kamagra paypal


முகப்பு » உலக இலக்கியம், உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு

ஷப்லீ

என் மனைவிக்கு ஒரு நாய் வேணுமாம். அவளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. குழந்தை நாய் வேணும்னு கேக்கறதா இவ சொல்றா.

நாய் வேணும்னு என் மனைவி ரொம்ப நாளாவே கேட்டுக்கிட்டிருக்கா. அதை அவளுக்கு வாங்கித் தர முடியாதுன்னு நான்தான் அவகிட்ட சொல்லியாகனும். ஆனா இப்ப பாத்தா குழந்தை நாய் கேக்குதுன்னு அவ சொல்றா. ஒரு வேளை இது நிஜமாக்கூட இருக்கலாம். குழந்தையும் என் மனைவியும் ரொம்ப கிளோஸ். வீட்டுல ரெண்டு பேரும் எப்பவும் ஒருத்தர ஒருத்தர் கட்டிப் பிடிச்சிக்கிட்டுதான்  சுத்தி வருவாங்க. அது ஒரு பெண் குழந்தை. அது கிட்ட கேட்டேன், “யாரோட செல்லக்குட்டி நீ?” “அப்பாச் செல்லம்தானே?” . குழந்தை, “அம்மா”ன்னு சொல்லுது, அதுவும் ஒரு தடவையோட நிறுத்திக்காம, ‘அம்மா, அம்மா, அம்மா”ன்னு சொல்லிக்கிட்டே இருக்கு. சனியன் அதுக்கு போய் நான் ஏன் நூறு டாலர் குடுத்து நாய் வாங்கித் தரனும்.

என் பொண்டாட்டி சொல்றா, அதுக்கு கெய்ர்ன் டெரியர் நாய்தான் வேணுமாம். அந்த நாய் அவளையும் குழந்தையையும் போல ஒரு ப்ரெஸ்பெட்டீரியனாம். போன வருஷம் “மதர்ஸ் டே அவுட்” திட்டம் வழியா அவள் ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் நடத்தும் டேகேருக்கு வாரம் ரெண்டு முறை போனதால அது ஒரு பாப்டிஸ்ட்.. இந்த வருஷம் அவள் ஒரு ப்ரெஸ்பெட்டீரியன், ஏன்னா ப்ரெஸ்பெட்டீரியங்க கிட்ட மத்தவங்கள விட ஊஞ்சல்கள், சறுக்குமரங்கள் மத்த விளையாட்டு சாமான்கள் அதிக அளவுல இருக்கறதால. என்னப் பொருத்தவரை இப்படிலாம் செய்யறது கேவலமானது. அத நான் சொல்லவும் சொல்லிருக்கேன். என் மனைவி வாழ்நாள் முழுதும் அக்மார்க் முத்திரை குத்தின அசல் ப்ரெஸ்பெட்டீரியன். அதனால இதெல்லாம ஓகேயாம், அவ சொல்றா. முந்தி எப்பவோ, அவ குழந்தையா இருந்தப்போ இவான்ஸ்வில், இலினாய்ல ஃபர்ஸ்ட் ப்ரெஸ்பெட்டீரியன் தேவாலயத்துக்கு போவா. நான் “பளாக் ஷீப்” புங்கறதால தேவாலயத்துக்குலாம் போனதில்ல.  எங்க குடும்பத்துல மொத்தம் அஞ்சு பசங்க. அதுல ஆம்பிளப் பசங்களுக்கு மட்டும் ரொடேசன்ல “பளாக் ஷீப்” பட்டம் குடுப்பாங்க. DWI- காலத்திலோ அந்த மாதிரி ஏதோ ஒரு சமயத்திலோ எங்கள்ல மூத்தவன் கொஞ்ச காலத்துக்கு அந்தப் பட்டப்பேர சுமந்துக்கிட்டு இருப்பான். அப்புறம் வேலைலயோ மிலிட்டிரியிலோ சேர்ந்து குப்ப கொட்டி அவன் தலையும் நரைச்சுக்கிட்டே வரும். கடைசில கல்யாணம் ஆகி பேரக்குழந்தைலாம் இருக்கறப்போ அவன் ஒரு வழியா “ வைட் ஷீப்”பா மாறியிருப்பான். பொண்ணுங்கறதால என் தங்கை பிளாக் ஷீப்பா இருந்ததே இல்ல.

எங்க குழந்தை தங்கமான குழந்தைதான். காசதிகாமாகும்கறதனால நான்தான் பல வருஷமா என் மனைவிகிட்ட குழந்தையெல்லாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்தேன். ஆனாஅதுக நம்மள பெண்ட் எடுத்துடும். பெண்ட் எடுக்கறதுல அதுங்க செம்ம கெட்டி, எங்க குழந்தையைப் போல, அதை செய்யறதுக்கு அதுகளுக்கு பல வருஷங்கள் தேவைப்பட்டாலும் கூட. இப்பல்லாம் நான் அது இருக்கும் இடத்தையே சுத்திச் சுத்தி வரேன். சான்ஸ் கிடைக்கறப்பலாம் அதை அணச்சுப்பேன். அவ பேர் ஜோஆனா. ஆஷ்காஷ் ஓவரால் போட்டுக்கிட்டு “இல்ல”, “பாட்டில்” “வெளில”  “அம்மா”ன்னு சொல்லிக்கிட்டிருக்கா. ஈரமா இருக்கறப்போ ரொம்ப கொஞ்சும்படியா இருப்பா. குளிச்சு முடிச்சப்பறம் பழுப்பு நிற டவல நல்லா சுத்திக்கிட்டு பிளாண்ட் தலைமுடில ஈரம் சொட்டச் சொட்ட இருக்கறச்சே பார்க்கறதுக்கு அருமையா இருக்கும். சில சமயம் டீவி பார்த்துக்கிட்டு இருக்கறச்சே மத்தவங்களும் அங்க இருக்காங்கறதையே மறந்துடுவா. டீவி பார்க்கறப்போ அவ முகத்துல ஒரு அசட்டுக்களை அடிக்கும். அவ  ஈரமா இருக்கறச்சேதான் எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்.

இந்த நாய் விஷயம் பெரிய தலைவலியா மாறிக்கிட்டிருக்கு. “அதான் இப்ப குழந்தை வந்தாச்சுல்ல, அந்த எழவெடுத்த நாய் வேற இன்னமும் வேணுமா?”ன்னு என் மனைவிகிட்ட கேட்டேன். அது போய் யாரையாவது கடிச்சு வைக்கும். இல்லாட்டா தொலஞ்சு போகும். எங்க சப்டிவிஷன சுத்திச் சுத்தி வந்து பார்க்கறவங்ககிட்டலாம் “இங்க ப்ரவுன் நாய் ஒன்ன பார்த்தீங்களா”ன்னு கேட்கறத நெனச்சுப் பார்க்கறேன். அவங்களும் ரொம்ப அக்கறையா “அது பேர் என்ன”ன்னு திரும்பிக் கேப்பாங்க. ஒரு முறைப்பு முறச்சுட்டு நானும் “மைக்கல்”ன்னு சொல்லி வைப்பேன். ஆமாம், அதுக்கு மைக்கல்னுதான் பேர் வைக்கனும்னு இவளுக்கு ஆசை. கேவலமான பேரு. இந்த நாயை, அதுக்கு ஒரு வேளை வெறிகூட பிடிச்சிருக்கலாம்,தேடிப்போறச்சே “இந்த பிரவுன் கலர்ல் ஒரு நாய் இருக்குமே, மைக்கல், அதப் பார்த்தீங்களா?”ன்னு நான் கேட்கவேற செய்யனும். சில சமயம் இதெல்லாம் நினைக்கறச்சே டைவ்ர்ஸே தேவலைன்னு தோனும்.

என்கூட செய்ய முடியாத என்னத்த பெரிசா அந்த நாய்கூட குழந்தை செஞ்சிடப் போகுது. கும்மாளமா? என்னாலும் கும்மாளம் போட முடியும். ஸ்கூல் பிளேகிரவுண்டுக்கு அவள கூட்டிக்கிட்டுப் போனேன். ஞாத்திக்கிழமைங்கறதால அங்க யாருமே இல்ல. நாங்க கும்மாளம் போட்டோம். நான் ஓடினேன். என் பின்னால அவளும் தட்டுத் தடுமாறினாலும் நல்லா வேகமாவே ஓடி வந்தா. சறுக்குமரத்துல சறுக்கறச்சே நான் அவள பிடிச்சிக்கிட்டே இருந்தேன்.அங்க இருந்த ஒரு பெரிய காங்க்ரீட் குழாய்க்குள்ளஅவ தட்டித் தடவி வந்தா. கீழகிடந்த ஒரு இறகை கையில எடுத்து அத ரொம்ப நேரமா உத்து பார்த்துக்கிட்டிருந்தா. எனக்கு ஒரே கவல. அதுல வியாதிகீதி இருந்தா.. ஆனா அவ அதை வாயில போட்டுக்கல. அப்புறம் காலியா காஞ்சுகிடந்த ஸாஃப்ட்பால் ஃபீல்ட்லயும் இன்னும் கொஞ்சம் ஓடினோம்.அதுக்கப்பறம் மஞ்ச பெயிண்ட்லாம் திட்டு திட்டா வெடிச்சுக் கிடந்த மரத்துல செஞ்சிருந்த டெம்பரரி கிளாஸ்களை மெயின் பில்டிங்கோட கனெக்ட் செய்யற ஆர்கேட் வழியா ஓடினோம். நான் இதே வேலைல இருந்தேன்னா ஜோஆனா ஒரு நாள் இந்தப் பள்ளிக்கூடத்திலதான் படிப்பா,

Pets-a-plently- ல நான் சில நாய்களப் பார்த்தேன். அங்க பறவைங்க, கொறினிக, நாய்க எல்லாத்தையும் டாப் கண்டிஷன்ல வெச்சிருக்காங்க. கெயிர்ன் டெரியர் சிலத எனக்கு காட்டினாங்க. “இதுகளோட ஸ்தோத்திரப் புஸ்தகம்லாம் சரியா இருக்கா”ன்னு நான் கேட்டேன். அங்க வேல செஞ்சிக்கிட்டிருந்த பொம்பளைக்கு நான் என்ன கேக்கறேன்னே புரியல. அதுகளோட அடையாள ஆவணங்களலாம் சேர்த்து அந்த கேர்ன் டெரியர்ஸ்களோட விலை இருனூற்றித் தொன்னூத்தி அஞ்சு டாலர். இதுகளுக்கு தப்பா பிறந்த குட்டிகள் கம்மியான விலைக்குக் கிடைக்குமான்னு கேட்க நெனச்சேன். ஆனா ஏற்கனவே அந்தப் பொம்பளைக்கு என்னப் பிடிக்காததால இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு எனக்கே சொல்லிக்கிட்டேன்.

சே, எங்கிட்ட ஏதோ தப்பிருக்கு. என் பொண்டாட்டி சொல்ற மாதிரி என்னால மட்டும் ஏன் மத்தவங்க மாதிரி சாதாரணமா இருக்க முடியல? தெனம் காலங்காத்தால எங்க  வீட்டின் ரெண்டாவது மாடில உட்காந்துக்கிட்டிருப்பேன். தெருவ பார்த்த மேஜை. விடிகாலை அஞ்சரை மணிக்கெல்லாம் தனியாவோ ஜோடியாகவோ அவங்களோட மூர்க்கமான ஆரோக்கியத்த நோக்கி ஓட ஆரம்பிச்சுருவாங்க. நான் கவலைல ஒரு கிளாஸ் ஐஸ் போட்ட காலோ ஷப்லீய (Gallo Chablis) சூப்பிக்கிட்டே தம் அடிச்சிக்கிட்டிருந்தேன். குழந்தை ஈரமா இருக்கறச்சே கத்திய கித்திய பிளக் ஓட்டைக்குள்ள விட்டுடுமாங்கற கவலை. இத்தனைக்கும் நான் அந்த ஓட்டைகள பிளாஸ்டிக் பிளக்குங்கள போட்டு அடைச்சுதான் வெச்சிருக்கேன். ஆனா அவளுக்கு அதுகள வெளில எடுக்க தெரிஞ்சிடுச்சு. கிரயான்களலாம் ஏற்கனவே செக் பண்ணிட்டேன். இப்பலாம் அத சாப்பிடக்கூட செய்யலாம், அவ்வளவு பாதுகாப்பானதாம். நான் பென்சில்வேனியாவில் இருக்கும் அவங்க தலைமை அலுவலகத்தை கூப்பிட்டுக் கேட்டேன். இவ ஒரு முழு கிரயான் பாக்சயே தாராளமா சாப்பிடலாம். ஒன்னும் ஆகாது. காருக்கு புது டயர்கள் வாங்கறதத் தள்ளிப்போட்டா நாய வாங்கிடலாம்.

முப்பது வருஷத்துக்கு முன்னாடி பியூமாண்ட் ஹைவேய ஒட்டியிருந்த சோள வயலுக்குள்ள ஹெர்மன் அம்மாவின் காரை கொண்டு நிறுத்தினது இன்னும் ஞாபகத்துல இருக்கு. என் லேன்ல உன்னொரு காரும் இருந்தது. அத நான் இடிக்கல, அதுவும் என்ன இடிக்கல. எனக்கு நல்லா நெனவிருக்கு, நான் வலப்பக்கமா ஒடிச்சு, பள்ளத்துல இறங்கி, வேலிய துளைச்சு நேரா சோள வயல்ல கொண்டுபோய் நிறுத்தினத. அதுக்கப்புறம் ஹெர்மன எழுப்பி, அந்த உன்னோரு கார்ல இருந்தாங்களே அந்தக் குடிகாரப் பேர்விழிகளுக்கு என்னாச்சுன்னு பார்க்க சாலைக்கு எதிர்ப்பக்கம் இருந்த பள்ளத்துக்குப் போனோம். அப்போ, பல, பல வருஷங்களுக்கு முன்னாடி நான் ஒரு பிளாக் ஷீப்பா இருந்தேன். இப்ப நினைச்சுப் பார்த்தாலும், நல்லா ஒழுங்காத்தான் செஞ்சேன்னு தோணுது. நினைவுகளில் என்னையே பாராட்டிக் கொண்டு எழுந்துக்கறேன், உள்ள போய் குழந்தைய பார்க்கறதுக்காக.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.