தற்காலத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பவர் எழுத்தாளர் திரு.தீலீப் குமார். குஜராத்தி மொழியைத் தன் தாய் மொழியாகப் பெற்றிருந்தாலும் தமிழ் மொழி மீது அழியாக் காதல் கொண்டு நவீன தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் தீலீப் குமார். கடந்த 40 வருடங்களாகத் தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார். பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் அழைப்பின் பேரில் பெர்க்கிலி தமிழ் துறை மாணவர்களிடம் உரையாற்றுவதற்காக சென்ற வருடம் செப்டம்பர் மாதம் அழைக்கப் பட்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சிவா சேஷப்பன் அவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில், சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் வாசகர்கள் சிலருடன், தீலீப் குமார் தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்துக் கலந்துரையாடினார். அப்போது அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.
எழுத்தாளர் தீலீப் குமார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் வேலைக்குச் சென்று குடும்பப் பொறுப்பைச் சுமக்க ஆரம்பித்திருக்கிறார். கடைகளுக்கு வேலைக்குச் சென்று உழைத்துக் கொண்டிருந்த பொழுதே அவருக்கு புத்தகங்களின் மீதும் வாசிப்பின் மீதும் தணியாத காதல் பிறந்திருக்கிறது. முறையான கல்வி கிடைக்கப் பெற்றிராத பொழுதும், தன் தாய்மொழி தமிழாக இல்லாதிருந்த பொழுதிலும், ஓயாத வேலைகளுக்கு நடுவிலும் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார்.

கோவையில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல இலக்கியங்களைத் தேடிப் பிடித்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். முழுக்க தன் சுய முயற்சியின் மூலமாக மட்டுமே நல்ல இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். தனது ஜவுளிக் கடை முதலாளி தினமும் தேநீர் அருந்துவதற்காக அளிக்கும் சொற்ப பைசாக்களைச் சேர்த்து வைத்து புத்தகங்கள் வாங்கிப் படித்திருக்கிறார் என்று அவர் விவரித்த பொழுது, புத்தக வாசிப்பின் மீது இருந்த மோகம் புலப்பட்டது. தனது தணியாத இலக்கிய ஆர்வத்தினால் புத்தகங்களையும் நல்ல எழுத்தாளர்களையும் தேடித் தேடிப் படித்து அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார். வாசிப்பிலும் எழுத்திலும் அவரது சூழல் ஏற்படுத்திய அனுபவத்தையும் தாக்கத்தையும் அதன் காரணமாக அவருள் தூண்டப் பட்ட எழுத்தார்வத்தையும் பல சம்பவங்களைச் சொல்லி விவரித்தார்.
ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்து கொண்டிருந்த ஞானரதம் புத்தகத்தை ஜெயகாந்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப் பட்ட தீலீப்குமார் அந்த புத்தகத்தை வாங்க இயலாமல் அட்டைப் படத்தைப் பார்த்தே படிக்க ஏங்கிய நாட்களை நினைவு கூர்ந்தார். தமிழில் எழுதத் தொடங்கியதற்கு ஜெயகாந்தனின் எழுத்துக்களே தனக்கு உத்வேகம் அளித்தன என்றார். ஜெயகாந்தனைப் போலவே அடித்தட்டு மக்களுடன் நன்கு பழகிய அனுபவம் இருந்ததினால் அவர்களது உலகத்தை எழுத வேண்டும் என்ற ஆர்வம் தனக்கும் ஏற்பட்டதாகக் கூறுகிறார். கூர்மையான அவதானிப்பு, எளிமையான மொழி நடை, மனிதர்களின் நுட்பமான மனம் குறித்தான தெளிவான பார்வை, இயல்பான மென்மையான நகைச்சுவை உணர்வு இவை அனைத்தும் தீலீப்குமாருக்கு, தன் அனுபவங்களையும் தமிழில் சிறுகதைகளாக எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
கோவையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தன் அனுபவங்களையும், தான் சந்திக்க நேரும் மனிதர்களைப் பற்றியும் தொடர்ந்து சிறுகதைகளாக கணையாழி போன்ற சிற்றிதழ்களில் எழுதி வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வியாபார நிமித்தமாக புலம் பெயர்ந்து வந்த குஜராத்திக் குடும்பங்களையும், அவர்கள் சமுதாயத்தில் நிலவும் வறுமை, முதுமை போன்ற எண்ணற்ற தமிழ் நாட்டில் வாழும் குஜராத்திகளின் உலகை திலீப்பின் சிறுகதைகள் பலவும் நமக்குச் சித்தரிக்கின்றன. சினிமாக்களில் காண்பிக்கப் படும் செயற்கையான குஜராத்திய சமூகம் வேறு யதார்த்தத்தில் அவர்களுக்கு ஏற்படும் சமூக, உளவியல் பிரச்சினைகள் வேறு என்பதை இவரது சிறுகதைகள் விளக்குகின்றன.
தனது வாழ்வில் நிகழ்ந்த பலவிதமான அனுபவங்களையும் மிக நுட்பமான நகைச்சுவை உணர்வுடன் தீலீப்குமார் சித்தரிக்கும் பொழுது நம் மனதில் அந்தச் சிறுகதைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. படித்தவுடன் மறந்து விடக் கூடிய பொழுதுப் போக்குக் கதைகள் அல்ல அவை. இவரது ஒவ்வொரு சிறுகதையும் மனிதாபிமானத்தையும் சிக்கலான மனித உறவுகளையும் தொட்டுச் செல்பவை. கோவையில் இவரது சிறு வயது அனுபவங்களும் இவர் பழக நேர்ந்த மனிதர்களும் இவரது கதைகள் வாயிலாக நமக்கு அறிமுகப் படுத்தப் பட்டு நம்மால் மறக்க இயலாத மனச் சித்திரங்களையும், உணர்வுகளையும் அளிக்கின்றன. இவரது கதை மாந்தர்களாக வரும் பாத்திரங்களின் மனிதாபிமானங்களும், தீர்வுகளும் நம்முள் ஆழ்ந்த விவாதத்தையும், சிந்தனைகளையும் கிளர்ந்தெழச் செய்பவை.
இவர் எழுதிய கடிதம், தீர்வு போன்ற சிறுகதைகள் தேர்ந்த தமிழ் வாசகர்களிடத்து மிகுந்த வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்று நவீன தமிழ் சிறுகதையுலகில் தீலீப் குமாருக்கு ஒரு உயர்வான ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன. தமிழில் தேர்ந்தெடுக்கப் பட்ட சிறுகதைகளைத் தொகுக்கப் பட்டால் அதில் தவிர்க்கமுடியாத படி கட்டாயமாக இடம் பெறும் தகுதியையும் விமர்சகர்களின் அங்கீகாரத்தையும் பெற்றவை இவரது படைப்புகள்.
தற்காலத் தமிழ் இலக்கிய உலகின் போக்குகள், வாசகர்களின் தேர்வுகள், தமிழ் நாட்டில் அதிகம் வரவேற்பைப் பெறும் நூல்கள் ஆகியவை குறித்து தீலீப்குமார் தன் உரையாடலில் தெரிவித்தார். தற்காலத் தமிழ் இலக்கிய உலகில் நிறையத் தலித் எழுத்தாளர்கள் தோன்றி வருவது குறித்தும், அவர்கள் நாவல்களின் உள்ளடக்கம், நடை, அவர்களது தார்மீகமான கோபங்கள், சமுதாய நிலவரங்கள் ஆகியவை குறித்து மிக விரிவாக பேசிய தீலீப் குமார், தலித் இலக்கிய வகை சார்ந்த எழுத்துக்கள் தரும் நம்பிக்கைக் குறித்தும் வளர்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்கள் குறித்தும் உற்சாகத்துடன் குறிப்பிட்டார். கடந்த நூறு ஆண்டுகளாக நவீனத் தமிழ் இலக்கிய உலகின் வரலாறு, போக்கு தற்கால நிலமை குறித்து விரிவாக உரையாடினார்.
தமிழ் மீதுள்ள காதலுக்கும் தன் இலக்கியம் மற்றும் எழுத்தார்வத்திற்கும் தனது துணிக் கடை வேலைகள் பொருந்தாமல் இருந்ததினால் தமிழ் இலக்கியச் சூழலின் அருகில் இருக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தின் காரணமாக, திரு.ராமகிருஷ்ணன் துவங்கிய க்ரியா புத்தக நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்து கோவையில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார் திலீப் குமார். பின்னர் க்ரியா ராமகிருஷ்ணன் துவங்கி நடத்தி வந்த ஒரு சிறிய புத்தக விற்பனை வினியோக வியாபரத்தை எடுத்து நடத்தி வந்து கொண்டிருக்கிறார். தனக்கென்று வரித்துக் கொண்ட கொள்கைகளுக்கு உட்பட்டு மிக எளிமையான வாழ்க்கைக்கு ஈடு தரும் விதத்தில் தமிழ் புத்தகங்களை விற்பனை செய்து கொள்ளும் ஒரு சிறு வியாபரத்தைத் தொழிலாகத் தேர்வு செய்து நடத்தி வருகிறார். புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழில் வரும் நல்ல நூல்களைத் தேர்வு செய்து தருவிக்கப் பல ஆண்டுகளாக நாடி வரும் விமர்சகர் தீலீப்குமார் ஒருவரே. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் தேர்வு ரசனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தரமான நூல்களைப் பரிந்துரைத்தும் விற்பனை செய்தும் வரும் தீலீப்குமார், அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் தமிழ் மொழித் துறை ஆகியவற்றிற்கும் தமிழ் நூல்களை விற்பனை செய்து வருகிறார்.
இவரது கதைகள் யாவும் சிற்றிதழ்களில் மட்டுமே வெளிவந்தவையாதலால் ஜனரஞ்சக பத்திரிகைகளுடன் மட்டுமே பழக்கம் கொண்டுள்ள வாசகர்களிடம் அதிக அறிமுகம் இல்லாதவராக இருக்கிறார். இருந்தாலும் தமிழில் இலக்கியத் தரம்வாய்ந்த படைப்புகளுடன் அறிமுகம் வாய்ந்த அனைவராலும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாளியாக அடையாளம் காணப் படுகிறார் தீலீப் குமார். இவரது சிறுகதைகளான கடிதம், கண்ணாடி, நிகழ மறுத்த அற்புதம் போன்ற சில சிறுகதைகள் குறும் படங்களாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கடிதம் சிறுகதையில் வரும் சுற்றம் இருந்தும் அநாதரவாக உணரும் வயோதிகரின் பாத்திரத்தில் பிரபல நடிகர் சாருஹாசன் நடித்திருக்கிறார்.
இதுவரை மூங்கில் குருத்து, கடவு என்று இவரது இரு சிறுகதைத் தொகுதிகள் க்ரியா பதிப்பகத்தாரால் வெளி வந்துள்ளன. தமிழ்ச் சிறுகதையுலகின் முன்னோடிகளில் ஒருவரான மெளனியின் படைப்புக்கள் குறித்து தீலீப் குமார் எழுதிய ‘மொளனியுடன் கொஞ்ச தூரம்’ என்ற புத்தகம் வானதி பதிப்பகத்தாரால் நூலாக வந்துள்ளது. தமிழின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகளை இவர் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்து ‘A place to live – Contemporary short story collection’ என்ற நூலாக வெளிவந்துள்ளது. தனது பணிகளுக்கு நடுவிலும் தொடர்ந்து எழுதி வரும் தீலீப் குமார் அடுத்த வருடம் தனது அடுத்த சிறுகதைத் தொகுதி ஒன்றையும், ஒரு நாவல் ஒன்றையும் வெளியிடப் போவதாகத் தெரிவித்தார்.
மென்மையான கனிவான பேச்சும், பழகும் தன்மையும், நுட்பமான நகைச்சுவை உணர்வும், யாவரையும் கவர்ந்திழுக்கும் நட்பான தோற்றமும் இவருக்கு ஏராளமான நட்பைப் பெற்றுத் தந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய உலகில் தீலீப் குமாரைப் பரிச்சியம் இல்லாத இவருடன் நட்புப் பாராட்டாத இலக்கியவாதிகளே இல்லை எனலாம். எவரையும் புண்படுத்தாமல் படைப்புகளை விமர்சிக்கிறார். தமிழ் இலக்கியம் குறித்தும் உலக இலக்கியம் குறித்தும் பரந்த வாசிப்பும் தமிழ் இலக்கியத்தின் செழுமையின் மீது மாளாக் காதல் கொண்டவராக இருக்கிறார். 1800களின் இறுதி துவங்கி இன்று வரையில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க நூறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தற்காலத் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியை ஆங்கில வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் தற்பொழுது மும்முரமாக இயங்கி வருகிறார்.
தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாமலேயே தமிழுக்குத் தங்கள் எழுத்தால் வளம் சேர்த்த படைப்பாளிகள் வரிசையில் தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தைப் பெறுகிறார் தீலீப் குமார். இவரது சிறப்பான படைப்புகள் இவருக்குப் பல விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளன. தமிழின் நவீன இலக்கியம் குறித்துப் பல்கலைக் கழக மாணவர்களிடத்தும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடமும் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். தமிழ் எழுத்துப் பட்டறைகளையும் நடத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பெர்க்லி தமிழ் துறையில் தங்கி மூன்று மாத காலம் தமிழ்த் துறை மாணவர்களுக்கு நவீன இலக்கியம் குறித்து அறிமுகப் படுத்திப் பாடம் நடத்தியுள்ளார். இந்த முறையும் பெர்க்லி, சிக்காகோ, யேல் ஆகிய பல்கலைக்கழங்களின் தமிழ் துறை மாணவ்ர்களுக்கு உரையாற்றி வருகிறார்.
உரையாடலில் கலந்து கொண்ட வாசகர் காவேரி, எழுத்தாளரின் கடவு தொகுகியில் இருந்து கடிதம் என்ற சிறுகதையை அதன் உணர்வு குன்றாமல் வாசித்தார். ஒரு குஜராத்திக் குடும்பத்தில் முதுமையடைந்த ஒரு பெரியவர் தன் பிள்ளைகளால் அவ்வளவாகக் கவனிக்கப் படாமல் ஓரமாக ஒதுக்கப் பட்டிருக்கும் நிலையில் அவரது பார்வையில் அவரது ஏக்கங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், நோய்கள், துன்பங்கள் யாவும் ஒரு யாசகக் கடித்தத்தின் வாயிலாக இந்தக் கதையில் வெளியிடப் படுகின்றது. கதை முழுவதும் விரவும் ஏக்கத்தையும், முதுமையின் தனிமையின் சோகத்தையும் தன் மெல்லிய நகைச்சுவை கலந்த எழுத்தால் தீலீப் குமார் வாசகர்களிடம் மிகுந்த தாக்கத்தையும், சோகத்தையும் விட்டுச் செல்கிறார்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேர சுவையான உரையாடலுக்குப் பின்னர் விடை பெற்றார். தீலீப் குமாரின் சிறுகதைகள் தரமான படைப்புக்களைத் தேடிப் படிக்க விரும்பும் வாசகர்களால் தவற விடக் கூடாதவை.
3 Replies to “திலீப்குமாரின் இலக்கிய உலகம்”
Comments are closed.