அமைதியின் எதிரொலி

பிம்பம்

நிலைக் கண்ணாடியில்
பிம்பங்களைக் காண
நானும் ஒரு பிம்பமென,
சட்டகம் முழுதும் நிறைய
என்னை தாண்டிய
முப்பரிமாணத்தை
மறைத்து விட்டேன்.

இரகசியம்

(c) etsy.com
(c) etsy.com

கூட்டம் கூட்டமாக
பறவைகள்
படபடத்துப் பறக்க,
நின்று கொண்டிருக்கும்
மரம் போல
வார்த்தைகள் எல்லாம்
வடிந்த இருப்பு.
அமைதியின் நிழலில்
எஞ்சியவை
ரகசியம் ஆகின்றன.
மரமும் பறப்பது போல்
படபடக்கிறது.

பாதை

காற்றுக் கடலில்
தன்னை பிணைத்துக்
கொண்டு நிற்கிறது
நீர், துளியாக.
மற்றொரு துளியின்
அருகில்,
பிடிப்புடைந்து,
புதியதொரு பிணைப்புடன்
உருள்கிறது,
இன்னுமொரு
துளியை நோக்கி.