1940களின் தொடக்கத்தில் ஷோன்பெர்க்கின் ( Arnold Shoenberg) சீடரான ரெனே ஒரு கையடக்க புத்தகத்தை வெளியிட்டு பிரபலமானார். அது `சிபேலியஸ்: உலகத்தின் மிக மோசமான இசையமைப்பாளர்` (Sibelius: The Worst Composer in the World) ‘ என்ற புத்தகமாகும். அதில் புது வகை இசை வடிவங்களை ஏற்க மறுத்த பிரபலமான ஃபின்லாந்தின் செவ்வியல் இசைக்கலைஞர் ஜான் சிபேலியஸின் இசை வடிவத்தைப் பற்றிய விமர்சனத்தை முன் வைத்தார்.1930களில் ஸ்ட்ராவின்ஸ்கி (Stravinsky) பல முறை சிபேலியஸ் ஒரு இசையமைப்பாளரே இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனாலும் ஐரோப்பா இசை, தொல்லிசை ஆர்வலர்களால் சிபேலியஸை ஒதுக்கி வைக்க முடியாது. பல விமர்சனங்களில் பீத்தோவெனுக்கு அடுத்ததாக இசையை அதன் கவித்தன்மையோடும், உன்னத மொழியாலும் வெளிப்படுத்தியவர் என்றும் வர்ணிக்கப்படுகிறார். இதைப் போன்ற முரண்பாடுள்ள விமர்சனங்களால் சிபேலியஸ் பற்றிய புரிதல் ஓரிடத்திலிருந்து நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. சிபேலியஸின் இசைத் தொகுப்புகள் இப்போது Esa-Pekka Salonen போன்ற இசை மேதைகளால் மீட்டெடுக்கப்படுகிறது. அவர் பிறந்த ஃபின்லாந்து நாட்டில் இன்று நோக்கியா கைத்தொலைபேசி , சிபேலியஸ் என்பவை தொன்மக் குறியீடுகளாய் விற்பனையில் முதலில் இருக்கின்றன.
இது இசை ரசிகர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். உலகின் முதல் பத்து சிம்பொனிகளிலும் இவர் பெயர் கண்டிப்பாக இருக்கும். இசையின் நுண்ணிய இலக்கண மாற்றத்தை செய்த புரட்சியிலும் இவர் குறிப்பிடப்படுவார்.
நாம் பலதரப்பட்ட இசை வகைகளால் கவரப்படுகிறோம். ஒவ்வொருவரிடமும் தனித்துவமாக அவர்கள் லயிக்கும் இசை பற்றிய தேர்வுகளும், ரசிக்கும் ஆளுமைகளைப் பற்றிய கற்பனை கலந்த உண்மைகளும் தேங்கியிருக்கும். அப்படிப்பட்ட இசை மேதைகள் வெகுஜன இசை மையத்தில் கலக்கும்போது, இசை ஆர்வலர்கள் அவர்களுக்குத் தரும் விமர்சன மதிப்பீடுகள் பல நேரங்களில் உண்மை நிலையை உணர்த்துவதில்லை. இசை விமர்சகர்கள் தங்கள் தராசுகளை கூர்மையான விதிமுறைகளால் கட்டத்தவறும்போது, வரலாற்றில் இசை கலைஞர்களுக்கான மதிப்பீடும் அலையில் மிதக்கும் காகிதத்தைப் போல மேலும் கீழுமாய் அசையும்.
பல சமயங்களில் விமர்சன விதிகள் காலத்தின் நெருக்கடி நிலைகளினால் தவறுவதும் சாத்தியமே. இதற்கு சரியான உதாரணம் 1900 களில் யூதர்களின் இசை பற்றிய கறாரான புறவயமான பார்வையைக் குறிப்பிடலாம். பல காலங்களாய் இருந்த யூதர்களின் இசை சந்ததி, அவர்களின் பிறப்பு சம்பந்தமான குணாதிசயங்களாலேயே புறக்கணிக்கப்பட்டது. இப்படிப்பட்ட தருணங்களை விமர்சனப்பார்வையில் கொணர்வது அந்த இசைக் கலைஞர்களுக்குத் தரும் அவமரியாதையாகும். இது வரலாற்றினால் திசை மாறிய விமர்சனப் பார்வை.

இந்தக் கட்டுரையின் நாயகன் ஜீன் சிபேலியஸும் அப்படிப்பட்ட காலகட்டங்களில் வாழ்ந்த ஆளுமையே. இவர் ஃபின்லாந்து நாட்டில் 1865 களில் பிறந்து, ரஷ்ய மொழியை முதல் மொழியாகப் படித்தவர். இசை வடிவ அமைப்புகளில் புரட்சி என்ற தலைப்பில் தேடினால், சிபேலியஸின் பேர் கடைகோடியில்கூடத் தென்படாது. டெபுஸ்ஸி, ரிச்சர்ட் ஸ்ட்ராஸ், ஸ்ட்ராவின்ஸ்கி, அர்னால்ட் ஷோன்பெர்க் போன்ற மேதைகளின் காலத்தில் வாழ்ந்தவர் இந்த சிபேலியஸ். புரட்சிகரமான நாட்கள். அரசியல் மாற்றங்கள் மட்டுமல்ல, இசை/நாடகம்/தொழில்நுட்பமென எந்த பக்கம் திரும்பியபோதும் புது அலைகளும், புரட்சி மாற்றங்களும் நடந்து வந்த காலம். சிபேலியஸ் இந்த புரட்சி அலைகளின் பார்வையாளராக மட்டுமே பங்கேற்றார்.
இவர் வாழ்வில் உலகப் போருக்கு முன்னும் பின்னும் பல விதங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
முதல் உலக யுத்தத்திற்கு முன்:
1900 களின் தொடக்கத்திலிருந்து முதல் உலக யுத்தம் வரை இசையில் பெறும் மாற்றங்கள நடந்தேரின. 1905 ஆம் ஆண்டு ஷோன்பெர்க் Atonal எனப்படும் இசை வடிவத்தை அறிமுகம் செய்தார். அது வரை ஐரோப்ப இசையுலகம் ஆதார சுருதியைக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தது. C முதல் F வரையிலான சுரங்களில் ஆதார சுருதியே நிலையாக இருக்கும். இசை வடிவங்கள் கோர்வையான சுரங்களின் அணிவகுப்பைக் கொண்டிருக்கும். ஆனால், இவை தொடங்குவதும் முடிவதும் ஆதார சுருதியில் தான். பல்லிசை அமைப்புகளைக் கொண்ட ஒத்திசைவு (Harmony) வகை இசை வடிவங்களில் இதை return to home எனக் குறிப்பிடுவர். ஒரு இசை வடிவம் முழுமை பெறுவதும் இந்த ஆதார சுருதி முடிவில் மீட்டப்படும்போதே ஆகும். அப்படிப்பட்ட பல சுரங்களின் கோர்வையிசையை tonal எனக் குறிப்பிடுவர். ஷோன்பெர்க் இந்த அடிப்படை விதியை atonal என்ற அமைப்பின் மூலம் புரட்டிப் போட்டார். இதன் மூலம் எந்தஒரு தனிப்பட்ட சுரத்திற்கும் முக்கியத்துவமில்லாமல் போனது. ஆதார சுரங்கள் திரும்புவது இசையை ஒரு கட்டமைக்குள்ளாகவே சுழல வைக்கும்.ஆனால் ஆதார சுரங்கள் இல்லாமல் போனால், ஒலிக்கும் சுரக்கலவை அந்த கட்டமைப்பினிலிருந்து வெளியேறி பல விதங்களில் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துமென ஷோன்பெர்க் நம்பினார். இனக்கமாக (Consonance) உருவாகும் இசை வடிவமான tonal இசையை மாற்றியதிலிருந்து, பலதரப்பட்ட பேத இசை வெளிவரத்தொடங்கியது. டெபுஸ்ஸி, ஸ்ட்ராவின்ஸ்கி, பெர்க் போன்றோர் கணக்கு விதிகளால் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தி Serialism என்னும் இசை வடிவத்தை அமைத்தனர் . அடுத்தடுத்து ஒலிக்கும் இசைச் சுரங்களை கணித சூத்திரத்தின் மூலம் கண்டடைந்தனர். இதனால் இசை வடிவத்தின் சாத்தியக்கூறு அதிகரித்தாலும், இசை எனும் அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கத் தவறியது.
பல நூற்றாண்டுகளாயிருந்த அடிப்படை இலக்கணத்தை இந்த புரட்சி மாற்றியது. அதனாலேயே இந்த மோஸ்தர்களின் மேல் இசை ஆர்வலர்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டானது. மாற்றங்களுக்கான காலம் நிலவும்போது வடிவ மோஸ்தர்களின் மேல் என்றைக்கும் அழிக்க முடியாத வசியம் ஏற்படும். இலக்கியத்தில் பின் நவீனத்துவக் கூறுகளை இதனுடன் ஒப்பிடலாம். பின் நவீனத்துவமில்லாத பிரதிகளை ஒதுக்கும் மனோபாவமும், இயற்கையான உணர்ச்சிகளை மீட்கும் படைப்புகளை நிராகரிப்பதும் ஒரு காலத்தில் இருந்த விமர்சன தராசாகும். இதற்கு ஈடான புரட்சியை இந்த அடோனல், ஸீரியலிஸம் இசை வடிவங்கள் கொண்டுவந்தது.
ஆனால் சிபேலியஸின் இசைக்கும் இந்த புரட்சிக்கும் ஏதும் தொடர்பேயில்லை. ஆனால், இசையின் மாற்றங்களை மின்னல் வேகத்தில் சந்தித்துகொண்டிருந்த போது சிபேலியஸ் போன்ற இசையமைப்பாளர்களின் மேல் கவனம் ஏக காலத்துக்கு குறைந்து போனது. இந்த விதத்தில் சிபேலியஸுக்கு மிகவும் நெருக்கமான மாற்றங்கள் ஆகும். இந்த இசைப் புரட்சியின் முன்னும், பின்னும் தன் இசையினால் தெளிவாக பீத்தோவனின் இடத்தை பிடித்திருந்தார்.
இத்தாலிய பியானோ கலைஞரான புசோனியிடம் பயின்ற சிபேலியஸ், தன் இருபத்து நான்காம் வயதில் பெர்லினுக்கு படிக்கச் சென்றார். 1885 களில் ஐரோப்பா இசையின் கவனம் முழுவதும் காந்த சக்தியாக ஜெர்மானிய இசையை நோக்கியே இருந்தது. ஒரு நாற்பது வருடங்களுக்கு முன் பிறந்திருந்தால், இத்தாலிக்கு மட்டுமே சென்று சிபேலியஸ் இந்த இசையமைப்பாளர் பயிற்சியைப் பெற்றிருக்கமுடியும். ஐந்து வருட பயிற்சிக்கு பின் தன் தாய்நாடான ஃபின்லாந்துக்கே சென்றுவிட்டார்.

ஃபின்லாந்து வாய்வழிப் பாடல்களுக்குப் புகழ் பெற்ற நாடு. 18ஆம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்த வாய்மொழிக் காப்பியமான காலெவாலா எனப்படும் கிராமிய இசை மிகப் பிரபலமான ஒன்றாகும். ஃபின்லாந்து அதன் மக்களைப் போல் பழமையும், பழங்கதைகளும் நிரம்பியது. இதை ஆதாரமாக வைத்து சிபேலியஸ் தன் முதல் சிம்பொனி எனப்படும் ஒத்திசைவு இசைக் கோர்வையை உருவாக்கினார். ‘கொல்லர்வோ’(Kullervo) எனப்படும் அந்த ஒத்திசைவில் ஐந்து பகுதிகள் இருந்தன. பாடல்களும், கருவி இசையும் ஒருங்கே அமைந்த ஒரு இசை வடிவமாகும். ஆனால், இந்த ஆக்கத்தை முதிர்ச்சியில்லா வடிவமென சிபேலியஸ் 1892ஆம் ஆண்டு ஒதுக்கினார். அதே ஆண்டு ‘என் சாகா’ (En Saga) என்ற கவிதைகளுக்கு இசை வடிவமமைத்தார். இதுவே உலகத்தின் பார்வையை சிபேலியஸ் பக்கம் திருப்பிய முதல் இசை ஆக்கமாகும்.
நூற்றாண்டும் தொடங்கியது. சிபேலியஸின் இசை ரசிகர்களின் போற்றலுக்கு ஆளானது; அதற்குப் பிறகு சிபேலியஸின் இசைக்கு இரங்கு முகமேயில்லை. வரலாறும் சிபேலியஸீக்கு கை கொடுத்தது. மிகச் சிக்கலான தருணத்திலிருந்த ஐரோப்பாவில், தேசப்பற்று அதிகரிக்கத் தொடங்கியது. பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக, மேட்டுக்குடிகள் மட்டுமல்லாது, வரிகளை ஈட்டுத் தரும் சராசரி மக்களும் காலனி ஆதிக்கத்திலும், ட்ஸார்கள் (Tsars) என வழங்கப்படும் ரஷ்ய ராஜாக்களாலும் சுரண்டப் படுவதை எதிர்க்கத் தொடங்கினர். ஃபின்லாந்து ரஷ்யர்களின் ஆளுகையிலிருந்ததால், அங்கு தேசப்பற்று கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. தேசப்பற்றுள்ள பல கலைகளும் செழிக்கும் போது, பழமைப் பக்கம் திரும்புவதுதானே வழக்கம். அதனால் கொல்லர்வோ போன்ற புராணங்கள் ஃபின்லாந்தின் தேசிய காவிய வரிகளைச் சுமந்து வலம் வரத்தொடங்கியது.
நம் ஃபின்லாந்து இசையமைப்பாளரும் பலதரப்பட்ட கிராமிய இசையிலிருந்தும், பழங்குடி காவியங்களிலிருந்தும் தன் ஒத்திசைவுக்கான வடிவங்களையும், கருக்களையும் எடுத்தாளத் தொடங்கினார்.1914 ஆம் ஆண்டு சிபேலியஸ் தன் இரண்டாம் ஒத்திசைவை அமெரிக்காவின் மேடைகளின் ஒலிக்கவிட்டார். தனக்கு முன்னாலேயே தன் புகழ் அமெரிக்க மண்ணை மிதித்திருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தார். ஆனால் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மக்களும், இசை விமர்சனங்களும் தன்னை மறந்துவிடுமென அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார்.
இதில் ஆச்சர்யமடைய ஒன்றுமில்லை. அரசியல், வரலாறு மட்டுமல்ல இசையும் புரட்சியாளர்கள் கையில் சிக்கியிருந்த சமயம். Impressionism என்ற வடிவ அமைப்பை டெபுஸ்ஸி அறிமுகப்படுத்தினார். முதல் பதினான்கு ஆண்டுகளை அந்த நூற்றாண்டில் அது ஆக்கிரமித்திருந்தது. அதற்குப் பின்னர், ஸ்ட்ராவின்ஸ்கியின் நவீன வகை இசையமைப்பு மற்றும் ஷோன்பெர்க்கின் அடோனல் இசை வடிவம், இசை இலக்கணங்களை புரட்டிப் போட்டது. நம் நாயகருக்கோ இந்த புரட்சிகளில் ஸ்நாநப்ராப்தி கூடக் கிடையாது. அதனாலேயே சிபேலியஸ் தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினார்.
சிபேலியஸ்ஸின் இசையைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
One Reply to “ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 1”
Comments are closed.