றைத் தாண்டிய அடையாளங்கள்
பின்லாந்து, எஸ்தோனியா, லித்துயேனியா போன்ற நாடுகள் தம்முள் வேறுபட்ட அடையாளங்களை கொண்டதாகவும், பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு அரசாட்சியின் கீழ் இருந்த நாடுகள். ஆனால், இன்றைய காலங்களில், இந்நாடுகள், தங்கள் தனி அடையாளங்களைத் தக்கவைத்த படியே, ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவாக ஒரு புது அடையாளத்தையும், புதிய சிந்தனையையும் மேற்கொள்வதன் அவசியம் குறித்து, எஸ்தோனியா அதிபரின் சமீபத்திய உரை இது.