”ஆய்வுமுறைமைகள் பிழைபடலாம் என்பது அறிவியல் துறைகளில் ஐயம் என்பதன் முக்கியத்துவத்தை நினைவுறுத்தும், மதிப்பு வாய்ந்த விஷயமாகும். விஞ்ஞான அறிவும், ஆய்வு முறைமைகளும் – பழையதோ புதியதோ- தவறு இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் தொடர்ந்து பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வகையாக ஐயம் கொள்வது, அறிவியல் துறையில் படைப்பூக்கத்திற்கான தேவைக்கோ, தான் எடுத்த நிலைப்பாட்டை ஆதரிக்கும் உறுதிக்கோ எதிராய்ப் போகலாம்தான். ஆனால் நிதானமான அறிவொழுக்கமும், உண்மையைத் தேடுகின்ற ஐயப்பாட்டு நிலையும், புதிய சிந்தனைகளுக்கான திறந்த மனப்பாங்கும், கொள்கை இறுக்கம் அல்லது கூட்டம் சேர்க்கும் ஒருபுறச்சாய்வு ஆகியவை அறிவியலை ஊடுருவாமல் தடுக்க இன்றியமையாதனவாகும்”.
– அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பு 1995-இல் “விஞ்ஞானியாய் இருத்தல்: ஆராய்ச்சிகளில் பொறுப்பான நடத்தை” என்ற தலைப்பில் வெளியிட்ட கையேட்டிலிருந்து.
குளோபல் வார்மிங்- அதாவது பூகோள சூடேற்றம் என்பது சமீப காலமாக உலகளாவிய பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. Intergovernmental Panel on Climate Change என்ற ஐநா அமைப்பு தனது அறிக்கையில் மனித யத்தனத்தால்தான் இது நிகழ்கிறது என்று அறிவியல் சமூகம் ஒப்புக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. கார்பன் க்ரெடிட் என்று சொல்லப்படும் கார்பன் கடன் திட்டம் விரைவிலேயே அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்த கார்பன் கடன் திட்டத்தில் தீவிரமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்குமான கார்பன் கால்தடம் (Carbon Footprint) என்ற கருத்தாக்கத்தை பிரேசில், இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளின் மீது கியோடா ஒப்பந்தம் மூலம் திணிக்கும் முனைப்பில் ஐரோப்பிய நாடுகளும் ஐநா சபையும் முன்னணி வகிக்கின்றன. இதற்காக பல வகையிலும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்தபின் பசுமைச்சக்தி (Green energy) அரசின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பசுமைச்சக்தி துறைகளுக்கும், பொருட்களுக்கும் பல மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் இதற்காக தனித்துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பசுமைச்சக்தி தொடர்பான தொடக்க நிலை (ஸ்டார்ட்-அப்) தொழில்நிறுவனங்களில் பண முதலீடு பெருமளது அதிகரித்துள்ளது. பன்னாட்டு பெரு நிறுவனங்களும், எண்ணெய்க்கம்பெனிகளும்கூட பசுமைச்சக்தியை அதிகரிப்பது பற்றியும், கார்பன் கால்தடத்தைக் குறைப்பது குறித்தும் முனைப்பில் உள்ளதாய் செய்திகள் வருகின்றன. ஆக குளோபல் வார்மிங் என்ற ரயில் வண்டி நகரத் தொடங்கி விட்டது போலத்தான் தெரிகிறது. ஆனால் எதை நோக்கி என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ஏனெனில் குளோபல் வார்மிங் குறித்த பல ஆதாரக் கேள்விகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன.
பூமிப்பந்து சூடடைதல்- புதிரா? புனிதமா?
பூமிப்பந்து சூடடைவது என்பது ஏதோ 20-30 வருட காலக்கணக்கில் முடிவு செய்யக்கூடியது அல்ல. ஏனெனில் பூமியின் வயது பல பில்லியன் வருடங்கள். பூமிப்பந்து எரிகுழம்பு வழிந்தோடும் பரப்பாக இருந்திருக்கிறது. பனியுகத்தில் பனிப்பாளங்களால் நிரப்பப்பட்டு இருந்திருக்கிறது. பிறகு மீண்டும் சூடாகியிருக்கிறது. பனிப்பாளமாய் இன்று இருக்கும் ஐஸ்லாந்தில் ஒருகாலத்தில் வைக்கிங்குகள் விவசாயம் செய்திருக்கிறார்கள். பின்பு சில காலகட்டங்களில் புவியின் சில பகுதிகள் கடும் பனியில் உறைந்து இருந்திருக்கின்றன. இப்படி சூடாகியும் குளிர்ந்தும் மாபெரும் பிரபஞ்சத்தின் மகத்தான இயங்கு சக்தியின் உயிர்ப்பானதோர் அங்கமாக பூமிப்பந்து இருந்து வருகிறது. பூமி என்பது பிரபஞ்ச பிரம்மாண்டத்தின் ஒரு துளி.
பூமியின் உயிரியக்கம் என்று நான் சொல்வது பூமியில் வாழும் உயிர்கள் பற்றியதல்ல. பூமியின் உயிரியக்கம் இங்கு உயிரினங்கள் தோன்றும் முன்னரே தொடங்கியது. கடைசி உயிரினம் அழிந்த பின்னும் தொடரப்போவது. இந்த புரிதலும் இப்புரிதலுடனூடாக வரும் வியப்பும், பணிவும் குளோபல் வார்மிங் விவாதத்தின் அடிக்கூறுகளைப் புரிந்து கொள்ள மிகவும் அவசியம்.
பூமிப்பந்து சூடடைதல் என்பது ஒன்றும் கேள்வி கேட்கப்படக்கூடாத புனிதக்கோட்பாடல்ல. ஆனால் இந்தக்கேள்வியைக்கேட்பவர்கள் – அறிவியலாளர்கள் உட்பட- ஏதோ மதக்கட்டளைகளை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள்போல் தாக்கப்படுகிறார்கள். பூமிப்பந்து சூடடைதல் என்பது முற்றும் அவிழ்க்கப்பட்ட புதிருமல்ல. இதனை மனதில் கொண்டு மீண்டும் முதற்கேள்வியைப் பார்ப்போம். பூமிப்பந்து சூடடைகிறதா?
கடந்த கால் நூற்றாண்டுக்கான வெப்ப அளவீடுகளைப் பார்க்கையில் பூகோளம் சூடடைந்திருக்கிறது என்று சொல்லலாம்தான். ஆனால் அதற்கு சில பத்தாண்டுகள் முன்னால் பூமியில் வெப்பநிலை குளிர்ந்திருக்கிறது. பூமியின் தட்பவெப்பம் என்ற பேரமைப்பு (macro-system) பல காரணிகள் ஒருங்கிணைந்து உருவாக்குவது. பூமிப்பந்தின் தற்போதைய வெப்ப உயர்வைப் புரிந்து கொள்ள பூமிப்பந்து சூடடைவதற்கான காரணங்கள் என்ன என்ற தெளிவான புரிதல் அடிப்படைத்தேவையாகும். இதற்கு பல நூற்றாண்டுகள் பூமி கடந்துள்ள தட்பவெப்பநிலை மாறுதல்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
புனைவுகளுக்கு அறிவியல் முகமூடி
IPCC (InterGovernmental Panel on Climate Change)) ஐநாவின் ஒரு அமைப்பு. அரசுகளுக்கிடையே தட்பவெப்ப நிலை மாறுதல்களைக்குறித்து தகவல் பரிமாறும் கூட்டமைப்பாக 1988இல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பைப் பற்றி பிறகு விரிவாகக் காண்போம். இப்போது 2001-இல் IPCC வெளியிட்ட அறிக்கையில் உள்ள ஒரு வரைபடத்தைப் பார்ப்போம். இந்த வரைபடம் முக்கியமானது, ஏனெனில் இதில் ஹாக்கிமட்டை போல் உள்ள வரைபடப்பகுதியின் அடிப்படையில்தான், முந்தைய ஆயிரம் ஆண்டுகளில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு பூமிப்பந்து கடந்த கால் நூற்றாண்டில் சடாரென சூடடையத்தொடங்கி விட்டதாக IPCC அறிவித்தது. கடந்த 1000 ஆண்டுகளைவிட பூமிப்பந்து 1990-களில் மிக அதிக சூடடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. (கீழுள்ள படம்) தொடர்ந்து உலகெங்கிலும் குளோபல் வார்மிங் மனித குலத்தை அழிக்கப்போவதாக அபாய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கின. The inconvenient Truth என்று அல்-கோர் படம் எடுத்து நோபல் பரிசும் பெற்றார். அல்-கோரின் பிரசாரத்திற்கு இந்த வரைபடம் அடித்தளமானது. இந்த வரைபடம் கீழே (சிவப்புப்பகுதி ஹாக்கி மட்டையைக் குறிக்கும்):
இந்த வரைபடத்தில் உள்ள பிரச்சனை இது புள்ளியியல் அடிப்படைகளை மீறி ஒரு முன்முடிவை நோக்கி வசதியாகப் புனையப்பட்ட படம் என்பதுதான்!!! குளோபல் வார்மிங் ஆதரவாளர்களுக்கு மிகவும் மகிழ்வைத் தந்த இந்த வரைபடம் முதலில் மான், ப்ராட்லி, ஹ்யுஸ் ஆகிய ஆராய்ச்சியாளர் குழுவால் 1998-இல் வெளியிடப்பட்டது- எனவே MBH-98 என்று வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வரைபடத்தின் டேட்டா, சமன்பாடுகள், வரைமுறைக் கோட்பாடுகளை (algorithm) ஆகியவற்றை அவரிடம் இருந்து பெற்று மெக்கின்டைர், மெக்கிட்ரிக் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் அந்த வரைபடத்தை உருவாக்க முயன்றனர். அந்த ஆய்வில் 20-ஆம் நூற்றாண்டின் வெப்பநிலை அதிகரிப்பு மட்டும் திடீரென உயர்வது போலக் காட்டும் மாடலிங் சித்துவேலைகளை டாக்டர். மான் குழுவினர் செய்திருப்பது வெளிவந்தது. இது பின்னர் மேலும் பல சக ஆய்வாளர்களின் மறுஆய்வுக்கு (peer review) உட்படுத்தப்பட்டு டாக்டர் மான் அவர்களது வரைமுறை அல்காரிதம் அடிப்படையிலேயே தவறானது என்று கண்டறியப்பட்டது. மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் வெப்ப உயர்வைக்காட்ட செலக்டிவாக மரவளையங்களை (Tree rings) உபயோகப்படுத்தியது அந்த வரைபடத்தின் தோற்றத்தையே மாற்றியமைத்ததும் புலப்பட்டது. (இந்தத் தவற்றைப் பின்னர் டாக்டர். மான் ஒப்புக்கொண்டார்).
இந்த இரண்டு படங்களையும் கீழே தந்திருக்கிறேன்.
மேலே முதலில் இருப்பது டாக்டர் மானின் மரவளைவுகளை வைத்து புனையப்பட்ட MBH98 வரைபடம். இரண்டாவது இருப்பது இப்படிப்பட்ட புனைதல் அற்ற, டேட்டாக்களை மட்டும் அடிப்படையாய் வைத்து வரையப்பட்ட படம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளங்கை நெல்லிக்கனி: டாக்டர். மானின் தவறான அணுமுகுமுறையை அடிப்படையாக்கி அமைக்கப்பட்ட முதல் படத்தில் (மேலே உள்ளது) கடந்த நூற்றாண்டில் திடீரென பூமியின் வெப்பம் உயர்ந்திருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இரண்டாம் படத்தில் (கீழே உள்ளது) அவ்வாறு எவ்வித திடீர் மாறுதல்களும் தெரியவில்லை.
உண்மையைச்சொல்லப்போனால் டாக்டர் மான் குழுவினர் (ஹாக்கி ஸ்டிக் விவாதம் வலுப்பெறுமுன்) மெக்கிண்டைர் குழுவுக்கு ஆய்வுக்கு அனுப்பிய ஃபைல்களில் Censored என்ற ஃபோல்டரில் கீழ்க்கண்ட வரைபடத்திற்கான டேட்டாவும் இருந்திருக்கின்றது.
இவை எதுவுமே ஹாக்கி ஸ்டிக் போல இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். இவை டாக்டர். மான் குழுவால் சென்ஸார் செய்யப்பட்டன- ஏனெனில் இந்த வரைபடம் ஹாக்கி ஸ்டிக் வரைபடம் அளவுக்கு பரபரப்பு ஊட்டுவதாக இல்லை. சொல்லப்போனால் இடைபட்ட கால வெப்ப அதிகரிப்பைவிட 1900-களின் வெப்ப அதிகரிப்பு ஒன்றும் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவில்லை. வெப்பநிலை மாடலிங்கில் சில வசதியான மாறுதல்களைச் செய்த பின் 1900-இலிருந்து திடீரென வெப்பம் முன்பில்லாத வேகத்தில் உயர்ந்ததாகவும் அது 1990-களில் ஆயிரமாண்டு உச்சத்தைத்தொட்டதாகவும் காட்டும் வரைபடத்தின் வசதியான கவர்ச்சி மேலே உள்ள உண்மையான டேட்டாவை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட படங்களில் இல்லைதானே! ஆக இந்த வரைபடத்தின் அடிப்படையில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் – 1998இல்- அதாவது இந்த வரைபடம் வெளியிடப்பட்ட ஆண்டில்தான் பூமியின் வெப்பநிலை உச்சத்தை எட்டியது என்ற அபாய அறிவிப்பு விடப்பட்டது. படம் கீழே:
ஆயிரமாண்டு வெப்பநிலை மாற்றங்கள்
மேற்சொன்ன புனைவுகள் இல்லாத வரைபடத்தின் அடிப்படையில் கடந்த பல நூற்றாண்டுகளின் தட்பவெப்ப நிலையை ஆராய்ந்தால் அது எவ்வாறிருக்கும்? கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பூமிப்பந்தின் பல பாகங்களில் நிலவிய தட்பவெப்பநிலையை அடிப்படையாக்கி வரையப்பட்ட படம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்தப்படத்தைப் பார்க்கையில் உடனடியாகப் பல விஷயங்கள் புலப்படும்.
~கிபி 1000இல் தொடங்கி பூமியின் வெப்ப நிலை சூடடையத்தொடங்கியது; சில நூற்றாண்டுகள் கழிந்தபின் அதனைச் சமன்படுத்தும் விதமாக குளிரத்தொடங்கியது; பிறகு அந்த சிறு குளிர் யுகத்திலிருந்த்து மீண்டெழுந்து ஒரு திருத்தம் போல வெப்பம் உயரத்தொடங்கியதன் பகுதியாக இன்று பூமிப்பந்து சூடடைந்து கொண்டிருக்கிறது; இந்தக்கூறுகளை மேலே உள்ள வரைபடத்தில் தெளிவாகக் காண முடியும்.
அதாவது, கார்பன் வெளியேற்றம் அதிகமில்லாத காலகட்டங்களில் பூமி சூடாகியிருக்கிறது (Medieval Warm Period). கார்பன் வெளியேற்றம் அதிகமாகத்தொடங்கிய கால கட்டங்களில் பூமி குளிர்ந்திருக்கிறது (Little Ice Age). இதே போன்ற குளிர் நிலையை 1960-70களிலும் காணலாம். அந்த நாட்களில் பூமிப்பந்து குளிரடைதல் (Global Cooling) என்பது பெரும் பிரச்சனையாகப் பேசப்பட்டது.
ஆக இடைக்கால வெப்ப உயர்வையும் அதற்கடுத்த சிறு பனியுகத்தையும் கணக்கிலெடுத்தால் இந்நூற்றாண்டின் வெப்ப அதிகரிப்பை, பூமியின் தொடர்ந்த தட்ப வெப்ப ஊசலாட்டத்தின் ஓர் தொடர் அங்கமாகப் பார்க்க இயலும். ஒரு தனியூசல் ஆட்டம் போல – சுருங்கி விரியும் நுரையீரல் போல – பூமிப்பந்தின் தட்பவெப்பம் என்பது வெம்மையாகி விரிந்தும், குளிராகிச் சுருங்கியும் இயங்கி வருவதைத்தான் மேலே உள்ள வரைபடம் நமக்குக் காட்டுகின்றது. புவியின் இயக்கம் என்பது பிரபஞ்சத்தின் மாபெரும் இயங்கு சக்தியின் ஓர் அங்கம் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இதன் தட்பவெப்ப மாறுதல்களில் மில்லியனுக்கும் மேற்பட்ட காரணிகள் இருப்பதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இதற்கிடையில் MBH-98இன் ஹாக்கி ஸ்டிக் புனைவு IPCC மற்றும் அல்-கோர் புண்ணியத்தில் உலகெங்கிலும் தீபோல் பரவிவிட்டது.
(தொடரும்)
3 Replies to “அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 1”
Comments are closed.