எலெக்ட்ரீஷியன் நவாப்தீன்

இக்கதையைக் குறித்தும், எழுத்தாளர் தானியால் முயுனுதீன் குறித்தும் இதே இதழில் ‘பாகிஸ்தானிய ஆங்கில இலக்கியம்’ என்ற கட்டுரையில் படிக்கலாம். நியூயார்க்கரில் வெளியான இக்கதையின் ஆங்கில மூலம்: Electrician Nawabdin.

மின்சார மீட்டரை மெதுவாகச் சுற்ற வைப்பதன் மூலம் கரண்ட் பில்லைக் குறைக்கும் கலையில் அவன் மன்னனாக இருந்தான். அவனிடமிருந்த அந்தத் தனிப்பட்ட திறமையினால்  பேரோடும், புகழோடும் இருந்தான். ஒவ்வொரு மாதமும் இத்தனை ரூபாய் கரண்ட் பில் மிச்சமாக வேண்டும் என்று ரூபாய்த் துல்லியமாக மக்கள் கேட்கும் அளவுக்கு அத்தொழில் அவனுக்குக் கை வந்தது. ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து ராப்பகலாக மோட்டார் வைத்துத் தண்ணீர் உறிஞ்சும் தேவை நிலவிய, முல்தான் நகரத்துக்குப் பின்னாலிருந்த அந்த பாகிஸ்தானியப் பாலைவனத்தில், அவனுடைய கண்டுபிடிப்பு, தகரத்தைத் தங்கமாக்கும் கலையை விட முக்கியமான ஒன்றாக இருந்தது. அவன் எப்படி அந்த வித்தையைச் செய்கிறான் என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. காந்தத்தை உபயோகிக்கிறான் என்று சிலர் கருதினார்கள். அவன் ஒரு வகை எண்ணெயை உபயோகிக்கிறான் என்றும், பீங்கான் தகடுகளை உபயோகிக்கிறான் என்றெல்லாம் யூகங்கள் இருந்தன. வேறு சிலர், மற்றெல்லாரையும் மறுத்து அவன் தேன்கூட்டிலிருந்து கிடைக்கும் ஒரு பொருளை உபயோகிக்கிறான் என்றும் சொன்னார்கள். சிலர் அவன் கரண்ட் கம்பெனிக்காரர்களோடு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறான் என்று கூட சொன்னார்கள். எது எப்படியோ, இந்தக் கலை நவாப்புக்கு அவன் முதலாளி கே.கே.ஹரவ்னியின் பண்ணைக்கு உள்ளேயும், வெளியேயும் நிரந்தர வருமானத்தைத் தந்தது

சந்தைக்குப் போகும் குறுகலான, குண்டுகுழியான பாதையை ஒட்டி ஹரவ்னியின் பண்ணை இருந்தது. அந்தப்பாதை 1970-களில், ஹரவ்னி இஸ்லாமாபாத்தின் ஆளும் வர்க்கத்தில் செல்வாக்கோடு இருந்த காலத்தில் போடப்பட்டது. எலக்ட்ரீஷியன் நவாப்பின் கைவண்ணத்தில் மிளிறும் ஆழ்துளைக் கிணறுகளால் வளம் பெற்றிருந்த கரும்பு, பருத்தி, மாந்தோப்பு, சோள வயல்களுக்கிடையே கருமணலையோ, வெண்மணலையோ கொண்ட பாலைவனம் நிரம்பியிருந்தது. ஒரு உடைந்த பம்ப்செட்டைச் சரி செய்வதற்காக ஹரவுனியின் பண்ணைக்கு, காலையிலேயே தன்னுடைய சைக்கிளில் கிளம்பிவிட்டான் நவாப். சைக்கிள் சட்டகத்தில் கலர் கலரான ப்ளாஸ்டிக் பூக்களைக் கொண்ட ஒயர்கள் அலங்காரமாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. ஹேண்டில் பாரிலிருந்து தொங்கிய க்ரீஸ் படிந்த கைப்பையில் அவனுடைய பல உபகரணங்கள் (முக்கியமாக ஒன்றரை கிலோ எடையுடைய சுத்தியல்) சத்தம் எழுப்பியபடி ஆடிக் கொண்டிருந்தன. கிணறுகளைப் பாதுகாப்பதற்காக நடப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஆலமர நிழலில் பண்ணையாட்களும், பண்ணை மேனேஜரும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆவி பறக்கும் டீக்கோப்பையை, “வேண்டாம், வேண்டாம்” என்று மறுத்தபடி அங்கே வந்திறங்கினான் நவாப்.

வேட்டைக்காரனின் கோடாரியைப் போல சுத்தியலைப் பிடித்தபடி, பம்பு செட்டையும், மோட்டாரையும் கொண்டிருந்த மோட்டார் ரூமுக்குள் நுழைந்தான் நவாப். கனத்த நிசப்தம் நிலவியது. ‘வெளிச்சம் வேண்டும்’ என்று நவாப் கத்தும்வரை எல்லோரும் வாசலில் நின்றபடி வேடிக்கை பார்த்தார்கள். பிரச்சினை செய்யும் ஜந்துவை அவன் வெகு ஜாக்கிரதையாகவும், அதே சமயம் உள்ளுக்குள் எரிச்சல் மூண்டபடியும் அணுகினான். அதைச் சுற்றி வந்தான், இலேசாக நகர்த்திப் பார்த்தான், கொஞ்ச கொஞ்சமாக உரிமை எடுத்துக் கொண்டான், ஒருவழியாக அதனுடன் ஒரு சமரசத்துக்கு வந்தான். டீ வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டு அந்த மெஷினைப் பிரிக்கத் தொடங்கினான். முதலில் தன்னுடைய நீளமான, முனைமழுங்கிய ஸ்க்ரூ-ட்ரைவரால் மோட்டாரின் உட்பகுதிகளைப் பாதுகாத்த மூடியைத் திறந்தான். கழன்று விழுந்ததொரு ஸ்க்ரூ எங்கோ தெறித்து இருளில் சென்று மறைந்தது. தன்னுடைய சுத்தியலால் மெஷினை ஒரு தட்டு தட்டினான். அதனால் எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்தபடியே, பண்ணையாட்களை ஒரு உறுதியான தோல்பட்டையையும், அருகிலிருந்த மாமரத்திலிருந்து மாஞ்சாறையும் கொண்டுவருமாறு சொன்னான். இப்படியே பைப்புகளை சூடாக்குவது, அவற்றைக் குளிர்விப்பது, ஒயர்களை ஒன்றாக முறுக்குவது, ஸ்விட்சுகள், ஃப்யூஸ்களை சரிசெய்வது என ஒவ்வொன்றாக அவன் இதையும், அதையும் செய்து, காலை முடிந்து, மதியமும் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது.  குருட்டாம்போக்கில் விஷயங்களைச் செய்யும் உள்ளூர் ஞானத்துக்குத் தலைவணங்கி, ஒருவழியாகப் பம்புகள் வேலை செய்யத் தொடங்கின.

pakistan-daily-life-2009-12-23-11-18-36துரதிர்ஷ்டவசமாகவோ, அதிர்ஷ்டவசமாகவோ நவாப்புக்கு இளவயதிலேயே ஈடிணையில்லாத வளம்பொருந்தியதொரு இனிமையான பெண்ணுடன் திருமணம் நடந்திருந்தது. அவளும் அவனை மிகவும் நேசித்தாள். ஒன்பது மாதங்களுக்குக் குறைவாக இல்லையென்றாலும், ஒன்பது மாதங்களுக்கு மிகாத இடைவெளியில் தொடர்ச்சியாகக் குழந்தைகளைப் பெற்றுத் தந்தாள். அவர்கள் தேடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை பதிமூன்றாவதாகப் பிறக்கும்வரை பன்னிரண்டு பெண் குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பெற்றுக்கொண்டார்கள். கைக்குழந்தையிலிருந்து பதினோரு வயது வரையிலான பன்னிரண்டு பெண் குழந்தைகளுக்கும், ஒரு ஆண் குழந்தைக்கும் நவாப் தகப்பனாகியிருந்தான். ஒருவேளை அவன் பஞ்சாப் கவர்னராக இருந்திருந்தால் அவர்களுக்கு வரதட்சிணை தந்தே பிச்சைக்காரனாகியிருப்பான். ஆனால் ஒரு எலெக்ட்ரீஷியனுக்கோ, மெக்கானிக்குக்கோ, அவன் எத்தனை திறமைசாலியாக இருந்தாலும், அத்தனை குழந்தைகளையும் திருமணம் செய்து கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு மகள் திருமணத்துக்கும் அவன் இதையெல்லாம் வாங்க வேண்டியிருக்கும்: படுக்கைகள், பெட்டிகள், மின்விசிறிகள், பாத்திரங்கள், மணமகனுக்கு ஆறு செட் உடுப்புகள், மணமகளுக்கு ஆறு செட் உடுப்புகள், முடிந்தால் ஒரு டி.வி இத்யாதி, இத்யாதி. சரியான மனநிலை கொண்ட எந்த வட்டிக்கடைக்காரனும், எத்தனை அதிகபட்ச வட்டிக்கும் இப்பொருட்களை வாங்குவதற்கு அவனுக்குக் கடன் தர மாட்டான்.

வேறு யாராவதாக இருந்திருந்தால் மனத்திடத்தைக் கைவிட்டிருப்பார்கள். ஆனால் நவாப் அப்படிப்பட்டவனில்லை. பெண் குழந்தைகள், அவனுடைய மேதைமை மேலும் கொழுந்து விட்டெரிவதற்குக் காரணமாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவன் வேலைக்குக் கிளம்புவதற்கு முன்னால் கண்ணாடியில் போர்க்களத்திற்குச் செல்லும் ஒரு வீரனின் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்றான். கே.கே.ஹரவ்னியின் பண்ணையில் கிடைக்கும் சம்பளம் அவனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஆரம்பிப்பதாகக் கூட இருக்காது. மேல் வருமானத்துக்கான வேறு வழிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஒரேயொரு ரூம் கொண்ட ஒரு மாவுமில்லையும் அவன் நடத்தி வந்தான். அவனால் கைவிடப்பட்டதொரு பாடாவதியான மோட்டாரில் அது இயங்கி வந்தது. தன்னுடைய ஒரு முதலாளியின் குளத்தின் ஓரத்தில் மீன் பண்ணையை ஒருமுறை நடத்தினான். உடைந்த ரேடியோக்களை வாங்கி அவற்றை சரிசெய்து மீண்டும் விற்றான். கடிகாரங்களை ரிப்பேர் செய்யும் தொழிலைச் செய்யக் கூட அவன் தயங்கவில்லை. ஆனால் அத்தொழில் அவன் செய்த தொழில்களிலேயே மிகப்பெரிய தோல்வியைக் கண்டது. வாழ்த்துகளைக் காட்டிலும், வசவுகளையே அதிக அளவில் பெற்றுத்தந்தது. ஏனென்றால் அவன் சரி செய்த கடிகாரங்கள் அதன்பின் எப்போதுமே சரியான மணியைக் காட்டியதில்லை.

கே.கே.ஹரவ்னி பெரும்பாலும் லாகூரிலேயே இருந்தார். எப்போதாவதுதான் தன் பண்ணையை எட்டிப்பார்த்தார். ஆனால் அந்த வயதான மனிதர் பண்ணைவீட்டுக்கு வரும்போதெல்லாம் நவாப் ராப்பகலாக பண்ணையிலேயே பழியாகக் கிடப்பான். பண்ணையாட்கள் தங்கும் அறையிலிருந்து முதலாளி தங்கும் பங்களாவுக்குப் போகும் பாதையின் இருபுறமும் ஆலமரங்கள் அடர்த்தியாக சுவர் போலிருக்கும். அந்த வழியில், பண்ணையாட்கள் அறையின் வாசலிலேயே முதலாளியின் ஆணைக்காகக் காத்துக்கிடப்பான் நவாப். வளைந்து நெளிந்து, புள்ளிப்புள்ளியாக அழுக்கு ஒட்டியிருக்கும் கண்ணாடியை அணிந்தபடி பண்ணை வீட்டிலிருந்த ஏசி மெஷின், வாட்டர் ஹீட்டர், குளிர்பதனப்பெட்டி, பம்ப்புகள் என அத்தனை எலெக்ட்ரிக் சாதனங்களையும், நீராவிக்கப்பலில் வேலை செய்யும் எஞ்ஜினியருக்குரிய சிரத்தையோடு மேற்பார்வையிட்டு சரிசெய்தபடி இருப்பான். அவனுடைய அதிமனித முயற்சிகளால், ஹரவ்னி லாகூரில் எவ்வளவு செளகரியமாக இருந்தாரோ, கிட்டத்தட்ட அதே அளவு அந்த கிராமத்து இயந்திரக் கூட்டில் அவரைக் குளிர்வித்து, குளிப்பாட்டி, வெளிச்சம் தந்து செளகரியமாக வைத்துக் கொண்டான்.

பண்ணை பம்ப்செட்டுகளை மேற்பார்வையிடச் செல்லும்போது கூடவே வருவது மட்டுமில்லாமல், படுக்கை விளக்கின் ஒயரை சரிசெய்தல், குளியலறையின் வாட்டர் ஹீட்டரைச் சரி செய்தல் என ராப்பகலாகத் தன் கண்ணில் பட்டபடியே இருக்கும் நவாப்பை ஹரவ்னிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஒரு மாலைவேளை, ஹரவ்னி நல்ல மனநிலையில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, தான் ஒரு விஷயத்தைக் குறித்துப் பேசவிரும்புவதாகச் சொன்னபடி நெருங்கினான் நவாப். கருங்காலி நெருப்பில் உற்சாகமாகக் குளிர்காய்ந்தபடி, தன் நகக்கூர்மையை மழுக்கிக் கொண்டிருந்த ஹரவ்னி ‘சரி’யென்றார்.

“ஐயா, உங்களுடைய நிலம் இங்கிருந்து சிந்துநதிவரை பரந்து விரிந்திருக்கிறது. அதில் பதினேழு ஆள்துளைக் கிணறுகள் இருக்கின்றன. அந்தப் பதினேழு கிணறுகளையும், உங்கள் வேலைக்காரன் நான் ஒருவனே பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு வேலை செய்தே என் தலைமுடி கூட நரைத்து விட்டது” – குனிந்து தன் தலையைக் காட்டினான். “ஆனால், இனிமேல் என்னால் அந்த வேலைகளைச் சரிவர செய்யமுடியாது. போதும் ஐயா போதும். என் பலவீனத்தை மன்னித்துவிடுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். வெளிச்சத்தில் கேவலப்பட்டு இருப்பதை விட, இருட்டு வீட்டில், கெளரவமான பசியோடு இருப்பது மேல். என்னை விட்டு விடுங்கள் ஐயா, விட்டு விடுங்கள் – உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்”.

இத்தனை இலக்கியநயத்தோடு இல்லாவிட்டாலும், இப்படிப்பட்ட பேச்சுகளைப் பலமுறை ஏற்கனவே ஹரவ்னி கேட்டிருந்ததால், பலமாக வீசிக்கொண்டிருந்த காற்று நிற்கும்வரை, அமைதியாகத் தன் நகக்கூர்மையை மழுக்கிக் கொண்டிருந்துவிட்டு,

“என்ன பிரச்சினை நவாப்?” என்றார்.

“பிரச்சினையா? உங்களிடம் வேலை செய்வதில் எனக்கென்ன பிரச்சினை இருக்க முடியும்? நான் உங்கள் உப்பைத் தின்று வளர்ந்தவன். ஆனால் இப்போதோ வயதாகிவிட்டது. காலில் பலமுறை மெஷின்கள் விழுந்து காயங்களாகியிருக்கின்றன. உங்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தபோது, புது மாப்பிள்ளையைப் போல் உற்சாகமாக வயல் வயலாக என் சைக்கிளில் சுற்றியிருக்கிறேன். என்னால் இனிமேலும் அப்படி சைக்கிளை மிதிக்க முடியும் என்று தோன்றவில்லை. தயவுசெய்து என்னைப் போகவிடுங்கள்”

“சரி, அதற்கு இப்போது என்னதான் தீர்வு?”என்று அவர்கள் விஷயத்தின் முடிச்சை நெருங்கிவிட்டதைத் தெரிந்துகொண்டு கேட்டார் ஹரவ்னி. தன்னுடைய ஆகப்பெரிய தேவையான செளகரிய சுகவாசம் எந்தவிதத்திலும் குறைப்படுவதை அவர் விரும்பவில்லை.

“ம்ம்ம்.. வந்து.. ஐயா, என்னிடம் ஒரு மோட்டார்பைக் இருந்தால், வேறொரு இளவயது ஆளுக்கு நான் பயிற்சி கொடுத்துத் தேற்றும்வரையாவது, எப்படியாவது இழுத்துப் பிடித்து சமாளித்துக் கொள்வேன்”

அந்த வருட விளைச்சல் மிக நன்றாக இருந்திருந்தது. நெருப்புக்கு முன்னால் அமர்ந்திருந்த ஹரவ்னி தன்னை பிரம்மாண்டமானவராக உணர்ந்திருந்தார். அதனால், பண்ணை மேனேஜர்களின் மனக்கசப்புக்கு நடுவே நவாப் ஒரு ஹோண்டா-70 பைக்குக்கு சொந்தக்காரனான். கூடவே பெட்ரோல் அலவன்ஸுக்கும் வழி செய்துகொண்டான்.

மோட்டார்பைக்கின் வரவு, சமுதாயத்தில் நவாப்பின் செல்வாக்கை உயர்த்தியது. மக்கள் அவனை ‘சாச்சா’ என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தார்கள். அவனுக்கு ஒரு எழவும் தெரியாத உலக விஷயங்களைப் பற்றியெல்லாம் அவனிடம் கருத்து கேட்டார்கள். பைக்கின் வரவால் நவாப் தன்னுடைய வர்த்த எல்லைகளை விரிவாக்கிக்கொள்ள முடிந்தது. முக்கியமாக, இரவுகளை அவன் தன் மனைவியோடு கழிக்க முடிந்தது. திருமணமான புதிதிலேயே கிராமத்தில் தங்கவேண்டாம், ஃபிரோஸா நகரிலிருந்த ஒரே ஒரு பெண்கள் பள்ளிக்கருகில் தன்னுடைய பெற்றோரின் குடும்பத்தோடே தங்கிக்கொள்ளலாம் என்று அவன் மனைவி அவனிடம் சொல்லியிருந்தாள். ஃபிரோஸாவுக்கருகிலிருந்த ஒரு கால்வாயை ஒட்டிய பாதை, கே.கே.ஹரவ்னியின் வயல்வெளி வழியே நேரே சிந்துநதி வரை சென்றது. அந்தப்பாதை எப்போதோ ஒரு காலத்தில் அந்த நிலப்பகுதிகள் நிஜாம் அரசின் கீழ் இருந்தபோது போடப்பட்டது. சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு இளவரசன் அந்த வழியே ஒரு திருமண நிகழ்ச்சிக்கோ, துக்க நிகழ்ச்சிக்கோ போனபோது அப்பகுதியின்  வெயிலைத் தாங்கமுடியாமல், சாலையின் இருபுறமும் கருங்காலி மரங்களை நடுமாறு ஆணையிட்டுவிட்டுச் சென்றான். ஆணையிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த ஆணையை அவன் மறந்தும் போனான். அவனையே கூட சில வருடங்களில் மக்கள் மறந்துவிட்டார்கள். ஆனால் அவன் ஆணையால் நடப்பட்ட மரங்கள் இன்று பரந்து, விரிந்து உறுதியாக நிற்கின்றன. அவற்றில் சில வயதாகி பட்டைகளை, இலை தழைகளை உதிர்த்து, மொட்டையாக நின்றன. இந்தப்பாதையில்தான் தன்னுடைய புது வண்டியில் நவாப் தலைதெறிக்க வண்டியோட்டியபடி வேலைக்குப் போய்வந்தான். பைக்கிலிருக்கும் ஒவ்வொரு கொக்கியிலும், ஓட்டையிலும் நவாப்பின் மெக்கானிக் உபகரணங்களடங்கிய பைகளும், வண்ணக்காகிதங்களும் தொங்கிக்கொண்டிருக்கும். ஏதாவது மேட்டில் நவாப் பைக்கை ஏற்றி இறக்கும்போது அந்த பிற்சேர்க்கைகள் பைக்கிற்கு முளைத்த இறகுகள் போல விரிந்து சுருங்கும். ஏதாவது பம்ப்செட்டை ரிப்பேர் செய்யவேண்டுமென்றால், கிட்டத்தட்ட காதுகள் கழன்று விழும் வேகத்தில் அதிவேகமாக வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி வந்திறங்குவான்.

நவாப்பின் ஒருநாள் நடவடிக்கைகளை ஒரு பருந்துப் பார்வையாக பார்த்தால் ஒரு பட்டாம்பூச்சியைப் போல அவன் இலக்கின்றி சுற்றிக் கொண்டிருப்பது போலத்தான் தெரியும். ஒரு பெரிய மேனேஜரின் வீட்டுக்குச் சென்று மரியாதை செலுத்துவது, வயல்வெளிப் பாதைகளில் புழுதியைக் கிளப்பியபடி ஒரு பம்ப்செட்டை சரிசெய்யப் போவது, ஃபிரோஸா நகருக்குள் வலம்வருவது, கருங்காலி மரங்களுக்குக் கீழே அதிவேகமாகச் செல்வது, தன்னுடைய உறவுக்காரரின் தோட்டத்திலிருந்து தேனெடுத்து விநியோகம் செய்யும் ஒப்பந்தத்துக்கு நடப்பது, அல்லது தன்னுடைய பங்கு கோழிகளை சரிபார்த்துவிட்டு வருவது, கடைசியில்  ஹரவ்னியின் பண்ணைக்குச் சென்று திரும்புவது என்று கணக்கேயில்லாமல் அலைந்து கொண்டிருப்பான். அவனுடைய வெவ்வேறு நாட்களின் அலைச்சல்களை வரைபடமாக வரைந்து ஒன்றன் மீது ஒன்றாக வைத்தால் சிக்கலான நூற்கண்டைப் போல இருக்கும். ஆனால் அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே இடத்திலிருந்துதான் கிளம்பினான். அதே இடத்துக்குத்தான் ஒவ்வொரு நாள் மாலையும் திரும்பினான். கருத்துப்போய், களைப்பாக அவன் வண்டியிலிருந்து இறங்கி, சூடான் எஞ்ஜின் டிக், டிக் என்று குளிர்விக்கும் சத்தத்தைக் கேட்டபடி, தாழ்வாரத்துக்குள் உருட்டிக் கொண்டு வருவான். சைட் ஸ்டாண்டைப் போட்டு அவன் குழந்தைகள் அவனைத் தேடி ஓடிவரும்வரை காத்திருப்பான். அப்போது அவன் முகம் ஒரு சிறுகுழந்தைக்குரிய சந்தோஷத்தை வெளிப்படுத்தியபடி இருக்கும். முகக்கோடுகளும், சிறு தாடியும் கொண்ட அவனுடைய சோகமான முகத்துக்கு அந்த நேர மகிழ்ச்சி பெரிய மாறுதலாக இருக்கும். அதன்பின் அவன் மனைவி என்ன சமைக்கிறாள் என்று காற்றில் மோப்பம் பிடித்தபடியே உள்ளே செல்வான். அவன் மனைவி எப்போதும் போல அதே நிலையில், அடுப்பை விசிறியபடி, அவனுக்கு டீ போட்டுக்கொண்டு இருப்பாள்.

“என் அன்பே! சிக்கன் துண்டே!” என்று இனிமையாக உற்சாகமாகப் பாடியபடியே ஒரு மாலைவேளையில் சமையலறை என்று சொல்லப்பட்ட இருட்டறைக்குள் நுழைந்தான் நவாப். அந்த அறையின் சுவர்கள் புகை படிந்து கருப்பாகியிருந்தன. “என்ன செய்து வைத்திருக்கிறாய் எனக்காக?” என்று கேட்டபடி குண்டாவைத் திறந்து அதன் அடியாழத்தில் என்ன இருக்கிறது என்று மரக்கரண்டியால் அளைந்து பார்த்தான். “விலகுங்கள்!” என்று அவனை நகர்த்தி, அந்தக் குண்டாவிலிருந்த பதார்த்தத்தை அவன் ருசி பார்ப்பதற்காகக் கரண்டியில் எடுத்து நீட்டினாள்.

ramchand_pakistani_20080505அவன் மருந்துக்காக வாயைத் திறக்கும் சிறு குழந்தையைப் போல, பவ்யமாகத் தன் வாயைத் திறந்து காட்டினான். பதிமூன்று குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தாலும் நவாபின் மனைவி உறுதியான, மெலிந்த உடல்வாகைக் கொண்டிருந்தாள். இறுக்கமான மேலாடைக்குள் முதுகெலும்பு தெளிவாகத் தெரிந்தது. அவளுடைய நீளமான, கொஞ்சம் ஆண்மை கலந்த முகம் இன்னும் பளபளப்பாக இருந்தது. அந்தப் பளபளப்பு அவள் முகத்துக்கு காவி வண்ணத்தைத் தந்தது. அவளுடைய தலைமுடியின் அடர்த்தி குறைந்து நரைக்கத் தொடங்கி விட்டாலும், ஒரு கிராமத்து சிறு பெண்ணைப் போல இடுப்புவரை தொங்கும் ஒற்றை ஜடையையே பின்னியிருந்தாள். அது அவள் வயதுக்கு ஏற்றதாக இல்லையென்றாலும், நவாப் அந்த ஜடைப்பின்னலில் இருபது வருடங்களுக்கு முன்னால் அவன் பார்த்த சிறுபெண்ணை நினைவு கூர்ந்தான். கதவருகே நின்று வெளியே அவனுடைய குழந்தைகள் நொண்டியடித்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி வெளியே வரும்போதெல்லாம் அவளுடைய பிருஷ்டம் உரசிச் செல்லுமாறு, தன் முதுகை வளைத்து பிருஷ்டத்தைக் காட்டியபடி நின்றான்.

முதலில் அவன் சாப்பிட்டு முடித்தான். அதன்பின் குழந்தைகளும், எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின் மனைவியும் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்தபின் ஏப்பம் விட்டபடி முற்றத்தில் அமர்ந்து சிகரெட் பிடித்தான் நவாப். தொடுவானத்தில் பிறைநிலா தெரிந்தது. இந்த நிலா எந்தப் பொருளால் உருவாகியிருக்கும் என்று யோசித்தபடி இருந்தான். அமெரிக்கர்கள் நிலாவில் நடந்து சென்றதைக் குறித்து ரேடியோவில் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவனுடைய எண்ணங்கள் நாலாபுறமும் அலைந்து திரியத் தொடங்கின. அப்பகுதியில் பிற வீடுகளிலும் சாப்பிட்டி முடித்திருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும், அடர்த்தியான புகையிலை நாற்றத்தைப் போன்ற மணமுடைய வறட்டிப்புகை, கரிபடிந்த ஒவ்வொரு வீட்டுக் கூரையிலும் படர்ந்திருந்தது. நவாப்பின் வீட்டில் பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட பல உபகரணங்கள் இருந்தன. வீட்டின் மூன்று அறைகளுக்கும் எப்போதும் தண்ணீர் வந்தது. இரவில்  குளிர்ச்சியான காற்றைக் கொண்டுவரும் ஒரு குழாய் ஒவ்வொரு அறையிலும் இருந்தது. ஒரு கருப்பு-வெள்ளை டிவி கூட இருந்தது. அவன் மனைவியே எம்ப்ராய்டரிப் பூவேலைகள் செய்த ஒரு துணியால் அந்த டிவி உறையிடப்பட்டிருந்தது. வீட்டுக்குள்ளிருந்தபடியே கூரை மேலிருக்கும் ஆண்டெனாவை சரிசெய்து நல்ல தெளிவான படம் தெரியும்படி செய்யும் ஒரு கருவியையும் நவாப் செய்திருந்தான். குழந்தைகள் அலறலான ஒலியுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். நவாப்பின் மனைவி வேலைகளை முடித்துவிட்டு அவன் காலடியில் வந்தமர்ந்தாள்.

“என் ஜோப்பில் ஒரு பொருள் இருக்கிறது. என்னவென்று கண்டுபிடி பார்க்கலாம்?” என்று அவளைச் சீண்டினான் நவாப்.

“ம்ம்ஹூம்.. உங்கள் விளையாட்டு எனக்குத் தெரியாதா? ஏன் எப்போதுமே உங்கள் கண்ணாடி கோணலாக இருக்கிறது? ஒரு காதைவிட இன்னொரு காது மேலே இருக்கிறது என நினைக்கிறேன்” என்று அவன் கண்ணாடியைச் சரி செய்தாள்.

”என் ஜோப்பில் என்ன இருக்கிறது என நீ கண்டுபிடித்தால் அதை நீ எடுத்துக்கொள்ளலாம்” என்று மீண்டும் சீண்டினான் நவாப்.

குழந்தைகள் டிவி பார்க்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவனருகே வந்து அவன் ஜோப்பைத் தடவினாள்.

“கீழே, கீழே” என்று மேலும் அவளைச் சீண்டினான்.

அவன் குர்தாவுக்குள் அணிந்திருந்த க்ரீஸ் கறை படிந்த பனியனின் ஜோப்பில், வயல்வெளியிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட, பதப்படுத்தப்படாத பழுப்பு நிற சர்க்கரைக்குவியல் ஒரு நியூஸ்பேப்பரில் சுற்றப்பட்டு பொட்டலமாக இருந்தது.

“இன்னும் நிறைய வைத்திருக்கிறேன். எவ்வளவு அருமையாக இருக்கிறது பார். கடைத்தெருவில் கிடைக்கும் குப்பையான சர்க்கரை இல்லை இது. தாஷ்திக்களின் (தாஷ்தி – பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப்பில் வசிக்கும் பலூச் பழங்குடியினர்) கரும்பு மிஷினை சரிசெய்ததற்காக அவர்கள் எனக்குத் தந்த ஐந்து கிலோ சர்க்கரையில் கொஞ்சம்தான் இது. ஐந்து கிலோ சர்க்கரையை நாளை விற்றுவிடுவேன். இந்தக் கொஞ்சம் சர்க்கரையை வைத்து இப்போது பராத்தா செய்து தருவாயா, என் செல்லமே?” என்றான்.

“இப்போதுதான் அடுப்பை அணைத்தேன்”.

“அப்படியென்றால் மீண்டும் பற்றவை. வேண்டாம். நீ உட்கார், நானே பற்றவைக்கிறேன்” .

“உங்களால் ஒருபோதும் அடுப்பைப் பற்றவைக்க முடியாது. நான்தான் கடைசியில் அதைச் செய்ய வேண்டியிருக்கும். நானே செய்கிறேன்” என்று எழுந்து கொண்டாள்.

நெய்வாசத்தால் கவரப்பட்டு ஓடிவந்த சிறு குழந்தைகள், சர்க்கரை உருகுவதைப் பார்த்து அடுப்பைச் சுற்றி நின்று கொண்டார்கள். கடைசியில் சற்று வளர்ந்த பெண் குழந்தைகளும் உள்ளே வந்தார்கள். ஆனாலும் அவர்கள் அசட்டையாக ஒரு ஓரமாக நின்று கொண்டார்கள்.

அடுப்பை ஊதிக்கொண்டிருந்த நவாப், “உங்கள் தந்திரம் பலிக்காது என் இளவரசிகளே! உங்களுக்கும் இதைச் சாப்பிடவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும். பக்கத்தில் வாருங்கள்” என்றான்.

பராத்தாவைப் பழுப்பு நிற சர்க்கரைப் பாகில் தொட்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். சற்று நேரம் கழித்து வண்டியின் பெட்டியிலிருந்து இன்னுமொரு சர்க்கரைப் பொட்டலத்தைத் தன் மகள்களிடம், “யார் நிறைய சாப்பிடுகிறீர்கள் பார்க்கலாம்” என்று கொடுத்தான்.

ந்த சர்க்கரை வைபவம் நடந்த சில வாரங்கள் கழித்து ஒரு மாலை வேளையில், ஹரவ்னியின் பண்டகசாலையைக் காவல் காத்த வாட்ச்மேனிடம் பேச்சுக் கொடுத்தபடி உட்கார்ந்திருந்தான் நவாப். முப்பது வருடங்களுக்கு முன்பு நடப்பட்டதொரு ஆலங்கன்று ஓங்கி வளர்ந்து நாற்பது, ஐம்பது அடி உயர நிழற்பந்தலைத் தந்திருந்தது. பண்டகசாலையில் வேலை பார்த்த அத்தனை ஆட்களும் அதற்கு நீரூற்றி மிகவும் ஜாக்கிரதையாகப் பராமரித்து வந்தார்கள். அந்த வயதான வாட்ச்மேன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பார். நவாப்பும் மற்ற வேலையாட்களும் மாலை வேளைகளில் வாட்ச்மேனுடன் அமர்ந்து அவரைக் கேலி செய்து கோபப்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக் கொண்டிருப்பார்கள். வாட்ச்மேனிடம் அவர் காலத்துக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இப்போதிருக்கும் பாதையில்லாமல், ஆற்றுப்படுகைகளில் இருந்த ஒற்றையடிப்பாதைகள் வழியே பயணம் செய்தது, பழங்குடியினர் ஒரு விளையாட்டுக்காகக் கால்நடைகளைத் திருடியது, அதில் ஏற்பட்ட தகராறில் சிலர் உயிரிழந்தது போன்றவற்றைச் சுற்றி அவர்கள் பேச்சு இருக்கும்.

குளிர்காலம் போய் வசந்தகாலம் வந்துவிட்டாலும், தன் பாதங்களைச் சூடாக வைத்துக் கொள்வதற்காகவும், சுற்றியிருந்த அரட்டைக்கும்பலுக்கு ஒரு மையமாக இருப்பதற்காகவும், ஒரு தகரப்பெட்டியில் நெருப்புக் கணப்பை வைத்திருந்தார் வாட்ச்மேன். எப்போதும் போல அன்றும் மின்சாரம் இல்லை. வானில் ஏற ஆரம்பித்திருந்த நிலா மெல்லத் தன் வெளிச்சத்தைப் பரப்பியபடி இருந்தது. சுவர்களில் அடித்திருந்த சுண்ணாம்பில் பட்டு எதிரொலித்த நிலவொளி கலப்பை, வயலில் மண்கட்டிகளை உடைத்துப் பரப்பாக்குவதற்கான கொழுத்தட்டுகள், நடவு இயந்திரங்கள், சம்மட்டிகள் போன்ற ஆங்காங்கே சிதறிக் கிடந்த கருவிகள் மீது நிழலைப் பரப்பியிருந்தது.

“இதைக் கேளுங்கள் கிழவரே!” என்று வாட்ச்மேனைப் பார்த்து சீண்டலாகப் பேச ஆரம்பித்தான் நவாப். “உங்களைக் கட்டிப்போட்டு ஸ்டோர் ரூமில் அடைத்து விட்டு, என் வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொள்கிறேன். யாராவது பார்த்தால் உங்களைக் கட்டிப்போட்டுவிட்டுக் கொள்ளையடித்தது போல் இருக்கட்டும்.”

“ஒன்றும் தேவையில்லை. உன் மனைவி உன்னைக் கூப்பிடுவது என் காதுகளில் விழுகிறது என்று நினைக்கிறேன். கிளம்பிப் போ!” என்றார் வாட்ச்மேன்.

“புரிகிறது ஐயா. நீங்கள் தனியாக இருக்க ஆசைப்படுகிறீர்கள்!”

நவாப் எழுந்து வாட்ச்மேனின் கைகளைக் குலுக்கினான். தலைதாழ்த்தி வணங்கினான். கே.கே.ஹரவ்னிக்கு அவன் செய்வதைப் போல தன் கைகளால் பணிவாக வாட்ச்மேனின் முழங்காலைத் தொட்டு வணங்கினான். அது கடந்த பத்து வருடங்களாக வாட்ச்மேனிடம் அவர்கள் செய்துவரும் குறும்பான செயல்.

“ஜாக்கிரதையாகப் பார்த்துப் போ” என்று எழுந்து நின்று, இரும்புப்பூண் போட்ட தன்னுடைய மூங்கில் கழியில் சாய்ந்தபடி சொன்னார் வாட்ச்மேன்.

பைக்கை உதைத்து, ஹெட்லைட்டுகள் சீராக உயிர்பெற்று, தட்டிகளால் செய்யப்பட்ட பண்ணைக்கதவைத் தாண்டி, பண்ணையையும், சாலையையும் இணைக்கும் முக்கால் மைல் நீளமுள்ள பாதைக்கு வந்து சேர்ந்தான் நவாப். குளிர்ச்சியான சூழலை இதமாக உணர்ந்தான். வசந்தகாலம் வந்துவிட்டாலும், கணக்கில் வராமல் திருடப்பட்ட மின்சாரத்தில் அவன் வீட்டின் படுக்கையறை ராப்பகலாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு மின்சார ஹீட்டர்களில் சூடாகிக் கொண்டிருக்கும், அந்த அதிகப்படியான இளஞ்சூட்டில் அவன் குடும்பம் சொகுசாக இருக்கும் என்ற நினைவு அவனை சந்தோஷப்படுத்தியது. இருட்டான மெயின்ரோட்டைத் தொட்டவுடன் அவன் வெகுவேகமாக ஓட்டத் தொடங்கினான். வண்டி விளக்கின் வெளிச்சம் போதுமானதாக இருக்கவில்லை. அவன் கவனிக்கும் முன்னர் தடங்கல்கள் வந்தன. நகர்ந்து கொண்டிருக்கும் லாந்தர் வெளிச்சத்தில் வேகமாகச் செல்வதைப் போல் அவன் உணர்ந்தான். இரவுப்பறவைகள் ரோட்டில் அமர்ந்து பூச்சிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தன. சில சமயங்களில் வண்டிச்சக்கரத்துக்குக் கீழேயே வந்தன. புஜங்களை முறுக்கியபடி, குண்டுகுழிகளில் பறந்தபடி, சிறு மேடுகளில் எழுந்து நின்றபடி வண்டியை உற்சாகமாகச் செலுத்தினான். நன்றாக நீர்ப்பாய்ச்சப்பட்டிருந்த கரும்புக்கொல்லையிருந்த தாழ்வான வயல்வெளிகளைக் கடக்கும்போது பனிமூட்டம் மேலெழுந்து அவனைச் சுற்றிக்கொண்டது. வண்டியை மெதுவாக்கி மெயின்ரோட்டிலிருந்து திரும்பி கால்வாயை ஒட்டிச் செல்லும் பாதையில் திருப்பினான் நவாப். ஆற்றிலிருந்து கால்வாய்க்கு நீர் வரும் படிகள் போன்ற அமைப்புகளைக் கடக்கும்போதெல்லாம் நீர் சலசலத்து ஓடும் சத்தம் கேட்டபடி இருந்தது.

அப்படிப்பட்டதொரு நீர் நுழைவுப்பாதையிலிருந்து ஒருவன் வண்டியை நிறுத்துமாறு சைகை செய்தபடியே ஓடி வந்தான்.

“பாய், டவுன் வரை என்னைக் கூட்டிச் செல்லமுடியுமா? எனக்கு அங்கே ஒரு அவசர வேலை இருக்கிறது…” என எஞ்ஜின் படபடக்கும் சத்தத்துக்கு நடுவே நவாபிடம் கேட்டான்.

இந்த நேரத்தில் அப்படியென்ன அவசர வேலை டவுனில் அவனுக்கு இருக்க முடியும் என நவாப் யோசித்தான். வண்டியின் பின்விளக்கு அவர்கள் மீதும், சுற்றுப்புறம் மீதும் சிவப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சியிருந்தது. அருகில் குடியிருப்பு எதுவும் இருக்கவில்லை. ஒரு மைல் தொலைவில், ஒரு தாஷ்தியப் பழங்குடியினரின் கிராமம் சாலைக்கு அருகில் இருக்கிறது. அதற்கு முன்பு அப்பிராந்தியத்தில் வேறு மனித நடமாட்டம் எதுவும் கிடையாது. நவாப் அந்த மனிதனின் முகத்தைப் பார்த்தான்.

“எங்கிருந்து வருகிறாய்?”

அந்த மனிதன் நவாப்பை நேராக உற்றுப்பார்த்தான். அவன் முகம் ஒடுங்கி ஒட்டியிருந்தது. ஆனால் அதில் ஓர் உறுதி தெரிந்தது.

“காஷ்மோரிலிருந்து வருகிறேன். கடந்த ஒரு மணி நேரத்தில் இப்பகுதியில் வந்திருக்கும் ஒரே ஆள் நீங்கள்தான். தயவுசெய்து உதவுங்கள். இத்தனை தூரமும் நடந்தே வந்திருக்கிறேன்” என்றான்.

காஷ்மோரைப் பற்றி நவாப்புக்குத் தெரியும். அது நதிக்கு அக்கரையிலிருக்கும் ஏழைப்பிரதேசம். ஒவ்வொரு வருடமும் அப்பகுதி மக்கள் ஹரவ்னியின் பண்ணைக்கு, மாம்பழ அறுவடை வேலைக்கு வெகு சொற்ப சம்பளத்துக்கு வருவார்கள். பருவம் முடிந்ததும் திரும்பிச் செல்வார்கள். திரும்பிப் போவதற்கு முன்னால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைக்காசு போட்டு ஒன்று சேர்ந்து ஒரு மாடு வாங்கி விருந்து வைப்பார்கள். நவாப் அப்படிப்பட்ட விருந்துகளில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறான். அவன் அந்த விருந்தில் கலந்து கொண்டு, இறைச்சி கலந்த உப்பு சோறை அவர்களோடு அமர்ந்து சாப்பிடுவதை அவர்கள் பெரிய கெளரவமாகக் கருதுவார்கள்.

நவாப் அந்த மனிதனைப் பார்த்து சிரித்தான். “சரி, வா ஏறு. போகலாம்” என்று தலையை ஆட்டிக் கூப்பிட்டான்.

பின்னாலிருக்கும் பளுவை சமாளித்தபடி, அந்த குண்டுகுழியான கால்வாய்ப்பாதையில் ஓட்டுவது கொஞ்சம் சிரமமான காரியமாக இருந்தது. கருங்காலி மரங்களடர்ந்த அந்தப் பாதையில் மெதுவாக வண்டியை ஓட்டிச் சென்றான் நவாப்.

ரைமைல் தூரம் தாண்டியவுடன், அந்த மனிதன் நவாப்பின் காதில் “நிறுத்து” என்று கத்தினான். காற்று பலமாக வீசிக்கொண்டிருந்ததால் நவாப்பால் சரியாகக் கேட்க முடியவில்லை. ‘என்ன விஷயம்?’ என்று திருப்பிக் கேட்டான்.

அந்த மனிதன் நவாப்பில் விலாவில் ஏதோ ஒரு பொருளை வைத்துக் குத்தினான்.

“என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. சுட்டுவிடுவேன்” என்றான்.

பயந்துபோன நவாப் வண்டியைச் சரித்து நிறுத்தி எட்டிக் குதித்தான். வண்டி அவனுக்கு எதிர்த்திசையில் பின்னாலிருந்த மனிதனோடு சேர்ந்து கீழே விழுந்தது. கார்பரேட்டர் மிதவை திறந்து தொங்கியது. சக்கரம் துடித்தபடி எஞ்ஜின் சற்று நேரம் ஓடி அணைந்தது. அதோடு சேர்த்து ஹெட்லைட்டுகளும் அணைந்தன.

“என்ன செய்கிறாய்?” நவாப் உளறலாகக் கேட்டான்.

“தள்ளி நிற்கவில்லையென்றால் சுட்டுவிடுவேன்” என்று சொன்னபடியே ஒரு முழங்காலை மடக்கி எழுந்தான் அந்த மனிதன். அவன் கையிலிருந்த துப்பாக்கி நவாப்பைக் குறிபார்த்துக் கொண்டிருந்தது.

அவர்களிருவரும் அந்த திடீர் அடர் இருட்டில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகே வண்டி கீழே விழுந்து கிடந்தது. அதிலிருந்து பெட்ரோல் வாசனையாகக் கசிந்து கொண்டிருந்தது. அருகிலிருந்த கால்வாய்ப் பிளவுகளில் நீர் சலசலத்தபடி சுழித்துக் கொண்டு ஓடியது. கொஞ்ச கொஞ்சமாக இருளில் பார்வை தெரிந்தபோது அந்த மனிதன் தன் உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்தை வாயில் உறிஞ்சிக் கொண்டே  இன்னொரு கையில் துப்பாக்கியைப் பிடித்திருந்ததை நவாப் பார்த்தான்.

அவன் வண்டியை எடுப்பதற்காக முன்னகர்ந்தபோது, நவாப்பும் ஓரடி முன்வைத்தான்.

“நான் சொன்னபடி சுட்டுவிடுவேன். நகராதே” என்றான் அந்த மனிதன்.

நவாப் கைகளைக் கூப்பி அழ ஆரம்பித்தான். “உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு சிறு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பதிமூன்று பேர். சத்தியமாகச் சொல்கிறேன், பதிமூன்று பேர். நான் உனக்கு உதவி செய்ய நினைத்தேன். உன்னை ஃபிரோஸாவில் இறக்கி விட்டுவிடுகிறேன். யாரிடமும் சொல்லமாட்டேன். என்னுடைய வண்டியை மட்டும் திருடாதே. அதுதான் என்னுடைய தினப்படி ரொட்டி. நானும் உன்னைப் போல ஒரு ஏழைதான்” என்றான்.

“வாயை மூடு” என்றான் அந்த மனிதன்.

கொஞ்சமும் யோசிக்காமல், கண்ணில் ஒரு தந்திரத்தோடு அவன் துப்பாக்கியை நோக்கிப் பாய்ந்தான் நவாப். ஆனால் குறி தப்பிவிட்டது. சில நொடிகளுக்கு இருவரும் உருண்டு புரண்டார்கள். அந்தத் திருடன் நகர்ந்து எழுந்து, ஓரிரு அடிகள் பின்னகர்ந்து, நவாப்பை நோக்கிச் சுட்டான். நவாப் தன் விதைப்பகுதியைக் கைகளில் பிடித்தபடி கீழே சரிந்து விழுந்தான். அவன் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்திருந்தான். ஒரு காரணமும் இல்லாமல் அந்த மனிதன் தன்னை அறைந்துவிட்டதைப் போல் உணர்ந்தான்.

அந்த மனிதன், வண்டியை சில தப்படிகள் உருட்டிச் சென்று, அதன் மீது ஏறினான். தன்னுடைய முழு உடல் பலத்தையும் பிரயோகித்து உதைத்து, வண்டியை உயிர்ப்பிக்க முயற்சித்தான். எஞ்ஜின் வெறுமனே உறுமிவிட்டு அமைதியானது. பெட்ரோல் நிரம்பி வழிந்திருந்தது. அவன் ஆக்ஸலேரட்டரை வேறு முழுக்க முறுக்கி  வைத்திருந்தான். அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்த தாஷ்திய கிராமத்து நாய்கள் குரைக்கத் தொடங்கியிருந்தன. அந்த சத்தம் அங்கு வீசிக்கொண்டிருந்த காற்றில் அலையலையாகக் கேட்டது.

கீழே விழுந்திருந்த நவாப் சில விநாடிகளுக்கு அந்த மனிதன் தன்னைக் கொன்றுவிட்டதாக நினைத்திருந்தான். கருங்காலி மரக்கிளைகளுக்கிடையே நிலாவெளிச்சத்தில் வெளிறித் தெரிந்த வானம், நீரில் ஆடுவது போல முன்னும், பின்னும் போய்வந்தது. அவன் கீழே விழுந்தபோது ஒரு கால் அவனுக்கீழே மடங்கியிருந்தது. அதை நேராக்கிக் கொண்டான். காயத்தைத் தொட்டவிரல்கள் பிசுபிசுப்பாக இருந்தன. “கடவுளே, அம்மா, கடவுளே” என அதிக சத்தமெழுப்பாமல் ரகசியக் குரலில் முனகத் தொடங்கினான். அந்த மனிதன் வெறும் ஆறடி தொலைவில் அவனுக்கு முதுகைக்காட்டிக் கொண்டு வண்டியை வெறித்தனமாக உதைத்து உயிர்ப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் அதை எடுத்துச் செல்வதை நவாப்பால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த வண்டி, அவனுடைய விளையாட்டுப் பொருள், அவனுடைய சுதந்திரம்.

நவாப் எழுந்து நின்று முன்னகர முயற்சித்தான். அவனுடைய காயம்பட்ட கால் ஒத்துழைக்கவில்லை. வண்டியின் பின்-பம்பரில் இடித்தபடி மீண்டும் கீழே விழுந்தான். சீட்டில் அமர்ந்திருந்த திருடன், கைத்தொடும் தூரத்தில் இருந்த நவாப்பை நோக்கி மேலும் ஐந்து முறை சுட்டான். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. நம்பமுடியாத ஆச்சரியத்துடன், துப்பாக்கி வாயிலிருந்து எழுந்த தீப்பொறியில் அவன் முகத்தைப் பார்த்தபடி இருந்தான் நவாப். அந்த மனிதன் அதற்கு முன் ஆயுதங்களைப் பிரயோகித்ததில்லை. இந்தத் துப்பாக்கியையே அவன் ஒரே ஒரு முறைதான் சுட்டுப் பார்த்திருக்கிறான். ஒரு கடத்தல்காரனிடமிருந்து இந்தத் துப்பாக்கியை வாங்கியபோது பரிசோதிப்பதற்காக ஒரு முறை சுட்டிருக்கிறான். மார்பை நோக்கியோ, தலையை நோக்கியோ சுடுவதை அவனால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. விதைப்பகுதிகளையும், கால்களையும் நோக்கியே அவன் சுட்டான். கடைசி இரண்டு குண்டுகள் அதிக அளவில் குறிதவறியிருந்தன. அவை தரையில் பட்டுத் தெறித்து புழுதியைக் கிளப்பின. அவன் வண்டியை மேலும் இருபதடி தூரம் உருட்டிச் சென்று ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான். தாஷ்திய கிராமத்திலிருந்து ஒரு டார்ச் வெளிச்சம், ஒரு பாதையில் வேகமாக ஓடி வருவது தெரிந்தது. வண்டியைத் தரையில் போட்டுவிட்டு அந்தத் திருடன் அருகிலிருந்து தோட்டத்து வேலிக்குள் பாய்ந்தான்.

நவாப் தரையில் கிடந்தான். அவன் நகர விரும்பவில்லை. குண்டுகள் துளைத்த தருணத்தில் அவ்வளவு வலியிருக்கவில்லை. ஆனால் நேரமாக, நேரமாக வலி பொறுக்கமுடியாதபடி ஆனது. தன்னுடைய பாண்ட்டில் ரத்தத்தை இளஞ்சூடாக உணர்ந்தான்.

திடீரென்று எல்லாம் படு அமைதியானது போல் இருந்தது. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. சில்வண்டுகள் ஒன்று சேர்ந்து ஒரே சீராக சத்தம் போடத் தொடங்கின. கால்வாய்க்கு அந்தப்பக்கம் இருந்த மாந்தோப்பிலிருந்து காக்கைகள் கரையத் தொடங்கின. இரவில் எதற்காக காகங்கள் கரைகின்றன என அவன் யோசித்தான். ஒருவேளை அவைகளுடைய கூட்டுக்கு பாம்பு ஏதேனும் வந்திருக்கலாம். வசந்தகால வெள்ளத்துப் புது மீன்கள் சிந்து நதியிலிருந்து சந்தைக்கு வந்திருந்தன. அடுத்த நாள் இரவு உணவுக்கு அவற்றை வாங்கி உண்ண வேண்டும் என்று அவன் நினைத்திருந்தான். அதைப் பற்றிய நினைவு மீண்டும் மீண்டும் வந்தது. வலி மோசமாக, மோசமாக அவன் வறுத்த மீனின் வாசத்தை நினைத்தபடி இருந்தான்.

இரண்டு மனிதர்கள் கிராமத்திலிருந்து ஓடி வந்து கொண்டிருந்தார்கள். ஒருவன் இன்னொருவரை விட வயதில் மிகவும் சிறியவனாக இருந்தான். இருவரும் மேலாடை அணிந்திருக்கவில்லை. தொந்தியோடிருந்த மூத்தவர் ஒரு எளிய நாட்டுத்துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி இருந்தார். துப்பாக்கியின் பின்புறம் ஒரு ஒயரால் கட்டப்பட்டிருந்தது.

“அடக்கடவுளே! அவர்கள் அவனைக் கொன்று விட்டார்கள். யார் அது?”

வயதில் சிறியவன் குணிந்து பார்த்தபடி, “இது நவாப்.  ஹரவ்னியின் பண்ணையில் வேலை பார்க்கும் எலெக்ட்ரீஷியன்” என்றான்.

”நான் இன்னும் சாகவில்லை” என்று உறுதிப்படியபடி தலையைத் தூக்காமல் பேசினான் நவாப். அவர்களை அவனுக்குத் தெரியும். அப்பா – மகன். மகனின் திருமணத்துக்கு அவன்தான் விளக்கலங்காரம் செய்திருந்தான். “அந்தத் திருடன் அந்த வைக்கோல் புதருக்குப் பின்தான் பதுங்கியிருக்கிறான்” என்றான் நவாப்.

முதியவர் முன்னகர்ந்து குத்துமதிப்பாக அப்புதரை நோக்கி மையத்தில் சுட்டார். துப்பாக்கியை ரீலோட் செய்து, மீண்டுமொரு முறை சுட்டார். விதைக்கதிர்களைத் தாங்கி ஆளுயரம் வளர்ந்திருந்த பச்சைத்தண்டுகளில் அசைவேதும் இருக்கவில்லை.

“அவன் போய்விட்டான்” என்று சொல்லி இளைஞன் நவாப் அருகில் அமர்ந்து அவன் புஜத்தைப் பிடித்துக் கொண்டான்.

முதியவர் ஜாக்கிரதையாகத் துப்பாக்கியைப் பிடித்தபடி முன்னகர்ந்தார். ஏதோ அசைந்தது. மீண்டும் சுட்டார். திருடன் திறந்தவெளியில் வந்து விழுந்தான். “அம்மா, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அலறிக்கொண்டே, இடுப்பில் கைவைத்தபடி முழங்காலில் நிற்க முயற்சித்தான். முதியவர் அவனருகே சென்று துப்பாக்கியின் பின்புறத்தால் அவன் முதுகில் ஓங்கி அடித்தார். துப்பாக்கியைத் தூக்கிப்போட்டுவிட்டு அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து வந்து நடுரோட்டில் போட்டார். ரத்தம் படிந்த சட்டையை விலக்கிப்பார்த்தபோது, அவன் வயிற்றில் ஆறு சிறுகுண்டுகள் பாய்ந்திருந்தது தெரிந்தது. கோபம் கொண்ட ஆறு கருந்துளைகள் ரத்தத்தைக் கொட்டியபடி இருந்தன. திருடன் சுயமுயற்சியில்லாமல் துப்பியபடி இருந்தான்.

இளைஞன் கியர் போட்டநிலையில் வண்டியைச் சரிவில் உருட்டிச் சென்று அதை உயிர்ப்பித்தான். ஏதாவது வண்டியைக் கூட்டிவருவதாகச் சத்தம்போட்டுவிட்டு அவன் படுவேகமாக வண்டியை ஓட்டிச் சென்றான். அவசரத்தில் க்ளட்ச்சைப் பிடிக்காமலே கியரை மாற்றுவதைக் கேட்டு நவாப் முகஞ்சுளித்தான்.

“சிகரெட் பிடிக்கிறீர்களா சாச்சா?” என்றார் முதியவர் அவனிடம் பெட்டியை நீட்டியபடி.

“ஐயோ! என் நிலையைப் பார்” என்று தலையாட்டிக் கத்தினான் நவாப்.

அந்த அமைதியான சூழலில் அவன் மறந்து போனதொரு முக்கியமான விஷயம் அவனைத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. அப்புறம் நினைவுக்கு வந்தது.

“அந்தத் திருடனுடைய துப்பாக்கியைக் கண்டுபிடி போலே! போலிஸுக்குத் தரவேண்டியிருக்கும்” என்றான்.

“உன்னை இப்படியே விட்டு விட்டுப்போக முடியாது” என்று முதலில் சொன்ன முதியவர், கொஞ்ச நேரம் கழித்து, சிகரெட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு எழுந்து கொண்டார்.

வைக்கோல்புதரில் அவர் துப்பாக்கியைத் தேடிக்கொண்டிருந்தபோது, கால்வாய் மேட்டில் அவர்களைக் கூட்டிச் செல்ல வந்துகொண்டிருக்கும் வண்டியின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது. அந்த வண்டியின் டிரைவர் சந்தேகமாகத் தள்ளி நின்று கொண்டிருக்க, முதியவரும், அவர் மகனும், நவாப்பையும், திருடனையும் வண்டியின் பின்புறம் ஏற்றினார்கள். அவர்கள் ஃபிரோஸா நகரிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்கள். அந்த மருத்துவமனையை ஒரு மருந்துக்கடைக்காரர்தான் நடத்தி வந்தார். அவர்தான் அந்த மருத்துவமனையின் ஒரே ஒரு மருத்துவராகவும் வேலை செய்தார். இருந்தாலும், அவர் பலவிதமான நோய்களையும் ஒரு சில மருந்துகளில் விரைவாகவும், முழுமையாகவும் குணப்படுத்தி வந்ததால் நிறைய வாடிக்கையாளர்களோடு பிரபலமாக விளங்கினார்.

ருத்துவமனை கிருமிநாசினி நாற்றத்தோடும், உடல் திரவங்களின் வாடையோடும் – ஒருவிதமான இனிப்பான நெடியோடு இருந்தது. ஒரு ஃப்ளோரஸண்ட் ட்யூப்லைட் வெளிச்சத்தில் மங்கலாக இருந்த அறையில் நான்கு படுக்கைகள் இருந்தன. அப்பாவும், மகனும் நவாப்பைத் தூக்கிச் சென்றபோது, அந்த வலியிலும் அதிதீவிர ப்ரக்ஞையோடிருந்த நவாப், படுக்கையில் துருப்பிடித்தது போலிருந்த ரத்தக்கறையை கவனித்தான். மருத்துவமனையின் மேலேயே வசித்துவந்த மருத்துவர் லுங்கியும், உள்சட்டையும் அணிந்தபடி கீழிறங்கி வந்தார். அவர் பதற்றமேதுமற்றவராக இருந்தார்.

“அவர்களை இந்த இரண்டு படுக்கையில் கிடத்துங்கள்” என்றார்.

“அஸ்ஸலாம் அலைக்கும் டாக்டர் சாப்” என்று யாரோ வெகு தொலைவிலிருக்கும் ஒருவரோடு பேசுவது போலச் சொன்னான் நவாப்.

மருந்துக்கடைக்காரர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும், இறுக்கமானவராகவும் இருந்தார். வெகு சம்பிரதாயமாக நவாப்பிடம் பேசினார்.

“என்ன நடந்தது நவாப்?”

“இவன் என் பைக்கைத் திருடிச் செல்ல முயற்சித்தான். ஆனால் நான் விடவில்லை”

மருத்துவர் நவாப்பின் மேல்சட்டையைக் கழற்றி, வடிந்துவரும் ரத்தத்தை ஒரு துணியால் துடைத்துவிட்டு அவன் உடலின் பல பகுதிகளைக் குத்திப் பார்த்தார். நவாப் படுக்கையின் இரு பகுதிகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு, சத்தம்போடாமல் பல்லை இறுக்கிக் கடித்தபடி இருந்தான்.

“நீ அதிர்ஷ்டசாலி. உயிருக்கு ஆபத்தில்லை. எல்லா குண்டுகளும் தாழ்வாகச் சென்றிருக்கின்றன” என்றார்.

“அங்கே பட்டிருக்கிறதா?”

“நல்லவேளையாக இல்லை. கடவுளுக்குதான் நன்றி சொல்லவேண்டும்” என்றார் மருத்துவர்.

திருடனின் நுரையீரலில் குண்டு பாய்ந்திருக்க வேண்டும். அவன் மூச்சுக்காற்றோடு ரத்தம் வந்தபடி இருந்தது.

“நீ இதைப் போலிஸ் கேஸாக்கும் அவசியம் இருக்காது. இவன் பிழைக்க மாட்டான்” என்றார் மருத்துவர்.

“ஐயோ, என்னிடம் கருணை காட்டுங்கள். நானும் மனிதன்தான். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று எழுந்து கொள்ள முயற்சித்தபடியே சொன்னான் அவன்.

மருத்துவர் அடுத்த அறையிலிருந்த தன் அலுவலகத்துக்குச் சென்றார். ஒரு சீட்டில் மருந்துகளை எழுதிக் கொடுத்து அடுத்த தெருவிலிருக்கும் கடையிலிருந்து வாங்கி வரும்படி இளைஞனிடம் கொடுத்தார்.

“கடைக்காரரை எழுப்பி இது எலெக்ட்ரீஷியன் நவாப்தீனுக்காக என்று சொல். அவருக்குக் காசு கிடைப்பது என்னுடைய பொறுப்பு என்று சொல்” என்று சொல்லியனுப்பினார் மருத்துவர்.

நவாப் தலையைத் திருப்பி முதல்முறையாகத் திருடனைப் பார்த்தான். அவனுடைய தலையணை முழுதும் ரத்தமாகியிருந்தது. பலமாக மூச்சை வெளியிட முயற்சிப்பது போல், தொடர்ந்து மூக்குறிஞ்சியபடியே இருந்தான். அவனுடைய நீளமான, மெலிந்த கழுத்து அவன் தோளில் பலவீனமாகத் தொங்கிக்கொண்டிருந்தது. நவாப் நினைத்ததைக்காட்டிலும் வயதில் பெரியவனாக இருந்தான். அவன் ஒரு சிறுவன் இல்லை. கருத்த தோலும், செருகிய கண்களும், புகைப்பிடிப்பவனுக்குரிய மஞ்சள் பற்களுமாக இருந்தான். மூச்சு விடுவதற்குப் பிரயத்தனம் செய்தபோதெல்லாம் அப்பற்கள் தெரிந்தன.

“நான் உனக்குத் தீங்கு செய்திருக்கிறேன்” சிரமப்பட்டுப் பேசத் தொடங்கினான் திருடன். “எனக்குத் தெரியும். எப்படி எனக்கு உன் வாழ்க்கையைப் பற்றித் தெரியாதோ, அப்படி உனக்கும் என் வாழ்க்கையைப் பற்றித் தெரியாது. என்னை எது இங்கே கொண்டு வந்து சேர்த்தது என்று எனக்கும் தெரியாது. நீ ஏழையாக இருக்கலாம். ஆனால் நான் உன்னைக்காட்டிலும் பரம ஏழை. என் அம்மாவுக்கு வயதாகிக் கண்பார்வை போய்விட்டது. முல்தான் நகருக்கு வெளியே இருக்கும் சேரியில் இருக்கிறாள். என்னைக் காப்பாற்றச் சொல். நீ சொன்னால் அவர்கள் கேட்பார்கள்”. அவன் அழத் தொடங்கினான். கண்ணீரைத் துடைக்க அவன் முயற்சி செய்யவில்லை. அது அவன் கருத்த முகத்தில் ஒரு கோடு கிழித்தது போல் வழிந்தோடியது.

“ஒழிந்து போ. உன்னைப் போன்றவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதில் சமர்த்தர்கள். உன்னால் என் குழந்தைகள் தெருவில் பிச்சையெடுத்திருப்பார்கள்.”

திருடன் துடிதுடித்துப் பெருமூச்சு விட்டபடி படுத்திருந்தான். விரல்களை அசைத்தபடி இருந்தான். மருத்துவர் எங்கோ சென்றிருந்தார்.

”நான் செத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர்கள் சொன்னார்கள். என்னை மன்னித்துவிடு. சரியான உணவில்லாமல் உதையும், அறையும் வாங்கி வளர்ந்தவன் நான். எனக்கென்று சொந்தமாக எதுவுமே இருந்ததில்லை. வீடில்லை, நிலமில்லை, மனைவியில்லை, காசுமில்லை. எப்போதுமே, எதுவுமே என்னிடம் இருந்ததில்லை. முல்தான் ரயில்நிலையத்தின் நடைபாதையில் பலவருடங்களாகப் படுத்துத் தூங்கியிருக்கிறேன். என் அம்மா உன்னை ஆசிர்வதிப்பாள். என்னை மன்னித்து ஆசிர்வதி. மன்னிக்கப்படாமால் செத்துப்போக நான் விரும்பவில்லை. அவன் மேலும் வேகமாக மூக்குறிஞ்சவும், இருமவும் ஆரம்பித்தான். இப்போது விக்கலும் சேர்ந்துகொண்டது.

கிருமிநாசினியின் வாசம் இப்போது இன்னும் அடர்த்தியாகவும், விரும்பத்தக்கதாவும் இருந்தது நவாப்புக்கு. தரை பளீறென்று ஒளிவிடுவது போல் தோன்றியது. உலகம் திடீரென்று விரிவடைந்தது போல் தோன்றியது.

“முடியாது. உன்னை ஒருக்காலும் மன்னிக்க மாட்டேன். உனக்கு உன் வாழ்க்கை இருந்தது. எனக்கு என் வாழ்க்கை இருந்தது. வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் நான் சரியான திசையில் சென்றேன். நீ தவறான திசையில் சென்றாய். இப்போது பார் உன்னை. உதட்டோரத்தில் ரத்தக் குமிழிகள் ஒட்டியபடி படித்திருக்கிறாய். இது ஒரு தீர்ப்பு என்று நினைக்கவில்லையா நீ? என் மனைவியும், குழந்தைகளும் காலம்பூராவும் அழுதிருப்பார்கள். நீ மோட்டார்பைக்கை விற்று சீட்டாடியிருப்பாய். வெறும் ஆறு ரவுண்டிலும், வீட்டில் செய்த விஷத்தைக் குடிக்கவும் நீ அத்தனை பணத்தையும் செலவு செய்திருப்பாய். நீ இங்கே படுத்துக்கொண்டிருக்கவில்லையென்றால் இந்நேரம் ஆற்றங்கரையோரம் இருக்கும் ஏதாவது ஒரு சூதாட்ட விடுதியில் இருந்திருப்பாய்” என்றான் நவாப்.

“தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து…” என்று ஒவ்வொருமுறையும், முன்னைக்காட்டிலும் மெதுவாகச் சொன்னபடி கூரையைப் பார்த்துக்கொண்டு இருந்தான் திருடன். “அது உண்மையில்லை” கிசுகிசுப்பாகச் சொன்னான். சில நிமிடங்களுக்குப்பின் தூக்கிவாரிப்போட்டு இறந்தான். அதற்குள் திரும்பி வந்து, நவாப்பின் காயங்களைத் துடைத்துக் கொண்டிருந்த மருத்துவர் அவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

ஆனால், ஒளிமிகுந்ததொரு பொருளைக் கொத்துவதற்காகச் சுற்றிச் சுற்றி வந்த பறவையைப் போல், நவாப்பின் மனம் திருடனின் வார்த்தைகளையும், இறப்பையும் சுற்றிச் சுற்றி வந்தது. அப்புறம் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். அவன் மோட்டார்பைக்கைப் பற்றி நினைத்துப் பார்த்தான். அதைக் காப்பாற்றியதன் பெருமிதத்தை நினைத்துக் கொண்டான். ஆறு குண்டுகள், தூக்கியெறியப்பட்ட ஆறு நாணயங்கள், ஆறு வாய்ப்புகள். அதில் ஒன்று கூட அவனைக் கொல்லவில்லை. எலெக்ட்ரீஷியன் நவாப்தீனைக் கொல்லவில்லை.