சீனப் பெண் கவிஞர்களின் ஐந்து கவிதைகள்

chinese-lady-painting
1.
‘லீ’க்கு பிரியாவிடை
– ந்யே ஷெ
(காலம்: 11ஆம் நூற்றாண்டு)

பச்சைப்பவளம் மங்குகிறது
பூக்களோ வாடுகின்றன
ஏனெனில்,
நீ
இந்த நெருப்பு நகரை விட்டுப் போகிறாய்.
தாமரைக்குள மாடத்தின் கீழ்
கொடிகள் பளீர் பச்சை நிறத்தில்.
உனக்காகப் பாடுகிறேன்
‘மலைக் கணவாயில் மஞ்சள் வெயில்’
பிரியாவிடைப் பாடலை.
சவாரி செய்கிறோம்
ஐந்தாம் கல் தொலைவு வரை
நாம் அருகருகே.

இனிய கனவுகள் காண முயல்கிறேன்
ஆனால்,
அதொன்றும் எளிதல்ல
எமைப் போல
காதலின் தருணங்கள் அறிந்தவர்க்கு.
தலையணையில் கண்ணீர்
மாடிப்படிகளில் மழை நீர்
உருண்டு வழிந்தன
மழைத் துளிகள்
சாளரக் கதவுகளில்
காலைவரை.

chinese-lady-painting
2.
— டாங் வான்
(காலம்: 12ஆம் நூற்றாண்டு)

உலகின் காதல் நீர்த்துப் போனது
மனிதக் காதலோ தீங்காகிப் போனது.
மஞ்சள் விளக்கொளியில்
மழைத் தாரை
கிளைகளிலோ மலர்கள்.
விடியற்காலைக் காற்று
உலர்த்திடும் என் கண்ணீரை.
குழறலாய் மட்டுமே பேசினேன்
மிகச் சோர்வினால்.
மிகக் கடினம், கடினம்.
நாம் ஒவ்வொருவரும் தனியாய்
இன்று நேற்றைய நாளல்ல.
குழம்பிய என் மனம்
அலை பாய்கிறது
ஊஞ்சலின் கயிறுபோல.
குளிர்ந்த இரவின் இருளில்
பறவை கூவுகிறது.
பிறரது கேள்விகளுக்கு பயந்து
விழுங்குகிறேன் என் கண்ணீரை
பாவனை செய்வேன்
மகிழ்ச்சியாக இருப்பதுபோல்
கபடம். கபடம். கபடம்.

chinese-lady-painting
3.
— ஸன் தாவ் ஹ்சுவான்
(காலம்: 12ஆம் நூற்றாண்டு)

கிழிந்து ஆடியது
கண்டபடி
வாழையிலையின் நிழல்.
முழுநிலவின் ஓருபாதி
குங்கும மாடத்தின்
மீதெழுந்தது.
நீல வான்
மீது கிளம்பிய
காற்று வீசியது.
முத்துச்சரம் போல
பாடல் ஒன்றும்.
ஆனால்,
பாடகி தெரியவில்லை.
அவள் முகம்
அழகிய வேலைப்பாடுடனான
திரைச் சீலை மறைவில்.

chinese-lady-painting
4.
இல்லற அன்பு
— குவான் தாவ் ஷெங்
( காலம்: கி.பி.1262-1319)
நீயும் நானும்
எத்தனை காதலோடு
தீயென எரியும்
காதலுடன்
அத்தீயில் சுடுகிறோம்
ஒரு கணிமண் கட்டியை
உன்னைப் போல ஓர் உருவும்
என்னைப் போல ஓர் உருவும்.
பிறகு,
இரண்டையும் எடுக்கிறோம்
தூள்தூளாக உடைக்கிறோம்
திரும்பவும்
வனைகிறோம்
உன்னைப் போன்றதொரு உருவமும்
என்னைப் போன்றதொரு உருவமும்
உன் கணிமண்ணுக்குள் நானும்
என் கணிமண்ணுக்குள் நீயும்
வாழ்க்கையில்
ஒரே போர்வைக்குள்
நாம்
மரணத்திலோ
ஒரே சவப்பெட்டிக்குள்
chinese-lady-painting
5.
— வாங் ச்சிங் ஹுவேய்
(காலம்: 13ஆம் நூற்றாண்டு)
முற்காலத்திலிருந்து
மிக வேறுபட்டிருக்கும்
அரச மாளிகை
குளத்துத் தாமரைகள்
இப்போது.
மாமன்னரின் தங்கக் கட்டிலில் அரிய
‘மழையும் பனியும்’ கிடைத்த
தருணம்
நினைவுண்டு.
பச்சைப்பவள அரண்மனையில்
பரவியது
என் புகழ்.
அரசிகள், ஆசைநாயகிகளின்
மத்தியில்
மலரின் நறுமணம் கொண்ட
வத்தியைப் போல.

வெட்கினேன்
ஒரு தாமரை மலர்வது போல
நாயகன் அருகே கூப்பிடும் போதெல்லாம்.
திடீரென்றொரு நாள்
இடியென வானைப் பிளந்தது
குதிரை மீது போர் முரசு.
மலர் போன்ற நாட்கள்
தொலைந்து போயின.
புலிகள், யாளிகள் போல
தளபதிகள் அங்குமிங்கும் திரிந்தனர்.
புயலில் கலைந்த மேகங்களாய் மக்கள்
யாரிடம் சொல்வேன்
இறந்தோருக்கான எனது
நிரந்தர சோகத்தை?
இந்த வேகத்தில்
மலைகளையும் நதிகளையும்
மட்டுமே கண்டேன்.
என் ஆடையிலிருந்த
உதிரத்துடன் சேர்ந்தது என் கண்ணீர்.
தூசின், அழுக்கின்
கனவுகளிலிருந்து விழித்தேன்.
விடியலில்
கீழிறங்கும் நிலவினடியில்
மாளிகை வண்டிகள்
தப்பியோடுகின்றன.
முன்பு நிலாவில் தஞ்சமடைந்த
‘ச்சாங்கோ’விடம் இரைஞ்சுகிறேன்,
அதேபோல,
என்னையும் காப்பாற்று
என்று.