அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – இறுதிப் பகுதி

மூன்று பாகங்களாக வெளிவரும் கட்டுரைத் தொடரின் இறுதிப்பகுதி இது.

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2

”குளோபல் வார்மிங்” பீதிக்குப் பின்னுள்ள பொருளாதார அரசியல்

”குளோபல் வார்மிங்” பீதிக்குப் பின்னுள்ள பொருளாதார அரசியல் உலகின் பொருளாதார இயக்கத்தின் திசையை எந்த நாடு நிர்ணயிக்கிறதோ அந்த நாடு உலக அரங்கில் வல்லமை படைத்ததாகின்றது. குளோபல் வார்மிங் மற்றும் அது தொடர்பான கார்பன் ரேஷன் ஆகியவற்றை வடிகட்டிவிட்டுப் பார்த்தால் ஐரோப்பிய நாடுகள் இன்றைய நிலையில் பெருமளவில் உலகப் பொருளாதாரத்தின் திசையை நிர்ணயிக்கும் சக்திகளாக இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் ‘மனித யத்தனத்தால் குளோபல் வார்மிங்’ என்பது இந்தச் சமன்பாட்டை மாற்றிவிடும். தன் வளர்ச்சிக்கும் வாழ்க்கைத்தர உயர்வுக்கும் அன்று தான் தராத விலையை சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மேல் இன்று ஐரோப்பாவால் சுமத்திவிட முடியும்.

அமெரிக்கா இன்றைய நிலையில் இதனை எதிர்த்தாலும் விரைவிலேயே தன் நிலையை மாற்றிக்கொண்டு விடும். ஏனெனில், அமெரிக்கா கொள்கையாளர்களின் நாடு அல்ல, முதலீட்டாளர்களின் நாடு. எந்தத் துறையில் முதலீட்டிற்கு அதிக வருவாய் கிட்டுமோ அங்கு முதலீடு செய்ய வெகு விரைவில் தன்னைத் தயார் செய்துகொண்டுவிடும். இது ஏற்கெனவே நிகழத் தொடங்கிவிட்டது. இன்று அமெரிக்காவில் பெரும் வளர்ச்சியையும் முதலீட்டையும் ஈர்க்கும் துறைகள் இரண்டு: பயோமெடிகல் துறைகள், பசுமைச்சக்தித் துறைகள். (அணுசக்தித் துறைகளும் வளர்ந்து வருகின்றன –  வளரும் நாடுகளுக்குப் பழைய தலைமுறை அணு உலைகளை அளிப்பதற்கான ஒப்பந்தங்கள் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு வரத்தொடங்கியுள்ளன.) ஆனால் இவற்றிற்கான நீண்டகால விலையை இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் தரவேண்டியிருக்கும். சீனாவைப் பணியவைக்க முடிகிறதோ இல்லையோ, இந்தியாவைப் பணிய வைத்துவிடலாம்.

உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய காரணியை உட்புகுத்தி அதன் கடிவாளங்களைத் தன் கைக்குள் வைத்துக்கொள்வதில் மீண்டும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வெற்றி பெறப்போகின்றன என்றால் மனித குளோபல் வார்மிங் (anthropogenic global warming) என்ற பூச்சாண்டிக்குத்தான் அவை நன்றி சொல்ல வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் உலகின் பல நாடுகளும் கார்பன் கடன் திட்டத்தை அமல்படுத்திவிடும். இந்தியா தான் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்திற்கும் ஏதோ ஒரு மேற்கு நாட்டிற்குக் கார்பன் வரி என்ற பெயரில் கப்பம் கட்டவேண்டி வரும்.

”குளோபல் வார்மிங்”கும் இந்தியாவின் எரிசக்தித்தேவையும்:

இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட எரிசக்தித் தேவையை நிலக்கரிச் சக்தி நிலையங்களே பூர்த்தி செய்கின்றன. (சில அறிக்கைகளில் இது 70% வரை எனக் குறிப்பிடப்படுகிறது).
கீழுள்ள படத்தைப் பாருங்கள்:

total_energy

உலகிலேயே நிலக்கரி வளம் அதிகம் உள்ள நாடுகளில் மூன்றாம் இடம் வகிக்கிறது பாரதம். 62,300 மில்லியன் ஷார்ட் டன் உற்பத்தி செய்யக்கூடிய அளவு நிலக்கரி வளம் நம் நாட்டில் உள்ளது. இதில் நாம் இன்று உற்பத்தி செய்திருப்பது 528.5 மில்லியன் ஷார்ட் டன்கள் மட்டுமே. அதாவது 1%-க்கும் குறைவு! நம் நாட்டின் எரிசக்தித் தேவையை அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு முழுமையாகத் தீர்க்கும் அளவுக்கு நம்மிடம் நிலக்கரி உள்ளது. (ஆனால் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்கிறோம்!!! லஞ்சம் தலைவிரித்தாடும் துறைகளில் நிலக்கரி அமைச்சரவை முன்னணியில் நிற்கிறது, கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஷிபு சோரன், தெலுங்கு திரைப்படத் துறையைச்சார்ந்த தாசரி நாராயண ராவ் போன்ற ”தொழில் வித்தகர்களை” அமைச்சர்களாகக் கண்ட பெருமை வாய்ந்தது இத்துறை.)

நிலக்கரி மூலம் நாம் எரிசக்தித் தன்னிறைவு அடைய முயன்றால் அதற்கான பெரும் விலையை நாம் மேற்கு நாடுகளுக்குக் கார்பன் கடன் என்னும் பெயரில் தரவேண்டிவரும். நம் நாட்டின் உற்பத்தியாகும் பொருட்களின் விலையை ஒட்டுமொத்தமாக இது உலகச்சந்தையில் ஏற்றி விடும். விலையுயர்ந்த பசுமைச்சக்தித் தொழில்நுட்பத்தையும், பழைய ஜெனரேஷன் அணு உலைகளையும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் இந்தியா வாங்க வேண்டியிருக்கும். மேற்கு நாடுகளிடமிருந்து கார்பன் க்ரெடிட் புள்ளிகளை வாங்கவோ அல்லது புதிய தொழில்நுட்பம் வாங்கவோ ஏதோ ஒரு வகையில் நாம் மேற்கிற்குக் கப்பம் கட்ட வேண்டி வரும். இந்த புழக்கடைக் காலனீயத்தின் மூலம் இந்திய நாட்டின் ஒவ்வொரு புள்ளி தொழில் வளர்ச்சியிலும் மேற்கு நாடுகள் வருமானம் ஈட்டி விடும். வளரும் நாடுகள் தம் பொருட்களையும், சேவைகளையும் குறைந்த விலையில் விற்பதும் அதன் மூலம் மேற்குலகின் பொருளாதாரத்திற்குச் சவாலாக வளர்வதும் மட்டுப்படுத்தப்படும்.

குளோபல் வார்மிங்கை ஐயுறுவது சுற்றுச்சூழலியலுக்கு எதிரானதல்ல

ஒரு விஷயத்தை அடிக்கோடிடுகிறேன். நான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானவன் அல்லன். ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் சூழல் மாற்றங்களுக்கு உள்ளூர்க் காரணிகள் நிறைய உள்ளன. அதிக மரம் நடலாம், நிலத்தடி நீரின் மட்டம் உயர நடவடிக்கை எடுக்கலாம், தொழிற்சாலைக் கழிவுகள் சூழலை மாசுபடுத்தாமல் தடுக்கலாம். காற்று மாசுபடுதல் என்ற அடிப்படையில் கார்பன் கழிவுகளைக் குறைக்க முற்படலாம். இவையெல்லாமே நல்ல, தேவையான முயற்சிகள். உள்ளூர் விளைவுகளையும், உடனடி தனிமனித பாதிப்புகளையும் அடிப்படையாக்கி இவற்றைச் செயல்படுத்தலாம். ’அட, அதைத்தானே குளோபல் வார்மிங் விவாதமும் செய்கிறது’ என எண்ண வேண்டாம். குளோபல் வார்மிங் என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சினைக்கு உலகளாவிய சட்டகம் ஏற்படுத்தித் தருகிறது, இதன் மூலம் ஒரு நாட்டின் இயற்கை வளங்களை அந்நாடு உபயோகப்படுத்தும் அளவையும் விதத்தையும் வேறு ஒரு நாடு தன் கட்டுக்குள் கொண்டு வந்து மட்டுப்படுத்த வழி செய்கிறது. ஒரு நாட்டின் கட்டுமான வளர்ச்சிக்கு, பொருளாதார உயர்வுக்கு, வாழ்க்கைத்தர ஏற்றத்திற்கு வேறு ஒரு நாட்டுக்கு கப்பம் கட்ட வழி ஏற்படுத்தித் தரப்படுகிறது.

Global Warming Cartoonஇன்று எல்லாவித சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பசுமைப் பாதுகாப்புக்கும் வசதியான overarching canvas-ஆக குளோபல் வார்மிங் உபயோகப்படுத்தப்படுகிறது. அரசியல் உள்நோக்கங்கள் எதுவும் இல்லாத பல சூழலியல் ஆர்வலர்களுக்குக்கூட “அறிவியல் முடிவுகள் அரைகுறையாயிருந்தால் என்ன? எப்படியிருந்தாலும் நல்லதுதானே நடக்கிறது” என்ற எண்ணப்போக்கு இருக்கிறது. இது தவறான எண்ணப்போக்கு. இந்த அணுகுமுறை தொலைநோக்கில் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும். அரசியல் காரணங்களும் அவசர முடிவுகளும் ஒரு காலகட்டத்தில் சுற்றுச்சூழல் துறைகளைப் பலவீனமாக்கும். அரசியல் கலந்தால் அது அறிவியலின் நம்பகத்தன்மையை நீர்த்துப் போகச்செய்து விடும். இயற்கையும், சுற்றுச்சூழலும் மாசுபடுவதை, அவற்றின் பிராந்திய உள்ளூர் நேரடி காரணிகளை முன்னிறுத்தி அப்பிரச்சனைகளைத் தீர்க்க முனையும் அணுகுமுறையே சரியானது. தவறான அடிப்படைகளில் கட்டப்படும் கருத்தாக்கம் நல்ல விளைவுகளைத் தருவதில்லை. அந்தப்பாதையில் செல்லத்தொடங்கும் மனிதப் பயணம், தவறுணர்ந்து மீண்டு வர பெரும் விலையைத் தரவேண்டி வரும். உள்ளூர்க் காரணிகளை விட்டு விட்டு குளோபல் வார்மிங் என்று ஒரு உலகளாவிய சட்டகத்தை உருவாக்குவதன்பின் உள்ளது அறிவியல் அல்ல, பொருளாதார அரசியல். உனது கார்பன் எமிஷன்களுக்கு எனக்குக் கமிஷன் தா என்ற மிரட்டல் அரசியல். உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஓரங்கட்டப்பட்ட சோஷலிஸ ஐரோப்பா தம் நாட்டு தொழில்களுக்கு வளரும் நாடுகளை வைத்து மானியம் சம்பாதிக்க முனையும் மகாமுயற்சி. ஐநாவின் ஆதரவுடன் ஐரோப்பா செய்ய முற்பட்டுள்ள புதிய காலனீயக் கொள்ளை.

சில பத்தாண்டுகளுக்கு முன்வரை மனித உரிமையை வர்த்தகத்துடன் இணைத்த மேற்கின் பிரம்பை வைத்து வேண்டும்போதெல்லாம் இந்தியா உலக அரங்கில் அடிக்கடி அடிக்கப்பட்டது நினைவில் இருக்கலாம். மனித உரிமை என்ற ஆயுதம் இந்தியாவுடனான வியாபாரப் பேச்சு வார்த்தைகளில் வசதியாக அன்று உபயோகப்படுத்தப்பட்டதைப்போல, குளோபல் வார்மிங் நாளை உபயோகப்படுத்தப்படும். கார்பன் வரியும் புதிய பசுமைத்தொழில்நுட்பங்களும் மேற்கிற்கு மாபெரும் சந்தையை உருவாக்கித் தரும்.

இந்தியாவில் என்ன நடக்கிறது— அல்லது நடக்கவில்லை?

இதில் அயர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் அரசியல் கட்சி விவாதம் (ஜனநாயகக் கட்சி Vs குடியரசுக்கட்சி) என்ற அளவிலாவது இருபுற வாதங்களும் பேசப்படுகின்றன. இருபுறங்களிலும் பல சேறடித்தல்கள் இருந்தாலும் ஆங்கில ஊடகங்களில் பல அறிவுபூர்வ விவாதங்களுக்கும் இது களம் அமைத்துத் தருகிறது. ஆனால் பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் ’மனிதர்களால் நிகழ்வது குளோபல் வார்மிங்’ என்ற கருத்தாக்கத்துக்கு எதிராக எந்த அளவுக்கு விவாதங்களோ கட்டுரைகளோ எழுதப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. இந்திய ஊடகங்களில் இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான இருபுற விவாதங்கள் நடக்கவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. இப்பிரச்சினையின் இன்னொரு பரிமாணத்தையும் சொல்லிவிடுகிறேன். இந்தியா, சீனா உள்ளிட்ட பல பெரிய வளரும் நாடுகளும் சரி, பிற சிறிய நாடுகளும் சரி – குளோபல் வார்மிங் என்ற கருத்தாக்கத்தை முழு மனதோடு எதிர்க்காமல் இருப்பதில் அவைகளுக்கு ஒருவகை அரசியல் சுயநலம் இருக்கிறது. குளோபல் வார்மிங் என்பதை உண்மையென்றே கொண்டு, ஆனால் அதற்கான பழியையும் பொறுப்பையும் செலவையும் பணக்கார நாடுகள்மேல் போடமுடிந்தால் அதனை அவை வரவேற்கவே செய்யும். இப்போது அதுதான் நடக்கிறது. மாலத்தீவு போன்ற தீவுகளுக்கோ ஐ.நா. விலிருந்தும் பல பசுமை வைப்பு நிதிகளிலிருந்தும் நிதியுதவி பல மில்லியன்களாகக் கிடைக்கிறது. ஸ்வீடன் நாட்டிலிருந்து சீதோஷ்ண அறிவியலாளர்கள் நேரடியாக வந்து ஆய்ந்து எதிர்மறை முடிவுகளை ஆதாரங்களோடு தொலைக்காட்சியில் காட்ட முன்வந்தபோது மாலத்தீவு அரசாங்கம் அனுமதி மறுத்தது இதனால்தான். மேற்கின்மேல் குற்றம் சாட்டி சுலப பைசா பார்க்கும் இந்த மனப்பான்மை சில ஆண்டுகளில் எதிர்மறை விளைவை உண்டாக்கப்போகிறது.

குளோபல் வார்மிங் பிரச்சினையைப் பொருத்தவரை சீனாவும் இந்தியாவும் மேற்கை நோக்கி “நீ உண்டாக்கியது; உனக்குத்தான் முதற்பொறுப்பு” என்ற ரீதியில் அணுகுகிறது; வேறுவிதமாகச் சொல்லப்போனால், மனித முயற்சியால் குளோபல் வார்மிங் என்ற கருத்தாக்கத்தை இவை ஏற்றுக்கொண்டு விட்டன. ’முதல் அடியை நீ எடுத்துவை’ என்று மட்டுமே சொல்கின்றன- அடுத்தடுத்து தான் எடுத்து வைக்க வேண்டிய அடிகளின் விலையும் வலியும் புரியாமல். தொலைநோக்கில் இது வளரும் நாடுகளுக்குத்தான் பாதிப்பாய் முடியும். குறிப்பிட்ட கால அளவு தாண்டியவுடன் குளோபல் வார்மிங் என்ற பெயரைச் சொல்லியே வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடப்படும். குளோபல் வார்மிங் என்ற ஆடுகளம் வளர்ந்த நாடுகளால் அவற்றின் நலன்களுக்குத் தக்கவாறு வடிவமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அரைகுறை அறிவியலாகவும் முழு அரசியலாகவும் வளர்ந்து கொண்டுள்ள ”மனிதரால் குளோபல் வார்மிங்” என்ற கருத்தாக்கத்தின் பின்னுள்ள சர்வதேச அரசியல் காய் நகர்த்தல்களில் உண்மையில் பாதிக்கப்படப்போவது – மீடியா பலமும் அறிவுச்சாதன ஊடக பலமும் இல்லாத – வளரும்/ஏழை நாடுகள்தான்.

முடிவாக…

Global Warming Cartoon

எப்பொழுதுமே மேற்கிற்கு ஒரு பிரம்மாண்ட எதிரி தேவைப்படுகிறது. வரலாற்றுப் பொருள்முதல் வாதம், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் போன்ற பிரம்மாண்ட, ஆனால் எளிமைப்படுத்தப்பட்ட ஒற்றைப் பரிமாண சட்டகங்களில் சிக்கலான உள்ளூர் சமூக இயக்கவியல் தொடர் மாற்றங்களை அடைத்துக் கருத்தியல் பிரம்மாண்டத்தை உருவாக்கிய மார்க்ஸியத்திற்கும், நேரடியாகக் காணக்கூடிய பிராந்தியக் காரணிகளைப் புறம் தள்ளிக் குளோபல் வார்மிங் என்ற பெயரில் உலகளாவிய சட்டகத்தில் அவற்றைப் புதைக்க முனையும் அவசரத்திலும் நான் காண்பது ஒரே அணுகுமுறையையே. மார்க்ஸியம், குளோபல் வார்மிங் கருதுகோள் ஆகியவை மேற்கின் வயிற்றில் பிறந்தது தற்செயலானது அல்ல. மனிதரால் பூமி சூடடைகிறது என்ற அரைகுறைக் கருத்தாக்கத்திலிருந்து சுற்றுச்சூழலியல் மீட்டெடுக்கப்பட வேண்டும். IPCC-இன் நம்பகத்தன்மை ஐநாவின் அரசியல் விளையாட்டுகளில் புதைந்து கிடக்கிறது. நிதி, முதலீடு, அரசியல் என எவ்வகைச் சார்பும் அற்ற விஞ்ஞானிகள் குழுவால் IPCC-இன் அறிக்கைகளும், அதில் குறிக்கப்படும் புள்ளி விவரங்களும் முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

குளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்றைய உலக அரசியலின் ஒரு பகுதியாக வெற்றிகரமாக நிறுவனப்படுத்தப்பட்டு விட்டது. குளோபல் வார்மிங் என்ற பெயரில் வெளியிலிருந்து வரும் அத்தனை அழுத்தங்களையும் பாரதம் நிராகரிக்க வேண்டும். இந்திய தேச நலனையும், வளர்ச்சியையும், செழிப்பையும் முன்னெடுத்துச்செல்லும் திட்டங்களைச் செயல்படுத்துகையில் உள்ளூர்க் காரணிகளை பிரதானப்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகளை மட்டும் கணக்கிலெடுக்க வேண்டும். கார்பன் கடன் திட்டத்தைத் திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரையிலுள்ள பல ஆய்வு முடிவுகள், மேற்கோள்கள், வரைபடங்கள் ஆகியவை வலைத்தளங்களில் எளிதாகக் கிடைப்பவையே. பெட்டிஷன் ப்ராஜக்ட் (http://www.petitionproject.org), ஸ்டீவ் மெக்கிண்டயரின் http://www.climateaudit.org/ ஆகிய வலைத்தளங்களில் பல விவரங்கள் உள்ளன. அமெரிக்க அரசின் தளங்களிலும் பல ஆய்வறிக்கைகள் கிடைக்கின்றன. மைக்கேல் க்ரைட்டனின் “State of fear” குளோபல் வார்மிங் பயப்பீதியைக் கட்டுடைக்கும் வண்ணம் அறிவியல் புதினமாக எழுதப்பட்ட நூல்.