ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

stringsசமஸ்கிருத மொழி பற்றி ஒரு காலகட்டத்தில் பாமர மக்களின் புரிதல் எப்படி இருந்தது என்பதைப் பற்றி வேடிக்கையான கதை ஒன்றைச் சொல்லுவார்கள். வசதியான சமஸ்கிருதப் பண்டிதர் ஒருவர் இருந்தாராம். அவருடைய வீட்டில் இருந்த வேலைக்காரருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்றாலும் ஏதோ அது கடவுளுடன் நெருங்கிய தொடர்புகொண்ட தெய்வீகமான மொழி என்பதாக நினைத்திருந்தார். ஆன்மிக விஷயங்களைத் தவிர அதில் வேறெதுவும் இருக்கமுடியாது என்பது அவருடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.


ஒரு நாள் பண்டிதரின் நண்பர் வந்திருந்தார். அவரும் ஓரளவு சமஸ்கிருதம் அறிந்தவர். குசல விசாரிப்புகளுக்குப்பின், பண்டிதர் வேலைக்காரரிடம் நண்பருக்குத் தின்பண்டங்கள் கொடுக்கும்படி சொன்னார். வேலைக்காரரும் சமையலறைக்குள் சென்றுவிட்டார்.


வந்திருந்த நண்பருக்கு ஒரு பிரச்சினை. தீராத மலச்சிக்கல். மருத்துவ சாஸ்திரத்தில் அதற்கு ஏதேனும் தீர்வு உண்டா என்று பண்டிதரிடம் கேட்டார். பண்டிதரும் ஒரு மருத்துவப் புத்தகத்தை எடுத்து மலச்சிக்கல் பற்றிச் செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருந்ததைக் கம்பீரமான குரலில் நீட்டி முழக்கிப் படிக்கத் தொடங்கினார்.


அந்த நேரத்தில் அங்கு தின்பண்டங்களுடன் நுழைந்தார் வேலைக்காரர். பண்டிதர் கடவுள் பற்றிய துதி ஒன்றைப் படிப்பதாக நினைத்த அவர், அவசர அவசரமாகக் கையில் வைத்திருந்த தட்டுகளைக் கீழே வைத்துவிட்டு, தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். தீபாராதனையின்போது செய்வதைப்போல, ‘படபடஎனக் கன்னத்தில் போட்டுக்கொண்டவரைப் பார்த்த பண்டிதருக்கும், நண்பருக்கும் முகத்தில் ஈயாடவில்லையாம்.


நான் தமிழில் சிறுபத்திரிகைகளை படிக்கத் தொடங்கியிருந்த காலம் அது. நவீன என்ற முன்னொட்டுடன் எந்த வார்த்தை உச்சாடனம் செய்யப்பட்டாலும் உடனடியாகத் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு, கன்னத்தில் போட்டுக்கொள்வதே சிற்றிதழ் வாசகனின் முதல் கடமை என்று நம்ப ஆரம்பித்திருந்தேன். ஒருநாள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது நவீன கட்டணக் கழிப்பிடம் என்ற பெயர்ப்பலகை கண்ணில்பட்டது. அவ்வளவுதான். கால்கள் தன்னிச்சையாக நின்றுவிட்டன; கைகள் மேலே உயரத் தொடங்கின. நல்ல காலம், விபரீதமாக எதையும் செய்து தொலைக்காமல் சமாளித்துக் கொண்டுவிட்டேன்.


நவீன ஓவியங்களுடனான என் உறவும் மேற்கண்ட கல்லிலே கடவுளைக் காணும்பக்தி நெறியின் அடிப்படையில் அமைந்ததுதான். சிற்றிதழ் நண்பர்கள் சிலருடன் நவீன ஓவியக் கண்காட்சிகளுக்குச் செல்லத் தொடங்கினேன். ஓவியங்களைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பயபக்தியுடன், மேவாயை வருடியபடி சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு வெளியே வந்து வழக்கமான இலக்கிய வம்புகளைப் பேச ஆரம்பித்துவிடுவேன். வசதியான ஓவியர்கள் நடத்தும் கண்காட்சிகள் சிலவற்றில் மேல்நாட்டு உற்சாக பானங்களை ருசிபார்க்கும் வாய்ப்பும் கிடைத்ததுண்டு.


விவரம் தெரியாத அப்பாவிகள் எவரேனும் ஓவியங்கள் நன்றாக இல்லை என்றோ, புரியவில்லை என்றோ சொல்லிவிட்டால் அவ்வளவுதான். அவர்களை மடக்குவதற்கென்றே ஒரு பிகாஸோ ஜோக்கைக் கையில் வைத்திருப்பார்கள்:


பிகாஸோ வரைந்த ஓவியத்தைப் பார்த்த ஒருவர், “இது மிகவும் கோரமாக இருக்கிறதேஎன்று சொன்னாராம். உடனே பிகாஸோ, “அது ஓவியமல்ல; முகம் பார்க்கும் கண்ணாடிஎன்று நெத்தியடி அடித்துவிட்டாராம்.


இன்றைய தமிழ் சிற்றிதழ் வட்டங்களில், நாக்கில் சனி புகுந்த ஒருவர் தன்னை ஒரு ஹிந்து என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டால் அவருக்கு என்னென்ன சங்கடங்கள் நேரும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அன்றைய சிற்றிதழ் வட்டங்களில், நவீன விஷயங்கள் புரியவில்லை என்று சொல்பவர்களுக்கு கிட்டத்தட்ட அத்தகைய கதியே ஏற்பட்டது.


Chardonnayநவீன ஓவிய உலகில் புழங்கப்படும் சில ஜாலவார்த்தைகளைப் (jargons) பயன்படுத்தி, நான்கு வாக்கியங்கள் பேசவோ, எழுதவோ முடியுமென்றால் நீங்கள் மாபெரும் கலை விமர்சகராக ஆகிவிடலாம். நடுவில் இந்துத்துவ எதிர்ப்பு போன்ற கோஷங்களையும் எழுப்ப மறந்துவிடக்கூடாது. அதையும் ஆங்கிலத்தில் செய்ய முடியுமென்றால் உங்களுக்குச் செல்லுமிடமெல்லாம் ‘பூரண கும்ப’ மரியாதை நிச்சயம். குடிக்கிறீர்களோ இல்லையோ, ஷார்ட்னே (chardonnay) எனப்படும் பிரெஞ்சு தேசத்து வெள்ளை திராட்சை ரசம் நிரப்பப்பட்ட அழகிய கண்ணாடிக் கோப்பையை, எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஸ்டைலில் பந்தாவாகக் கையில் பிடித்துக் கொண்டிருக்கலாம். கூகிள் யுகத்தில் இது மிகவும் சுலபமாகிவிட்டது. புத்தகங்களைக்கூட படிக்கவேண்டிய அவசியமில்லை. ஏதேனும் ஒரு ஜாலவார்த்தையை ஓவியரின் பெயர் என்று தவறுதலாக நினைத்துப் பேசிவிட்டால்கூட இப்போதெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை.


பொதுவாக, நவீன ஓவியங்களைச் செக்கென்றும் சொல்லலாம், சிவலிங்கம் என்றும் சொல்லிவிடலாம். வரையப்பட்டுள்ள உருவத்தை அல்லது அருவத்தை நம்முடைய கற்பனைக்கேற்ப அர்த்தப்படுத்திக்கொள்ளும் சுதந்திரம் அதில் உண்டு. காதலா காதலா திரைப்படத்தில் கமலஹாசன் சாதாரண ஓவியம் ஒன்றில் கோக்கைக் கொட்டி, பிரஷ்ஷுக்குப் பதிலாக விளக்குமாறைக் கொண்டு தீற்றி சில வினாடிகளிலேயே நவீன ஓவியம் ஒன்றை உருவாக்குவார். என்னுடைய கற்பனையோ அதைக்கூடத் தாண்டிச் சென்றதில்லை. பிரக்ஞைபூர்வமான சிறுபத்திரிகை ஒன்றைத் தமிழ்நாட்டில் நடத்தியதால் ஏற்பட்ட விரக்தி காரணமாக அமெரிக்காவில் குடியேறிவிட்ட எழுத்தாளர் ஒருவருடன், சில ஆண்டுகளுக்குமுன் நியூயார்க் நகரில் இருக்கும் மோமாஎனப்படும் ம்யூஸியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்-ஐப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு நவீன ஓவியத்தைப் பார்த்தபோது, அந்தத் திரைப்படக் காட்சி எங்கள் நினைவுக்கு வரவே பொங்கி எழுந்த சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.


நீங்கள் விவரம் தெரிந்த நவீன ஓவிய விமர்சகர் என்று பெயர் வாங்க வேண்டுமென்றால் நவீன ஓவியங்கள் பற்றிய சில pattern-களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சபைகளில் பேசும்போது பலசரக்குக் கடைக்காரரைப் போல அந்தப் பட்டியலை ஒப்பிக்கவும் தெரிய வேண்டும்.


வகைமாதிரி என்ற சொல் pattern என்பதன் துல்லியமான மொழிபெயர்ப்பு அல்ல என்றாலும், தொட்டுவிடக்கூடிய தொலைவில் இருப்பது என்பதால் அதை அப்பொருளிலேயே இங்கு பயன்படுத்துகிறேன்.


சில நாள்களுக்கு முன், வழக்கம்போல சயன்டிஃபிக் அமெரிக்கன்இதழை இணையத்தில் புரட்டிக் கொண்டிருந்தேன். அறிவியல் கட்டுரை எழுத முயல்பவன் வேறு என்ன செய்ய முடியும்? விஞ்ஞான எழுத்தாளர் மிக்கேல் ஷெர்மர் (Michael Shermer) எழுதிய கட்டுரை ஒன்று கவனத்தை ஈர்த்தது. கண்ணுக்குத் தென்படாத சில சக்திகளே இந்த உலகத்தைக் கட்டுப்படுத்துகின்றன என மனிதர்கள் நம்புவது ஏன் என்பதைப் பற்றிச் சொல்கிறது அக்கட்டுரை.


—oo000oo—


alienகடவுளர்கள், தேவதைகள், அரக்கர்கள், பேய் பிசாசுகள், ஆவிகள், வெளிக்கிரக உயிர்கள், உளவு நிறுவனங்கள், சதிகாரர்கள், அரசாங்க ஏஜெண்டுகள் போன்ற அதிகாரமும் நோக்கமும் கொண்ட கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் நம் உலகைப் பீடிப்பதோடு நம்மையும் கட்டுப்படுத்துகின்றன. அது ஏன்?


இக்கேள்விக்கான பதில் இரண்டு பகுதிகளைக் கொண்டது. அர்ததமில்லாத கிறுக்கல்களில் அர்த்தமுள்ள வகைமாதிரிகளைக் காணும் மனித இயல்பான வகைமாதிரியாக்கம் (patternicity) என்ற கோட்பாட்டிலிருந்து தொடங்கலாம். உதாரணமாக, நிலவில் தெரியும் பாட்டியின் முகம், பசு மாட்டின் கண்ணில் தெரியும் கடவுளின் உருவம், கர்ண கொடூரமான ராக் இசையில் வெளிப்படும் சாத்தானின் செய்தி போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால், சில வகைமாதிரிகள் உண்மையானவையே. மரங்கள் காய்ப்பது, பறவைகள் மற்றும் விலங்குகளின் இடப்பெயர்ச்சி போன்ற தட்பவெப்ப நிலை மாறுதல்கள் குறித்து கணிக்க உதவிய வகைமாதிரிகள் பழங்கற்கால (Paleolithic) மனிதர்கள் உயிர்வாழ இன்றியமையாததாக இருந்தன.


வகைமாதிரிகளில் எது சரியானது, எது தவறானது என்று வித்தியாசப்படுத்திப் பார்க்கும் அளவுக்கு நம் மூளை இன்னமும் பரிணமிக்கவில்லை என்பதே இதில் பிரச்சினையாக இருக்கிறது. ஆகவே, நாம் இரண்டு விதமான தவறுகளைச் செய்கிறோம். முதலாவது தவறு, ஒரு தவறான வகைமாதிரியைச் சரியானதென நம்புவது. இரண்டாவது தவறு, சரியான வகைமாதிரி ஒன்றை அது சரியானதுதான் என நம்ப மறுப்பது. முதலாவது வகைக்கு உதாரணமாக, காற்று வீசுவதால் புதரில் ஏற்படும் சலசலப்பைப் பார்த்து அங்கு ஒரு புலி பதுங்கியிருப்பதாக நம்புவதைச் சொல்லலாம். இரண்டாம் வகைக்கு உதாரணம், புதரில் புலி உண்மையிலேயே பதுங்கியிருந்து அதனால் ஏற்படும் அசைவைக் காற்று வீசுவதால் ஏற்படும் சலசலப்பு என நம்புவது. அதாவது புலிதான் அந்தச் சலசலப்பை ஏற்படுத்துகிறது என்பதை நம்ப மறுப்பது. இவற்றுள் இரண்டாம் வகைத் தவறைவிட, முதல் வகைத் தவறில் நாம் தப்பிப் பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகம். இரண்டாம் வகைத் தவறைவிட முதல் வகைத் தவறுக்கு நாம் கொடுக்கப்போகும் விலை குறைவே. வெளியூர் தேவதையைவிட உள்ளூர்ப் பிடாரியை நம்புவதே புத்திசாலித்தனமானது என்ற மனநிலையையும் இத்துடன் ஒப்பிடலாம். சிந்தித்து முடிவெடுக்க அவகாசம் இல்லாத நிஜ ஆடு-புலி ஆட்டங்களில், பிற விலங்குகள் எல்லா வகைமாதிரிகளையும் நிஜமானவையாகவே கருதக்கூடும்.


ஆனால், பிற விலங்குகளால் செய்யமுடியாத சில காரியங்களை மனிதர்களாகிய நம்மால் செய்யமுடியும். மூளை வளர்ச்சி அதிகமுள்ள இரு கால் பிராணிகளான நாம், மனம் என்ற கோட்பாட்டின் காரணமாக நம்முடைய மற்றும் பிறருடைய விருப்பம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை அறியும் திறன் கொண்டவர்களாக இருக்கிறோம். அதனால், நாம் காணும் வகைமாதிரிகளின் பின்னால் ஒரு மறைமுகமான நிறுவனம் செயல்படுவதாக முடிவு செய்கிறோம்.


agents1இந்த உலகம் கண்ணுக்குப் புலப்படாத, தெளிவான நோக்கம்கொண்ட ஏஜெண்டுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்ப முயல்வதை ஏஜெண்டாக்கம்’ (agenticity) எனக் குறிப்பிடலாம். இப்படி அவர்கள் மேலிருந்து நம்மைக் கட்டுப்படுத்துவது தற்செயலாக நிகழ்வது அல்ல என்றும் நாம் நம்புகிறோம். வகைமாதிரியாக்கம், ஏஜன்டாக்கம் ஆகிய இரண்டுமே பல தெய்வ வழிபாடு, ஒரு தெய்வ வழிபாடு போன்ற பழைய மற்றும் புதுயுக ஆன்மீகக் கோட்பாடுகளுக்கு சிந்தனை அடிப்படையிலான அஸ்திவாரத்தை அமைக்கின்றன.


கண்ணுக்குத் தெரியாத ஏஜெண்டுகளால் நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்ற நம்பிக்கை நம்மை ஆவிகளின் உலகுக்கு அப்பாலும் இட்டுச் செல்கிறது. உயிர்களை மேலிருந்து கீழாக (ஒரு படியமைப்பில்) படைத்த ஒரு புத்திசாலித்தனமான வடிவமைப்பாளன்கூட நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஏஜெண்டே. நம்மை நாமே விரைவில் அழித்துகொள்ளப் போகிறோம் என்று நம்மை எச்சரிப்பவர்களாகவே மேலிருந்து வரும் வேற்றுக் கிரக வாசிகள் பெரும்பாலும் சித்திரிக்கப்படுகின்றனர். சதித் திட்டங்களின் பின்னணியில் திரை மறைவிலிருந்து செயல்படும் ஏஜெண்டுகள் இருப்பதை நாம் கணிக்கத் தவறுவதில்லை. திரைமறைவில் பேரம் நடத்தும் அமைப்புகள், நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் குடும்பங்கள், பெரும் முதலாளிகள், ரகசிய சதிகாரர்கள் முதலிய பொம்மலாட்டக்காரர்கள், அரசியல் மற்றும் பொருளாதாரக் கயிறுகளைச் சுண்டி இழுப்பதற்கேற்ப ஆடும் பொம்மைகளாகவே நாம் இருப்பதாகவே நினைக்கிறோம். சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை அமெரிக்க அரசாங்கத்தால் சரி செய்துவிட முடியும், அதிபர் பராக் ஒபாமா அத்தகைய ஒரு மீட்பருக்குரிய வல்லமையைக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைகூட ஏஜெண்டாக்கம் என்பதன் ஒரு வடிவமே.


supersenseஇந்த விஷயங்களைப் பற்றி SuperSense என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தை, பிரிஸ்டல் பல்கலைக்கழக உளவியல் நிபுணரான ப்ரூஸ் ஹுட் (Bruce Hood) எழுதியுள்ளார். வகைமாதிரிகளையும், அவற்றின் பின்னணியில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத சக்திகளையும் மனிதர்கள் உடனடியாகக் கண்டுகொள்வது பற்றிப் போதுமான ஆதாரங்கள், தீவிரமான நரம்பு மண்டல அறிவியல் ஆய்வுகளின் மூலம் திரட்டப்பட்டு இப்புத்தகத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.


உதாரணங்கள்:


· சூரியனால் சிந்திக்க முடியுமென்றும், அது தங்களைப் பின்தொடர்ந்து வருகிறது என்றும் குழந்தைகள் நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கையின் காரணமாகவே குழந்தைகள் தாங்கள் வரையும் சூரியனின் படத்தில் சிரிக்கும் முகத்தையும் சேர்த்தே தீட்டுகிறார்கள்.


· பல கொலைகளைச் செய்த ஒரு பிரபல கொலைகாரன் போட்டிருந்ததைப் போன்ற குளிரிலிருந்து பாதுகாக்கும் மேல் சட்டைகளை அணிய வளர்ந்த மனிதர்கள் விரும்புதில்லை. அப்படி அணிபவரைத் தீமை என்னும் இயற்கை கடந்த சக்தி பீடித்துவிடும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. மாறாக, வெற்றி பெற்ற மனிதர் ஒருவர் அணிவதைப் போன்ற குளிர்காலச் சட்டையை அணிவது தம்மை மேம்பட்டவராக ஆக்கும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கையே.


· உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவோரில் மூன்றில் ஒருவர், தானம் கொடுப்பவரின் ஆளுமையும் உடல் உறுப்புடன் சேர்ந்து தம்முள் ஊடுருவி விடுவதாக நம்புகின்றனர்.


· இனப்பெருக்க உறுப்புகளின் வடிவத்தில் அமைந்த வாழைப் பழம், சில கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவதால் பாலுறவுக்குத் தேவையான வீரியம் அதிகரிப்பதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.


· கணினித் திரையில் தோன்றும் முக்கோணம், நீள்சதுரம் போன்ற வடிவகணித உருவங்களைப் பார்ப்பவர்கள் அவை நல்ல நோக்கங்கள் கொண்ட ஏஜெண்டுகளைக் குறிப்பதாக நம்புகின்றனர்.


இவ்வுலகில் கண்ணுக்குப் புலப்படாத வகைமாதிரிகள், சக்திகள், ஆற்றல்கள், அமைப்புகள் ஆகியவை செயல்பட்டு வருவதைத் தாங்கள் நன்கு உணர்ந்திருப்பதாக நல்ல கல்வியறிவும், புத்திசாலித்தனமும் கொண்ட பலரும் நம்புகின்றனர். இதில் முக்கியமானது என்னவென்றால், அவர்களுடைய இத்தகைய அனுபவங்கள் பற்றி நம்பக்கூடிய ஆதாரம் எதுவும் தரப்படுவதில்லை என்பதால் இவை இயற்கை கடந்தவை (supernatural) என்பதோடு விஞ்ஞானபூர்வமாகவும் இருப்பதில்லை. நம்முடைய அதியுணர்வு அல்லது உணர்வு கடந்த தன்மை (supersense) காரணமாகவே அவை உண்மையாக இருக்கக்கூடும் என்று நாம் நம்புகிறோம்”, என்று சொல்கிறார் ப்ரூஸ் ஹுட்.


இயற்கையாகவே தோன்றிய இயற்கை கடந்தவர்கள் (supernaturalists) என்று நம்மைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

(நன்றி: 1. தேவாரம் 6:95:3 2. Scientific American)