நிலாக்காலம் – முதுதந்தை கி.ராஜநாராயணன் அவர்களை வணங்கி..

சூரியன் விழுந்த பின் உணவுக்குப்பின், களத்தில் பாய்விரித்து இரும்பு உரலில் தாத்தாவுக்கு வெற்றிலை இடித்துக் கொடுக்கையில் எழும் மணத்தை வைத்துச் சுண்ணாம்பு தூக்கல் என்று சொல்வதிலோ, வானம் பார்த்து கோட்டை கட்டியிருக்கும் நிலாவின் வழியோ, காற்று வருவது அல்லது காற்று வராதது குறித்த பேச்சிலோ தொடங்கும் கதைகள்.

ஃபிலிப்ஸ் ரேடியாவில் ஏழுமணிச் செய்திகள் வாசிக்கும் சரோஜ் நாராயணசாமியின் குரல் ஒலிக்கையில் மட்டும் பரிபூரண அமைதி காக்க வேண்டும். அப்படிக் கேட்ட கதை மாந்தர்களை அடுத்தநாள் சந்திக்க முடியும் என்பதைப் போல கி.ரா.வின் கதைகள்.

மனிதர்களின் நகைச்சுவை, வைராக்கியம், பண்புகளின் எதார்த்தப் பக்கங்கள், ரசனைகள் என உண்மை உலகமாய் விரியும் கதைகள். கிட்டத்தட்ட ஒரு சில மைல் தொலைவுக்குள்ளாகவே தம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்த மனிதர்களின் அக, புற உலகங்கள் முட்டி மோதும் வெளி தான் இவரின் படைப்புலகம். இன்றும் எனது கிராமத்தில் இப்படியான மனிதர்களோடு வசிக்கிறேன். இவை ஏதும் எங்கோ எப்போதோ நடந்த கதைகள் என்று நினைப்பதற்குரியவை அல்ல. இன்றும் உள்ள வாழ்க்கையின் சித்திரங்களே.

இன்று இத்தனை ஊடகங்கள் மூலமாக மனித மனம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. அந்த ஒன்றின் படி பார்த்தால் பெருநகரம் ஒன்றே மொத்த தமிழ்நாடு. அது நிசமல்ல என்பதை எல்லாக்காலத்திலும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பவை நாட்டுப்புற கலை வடிவங்கள். உலகமயமாக்கல் கொண்டு வந்த நன்மைகளால் மறக்கடிக்கப்படுகிறது, நிகழ்கால மனிதர்களின் ஆளுமையில் ஒரு சிறு நுண்ணிய உணர்திறன். கரப்பானின் உணர் முடிகள் போன்றது, அல்லது ஏதோ ஒரு சுவைக்கான சுவை மொட்டு போன்றது அது. அது இல்லாமலானால் ஒன்றுமில்லை. எனினும் இருந்தால் வாழ்க்கை இன்னும் சுவைகூடும். நாம் இத்தனை வேகமாக பாருளிற்காக ஓடுவதும், மூச்சுவாங்கிக் கொண்ட போதும் சிரித்துக் கொள்வதாக பாவனை காட்டி, குதூகலிப்பதைப் போல ஒரு புற எம்பு எம்பி, மகிழ்ந்திருப்பதாக அறிவிப்பதும் அதற்காகத்தானே. சுவை… வாழ்வின் சுவைக்கான ஊற்றுக்கண்ணில் நம் கையை நாமே வைத்து அடைத்துக்கொண்டு, வாழ்வின் ஈரத்திற்காக எங்கோ பார்த்து நிற்பதன் அபத்தம். கல்வி,வேலை, வாழ்வின் மகிழ்வு சார்ந்து நாம் இல்லை. அடுத்தவர் உருவாக்கிக் கொடுத்த வழிகளில் தேடிக் களைக்கிறோம்.

இந்த இடத்தில்தான் கி.ரா. வின் கதைகளுக்கான தேவை இன்னும் இருக்கிறது. என்றும் தேவைப்படும் வாழ்வின் அடிப்படைகளைப் பேசுதல் இவற்றின் செறிவு. பெரிய நெருக்கடிகள் இல்லாததும், இலக்குகள் அற்றதும், எல்லா லட்சியவாதச் செயல்பாடுகளும் அபத்தமாகத் தெரிவதுமான காலம் என்று சொல்லப்படும் சமகாலத்தில்தான் இலக்கியம் தன் அத்தனை வலுவான கரங்களாலும் மானுடத்தைத் தழுவி ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை அதிகமிருக்கிறது. நேர் -எதிர் என்று ஏதோ ஒன்று இருப்பதைவிட, அவை இல்லாததன் வெறுமை சூழ்ந்த இந்தக் காலகட்டத்தில், இலக்கியம் மானுடத்தை நோக்கிப் புன்னகைத்து அழைக்கிறது. சத்தான அதன் அழைப்பை விலக்கி, ஊடகங்களில் நம்மை மறைத்துக் கொண்டிக்கிறோம்.

காலமும், உலகமும் சொல்லும் போக்கிலெங்கும் போகாமல், எங்கு நம்மை நிறுத்திக் கொள்ளலாம் என்பதை எப்போதும் கலையின் ஏதோ ஒருவடிவம் சொல்லிக் கொண்டிருக்கும். இந்த இடத்தில் ‘எலிவளையானாலும் தனிவளை’ என்ற பழமொழியை உலகமயமாக்கலுடன் பொருத்தி, அதனோடு “உலகத்துக்கே ஒற்றைப் போர்வை, அது என்ன?” என்ற பிள்ளைவயது விடுகதையையும் சேர்த்து நினைத்துக் கொள்ளலாம்.

இன்று, நேற்று, நாளை என்ற காலவகைமை ஒரு வசதிக்காகவே. எனில் இலக்கியம் காலாதீதமானதால் கி.ரா.வின் கதைகள், சூழல்கள், மனிதர்கள், சிக்கல்கள் நம்மை ஆற்றுப்படுத்துபவை.எதையும் சொல்பவை, கற்பிப்பவை இலக்கியம் அல்ல எனக் கொண்டாலும் கூட கதைகள் ஏதோ ஒன்றைச் சொல்லாமல் கதைகளாவதில்லை.எனில் அழகியல்,கருத்தியல்,விழுமிய உருவாக்கம் எனக் கலைகளில் இருந்து காலம் கேட்கும் சாரம் வெவ்வேறு. இன்று காலம் கேட்பது, ‘வாழ்வின் உண்மையான சுவை என்ன?’ என்பதாக இருக்கலாம். கி.ரா. வின் கதைகளில் அது கரிசல்மண்ணில் விழுந்த மழைத்துளியில் முட்டி எழுந்து பசும்புன்னகை காட்டும் புல்லின் நுனியில் உள்ள வாழ்வின் இனிமையென, பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மழைநின்ற அதிகாலை நிலத்தி்ல் முளைவிடும் பசுமையென விரிகிறது. அந்தப் பசுமை, மழைக்காகக் காத்திருந்து, வானம் பார்த்துக் காய்ந்த பூமியின் பசுமை என்பதால் மேலும் அடர்வு கொள்கின்றது.

கி.ரா.வின் கதைகள் கிராமத்தின் கதை. ஒரு கிராமம் என்பது பல கிராமங்களின் சாயலைக் காெண்டது. மனிதர்கள் அந்த ஊரினர் மட்டும் அல்லர். நாம் அனைவரும் தான். ஒரு கரிசல் காட்டின் சம்சாரிக்கும், ஒரு மென்பொருளாளர் வாழ்விற்கும் பெரிய வேறுபாடில்லை என்று தோன்றுகிறது. அந்த வகையில் கி.ரா.வின் பேசுபொருள் வாழ்வும் வாழ்வு சார்ந்தது.

வாழ்வு எனப்படுவது யாதெனின், உயிர்களுக்கும் மண்ணிற்குமான போராட்டமெனில், விவசாயின் வாழ்வைக் கூறும் படைப்பு இயல்பாகவே பின்னோக்கி ஆதிவாழ்வையும், மனிதஇயல்பான கூட்டுவாழ்வின் பாதுகாப்புணர்வை உணர்த்துகிறது. அடுத்தவீட்டு முகம் மனதில் பதியாத அடுக்கக வாழ்வில் அந்த பாதுகாப்புணர்வை நாம் இழந்திருக்கிறாேம். இயல்பாகவே எந்தவகையிலும் சேராத கதைசொல்லல் என்பதே கி.ரா.வின் வலிமையாகிறது. அதுவே அவரின் மீது வைக்கப்படும் மாற்றுக்கருத்தாகவும் உள்ளது. அவரே சொல்லும் கரிசலின் விடியல் போல, பொட்டலில் கிழக்கு அடிவாரத்தில் தனித்தெழுந்து தன் பேருரு காட்டும் வெயிலவனைப் போல, கதைகளில் வரும் வரும் மனிதர்களின் இயல்பால், சூழல்களின் உக்கிரத்தால் (கதவு, குடும்பத்தில் ஒரு நபர்,காய்ச்ச மரம்) நம்மை நிலைகுத்தி நிற்கச் செய்பவை. இந்த உணர்வுகள், சூழல்கள் எப்போதுமிருப்பதால் கி.ரா.வின் கதைகள் எல்லாக் காலத்திற்கும் உரியவை.

ஒருசிறிய உணர்வுமாற்றத்தைக் கதையாக ஆக்கும் வித்தை படிந்த கரங்கள். அந்த உணர்வுமாற்றத்தை, வாசிப்பவர் சென்றடைய வைக்கும் மொழி. கதையிலிருந்து வெளிவருகையில் உண்மையில் நாமும் அந்தப் பேருந்திலிருந்தோ, அந்த வீட்டிலிருந்தோ, அந்தக் கோயிலிலிருந்தோ மெல்ல எழுந்து நடந்து நம் வீட்டிற்கு வருகிறோம். கதை என்ற ஒன்றை மனிதர் சொல்லத் தொடங்கியது இதற்காகத் தானோ என்னவோ? இருக்குமிடத்திலிருந்து மெல்லப் பறந்து மீண்டுவர.

கன்னிமை என்ற கதை ஏற்படுத்தும் முதல்வாசிப்பின் அதிர்வுக்கு ஒப்புமையாகக் கூற வேண்டுமென்றால் சுரைக்குடுக்கையை இடையில் கட்டிவிட்டு தளும்பும் கிணற்றில் தள்ளிவிட்ட அனுபவத்தை சொல்லலாம். அத்தனை தளும்பல்களும் நிறைந்த அனுபவம். அந்தக் கதையிலிருந்து ஒரு போதும் வெளியே வரமுடியாது என்றே தோன்றுகிறது. பெண்கள் எப்போதும் நினைத்துக் கொள்ள, கர்வப்பட்டுக் கொள்ள விரும்பும் காலக்கட்டம். இன்னொரு வகையில் கன்னியிலிருக்கும் பெருந்தாய்மைப் பண்பை முன் வைப்பதாக என்வாசிப்பில் உணர்கிறேன். தாய்மை என்பது பெண்ணின் ஆகச் சிறந்த பண்பு எனில் அது முழுமையாகத் திரண்டு ஒளி விடுவது கன்னிப்பருவத்தில். அதுபின் தன் குழந்தைக்கான தாய்மையாக மாற்றம்பெறுகிறது. அந்தக் கதையே ‘சொன்னால் நம்ப முடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படிமாறுவாள் என்று நினைக்கவேயில்லை.’என்று தான் துவங்கும். நாச்சியார் இருளில் பணத்தை எண்ணிக் கொண்டிருக்க, அவள் கணவன், “நாச்சியாரு,என் பிரியே!நீ எங்கிருக்கிறாய்?’ என்பதாக கதை முடியும். கன்னி ‘மை’ என்ற தலைப்பு அவர் கதை முழுக்கச் சொல்வதை ஒரு வார்த்தையில் சொல்கிறது.

சாவு என்ற கதை, கையறு நிலையின் கதை வடிவம். ஜெயில் கதையில் வீடும், விடுதியும், பள்ளியும் சிறையான இரு குழந்தைகள் ஒன்று மற்றதைப் புரிந்து கொள்ளுதலைச் சொல்லும் கதை. இப்போதும் குழந்தைகள் அதை உணராமலில்லை. சென்ற மாதம் கூட திருச்சியில் மூன்று பெண்பிள்ளைகள் மன அழுத்தம் காரணமாக ரயிலேறி மீட்கப்பட்டார்கள். கதைகள் எக்காலத்திற்கும் உரியவை, ஏனெனில் மனித ஆழ்மனம் எக்காலத்திலும் ஒன்றே. உதாரணத்திற்கு ஆழ்மனதின் பண்புகளான உள்ளுணர்வு, விலங்கியல் மனம், பதற்றம், தற்காப்பு நடத்தைகள் (கற்பனை, பொய்கள்) போன்றவை எக்காலத்திற்கும் பொதுவானவை.

கரிசலும் கரிசல் சார்ந்த பாடுபாருள்களும் இயல்பாக மண்ணும் மண்ணைச் சார்ந்தவையுமாகின்றன. நிலைநிறுத்தல் என்ற கதை மனித மனத்தின் பிடி கிடைக்கும் கதை. இன்று மாமனிதர்களாக வரலாற்றில் நிற்பவர்கள் பலரிடமிருந்த அன்புசார்ந்த, அறவழிசார்ந்த பிடிவாதம் போல சாமானியனின் பிடிவாதம். கதைகளில் வரும் விதவிதமான மனிதச் சித்திரங்கள், அவர்களை நிமிர்ந்து பார்க்க வைப்பது பள்ளி செல்லாத, ஒரு புத்தகம் கூட வாசிக்காத, அனுபவதளத்தை மட்டும் சார்ந்த அவர்களின் கிராமிய ஆளுமைப் பண்புகள். உதாரணத்திற்கு, கன்னிமை கதையில் வரும் நாச்சியாரம்மா, நிலநிறுத்தலில் வரும் மாசாணம் போன்றவர்கள். அதற்கு மாற்றான மனிதர்களும் அவர்களுக்குரிய நியாயங்களுடன் உலவுகிறார்கள்.

விவசாயம் செய்ய எவ்வளவு மனஉறுதி வேண்டுமென்பதை மாயமான் கதை ஒன்றிலேயே உணரலாம். விவசாயிக்கு வெளியிலிருந்து கிடைக்கும் உதவிகள் எவ்வளவு சுமை என்பதைச் சொல்லி, விவசாயிக்கு உண்மையில் உதவி என்பது இயற்கையின் உதவி தான் என்பதைச் சொல்லாமல் உணர வைக்கிறார். இன்று இயற்கையைக் கனிய வைக்கும் சக்திகளை எவ்வகையிலும் அழிக்காமலிருப்பது ஒன்றே விவசாயிகளுக்குச் சமூகம் செய்யும் கடமை என்றும் உணர்த்துகிறார். இவ்வகையில்தான் மனதோடு பேசும் கலைகள் வாழ்விற்கு அவசியமாகிறன.

பாற்கடலில் கூட நஞ்சுண்டு நம்ம என்ன? என்று சொல்வதைப் போல கசப்புகளும், வஞ்சங்களும், போட்டிகளும், போதாமைகளும் இல்லாத நெஞ்சங்களில்லை. கடும் வெயில் உண்டு வாழும் வேம்பின் சுவை போல, வாழ்வின் அத்தனை எதிர்மறைத் தருணங்கள், நம்பிக்கையின்மைகள் என அனைத்தும். கி.ரா.வின் கதைகளில் அதனாலென்ன, ‘எல்லாம் கசந்தாலும் அத்தனை கசப்பையும் மீறிய இத்துணூண்டு பழத்தப்பாருமய்யா’ என்று சாரத்தைக் காட்டுகின்றது. அதற்கான இன்றையத் தேவை மிக அதிகம்.

கி.ரா.,“ எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி.எந்த வாத்தியாரையும் வைத்துக் கொண்டு தங்கள் தொழிலை கற்றுக் கொண்டதில்லை. அதே போல எந்த ஒருவனுக்கும் அவர்கள் வாத்தியாராக இருந்து கற்றுக் கொடுக்க விரும்புவதும் இல்லை,” என்கிறார். அதனாலேயே அவர் பெரும்பாலான கதைகளில் திடீர்த் திருப்பம், மற்றும் வாசகர்கள் எதிர்பார்க்காத முடிவிற்கான கருக்களை மட்டும் எழுதாமல், மனதில் பகிர வேண்டும் என்று தோன்றுவதை எழுதுகிறார். அதில் எதிர்பாராத முடிவுகள் கொண்டவையும் இயல்பாக வருகின்றன.

பசி, கோபம், நேசம்,தோல்வி, புரட்சிக்கான சிறு முளை  (கரண்டு), வயோதிகம், இயற்கை, விவசாயம் என்று கி.ரா.வின்கதைகள் வாழ்வின் அடிப்படைகளைப் பேசு பொருட்களாகக் கொண்டவை என்பதால் என்றுமுள்ள அன்றாடம். பொதுவாகப் பயணிக்கப் போடப்பட்ட சாலைகள், ஊர்களின் தூரங்களை அதிகரிக்கின்றன. கிராமங்களை இணைக்கும் சிறு கால்தடப் பாதைகள் தூரத்தைச் சுருக்குகின்றன. மேலும் மனதுக்கு நெருக்கமான மரங்களும், நெருஞ்சிகளும் செறிந்த அழகிய கரடுமுரடான பாதைகள் அவை. மனம் சிறகு கொள்ளும் பாதைகள். உண்மையில் அந்தப் பாதைகள் அழிவதனால் ஊர்களின் பன்முகத்தன்மை மாறி, தனிச்சிறப்புகள் மறைகின்றன. அவை சொல்லும் தத்துவம் ஒன்றுண்டு. யாரோ பொது வசதிக்காகப் போட்ட சாலைகள் மட்டுமல்ல வாழ்க்கை.

கதை கேட்கும் பருவத்தைத் தாண்டிய பிறகோ அல்லது நம் கதை சொல்லிகளின் குரல்கள் காலத்தில் கரைந்த பின்போ, நிலாக்காலங்களில் கதைகளுக்காக மனம் ஏங்கும் ஏகாந்தப் பொழுதுகளில், கரிசலின் தாத்தா சொல்வதைப் போல மௌன வாசிப்புக்கென்றே உண்டாக்கப்பட்டது அவரது நடை. அவற்றிற்குச் சில வாசிப்புகள் மட்டும் போதுமானவை அல்ல.

கட்டுரைக்கான காரணநூல்:

கி.ரா. அவர்களின் பவளவிழா ஆண்டில், அன்னம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட கி. ராஜநாரயணன் கதைகள் என்ற முழுத் தொகுப்பின் ஆறாவது பதிப்பு. வருடம் 2015.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.