உன்னுளிருந்து..

வட்டம்

கோட்டை இழுத்து வளைத்துச் சுருட்டி
தொடங்கிய புள்ளியில்
கொண்டுசேர்த்துக் காட்டினேன்
பலமுறை.

கலகலத்த சிரிப்புடன்
அவன் வரைந்த
கோடுகள்
தன்னைத் தொட்டுகொள்ளாமல்
வளைந்து நெளிந்து
எல்லா திசைகளிலும்
நீண்டன
ஒவ்வொருமுறையும்.

ஒவ்வொரு சிரிப்பிற்கும் முன்csc_1973-2
இடையிலுள்ள வல்லினஓசையை
அழுத்தி
அவன் வாய் உச்சரித்தது
வட்…ட…ம் என்று

முடிவில்
சிறியதும் பெரியதுமான
வட்டங்கள் நிரம்பிய தாளை
தூக்கியெறியப் போனேன்.

கூடாது என்று வாங்கி
தன் நோட்டுப் புத்தகத்தில்
பத்திரப்படுத்திக்கொண்டான்

பதிலுக்கு கொடுத்த
கிறுக்கல் கோடுகளை
எங்கே வைப்பது?

உன்னுளிருந்து..

உனக்குத் தெரியாது
உனக்குள் அவள் வசிக்கிறாள்.

இரட்டைப் பின்னல்,
பட்டுப் பாவாடை
பால் பேதங்கள் அரும்பாத வயது.

உன் மதிப்பீட்டில்
நீ குறையும்போது
மனமுடையும் சுடுசொல்லை
எதிர்கொள்ளும்போது
அழுகை கரைபுரண்டோடி
முழுகும்போது
ஆழ்மனக்கிணற்றிலிருந்து
அவள் வெளிப்படுவாள்

எதிலும் குவியாத
சிலைத்த விழிகளை
துளைத்து
அவள் உயிர்த்தெழுவாள்

அவளது கேள்விகள் எளிமையானவை.
”என்னுடைய மரப்பாச்சி எங்கே?”
”என் தோட்டத்துக் குருவிகளுக்கு என்னவாயிற்று?”
”ஆலமரங்கள் சூழ்ந்த
விளையாட்டு திடலுக்கு
என்னை அழைத்துப்போவாயா?”

கண்ணாடியென
வளர்ந்து மூடும் தடித்த உறையைக்
கிழித்து முளைப்பவளை
“போ போ”-வென கத்தி விரட்டுவேன்.

வளர்ந்த மனிதர்களின் வன்முறை உலகத்திற்க்குள்
பதட்டமாய் எழுப்புவேன்
உன்னை.