மகரந்தம்

16iran480

சீனாவின் மன நோயாளிகள்

சீனாவில் அதிகரித்து வரும் மன நோயாளிகள் குறித்த கட்டுரை ஒன்று இங்கே. துரித பொருளாதார மாறுதல்களால், அவசியம் கருதியும் நெருக்கடியாலும் நகரம் நோக்கிக் குடி பெயரும் மக்களுக்கு அரசுகள் எந்த உதவியும் செய்ய முயல்வதில்லை, இயலாமை என்பது ஒரு பக்கம் இருந்தாலும். மாறாக அரசும், கட்சிகளும், சந்தையும், ஏன் நடுத்தர மக்களுமே கூட இம்மக்களைச் சுரண்டத் தயங்குவதில்லை. அவர்களை மனிதர்களாகக் கூட நடத்துவதில்லை. சீனா வழக்கமாகவே கொடுங்கோல் முறைகளைப் பயன்படுத்துவது இம்மக்களை இன்னமுமே கூடுதலாக மன நோய்களில் ஆழ்த்தி இருக்கும். ஆனால் இந்தியாவில் இத்தகைய கணிப்பு நடத்தினால் இங்குமே சுமார் 10 சதவீதம் மக்களாவது மன நோய் பீடித்தவர்களாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

ஈரான் தேர்தல்

ஈரானின் சமீபத்திய தேர்தல் முடிவுகளும் அதை தொடர்ந்து எதிர்கட்சியினரின் ஆர்பாட்டமும், 30 வருடங்களுக்கு பிறகு வரலாறு மீண்டும் தன்னை நிகழ்த்தி கொள்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக, ஈரானை பொறுத்தவரை இது போன்ற ஆர்பாட்டங்கள் யாவும் இரு எதிர்-எதிர் அணிகளின் திரைமறைவு பேரங்களில் முடிந்துவிடும். இந்த முறை இந்த ஆர்பாட்டங்களின் முடிவு சற்று வித்தியாசமாக இருக்கும் என்று அறிவிக்கிறது இந்த கட்டுரை

மரபணு வித்தியாசங்கள்

இனங்கள் குறித்த தெளிவான வரையறையை முன்வைப்பது விஞ்ஞான அடிப்படையில் கடினமான ஒன்றாகிவிட்டது. பல இனங்களை கொண்டதாக கருதப்படும் மனித கூட்டத்தில், மரபணுக்களில் நிலவும் வேறுபாடுகள் என்னவோ மிக மிக சிறியது என்று விஞ்ஞானம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. நம் ஆதி தோன்றல்களில் சிலர், நடைபயின்ற பிறகு ஆப்பரிக்க கண்டத்தை விட்டு சற்றே வெளியே நடந்து செல்ல எத்தனித்து, பல திசைகளில் நடந்து விரவினர். அவர்கள் தம்முள் கொண்டிருந்தது மிக சிறிய அளவிலான மரபணு வேறுபாடுகள் மட்டுமே. இது குறித்த கட்டுரை ஒன்று இங்கே. ஆனால், அந்த சின்னஞ்சிறு வேறுபாட்டினால் மட்டும் வரலாற்றில் தான் எத்தனை அழிவுகள், குரோதங்கள்???

காலத்தில் தொலைந்த அழகியல்

காலத்தில் தொலைந்து போன ஒரு தலைமுறையின் அழகியல் உணர்வு குறித்த ஒரு கட்டுரை. கிழக்கு ஜெர்மனியின் சோஷியலிச அரசு மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் சித்தாந்த சட்டகத்துள் அடைக்க முயன்றதும் அதன் விளைவுகள் குறித்தும் ஒரு பார்வை இங்கே

ஐரோப்பிய மொழிப் பிரச்சினை

பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது மொழிப் பிரச்சினை. ஐரோப்பிய பாராளமன்றங்களில் நிலவும் மொழி மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் பிரச்சினைகள் குறித்த பத்தி ஒன்று இங்கே

அறிவியல்

ஜியார்ஜ் சுதர்ஷனின் ஏழு தேடல்கள்

சர்வதேச அளவில் முக்கியமான இயற்பியலாளராகவும் தத்துவ சிந்தனையாளராகவும் அறியப்படுபவர் ஜியார்ஜ் சுதர்ஷன். அவர் தனது அறிவியல் வாழ்க்கையில் ஈடுபட்ட மகத்தான ஏழு தேடல்கள் குறித்து இங்கு காணலாம். ஒளியை விட வேகமாக செல்லும் (theoretical) துகள்களான டாக்கியோன்கள் (Tachyons) குறித்தும், க்வாண்டம் அலகுலகில் கதிரியக்க சிதைவு அடையும் ஒரு விசித்திர மாற்றம் -‘காணப்படுகையில் மாற்றம் நிகழாது’ எனும் பழங்கால கிரேக்க முரண் ஒன்றின் க்வாண்டம் வகை- ஆகியவை என ஏழு சுவாரசியமான தேடல்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன. இவற்றுள் சில புரிந்து கொள்ள கடினமாவையாகவே இருக்கின்றன. இருந்தாலும் கூட அவற்றை எளிய அறிதலிலாவது தெரிந்து வைத்து கொள்வது நம் பிரபஞ்சத்தின் நுண்ணிய பரிமாணங்களில் மானுடத்தின் ஆகச்சிறந்த மனங்கள் நடத்தும் தேடல்களின் அழகை புரிந்து கொள்ள உதவும்.

பரிணாமம் வெப்ப பிரதேசங்களில் (tropics) வேகம் கொள்கிறது

வெப்ப பிரதேச பாலூட்டிகள் குளிர் பிரதேசங்களில் வாழும் பாலூட்டிகளைக் காட்டிலும் வேகமாக பரிணாம மாற்றம் அடைந்து வருகின்றன என அண்மையில் வெளியான ஆய்வு கூறுகிறது. வெப்பநிலை பரிணாம ஊக்கிகளில் முக்கியமான ஒன்றாக இருக்கக் கூடும், ஆனால் பாலூட்டிகள் தம் உடல் வெப்பநிலையை செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்பவை என்பதால் இந்த வெப்ப பிரதேச-குளிர் பிரதேச பாலூட்டி பரிணாம வேக வேறுபாடு என்பது வெப்பநிலை வேறுபாட்டால் மட்டுமே ஏற்படுகிறது என கருதமுடியுமா என பரிணாம சூழலியலாளர் ஜேம்ஸ் ப்ரவுன் (நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகம்) கேள்வி எழுப்புகிறார். ஆனால் 18 ஆம் நூற்றாண்டு முதலே வெப்ப பிரதேசங்களில் குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகில் வர வர உயிரின வேறுபாட்டு செழுமை அதிகரிப்பதை உயிரியலாளர்கள் தொடர்ந்து அவதானித்து வருகிறார்கள். இப்போது பாலூட்டிகளின் பரிணாம வேக வேறுபாடு இந்த அவதானிப்புக்கு புதிய காரணிகளை ஆராயத் தூண்டுகிறது. இது குறித்து மேலும் அறிய இங்கே சொடுக்கவும் (பதிவு செய்து கொள்ள கேட்கும் தளம்.)

சந்திரயானில் கிடைத்துள்ள புதிய படங்கள்

இந்திய விண்வெளி கழகம் சந்திரயானில் கிடைத்துள்ள படங்களை தன் இணையதளத்தில் வலையேற்றுகிறது. அவற்றை இந்த சுட்டியில் காணலாம்.

Gaia வின் மோசமான இரட்டை சகோதரி?

1980களில் வெளிவந்து கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே தன்னை நிறுவிக்கொண்ட ஒரு கருதுகோள் Gaia – புவியின் உயிரியக்கங்களை தம்மை தாமே விரிவாக்கி-செழுமையாக்கிக்கொள்ளும் அதி உயிரியாக காணும் ஒரு புரிதல் சட்டகம். அது ஒரு குறியீட்டு படிமமாகவும் சூழலியல்வாதிகளுக்கு மாறியது. உயிர் வாழும் பூமியில் நாம் ஒரு அங்கம் நாம் அதன் செல்கள் – எத்தனை அழகான சுவாரசியமான புரிதல் அது! ஆனால் அதைப் போலவே உயிர்களை அழிக்கும் உயிர்களுக்கு எதிரான இயக்கமும் பூமி எனும் இக்கிரகத்தின் ஆதாரமான சக்திகளில் ஒன்றாக இருக்கலாம் என கூறுகிறது நியூ சயிண்டிஸ்ட் இதழில் வந்த இந்த கட்டுரை.