எம். எல். – அத்தியாயம் 2 & 3

அத்தியாயம்- 2

சைக்கிளில்தான் பசைவாளியும் போஸ்டருமாகக் சுற்றினார்கள் என்றாலும் நாராயணனுக்கு வலது கால் வலித்தது. ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டுகிறது அவனுக்குப் பிடிக்கவில்லை. போஸ்டர் ஓட்டுவது தன்னுடைய வேலையல்ல என்று நினைத்தான். இதுவும் கட்சி வேலைதான் என்று எடிட்டர் நினைத்தாரோ என்னவோ? பரமேஸ்வரன் வருவதற்கு முன்பே நேற்று புறப்பட்டிருந்தால் இந்த வேலை நம் தலையில் விழுந்திருக்காது என்று நினைத்தான். மாயாண்டி வேறு நேற்று ராத்திரி கட்சி ஆபிஸ் வாசலில் முதல் போஸ்டரை ஒட்ட ஆரம்பித்த நேரத்திலிருந்து வாய் ஓயாமல் தொணதொணத்துக் கொண்டே இருக்கிறான். அவன் பென்னர் காக்கி மில்லில் வேலை பார்க்கிறவன். பேச்சு, டீ பீடி, இதுதான் அவனுடைய உலகம். அவனுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வரும். நமக்கு ஒத்து வராது.

கட்சிப் பத்திரிகையில் உதவி ஆசிரியனாக வேலை பார்க்கிறான் என்பதற்காக இருபத்து நாலு மணி நேரமும் கட்சி, கட்சி என்று சாக முடியுமா? “தோழர், என்ன யோசனையாவே வாறீங்க?” என்றான் மாயாண்டி.

“ஒண்ணுமில்லே, கால் வலி, தூக்கம் வேற வருது,” என்றான் நாராயணன்.

“மணி நாலு, நாலரை இருக்குமா?… தெற்கு மாசி வீதியிலே ஒரு ரெண்டு போஸ்டர் ஒட்டிட்டோம்னா போதும் தோழர், முடிஞ்சிது,” என்றான் மாயாண்டி.

அவனுடன் சரிக்குச் சரி பேச முடியாவிட்டாலும் அவ்வப்போது ஏதாவது பதில் சொல்லிக்கொண்டுதான் வந்தான். “தோழர் சரியா ஒத்துழைக்கவில்லை,” என்று பரமேஸ்வரனிடம் போட்டுக் கொடுத்து விடுவானோ என்று நாராயணன் பயந்தான். லேசான குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. எப்போதோ ஒரு சைக்கிள் ரிக்சா மந்தமாக ஊர்ந்து சென்றது. அடைத்துக் கிடக்கிற கடைக் கதவுகளும் வீட்டுக் கதவுகளும் மாறி மாறி வந்துகொண்டே இருந்தன. கல் தளம் பாவிய பிளாட்பாரத்தில் வரிசையாக ஆணும் பெண்ணுமாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

“தோழர், தினமணி டாக்கீஸாண்ட ஒரு பாய் கடையிலே டீ நல்லா இருக்கும். அதைக் குடிச்சிட்டா தூக்கம் பறந்திரும்…” என்றான் மாயாண்டி.

“பரவாயில்லை…” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தான்.

“வண்டியப் புடிக்கவே முடியலை. கையெல்லாம் மழுமழுனு ஒரே பசையா இருக்கு தோழர்…” என்றான் மாயாண்டி. இவன் பசையையே தொடவில்லை. கேரியரில் கட்டி வைத்திருந்த போஸ்டரை எடுத்துக் கொடுப்பதோடு சரி.

“தோழர்… கோபால் பிள்ளை பேரெல்லாம் போஸ்டர்ல போட்டிருககாங்களே… அவரெல்லாம் வந்து பேச முடியுமா தோழர்?…’

“மே தினக் கூட்டம்கிறதால பேர் போட்டிருக்காங்க. எப்படியும் வந்திருவாரு…”

“கச்சி ஆக்டிவிட்டிஸ்லேருந்து அவரெல்லாம் ஒதுங்கிட்டாரே… எதுக்கு வயசான காலத்திலே அவரை எல்லாம் கூப்புடணும்?…”

“கட்சியிலே கேட்டிருப்பாங்க… கேட்டுத்துத்தான் பேரெல்லாம் போட்டிருப்பாங்க…”

“அவரெல்லாம் ஒதுங்கி ரொம்ப நாளாச்சு தோழர்… இந்தச் சொவத்திலே ஒன்னு ஒட்டுவமா?… இது போஸ்டர் ஓட்டுற எடம்தான்,” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் மாயாண்டி. நாராயணனும் சைக்கிளை ரோட்டோரமாக நிறுத்தினான்.

oOo

 

நாராயணனுடைய வீடு கறிவேப்பிலைக்காரத் தெருவில் இருந்தது. வீட்டு வாசலில் முத்துக் காளத்தி சேர்வை என்று ஒரு பக்கமும் இன்னொரு பக்கத்தில், ‘பாக்கியம் இல்லம்,’ என்றும் கல்லில் பொறித்திருக்கும். இப்போது சேர்வையும் பாக்கியமும் அந்த வீட்டில் இல்லை. ராமசாமிக் கோனார் கைக்கு வீடு வந்து பல வருடங்களாகி விட்டன என்றாலும், கல்லில் பொறித்திருக்கிற தன் நண்பரின் பெயரையும் அவர் மனைவியின் பெயரையும் பெயர்த்தெடுக்காமலேயே கோனார் விட்டிருந்தார். கோனாரும் அங்கே குடியிருக்கவில்லை. அவர் ராமாயணச் சாவடித் தெரு வீட்டில்தான் இருந்தார்.

கரிவேப்பிலைக்காரத் தெரு வீட்டை போர்ஷன் போர்ஷனாக மறித்து, ஒன்பது குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். வாசலில் நுழைந்ததும் பெரிய திண்ணை ஒன்று உண்டு. நாராயணன் வீட்டுக்கு அடுத்த போர்ஷனில் குடியிருக்கிற சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் பியோன் மாரி எந்த மழை, வேனல் காலமானாலும் அதில்தான் படுத்துத் தூங்குவார். பத்து மணிக்கெல்லாம் தெருக்கதவைச் சாத்திவிட்டு மாரி படுத்துக் கொள்வார். ராத்திரி மேலமாசி வீதியில் சப்பரம் பார்க்கப் போகிறவர்கள் முதலிலேயே மாரியிடம் சொல்லி வைத்துவிட வேண்டும். அவருக்கு காது வேறு கொஞ்சம் மந்தம். அகாலத்தில் வீடு திரும்புகிறவர்கள், சமயங்களில், கதவை இடி இடியென்று இடிக்க வேண்டியதிருக்கும். மற்றபடி மாரி, அந்த 17, கறிவேப்பிலைக்காரத் தெருவுக்கு நல்ல காவலாளிதான்.

நாராயணன் வீட்டுக்கு வரும்போது அதிகாலை ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. சில வீடுகளில் வாசல் தெளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பாய் கடையில் குடித்த டீயின் இனிப்பு நாக்கில் இன்னும் இருந்து கொண்டிருந்தது. சந்திரா டாக்கீஸ் எதிரே உள்ள கௌன்ஸிலர் ஆனந்தன் கடையில் இன்னொரு டீ கூட குடித்துவிட்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. திடீரென்று டீயின் மீது மாளாத ஆசை உண்டானது போலிருந்தது. ஆச்சரியப்படும்படியாக தெருவாசல் கதவு திறந்தே கிடந்தது. சைக்கிளை திண்ணையோரத்தில் நிறுத்தினான். மாரியைத் திண்ணையில் காணவில்லை. இரவு அவரும் அவனைப் போல் தூங்கவேயில்லையா? அதற்குள் எங்கே போயிருப்பார்? வீட்டுக்குள் நுழைந்ததுமே மூக்குக்குள் சாக்கடை நெடி ஏறிற்று. மங்களம் மெடிக்கல்ஸில் வேலை பார்க்கிற சம்பந்தனின் வீட்டில் பல்பு எரிந்தது கதவிடுக்கு வழியே தெரிந்தது. நீலா விழித்திருப்பாளா என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கதவில் கையை வைத்தான். கதவு திறந்து கொண்டது. மண்ணெண்ணை வாசனை அடித்தது. கதவுப் பக்கம்தான் சுவிட்ச். சுவிட்சைத் தடவி போட்டதும் நாற்பது வாட்ஸ் பல்பு எரிந்தது. நாற்பது வாட்ஸ் பல்புக்கு மேல் போடக்கூடாது என்பது வீட்டுக்காரரின் கண்டிஷன்.

சுந்தரி ஒருக்களித்துப் படுத்துக் கிடந்தாள். விளக்கைப் போட்டதும் எலியோ, மூஞ்சிறுவோ குடுகுடுவென்று வெளியே ஓடியது. குழந்தையைத் தொட்டிலில் போட்டிருந்தாள். தொட்டிலுக்குக் கீழே கிடந்த சாக்கு ஈரமாக இருந்தது. பயமொன்றுமில்லை என்றாலும், ஏன் கதவைத் தாளிடாமல் படுத்திருந்தாள் என்று யோசித்துக் கொண்டே, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கால்களைத் தூக்கி, தொட்டில் சேலை நனைந்திருக்கிறதா என்று பார்த்தான், அதன் மிருதுவான கால்களைத் தொட்டதும் சிலிர்த்தது. கொடியில் கிடந்த ஒரு துணியை மடித்து குழந்தையின் இடுப்புக்குக் கீழே வாகாக வைத்துவிட்டுச் சட்டையைக் கழற்றிக் கொடியில் போட்டான். அவனுடைய வியர்வை நாற்றம் அவனுக்கே ஓங்கரித்தது. கற்றாழையை முறித்தது போன்ற நாற்றம். பனியனையும் கழற்றி கொடியில் போட்டான்.  அப்பாவுடைய உடம்பிலிருந்தும் இதே வீச்சம்தான் வீசும். விளக்கை அணைத்துவிட்டு வெறும் தரையில் படுத்துக் கொண்டான்.

அத்தியாயம் 3

லைவிரிச்சான் சந்திலிருந்த கட்சியின் அலுவலகத்துக்கும் கோபால் பிள்ளை வீட்டுக்கும் அதிக தூரமில்லை. மேல மாசி வீதியில் ஸ்வீட்லாண்ட் ஹோட்டலுக்கு எதிரேதான் கோபால் பிள்ளையுடைய வீடு இருந்தது. மேல மாசி வீதிகளிலுள்ள பெரும்பாலான வீடுகளைப்போல் அதுவும் பழைய வீடுதான், கோபால் பிள்ளையுடைய பூர்வீகம் அனைவரதநல்லூர். 1938லேயே கோபால் பிள்ளை மதுரைக்கு வந்து விட்டார். அனவரதநல்லூரில் சோஷலிஸ சங்கத்தில் இருந்தார். அவருடைய அப்பா ராமசாமிப் பிள்ளைக்கு மகனின் போக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை.

ஒரு நாள் வீட்டு தார்சாவில் மாட்டியிருந்த காந்தி படத்துக்கு பக்கத்திலேயே ஒரு தாடிக்காரனுடைய படத்தைக் கொண்டு வந்து கோபால் பிள்ளை மாட்டினார். அவர் வெளியே போயிருந்த நேரம் பார்த்து அந்தத் தாடிக்காரன் போட்டோவைக் கழற்றி மச்சில் கொண்டு போய் மூலையில் போட்டுவிட்டார் ராமசாமிப் பிள்ளை. அவர் மனைவி பிச்சம்மாள், “அந்தப் பெய ஏதோ ஆசையா ஒரு போட்டோ கொண்டு வந்து மாட்டுனா அது ஏன் ஒங்களுக்குக் கண்ணைக் கரிக்கிது?’ என்று சத்தம் போட்டாள்.

“சவத்து மூதி…. நீ என்னத்தக் கண்ட? கண்டவன் படத்தையும் மாட்டி வைக்கதுக்கு இது என்ன நாசுவங் கடையா?”

“நீங்க காந்தியார் படத்த மாட்டி வச்சிருக்க மாதிரி, அவனும் ஆசயா ஒரு படத்த மாட்டினா, அது ஏன் ஒங்களுக்கு பத்திக்கிட்டு வருது?”

ராமசாமிப் பிள்ளையுடைய அபிப்பிராயப்படி ‘பிச்சம்மாளுக்கு விவரம் பத்தாது’, காந்தியும் எவனோ ஒரு வெளிநாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனும் ஒன்றாகுமா? அவர் கிட்டித் துண்டை எடுத்துப் போர்த்துக்கொண்டு வயக்காட்டுக்குப் புறப்பட்டார். இரண்டு வயலுக்கும் தண்ணீர் விலக்கி விட்டுவிட்டு, வாய்க்காலில் இறங்கி முகம், கை, கால்களை எல்லாம் கழுவினார். இடுப்பில் சொருகி வைத்திருந்த திருநீற்றுப் பையைத் திறந்து நெற்றி, மார்பு, கைகளிலெல்லாம் இட்டுக் கொண்டு கோயிலுக்குப் போனார். அது நித்தியப்படி நடக்கிறதுதான்.

ராமசாமிப் பிள்ளை வெளியே போயிர்ந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த கோபால் பிள்ளை, தார்சாவில் மாட்டியிருந்த கார்ல் மார்க்ஸின் படத்தைக் காணாமல் நேரே அடுக்களைப் பக்கம் போனார். அவருடைய மனைவி வேலு இட்லி அவித்துக் கொண்டிருந்தார்.

“தார்சாவுல மாட்டியிருந்த படத்த எங்க காணலையே?…” என்று கேட்டார்.

“மாமாதான் அத எடுத்து எங்கயோ வச்சிருக்காக…” என்றாள் வேலு. பிச்சம்மாள் ஹரிக்கேன் லைட்டைத் துடைத்துக் கொண்டிருந்தாள். “ஏய்… அவகிட்டப் போயி கேட்டா அவளுக்கு என்னடா தெரியும்? நீ பாட்டுக்கு ஆரு படத்தயோ கொண்டாந்து மாட்டிருதே… ஓங்க ஐயாவுக்கு ஒரு நேரத்தப் போல ஒரு நேரம் புத்தி இருக்க மாட்டேங்குது. நாம் எம்புட்டோ சொல்லியுங் கேக்காம அத மெத்தையில கொண்டு போயிப் போட்டுட்டாக…” என்றாள் பிச்சம்மாள். கோபால் பிள்ளைக்கு நெஞ்சு படபடவென்று அடித்தது.

“ஒனக்கும் இந்த வைகாசி பொறந்தா அம்பத்திரண்டு வரப் போவுது. ரெண்டு பிள்ளைகளயும் பெத்தாச்சு. ஓங்க ஐயா கொணந்தான் ஒனக்குத் தெரியுமே… எதுக்கு இந்த கச்சி கிச்சி எல்லாம்,” என்று பொத்தாம்பொதுவாய்ச் சொன்னாள் பிச்சம்மாள்.

மறுநாளே வேலுவையும் இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு ஊரை விட்டுக் கிளம்பிவிட்டார். ராமசாமிப் பிள்ளையும் பிச்சம்மாளும் பதறிப் போனார்கள். அவர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. வயதான மாமாவையும் அத்தையையும் தனியே விட்டுவிட்டுப் போக வேண்டி இருக்கிறதே என்று வேலுவுக்கு வருத்தம். அன்று மதுரைக்கு வந்தவர்தான்.

மதுரையில் அனவரதநல்லூர் , விட்டிலாபுரத்துக்காரர்கள் ஏழெட்டு பேர் மில்லில் வேலை பார்த்தனர். சூடன் சாமியார் சந்தில் குடியிருந்து கொண்டு மில் வேலைக்குப் போய் வந்தார் கோபால் பிள்ளை. ஊரிலிருந்த போதே கம்யூனிஸ நூல்களை எல்லாம் படித்திருந்ததால் மதுரை கட்சிக் கிளையில் தவிர்க்க முடியாத நபராகி விட்டார். மில்லில் தோழர்களுக்கு வகுப்புகள் எடுத்தார். கட்சிக்கூட்டங்களில் முக்கியப் பேச்சாளரானார்.

ராமசாமிப் பிள்ளை மகனையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க முடியாமல் தவியாய் தவித்தார். கோயில் கோயிலாகப் போனார். ஊர்க்காரர்கள் மூலம் கோபால் பிள்ளை மதுரையில் இருப்பதைத் தெரிந்து கொண்டு பிச்சம்மாளையும் அழைத்துக்கொண்டு மதுரைக்கு வந்தார். கோபால் பிள்ளை அப்பாவை, நிலப்பிரபுத்துவத்தில் ஊறியவராகத்தான் பார்த்தார். ஆனால் வேலு தன் பிள்ளைகளை கணவனுடைய அரசியல் காற்று இழுத்துவிடாமல் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள். பிள்ளைகளுக்கும் அரசியல், கட்சியிலெல்லாம் சிறிதுகூட ஆர்வமில்லை.

கோபால் பிள்ளை தன்னுடைய அரசியல் நம்பிக்கைகளை மனைவி மீதோ, பிள்ளைகள் மீதோ திணிக்கவில்லை. ஒரு கம்யூனிஸ்ட் அப்படிச் செய்யக்கூடாது என்று நினைத்தார். ராமசாமிப் பிள்ளை ஊரிலிருந்த நஞ்சைகளை எல்லாம் விற்று, தன் பேரப்பிள்ளைகளின் பேரில் மேலமாசி விஈதியில் ஒரு பழைய வீட்டை வாங்கினார். விருப்பமில்லாமலேயே, வேறு வழியில்லாமல் அந்த வீட்டுக்கு கோபால் பிள்ளையும் வர வேண்டியதாயிற்று. ராமசாமிப் பிள்ளை குடும்பத்தின் எதிர்காலத்தை உத்தேசித்து அந்த வீட்டின் ஒரு பகுதியைக் கடையாக்கினார். இன்னொரு பகுதியை குடியிருப்புக்கு ஒதுக்கினார். கல்யாண வீடுகளுக்குச் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலையும் ஆரம்பித்தார் ராமசாமிப் பிள்ளை. தன் ஆயுள் காலம் முழுதும் அந்தக் கடையை ராமசாமிப் பிள்ளையே கவனித்து வந்தார். பெரிய பேரனையும் தன்னுடன் வைத்துக்கொண்டு அவனுக்கும் தொழில் பழகிக் கொடுத்தார். சின்னவன் பண்டாபீஸில் வேலை பார்த்தான்.

மாடியில் தெருவைப் பார்த்த அறை கோபால் பிள்ளைக்கு ஒதுக்கப்பட்டது. வீட்டின் கீழ்ப் பகுதியிலுள்ள மூன்று அறைகளையும் மாடியிலுள்ள இதர பகுதிகளையும் குடும்பம் தன் புழக்கத்துக்கு எடுத்துக் கொண்டது. ராமசாமிப் பிள்ளை மகனுடைய ‘சீர்’ தெரிந்து, தானே பெண் பார்த்து இரண்டு பெறப் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். அவர் கண்ணை மூடிய அடுத்த வருடமே பிச்சம்மாளும் இறந்து போனார்.

கோபால் பிள்ளையுடைய அறை முழுவதும் புத்தகங்களாகத்தான் இருந்தன. ஒரு மூலையில் கட்டில் கிடந்தது. எந்த நேரமும் யாராவது வந்த வண்ணமாகவே இருக்கும். இப்போது அவருக்கு எண்பத்தி இரண்டு வயதாகி விட்டது. முதிர்ந்த கம்யூனிஸ்ட் தலைவராகி விட்டார் கோபால் பிள்ளை. மாடியில் சின்ன மகன் பிச்சையா மனைவி குழந்தையுடன் குடியிருந்தான். கீழே கடையை ஒட்டி இருந்த பகுதியில், கடையைப் பார்த்துக் கொள்ள வசதியாகப் பெரியவன் ராமசாமி குடியிருந்தான்.

இரண்டு பையன்களுக்கும் கோபால் பிள்ளை அப்பா, அம்மாவுடைய பெயர்களையே இட்டிருந்தார். பிள்ளைகளுக்குப் பெயர் இட்டபோது அவர் கம்யூனிஸ்ட் ஆகவில்லை. இல்லையென்றால் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் என்று பெயர் இட்டிருப்பார். இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக அந்தக் குடும்பம் தப்பித்தது.

மூன்று நேரமும் அவருடைய அறைக்கே சாப்பாடு வந்துவிடும். ஒரு மாதம் பூராவும் பெரியவன் வீட்டிலிருந்து சாப்பாடு வரும். இன்னொரு மாதம் சின்ன மகன் வீட்டிலிருந்து வரும். முன்பெல்லாம் வடக்கு மாசி வீதியும் மேல மாசி வீதியும் சந்திக்கும் முக்கில் சாயந்தரப் பேப்பர் வாங்கி வருவதற்காக தெருவோரமாக நடந்தே போய் வருவார். இப்போது இரண்டு வருஷங்களாக வெளி நடமாட்டமே இல்லை. சில நாட்கள் மெதுவாகப் படியிறங்கி வந்து கீழே உட்கார்ந்து கொண்டு, சாயந்திர நேரம், தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். சரியாக ஏழு பத்துக்கெல்லாம் படியேறி மேலே போய் விடுவார். வேறு எதற்கு? ஏழே கால் டெல்லி நியூஸ் கேட்கத்தான். ராத்திரி தூங்கப் போவதற்கு முன்பும் நியூஸ் கேட்கவேண்டும். இத்தனைக்கும் பிச்சையா, காலையில் ஹிண்டு பேப்பர் போடவும் ஏற்பாடு செய்திருந்தான். பிச்சையாவுடைய பொஞ்சாதி கஸ்தூரி, இரண்டு நாளைக்கு ஒரு தடவை, அவர் அறையில் இறைந்து கிடக்கும் புஸ்தகங்களை எல்லாம் அடுக்கி வைத்துப் பெருக்கி விட்டுத்தான் போகிறாள். ஆனாலும் அவரைப் பார்க்க வருகிறவர்கள் புஸ்தகங்களை கலைத்துப் போட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள். அதற்காக கஸ்தூரி ஒரு நாளும் சடைத்துக் கொண்டதேயில்லை.

கட்டிலில் படுத்துக்கொண்டு லெனினின் தத்துவக் குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தார் கோபால் பிள்ளை. காலையில் படித்துவிட்டுப் போட்டிருந்த ஹிந்து பேப்பர் காற்றில் விரிந்து விரிந்து மூடிக் கொண்டிருந்தது. பெரியவனுடைய மகள் வந்து அவரருகே கட்டிலில் அமர்ந்தாள். பேத்தியுடைய கையைப் பிடித்து, “என்னம்மா சாலாச்சி?” என்றார்.

“தாத்தா, நீ மீட்டிங் பேசப் போறீயா?…” என்று கேட்டாள் சாலாச்சி.

“ஒனக்கு யார் சொன்னா?”

“அதான் நம்ம வீட்டு வாசல்ல போஸ்டர் ஒட்டி ருக்க… அதுல ஒம் பேரெல்லாம் போட்டிருக்கு…”

“அப்பிடியாம்மா?… ஏதோ கேட்டாங்க…”

“ஒன்னாலேதான் நடக்க முடியாதே… எப்பிடிப் போவே?…”

“ரிக்சாவுலதான் போவணும்…”

“நானும் வரட்டா தாத்தா?…”

“வாயேன்…”

“நீ அங்க போயி என்ன பேசுவே?…”

“எனக்கு அரசியல விட்டா என்னம்மா தெரியும்?…”

“அரசியல்னா என்ன? நீ பொஸ்தகமெல்லாம் படிக்கிறீயே?… அதைப் பத்தியா?…”

கோபால் பிள்ளை சிரித்தார். “அதெல்லாம் ஒனக்குப் புரியாது சாலாச்சி…”

“நான்தான் நாலாங் கிளாஸ் வந்துட்டேனே… எனக்குத் தெரியும்… நீ சொல்லு தாத்தா…”

“அதாவது… கூட்டத்திலே நாட்டு நடப்பப் பத்தி பேசுவோம்…”

“அதான் அரசியலா?” என்று சொல்லிவிட்டு, ஜன்னலருகே போய் தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். பிறகு, “தாத்தா… நீ படி… நான் கீழே போறேன்…” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.