kamagra paypal


முகப்பு » வேளாண்மை

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

coolies1878உணவு உற்பத்திக்கு அடிப்படையானது விவசாயம். விவசாயத்திற்கு அடிப்படையானது மண். மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம்.  மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல.  அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள்.  அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது.  அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியமான மண்ணிலிருந்து விளையும் உணவும் ஆரோக்கியமானது. விவசாயத்தின் முதல்பணி, மண்ணை மக்கு உரமாக மாற்றுவதுதான். ”வேளாண்மை உயில்” என்ற காவியத்தைப் படைத்த ஆல்பெர்ட் ஹாவொர்ட், இந்தூரில் நீடிக்க முடிந்ததா? மண்ணை வளப்படுத்த கம்போஸ்ட் போதும் என்று போதித்த ஹாவொர்டுக்கு எதிர்ப்பு வந்தது. புசாவை விட்டு வெளியேறிய ஹாவொர்ட் மத்திய இந்தியாவுக்கு வந்தார். முதலில் பருத்திக் கமிட்டி ஆதரவை நல்கினாலும் கூட, ஹாவொர்ட் தன் சொந்த பலத்தை நம்பினார்.

மண் வளமைக்கும் மகசூலுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வே ஹோர்வார்டின் குறிக்கோள். 1924-31 காலகட்டத்தில் இந்தூரில் ”பயிர்தொழில் நிறுவனம்” அதாவது ”The Institute of Plant & Industry” ஐ நிறுவ இவர் தன் நண்பர்களிடம் நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது. அரசின் செலவில் செய்யவில்லை. ஒரு வேளாண்மை ஆலோசகர் என்ற முறையில் இந்தியாவில் விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் ’ராயல் கமிஷன் ஆஃப் அக்ரிகல்ச்சர்’ சார்பாக லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆல்பர்ட் ஹாவொர்ட், எந்தவிதத்திலும் கடமை தவறவில்லை. உற்பத்தியை உயர்த்த ரசாயனம் தேவையில்லை என்பதுடன் ரசாயன உரத்தைவிட இயற்கை வழி விவசாயத்தின் கூடுதல் மகசூல் பெற முடியும் என்பதை நிரூபித்துக்காட்டவே இந்தூர் பயிர்த்தொழில் நிறுவனம் உருவானது. மத்திய இந்தியா – இந்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருத்தி முக்கிய வணிகப்பயிர். நல்ல விளைச்சலுக்கு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்பதே அவர் கருத்து. அந்தக் கருத்தில்தான் “Indore Process Of Humus Production” உருவானது மட்டுமல்ல, அதே பெயரில் இந்த “இந்தூர் ப்ராஸஸ்” எவ்வாறு இங்கிலாந்திலும் பின்னர் அமெரிக்காவில் பென்ஸில்வேனியாவிலும் பரவியது என்பதை  இக்கட்டுரையில் கவனிப்போம்.

நாம் ஏற்கனவேயே விவரித்தப்படி 1 மடங்கு கால்நடைக்கழிவான சாணம்+மூத்திரத்துடன், 3 மடங்கு அறுவடைக் கழிவுகளான கட்டைப்புல், வைக்கோல், துவரை, கடலை, உளுந்து போன்ற கொடிகள், மரத்தூள் போன்ற கார்பன் பொருள்களுடன் மக்கவைத்து வழங்கும் முறைதான் ”இந்தூர் ப்ராசஸ்” இம்முறையில் இவர் தயாரித்து வழங்கிய்தைப் பயன்படுத்திய பருத்திப் பயிருக்கு மும்மடங்கு விளைச்சல் உயர்ந்தது. இவ்வாறு இயற்கை உரம் வழங்கும் போது எப்போதுமே விளைநிலத்திலுள்ள மண்ணைப் பாதுகாக்கும் அளவில் மண்ணில் கரிம விழுதுகளை உருவாக்கும் கரிமப்பொருள்கள்+தழைச்சத்துப் பொருள்களான கால்நடைக்கழிவுப் பொருள் கலந்த கலவையை மக்கவைக்கும் பணியை நிகழ்த்துவது. இரண்டாவதாக மண்ணுக்குச் சற்று ஒய்வுதந்து பயிர் எழுப்புதல்.

பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் உள்ள இந்தூரை மையமாகக் கொண்டு இந்தூர்ப் பயிர்த்தொழில் நிறுவனத்தில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளை ”Waste Products of Agricultrue : Their Utilisation as Humus” என்ற பெயரில் இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை மேலை விவசாய விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்தது. தமிழில்  ”வேளாண்மைக் கழிவுப் பொருள்கள்: வேரின் கரிம விழுதுகளாகப் பயன்பெறுதல்” எனலாம். ஹாவொர்ட் பிரிட்டிஷ் அரசின் வேளாண்மை ஆலோசகர் என்ற முறையில் தான் எழுதிய மேற்படி ஆய்வுக் கட்டுரையை நூல் வடிவமாக்கி பருத்திப் பயிர் விஞ்ஞானிகளுக்கு வழங்கினார். எதிர்ப்பு அலை உருவானது. ரசாயன உர நிறுவனங்களும், ரசாயன உர நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவே செயல்பட்ட விவசாய விஞ்ஞானிகளும் ”இந்தூர் ப்ராசஸ்” ஒத்துவராது என்று புறந்தள்ளினர். அவர்களின் கருத்துப்படி, ”பருத்தியில் இனப்பெருக்க ஆய்வின் மூலமே விளைச்சலை உயர்த்த முடியும், நோயுற்ற பருத்திப் பயிரில் பூச்சி மருந்து அடித்தால்தான் உற்பத்தி உயரும்” என்று மறுத்துப் பேசினர். உண்மையில் உகந்தவாறு ஹாவொர்ட் முன்மொழிந்துள்ள இந்தூர் முறை கம்போஸ்டிங்கைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்திருந்தால் மண்ணும் பாதுகாப்பைப் பெற்று மகசூலிலும் புதிய எல்லைகளைத் தொட்டிருக்க முடியும். ஆனால் ரசாயன உர நிறுவனங்களுக்கு அடிவருடிகளாகச் செயலாற்றும் விவசாய விஞ்ஞானிகள், ”மண்ணுக்கு ஓய்வு தேவை” என்ற கூற்றை மட்டும் பெரிதாக எடுத்துக் கொண்டு, மண்ணை ஓய விட்டால் உற்பத்தி குறையும் என்று மடக்கிவிட்டனர்.

1935-இல் ஹாவொர்ட் இங்கிலாந்து – அவருடைய தாய் நாட்டுக்குத் திரும்பியதும், கேம்பிரிட்ஜ் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அவரைப் பேச அழைத்தது. அவரது பயிற்சி முறைகளையும், ஆய்வு முறைகளையும் அறிய ஆவலாயிருந்தவர்கள் கல்லூரி மாணவர்களே தவிர ஆசிரியர்கள் அல்லர். வேளாண்மைப் பேராசிரியர்கள் இவரது இந்தூர் கம்போஸ்ட் மூலம் மண்ணில் கரிம விழுதுகளை உருவாக்கும் நல்வழிக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதில் முனைப்பாயிருந்தனர். இயற்கை விவசாயத்திற்கு எந்த ஊக்கமும் வழங்கக்கூடாது என்பதில் வேளாண்மைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஒத்த கருத்துடையவர்களாயிருந்தனர். ஏனெனில் அவர்கள் ரசாயன உரநிறுவனங்களுக்கு விலை போய்விட்டனர். இயற்கை வழியில் உற்பத்தியை உயர்த்தலாம் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர்.

எனினும் விவசாயிகள் சங்கம் அவருடைய யோசனைகளில் ஆர்வம் காண்பித்தது. அதேசமயம் உர நிறுவனப் பிரதிநிதிகள், ”மகசூலுடன் மண்வள மீட்பு” என்ற கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த போது, சர் பெர்னார்டு கிரின்வெல் என்பவர் தனது நிலம் முழுவதிலும் ஹோவார்டின் யோசனையைப் பின்பற்றினர். இரண்டாண்டுக்குப் பிறகு அவர் எதிர்பார்த்ததற்கு மேலாகவே மண்வள மீட்புடன் பயிர் விளைச்சலும் ஏகபோகமாக இருந்தது. ஒரு பக்கம் வேளாண்மைத்துறை இயற்கை விவசாயத்திற்கு ஊக்கம் வழங்க மறுத்தாலும், மறுபக்கத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேரவை இவருடைய பணிகளை கவுரவித்து, ”வீரப்பதக்க விருது” (KNIGHTHOOD) வழங்கியது. இன்றைய தமிழ்நாட்டில் என்ன நிகழ்கிறதோ அதுபோலவே அன்றைய இங்கிலாந்தில் நிகழ்ந்தது.

ஈவா பெல்ஃபோர்

ஈவா பெல்ஃபோர்

நல்ல புத்தியுள்ள சில விவசாயிகள் மட்டும் ஹாவொர்ட் எடுத்துக்காட்டும் இயற்கை விவசாயத்தில் கால்பதித்தனர். அவர்களில் ஒருவர் ஈவா பெல்ஃபோர் (Eve Belfour) சிறுவயதிலிருந்தே இந்த அம்மையாருக்கு ஜலதோஷமும் வாதநோயும் இருந்தது. உடல்வலி தாங்கமுடியாமல் அவதிப்பட்டார். இவர் சஃபோக் அருகில் உள்ள ஹாலே என்ற இடத்தில் உள்ள தன்னுடைய நிலத்தை இயற்கைக்கு மாற்றினார். ஹாவொர்ட்கூறிய ”இந்தூர் ப்ராசஸ்” இவருக்கு நன்கு கைகொடுத்தது. இவ்வாறு இயற்கை வழியில் தன்னுடைய நிலத்தில் விளைந்ததை உகந்த முறையில் பக்குவப்படுத்தி உண்டு நோய்களிலிருந்து விடுதலை பெற்றார். இயற்கை விவசாயத்தின் மூலம் பெறக்கூடிய நஞ்சில்லா நல்லுணவு நோயாற்றும் பண்புடையது என்பதைத் தன் அனுபவத்தால் புரிந்துகொண்டார். இரண்டாவதாக ரசாயன உரமிட்ட மண்ணில் நுண்ணுயிர்கள் இன்மையால் பூச்சி மருந்தைப் பயன்படுத்தியும் கூட நோய் மீண்டும் தோன்றுகிறது. தன்னைத்தானே காப்பாற்றும் ஆற்றல் இல்லை. ஆனால் மண்ணில் கரிமவிழுது-கரிம உயிர்ச்சத்துள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு நோய்வந்தாலும் தனக்குத்தானே குணமாக்கிக் கொள்ளும் மூன்றாவதாக இயற்கைவழியில் விளைந்த உணவை உட்கொள்ளும் மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் நோய் வருவது இல்லை.

இரண்டாவது உலகப்போர் காலகட்டத்தில் இயற்கை விவசாயத்தில் வெற்றிவாகை சூடிய லேடி ஈவா பெல்ஃபோர் ”உயிர்மண்” (LIVING SOIL) என்ற நூலையும் வெளியிட்டார். அந்த நூலில் ஆல்பெர்ட் ஹாவொர்ட் மற்றும் மருத்துவர் மெக்கரிசன் ஆகிய இருவரின் ஆதாரப் பூர்வமான வெளிப்பாடுகள் – குறிப்பாக மண்ணுக்கும் மனித ஆயுள், மனித நலவாழ்வு, கால்நடை நலவாழ்வுக்கும் உள்ள தொடர்பு – அதாவது உயிர் மண்ணில் (Humus) விளைந்த உணவின் மருத்துவகுணம், நோயாற்றும் சக்தி எல்லாம் இடம் பெற்றிருந்தன.

ஹாவொர்டுக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் மறக்கமுடியாதவர் ஃபிரண்ட் சைக்ஸ் (Friend Sykes)  , ஹோவார்டின் பேச்சால் மிகவும் கவரப்பட்டார். மண்ணின் வலிமை மண்ணில் உள்ள கரிமவிழுதுகள், அதாவது கரிம மக்குப்பொருள்,அதுவே உயிர்மண். மண்ணில் உயிர் உள்ளதால் அந்த உயிர் உள்ளவரை தனக்குத் தானே சத்துக்குறைப்பாட்டை நீக்கிக்கொள்ளும், மண்ணுக்கும் அம்மண்மீது நலம் எழுப்பும் பயிர்களுக்கும் இடையேயான உயிர்ம வேதியியல் மாற்றங்கள் சிறப்பானது ஆகிய இயற்கை விவசாயக் கருத்து  வேரைப் புரிந்து கொண்ட ஃபிரண்ட் சைக்ஸ் இவை குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.  ஒரு கட்டுரைக்குச் சுட்டியை அடிக்குறிப்பில் [1] காணலாம்.  இவர் குதிரை வளர்ப்பதில் வல்லவர். ஹோவார்டால் கவரப்பட்டு, ”இந்தூர் ப்ராசஸின்” அனுபவங்களைத் தன் நிலத்தில் பரிசோதிக்க விரும்பினார். ஒன்றுக்கும் உதவாது என்று புறக்கணிக்கப்பட்ட ஒரு கரட்டுநிலம் -750 ஏக்கர் பண்ணை வில்ட்ஷைரில் (Wilshine) விலைக்குவந்தது. அது வளமான சாலிஸ்பரி பள்ளத்தாக்கை ஒட்டி 1000அடி உயரத்தில் இருந்தது. அப்படிப்பட்ட நிலத்தை சைகிஸ் வாங்கினார். நிலத்தை வாங்கியபின்னர் தன் நிலத்தில் மண் பரிசோதனை செய்தார். அந்த நிலத்தில் சுண்ணாம்பு+பாஸ்வரம்+பொட்டாசியம் போதுமான அளவில் இல்லை என்று அப்பரிசோதனை தெரிவித்தது. சாதாரணமாக விவசாயம் செய்பவர்கள் மண்ணைப் பரிசோதனை செய்வார்கள். மண்ணில் உள்ள குறைப்பாட்டை நீக்க உப்பு வடிவில் ரசாயன உரம் இடச் செய்வார்கள். இப்படிச் செய்யும் போது மண் மீண்டும் சுரண்டப்படுவதுடன், அதன் சமநிலை இழந்து மீண்டும் புதிய குறைப்பாட்டை ஏற்படுத்தும். மண் பரிசோதனை செய்வது மண்வளத்தை மீட்பதற்கு அல்ல. மண்பாதுகாப்புத் தத்துவத்திற்கு முரணானது.  ஃபிரன்ட் சைக்ஸ் என்ன செய்தார்? அம்மண்ணில் பரிசோதனைப்படி கூறப்பட்ட குறைப்பாட்டை அவர் ஏற்கவில்லை. ரசாயன உரம் எதுவும் இடாமல் சற்று அடிமண்ணைப் புரட்டிப்போட்டு உழுது ஓட்ஸ் விதைத்தார். ஏக்கருக்கு 92 புஷல் ஓட்ஸ் அறுத்ததும் அதன் காய்ந்த தாள்களைப் பரப்பி உழுது கோதுமை விதைத்தார். கோதுமையிலும் நல்ல விளைச்சல். பீன்ஸை கோடை உழவு செய்து அம்மண்ணைப் பரிசோதனை செய்தார். இரண்டாவது மண் பரிசோதனையில் அவர் மண்ணில் உள்ள பொட்டாசியக் குறைபாடும், சுண்ணாம்புக் குறைபாடும் நீங்கிவிட்டது. ரசாயனஉரம் இடாமலேயே குறை நீங்கியது எப்படி?

ஃப்ரண்ட் சைக்ஸின் உழவுமுறை

ஃப்ரண்ட் சைக்ஸின் உழவுமுறை

இயற்கை நலம் பற்றிக் கவனம் கொண்டு,  என்ன தேவை என்று புரிந்து கொண்டால் போதும். வீண்செலவு வேண்டாம். எனினும் உங்கள் மண்ணில் பொட்டாசியம் குறைபாடு இன்னமும் உள்ளது என்று சைக்சுக்கு இரண்டாம் மண் பரிசோதனை தெரியப்படுத்தியது. கோதுமைப் புற்களை மண்ணில் பரப்பி மீண்டும் கோதுமையையே பயிர் செய்தார். முன்பைவிட அதிகமாகவே கோதுமை விளைந்தது. மூன்றாவது மண் பரிசோதனையில் பொட்டாசியக் குறைபாடும் நீங்கிவிட்டது. மண்ணில் மக்கும் பொருள் ஹாவொர்ட் எடுத்துக்காட்டிய விகிதத்தில் இருந்தால் போதுமானது. அறுவடைக் கழிவும் குதிரைச் சாணமும் உருவாக்கப்பட்ட கம்போஸ்டிங் மண்ணுக்கு வேண்டிய சத்துக்கள் – அதாவது அதிகபட்ச மகசூல் தரும் வழியில் திருத்தம் பெற்று மண்ணைச் சுரண்டாத வழியில் மகசூலும் கிட்டியது மண்ணும் பாதுகாக்கப்பட்டது. இவர் ஒரு வித்தியாசமான உழவுக் கருவியையும் தயார் செய்து அடிமண்ணை மேலே புரட்டும்படி செய்தார். எல்லாநிலத்திலும் ரை, குளோவர் போன்ற தீவனப்பயிர்களை விதைப்பர். ஏக்கருக்கு சுமார் 2 1/2 டன்கள் வரை பசுந்தீவனம் குதிரைகளுக்குக் கிடைத்தது. பலமுறை அறுத்தும் கூட சிம்பு வெடித்து குதிரைகளுக்குத் தேவையான இயற்கைத் தீவனம் கிடைத்தால் குதிரை – பசுக்கள் நோயின்றி உழைப்புத்திறனையும், பாலையும் வழங்கிற்று. முறையே ஓட்ஸ், கோதுமை இரண்டையும் ஒரு பக்க நிலத்தில் மாற்றி மாற்றி விதைத்து 100 புஷல் வரை பெற்றார். அதாவது 1 ஏக்கருக்கு ஏறத்தாழ 3 டன்கள்.

இரண்டாம் உலக்போர் காலக்கட்டத்தில் போர் எவ்வாறு அமைதியைக் கெடுத்ததோ அவ்வாறே விவசாயத்தில் புகுந்த ரசாயனம் மண்ணைச் சுரண்டியதுடன் மனித நலவாழ்வுக்கு உலை வைத்தது. மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் ரசாயன விவசாயம் விஷம்போல் பரவியபோது இந்தியாவிலிருந்தும் கீழை நாடுகளிலிருந்தும் பெற்ற வேளாண்மை நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ரசாயன விவசாயத்தையும், வீரியரக விதைகளை எதிர்த்தும் ஒரு அறப்போரை ஹோவார்டின் சிஷ்யர்கள் இங்கிலாந்தில் தொடங்கினர். ஈவா பெல்ஃபோர், ”ஹிட்லரைப் போல் ஒரு கொடிய சர்வாதிகாரியை எவ்வாறு எதிர்த்துப் போராட உலகமக்கள் ஒன்று திரடண்டுள்ளனரோ அவ்வாறே இன்று ரசாயனங்களை எதிர்த்து இயற்கையை வாழவைக்க விவசாயிகள் ஒன்று திரளவேண்டிய கட்டாயம் உள்ளது…” என்று கூறினார்.

அப்போது ஹிட்லர் பிரான்சை வென்று முன்னேறிக்கொண்டிருந்தான். ஃபிரண்ட் சைக்சும், ஈவா பெல்ஃபோரும் இன்னும் வேறு பல இயற்கை விவசாயிகளும் மண் மக்கள் குழு என்று (Soil Association) தொடங்கி உலகளாவியதாகப் பல நாடுகளில் உறுப்பினர்களைச் சேர்த்தனர். அது மட்டுமல்ல சஃப்போக்கில் (SUFFOLK) மண்பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு இயற்கை விவசாயிகள் சங்கம் நிலம் ஒதுக்கியது. சமகாலத்தில் இவர்களோடு இணைந்த ஜே.ஐ. ரோடேல் பென்சில்வேனியாவில் அப்போது, நலவாழ்வுக்குரிய நல்வழிகள் என்ற பொருளில் HEALTH FINDER என்ற பெயரில் ஒரு கையேட்டை வெளியிட்டார். நலவாழ்வுக்கும் நல்ல மண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றின ஹாவொர்ட் வழங்கிய விவரம் ரோடேலுக்குப் புதுமையாக இருந்தது. ”இதுவரை மண்ணுக்கும் மனிதநலவாழ்வுக்கும் உள்ள நல்லுறவை இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கவில்லை” என்று கூறிய ஜே. ஐ. ரோடேல் முதல் வேலையாக ஹோவார்ட் எழுதியுள்ள ”வேளாண்மை உயில்” என்ற நூலில் அமெரிக்காவில் வெளியிட்டார். நல்ல மண்ணில் இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவில் அதிக அளவு ஊட்டச் சத்து உள்ள உண்மையை ஆய்வுப்பூர்வமாக அவருடைய முக்கியப் பத்திரிகையான ”இயற்கைத் தோட்டம் – பண்ணை”யிலும் வெளியிட்டதுடன், ஈவா பெல்ஃபோரின் அனுபவத்தில் நல்ல மண்ணில் விளைந்த இயற்கை நல்லுணவுக்கு நோயாற்றும் பண்பு உள்ளது என்ற செய்தியால் கவரப்பட்ட டாக்டர் ஜே. நிக்கல்ஸின் இதயநோய் நீங்கியதை முன்னர் கவனித்தோம்.

r_31-04a-1

இதன் பின்னணியில் 1942-இல் ஜே.ஐ.ரோடேல் பென்சில்வேனியாவில் எம்மாவுஸ் (EMMAUS) பண்ணையை வாங்கினார். அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தை ஆழமாக வேர்விட வைத்து மண்ணைக் காப்பாற்றிய பெருமை ஜே. ஐ. ரோடேலுக்கும் அவர் மகன் ஜே. ராபர்ட் ரேடலுக்கும் உண்டு. இவருடைய ”ஹெல்த் ஃபைன்டர்” என்ற கையேட்டுக்குத் தடைவிதிக்கும் அளவுக்கும் ஜே.ஐ ரோடர் பிரபலமானார். ”ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ரசாயன விவசாயத்தைத் தவிர்க்க வேண்டும். பாரம்பர்ய விதைகளைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லாத உணவை நல்ல மண்ணில் விளைவித்து உண்டால் மரணபயம் எதுவுமில்லை.” என்ற கருத்து ஆளும் வர்க்கத்திற்கு எரிச்சல் மூட்டியது. யு.எஸ்.பெடரல் டிரேட் கமிஷன் இவர் மீது வழக்குத் தொடர்ந்தது. ரசாயன உணவைப் புறக்கணித்துவிட்டு நலமாக வாழுங்கள் என்று கூறுவது குற்றமா? என்ற கேள்வியுடன் ஜே. ஐ. ரோடேல் இந்த வழக்கை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். இதனால் இவர் நடத்திய பத்திரிகை ”இயற்கைத் தோட்டம் – இயற்கைப் பண்ணை” – அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி 9 லட்சம் சந்தாதாரர்கள் உருவானார்கள். எனினும் யு.எஸ். ஃபெடரல் கமிஷனை எதிர்த்து வழக்கு நடத்தியதில் இவருடைய நீதிமன்றச் செலவு 4 லட்சம் டாலர். இந்த இழப்புத் தொகையை வழங்க அரசு முன்வரவில்லை. ஏராளமாக நிதி குவிந்தது. நலிவுற்ற பிரிவினர் நலவழ்வு பெறவும் மண்ணைப் போற்றி மண்ணை நஞ்சில்லாமல் காப்பாற்றவும் ரோடேல் தொண்டு நிறுவனம் இன்றளவும் பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1971-இல் ஜே.ஐ. ரோடேல் ஒரு விபத்தில் மரணமுற்றாலும் அவர் புத்திரர் ஜே. ராபர்ட் ரோடேல் தந்தையைவிடத் தீவிரமாக மண்ணைக் காப்பாற்றுவதில் பாடுபட்டார். ரோடேல் நிறுவனம் மண்ணில் உயிர் உண்டு. உயிர் மண் தொடர்பாக நிகழ்ந்த அனைத்து ஆய்வு நூல்களையும் ஷாட்ஸ் உட்பட வெளியிட்டது. ஜப்பான் விஞ்ஞானி மாசநபு ஃபுக்கோக்காவின் ஒற்றை வைக்கோல் புரட்சியைப் பல மொழிகளில் வெளியிட்டார்கள். Reason இன்னமும் இயற்கை விவசாய நுட்பங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆகவே இன்று உலகம் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பரப்பியதில் முதல் பெயர் ரேடேல் அன்ட் சன்ஸ் என்பது மிகையில்லை.

மண்ணைப் போற்றிய ஜே.ஐ.ரோடேல் ஆங்கிலமொழியில் மண் என்ற சொல்லுக்கு அழுக்கு, சுத்தமின்மை என்று மண்ணை வெறுக்கத்தக்கதாயுள்ள பொருள் உள்ளதையும் எதிர்த்து மண்ணுக்குப் புதிய பொருள் வழங்கினார். மண் என்பது பல்வகை உயிர்கள் என்னும் தூய்மையுள்ளது என்றும் அர்த்தம் வழங்கினார். மண்ணை நாம் தவறாகப் புரிந்து கொண்டதால் தமிழ் மொழியில் கூட நல்லமண், கெட்டமண் என்று கூறிப் புரியவைக்க வேண்டியுள்ளது. ”நன்னிலம்” என்ற சொல்லாட்சி உள்ளது. ‘நல்லமண்’ என்ற சொல்லாட்சிதான் இனி மண்ணைக் காப்பாற்றும்.

மண் என்று எடுத்துக்கொண்டால், மண்ணின் கீழ் உள்ள உயிரிகளையும் கணக்கிட்டுப் பொருள் கொள்ள வேண்டும் என்பது ரோடேலின் கருத்து.

examples_of_annelidaமண்ணுக்கு அடியில் மண்புழுக்கள் உள்ளன. மண்புழுவை இலத்தீன் மொழியில் ”அன்னலிடா” (ANNELIDA) என்பார்கள். இதன் பொருள் ”வளையங்கள்”. மண்புழுவின் உடல் ஏராளமான வளையங்களைக் கொண்டுள்ளது. சாதாரணமாக ஆப்பிரிக்கா அல்லது இந்தியவகை நாட்டுப்புழுவில் 100முதல் 200 வளையங்கள் உள்ளன. ஒவ்வொரு வளையமும் தனித்து இயங்கும். இந்த வளையங்களின் இயக்கத்தால் மண்ணுக்குள் ஆறு அடி அல்லது ஏழு அடி வரை துளைத்து உள்ளே சென்று கீழ் மண்ணை மேலே புரட்டிக்கொடுக்கும். மண்ணைத் துளைத்துக் கீழ்ப்பகுதிக்குச் சென்றாலும், மீண்டும் மேல் மட்டத்திற்கு வந்தாலும் மண்ணை உட்கொண்டு கழிக்கிறது. இந்தக் கழிவுகளே அருமையான மேல்மண் (TopSoil) இந்த மேல் மண்ணே உற்பத்தியைப் பெருக்கும். ஆகவேதான் அரிஸ்டாடில் மண்புழுவை ”மண்ணின் குடல்கள்” என்று வர்ணிக்கிறார். இவ்வாறு மண்புழுக்களால் மண்ணை வளமாக்க மண்ணில் முக்கிய தொழுஉரம் இட்டு மண்புழுக்கள் அடங்கிய மண்ணைப் பரிசோதித்தால் ஒரு கிராம் மண்ணில் 2.9கோடி நுண்ணுயிரிகள் இருக்கும். இந்த நுண்ணுயிரிகள் மடிவதும் பின்னர் தோன்றிப் பன்மடங்கு விரிவாவதுமாக ஒரு இயக்கத்தை மண்புழுக்கள் செய்யும். மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் கலந்த வேர் மண்ணில் கால்மடங்கு வரை கரிமவேர் விழுதுகள் அதாவது ஹூமஸ் உருவாகிறது. 1டன் மண்புழு மக்கு உரத்தில் 1/4டன் கரிமச்சத்து+ தழைச்சத்துள்ள ஆரோக்கியமான, நல்லுணவு வழங்கக்கூடிய மண் விழுதுகள் உண்டு. இவற்றைப் போற்றி வளர்த்த அரிஸ்டாட்டிலிருந்து ரேடேல் வரை, இயற்கை விவசாயத்திற்காகப் போராடும் இன்றைய விவசாயிகள் வரை மண்ணைப் போற்றும் மாமனிதர்கள் வாழ்ந்து வருவது இந்த உலகம் செய்த தவப்பயன் என்றால் மிகையில்லை.

___________________________________________________________________

கட்டுரையாசிரியர் திரு.நாராயணன் சொல்வனத்தில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.  தளத்தில் தேடினால் கிட்டும்.

அடிக் குறிப்புகள்:

[1] Friend Sykes உடைய ஒரு கட்டுரை இதோ: http://www.journeytoforever.org/farm_library/medtest/medtest_sykes.html

Comments are closed.