இந்திய இசையின் மார்க்கதரிசிகள்

இசைக் கலைஞர்கள் பிறக்கிறார்கள். பல பரிணாமங்கள் அடைந்தபடி வளர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். சிலர் வெளிச்சதிற்கு வருகிறார்கள். பலரது கீர்த்தி வெளிவருவதேயில்லை. சில இசைக் கலைஞர்கள், புகழ்பெற்ற இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இளைய தலைமுறையினர். அதன் காரணமாகவே இவர்கள் மேல் அதீத எதிர்பார்ப்புகளும், அதற்குத் தகுந்த வரவேற்பும் இருக்கும்.

ஆனால் ஒரு இசைக்கலைஞர் இசைப்பாரம்பரியமே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதல் தலைமுறை இசைக்கலைஞராக இருக்கலாம். அப்படிப்பட்டவர் சிறு வயதிலேயே மேதையாக விளங்கி, ஒரு புதிய இசைக்கருவியிலோ அல்லது இசை வடிவத்திலோ சிறந்து விளங்கவும் நேரிட்டால், அந்த இசைக்கலைஞரில் நாம் இசையுலகின் ஒரு மார்க்கதரிசியைக் காண்கிறோம்.

இப்படிப்பட்ட மூன்று மார்க்கதரிசிகளால் நம் இசைக்கு மாண்டலின், சாக்ஸஃபோன், ஸ்லைட் கிடார்(Slide Guitar) என்ற மூன்று புதிய இசைக்கருவிகள் கிடைத்திருக்கின்றன. நம் இந்திய இசைக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத இந்த இசைக்கருவிகளில், நம் பாரம்பரிய இசையை மீட்டுவதற்காக இவர்கள் செய்த மாற்றங்களைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மாண்டலின்

u.srinivasமாண்டலின் இசையை நான் முதன் முதலாய் U.ஸ்ரீனிவாஸ் என்னும் அரிய நிகழ்வின் மூலமே அறிந்தேன். கர்நாடக சங்கீதத்தில், மாண்டலின் என்றால் U.ஸ்ரீனிவாஸ் என்றே பொருள்கொள்ளப்படும். மாண்டலினில் அவர் கொண்டிருந்த தேர்ச்சியையும், அவரது பல்வேறு இசை ஆக்கங்களையும் கேட்டுப் பெரும்வியப்பாக இருந்தது. இதன்பின், மாண்டலின் என்னும் இசைக் கருவி உருவான விதம் குறித்தும், கர்நாடக சங்கீதத்தில் அது உள்வாங்கப்பட்ட விதம் குறித்தும் அறிந்து கொள்ளும் பெரும் ஆவலும் ஏற்பட்டது. குறிப்பாக, U.ஸ்ரீனிவாஸ் மாண்டலின் மூலம் கர்நாடக இசையை சாத்தியபடுத்த அவர் கைக்கொண்ட முயற்சிகளையும் அறிய ஆவல் கொண்டேன்.

மாண்டலின், லூட் எனும் இசைக் கருவியிலிருந்து உருவானது. அதன் தோற்றம் ஆல்மண்ட் விதையை ஒத்ததாக இருப்பதால் இப்பெயர்(இத்தாலிய மொழியில், மாண்டோரியா என்றால் ஆல்மண்ட் என்று பொருள்). மாண்டலின் pear பழ வடிவில், உலோகத் துண்டுடன் கூடிய finger board-உடன், நீண்ட கழுத்து போன்ற பகுதியில் தந்திக்கம்பிகளை கையாள வசதியான திருகல்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். தந்திகளை விரல்களினால் மீட்டலாம். நான்கு ஜோடி தந்திகளைக் கொண்ட மாண்டலின் தனிச் சிறப்பு அது எழுப்பும் மென்மையான ஒலி.

லூட் இசைக்கருவி காலப்போக்கில் பல பரிணாம மாற்றங்களை பெற்று தற்கால மாண்டலினாக உருக்கொண்டுள்ளது. மெஸொபொட்டாமியாவில் உருவான ”ஔட்”(Oud, என்றால் மரத் துண்டு) என்னும் இசைக்கருவி, குழி விழுந்த மரக் கிண்ணத்துடன் இணைக்கபட்ட தந்திக்கம்பிகள் போன்ற தோற்றம் கொண்டது. பல ஐரோப்பிய நாடுகள் இந்த எளிய chordophone-ஐ உள்வாங்கி, தந்திக்கம்பிகளை அதிகப்படுத்தியும், அவற்றின் நீளத்தை நீட்டியும்/சுருக்கியும், finger board-ல் காணப்படும் உலோகத் துண்டில் மாற்றம் செய்தும் புதிய கருவிகளை வடிவமைக்க முற்பட்டனர். இந்த பரிசோதனைகளின் விளைவாக 15-ஆம் நூற்றாண்டில், இத்தாலியில் மண்டோலா எனும் கருவி உருவாக்கப்பட்டது. இதுவே மாண்டலினின் மூதாதை.

பல நூற்றாண்டுகளாக மாறிவந்த மாண்டலின் இசைக்கருவி கர்நாடக இசைக்கேற்ப மேலும் சில மாறுதல்களையும் சந்தித்தது. கர்நாடக இசையை மாண்டலினில் மீட்டுவதற்கு U.ஸ்ரீனிவாஸ் சில மாற்றங்களைச் செய்தார்.

U.ஸ்ரீனிவாஸ் மாண்டலினின் அடிப்படை வடிவத்தை அப்படியே எடுத்துக்கொண்டு அதன் இரட்டைக் கம்பிகளுக்கு பதிலாக ஒற்றைக் கம்பியை உபயோகித்தார். தனது தந்தை யு.சத்தியநாராயணாவின் அறிவுரையின் படி, ஒலியின் ஸ்ருதி அளவையை அதிகரிக்கும் வண்ணம் மாண்டலின் நான்கு தந்திக்கம்பிகளோடு ஐந்தாவது தந்தியையும் சேர்த்துகொண்டார். இதனால் அவரது மாண்டலின் கருவி மூன்றரை ஆக்டேவ் அளவையைக் கொண்டதாக மாறியது. இந்த மாற்றங்களோடு தனக்கே உரித்தான விரல் உபயோக முறையையும், hammer-on மற்றும் கமக வாசிப்பிற்க்கான தனி பாணியையும் மேற்கொண்டு கர்நாடக இசையை மாண்டலினில் வெகுசிறப்பாக வழங்குகிறார் U.ஸ்ரீனிவாஸ். ஆக, அடிப்படையில் ஒரு சிறந்த மரபிசைக் கலைஞராக மிளிர்வதோடு மட்டுமில்லாமல், ஒரு புதிய இசைக்கருவியை நமக்கு அறிமுகப்படுத்திய ஒரு மேதையாக விளங்குகிறார் ஸ்ரீனிவாஸ்.

கீழுள்ள வீடியோவில் ஸ்ரீனிவாஸ் தனக்கு மாண்டலினில் ஆர்வம் ஏற்பட்ட விதம் குறித்தும், அதில் கர்நாடக சங்கீதத்தை வாசிப்பதைக் குறித்தும் பேசுகிறார்.

சாக்ஸஃபோன்

மாண்டலினைப் போலவே சென்ற நூற்றாண்டில் கர்நாடக இசை உள்வாங்கிக் கொண்ட இன்னொரு புதிய இசைக்கருவி சாக்ஸஃபோன். பல விழாக்களிலும், உணவகங்களிலும் இசைக்கப்படும் மேற்கத்திய இசையில் சாக்ஸபோனின் பங்களிப்பை யாரும் கவனிக்காத வகையில், மிக மெல்லிய அளவில் கேட்டிருக்கலாம்.

பல்வேறு சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையில்தான் கர்நாடக இசையில் சாக்ஸபோன் அறிமுகமானது. அதை அறிமுகப்படுத்தியவர் கத்ரி கோபால்நாத். அவர் மூலமாகவே சாக்ஸபோன் தனக்கான இடத்தையும், மதிப்பையும் பெற்றது. கர்நாடக இசையின் காற்றுக் கருவிகளில் நாதஸ்வரம் தனிச்சிறப்பான இடத்தைக் கொண்டது. இன்றும் கூட நாதஸ்வரமே கர்நாடக இசையின் சக்ரவர்த்தியாகக் கருதப்படுகிறது. கத்ரி கோபால்நாத் நாதஸ்வரத்தை முன்மாதிரியாகக் கொண்டு, சாக்ஸபோனில் பல அழகான ராகங்களை சாத்தியப்படுத்தினார். மேற்குலகுக் கருவியான இதற்கு கர்நாடக இசை உலகில் ஒரு தனித்த இடத்தை பெற்றுத் தந்தார்.

சாக்ஸஃபோன் வெண்கலத்தாலான கூம்பு வடிவ உருளையை அடிப்படையாகக் கொண்டது. இந்த உருளையில் 20 முதல் 23 வெவ்வேறு அளவிலான துளைகள் இருக்கும். (அதில் இரண்டு மிகச்சிறிய துளைகள் மேல்ஸ்தாயி இசைக்குத் தோதானவை). ஒவ்வொரு துளைக்கும் காற்றுப்புகாமல் இறுக மூடக்கூடிய ஒரு மூடி உண்டு. இயல்பு நிலையில் சில துளைகள் இந்த மூடிகளால் மூடப்பட்டும், சில துளைகள் திறந்தும் இருக்கும். இந்த மூடிகளை இயக்குவதற்கான விசைகள், இரு கைகளாலும் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். சாக்ஸஃபோனை இயக்குவதற்கான விரல் நுட்பம் கிட்டத்தட்ட புல்லாங்குழல் அல்லது மேல் ஸ்தாயி க்ளாரினெட்டை இயக்குவதை ஒத்திருக்கும்.

மேற்கத்திய இசையில் உபயோகிக்கப்படும் சாக்ஸ்போன் இயல்பில் மூன்றரை ஸ்ருதி அளவைகளைக்(octaves) கொண்டது. மேற்கத்திய இசையில் இதன் பங்கு, ஸ்டக்காட்டோ(Staccato) எனப்படும் தொடர்பில்லாத, விட்டு விட்டு ஒலிக்கும் ஸ்வரக்கோர்வையைத் தருவதே.

சாக்ஸஃபோனில் இந்திய இசையின் முக்கிய அம்சமான கமகங்களைத் தருவதற்கும், மென்மையான ஒலியைத் தருவதற்கும் சில மாற்றங்கள் தேவைப்பட்டன. கத்ரி கோபால்நாத் அறிமுகப்படுத்திய அந்த மாற்றங்கள் மூலம் சாக்ஸஃபோனில் கர்நாடக இசை சாத்தியமானது.

அவர் செய்த மாற்றங்கள்:
1) விரல் நுட்பத்துக்கு இடைஞ்சலாக இருந்ததால் கீழ்ஸ்தாயியில் ஒலியெழுப்பதுவதற்குத் தேவையான சில துளைகளை நிரந்தரமாக மூடினார். அந்த ஸ்வரங்களுக்குத் தேவையும் இருந்திருக்கவில்லை.
2) துளைகளின் மூடிகளை இணைக்கும் உறுதியான உலோகத்தாலான கம்பிகளை நீக்கி, ரப்பராலான கம்பிகளைப் பொருத்தினார்.
3) மூடிகளுக்குக் கீழே இருந்த தோல் மெத்தைகளை(pads) நீக்கி, மென்மையான துணியாலான, குழிந்த மெத்தைகளைப் பொருத்தினார்.

இயல்பாகவே பிசிறடிக்கும், ஆர்ப்பாட்டமான சாக்ஸஃபோன், கத்ரி கோபால்நாத் செய்த இந்த மாற்றங்களால் கர்நாடக இசைக்குத் தேவையான மென்மையான ஒலியையும் வழங்குகிறது. நாதஸ்வரம், புல்லாங்குழல் வரிசையில் நம் மரபிசைக்கு இன்னொரு காற்றுக்கருவியும் கிடைத்தது. பல எள்ளல்களையும், எதிர்ப்புகளையும் தாண்டி கத்ரி கோபால்நாத் நம் மரபிசைக்குத் தந்திருக்கும் கொடை இது.

தன்னுடைய ஆதர்சம், சாக்ஸபோன் கற்றுக்கொண்டவிதம் இவற்றைக் குறித்து கத்ரி கோபால்நாத் இந்த வீடியோவில் பேசுகிறார்:

ஸ்லைட் கிடார்

கிடார் முற்றிலும் இந்தியாவுக்குப் புதிய இசைக்கருவி இல்லை. ‘Pluctrum Guitar’-ஐ ஒத்த ஸ்வராபத் ஸிதார் எனப்படும் இசைக்கருவி மிகப்பழங்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கிறது. 1860-களில் போர்த்துக்கீஸியத் தொழிலாளர்கள் இரும்புத் தந்தி கிடாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.

கிடார் என்று பெரும்பாலும் அறியப்படும் ‘lap style’ கிடார் மடியில் வைத்து, ஒரு உலோகப் பட்டையால் மீட்டப்படுவது. ஆனால் ஸ்லைட் கிடார் வீணையைப் போல கிடாரின் பின்பக்கம் தரைக்கு இணையாக இருப்பது போல வைத்து வாசிக்கப்படுவது. இப்படி வாசிக்கும் ஸ்லைட் கிடாரிலிருந்து எழும் ஒலி, மனிதக்குரலை ஒத்ததாக இருக்கிறது. ஸ்லைட் கிடாரின் இந்த மனிதக்குரலுக்கு நெருக்கமான ஒலிப்பயன்பாட்டை நாம் ஹவாய் நாட்டுப்புற இசை, ஆப்பிரிக்க-அமெரிக்க Bottleneck blues போன்ற இசை வடிவங்களில் அறியலாம்.

ஹவாய் ஸ்லைட் கிடாரிலிருந்து இந்திய செவ்வியல் கிடாரை உருவாக்கிய பெருமை பண்டிட் ப்ரிஜ் பூஷன் காப்ரா(Pt.Brij Bhushan Kabra)வையே சாரும். ஸ்லைட் கிடாரில் drone, sympathetic ஸ்வரங்களை எழுப்பும் சில தந்திக்கம்பிகளை இணைத்து இந்திய இசையை வாசித்தார் காப்ரா.

காப்ராவின் முக்கியமான மாணவர்களில் ஒருவரான தெபாஷிஷ் பட்டாச்சார்யாவும் ஸ்லைட் கிடாரின் அடுத்த பல பரிமாணங்களுக்குக் காரணமாக இருக்கிறார். இந்திய தந்திக்கருவியான சரோடை முன்மாதிரியாக வைத்து, காப்ராவின் கிடார் வடிவத்தில் மேலும் பல தந்திக்கம்பிகளை இணைத்து அதை மேலும் நுட்பப்படுத்தினார் தெபாஷிஷ் பட்டாச்சார்யா. இன்று இந்தியாவின் தலைசிறந்த தந்திக்கம்பி இசைக்கலைஞர்களில் ஒருவராக விளங்குகிறார் தெபாஷிஷ் பட்டாச்சார்யா.

கீழுள்ள வீடியோவில் தெபாஷிஷ் பட்டாச்சார்யாவின் சிறு பேட்டியும், அவருடைய வாசிப்பு முறையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இசை என்பது ஒரு சிறு குமிழுக்குள் அடைத்து வைக்கப்படக்கூடிய விஷயமல்ல. அது காலந்தோறும் பரிணமித்துக்கொண்டே இருக்கிறது. அதைப் போலவே இசைக்கருவிகளும் காலந்தோறும் வடிவமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. அந்த வடிவ மாற்றங்களை அறிமுகப்படுத்தி, அவற்றை வெறும் பரிசோதனை முயற்சிகளாக மட்டுமில்லாமல், அறிவார்ந்த இசைவடிவமாக மாற்றக்கூடிய மேதைகள் நம் இசைக்குக் கிடைக்கும் பெரும் பொக்கிஷங்கள். இந்தக்கட்டுரையில் நாம் பார்த்த ஒவ்வொரு இசைக்கலைஞருமே அப்படிப்பட்ட பொக்கிஷம்தான்.