பேரரசின் தொலைந்த தொடுவானங்கள்

ஆர். வைத்தியநாதன்

இப்போதெல்லாம் நிதி விஷயங்கள் பற்றிய கருத்தரங்குகள் அனைத்திலும் தேனீர் இடைவேளைகளிலும் கூட தொடர்ந்து எழுப்பப்படும் ஒரு கேள்வி: பொருளாதாரம் மறுபடியும் உயிர்த்தெழுமா? எழும் என்றால் எப்போது?

 

cramericanempireஇது இந்தியப் பொருளாதாரம் பற்றிய கேள்வியா என்றால் இல்லை, அமெரிக்கப் பொருளாதாரம் பற்றியது. நான் திரும்பத் திரும்பச் சொல்வது இதுதான், அமெரிக்கா முழுதும் குணமடைய – குறைந்தது 40 காலாண்டுகள் அதாவது பத்து வருடங்கள் ஆகும். இதைச் சொன்னவுடன், என்னை ஏதோ பன்றிக்காய்ச்சல் நோயாளியைப் போல ஓரம் கட்டி விடுகிறார்கள். அமெரிக்கா மோசமான விவசாயப் பண்ணைக் காலனி நாடு போல ஆகிக் கொண்டிருக்கிறது, பத்து ட்ரிலியன் டாலருக்கு மேற்பட்ட தேசக்கடன் ஆயிற்று, அதுவோ நாட்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதம் – என்று நான் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதனுடைய நிதிப்பற்றாக்குறை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டே போகிறது கூடிய விரைவில் வருட வருமானத்தில் 10 சதவீதம் போல ஆகப் போகிறது. சென்ற வருடம் அமெரிக்க நிதி மேலாட்சி நிறுவனங்கள் [மூழ்கப் போகிற நிலையில் உள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு] அளித்த நிதி உதவி 6.8 ட்ரிலியன் டாலர்கள் இவை தற்காலிகக் கடன்களும், கடன் மற்றும் சொத்துக்களுக்கு உத்திரவாதங்களும் சேர்ந்த தொகை. இந்த வருடம் முதல் காலாண்டு முடிவில் இதே நிதி உதவித் திட்டங்களின் மொத்த மதிப்பு 13.9 ட்ரிலியன் டாலர்களை எட்டி விட்டது.

[மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ட்ரிலியன் = 1000 பிலியன்; பிலியன்=1000 மிலியன்; மிலியன்=1,000,000 என்பது அமெரிக்க எண்ணிக்கை முறை. ஒரு ட்ரிலியன் என்பது 1,000,000,000.000 ஆகும். ட்ரிலியன் என்ற எண்ணில் 12 சுழிகள் இருக்கும். இந்தியக் கணக்கில் என்ன ஆகும் என்று யோசியுங்கள். விடை கட்டுரை இறுதியில்!]

மத்திய அரசுடைய நிதிப் பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேக வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருட்கள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.

[மேலே மூன்று வரிகள் மொழி பெயர்க்கப்படாமல் விடப்பட்டன. கட்டுரை ஆசிரியர் அவற்றில் உள்ள தகவல் மூலக் கட்டுரை பிரசுரமானபின் மாறிவிட்டதால் அவை இனி அவசியமில்லை என்று தெரிவித்தார். ]

கடன்வாங்கும் தகுதி குறித்து தர நிர்ணயம் செய்யும் எஸ் & பி நிருவனம் போன்ற அமைப்புகள் அமெரிக்க அரசின் கடன் வாங்கும் தகுதியைக் கீழிறக்கி அறிவிப்பு செய்யப் போவதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை அது வளரும் நாடுகளின் தரத்துக்கு இறக்கப்பட்டு விடும், இப்படி அறிவிப்பதன் மூலம், உலகின் ஒரே மேலாண்மை சக்தியான அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்திர இயக்கம் உள்ள, தர உறுதி தரும் நிறுவனங்கள் என்று அந்நிறுவனங்கள தம்மை நிலை நாட்ட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அப்படி ஏதும் நடக்குமென நான் கனவு கண்டு கொண்டிருக்க வேண்டியதுதான், எங்கே நடக்கப் போகிறது!

[ மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: உலகப் பொருளாதார நிலையைத் தொடர்ந்து கணித்து நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தரமதிப்பைக் கொடுக்கும் நிறுவனத்தின் சுருக்கப் பெயர் எஸ் அண்ட் பி. முழுப் பெயர் ஸ்டாண்டர்ட் அண்ட் பூ(வ)ர் ;Standard and Poor -also known as S&P)

பொருளாதாரக் கூட்டுறவு மேலும் வளர்ச்சிக்கான அமைப்பிற்காக (Organization for Economic Cooperation and Development – OECD) தான் எழுதிய ஒரு முன்னோடி நூலில் ஆங்கஸ் மேடிஸன் (Angus Madison) என்பவர் கடந்த 2000 வருடங்களில் உலகப் பொருளாதார வருட வருமான மதிப்பில் ஒவ்வொரு நாட்டின் வருடாந்திரப் பங்கு என்ன என்பதைப் பற்றி பல முக்கியமான விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். அதில் இந்தியா மற்றும் சீனா குறித்த பல ருசிகரமான தகவல்கள் கிட்டுகின்றன. 1820 ஆம் ஆண்டில் கூட சீனா (33%), இந்தியா (16%) பங்களித்தன; இதர ஆசிய நாடுகள உலக வருட வருமானத்தில் 55% க்கு மேற்பட்ட பங்கை அளித்திருக்கின்றன. 20ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ, ஆசிய நாடுகளின் பங்கு 29 சதவீதமாகக் குறைந்து விட்டது. சீனாவின் பங்கு 12% ஆகவும், இந்தியாவின் பங்கு 5% ஆகவும் சரிந்தாயிற்று.

அடுத்த இருபது வருடங்களில், உலக வருட வருமானத்தில் த்ன பங்கு குறைந்தது 30% ஆவது ஆக இந்தியா திட்டமிட வேண்டும். அதைச் செய்ய இந்தியா மிக துரிதமாக முன்னே விரைய வேண்டும். இந்தியா பொருளாதாரத்தில் வருடம் 8 அல்லது 9 சதவீதமாவது வளர்ந்ததென்றால் வருகிற பத்தாண்டுகளில் உலகின் மூன்றாவது அல்லது நான்காவது சூப்பர் சக்தியாக ஆகலாம்.

இதற்கு இணையாக உலக வருட வருமானத்தில் மேற்குடைய பங்கு குறைந்து உலக நடப்புகளில் அதன் முக்கியத்துவம் கீழிறங்கும் என்பதை இது சுட்டுகிறது.

மொத்தம் என்னவோ 100 சதவீதம்தானே, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பங்கு கூடினால் வேறு நாடுகளின் பங்கு குறையத்தானே செய்யும். 1920களில் வந்த பெரும் சரிவைப் போல இல்லாமல், மேற்கில் இன்று வந்துள்ள வீழ்ச்சி வெறும் பொருளாதாரச் சிக்கல் இல்லை. இதில் மக்கள் தொகைப் பெருக்கம் குறித்தும், தொடர்ந்து நடக்கும் பெரும் மோதல்கள் ( தீவிர இஸ்லாத்துடன் மேற்கு நடத்தும் போர்) எனவும் ஆன இதர பரிமாணங்கள் உண்டு.

ஜனத்தொகை குறித்து- யூரோப் உலக வரைபடத்தில் இருந்து மக்கள் தொகை அளவைப் பொறுத்து கரைந்து, காணாமலே போகக் கூடிய ஆபத்தில் உள்ளது. முதல் உலகப் போரின் போது, உலக மக்கள் தொகையில் யூரோப்பின் பங்கு 20 சதவீதமாக இருந்தது, இப்போது அது 11 சதவீதம்தான் இருக்கிறது. அது மட்டுமல்ல வருகிற சில பத்தாண்டுகளில் அது 3 சதவீதமாகச் சரிந்து விடும் ஆபத்தில் இருக்கிறது.

யூரோப்பிய நாடுகளில் மக்கள் பெருக்க விகிதம் ஆண்டுக்கு 1.5 சதவீதமாகத்தான் இருக்கிறது, ஆனால் மொத்த எண்ணிக்கையாக இருப்பதை அதே அளவில் நிலைத்து வைக்கச் செய்யவே, அந்தப் பெருக்க வீதம் 2.1 சதவீதமாக இருக்க வேண்டும்.

[இப்படி யூரோப் தன் இன்றைய மொத்த மக்கள் தொகையை அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொண்டால் கூட உலக மக்கள் தொகையில் அதன் பங்கு குறைந்து கொண்டே போகும், ஏனெனில் இதர பகுதி மக்கள் தொகைப் பெருக்கம் அதிக விகிதமாக இருக்கிறது. ஆனாலும் பெரும் சரிவைச் சந்திக்காமல் இருக்க யூரோப்பியர் கூடுதலாகக் குழந்தைகள் பெறுவதைச் செய்ய வேண்டும். இது இப்போதைக்கு நடப்பதாகத் தெரியவில்லை.]

அமெரிக்காவைப் பொறுத்து சிக்கல் இன்னும் மோசமாக இருக்கிறதுஅங்கு மக்களிடையே சேமிப்பு விகிதம் குறைந்து கொண்டே போகிறது, அதோடு அங்கு குடும்பங்களையே அரசுடைமை ஆக்குவதும், அரசாங்கத்தைத் தனியார் மயமாக்குவதும் ஒரே நேரம் நடக்கின்றன என்பவை சிக்கல் கூடுவதற்குத் தெளிவான சான்றுகள்.

இப்படி நலிந்து வரும் ஒரு பேரரசுடன் எந்த வகை உறவும் ஆபத்தானது. தான் ஒரு தேய்ந்து வரும் பேரரசு என்பதை அந்த நாடு எளிதில் ஏற்காது என்பது ஒரு துவக்க கட்ட நிலைதான்.

அதில்லாமல், தன் விருப்பம் இனி உலகத்தில் அவ்வளவு செல்வாக்கு இல்லாதது என்று அதற்குத் தெரியும்போதும், அது உலகரங்கில் தன் அதிகாரத்தை, விருப்பத்தை முன்போல நிலைநாட்டவே முயலும். இதற்காக இந்தியாவை மிரட்டித் தன் விருப்பிற்கு அடிபணிய வைக்க முயல்கிறது அது.

இதனால், எந்த அமெரிக்க அரசு அதிகாரி இந்தியாவிற்கு வந்தாலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள தாடிக்காரர்கள் மிக வீராப்பு காட்டிப் பொங்கி எழுவார்கள். 90’களில் இந்தியாவில் இருந்த ராபின் ராஃபேல் என்ற அதிகாரியை உங்களுக்கு நினைவிருக்கலாம். இவர்தான் ஹூரியாத் கூட்டணி என்ற காஷ்மீரி அமைப்பைத தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் ஆட்சி காலத்தில் ராபின் ராஃபேல் இந்த ஹூரியத் கூட்டணியைசற்று மிதமாக்கப்பட்ட பயங்கரவாதிகளின், மற்றும் அச்சுறுத்தப்பட்ட மிதவாதிகளின் கூட்டணி அதுஎப்படி எல்லாமோ பலப்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை இந்தியா இன்னமும் கோபத்துடன் நினைவு வைத்திருக்கிறது. அவர் கிளிண்டனுடன் சேர்ந்து படித்தார் என்பது ஒன்றுதான் அவருடைய பதவிக்கு ஒரே காரணம்.

இனி ஹிலரி (க்ளிண்டன்) இந்தியாவிற்கு வரும்போதும் ஜம்மு காஷ்மீரில் வன்முறை வெடிக்கும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க அரசு அதிகாரிகளின் இந்திய வருகைக்கும், ஸ்ரீநகர் நகரமையத்தில் வெடிக்கும் வன்முறை அளவிற்கும் உள்ள ஒத்திசைவை இந்திய வெளிநாட்டுறவு அமைச்சகத்தின் அதிகாரி யாராவது வரைபடமாக வரைந்து பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஒரு நாட்டையே தனது சொத்தாக ஆக்கி அதை அடக்கி ஆளும் பாகிஸ்தான் ராணுவத்திடம் தனக்கிருக்கும் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது என்பதை நலிந்து வரும் அமெரிக்கப் பேரரசு அறிந்திருக்கிறது. இஸ்லாமாபாத் எந்தப் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள வரும் முறையே அலாதி.

அவர்கள் (பாகிஸ்தானியர்) தம் தலைக்கு நேரே தாமே ஒரு துப்பாக்கியைக் காட்டிக் கொண்டு மற்றவர்களோடு பேரம் செய்வர். தாம் கேட்கும் நிதியைக் கொடுக்கவில்லை என்றால் தமக்குப் பெரும் ஆபத்து நேரும் என்று மற்றவர்களைப் பயமுறுத்துவர். பன்னாட்டு உறவுகளில் இதுதான் மிகவும் சாமர்த்தியமான பிச்சை எடுப்பது. கேட்தை அவர்களுக்கு வாய்க்கரிசியாய்ப் போட்டாலும் எந்த விளைவும் இராது, ‘அமெரிக்க சாத்தானுக்குஎதிராக அந்நாட்டில் சதித்திட்டம் போடுபவர்களுக்கு ஒரு வசதிக் குறைவோ, தடையோ இராது.

அடுத்த கட்டத்தில் நலிவுறும் பேரரசு கூனிக் குறுகி கேட்டதைக் கொடுத்து சமாதானம் செய்யப் பார்க்கும். கெய்ரோவில் ஒபாமா பேசிய பேச்சு இந்த வகைத்தானது. உலக மனித நாகரிகத்தின் அத்தனை சாதனைகளையும் இஸ்லாமிய நாகரிகத்தின் சாதனைகளே என அவர் அறிவித்து விட்டார். (கணிதத்தில்) இந்துக்கள் சூன்யத்தைக் கண்டு பிடித்ததை மறப்போம், (வானவியலில்) டாலமியையும், கோபர்நிகஸையும் மறந்து விடுவோம், வரலாற்றைத் திருத்தி எழுதினால் போச்சு!

மூன்றாவது, நலிவுறும் பேரரசு தன்னை அச்சுறுத்தும் சண்டியர்களிடம் இருந்து தனக்குத் தொல்லை குறைய, மற்ற நாடுகளைத் தனக்காகத் தியாகங்கள் செய்யுமாறு வற்புறுத்தும். அதனால் தீவிர வாத இஸ்லாமியரை ஏதும் செய்ய முடியாது என்று ஆகிவிட்டது, அதனால் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐஎஸஐ(Inter-Services Intelligence- I.S.I) வற்புறுத்தினால்இதன் விருப்பம்தான் முக்கியம், பத்து சதவீதம் வெட்டு கேட்பதில் பிரபலமான ஜர்தாரியின் விருப்பம் எதுவும் அல்லஅதன் விருப்பத்தை நிறைவேற்ற காஷ்மீரை பாகிஸ்தானிடம் கொடுத்து விடச் சொல்லி இந்தியாவைக் கழுத்தை நெருக்கி வ்ற்புறுத்தும்.

இங்குதான் நலியும் ஒரு அரசியல் சக்தியைப் புரிந்து கொள்ள நமக்கு அபார சாமர்த்தியம் ஏன் தேவை என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்கா ஒரு நலியும் பேரரசு என்பதை நாம் ஆழமாக மனதில் பதிக்க வேண்டும், நம் அரசதிகாரிகள் தினம் 108 முறைகள் இந்தக் கருத்தை உச்சாடனம் செய்து கொண்டு வர வேண்டும்.

அமெரிக்கா ஜனநாயக நாடுகளுடன் உறவு கொள்வதில் அவ்வளவு வசதியாக உணர்வதில்லை என்பதையும் நினைவு கொள்ள வேண்டும். அதற்கு எப்போதுமே  சர்வாதிகாரிகளால் ஆளப்படும் நாடுகள்தான பிடித்தமான நட்பு நாடுகள், ஏனெனில் அந்த வகை நாடுகளை அது தன் விருப்பத்துக்குப் பயன்படுத்தித் தூக்கி எறிந்து விடப் பழகி இருக்கிறது.

ஜனநாயக நாடுகளோடு உறவு வைப்பது மிகச் சிக்கலானது. ஏனெனில் அந்த நாடுகள் தம் உள்நாட்டில் உள்ள பல வகைக் குழுக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணிக்க முடியாததைப் பற்றிப் பேசத் துவங்கி விடும். அவற்றுடைய நடத்தை இந்த விதத்தில் அமெரிக்காவின் நடத்தை போன்றதே. இந்த வகை எதிர்பிம்ப நடத்தை தனக்கு நிகர் யாருமில்லை என்று இறுமாந்திருக்கும் ஒரு சூப்பர்-சக்தி நாட்டுக்குப் பிடிக்காமல் போவதில் என்ன வியப்பு இருக்கிறது?

வருடத்துக்கு 8 சதவீதம் வளரும் நாடாக இந்தியா இருந்தால் அந்த வளர்ச்சியின் கூட்டு விகிதத்தையும்  சேர்த்துக் கவனித்தால் அது சீக்கிரமே பெரும் சக்தி உள்ள நாடாகி விடும்- அதே நேரம் உலகிலேயே நபருக்குத் தலா அதிகபட்சம் ஏ.கே-47 துப்பாக்கிகளை  வைத்திருக்கும் நாடும், உலகிலேயே பெரிய பிச்சைக் குவளை வைத்திருக்கும் நாடும், நம் ப்யங்கரவாத அண்டை நாடுமானது இந்த நலியும் அமெரிக்கப் பேரரசை அச்சுறுத்தி தான் அமைதி காப்பதற்கு,் தன் விருப்பத்தையெல்லாம் இந்தியா நிறைவேற்றி வைக்குமாறு செய்யக் கோரும்.

இந்தியாவுக்கு எது நல்லது என்று பார்த்தால், இன்னும் பத்து-இருபது ஆண்டுகளுக்குப் பாகிஸ்தானில் தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடப்பதுதான். தன்னைத் தானே தின்று தீர்ப்பதை ஒத்த ஒரு புகை மூட்டமான போர் தொடர்ந்து பெருகிக் கொண்டே போகும் சிதைவு நிலை நீடிப்பதுதான்.

இன்னொரு தீர்வு- அந்த நாட்டை மூன்று அல்லது நான்கு நாடுகளாகப் பிரித்து விடுவது. ஒரு நிலைத்த பாகிஸ்தான் என்ற கருத்தே இனி செல்லாக் காசாகி விட்ட நிலையில், வெறும் கானல் நீராகி விட்ட நிலையில், இந்த முடிவை நலிந்து வரும் பேரரசிற்கு நாம் தெளிவாக உறுதியாகத் தெரிவிக்க வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் நலிந்து வந்த சக்தியான பிரிட்டிஷ் பேரரசு இன்று யூரோப்பின் சவலைக் குழந்தையாகி விட்டது. ஆனால் இந்திய துணைக் கணடத்தின் நிகழ்ச்சிகளை இன்னமும் தனனால் பாதிக்கமுடியும் என்ற பெருங்கனாவில் மூழ்கி இருக்கிறது.  பிரிட்டிஷ் பேரரசு தான் முழுதும் வீழுமுன் இந்தியாவை இரு துண்டுகளாக உடைத்துப் போட்டுப் பெரும் அழிவைத் தோற்றுவித்தது. இன்று நலிந்து வரும் பேரரசான அமெரிக்காவும் அதே போலத் தற்காப்பு நடவடிக்கை என்ற நினைப்பில் ஏதாவது அசட்டுத் துணிச்சலாகச் செய்ய முயலலாம்.

இதில்தான் நம் அரசியல் தலைமைக்கும், அரசின் உயர்நிலை அதிகாரிகளுக்கும் ஒரு சவால் எழுகிறது. நலிந்து வரும் பேரரசைக் கையாள்வது நிலைத்த பேரரசைக் கையாள்வதை விடக் கடினமான சவால்.

(ஒரு ட்ரில்லியன் டாலர்  என்பது  இந்தியக் கணக்கில்  ஒரு லட்சம் கோடி டாலர். ஒரு ட்ரிலியன் அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு – தோராயமாக ஐம்பது லட்சம் கோடி ரூபாய்).

மொழிபெயர்ப்பு: மைத்ரேயன்.

 

[கட்டுரை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பஸ் (Express Buzz) என்ற பக்கங்களில் 21-06-2009 ஆம் தேதியில் வெளிவந்தது. கட்டுரை ஆசிரியர் பேராசிரியர் வைத்தியநாதன் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மானேஜ்மெண்டில் பணியாற்றுகிறார். இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் அவருடைய சொந்தக் கருத்துகள். அவர் பணியாற்றும் நிறுவனத்துடையவை அல்ல. இக்கட்டுரையை மொழிபெயர்த்து இங்கு பதிக்க அனுமதி தந்த பேராசிரியர் வைத்தியநாதனுக்கு சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது.

 

மேலே உள்ள சில அடைப்புக்குறிகளிடையே சாய்வெழுத்துக் குறிப்புகள் மொழிபெயர்ப்பாளருடையவை. அவை வாசகர் சௌகரியத்துக்காகக் கொடுக்கப் பட்டவை.]