இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவரான சரோட் இசைக்கலைஞர் உஸ்தாத் அலிஅக்பர்கான் சென்ற வாரம் தன்னுடைய 87-ஆவது வயதில் மறைந்துவிட்டார். ஒரு பெரிய ஆச்சரியமாக, தவிர்க்க முடியாத உந்துதலால் அவருடைய வாத்திய இசையை அவர் மறைவதன் முதல்நாள் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருடைய ஆஹிர்பைரவ் ராகத்தில் லயித்துப்போய் என் நண்பனுடன், அலிஅக்பர்கானைக் குறித்து மிகவும் சிலாகிப்பாகப் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாளே அலிஅக்பர்கான் மறைவு குறித்த செய்தியைக் கேட்க நேரிட்டது. இந்த சங்கடமளிக்கும் துரதிர்ஷ்டமான உடன்நிகழ்வு(coincidence) கடந்த இரண்டு வருடங்களில் சில முறை எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் மறைவின்போது நிகழ்ந்துவிட்டது. இனியும் இது நேராதிருக்க வேண்டும்.
—oo000oo—
“இறப்பென்னும் விஷயம் என்னைச் சுற்றி எப்போதுமே இருக்கிறது. சமீபத்தில் எனக்குத் தெரிந்த நிறைய ஆட்கள் இறந்துவிட்டார்கள். க்ஷிஷ்தாஃப் கீஸ்லாவ்ஸ்கியும் (Krzysztof Kieślowski) அதில் ஒருவர். உண்மையில் நான் கீஸ்லாவ்ஸ்கியுடன் இணைந்து பணிபுரிந்த அத்தனை திரைப்படங்களுமே பிறப்பு, இறப்பை அடிநாதமாகக் கொண்டவை. அவை இரண்டு நேரெதிரான விஷயங்கள்தான், ஆனால் சுவாரசியமான விஷயங்களும் கூட. நாமெல்லோருமே ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். ஆனால் ‘கெளரவமான சாவைச் சந்திக்கும் வகையில் வாழ்வது எப்படி?’ என்பதுதான் எப்போதும் என்னை அரித்துக்கொண்டிருக்கும் கேள்வி.”
மேலே குறிப்பிட்டிருப்பதைச் சொன்னவர் ஸ்பிக்னெஃப் ப்ராய்ஸ்னர் (Zbigniew Preisner) என்ற பிரபலமான போலந்து நாட்டின் இசையமைப்பாளர். ப்ராய்ஸ்னர் தன்னுடைய நெருங்கிய நண்பரும், மிகச்சிறந்த திரைப்பட இயக்குநருமான கீஸ்லாவ்ஸ்கியின் மறைவுக்குப்பின் “requiem for a friend” என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார். அது தொடர்பான ஒரு பேட்டியில் அவர் சொன்னதைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.
கீஸ்லாவ்ஸ்கியும், ப்ராய்ஸ்னரும் நிறைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். கீஸ்லாவ்ஸ்கியின் பிரபலமான திரைப்படங்களான Double Life of Veronique, Colors Trilogy (Blue, White, Red)-யின் மூன்று திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு ப்ராய்ஸ்னர்தான் இசையமைத்தார். இவை அனைத்திலுமே அபாரமான இசையமைப்பு இடம்பெற்றிருந்தாலும், மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய திரைப்படம் – வெரோனிக்காவின் இரட்டை வாழ்க்கை (Double Life of Veronique). ஏனென்றால் பல விதங்களில் அத்திரைப்படம் கீஸ்லாவ்ஸ்கி, ப்ராய்ஸ்னர் இருவருக்குமே ஒரு முக்கியமான பாய்ச்சலைத் தந்தது. கீஸ்லாவ்ஸ்கியின் திரைப்படங்கள் இன்னொரு பரிணாமத்தை அடைந்தது இத்திரைப்படத்திலிருந்துதான். ஒரு இசைக்கலைஞராக வாழ்க்கையைத் துவங்காமல், பிறகு தானாகவே முயன்று இசைகற்றுக் கொண்ட ப்ராய்ஸ்னர் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டதும் இந்தத் திரைப்படத்துக்குப் பின்னர்தான்.
பிரபஞ்சத்தின் ஆதிப்புதிரான ஆத்மாவின் இருப்பு பற்றிய கேள்விதான் இத்திரைப்படம். ஆனால் அதை ஒரு தத்துவக் குவியலாகத் தராமல், ஒரு அழகான கவிதையைப் போல இது தந்திருக்கிறது. இரண்டு வெவ்வேறு நாடுகளிலிருக்கும் இரண்டு வெவ்வேறு பெண்கள் ஒரே உருவ அமைப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லையென்றாலும் ஒரு பெண்ணின் அனுபவம், இன்னொரு பெண்ணுக்குக் கிடைக்கிறது. ஒருவர் போலந்தில் இருக்கும் வெரோனிகா, இன்னொருவர் ஃப்ரான்ஸில் இருக்கும் வெரோனிக். போலந்திலிருக்கும் வெரோனிகா குழந்தையாக இருந்தபோது தன் கையைச் சுட்டுக்கொண்ட சில விநாடிகளுக்குப் பின், பாரிஸிலிருக்கும் வெரோனிக் தன் கையை அடுப்பு வரை கொண்டு சென்று இழுத்துக்கொண்டு விடுகிறாள்.
இருவரும் மிகச்சிறந்த பாடகிகள். இருவருக்கும் இதயக்கோளாறு இருக்கிறது. ஒருவர் இதயக்கோளாறுடனே தொடர்ந்து பாட முயற்சிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார். இன்னொருவர் அதே சமயத்தில் இதயநோயின் காரணமாகப் பாடுவதைக் கைவிட்டு ஒரு இசைப்பள்ளியின் ஆசிரியராகப் போகிறார். வெரோனிகா இறக்கும்போது பாரிஸிலிருக்கும் வெரோனிக் என்னவென்று புரியாமலே தாங்கமுடியாததொரு துக்கத்தை அனுபவிக்கிறார். இவர்களிருவருக்கிடையே எப்படி இப்படிப்பட்ட உறவு ஏற்பட்டது? அதை கீஸ்லாவ்ஸ்கி விளக்கிக் கூறாமல் ஒரு புதிராகவே திரைப்படத்தை முடிக்கிறார். ஆனால் நாம் அப்புதிரிலிருந்து விடுபட்டுப் பல்வேறு விடைகளை அடைவதற்கான பாதைகளையும் அவர் திறந்து வைத்திருக்கிறார்.
ஒருவிதத்தில் வெரோனிகா, வெரோனிக் இருவரும் ஒரே ஆத்மாவின் இரண்டு வெவ்வேறு ஸ்தூல வடிவங்கள் என்று சொல்லலாம். திரைப்படத்தின் தலைப்பே கிட்டத்தட்ட அந்த பொருளைச் சுட்டுவது போல்தான் இருக்கிறது. ஒரு ஆத்மாவின் இருவடிவங்கள் என்பது உலகின் பல்வேறு பழங்குடியினரிடமும் இருக்கும் நம்பிக்கையாகும். முக்கியமாக Hmong போன்ற தெற்காசியப் பழங்குடியினரிடையே இந்த நம்பிக்கை உண்டு என்பதை டோனி ஹில்லர்மேனின் ஒரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.
மேலும் கீஸ்லாவ்ஸ்கி இப்படிப்பட்டதொரு abstract-ஆன கதையைச் சொன்னவிதம், இந்தக் கேள்விகளிலோ, தத்துவங்களிலோ சிக்கிக் கொள்ள விரும்பாத எந்த ஒரு ரசிகரையுமே இழுத்து வைத்துக்கொள்ளும். இத்திரைப்படத்தின் திரைக்கதை, இசையமைப்பு, ஒளிப்பதிவு இவையனைத்துமே ஒருவிதமான கவிதைத்தன்மையை உருவாக்கியபடியே இருக்கின்றன. இரண்டு கதாபாத்திரங்களையும் ஒரே நடிகை செய்திருந்தாலும், குழப்பமேற்பட வழியேயில்லாமல், ஒருவர் இறந்த பின்னரே இன்னொருவர் அறிமுகமாகிறார். கிட்டத்தட்ட இதற்கு நேரெதிராக லூயிஸ் புன்வேல் (Luis Bunel) ‘The obscure object of desire’ என்ற திரைப்படத்தில் ஒரே கதாபாத்திரத்தை இரண்டு வெவ்வேறு நடிகைகளை வைத்துப் படமாக்கியிருக்கிறார்.
ஒரு நல்ல இயக்குநர் திரைப்பட ஊடகத்தின் பல்வேறு கலைஞர்களைத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்பவராக இருப்பார். அதன்படி இத்திரைப்படத்தின் பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்களையும் அதியற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் கீஸ்லாவ்ஸ்கி. இத்திரைப்படத்தின் இரண்டு காட்சிகளே அதற்குப் போதுமான சாட்சிகள்.
குரல் தேர்வுக்காக ஒரு பெரிய கம்போஸரின் வீட்டுக்கு அழைக்கப்படுகிறாள் வெரோனிகா. அவர் வீட்டில் கம்போஸரின் உதவியாளர் வெரோனிக்காவின் குரலைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக ப்யானோவில் ஓர் இசைவடிவத்தை வாசிக்கிறார். அதனுடன் தொடர்ந்து பாடிக்கொண்டே வருகிறாள் வெரோனிகா. ப்யானோவில் வாசிக்கப்படுவது இந்தத்திரைப்படத்தின் தீமான ப்ராய்ஸ்னர் வடிவமைத்த E Minor. கம்போஸர் வீட்டுக்குள் ஒரு தடுப்புக்குப்பின் மறைந்திருந்து வெரோனிகாவின் குரலைக் கேட்டு ரசித்தபடி இருக்கிறார். வெரோனிகா பாடும்போது ஒவ்வொரு வரிக்கும், முகம் முழுதும் மலர்ச்சியாக அந்தக் கம்போஸர் கையெல்லாம் அசைத்து ஒரு பேரானந்தத்துடன் ரசித்தபடி இருக்கிறார். வெரோனிகாவின் குரலைக்கேட்டு கம்போஸர், அவர் உதவியாளர் இருவருக்கும் மிக வியப்பாக இருக்கிறது. ஆனால் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. வெரோனிகாவின் முகம் அந்தத் தடுப்பு வழியாக ரெம்ப்ராண்ட்டின் ஓவியம் போலத்தெரிகிறது. ஒருவித அப்பாவித்தனத்தையும், தன் குரல் மீதிருக்கும் நம்பிக்கையையும், சிறு சிறு அசைவுகள் மூலமாகவும், புன்னகை மூலமாகவுமே வெளிப்படுத்தி விடுகிறார் வெரோனிகாவாக நடித்திருக்கும் ஐரீன் ஜேகப் (Irene Jacob).
இன்னொரு முக்கியமான காட்சி, வெரோனிகா மேடையில் அந்த முழு சொப்ரானோ வடிவத்தைப் பாடி உயிரை விடும் இடம். இப்போது பெரிதும் பிரபலமாகிவிட்ட out of focus கேமராதான் வெரோனிகாவுக்குத் தலை சுற்றுகிறது என்பதைக் காண்பிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வெரோனிகா இறந்த பின் காட்டப்படும் பத்து விநாடிகளில் ஒளிப்பதிவைத் திறமையாகப் பயன்படுத்தி ஒரு சாதாரண காட்சியைக் கவிதையாக்கிக் கதை சொல்லும் வித்தையைக் கையாண்டிருக்கிறார் கீஸ்லாவ்ஸ்கி.
(அந்தக் காட்சியை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்).
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்லாவோமிர் இஸாக்(Sławomir Idziak). இத்திரைப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமுமே ஒரு தனித்த புகைப்படம் போலவோ, ஓவியம் போலவோ அழகான ஒன்றாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது. கீஸ்லாவ்ஸ்கிக்கு எப்போதுமே தேர்ந்த compositional ரசனை உண்டு. புகைப்படக்கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்தே, தன் ஆரம்ப நாட்களில் ‘The camera buff’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் அவர். தன் பிற திரைப்படங்களிலிருந்து அடுத்த கட்டத்துக்கு இவர் தாவும்படியாக இவருடைய முந்தைய திரைப்படங்களிலிருந்து இத்திரைப்படத்தில், ஒளியின் வண்ணங்களில் பல பரிசோதனைகளைச் செய்திருக்கிறார். திரைப்படம் முழுதுமே பச்சை அல்லது செபியா வண்ணத்திலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில் கூட வானத்தின் நீலநிறம் காட்டப்படவில்லை. அப்போது அறிமுகமான color filterகளில் பல சோதனைகளை மேற்கொண்டார் என்று அறிகிறேன்.
இப்படி வெகுவாக சிரத்தை எடுத்துக்கொண்டு செய்திருக்கும் அழகியல் துருத்திக்கொண்டு தனியே தெரியாமல், கதையோட்டத்துடனே செல்கிறது. தேவையில்லாமல் ஒரு அண்மைக்காட்சியைக் கூட (close-up) வைக்கவில்லை. அப்படி வைக்கப்பட்ட பதிவுகளும் பெரும்பாலும் அந்தச் சூழலை வெளிப்படுத்தும் விதமாக சிறு சிறு பொருட்கள், நம் பார்வையிலிருந்து தப்பிவிடும் முக்கியமற்ற பொருட்கள் இவற்றையே காட்சியாக்குகின்றன. இவருடைய Blue திரைப்படத்தின் ஒரு பிரபலமான ஷாட்டான ஸ்பூனுக்குள் தெருவைப் பிரதிபலிப்பதன் ஒரு முன்னோட்டம் போல, ஒரு ஒளி ஊடுருவும் கோப்பைக்குள் நுழையும் தேநீர்ப்பையைப் காட்சியாக்கியிருக்கிறார் கீஸ்லாவ்ஸ்கி. அதைப் போலவே கையில் வைத்திருக்கும் சிறு பந்தின் வழியே தெரியும் உலகமும், அந்தப் பந்து கூரையில் பட்டு பெயிண்ட் துகள்கள் வெரோனிகாவின் முகத்தில் கொட்டும் காட்சியும்.
இந்தத் திரைப்படத்தின் இன்னொரு கதாபாத்திரம் திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் வரும் பொம்மலாட்டக்காரர். இறந்து போன வெரோனிகாவுக்கும், வெரோனிக்குக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது என்ற உண்மையை உயிருடனிருக்கும் வெரோனிக்குக்கு சொல்லாமல் சொல்வது அவர்தான். தன் கையிலிருக்கும் பொம்மைகள் வழியாகவே மெது மெதுவாக திரைப்படம் பார்ப்பவர்களுக்கும் சரி, உயிருடனிருக்கும் வெரோனிக்கும் சரி கதையைச் சொல்வது அவர்தான். இருவருக்கிடையிலிருக்கும் பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தவராயிருக்கும் அவர் யார்? அவருக்கெப்படி அந்த விஷயங்கள் தெரியும்? அதை கீஸ்லாவ்ஸ்கி நம்மிடம் சொல்லுவதில்லை. அவர் நாவஹோ பழங்குடியினரின் முதல் உலக மனிதராக இருக்கலாம். இந்திய சிந்தனைகளின் வழி வந்த ஞானியாக இருக்கலாம். தெற்காசியப் பழங்குடியினரின் யேர் ஷுவா(Yer Shua)வாக இருக்கலாம். பிரபஞ்ச ஒழுங்கைப் புன்னகையோடு அணுகிக் கொண்டிருந்த ஐன்ஸ்டைனாகவோ, ஃபெயின்மனாகவோ இருக்கலாம். ஆனால் அவர் இறுதி உண்மைகளைக் கக்கிவிட்டுச் செல்லும் ஒற்றை ஆளல்ல. அவர் பிரபஞ்சப் புதிர்களைக் குறித்த சூத்திரங்களை எழுதித் தருவதில்லை.
இதே தர்க்கத்தையே கீஸ்லாவ்ஸ்கியும் முன்வைக்கிறார். இரட்டை வாழ்க்கையைப் பற்றி உனக்கெப்படித் தெரியும் என்ற கேள்வியை வெரோனிக் பொம்மலாட்டக்காரரிடம் கேட்கும்போது அவர் சொல்லும் பதில்:
“எனக்குத் தெரியாது”.
அந்த பொம்மலாட்டக்காரரைப் போல, உண்மையான தேடல் கொண்ட எவருமே இந்தப் பிரபஞ்சத்தின் புதிர்களை அவ்வளவு எளிதாக விளக்கிக் கூறிவிடுவதில்லை. பொம்மலாட்டம் போலவே வாழ்க்கையைப் பார்க்கும் ஒரு பார்வையும் பல்வேறு பழங்குடிகளின் சிந்தனைகளில் உண்டு. அது அலகிலா ஆண்டவனின் விளையாட்டு அல்லது லீலை என்றொரு தத்துவம் வழியாக வாழ்க்கையைப் பார்க்கும் ஒரு பார்வை. யாரோ, எங்கிருந்தோ இருந்து ஆட்டி வைக்கிறார்கள் – நாம் அதில் வெறும் விளையாட்டு பொம்மைகள் மட்டுமே. அந்த விளையாட்டின் போக்கை அனுமானிக்கலாம். புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். முழுவதுமாக வரையறுத்துவிட முடியாது. அதன் போக்குகளை (pattern) வைத்து இது இப்படித்தான் நடக்கும் என்ற எந்த விதியையும் சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட உண்மையான தேடல் கொண்ட அறிவியலும், இந்தப் பாதையில்தான் செல்ல முடியும். எத்தனை விளக்கினாலும், விளக்க முடியாத ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அதே சமயத்தில், விளையாட்டைக் கைவிட்டுத் திரும்புதலும் அபத்தமானது. புதிய புதிய விதிகளும், வரையறைகளும், காலத்தையொட்டி மாறிக்கொண்டே இருக்கும். காலத்தையொட்டியும், இடத்தையொட்டியும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு சட்டகம்தான் இந்தப் பிரபஞ்சத்தை ஓரளவாவது அணுகி வியக்க முடியும்.
போலந்திலிருந்த வெரோனிகா மறைந்து ஃப்ரான்ஸிலிருக்கும் வெரோனிக் வழியாக உயிர்த்திருப்பதைப் போல, ப்ராய்ஸ்னரின் E-Minor வழியாகவும், இஸாக்கின் மேக்ரோ வழியாகவும், ஐரீன் ஜேகபின் உயிரைக் கொல்லும் புன்னகை வழியாகவும் இன்னும் உயிர்த்திருக்கிறார் கீஸ்லாவ்ஸ்கி.
இதைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருக்கும் ஒரு நொடித்துளியில் அந்த பொம்மலாட்டக்காரராகவே மாறி என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டுமிருக்கிறார் கீஸ்லாவ்ஸ்கி. இந்த பொம்மலாட்டத்தின் பின்னணி இசை உஸ்தாத் அலிஅக்பர்கானின் ஆஹிர் பைரவ்.