அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 2

சென்ற இதழில் வெளியான கட்டுரையின் இரண்டாம் பகுதி இது. முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்

இடைக்காலங்களின் வெப்ப உயர்வு என்பது குளோபல் வார்மிங் ஆதரவாளர்களுக்கு மிகுந்ததொரு சங்கடத்தை விளைவித்தது (”எப்படியாவது இந்த இடைக்கால வெப்ப உயர்வை வரைபடங்களில் இருந்து அழிக்க முடிந்தால் உத்தமம்” என ஒரு குளோபல் வார்மிங் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்!)- ஏனெனில் அன்றைய வெப்ப உயர்வு தற்கால வெப்ப அளவுக்கு வெகு அருகில் இருந்தாலும், தற்கால வெப்ப உயர்வுக்குக் காரணமாக முன் வைக்கப்படும் கரியமில வாயு வெளியேற்றம் அன்றைய நாட்களில் இல்லை. ஆக அன்றைய வெப்ப உயர்வுக்கு (கார்பன் டை ஆக்ஸடு தவிர்த்த) வேறு ஏதோ ஒன்று காரணமாக இருந்திருந்தால் அது இன்றைய வெப்ப உயர்வுக்கும் காரணமாக இருக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டுதான். அப்படிப்பட்ட வெப்பநிலை உயர்வுக்கு சூரிய கதிரியக்கங்கள் பெரும் காரணியாக இருந்திருக்க முடியும் என்ற கருத்தாக்கம் ஒன்று உள்ளது. சூரிய கதிரியக்கம், ஹைட்ரோ கார்பன் வெளியேற்றம், பூமியின் வெப்ப உயர்வு ஆகியவற்றை ஒரே வரைபடத்தில் காட்டும் கீழ்க்கண்ட வரைபடத்தைக்கண்டால் இது எளிதில் விளங்கும்:

global_warm_2

இவ்வாறு தவறான வரைமுறை கொண்டு புனையப்பட்ட டாக்டர். மானின் ஹாக்கி மட்டை வரைபடம் குளோபல் வார்மிங் பிரசாரத்தின் அடித்தளமானதில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்பட்டன:

1. இடைக்கால வெப்ப உயர்வு (Medieval Warming Period- MWP) கணக்கில் எடுக்கப்படவில்லை.

2. 1500-க்கு பிற்பகுதியில் இருந்து 1850க்கு முற்பட்ட – சிறு பனியுகம் எனப்பட்ட- கடும் குளிர்காலம் வரைபடத்திலிருந்து காணாமல் போனது

3. இடைக்காலத்தை விட அதிக வெப்ப உயர்வு என்று சொல்ல முடியாத இருபதாம் நூற்றாண்டின் வெப்ப உயர்வின் தாக்கம் உருப்பெருக்கம் செய்யப்பட்டது; பூமியின் வெப்பம் 1990-க்குப்பின் திடீரென ராக்கெட் வேகத்தில் மேலே போனது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.

4. 1990லிருந்து தொடங்கிய பத்தாண்டுகள் உலகின் கடந்த ஆயிரமாண்டுகளில் உச்சகட்ட வெப்ப அதிகரிப்பைக் கொண்டதாக ”அறிவியல் முடிவாக” பிரகடனப்படுத்தப்பட்டது.

5. பூமியின் தட்பவெப்பநிலை என்பது பல்லாயிரக்கணக்கான காரணிகள் ஒன்றோடொன்று உராய்ந்து பாதிக்கப்பட்டு உருவாகிறது; ஆனால் மற்ற காரணிகளின் தாக்கம் தள்ளுபடி செய்யப்பட்டு வெப்பநிலை உயர்வுக்கு கரியமில வாயுதான் பிரதான காரணி என்றும், மனிதர்களின் பயன்பாட்டில் இது அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் மனித செயல்களால்தான் பூமிப்பந்து சூடடைகிறது என்றும் அடுத்த முடிச்சு எளிதாகப் போடப்பட்டது.

ஆக இன்றைய குளோபல் வார்மிங் வாதத்தின் வரலாற்றை கொஞ்சம் எளிமைப்படுத்தி சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம்:

தவறான அணுகுமுறை மற்றும் அல்காரிதத்தின் அடிப்படையில் புனையப்பட்ட ஒரு வரைபடம், அதை அடிப்படையாக்கி 1990- தொடங்கி ஹாக்கி மட்டை போல சடசடவென வெப்பம் உயர்ந்ததாகக் காட்டப்பட்ட ஒரு ஆய்வறிக்கை, இடைக்கால வெப்ப உயர்வு இருட்டடிப்பு செய்யப்பட்டு தற்கால வெப்ப உயர்வுக்கு கரியமில வாயுவே முதற்காரணி என்று அறிவிக்கப்பட்டது; கரியமில வாயு வெளியேற்றத்தின் பிரதான காரணியாக மனிதப் பயன்பாடு அடையாளம் காணப்பட்டது.

சொல்லப்போனால் மனித யத்தன கரியமில வாயு வெளியேற்றம்தான் பூமிப்பந்து சூடேற்றத்துக்கு பிரதான காரணி என்ற கருத்தாக்கம் 1990-க்கு முன்பே பல பத்தாண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் அந்தக்கருத்தாக்கதுக்கு வலு சேர்க்கும் கவர்ச்சிகரமான புள்ளியியல் வரைபடம் அதுவரை இல்லை. 1998-இல் டாக்டர். மான் புனைந்த ஹாக்கி மட்டை வரைபடம் அந்தத்தேவையைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்தது. அதனை IPCC பாய்ந்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உலகெங்கும் பரப்புரை செய்யப் பாதைபோட்டுத் தந்தது.

IPCC என்ற அரசியல் நிறுவனம்

IPCC என்ற அமைப்பு ஏன் இப்படி செய்யவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு IPCC உருவான கதையை அறிந்துகொள்ளுதல் அவசியம்.

1979-இலேயே ஐநாவின் உலக தட்பவெப்ப ஆய்வமைப்பு (WMO) பூமியில் மனித செயல்பாடுகள் தட்பவெப்பநிலை மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்த தன் ”கவலையை” வெளியிட்டது. 1985-இல் UNEP, WMO ஆகிய அமைப்புகள் கூட்டிய கருத்தரங்கு மனித வரலாற்றிலேயே அதிக வெப்ப உயர்வு 21-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழும் என்றும் அதற்கு மனித முயற்சிகளால் வெளியாகும் கரியமில வாயு போன்ற க்ரீன்ஹவுஸ் வாயுக்கள்தான் காரணமாயிருக்கும் என்றும் ஆரூடம் சொன்னது. 1988-இல் WMO மற்றும் ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஆகியவை சேர்ந்து IPCC என்ற அமைப்பை உருவாக்கியது. அதாவது IPCC-யின் அஜெண்டா அன்றே தெளிவாக்கப்பட்டு விட்டது. மனித செயல்பாடுகளாலோ கரியமில வாயு வெளியேற்றதாலோ வெப்ப உயர்வு இல்லையென்று சொல்ல உண்டாக்கப்பட்டதில்லை IPCC. அவ்வாறு சொன்னால் அப்படிச்சொன்ன அடுத்த நிமிடமே அதன் உபயோகம், அதற்கு வரும் நிதியுதவி, பல்கலைகளில் இயங்கும் அத்துறை தொடர்பான ஆய்வுத் துறைகளின் முக்கியத்துவம் என அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும். IPCC என்ற அமைப்பின் குறிக்கொள், நோக்கம், அமைப்பியல் மூலகாரணம் எல்லாமே முடிவு செய்யப்பட்ட ஒன்றுக்கு ஆதாரங்களைத் திரட்டுவது என்பது மட்டுமே. ஆக, IPCC தொடங்கப்பட்ட அன்று குளோபல் வார்மிங் என்பது அமைப்பு ரீதியாக அரசியல்படுத்தப்பட்டது.

1990-இல் தொடங்கி IPCC குளோபல் வார்மிங் அபாய அறிவிப்பு ஆரூடங்களை பல அறிக்கைகளாகத் தொடர்ந்து வெளியிடத் தொடங்கியது. உலக தட்பவெப்ப நிலை மாற்றத்தில் மனிதர்களின் பங்கு தெளிவாய்த்தெரிவதாக 1995-இல் IPCCஇன் அறிக்கை சொன்னது (அதாவது தாய் அமைப்பான WMO 1985-இல் சொன்னதை பத்தாண்டுகள் கழித்து மீண்டும் ரிப்பீட் செய்தது). இந்த அறிக்கையை அடிப்படையாக்கி 1997 கியோட்டோ உடன்படிக்கையில் ஐரோப்பிய அரசுகள் பிற உலக நாடுகள் மீது அழுத்தம் தரத்தொடங்கின. 1998-இல் டாக்டர்-மான் புனைந்த வரைபடம் உடனடியாக IPCC-ஆல் பிரபலப்படுத்தப்பட்டது. வரைபட அடிப்படைகள் தவறென்று பின்னர் டாக்டர். மானும், IPCCயும் ஒப்புக்கொண்ட போதும், தவறான அடிப்படையில் கண்டடைந்த முடிவுகள் திரும்பப்பெறப்படவில்லை. மாறாக இன்றும் கூட அந்த வரைபடம் (அல்-கோரின் பிரபல திரைப்படம் உட்பட) பல இடங்களில் மீண்டும் மீண்டும் பிரசாரத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

இவையனைத்தையும் அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கவில்லையா, ஆட்சேபம் எழுப்பவில்லையா என்று கேட்டால், கண்டு பிடித்தார்கள், ஆட்சேபங்கள் தெரிவித்தார்கள். அறிவியல் துறைகளில் இதுபோன்ற விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் மிகக்கடுமையான உள்விவாதத்துக்கு உட்படுத்தப்படும். டாக்டர். மான் குழுவினரின் வரைபடங்கள் அவ்வாறுதான் கடுமையான மறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விவாதத்துக்கு உள்ளாயின. அரசியல் கலப்பற்ற அறிவியலாக இந்த விவாதம் இருந்திருந்தால் டாக்டர். மான் குழுவினரின் MBH98 வரைபடம் அடுத்த சில ஆண்டுகளிலேயே தவறான வழிமுறைகளை அடிப்படையாக்கியது என்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்தான். ஆனால் குளோபல் வார்மிங் 1970லிருந்தே படிப்படியாக அரசியலாக்கப்பட்டு, 1988இல் IPCC மூலம் நிறுவனப்படுத்தப்பட்டு இருந்தது. புதுநூற்றாண்டின் துவக்கத்தில் குளோபல் வார்மிங் என்பது ஒரு வளப்பமான துறையாக, மானியங்களும், வேலைவாய்ப்பும் வளச்சியும் (career growth) மிகுந்த ஒரு தொழில்துறையாக, அரசியல், பல்கலைத்துறைகள், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள், சூழலியலாளர்கள், அரசுசாரா நிறுவனங்கள், ஹாலிவுட் திரைத்துறையினர் என்று பற்பல தரப்பையும் ஒருங்கிணைத்து ஒன்றோடொன்று இயைந்து வளரும் ஒரு சாதகமான சூழல் அமைப்பினை (positive eco-system) உருவாக்கிக் கொண்டு விட்டிருந்தது. MBH-98-இன் தவறான வரைபடம் கொண்டு பிரசாரங்கள் உலக அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. வரைபட முறைமையில் தவறிருக்கலாம் என பின்னர் IPCC ஒப்புக்கொண்டாலும் அதனடிப்படையில் வெளியிட்ட ஆய்வுமுடிவுகளை திரும்பப் பெற மறுத்து விட்டது. இப்படியாகத்தானே டாக்டர். மானின் தவறான அறிவியல் வரைபடம், சுயநல அரசியல் காரணங்களால் புனித சாஸ்வதத்தன்மை பெற்றது.

குளோபல் வார்மிங்கின் பின்னுள்ள எரிசக்தி அரசியல்

யாம்-கிப்பூர் போருக்குப்பின் OPEC அமைப்பு எண்ணெய் விலையை வெகுவாக உயர்த்தியது. இதில் மேற்கு நாடுகள் மிக அதிக பாதிப்புக்கு ஆளாயின. அமெரிக்கா பாதிப்படைந்தாலும் அமெரிக்காவை விட அதிக அதிர்ச்சிக்கு உள்ளானவை ஐரோப்பிய நாடுகளே: இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்விஸர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில், கார், விமானம், படகு போன்ற வாகனங்களை ஓட்ட தடை விதித்தன. ஸ்வீடனில் எண்ணெய்க்கு ரேஷன் கொண்டு வரப்பட்டது. நெதர்லாந்தில் மின்சாரம் ரேஷன் செய்யப்பட்டு, மீறுபவர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். எண்ணெய்ச்சார்பிலிருந்து வெளிவருவது அவசியம் என்ற அரசியல் விழிப்புணர்வு அன்றே இந்நாடுகளில் வளரத்தொடங்கியது. ஆனால் எண்ணெய் பிரதான எரிபொருளாகவும் தொழில்துறை வளர்ச்சியின் நேரடிக் காரணியாகவும் இருந்தது. சீனா வளரத்தொடங்கியிருந்தது, ஜப்பான் தொழில்துறைகளில் பல ஐரோப்பிய கம்பெனிகளை விஞ்சிக்கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் காலனீயம் முடிவடைந்து தொழில்துறைகளில் ஐரோப்பா பின்னுக்குத் தள்ளப்பட்டு அமெரிக்கா உலகத்தில் முன்னணி நிலைக்கு வந்திருந்தது. காலனீய சுரண்டலால் கொழுத்திருந்த முன்னணி ஐரோப்பிய நாடுகளுக்கு 1973-இன் எண்ணெய்ப்பிரச்சனையும் அது உருவாக்கக்கூடிய விளைவுகளும் வாழ்க்கைத்தர சரிவுகளும் பெரும் அதிர்ச்சியைத் தந்தன. ஆனால் ஐரோப்பிய நாடுகள் மட்டும் எண்ணெய்ச்சார்பிலிருந்து விடுபட்டு தொழில்துறைகளிலும் முன்னேறுவது என்பது இயலாத காரியம். 1986-இல் கோர்பச்சேவ் தாரளமயமாக்கலை அறிவிக்க, உலக எரிசக்தித்தேவையை அது மேலும் உயர்த்தும் என்ற அச்சம் அதிகரித்தது.

ஐரோப்பிய நாடுகளின் அன்றைய நிலையை இவ்வாறு பார்க்கலாம். எரிசக்தியில் தன்னிறைவற்று சோவியத் யூனியனையும் மத்திய கிழக்கு நாடுகளையும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஒருபுறம்; அமெரிக்காவின் வளர்ச்சியையோ, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற வளர்ந்து வரும் புதிய பொருளாதாரங்களின் வேகத்தையோ எட்டமுடியாது என்ற நிலை ஒருபுறம்; மத்திய கிழக்கு ஆசியாவின் அரசியல் குழப்பங்கள் தம் பொருளாதாரத்தையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் பாதிக்காமலும் இருக்க வேண்டும் என்ற கவலை ஒருபுறம்; இவையனைத்திற்கும் இடையில் பல நூற்றாண்டுகளாகக் காலனீயக்கொள்ளையில் செழித்திருந்த தம் வாழ்க்கைத்தரம் காப்பாற்றப்பட வேண்டுமே என்ற அச்சம் ஒருபுறம். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு குளோபல் வார்மிங் என்பது மூழ்குபவனுக்குக் கிடைத்த கட்டுமரம் போலானது. ஏனெனில் குளோபல் வார்மிங் ஒரே சமயத்தில் அதன் பொருளாதார போட்டி நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கும் செக் வைத்தது. சோஷலிஸ தேகத்தில் (அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அளவிற்கு) அதிவேக தொழில் வளர்ச்சி அடைய முடியாத நிலையில், ஓடமுடியாதவன் பிறர் காலில் இரும்புக் குண்டைப்பிணைப்பதுபோல் மனித யத்தனத்தால் குளோபல் வார்மிங் என்ற மந்திரத்தைக் கையிலெடுத்து, கார்பன் க்ரெடிட் ஸிஸ்டம் என்ற இரும்புக்குண்டை வளரும் நாடுகளின் காலில் கட்டும் முனைப்பைத் தொடங்கியது ஐரோப்பா. ஐநாவின் WMOக்கும் அதன் வாரிசான IPCC-க்கும் ஐரோப்பிய நாடுகள் பெரும் ஆதரவைத் தந்தன. படிப்படியாக IPCC என்ற அரசியல் அமைப்பு குளோபல் வார்மிங் பிரச்சார பீரங்கியாக வளர்த்தெடுக்கப்பட்டது. இதன் உச்சகட்டமாக IPCC அறிக்கையை அடிப்படையாக்கி ஐநாவின் ஆதரவில் 1997-இல் கியோட்டா உடன்பாடு என்ற பெயரில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மீது ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் தரத்தொடங்கின.

குளோபல் வார்மிங்கை ஐயுறுவது அறிவியலுக்கு எதிரானதல்ல

குளோபல் வார்மிங் ஒன்றும் அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவல்ல. இன்னும் சொல்லப்போனால், பலர் ஒத்துப்போகிறார்கள் என்ற அம்சம் ஜனநாயக அரசியலில் மட்டுமே முக்கியமானது. அறிவியல் அணுகுமுறைகளில் ஆய்வின் கறார்த்தன்மை மட்டுமே அக்கருதுகோளின் உண்மைக்கு உரைகல்லாகும்.

பூமிப்பந்து சூடாகிறது என்றால் வெப்பப்பிரதேசங்களில் சூடு இன்னுமல்லவா அதிகரிக்கும் என்றால், கடந்த வருடம் என்ன நடந்ததென்று பாருங்கள்: லாஸ் வேகாஸ் மாபெரும் பனிப்பொழிவில் மாட்டியது- விமானநிலையங்கள் மூடும் அளவுக்கு. 1979-க்குப்பின் அந்நகரம் கண்ட முதல் பனிப்பொழிவு இது. பனிப்பொழிவு பார்க்க வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ள தெற்கு லூஸியானாவிலோ நான்கு இன்ச்சுக்கு பனி பொழிந்து தள்ளியது. டென்வர், மாண்டானா ஆகிய நகரங்களில் நடுக்கும் குளிர் பழைய ரிக்கார்டுகளை முறியடித்தது.

ஆனால் இந்த மாதிரி தர்மசங்கட கேள்விகள் வருமென்றுதான் ”அறிவியல் அறிஞர்” டாம் ஃப்ரீட் மேன் தபாலென “Climate weirding” என்று சொல்லி விட்டார், குளோபல் வார்மிங் என்பது இது போன்ற சங்கடக்கேள்விகளில் மாட்டி விடுகிறதென்பதால் Climate Change என்ற பதம் நுழைக்கப்பட்டு விட்டது. இனி வெள்ளம், பஞ்சம், சூறாவளி, நிலநடுக்கம் என எல்லா இயற்கை நிகழ்வுகளையும் குளோபல் வார்மிங் என்ற குப்பியில் போட்டு அடைத்து விடலாம். ”அறிவியல்” பேரறிஞர் அல்கோர் அவர்களோ கத்ரீனா சூறாவளியே குளோபல் வார்மிங்கினால்தான் என்று திருவாய் மலர்ந்து விட்டார். (சொல்லப்போனால் குளோபல் வார்மிங் சடாரென ஏறியதாகச்சொல்லப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கடற்சூறாவளிகளின் எண்ணிக்கை குறைந்தது). Climate weirding என்று சொல்லி விட்டால் காரண காரியத்தொடர்புகளை விளக்குகின்ற சுமை இல்லை அல்லவா!
ஆனால் பல அறிவியலாளர்கள் சந்தேகப் பிராணிகளாக இருக்கிறார்களே, என்ன செய்வது?
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அய்வர் ஜியவர் குளோபல் வார்மிங் என்பது புதிய மதமாகி விட்டது, நான் அதனை சந்தேகப்படுபவனாகவே இருக்கிறேன்” என்கிறார். ஐநாவின் ”சர்வதேச உலக வருடம்” குழு உறுப்பினரும் புவியியலாளருமான டாக்டர். அருண் அலுவாலியா “ஐபிஸிஸி என்பதே உண்மையில் ஒருமூடிய அமைப்பாக ஆகி விட்டிருக்கிறது, திறந்த மனதுடையவர்கள் அங்கில்லை… அறிவியல் பூர்வமான தவறான முடிவுகளுக்கு நோபல் பரிசு தரப்பட்டதென்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யம் தருகிறது” என்கிறார்.

வானிலை அறிவியலாளர் டாக்டர் யோவான் ஸிம்ப்ஸன், ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மனித யத்தனத்தால் பூமி சூடடைகிறது என்ற விஷயத்தை ஐயுறுவதாகச் சொல்கிறார்.

அறிவியல் காரணிக் கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய அம்சம் எல்லா மாறும் காரணிகளையும் அவற்றின் பாதிப்புகளின் அளவுகளோடு கணித்து அவற்றை மாறாக் காரணிகளாக ஆக்குவதுதான். உலக வளிமண்டல மாடலில் மில்லியனுக்கும் மேற்பட்ட மாறும் காரணிகள் உள்ளன என்கிறார்கள். இவற்றில் பெரும்பான்மை ஒன்றுக்கொன்று நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பாதிப்பை உண்டாக்கும் சார்புக்காரணிகள். இவற்றில் கணிசமானவற்றையாவது அளந்து மாறாக்காரணியாக ஆக்க முயன்றால்தான் மாடல்களின் நம்பகத்தன்மை கொஞ்சமாவது அதிகரிக்கும். ஆனால் இன்றைய நிலை என்னவென்றால் கார்பன்-டை-ஆக்ஸைடு என்பதையே விலக்கி விட்டுப்பார்த்தால் கூட, நீராவி, மேகம், சூரியக்கதிர்வீச்சு, கடலின் உள்ளீர்ப்பு ஆகிய பல காரணிகளால் உண்டாகும் இயல்பான வளிமண்டல சூடேற்றத்தின் பாதிப்புகளே இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டு கணிக்கப்படவில்லை என்பதுதான்.

மனித செயல்களால் பூமி சூடடைகிறது என்று சொல்லப்படுவதற்கு வானிலை மாடலிங் மட்டுமே அடிப்படை. இதனைச்சுட்டிக்காட்டி காற்று மற்றும் தரைப்பரப்புகளில் நிகழும் மாற்றங்களை விளக்க எழுப்பப்படும் இவ்வகை மாடல்கள் வலுவற்றவை (எளிதாகப் பொய்த்து விடுபவை) என்கிறார் டாக்டர். யோவான் சிம்ப்ஸன்.

வசதியான அறிவியல் மாடலிங் மூலம் தமது கொள்கைக்கு வலு சேர்ப்பது அறிவியல் கிடையாது- அது அரசியல். 2040-இல் ஆர்க்டிக் பனிப்பாறை அழிவு என்பது மாடலிங்கால் கட்டப்படும் ஒரு பேரழிவு சினாரியோ. இதை 2020 என்றும் காட்ட முடியும், 2080 என்றும் காட்ட முடியும்.
உலக சீதோஷ்ணம் குறித்த முழுமையான தெளிவு இல்லாத நிலையில், காலத்தாலும் இடத்தாலும் சிறிய ஒரு பகுதியில் வாழும் மனித உயிரினம் தன் செயல்களால் மட்டுமே பூமியின் தட்பவெப்ப மாறுதல்களைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்று முடிவு கட்டுவது என்பது அறிவியல் முகமூடியில் அவசரமாய்க் கட்டியெழுப்பப்படும் அரசியலேயன்றி வேறில்லை.

பல பிராந்திய வெப்ப உயர்வுகளுக்கு உள்ளூர்க் காரணிகளை எளிதாகக் காட்டமுடியும். கிளிமாஞ்சாரோ உறைபனி அளவு குறைவதிலிருந்து, நிலத்தடி நீர் மட்டம் குறைவதிலிருந்து மாலத்தீவுகளின் “கடல் அளவு உயர்கிறது” பூச்சாண்டி வரை அனைத்திற்கும் கரியமில வாயு தவிர்த்த நேரடியான உள்ளூர் பிராந்திய காரணிகள் உள்ளன.

ஆனால் வெப்பமடைவது லோக்கல் விஷயங்களால் என்று சொன்னால் எடுபடாது. உலகத்தையே பாதிப்பது என்றால்தான் சீனாவையும் இந்தியாவையும் கார்பன் வரி கட்ட வைக்க முடியும். உடன்படாவிட்டால் தடைகள் (sanctions) என்ற தடியை வைத்து பயமுறுத்த முடியும். OPEC நாடுகள் எண்ணெய் என்பதை ஆயுதமாக உபயோகப்படுத்தியதற்கு மேற்குலகின் பதில்தான் ’மனிதர்களால் குளோபல் வார்மிங்’ என்ற கருத்தாக்கம். குளோபல் வார்மிங் எரிசக்தியை வைத்து நடத்தப்படப்போகும் அடுத்த உலக அரசியல் ஆட்டம் இது. As usual the leading technologist nations are setting a new game, its pace, playground, players and its rules.

(தொடரும்)

One Reply to “அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 2”

Comments are closed.