ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும்

மெஹ்பூபா என்ற ஹிந்தித் திரைப்படத்தின் “மேரே மைனா, சாவன் படோன்..” என்ற பாடலைக் கேட்டு என் சிறுவயதில் எப்படிப் லயித்துப்போயிருக்கிறேன் என்று எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. நான் ஹிந்தித் திரைப்படங்களின் பெரிய விசிறியாக இல்லாதிருந்தபோதும், இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்ற நினைவு இல்லை. ஆனால் இந்தப்பாடல் மட்டும் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. என் மனதிலிருப்பது இந்தப்பாடலின் ட்யூன் மட்டுமே, பாடலின் ஒரு வரி கூட நினைவில் இல்லை என்பதையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

என் கல்லூரி நாட்களில் ஒரு நாள், நான் கிடாரை மீட்டக் (strum) கற்றுக்கொண்டிருந்தபோது, என் நண்பன் முணுமுணுத்துக் கொண்டிருந்த ‘மலரே, என்னென்ன கோலம்?’ என்ற பாடல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஏக்கத்திலாழ்த்தும் தன்மை கொண்ட அந்த ட்யூனின் ஓட்டத்தில் லயித்து அவனை முழுப்பாடலையும் பாடச்சொல்லி நான் கிடார் வாசித்தேன். கிடாரின் துணையோடு கேட்கையில் அந்தப் பாடலின் ஏங்கவைக்கும் தன்மை மேலும் அதிகரித்தது. (எஸ்.பி.பியின் மிதக்கும் குரல் இந்தப்பாடலுக்கு மேலும் உயிரோட்டத்தைத் தருகிறது). நான் கர்நாடக சங்கீதத்தைக் குறித்தோ, அதன் ராகங்கள் குறித்தோ ஆழ்ந்து சிந்தித்ததில்லை. ஆனால் இந்தப்பாடலின் ஸ்கேலிலேயே அப்போது பிரபலமாக இருந்த இன்னொரு ஹிந்திப்பாடல் அமைந்திருந்ததையும் நான் புரிந்துகொண்டேன். மதுரையின் ஒவ்வொரு டீக்கடையிலும் அலறிக்கொண்டிருந்த ‘தேரே மேரே பீச் மே’ என்ற மிகப்பெரிய ஹிட் பாடல்தான் அது. ஒரே ஸ்கேலில் அமைந்த பாடல்கள் என்பதைத் தவிர இன்னொரு ஒற்றுமையும் இந்தப்பாடல்களுக்கிடையே இருந்தது. இப்பாடல்களின் இசையமைப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்ட ஒருவித ஏக்க மனநிலைதான் அது.

நான் இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்த நாட்களில் என் வீட்டருகே இருந்த திரையரங்கில் ஒரு மிகப்பெரிய ஹிட் திரைப்படம் வெளியானது. ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற அந்தத் திரைப்படம் வெளிவந்த நாட்களில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. திரைப்படம் வெளியாகி சில நாட்கள் கழித்தே அத்திரைப்படத்தின் பாடல்களால் அது ஒரு மிகப்பெரிய ஹிட்டானது. அப்படி அத்திரைப்படமும், பாடல்களும் பிரபலமாகாத ஆரம்ப நாட்களில், கல்லூரியின் மதிய வகுப்புகளிலிருந்து தப்பிப்பதற்காக எந்தத் திரைப்படத்தையும் பார்க்கத் தயாராக இருந்த சில நண்பர்களுடன் அத்திரைப்படத்தைப் பார்த்தேன்.
melody_raja-1

இளையராஜாவின் ‘ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு’ என்னைப் பெரும் வியப்பிலாழ்த்தியதென்றால், ‘காத்திருந்து, காத்திருந்து’ பாடல் என்னை இந்த உலகைவிட்டே வேறெங்கோ கொண்டு சென்றது. அந்தப்பாடலை முதல்முறையாகத் தியேட்டரில் கேட்டுவிட்டு, எப்படி மெய்மறந்து உட்கார்ந்திருந்தேன் என்று இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. இளையராஜா அப்போது தன் படைப்புத்திறனின் உச்சத்திலிருந்தார். இதே படத்தின் மற்ற பாடல்களோடு ஒப்பிடுகையில் இது சுமாரான ஹிட்தான். ஆனாலும் என் நினைவில் இந்தப்பாடல் ஆழமாகப் பதிந்துபோனது. இப்பாடலின் ஸ்கேல் உருவாக்கும் சோகத்தை இளையராஜா  வெகு அருமையாக உபயோகப்படுத்திக்கொண்டிருந்தார். இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கின் சோகமே, மெஹ்பூபா திரைப்படப் பாடல் போலவே, இந்த ஸ்கேலின் ஏக்கத்திலாழ்த்தும் தன்மையை வெகு அருமையாகக் கையாண்டிருந்தது. இளையராஜாவின் தனித்திறமையான இண்டர்லூட்களின் கிராமிய இசையும் ‘காத்திருந்து, காத்திருந்து’ பாடலுக்கு மேலும் அழகூட்டியது.

இந்த ஸ்கேலின் கர்நாடக சங்கீத வடிவம் சிவரஞ்சனி ராகம். சிவரஞ்சனி ராக அடிப்படை வடிவத்தின் முழுமையின்மையே இதை ஒரு வித்தியாசமான ராகமாக்குகிறது. மேற்கத்திய வடிவத்தில் மைனர் ஸ்கேலான சிவரஞ்சனி ராகம், அந்த மைனர் ஸ்கேலின் இரண்டு முக்கியமான ஸ்வரங்களான நான்காவது, ஏழாவது ஸ்வரங்கள் இல்லாதது. (கர்நாடக சங்கீதக் குறியீட்டில் ம, நி ஸ்வரங்கள்). ஆரோஹணம், அவரோஹணம் இரண்டிலும் மேல் ஆக்டேவைத் தவிர்த்த ஐந்து ஸ்வரங்களை மட்டுமே கொண்டது. இதைப் போல குறிப்பிட்ட மனநிலையை உருவாக்கும் ஐந்து ஸ்வரங்களில் அமைந்த பல ராகங்கள் கர்நாடக சங்கீதத்தில் இருக்கின்றன. ஆனால் ஏற்கனவே ஒருவித சோக மனநிலையை உருவாக்கும் மைனர் ஸ்கேலில் அமைந்த சிவரஞ்சனியின் ஸ்வரங்களுக்கிடையே இருக்கும் பெரிய இடைவெளி, ஒருவித முழுமையின்மையை உருவாக்குகிறது. ஆனால் ட்யூனின் ஓட்டத்தை நன்றாகக் கையாளத் தெரிந்த ஒரு நல்ல இசையமைப்பாளரின் கைகளில், இந்த முழுமையின்மை ஓர் அற்புதமான ஏக்க மனநிலையை வெளிப்படுத்துகிறது. ‘காத்திருந்து, காத்திருந்து’, மெஹ்பூபா திரைப்படப்படப்பாடல், மலரே என்னென்ன கோலம், தேரே மேரே பீச் மே போன்றவை இந்த ராகத்தின் ஏக்கத்திலாழ்த்தும் தன்மையை வெகு அழகாகப் பயன்படுத்திக்கொண்ட ட்யூன்களாலானவை. பெரும்பாலும் எல்லோருமே வாழ்க்கையில் கடந்துவந்த ஏக்க நினைவுகளை இப்பாடல்கள் நினைவுபடுத்துவதால், இது போன்ற ட்யூன்களில் லயிக்காமல் போவது அரிதான விஷயம்.  மேலும் இப்படிப்பட்ட ஏக்க நினைவுகளுடன் வரும் சோகத்தைத் தாண்டி ஒருவித ஆறுதலுடன் கூடிய சுகத்தையும் இப்பாடல்கள் தருகின்றன. அதுதான் நல்ல இசையின் சக்தி.

அப்படிப்பட்டதொரு ஏக்க மனநிலையில் ‘காத்திருந்து, காத்திருந்து’ பாடல் என் நினைவுக்கு வர, அதை அகெளஸ்டிக் கிடார் ஸ்டைலில் என் கீபோர்டின் துணையோடு வாசித்துப்பார்த்தேன். இப்பாடலின் ‘என்னுடைய’ வடிவத்தை இங்கே கேட்கலாம்:

ஒரிஜினல் பாடலோடு இதை ஒப்பிடாமல் கேட்டால் உங்களால் இந்த வெர்ஷனையும் ரசிக்கமுடியும். ஏனென்றால் சிவரஞ்சனியின் ஓட்டத்தில், என்னுடைய கிடார் வாசிப்பு முறையில் இதை வாசித்திருக்கிறேன். இப்படிப்பட்டதொரு சிறந்த ட்யூனை வாசித்தது எனக்கொரு அற்புத மனநிலையைத் தந்தது. இதைக்கேட்கும் உங்களாலும் அதை உணர முடியுமென நினைக்கிறேன்.

இதே திரைப்படத்தில் வரும் இன்னொரு பாடலான ‘ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு’ பாடலை சில நாட்கள் முன்பு கேட்க நேரிட்டது. இந்தப்பாடலை என்னுடைய கல்லூரி இசைக்குழுவினருடன் 15 வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது கேட்கும்போதும் இப்பாடலின் ட்யூன் ப்ராக்ரஷன் என்னைப் பெரிதும் கவர்ந்திழுத்தது. ஒரே சமயத்தில் அது மேற்கத்திய செவ்வியலாகவும், இந்திய கிராமிய இசையாகவும் எனக்குத் தெரிந்தது. இளையராஜா பெரும்பாலான பாடல்களில் பயன்படுத்திய 3/4 நேரக்கணக்கில்தான் இந்தப்பாடலும் அமைந்திருக்கிறது. இப்பாடலில் இளையராஜா தான் பிறந்த சூழலின் கிராமிய இசையுடன், மேற்கத்திய கார்ட் ப்ராக்ரஷனை வெகு அழகாக ஃப்யூஷன் செய்திருந்தார். என் கல்லூரி நாட்களில் பலமுறை இப்பாடலை வாசித்துவிட்டாலும், இப்போது கேட்கும்போதும் இது புதுமையானதாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் இருக்கிறது.

இதை கீபோர்டில் வாசித்துப்பார்த்தபோது, நானே இப்பாடலின் ஓட்டத்தைக் கேட்டு அதிசயித்துப் போனேன். எதிர்பாராத ஸ்வரங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், கார்ட்ஸ் தொடர்ச்சியில் (chord sequence) மிகப்பெரும் மாறுதல்களை ஏற்படுத்திய முதல் இசையமைப்பாளர் இளையராஜாதான் என்று நினைக்கிறேன். இளையராஜாவுக்கு முன் நான் கேட்டிருந்த அத்தனை கார்ட்ஸ் தொடர்ச்சியிலுமே மைனர் கார்டிலிருந்து மேஜர் கார்டுக்கு மாறுவதுதான் (and vice-versa) வழக்கமாக இருந்தது. ஆனால் இளையராஜா  இந்தத் தொடர்ச்சியில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தினார். இசைக்கலைஞராக நினைக்கும் யாருக்குமே அவை மிகப்பெரும் பாடங்கள்.

என்னுடைய வாசிப்பில் இப்பாடலை இங்கே கேட்கலாம்:

இந்த கார்ட் ப்ராக்ரஷனை அதன் ட்யூனோடு சேர்த்து கீபோர்டில் வாசிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ஒரு மேற்கத்திய செவ்வியல் வடிவமைப்பைப் போலவே இப்பாடலின் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் முழுமையான ஹார்மோனி துணையை (Harmonic Accompaniment) உருவாக்கியிருக்கிறார் இளையராஜா. நான் இதை வேண்டுமென்றே மேற்கத்திய செவ்வியல் முறையில் வாசித்தேன். ஆனால் இதைக் கேட்கும் உங்களால் இதில் மேற்கத்திய செவ்வியலிலிருந்து வித்தியாசமாக வேறெதோ ஒன்றிருப்பதை உணரமுடியும். ஒரு மேலோட்டமான ரசிகருக்கு இது ஒரு நல்ல தமிழ்ப்பாட்டைப் போலவே கேட்கும். இரண்டு இசை வகைக்களுக்கிடையே இருந்த பெருஞ்சுவரை இளையராஜா தன் மேதைமையால் தகர்த்தெறிந்திருக்கிறார். இசை தெரிந்த ஒருவர் இந்தப் பாடலைப் பகுத்துப் பார்க்கையில் இதற்குப் பின்னிருக்கும் தொழில்நுட்பம் புரியும். ஆனால் நல்ல இசை தரும் பேரின்பத்துக்கு முன்னால் இந்தத் தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு அவசியம்தான் என்ன?