‘ஒளி வரும் வரை’ – கவிதைகள்

மன்றத்தில் ஒரு கால்

மன்றத்தில்தான் வருவேன் என்றுdsc_7290-3
நீ சொன்ன வாக்கை மறந்து
குவலயம் எங்கும் தேடியலைந்து
நீர் குடிக்கப் பொய்கை அடைந்து
குகை தேடும் படலத்தின் முடிவில்
கிடைத்தது
பசும்பொன் கடந்த கானம்

எஞ்சிய சொற்களை
ஒன்று திரட்டி
ஒற்றைக் கூந்தலில்
மாலை தொடுத்து
நடன மங்கைக்கு அணிவித்து
பதிலாகக் கால் சலங்கையின்
நாதத்தை மட்டும்
கேட்டுப் பெறும் வைபவம்
நிறைவேறும் தருணத்தில்
மன்றம் நிறைத்துப் பொழிந்த
மழையின் அருளால்
குளிர்ந்தது மேனி

தவத்திற்க்கு
ஒற்றைக் கால் போதுமெனில்
இன்னொரு காலை என்ன செய்ய?

ஒளி வரும் வரை

பாடம்தான்
பயிற்றுவித்தல்தான்
எண்குணமும் பகிர்ந்தலையும்
பாதரசத்துளிகளின் கனமும்கூட

எள்ளல் கேலி உசாவல்
மறைந்திருக்கும் வாசல்
போகும்போதும் வரும்போதும்
தேனாய் இனிக்கிறது

விரைதல் காண்கிலாதான்
மற்றும் படர்க்கை விடுத்துப்
பார்க்கும் கண்களில் இழைகிறது
வேதனை தரும் சுகம் தாண்டிய ஓலம்

நீலக்கடல் பரப்பும் உற்சாகம்
உள்வெளியில் நிறைகிறது
மறந்துபோன உலகம்
தூரத்தில் வெடித்துத் தெறிக்கிறது

சில நாள்
சில நேரம்
சில கணங்கள்
மின்னல் வெட்டுப் பார்வைத் தோற்றம்
வசப்படுதலின் அகங்காரம்

கதவு திடீரென்று
அறைந்து மூடிய சத்தம் தலைக்குள்
அதிர்ந்து அடங்குகிறது

யார் கேட்டது காற்றின் அசைவை?
உடலில் தலையும் தலையின் முகமும்
முகத்தில் கண்ணும் கண்ணில் ஒளியும்
மிதக்கும் தெப்பத்தில் கடவுளின் உருவம்
கயிறு கட்டிய தெப்பம் நீரில் அலைகிறது
கோயில் திருவிழா
இனி தெப்பம் அடுத்த வருடம்தான்

கோயில் தூண்களில் சேரும் உடல்கள்
காலத்தின் வாசனை கோயிலுக்குள் மணக்கிறது
கற்பூரம்போல
உடைக்குள் நிர்வாணம்
அதற்குள்?
யார் சொன்னது அது இதுவென?

உன் மோனத்தவம் உருவாக்கி அழிக்கிறது
நான் சிரிக்கிறேன்
காமத்திலும் மெல்லியது எது?
மதியாதார் தலைவாசல்
மீண்டும் பரவசம் திகைப்பு
பதில்தானோவென

ஒற்றைக்கோடு வளைந்து நெளிந்து
உலகைச் சுற்றி வளைக்கிறது
மீண்டும் ஆரம்பம்
எப்போதும்

ஒருபுறம் பாறாங்கல்லையும்
மறுபுறம் வைரக்கல்லையும் நிறுத்து
இரண்டும் ஒன்று
என்கிறது தராசு

இனி
சில்லறைத் தேவதைகளின் அட்டகாசம்
ஒளி வரும்வரை.

(சிறுபத்திரிகை வட்டாரங்களில் நன்கறியப்பட்ட திரு.ஆனந்த் அவரவர் கைமணல், அளவில்லாத மலர் போன்ற கவிதைத் தொகுப்புகளையும், நான் காணாமல் போன கதை என்ற நாவலையும் எழுதியவர்).