ஒரு நாள் இரவு 9.00 மணிக்கு ராஜமார்த்தாண்டனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதற்கு சில நாட்கள் முன்பு அவர் ஈழத்து கவிஞர்கள் பற்றி ஒரு கல்லூரி கருத்தரங்கில் பேசிய உரை, பின் எங்கள் இருவருக்கும் பிடித்த, கனடாவுக்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழக் கவிஞர், திருமாவளவனின் ‘”இருள் யாழ்” என்னும் தலைப்பிலான அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பையும் எனக்கு அனுப்பியிருந்தார். முதலில் படித்த அவரது கட்டுரை, எப்போதும் போல், எனக்கு பிடித்திருந்தது. கவித்வத்தையும் அனுபவ உண்மையையும் மாத்திரமே பார்வைக்கு எடுத்துக்கொண்டு, மிக நன்றாக எழுதப்பட்டிருந்தது அது. “கிடைச்சதா? படிச்சீங்களா? என்று கேட்டார். சொன்னேன். “கவிதைத் தொகுப்பு?” என்று கேட்டார். “இல்லை, இன்னம் படிக்கவில்லை. கட்டுரைப் பேச்சு படிக்க சுலபமாக இருந்தது ரசமாகவும் இருந்தது. அதை முதலில் படித்துவிட்டேன். கவிதையை இனிமேல் தான் சாவகாசமாகப் படிக்கவேண்டும்.” என்றேன். “அதைத் தானே நீங்கள் முதலில் படித்திருக்கவேண்டும். படிச்சு சொல்லுங்க. அதைப் பத்தி நீங்க எழுதவும் வேணும். உங்க கிட்டேயிருந்து தானே நான் திருமாவளவனைத் தெரிஞ்சு கிட்டேன்.” என்றார். எனக்கு கஷ்டமாக இருந்தது. “கட்டாயம் எழுதறேன்.” என்றேன். “கொஞ்ச நாள்லே அங்கே வருவேன். வரப்போ சொல்றேன். சந்திக்கலாம்” என்றார். இப்படியே நிறைய பேசிக்கொண்டே இருந்தார். அன்று அவர் பேசிய குரலில் நிதானம் இல்லை. வாய் குழறியது. குடித்திருக்கிறார், இன்னம் போதை தெளியவில்லை என்று தெரிந்தது. இடையிடையே அவர் வீட்டிலிருந்து அவரைக் கண்டிக்கும் குரலும் கேட்டது. ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படுவதாக இல்லை. “அதை விடுங்க. நீங்க எழுதணும்.” என்றார் மறுபடியும். “பிறகு பேசலாமே,” என்று சொல்லி பேச்சை வெட்டவும் மனது வரவில்லை. அவருடைய அந்த நிலையில், சூழலில் பேச்சைத் தொடர்வதும் கஷ்டமாக இருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருடன் இரண்டு மூன்று முறை நானே தொடர்பு கொள்ள முயன்றேன். யாரும் தொலை பேசியை எடுப்பதாக இல்லை. கடிதமாக எழுதலாமா, என்று நினைத்தேன். எவ்வளவு எழுதுவது? பேசுவதே நல்லது, அதுதான் நியாயம் என்று மனதுக்குப் பட்டது. இதற்கிடையில் திடீரெனெ இந்த செய்தி. ஹரன் பிரசன்னா இனையத்தில் எழுதியிருந்ததிலிருந்து தான் எனக்குத் தெரிந்தது.
அவர் இறந்தது சாலையில், ஏதோ கன வாகனம் மோதி இறந்து விட்டார் என்று சொன்னார் பிரசன்னா.
ஒரு நல்ல நண்பரை, நல்ல ரசிக மனம் படைத்த மனிதரை, ஒரு சிறந்த கவிஞரை இழந்து விட்டேன். அவருக்குச் சொல்ல வேண்டியிருந்தது, அவருடன் உரையாட வேண்டிருந்தது, நிறைய இருந்தது. என் மனசுக்குள் அந்த சந்திப்பை, நீண்ட உரையாடலை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். சாவகாசமாக, எந்த இடையூறுமின்றி, அமைதியில், அவருக்குப் பிடித்த மாதிரியே நாலைந்து பெக் உள்ளே போக, அதுவும் வெகு சாவகாசத்தோடே தான் கொஞ்சம் கொஞ்சமாக.
ஆனால் அப்படி நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த மாதிரியான சாவகாசத்துக்கெல்லாம் அவர் ஆளில்லை, இந்த விஷயத்தில் மாத்திரம்.மற்றதெல்லாம் சாவகாசம் தான். இனி என்னவோ அது நடக்கப் போவதில்லை. அந்த ஏமாற்றத்தோடு ஒரு குற்ற உணர்வும் உள்ளே அரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
இதற்கு முன்னரும் அவர் சுந்தர ராமசாமி கவிதைகள் பற்றி எழுதிய புத்தகமும் எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு வருடம் இருக்கும். அது பற்றி நான் கட்டாயம் எழுதவேண்டும் என்று அவர் இரண்டொருமுறை தொலை பேசியில் வற்புறுத்தியுமிருந்தார்.
நான் எழுதவில்லை. எழுதவேண்டும் என்று தான் இருந்தேன். சுந்தர ராமசாமியிடம் அவருக்கு இருந்த மதிப்பும் நட்பும் எந்த நிலையிலும் பங்கப் படாத ஒன்று. கவிஞராக, எழுதாளராக, நண்பராக. அதேபோல ராஜமார்த்தாண்டன் மிக உயர்வாக மதித்த இன்னொரு கவிஞர் தர்மூ சிவராமூவின் (பிரமீளின் அன்றைய
பெயர்) குரோதம் மிகுந்த தாக்குதலால் கூட பாதிக்கப்படாத நட்பும் மதிப்பும் அவருக்கு சுந்தர ராமசாமி பேரில் இருந்தது. பின்னாட்களில் தர்மூ சிவராமுவிடம் காணப்பட்ட அற்பத்தனமான கோபங்களையும் பகைமையையும் அறிந்தும் அதை மீறி கவிஞராக தர்மூ சிவராமூவை அவர் மதித்தார். இதை ராஜமார்த்தாண்டனிடம் காணப்பட்ட சாத்வீகம் என்றும் சொல்லலாம். அததது அததன் இடத்தில் என்ற பக்குவ நிலையைக் குறிப்பதாகவும் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் தமிழ் எழுத்தாளர் உலகில் மிக மிக அரிதாகக் காணப்படும் குணம் இது. கவித்வ பிரக்ஞையும், வேறு எதுவும் தன்னைப் பாதிக்க விடாது தான் சிருஷ்டித்துக்கொண்ட உலகிலேயே ஒரு மோன நிலையில் வாழ்வதும் ஒரே இடத்தில் சங்கமித்துள்ள மாயம் என்று தான் சொல்லவேண்டும்.
இந்த மன நிலையை நான் அன்று புரிந்து கொண்டவன் இல்லை. கொல்லிப் பாவை இதழை அவர் பொறுப்பில் வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் தான் நான் ராஜமார்த்தாண்டனை அறிவேன் – 1970-களின் பிற்பாதியில் அப்போது தர்மூ சிவராமூவுக்கு அவர் முன்னர் பாராட்டிக்கொண்டிருந்த எல்லோரையும் இப்போது கொண்ட பகைமையில் அழித்தே தீர்வது என்ற முனைப்பில் இருந்த காலம் அது. இவ்வாறு எதிர் எதிர் முனைகளில் இருந்த எல்லோருக்கும் கொல்லிப் பாவையில் இடம் தரப்பட்டது. அப்போது தில்லியில் இருந்த நானும் சுந்தர ராமசாமியும் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். “என்னய்யா இது? சிவராமூ எழுதுவதில் நியாயமான வாதம் இல்லை. வீண் பகைமைக் காய்ச்சல் தான் இருக்கிறது என்பது ராஜமார்த்தாண்டனுக்கு தெரியவில்லையா? என்று கேட்டேன் ஒரு முறை. “ராஜமார்த்தாண்டனுக்கு சிவராமூ என்றால் ஒரு soft corner. அது இருக்கத்தான் இருக்கும்.” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். 1972-1973 லிருந்து இன்று வரை நாலைந்து முறை நான் நாகர்கோயில் சென்றிருந்த போதிலும், ராஜமார்த்தாண்டனைச் சந்தித்ததாக நினைவில் பதிவுகள் இல்லை. அவரை நான் நேரில் பார்த்துப் பேசியது 2000-ல் சென்னையில் தான் என்று தான் நான் நினைக்கிறேன். அதற்கு சில வருஷங்கள் முன்பு, சாஹித்ய அகாடமியின் ஹிந்தி இதழ் பாரதீய சம்காலீன் சாஹித்ய பத்திரிகைக்காக நவீன தமிழ்க் கவிதை சிறப்பு மலருக்கு கவிதைகள் தேர்வு செய்தபோது, ராஜமார்த்தாண்டனின் ‘அவனும் நானும்‘ கவிதையையும் சேர்த்திருந்தேன். அது எங்கேயிருந்தோ எடுத்தது. அவரது கவிதைத் தொகுப்பை நான் அறிந்தவனில்லை. ராஜமார்த்தாண்டனை கவிஞனாக அறிந்தவனும் இல்லை.அப்போது ராஜமார்த்தாண்டனை, தருமு சிவராமூவிடம் தான் கொண்ட அபிமானத்தையும் மீறி, சிவராமூவுக்கு என்னிடமிருந்த பகைமையையும் மீறி எனக்கு தன் பத்திரிகையில் இடம் கொடுத்த ஒரு அபூர்வ மனிதர் என்று தான் எனக்குத் தெரியும். கொல்லிப் பாவை அன்று நிறைய சச்சரவுகளுக்கு, சிவராமூவையும் மீறி, விரும்பி இடம் கொடுத்திருந்தது எனக்கு முக்கிய விஷயமாகப் பட்டது. பின் வந்த இடைப்பட்ட சில வருடங்களில் அந்த சச்சரவுகளின் சூடு தணிந்து அவையெல்லாம் சரித்திரமாக மனதில் பின் தங்கிய விஷயங்களாகியிருந்தன.
2000- ல் நான் சென்னைக்கு குடி மாறிய சில மாதங்களுக்குள் ஒரு ஜூன் மாத நாளில், தமிழினியின் புத்தக வெளியீட்டுக் கூட்டம் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது மிகுந்த சினேகபாவத்தோடு பேசிக்கொண்டிருந்தார். தமிழினி வெளியிட்ட புதுமைப் பித்தன் பற்றிய மூன்று புத்தகங்களில் ராஜமார்த்தாண்டன் எழுதியதும் ஒன்றாக இருந்தது. தினமணியில் அவர் வேலை செய்துகொண்டிருந்ததாகத் தெரிந்தது. நல்ல இடம் தான், மகாதேவன் போன்றவர்கள் எல்லாம் இருந்த இருக்கும் இடம் என்று அதைப் பற்றி எனக்குள் ஒரு பிம்பம் இருந்தது. அதைத் தொடர்ந்து பின் ஒரு நாளில் அவரது கவிதைத் தொகுப்பு என, ஒரு சிறிய கையேடு மாதிரி, 50 பைசாவுக்கும் 60 பைசாவுக்கும் லலிதா சகஸ்ரநாமம், விநாயக ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் விற்குமே இத்தினியூண்டு புத்தகம், அது ஒன்றை அனுப்பி வைத்தார். புத்தகம் தான் மினியாக இருந்ததே தவிர அது மிக அழகாக, மிகுந்த சிரத்தையோடு அச்சிடப்பட்டிருந்த, தொகுப்பு அது. இவையெல்லாவற்றையும் மீறி அது எனக்கு ஒரு மிகச் சிறந்த ஒரு கவிஞனை அறிமுகப் படுத்தும் கிட்டத்தட்ட 60 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக இருந்தது. அது “கவிஞர் பிரமிள் நினைவாக”, சமர்ப்பிக்கப் பட்டதாகச் சொன்னது அந்தத் தொகுப்பு. எவ்வளவு தூரம் பிரமிள் என்ற ராஜமார்த்தாண்டத்தின் மனதில் இடம் பிடித்திருந்தார் என்பதை அது சொன்னது. ஆனால் அந்த தொகுப்பு பற்றி நான் எழுதியிருந்தேன். (புதுசும் கொஞ்சம் பழசுமாக – கவிதை பற்றி) கவிதை பற்றிய சிந்தனைகள், கவிதைகள் இரண்டிலும் ராஜமார்த்தாண்டன் போற்றும் பிரமிளும் ராஜமார்த்தாண்டனும் எதிர் எதிர் துருவங்களில் இருப்பதாகத் தான் சொல்லவேண்டும். பிரமிள் தன் கவிதைக்கான சிறப்புக்கள் என்று எதையெல்லாம் பிடிவாதமாக அதன் உயிர்ப்பு அற்ற கட்டத்திலும் பற்றி இருந்தாரோ அதையெல்லாம் முற்றிலுமாகத் தவிர்த்த கவித்வம் ராஜமார்த்தாண்டனது. பிரமீளின் சரிவு அவருக்குத் தெரியாமலில்லை.
இருப்பினும், ஒரு சிகரத்தை ஒரு காலத்தில் தொட்ட பிரமிளின் நினைவு மங்கவில்லை.
கொல்லிப்பாவையில் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய பரிமாறல்கள் இடம் பெற்றன.
எல்லாவற்றிற்கும் அதில் இடம் இருந்தது. எல்லா பார்வைகளும் இடம் பெறவேண்டும் என்பது ராஜமார்த்தாண்டனது எண்ணம். அப்போது பலர் அதை விரும்பாததாகக் காட்டிக்கொண்டாலும், பின்னர் இன்னொருவர் ஆசிரியத்வத்தில் சர்ச்சைகள் இடம்பெறாத போது கொல்லிப்பாவை சப்பென்று ஆகிவிட்டதாகச் சொன்னார்கள். கொல்லிப்பாவை இதழ்கள் தொகுப்பு வரப்போவதாகவும் அதில் எனக்கும், சிவராமுவுக்கும், சுந்தர ராமசாமிக்கும் இடையே நடந்த சர்ச்சைகள் எல்லாம் தொகுப்பில்
கட்டாயம் இடம் பெறும். அவை அடுத்த தலைமுரைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும் என்று சொன்னார். அது போலவே இடப் பற்றாக் குறையில் மற்றவை தவிர்க்கப்பட்டாலும், சர்ச்சைகளை நீக்கிவிடவில்லை என்று சந்தோஷத்துடன் சொல்லியே ராஜமார்த்தாண்டன் கொல்லிப் பாவைத் தொகுப்பை எனக்குக் கொடுத்தார்.
ராஜமார்த்தாண்டனின் கவிக் குரல், அவருக்கேயானதாக அது போன்ற ஒன்று வேறு இடத்தில் கேட்காததாக இருந்தது. வெகு அமைதியான, படாடோபங்கள் அற்ற, இரைச்சலிடாத, அலங்காரங்களைத் தவிர்த்த, சாதாரண அன்றாடம் புழங்கும் வார்த்தைகளில் நம்மைச் சுற்றியுள்ள அனுபவங்களிலிருந்தே அதன் அழகையோ விசித்ரத்தையோ, கவித்வ அனுபவமாக நமக்குச் சொல்வதாக இருந்தது. அமைதியுடன் சீற்றமில்லாது ஒரு அகோரமான வாழ்க்கையைச் சொல்லமுடிந்து விடுகிறது அவரால்.
வழக்கத்துக்கு மாறாக இப்படியாயிற்று
தவழ்ந்து கொண்டிருந்தனர் மனிதர்கள்.எதனாலிப்படி?
திகைத்து நிற்கையில்
கால்களை வாரிவிட்டது ஒரு கை
எல்லோரையும் போல் தவழ்ந்து செல்
அதட்டியது ஒரு குரல்
தவழத் தொடங்கினேன்தொடக்கத்தில் தடுமாற்றம் தான்
பழகிப் போய்விட்டது இப்போது.
நிமிர்ந்து நின்றால் கைகள் காலைவாரிவிடும். இப்போது தவழ்ந்து செல்வது பழகிவிட்டது. நம்மைச் சுற்றி எந்தத் துறையிலும் வெற்றி பெறுபவர்கள் தவழ்ந்து செல்வதை இயல்பாக்கிக் கொண்டவர்கள்தான். கவிஞர் ஏதோ தமாஷாகச் சொல்கிறார் என்று தான் தோன்றும். ஆனால் ஒரு அசிங்கம் பிடித்த வாழ்வனுபத்தை எவ்வளவு அமைதியாக அடக்கிய எள்ளலுடன் சொல்லி விடுகிறார்.
நம்மைச் சுற்றி இருக்கும் தவழ்வதைப் பழகிக்கொண்டவர்களும் இதை மகிழ்ச்சியுடன் படிப்பார்கள். அவர்களைச் சொல்வதாக அவர்களுக்கு கோபம் வராது.
கலகக் காரனில்லை இப்போது
கோபக்காரனுமில்லை
கோஷங்கள் மறந்து போய்விட்டன
முகத்தில் ஒரு புன்னகையை
நிரந்தரமாக ஒட்டிக்கொண்டாயிற்று….
சாலைவிதிகளை மதித்தும் மிதித்தும்
விரைந்த அவன் வாகனம்
சாலையோரம்
செத்துக்கொண்டிருப்பவனைப் பார்த்து
மற்றவர்கள் போலவே கடந்து செல்கிறான்
எப்போதும் கனவில்
அன்றைய கலகக்காரனின் ஆவேசம்
ஏளனப் புன்னகையுடன் கடந்து போகும்
அக்கண அதிர்வுக்குப் பின்
யாவும் சகஜமாகும்
இது தான் நான் தொன்னூறுகளில் எங்கோ உதிரியாகப் படித்து பாரதீய சம்காலீன் சாஹித்ய தொகுப்பிற்கு தேர்ந்தெடுத்த அவனும் நானும் கவிதை. வெளி உலகத்தின் அகோரங்கள், அசிங்கங்கள் எதுவும் அவரது பார்வையில் பட்டு சகஜமாகிவிடவில்லை. அவர் ஏற்றுக்கொள்ளவுமில்லை. உள்ளுக்குள் அடங்கிக் கிடக்கும். அவ்வப்போது நினைவில் புழுங்குமாக இருக்கும். மறைவதுமில்லை. ஆனால் அமைதியாக ஒரு ஏளனச் சிரிப்புடன் அவை கவிதையாக வெளிவரும். இந்த குணம் தான் ராஜமார்த்தாண்டனிடம் கடைசி நாள் வரை காணப்பட்டது.
பத்திரிகை நடத்திய போதும், பலருடன் நேரில் பழகிய போதும், அவர் எதையும் காணாதிருந்ததில்லை. மனத்தினுள் எவ்வளவு சஞ்சலங்கள் இருந்தாலும், உலகின் வெளிநடப்புகள் பல அவருக்கு எவ்வளவு கசந்திருந்தாலும், அந்தக் கசப்புகள் அவரைக் கோபப்படுத்தி வெடித்துச் சீறுவதில்லை. கசப்புகள் மனித உறவுகளைத் துண்டித்து விடுவதில்லை. உணர்ச்சியற்றவர் இல்லை. மதிப்புகள் அற்றவர் இல்லை. அவர் எதனாலும் பாதிக்கப் படாதவர் என்றும் இல்லை. எல்லாம் உள்ளுக்குள் அடங்கிக் கிடக்கும். அவை வெளிப்படும்போதும் மிகத் தீர்மானமாக, யாருடைய முகத்துக்கும் அஞ்சாது, எந்த இழப்பு பற்றியும் நினைப்பில்லாது, எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி வெளிப்படும்.
இந்த அனுபவங்களை, அவர் பழக நேர்ந்த இலக்கிய நண்பர்களை, (‘இலக்கிய’ என்றும், ‘நண்பன்’ என்றும் சொல்வது ஒரு மரபு கருதியேதான், அர்த்தங்களுக்குப் போகவேண்டாம்) ஒருமைப் படுத்தி ஒரு கவிதை ஒன்று:
இயல்பு மறைத்து
இதமான ஒப்பனையுடன்
வித்தியாசமாய்க் காட்சி தருகிறாய்நண்பனே
முகமறியா முகமூடிக் கும்பலில்
நிஜமே போலும் தான் உன்முகம்எனினும்
உன்னுள் புதைந்திருக்கும்
பொறாமையின் அசிங்கங்கள்
குரூரங்கள் வக்கிரங்கள்
எவ்விதம் மறைத்தாய் அவற்றைஅம்முகம் வழியாய்
என்முகம் அறியவே
உன்னை நாடுகிறேன்இதமான ஒப்பனை
முகத்துக்காக அன்று
இதையே பல ரூபங்களில், பல்வேறு மன நிலைகளில், அவ்வப்போதைய அனுபவக் கீறல்களுக்கேற்ப பல கவிதைகள் எழுதியுள்ளார், “நண்பனே, உன் கற்பனை மீசையைத் திருகி,/ நீ கொள்ளும் பரவசம்,/ எவ்விதம் நானறிவேன்” (விமர்சனம்), “தெருவிலுதிர்ந்த பூக்கள் தின்னும்,/ பன்றிகள் சில,/ அவசர அவசரமாக.”
(வாழ்க்கை), “இந்த மனித முகங்களில்,/
பொய்ம்மையற்ற/, இயல்பான/, புன்னகைகள் மலர்ந்தால்/, போதுமே/, ஏதேனும் ஒரு மலர் போல”(பாலை),
நீ ஒரு அயோக்கியன்,
நீ ஒரு சந்தப்பவாதி,
என்றெனக்குச்,
சான்றிதழ் வழங்கி விட்டாய்……
என்னை நானே’
இன்னும் தேடிக்கொண்டிருக்கையில்,
அவசரப் பட்டு விட்டாய்,…
சற்றே நிதானித்திருக்கலாம் நண்பனே,
என்னைப் போலவே” (கணிப்பு)
என்று இப்படி அவர் கவிதைகளில் நிறைய இடங்களைப் பார்க்கலாம். அவர் கசப்பு குரோதமாக, சீற்றமாக வெளிப்படவில்லை. இது இலக்கிய உலகில் மாத்திரம் இல்லை. பொதுவில் சொன்னது இலக்கியத்துக்கும், இலக்கியத்தில் சொன்னது பொதுவிலு மாக அர்த்தம் கொள்ளும். “எங்கள் மான்சன்” என்ற கவிதையில், “அணில்கள் உண்டு, ..எலிகள் பெருச்சாளிகள் உண்டு, .. எறும்புகள் உண்டு, ஈக்கள் உண்டு” என்று சொல்லிக்கொண்டே கடைசியில், “இவற்றுடன், மனிதரென்பாரும் உண்டு, எங்கள் எங்கள் மேன்சனில்” என்று முடிப்பார். கவனிக்கவும், “மனிதரும்” அல்ல. “மனிதரென்பாரும்”. கவிதை படிமங்களில், வர்ணனைகளில், அலங்காரங்களில், இல்லை. அனுபவத்தில், அதன் உக்கிரத்தில், அதன் தனித்வ பார்வை தான் என்பதை ராஜமார்த்தாண்டனின் எளிமையும், அதன் ஆழ்ந்த தனித்வமும் சாட்சியப்படுத்தும்.
நேற்று என்னூரில் பார்த்த
அதே காக்கைகள்
அதே ஜோடி மைனாக்கள்….மனிதர்கள் மட்டும்
வேறு முகங்களுடன்
என்று ஒரு கவிதை. மனிதர்கள் முகங்கள் மாறுபடும் தான். ஆனால் இங்கு வேறு என்ற சொல், தனதல்லாத, பொய்யான என்ற அர்த்தம் கொள்கிறது.
காலடியில் மாலையிலும்
உடன் வரும் நெடிய நிழலை
உச்சிப் போதில்
ஒரு நாய்க்குட்டியெனக்
காலடியில்
பதுங்கி வரும் நிழலை
அறிவேன்அறிந்திலேன் இன்றுவரை
நிழலின் நிஜத்தை
நிழலின் நிஜத்தை என்ற இரு சாதாரண சொற்கள் எங்கு நம்மை இட்டுச் செல்கின்றன? இது எப்படி சாத்தியமாயிற்று?.
ராஜ மார்த்தாண்டனுக்கு பிடித்தமான உலகம், அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் உலகம், மரங்களின், பறவைகளின், பூக்களின், குழந்தைகளின் உலகம் தான். அவரது சிறந்த கவிதைகள் இவற்றைப் பற்றியன தான். இந்த உலகில் அவர் ஆழ்ந்து விடும் போது அவரிடமிருந்து பிறக்கும் கவிதைகள் ஒரு ஜென் ஞானியின் உலகிற்கு நம்மை இட்டுச் செல்லும். பல இடங்களில் அவருக்கு மரங்களும், குழந்தைகளும், பூக்களுமே கவிதை தான். கவிதை பிறப்பதே இயல்பாக, ஒரு மரம் வளர்வது போல, பூக்கள் மலர்வது போல, ஒரு சிட்டுக் குருவியின் சிறகசைப்பைப் போலத் தான்.
முன்செல்லும் பெண்ணின்
தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்
என்ற இருவரிகள் தரும் போதையை இன்றைய எந்த கவிஞனின் வரிகள் தரும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இதற்கு ஈடான வரிகள் எனக்குத் தெரியவில்லை.
இத்தகைய ஒரு கவிமனத்தைத் தான், அவருடைய கவிதைத் தொகுப்பிலும், அவர் தொகுத்துள்ள கொங்கு தேர் வாழ்க்கை என்னும் இன்றைய தமிழ்க் கவிதைத் தொகுப்பிலும் புதுக்கவிதையின் வரலாறு பற்றிய புத்தகத்திலும் காண்போம். ராஜமார்த்தாண்டனின் எழுத்துக்கள் எதுவுமே, புத்தகமாக எழுதப் பெறலும் அவை வெளிவருதலும், அவரிடமும் அவரது ரசனையிலும் தமிழினி வசந்த குமாருக்கு இருந்த பிடிப்பினாலும், வெளிவரவேண்டும் என்ற ஆர்வத்தினாலுமே. வேறு எங்கு வெளிவந்திருக்கும் என்று தோன்றவில்லை.
மூன்றிலும் சமரசமற்ற, தன் பார்வையில் திடமான, எந்த விஸ்வரூபங்களுக்கும் ஆட்பட்டுவிடாத, ஆனால் அமைதியான ஒரு பார்வை மெல்லிய குரலில் வெளிப்படுகின்றன. 460 பக்கங்களில் 93 கவிஞர்களின் 893 கவிதைகள். இங்கு ராஜமார்த்தாண்டன் கவிதைகளாகக் கண்டவற்றைத் தான் காணலாம். சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர், கலைமாமணிகள், கவிக்கோக்கள், கவியர சுகள், 33வது பதிப்பை வெற்றிகரமாக வெளியிட்டவர்கள், தமிழே மேடையில் அமர்ந்திருக்கிறது என்று பாராட்டப்படுபவர்கள் யாரையும் இத்தொகுப்பில் காணமுடியாது. தமிழ் இலக்கிய உலகம் மறந்தவர்களை இங்கு காணலாம். ராஜமார்த்தாண்டன் தேடியது கவிதைகளை. கவிஞர்களை அல்ல. அவரது நிராகரிப்பிற்கும், அங்கீகரிப்பிற்குமான காரணங்களை அவரது புதுக்கவிதை வரலாற்றில் சொல்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் சில இடங்களில் மாற்றுக் கருத்துக்கள் தோன்றலாம். உதாரணமாக,
“வேலியினுள் விதைத்திருந்த, பண்பாட்டுப் பயிர்கள், காலடியில் துவம்சமாச்சு,” என்றும், “மனையாளின் கூரிய விழிகள், குத்திக் குதறின, மனச் சாட்சியை ஊடுருவி”, “ஐயோ, ஏணைக்குள் குழந்தை, இடிபடுவன மனைகள், பொடி படுவன சுவர்கள், முறிபடுவன பனைகள், ” என்று எழுதுகிற சு.வில்வரத்தினம் என்னும் ஈழக் கவிஞரின் கவிதை பற்றி ராஜமார்த்தாண்டனுடன் சாவகாசமாகப் பேச விரும்புவேன் தான். இன்னும் அனேகம் ஈழக்கவிஞரின் நீண்ட உரைநடை விவரணங்களாகி விடும், பி கடனங்களாகிவிடும் கவிதைகள் பற்றியும். “உண்மைதான். எல்லாமே அப்படியில்லை.” என்று அவர் சொன்னார். ஒரு சந்திப்பில். அது போல இன்னும் ஒரு சிலரின் பிந்தைய எழுத்து பற்றி. ஆனால், இத்தகைய தடுமாற்றங்கள் ஒரு விரிந்த பரப்பில் யாருக்கும் வரும் தான். ஆனால் அதே சமயம், “புதுக்கவிதையின் முன்னோடி” என்று க.நா.சு.வை எடுத்த உடனே அங்கீகரித்துவி ட்டு, “அலங்காரங்களை முற்றாகத் தவிர்த்து, அனுபவப் பார்வை மூலமாகக் கண்டறியும் உண்மை கருத்துருவமாகத் தங்கி விடு வதால் உரைநடையாகிவிடுகிறது” என்று க.நா.சு.வின் கவிதை முயற்சிகள் பற்றிச் சொல்லும் அதே சமயம், மிகச் சிறந்த கவிதைகளாக சில வந்துள்ளதையும் அவர் காணத் தவறவில்லை. அவற்றில் ஒன்றான, ‘தரிசனம்‘ என்ற கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இது முரண் போலத் தோன்றும். இப்படித்தான் எனக்கு இன்னும் சிலர் பற்றித் தோன்றியது. அதே போல, இன்னம் சில பேர்மறந்தவர், சில பேர் பிரபலமாகாதவர் கவிதைகளும் இதில் உள்ளன. கவிதைகளாகத் தேடிச் சேர்த்துள்ளார்.
கவிதை அன்றி வேறு எதையும் கருத்தில் கொள்ளாது எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல். இது சாதாரண பாராட்டு அல்ல.
ராஜ மார்த்தாண்டனின் இயல்பும் ஆளுமையும் அப்படிப் பட்டது. அவரே தன் கவிதைகளில் தன்னைப் பற்றி, தன் எதிர்பார்ப்புகள் பற்றி, தன் கனவுகள் பற்றி எழுதியுள்ளார்.
ஒரு பறவையின் பறத்தலென,
இயல்பாய்
ரம்மியமாய்
சலிப்பற்றதாய்
பிரம்மிப்பாய்,
புத்தம் புதிதாய்
ஜீவத்துடிப்புடன்
இருக்கவேண்டும்
கவிதை.
இப்படி யார் கவிதைக்கு இலக்கணம் கூறியிருக்கிறார்கள்? “எனக்கான மலர், எங்கோ மலர்ந்திருக்கிறது, எத்திசையில் என்பதறியேன், …….நம்பிக்கையுடன் தேடியலைகிறேன், அது வரை, குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பாய், மலர்ந்திருக்க வேண்டுமது.”
“இல்லாமல் போக, இப்போதும் மனமில்லை. நூறாண்டு வாழ்ந்துவிட்டபோதும்.
கொஞ்சம் நேசம், அனேகம் துரோகங்கள்,
……கொஞ்சம் செல்வம், அனேகம் கடன் சுமைகள்.
எனினும், பூக்களின் புன்னகை, மரங்களின் ஸ்னேகம், பறவைகளின் சங்கீதம்,
எனவே தான்….. (இல்லாமல் போக இப்போதும் மனமில்லை)
சலிப்பு என்று ஒரு கவிதை.
பெரிதினும் பெரிது கேள்
என்றான் பாரதி.பெரிதொன்றும் வேண்டாமெனக்கு
சில லட்சங்கள் போதும்.’…….இன்றிருப்பதோ நூறு ரூபாய்
இந்த மாலைப் பொழுதேனும்
இனிதாய் கழியட்டுமே………இளநெருப்பாய் உள்புகுந்து
இறக்கை பொருத்தி
பெருவெளியில் மிதக்க வைக்கும்
பிராந்தியே
இதமளிக்கும் குளிர்பானமே
ருசியான பொரித்த மீனே!
புகையும் சிகரெட்டே
வாழ்க
நன்றி உரித்தாகுக.
நம்மில் பலருக்கு உமர் கய்யாமின் ருபாயத், ·பிட்ஜெரால்டின் மொழிபெயர்ப்பில் நினைவுக்கு வரும். அந்த உமரின் இடைவிளை கிராமத்து அவதாரம் தான் ராஜமார்த்தாண்டன்.
Here with a loaf of bread beneath the bough
A flask of wine, a book of verse and thou
Beside me singing in wilderness
And wilderness is Paradise enow
‘கொஞ்சம் நேசம்’, ‘அனேக துரோகங்கள்’ என்று வேறொரு முறை சொல்லியிருந்தாலும், ராஜமார்த்தாண்டனின், சொர்க்கம் இதோ:
வீட்டின் முன்னறை
நாற்காலியில் நான்.
ஜன்னல் வழியே உலகம்.முருங்கை மரமொன்று
அருகே இரண்டு தென்னைகள்
கான்க்ரீட் கட்டடங்கள்
துல்லியமாய் நீல வானம்
சூரியப் பார்வையில் சிலிர்த்தன
யாவும்முருங்கைக் கிளைகளில்
தோன்றி மறைந்து தோன்றி
விளையாடும் அணில்களிரண்டு
எங்கிருந்தோ வந்த காகம்
கிளையொன்றில் அமர்ந்தது
அங்குமிங்கும் அவசரமாய்ப் பார்த்து
சேதியொன்றை கரைந்துவிட்டுப்
பறந்தது மாயமாய்.தெருவில்
எதிரெதிர் திசைகளில்
கடந்துபோகும் மனித முகங்கள்
அவ்வப்போது.இந்தக் கோணத்தில்
இந்தக் கணத்தில்
உலகம் இனிது தான்
இந்த கவிஞர், மனிதர், ரசிகர், குரோதமற்று உலவிய இலக்கியவாதி இல்லை இப்போது. ராஜமார்த்தாண்டன் இறந்த மறு தினம் எனக்கு டோரண்டோவிலிருந்து திருமாவளவனிடமிருந்து தொலை பேசி வந்தது, நண்பர் மறைந்த இழப்பின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள.
One Reply to “முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்”
Comments are closed.