கல்லா நீள்மொழிக் கதநாய்

dogசில ஆண்டுகளுக்குமுன், ஒரு மாலை நேரத்தில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் பதவியிலிருக்கும் நண்பரைக் கான்டீனில் சந்தித்தேன். உற்சாகமாக இருந்தார். விசாரித்ததில், மனிதர்கள் பேசுவதைப் புரிந்துகொண்டு அதைக் கம்ப்யூட்டரில் வரி வடிவமாக மாற்றித்தரும் Voice Recognition ஸாஃப்ட்வேர் ஒன்றை நிறுவனத்தின் தலைவர் வாங்க விரும்புவதாகவும், அப்படிப்பட்ட மென்பொருள் ஒன்றைத் தன்னிடம் கொடுத்துச் சோதிக்கச் சொல்லியிருப்பதாகவும் பெருமையுடன் சொன்னார். அதிலுள்ள சிக்கல்களைச் சற்றேனும் அறிந்தவன் என்பதால் மையமாகத் தலையை ஆட்டிவிட்டு நகர்ந்துவிட்டேன். அடுத்த வாரத்தில் அவரை மீண்டும் சந்தித்தபோது சோர்வாக இருந்தார். காரணம் கேட்டேன். “அதை ஏன் கேட்கிறாய். நாய் பட்ட பாடு. வாய்ஸ் ரெகக்னிஷன் மென்பொருளை ட்ரெயின் செய்வதற்குள் ஒரு நாயையே பேச வைத்து விடலாம் போலிருக்கிறது” என்று அலுத்துக்கொண்டார். பின்னர் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக அறிந்தேன்.

போன வாரம், ’சயன்டிஃபிக் அமெரிகன்’ ஜூன் மாத இதழை இணையத்தில் புரட்டிக்கொண்டிருந்தேன். டீனா ஆட்லர் (Tina Adler) எழுதிய ”நாய் பேச முடியும் என்பது உண்மையா அல்லது கற்பனையா?” என்ற கட்டுரை கண்ணில்பட்டது. என்னுடைய அனுபவத்தில், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகளைப் பலரும் படிப்பதில்லை. மொழிபெயர்ப்பைப் படிப்பது தங்கள் ஆங்கில அறிவைத் தாங்களே சந்தேகிப்பது போல ஆகிவிடாதா? என்ற அதீதமான தன்னம்பிக்கையால் ஆங்கிலம் அறிந்தவர்கள், அதன் ஆங்கில மூலத்தைப் பின்னர் படித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவர். ஆனால், மூலத்தையோ மொழிபெயர்ப்பையோ படிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிட்டவே கிட்டாது. மொழிபெயர்ப்பின் தரத்தைக் கண்டு துணுக்குற்று அதை மூலத்துடன் சேர்த்தே கிடப்பில் போடும் சிலரும் இருக்கிறார்கள். மேற்கண்ட காரணங்களால் அக்கட்டுரையை அப்படியே மொழிபெயர்க்காமல், தழுவி எழுத முற்படுகிறேன்.

பிரபல விஞ்ஞான எழுத்தாளர் ஒருவரின் சில அறிவியல் புனைகதைகள் ஆங்கிலத்திலிருந்து உருவப்பட்டவை என மற்றொரு நண்பர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். நான் நம்புவேனோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால் சில நதி-ரிஷி மூலங்களையும் குறிப்பிட்டார். “அப்படிக் கண்ணியமின்றிச் சொல்லாதீர்கள்; தழுவி எழுதினார் என்று கௌரவமாகச் சொல்லுங்கள்” என்றேன் நான். நண்பரோ, ”வாத்தியார் சாதாரணமாகத் தழுவியிருந்தால்கூட பரவாயில்லை; இறுகத் தழுவிவிட்டாரே” என்று ஒரே போடாகப் போட்டார். அந்த எழுத்தாளர் அப்போது தமிழ்த் திரையுலகிலும் ’பின்னிப் பெடலெடுக்க’த் தொடங்கி இருந்தார். அதன் காரணமாக, நண்பர் ஏதேனும் இடக்கரடக்கலாகச் சொல்கிறாரோ என்ற ஐயம் ஏற்பட்டாலும் எழுத்தாளரின் வயது காரணமாக அக்கூற்றை அப்படியே முகமதிப்பில் எடுத்துக்கொண்டேன். எழுத்தாளரிடம் இருந்த பழைய அபிமானத்தின் காரணமாக, ”காப்பிரைட், ராயல்டி போன்ற தொல்லைகளையெல்லாம் தமிழ் வாசகனின் தலையில் மறைமுகமாகக்கூட சுமத்தமுடியாது என்பதால்தான் அப்படி அவர் தந்திரம் செய்கிறார் போலிருக்கிறது” என்று ஜல்லியடித்துப் பார்த்தேன். நண்பர் அறிவுசார் சொத்துரிமைகள் பற்றியெல்லாம் அறிந்தவராயிற்றே; விடுவாரா மாட்டாரா என்று பயந்தேன். நல்லகாலம், அவர் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் வேறு விஷயத்துக்குத் தாவினார்.

இக்கட்டுரையும் அப்படிப்பட்ட இறுக்கமான தழுவல் முயற்சிதான். சில சிற்றிதழ்களைத் தொடர்ந்து படித்து வருவதன் தாக்கமோ என்னவோ, சங்க இலக்கியத்திலிருந்து உருவிய வரி ஒன்றையும் தலைப்பாக வைத்துவிட்டேன். ஒரு ஹிந்து-தமிழ்ப் பெயரை வைத்துக்கொண்டு அறிவியல் எழுதினால் எடுபடுமா என்ற நியாயமான சந்தேகத்தைக் குசும்புக்கார நண்பர் ஒருவர் எழுப்பினார். அதனால், என் பெயரையும் யூத-கிறிஸ்தவ வாசனை அடிப்பதுபோல மாற்றி எழுதிவிட்டேன். இந்துத்துவவாதிகள் யாரேனும் கேட்டால் ’எண்கணித ஜோதிடம்’ என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். அறிவியல் தழுவல் கட்டுரை எழுத இந்தத் தகுதிகள் போதாதா?

—oooOOOooo—

மாயா என்ற பெயர் கொண்ட ஏழு வயது நாயை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பெண்ணிடம் பேசத் தயங்கும் இளைஞனுக்குக் காதல் பாடம் சொல்லித்தரும் தமிழ் சினிமா தோழனைப்போல, மாயாவின் எஜமான் “ஐ லவ் யூ” என்றார். மாயா திரும்பச் சொன்னது -”ஆ ழூ யு.”

பேசுவதற்கு மாயா மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வது போலத்தான் தெரிந்தது. ”கேட்பவர்களுக்கு அவை நிஜமான வார்த்தைகளாகவே தோன்றவேண்டும் என்பதற்காக மாயா மிகவும் முயற்சி செய்கிறது. அது அப்படிப் பேசுவதாகத்தான் நீங்கள் நம்பவேண்டும்” என்றார் எஜமானர்.

யூட்யூப் போன்ற வலைத்தளங்களில் நாய்கள் பேசும் காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த நாய்களின் எஜமானர்களின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக உளவியலாளரும், நாய்களின் பேச்சு பற்றிய நிபுணருமான ஸ்டான்லி கொரென் How to Speak Dog: Mastering the Art of Dog-Human Communication என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் தன்னுடன் பணிபுரிந்த ஒருவர் பற்றிய சுவாரசியமான தகவலைச் சொல்கிறார். அவர் தான் வளர்க்கும் ‘பிரான்டி’ என்ற பெயருடைய நாயைப் பார்க்கும்போதெல்லாம் உற்சாகத்துடன் ”ஹ-லோ” என்று நீட்டி முழக்கிச் சொல்வாராம். அந்த நாயும் விரைவிலேயே அதேபோலவே ஒலியெழுப்பி அவரை வரவேற்கத் தொடங்கியதாம்.

நாய்களால் நிஜமாகவே பேசமுடியுமா? ’முடியாது’ என்றார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஹாரி மைல்ஸ் ஜான்சன். இதை அவர் சொன்னது 1912ஆம் வருடத்தில். பேசும் நாய் ஒன்று அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது பற்றி ’சயன்ஸ்’ ஆய்விதழில் அவர் எழுதிய கட்டுரையில், நாயின் பேச்சு என்பது அது எழுப்பும் ஒலி அதைக் கேட்பவரிடம் உண்டாக்கும் மனப்பிம்பமே (illusion) என்று வாதிட்டார். மேலும், ஒருவர் செய்வதைப் பார்த்து அதேபோலச் செய்யமுயலும் திறனுள்ள சில மிருகங்களுக்குப் பேசும் சக்தி உண்டு என்று தாங்கள் நிரூபித்திருப்பதாக விஞ்ஞானிகளிலேயே ஒரு பிரிவினர் அறிவிக்கக்கூடும். அப்படி நடந்தால், அது பற்றி நாம் வியப்படையக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

நாய்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன என்பதை எவரும் மறுக்கவில்லை. நாய்களின் பேச்சு பற்றிய ஜான்சனின் கருத்தும் கடந்த ஒரு நூறாண்டு காலத்தில் சற்றும் மறுதலிக்கப்படவில்லை. மாயா போன்ற நாய்கள் என்னதான் செய்கின்றன? இன்டியானா பல்கலைக்கழக உளவியல் அறிஞர் கேரி லூகஸின் கருத்துப்படி நாய்கள் பேச முயல்வதில்லை. அவை வேறுபட்ட ஒலிகளை எழுப்பித் தம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. அப்படி மாறுபட்ட ஒலிகளை எழுப்புவதன்மூலம் அவை தங்கள் உணர்வுகளைப் புரியவைப்பதில் வெற்றியும் பெறுகின்றன. மனிதர்கள் குரலெழுப்பும் முறையிலுள்ள வித்தியாசங்களை நாய்கள் புரிந்துகொள்வதால் அதே போல அவையும் செய்ய முயல்கின்றன. இதைப் பேசுவது என்று கருதமுடியாது என்றாலும் பிறர் செய்வதைப் போலத் தாமும் செய்ய முயல்வது (imitation) என்று கருதலாம். மனிதர்கள் நாயைப் போலக் குரைக்க முயல்வதை ஒத்ததே இது.

நாய்க்கும், அதைப் பேசப் பழக்கும் பயிற்சியாளர் அவதாரம் எடுத்திருக்கும் அதன் எஜமானருக்கும் நடுவில் என்னதான் நடக்கிறது என்பது வெளிப்படையானதே என்கிறார் கொரென். நாய் எழுப்பும் ஒலி பேச்சு வழக்கு ஒன்றை ஒத்திருப்பதாக் கருதும் எஜமானர் அதே வார்த்தைகளை நாயிடம் சொல்கிறார். நாயும் அதே ஒலியை மீண்டும் எழுப்புகிறது. அதன் காரணமாக மகிழ்ச்சியடையும் எஜமானர் நாய்க்குத் தின்பண்டம் ஒன்றைக் கொடுக்கிறார். நாளடைவில் நாய் தான் முதலில் எழுப்பிய ஒலியைச் சற்றே மாற்றி எழுப்பக் கற்றுக்கொள்கிறது. நாய்க்கு ஓரளவே குரலெழுப்பும் திறன் உண்டு என்பதால் அதனிடம் தனிப்பட்ட கவனம் செலுத்திப் பயிற்சியளிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் லூகஸ்.

நாய் “ஐ லவ் யூ” என்று குரலெழுப்புவது மிகவும் இனிமையாக இருந்தாலும் அதன் பொருள் என்ன என்பது அதற்குத் தெரியாது என்கிறார் கொரென். நாய்களால் நிஜமாகவே பேசமுடியுமென்றால் ”தின்பண்டங்கள் கிடைக்கும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறேன்” என்று அவை சொல்லக்கூடும்.

நாய்களின் பேச்சு பற்றிய ஆய்வுகள் ஓரளவுக்கேனும் முன்னேற்றம் அடைந்துள்ளன. நாய்கள் மற்றும் பிற விலங்குகளின் உச்சரிக்கும் திறன் குறைவுபட்டதாக இருப்பதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை தம் நாக்கையும், உதடுகளையும் சரிவரப் பயன்படுத்த முடியாததால், மனிதர்கள் எழுப்பும் பெரும்பாலான சப்தங்களை அவற்றால் எழுப்பமுடிவதில்லை என்று சொல்லும் லூகஸ், உங்கள் உதடுகளையும், நாக்கையும் பயன்படுத்தாமல் ‘நாய்க்குட்டி’ என்று சொல்லிப் பாருங்கள் என்றும் சவால் விடுகிறார்.

நாய்களால் பேச முடியாது என்றாலும், வளர்ப்பு நாய்கள் தம் உணர்வுகளை மனிதர்களுக்குத் தெரியப்படுத்துவது மட்டுமல்லாமல், நம்முடைய மனநிலையை (mood) அறிந்துகொள்ளும் திறனும் படைத்தவை. உணவு எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் மனிதர்களின் சுட்டுதல்கள், பார்வை, தொடுதல்கள் போன்றவற்றை புரிந்துகொள்ளும் திறன் நாய்களுக்கு உண்டு. தின்பண்டங்கள் எங்கு ஒளித்து வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலை அறிவதற்காக அவை பயிற்சியாளரை உற்று நோக்குவதும் உண்டு.

சில நாய்கள் வியப்பூட்டும் அளவிற்குச் சொற்களைப் புரிந்துகொள்வதில் தேர்ந்துள்ளன. சிறு குழந்தைகளுக்குச் சொல்லித்தரப் பயன்படுத்தப்படும் ’துரிதமாகக் கண்டறிதல்’ என்ற முறையில் பயிற்சி அளிக்கப்பட்ட ரிகோ என்ற திறமைமிக்க நாய் 200க்கும் மேற்பட்ட பொருள்களை அவற்றின் பெயரைக் கேட்டமாத்திரத்தில் அடையாளம் கண்டுபிடித்தது. ரிகோவின் வழக்கமான விளையாட்டுச் சாமான்களுடன் புதிய பொம்மை ஒன்றையும் சேர்த்த ஆய்வாளர்கள், அப்புதிய பொம்மையைக் கண்டுபிடிக்க ரிகோவைத் தூண்டினர். ஏற்கெனவே கேள்விப்பட்டிராத அப்பொம்மையின் பெயரை, ஏற்கெனவே கண்டிராத அப்பொம்மையின் உருவத்துடன் தொடர்புபடுத்தி ரிகோ கண்டுபிடித்துவிட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகும் ரிகோ அப்பொம்மையின் பெயரை மறக்காமல் நினைவில் வைத்திருந்தது.

பேசும் குரங்குகளான, மொழி அறிவுள்ள மனிதர்கள் மட்டுமே ’துரிதமாகக் கண்டறிதல்’ முறையைப் பயன்படுத்திக் கற்கமுடியும் என்றே அதுவரை தாங்கள் நினைத்திருந்ததாகக் கொரென் குறிப்பிடுகிறார். உளவியலாளர்களைப் பொருத்தவரை இது இன்னமும் புரியாத புதிர்.

—oooOOOooo—

ஏழாம் நூற்றாண்டிலேயே ’கோவாலன்’ என்ற நாயின் நினைவாக நடுகல் எழுப்பி அதன் பெயரையும் பொறித்து வைத்தவன் தமிழன். ஆனால், அதைப் பற்றிச் சொல்லி அறிவியல் கட்டுரையை முடிப்பது ’அறிவியல் பார்வைக்கு’ ஒத்துவராதல்லவா? அதனால், நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட Lassie Come Home என்ற ஆங்கிலத் திரைப்படத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லிவிடுகிறேன். இப்படத்தின் கதையை நாவல் வடிவத்தில் எழுதிய எரிக் நைட், இங்கிலாந்திலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்.

இங்கிலாந்து நாட்டின் யார்க்ஷயரில் வசிக்கும் குடும்பம் ஒன்று வறுமையின் காரணமாக சாப்பாட்டுக்கே அல்லாடுகிறது. அவர்கள் வளர்த்துவரும் லாஸி என்ற நாயாவது நன்றாக இருக்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அதை ஒரு பணக்காரரிடம் விற்றுவிடுகிறார்கள். பணக்காரர் நாயை ஸ்காட்லாந்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். லாஸியோ பழைய எஜமானரின் குடும்பத்திடம் அதீதமான அன்பு கொண்டது. ஸ்காட்லாந்தில் கிடைத்த சுகமான வாழ்க்கையை விரும்பாமல், பணக்காரரின் பேத்தியின் உதவியுடன் அங்கிருந்து வெளியேறி, பல இன்னல்களைக் கடந்து, நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து, பழைய எஜமானரின் இடத்துக்கே திரும்பிவிடுகிறது லாஸி.

லாஸி போன்ற நாய்களைப் பற்றி இந்த ஆய்வில் ஒன்றும் சொல்லப்படாதது சற்று ஏமாற்றமளிக்கிறது.

( நன்றி: 1. அகநானூறு 107:11 2. Scientific American )