பெயரிலென்ன இருக்கிறது?

இது ஷேக்ஸ்பியர் ஓரிடத்தில் கேட்பது. என் உயர் அதிகாரி ஒருவர், ‘பெயரில்தான் எல்லாம் இருக்கிறது’ என்றார். எங்கள் வங்கியில் இருந்த பெரும்பான்மை உயர் அதிகாரிகள் கொங்கணி மொழிக்காரர்கள். இவரும்தான். ஆங்கிலம், மலையாளம், தமிழ் பேசுவார். இவரோடு ஒரு முறை பேங்களூரு வரை போய் வர வேண்டி இருந்தது. காரில். அப்போது அவர் பேசிக் கொண்டே வந்தார். ‘ஒருவருடைய பெயர் தான் அவருடைய ‘Life Script’. அதில்தான் அவர் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக அடங்கியுள்ளது. என் பெயரில் சதானந்த் இருக்கிறது. அதனால் தான் நான் எப்போதும் ஆனந்தமாய் இருக்கிறேன்’ என்றார். அவர் ஆனந்தமாய் இருந்தாரோ என்னவோ அவரிடம் பணியாற்றிய அதிகாரிகள் சதா ஒரு வித கிலியிலும்,குழப்பத்திலுமே இருந்தார்கள். (அதனல்தான் அவர் ஆனந்தமாய் இருந்தார் போலும்). அவர் எப்போது என்ன செய்வார் என்று தெரியாது. காலையில் சென்று அவரிடம் ‘குட் மார்னிங்க்’ சொல்பவரிடம் ‘உன்னை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்பி விடுவேன்’ என்பார். மேசையின் அறைகளில் கடைசி அறையைத் திறந்து அதில் தன் கால்கள் இரண்டையும் போட்டுக் கொண்டு கேபினில் அமர்ந்திருப்பார். அவர் அறை குண்டூசியை யாருமே தொட மாட்டர்கள். எல்லாம் அவர் பல் பதம் பார்த்தவை. ‘காலையில் ஒரு மணி வாக் போவேன் தினமும்’ என்பார். அவர் சொல்லும் பாதை உதாரணத்திற்கு ‘பாரிசில் புறப்பட்டு, தாம்பரம் வரை போய் திரும்பி, வலசரவாக்கம் வந்து மீண்டும் ஆவடி வந்தேன்’ என்கிற ரீதியில் இருக்கும். மாதந்தோறும் அவர் மருந்துகளோடு தொலை பேசியில் கத்தி வாங்கும் கருத்தடை சாதனம் எல்லார் கவனத்தையும் கவரும். சில சமயம் ராமாயணம், இந்த லைஃப் ஸ்கிரிப்ட் போன்ற விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாக, அவர் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியது உண்மைதான் என்று தோன்றும்படி, பேசுவார். மற்றபடி தங்கப் பதக்கம் வாங்கியவன் வங்கியில் சேர்ந்த மாதிரிதான்.

நான் பிற்காலத்தில், மிக்க பொறுப்போடு வேலை பார்த்த என் துணை அதிகாரி ராமலிங்கம் என்பவர் மாற்றல் ஆகிச் செல்கையில், இந்த ‘லைஃப் ஸ்கிரிப்ட்’ விஷயத்தைப் பேசினேன். எங்கள் கிளை ப்யூன் ‘குமாரு’க்கு இரண்டு மனைவிகள். ‘க்ருஷ்ணன்’ என்கிறவருக்கு பல சிநேகிதிகள். இதையெல்லாம் சொல்லி விட்டு ‘ராமலிங்கம் ஆதர்ச மகனாக, கணவனாக, சகோதரனாக, நண்பனாக இருந்த ராமன் போல் ஓர் ஆதர்ச அதிகாரியாக இருந்தார். லிங்கத்தைப் போல அரூபமாக (இந்த இடத்தை துளியும் விரச அர்த்தம் வர வாய்ப்பே கொடுக்காமல் பேசினேன்) மர்மமாகவும் இருந்தார்’ என்றேன். அதற்கும் காரணம் இருந்தது. அவருக்கு வரும் தொலை பேசி அழைப்புகள். அவர் திடீர் திடீரென்று காணாமல் போவது. அவர் வீடு எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது போன்றவை.

dsc_4397_5‘சின்னப்பையன்’ என்ற பெயர் கொண்ட ஒருவர் என்னுடன் வேலூரில் பணியாற்றினார். முதலில்
மிலிடரியில் பணிசெய்தவர். (எக்ஸ் சர்விஸ் மென்களில் மூன்று வர்க்கங்கள் உண்டு. ஆர்மி, நேவி, ஏர் ஃபோர்ஸ் என்று. கொஞ்சம் பழக்கத்திற்குப் பின் ஒருவர் எந்தப் பிரிவில் பணி புரிந்தவர் என்று அவர்களைக் கேட்கமலே சொல்லி விடலாம். ஆனால் பொதுக் குணம்: கேள்வி கேட்காமல் சொன்ன வேலையை செய்வது. உடல் வலு மிக்கவர்களாக இருப்பது.) தலைமை கடை நிலை ஊழியர்.  அவர் போன்ற பொறுப்பு மிகுந்த ஊழியர்களைக் காண்பது அரிது. அவர் இல்லாவிட்டால் கிளையை நடத்துவது சிரமம். ஆயிரக் கணக்கான ஓய்வூதியக் காரர்களை வாடிக்கையாளர்களாய்க் கொண்டிருந்த இந்தக் கிளையில் ஒவ்வொரு பென்ஷனரையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர். பல சமயங்களில் அவர்கள் பென்ஷன் தொகை உட்பட. இந்த சின்னப் பையன்தான் எங்கள் கிளையில் இருந்த சுமார் முப்பது பேரில் முதியவர்.

அவர் குடும்பத்தில் இருந்த ஒரு இளைஞன் பெயர் ‘ஜாம்பவான்’. டி.வி. சம்பந்தப் பட்ட வேலைகளைச் செய்து வந்தார். எங்கள் வீட்டு ஆன்டனாவை வைக்க வந்த போது அவர் நண்பனை துணக்குக் கூட்டி வந்தார். அவர் பெயர் ‘நட்சத்திரம்’. இதைத் தவிர என் கல்லூரி நாட்களில் என்னுடன் ‘படவட்டம்’ என்று ஒருவர் படித்தார். மிக இனிமையானவர். மாலையிலும் காலை வேளைகளிலும் அஞ்சல் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டே படித்து வந்தார். ‘என்னங்க படம் பட்டம்’ என்று கூப்பிடுபவர்களைப் பார்த்தும் புன்னகையே புரிவார்.

‘புதுமைப் பித்தன்’, ‘மௌனி’ போன்றவர்களது கதைகளைப் படிக்காமல் அந்தப் பெயர்களைக் கேட்கையில் கொஞ்சம் கூச்சம் ஏற்படுகிற மாதிரி இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பெயராக அவை இருந்ததனால் அவை சாதாரணமாக ஏன் பொருத்தமாகக் கூட ஒலிக்கின்றன. ‘ஜெயகாந்தன்’ வெற்றியை ஈர்ப்பவர் என்றும் ‘ஜெயமொகன்’ வெற்றியை நேசிப்பவர் என்றும் பொருள் ஆகின்றன. ‘ராமம்ருதம்’ வேறு எந்தப் பெயராக இருந்திருக்க முடியும்? ‘நாஞ்சில் நாடன்’ என்ற பெயராலேயே, கட்சி நெடி அடிக்கும் என்று அவர் அருகிலேயே நான் சென்றதில்லை. 2001ல் தான் முதல்முறையாக அவரைப் படித்தேன். அப்போதுதான் தெரிந்தது இது எதிர் துருவத்தில் இருக்கும் நாஞ்சில் நாடு என்பது. பிரமிளின் பெயர் சிவராமலிங்கம். “அழிக்கும் கடவுள் பின் காக்கும் கடவுள் மறுபடி அழிப்பு தான். அதுதான் அவரோடு ஆன உறவு பரம பத சோபன படம் போல் கொஞ்சம் ஏணியும் நிறைய பாம்புகளும் கொண்டது” என்று வெங்கட் சாமிநாதன் சொன்னதாகக் டேவிட் என்னிடம் சொன்னார். ‘அசோக மித்திரன்’ என்ற பெயரும் பு.பி. மௌனி மாதிரி கூச்சம் வரவழைப்பதாகத்தான் உள்ளது. (உண்மையில் அவன் ‘சோக மித்திரன்’ என்று சுஜாதா எழுதினார்.)

‘ரஸ்கால்நிகாவ்’ முதல் சிறிய பாத்திரமான ‘மர்மலடாவ்’ வரை பல காரணப் பெயர்களைக் கொண்டது தாஸ்த்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’.

நான் ஓரிடத்தில் பேசப்போனேன். விழாவுக்கு தலைமை வகித்த புலவர் ஒருவர், வயதுமுதிர்ந்தவர், தன் பெயருக்கு ஏற்ற மாதிரி சுறுசுறுப்பான சீனிவாசன் (எறும்பு என்ற விளக்கத்தோடு) இப்போது உரை ஆற்றுவார் என்று அறிமுகம் செய்தார். அப்போதே நான் நல்ல வெளையாகக் கவனமாக ஸ்ரீநிவாசன் என்றே எல்லா இடத்திலும் உச்சரிப்பு கெடாமல் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் இந்தப் பெயர் சீனு, சீனி, சீனா, ஸ்ரீ, ஸ்ரீநி, சீமாச்சு (குறைந்த பட்சம் பழைய கதைகளில்) இன்னும் பல்வேறு ரூபம் கொள்கிறது. சுப்ரமண்யமும் அப்படித்தான். ஆனாலும் சில பெயர்களில் அபாயம் அதிகம். காமினி, சோபா (வாடகை சோபா இருபது ரூபா), மிருனாளினி (இது ஆங்கிலத்தில் Mi-மை ru-ரு na- ந li-ளி ni-னி ஆகிற கொடுமையைப் பார்த்திருக்கிறேன்). புண்டரிகாட்சன், குஞ்சித பாதம் (இப்பெயர்கள் இப்போது புழக்கத்தில் உள்ளனவா?) போன்ற பெயர்கள் தூங்கு மூஞ்சி ஆசிரியர்களின் வாயில் பாதியில் நின்று திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுகையில் வகுப்பறை ரண களம் ஆகி விடும்.

மும்தாஜ், அப்பாஸ் ‘காஃபி வித் அனு’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சேர்ந்து தோன்றினார்கள். மும்தாஜ், அப்பாஸை ‘ஆயுஷ்மான் பவ” என்று வாழ்த்தினார். இன்னொரு நிகழ்ச்சியில் அஸின் தன் பெயரின் பொருளை இப்படி விளக்கினார். “ஆங்கிலமும் சம்ஸ்க்ருதமும் சேர்ந்த பெயர். ஸின் (sin)- பாவம்; எதிர்ப்பதம் அஸின். ‘ஸின்’ ஆங்கிலம், ‘அ’ சம்ஸ்க்ருதம்” என்றார். மும்தாஜ் வட இந்திய இஸ்லாமியர். அஸின் கேரள கிறிஸ்தவர்.

சம்ஸ்கிருதம் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கள் பள்ளியில் வி.வி.என். என்கிற வி.வி.நடராசன் அற்புதமான தமிழாசிரியர். அவர் சொல்லிக் கொடுத்த கம்ப ராமாயணப் பாடல்கள் இன்னமும் மனதில் இருக்கின்றன. அவர் சம்ஸ்கிருதத்தை ‘வட்ட்ட்ட மொழி’ என்று கூறி பல்லைக் கடிப்பார். அவர் ‘ஐயர்’ ஜாதியைச் சேர்ந்தவர் என்று என் பள்ளித் தோழன் மூலமாக சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். தமிழ் பற்று = சம்ஸ்க்ருத வெறுப்பு என்று தமிழ் நாட்டில் இருக்கிறது.

இதை எழுதுகையில் பெயர்கள் தமிழில் இல்லாததால் சிலர் வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. திரு. கி.ஆ.பே. விஸ்வநாதம், திரு சி.பா.ஆதித்தனார் ஆகியோர் மாநிலக் கல்லூரியில் பேச வந்த போது உடன் பேச வந்த தேவநேய பாவாணர், முன்னவரை ஏன் பெயரை ‘உலக நம்பி’ என்று மாற்றிக் கொள்ளவில்லை என்றும், இரண்டாமவரை ‘பத்ரிகையின் பெயரை ஏன் நாட்கம்பி என்று மாற்றவில்லை என்றும் திட்டித் தீர்த்தார். கி.ஆ.பே. அவர்களின் பேத்தி பெயர் (ஜெயஸ்ரீ) கூட விமர்சிக்கப் படடதாக நினைவு. அதே கூட்டத்தில் கல்யாண பத்ரிகைகளில் சிரஞ்சீவி என்று போடுகிறீர்கள் சிரம் என்றால் தலை, எனவே சிரஞ்சீவி என்றால் தலையை வெட்டுகிறவன் என்று பொருள் வருகிறது என்று கி.ஆ.பே. பேசினார். நான் என் பள்ளி நாட்களை நினைத்துக் கொண்டேன். வகுப்புகளில் ‘Soothing Effect’ ‘தளை, அடி, தொடை” ‘ கூதிர் காலம்” போன்ற வார்த்தைகள் வருகையில் பள்ளி மாணவர்கள் ‘களுக்’கென்று சிரிப்பதில் குழந்தைத்தனம் இருக்கும்.

ஒரு கவிஞர் திடீரென்று தன் பெயர் கடவுள் பெயர் என்று அறிந்து கொண்டு ஒரு நெருப்பு கக்கும் புரட்சிப் பெயரில் பல நாள் எழுதி வந்தார். மீண்டும் ஞானோதயம். அந்த புரட்சி வடமொழி புரட்சி என்பதால் இப்போதெல்லாம் அதைத் தமிழ் படுத்தி, படுத்தி வருகிறார். ஸ்ரீநிவாசனுக்கு தமிழ்ப் பெயர் இருக்கிறதா என்று யோசித்து இருக்கிறேன். சமீபத்தில் தான் நாஞ்சில் சார் எதேச்சையாக சொல்லிய ‘திருவாழி’ என்கிற பெயர் தெரிய வந்தது. ஆனால் அது முடிவு பெறாத சொல்லாகப் பட்டது. ‘திருவாழி மார்பன்’ முழுச் சொல்லாக இருக்கிறது. ஆனால் ஸ்ரீநிவாசன் திருவாழி மார்பனைவிட சுருக்கமாக இருக்கிறது. தவிர திருவாழி என்கிற சொல் பெருசு, பிரபலம், கதை சொல்லி, பூச்சி கொல்லி மாதிரி அஃறிணை சாயலில் இருந்ததால் என் பெயர் ஆகும் வாய்ப்பை இழந்தது. தவிர ஸ்ரீநிவாசனும், ராமனும், க்ருஷ்ணனும், சுப்ரமண்யமும், ராஜகோபாலனும், ராமசாமியும், காமராஜனும், கருணாநிதியும், ராமச்சந்திரனும் தமிழனுக்கு மட்டுமே சொந்தமான அவனுடைய ப்ரத்யேக சம்ஸ்கிருதம்.

பெயரில் என்னவெல்லாம் இருக்கிறது!