ஒலிக்காத குரல்கள்

கோபிகிருஷ்ணனைப் போலவே ஒரு மன்னிப்போடுதான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ‘பைத்தியக்காரன்’, ‘மனநோயாளி’ என்று அழைப்பது தகவில்லாததும், உரிமையற்றதுமான சமூகக் குற்றமாகும். இங்கே அப்படி ஏதேனும் சில வார்த்தைகள் தென்படுமானால் அதற்காக மன்னிக்கவும்.

தமிழ்த் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமாயிருந்த இந்த ‘பைத்தியக்காரர்கள்’ என்னும் பிம்பம் எனக்குச் சிதையக் காரணமாயிருந்தது ஸ்டாஃப் நர்ஸாக வேலைபார்த்த என் நண்பன் ஒருவனால்தான். அதுவரை இப்படி பைத்தியக்காரர்கள் என்றாலே அவர்கள் ஏதேனும் கிறுக்குத்தனமாகச் செய்துகொண்டிருப்பார்கள் என நினைத்துக்கொண்டிருந்தேன். மனநலம் குன்றியவர்களுக்கான மருத்துவமனையொன்றில் அவன் ஸ்டாஃப் நர்ஸாக வேலைக்குச் சேர்ந்த பின்பு சொன்ன கதைகள் என்னை அதிர்ச்சியாக்கின. ஒரு கட்டத்தில் மனநலம் சரியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் எல்லாருமே மனநோயாளிகளே என்ற முடிவுக்குக்கூட வந்துவிட்டேன். ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ என்னை மீண்டும் அந்தப் புள்ளிக்கே கொண்டு சென்றது.

கோபி கிருஷ்ணனை இதற்கு முன்னர் வாசித்திருக்கிறேன். அவரது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட விஷயங்களை கிட்டத்தட்ட உண்மைக்கு அருகே அப்படியே முன்வைக்கிறார். மனநலம் குன்றியவர்களுக்கான ஒரு காப்பகத்தில் அவரும் அவரது நண்பர்களும் எதிர்கொள்ளும் விஷயங்களை அப்படியே நூலாக்கியிருக்கிறார் கோபி கிருஷ்ணன். இவை உண்மை சார்ந்த குறிப்புகள் என்பதாலும், அதில் உலவும் மனிதாபிமான நோக்கினாலும், இப்புத்தகத்தில் நூலாசிரியர் ஒரு சாட்சி மட்டுமே என்பதாலும், இப்புத்தகம் வெகுமுக்கியத்துவம் பெறுகிறது.

கோபி கிருஷ்ணனின் எழுத்துகள் எந்த ஒருவருக்கும் வக்காலத்து வாங்குவதில்லை. தனித்து நின்று ஒரு கதாபாத்திரத்தை உயிர் பெறச்செய்வதில்லை. கோபி கிருஷ்ணன் செய்வதெல்லாம், தான் கண்டவற்றை, தன் மீதான எள்ளலோடும், தன் சமூகம் மீதான மெலிதான விமர்சனத்தோடும் சொல்வது மட்டுமே. இதனால் இந்த விமர்சனங்கள் அறிக்கைகள் போன்றொரு துர்ப்பாக்கிய நிலையை அடையாமல், அதிகாரம் போன்றதொரு மமதையைக் கைக்கொள்ளாமல், மனம் சார்ந்த தேடலோடு சொல்லப்படுகிறது. சமூகம் மீதான எள்ளல் என்பதுகூட நேரடியாக சவுக்கைக் கொண்டு சுழற்றுவது போலெல்லாம் இல்லாமல், மிகவும் எதார்த்தமாகச் சொல்லிச் சொல்வது மட்டுமே. இது கோபி கிருஷ்ணனின் ஒட்டுமொத்த எழுத்துக்களின் வடிவம், அதையே நாம் இந்நூலிலும் காணமுடிகிறது. எந்த ஒரு மனநோயாளிக்காகவும் அவர் அழுவதில்லை. மாறாக, அவர்களின் பிரச்சினைகளை நம்முன் அப்படியே கொண்டுவருவதோடு நின்றுவிடுகிறார். மற்றவற்றை நாம்தான் யோசிக்கத் தொடங்குகிறோம். ஒவ்வொரு நிகழ்வும் முடியும் கணம் தோறும் தொடங்குகிறது.

Photo courtesy: http://lesarmitage.co.uk/
Photo courtesy: http://lesarmitage.co.uk/

இந்த நூலை வாசிக்கும் எவர் ஒருவரும் நிச்சயம் ஒரு கட்டத்தில் நாமும் மனநோயாளிதானோ என்று யோசித்தே தீரவேண்டும் என்று நினைக்கிறேன். மிகச்சாதாரண விஷயங்கள் முதல், அதிர வைக்கும் விஷயங்கள் வரை இந்நூலில் மனநோயாக நடமாடுகின்றன. தன் மனைவி மீது சந்தேகப்படுகிறார் ஒருவர். தானில்லாத நேரத்தில் தன் வீட்டுக்கு யாரோ வருகிறார்கள் என்று பிரமை. இன்னொருவருக்கு தன்னை யாரோ பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்கிற பிரமை. இன்னொருவருக்கு காதில் ஏதோ ஒரு குரல் விழுவது போன்ற பிரமை. ஒருவருக்கு மலத்தின் சுவை பிடித்திருக்கிறது. ஓர் எழுத்தாளர் தன் வீட்டருகில் இருக்கும் ஒரு குழந்தையை மையப்படுத்தி சிறுகதை எழுதிவிடுகிறார். அதை அக்குழந்தையின் வீட்டில் வாசித்துவிட்டால் தன்னை மிரட்டுவார்களோ என்கிற எண்ணம் மேலிட, இங்கே வந்துவிடுகிறார். ஒரு நோயாளி அந்த மருத்துவமனையில் இருக்கும் பெண் சமூக – உளவியல் பணியாளருடன் உறவுகொள்ள விருப்பம் என்கிறார். இன்னொருவருக்கு எதைக் கண்டாலும் பயம். இப்படி கற்பனைக்கெட்டாத பல நோயாளிகளை உலவச் செய்திருக்கிறார் கோபி கிருஷ்ணன்.

பல நோயாளிகளை உறவினர்கள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். பலர் தாங்களே வந்து சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். என் நண்பன் சொன்னது நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற நோயாளிகளைச் சேர்க்கவரும் உறவினர்கள் பெரும்பாலும் சொல்வது, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை இங்கயே இருக்கட்டும் என்பதுதான். இதுபோன்ற மனிதர்களை வீட்டில் வைத்துப் பராமரிக்கும் பொறுமையும், இது குறித்த தெளிவும் இன்றைய சமூகத்துக்கு இல்லை என்பதால், இதுவே யதார்த்தம் என்று எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், இப்படி மனநோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்களுக்குத் தரப்படும் சிகிச்சை – நாம் நம் திரைப்படங்களில் பார்க்கும், அன்பும் கனிவும் மிளிரும் சாந்தமான பார்வை கொண்ட ஒரு நர்ஸ் ஒரு பால் டம்ளரைக் கையில் வைத்துக்கொண்டு ‘குடிங்க குடிங்க’ என்று கெஞ்சுவார் – போன்றதல்ல. பெரும்பாலும் வன்முறை சார்ந்தது. அடி மிரட்டல் அழுகை. மிஞ்சினால் மின்சாரம் பாய்ச்சுதல். இதனால் இப்படி சேர்க்கப்படும் மனிதர்களின் சிறிய பிரச்சினைகள் பெரியதாகி அவர்கள் நிரந்தர மனநோயாளிகள் ஆகிவிடுகிறார்கள்.

இப்படி மருத்துவமனையில் தங்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் இன்னொரு பிரச்சினை செக்ஸ் சார்ந்தது. நிறைய நோயாளிகளுக்குத் தாங்கள் யாரென்றே தெரிவதில்லை. ஆனால் அவர்களுக்கு வரும் செக்ஸ் உணர்வை அவர்களால் அடக்கமுடிவதில்லை. இதனால் அவர்கள் வயலண்ட் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. பல நோயாளிகள் முதல்நாள் இரவு என்ன நடந்ததென்று தெரியாமல் மறுநாள் ‘அவன் என்னை இப்படி பண்ணிட்டான்’ என்றெல்லாம் சொல்லுவதுண்டு. இதுபோன்ற பிரச்சினைகள் இப்புத்தகத்தில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு இருக்கும் செக்ஸ் உணர்வுகளைப் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கின்றன. ஒருவேளை, கோபி கிருஷ்ணன் எதிர்கொண்ட மனிதர்கள் ஓரளவு தன்னிலை அறிந்தவர்களாக இருப்பதால், இதை அவர்களே சொல்லாமல் தவிர்த்திருந்திருக்கலாம் அல்லது அப்படி நடக்காமலேயே இருந்திருக்கிருக்கலாம்.

இங்கேயும் மதம் மற்றும் ஜாதி சார்ந்த பிரசங்கங்கள் எல்லாம் நடக்கின்றன. இதிலிருந்தே நிச்சயம் சொல்லமுடியும் இங்கே இருப்பவர்கள் நம்மைப் போன்ற மனிதர்களே என்று. மனநோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிராமணர் ஒருவர், கிறித்துவ உளவியலாளரைப் பார்த்து, ‘நீங்க பிராமின்ஸாட்டம் பேசறீங்க’ என்கிறார். இப்படிச் சொல்லி அவருடன் ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறார். இன்னொரு சுவாரஸ்யம், மூன்று நோயாளிகள் பேசிக்கொள்ளும் வசனங்கள். பாண்டியன், எபிநெசர், அன்வர் பாட்சா – மூவரும் கலந்துரையாடுகிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொள்ளும் கருத்துகள், நல்ல மனநிலையில் இருக்கும் யாரும் பேசுவதைவிட மேலானவை.

ஒரு நோயாளிக்கும், உளவியலாளர் ரவீந்தரனுக்கும் நடக்கும் பேச்சைப் பார்க்கலாம்.

நோயாளி: நீங்க தண்ணி போடுவீங்களா?

ரவீந்தரன்: இல்ல, எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் கெடயாது.

நோயாளி: பரவாயில்ல, என்கிட்ட எந்த ரகசியமும் தங்கும். தைரியமாச் சொல்லுங்க, நா யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.

ரவீந்தரன்: உண்மையிலேயே எனக்கு அந்த மாதிரிப் பழக்கம் இருந்ததில்லே…

நோயாளி: உங்க முகத்த பார்த்தாத் தண்ணி போட்டவர்; இல்லேன்னா ஒரு காலத்துல ரெகுலராத் தண்ணி போட்டுட்டு ஒரு கட்டத்துல நிறுத்தினவர் மாதிரித் தோணுது.

Photo courtesy: Anyindian.com
Photo courtesy: Anyindian.com

ரவீந்தரன்: இல்லெ செபாஸ்டியன், எனக்கு அந்த மாதிரிப் பழக்கமெல்லாம் இருந்ததில்லெ.

நோயாளி: எனக்கு ஒருத்தர் முகத்தெப் பார்த்தாலே சில விஷயம் விளங்கிடும். எம் மேலெ ஜீஸஸ் அருள் உண்டு. நா இங்க இருக்கிற ரெண்டு பேர்கிட்ட சொல்லியிருக்கேன், ஒருத்தர் பிரதம மந்திரி ஆவாரு, இன்னொருவர் நிதி அமைச்சர் ஆவார்னு. நா சொல்றது நிச்சயம் நடக்கும். என்கிட்ட இருக்கிற ஜீஸஸ்தான் இதெல்லாம் சொல்றார். தேவ பிதா எந்தன் ஈசனல்லோ….

கடைசியாக நோயாளி சொல்வதை நாம் மறந்துவிட்டால், நாமெல்லாருமே நோயாளியாகி விடுகிறோம். எனக்கு முகத்தைப் பார்த்தே சொல்லிடமுடியும் – என்று எத்தனை பேர் நாள்தோறும் நம்மிடம் சொல்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். கடைசியாக நோயாளி சொல்வதை சேர்த்துக்கொண்டாலும், நம் வீட்டில் பலர் நோயாளிகளே. எனவேதான் மனநோயாளி என்னும்போதே யார் பார்வையில் என்னும் கேள்வியும் எழுந்துவிடுகிறது.

உள்ளேயிருந்து சில குரல்கள், கோபி கிருஷ்ணன், வம்சி புக்ஸ்.