kamagra paypal


முகப்பு » புத்தகப் பகுதி, மகரந்தம், வீடியோ

மகரந்தம்


மின் சக்தியைச் சேமிக்க புதுமை வழிகள்

உலகத் தட்பவெப்பநிலை சீர் குலைந்து ஜீவராசிகளின் வாழ்வைச் சாத்தியமற்றதாக்கப் போகிறது என்ற அச்சத்தைக் கொடுக்கும்  செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மாரிக்கால மழை இந்தியாவில் கடந்த பல வருடங்களாகக் குறைந்து கொண்டே போகிறது. உஷ்ணமான மாதங்களில் வெப்பம் பல பாகைகள் (டிகிரி) ஏறிக் கொண்டே போகிறது. இது நூறாண்டு, ஆயிரமாண்டு என்ற கணக்கில் பார்த்தால் ஒரு வேளை வழக்கமாக நடக்கும் மாறுதல்தான், பீதி கொள்ள அவசியமில்லை என்று ஒரு சாராரும், இல்லை, இது மனித வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத மாறுதல், இந்த மாறுதலுக்குக் காரணம் மூடிய அமைப்பான உலகின் வெப்பத்தை அதிகரிக்கும் கரியமில வாயு போன்ற வாயுக்களை மனிதர் முன்னெப்போதுமில்லாத அளவு காற்றிலும், நீரிலும், மண்ணிலும் கலக்கிறார்கள் என்பதும், மண்ணில் புதைந்திருந்த பல லட்சம் ஆண்டுக்கால கரிப்பொருட்களை எடுத்து எரித்து அதன் கழிவுகளையும் காற்று வெளியில் கலக்க விடுகிறார்கள் என்பதும்தான் என்று இன்னொரு சாராரும் வாதிடுகிறார்கள்.  யாரும் மறுக்காத தகவல்களின்படி,  மாக்கடல்களும் அமிலமாகின்றன, பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இதையொட்டிய விமர்சனங்களும் தகவல் வெளியில் எங்கும் நிரம்பி இருக்கின்றன.

கரி, நிலத்தடி எண்ணெய் போன்ற எரிபொருட்களை எரிப்பதைக் குறைத்தால் இந்தச் சீரழிவின் வேகத்தை ஓரளவு தடுக்க முடியும் என்பது பெரும்பான்மை அறிவியலாளரின் கருத்து. ஆனால் கரி, எண்ணெய் போன்றனவற்றை நாம் இன்று பற்பல உபயோகங்களுக்கு என்று கையாள்கிறோம் என்றாலும் பெருமளவு இவை மின் உற்பத்திக்குத்தான் பயன்படுகின்றன. மாற்று வழிகளில் மின் உற்பத்தி செய்வதை அதிகரித்தால், மேற்படி எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம். மாற்று வழிகளாக இன்று அதிகம் பயன்படுபவை, நீரின் ஓட்டத்திலிருந்தும், காற்றின் வேகத்திலிருந்தும், சூரியவெப்பத்திலிருந்தும் தயாரிக்கும் மின் சக்திகளே. இவற்றில் பகலிலோ, காற்று வேகப்படும்போதோ தயாரிக்கும் அளவு மின் சக்தியை இரவிலும், காற்று வேகமில்லாத நேரங்களிலும் நம்மால் தயாரிக்க முடிவதில்லை.

ஆகவே வாய்ப்பிருக்கும் நேரத்தில் அதிகமாகத் தயாரித்து, உபரியை எங்காவது சேமித்து வைத்துக் கொண்டால், வாய்ப்பு இல்லாத நேரத்தின் பயன்பாட்டுக்கு சேமிப்பிலிருந்து எடுத்துச் செலவு செய்ய முடியும். இதற்குச் சமீப காலம் வரை மின்கலங்களைத்தான் நம்பி இருந்தார்கள். (மின்கலம்= பாட்டரி). ஆகவே மின்கலங்களின் செயல்திறனைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்ய நிறைய பல்கலைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஓரளவுதான் முன்னேறி இருக்கின்றன. உலகத் தேவைக்கு இந்த முன்னேற்றமெல்லாம் போதாது. எனவே மாற்று வழிகளை யோசிக்கத் தலைப்பட்ட பொருட்களின் பொறிநுட்பவியலாளர்கள், முற்றிலும் நூதனமான வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவை குறித்த கட்டுரைக்கான லிங்க் கீழே உள்ளது.

சுருக்கமாக அக்கட்டுரை காட்டுவது இது– உஷ்ணம், உராய்வு, புவி ஈர்ப்பு சக்தி, மேலும் தேக்கநிலை ஆகியனவற்றை இந்தத் தொழில் நுட்பவியலாளர்கள் பயன்படுத்த முயல்கிறார்கள்.

ஜெர்மனியில் பண்டைக்காலத்து உப்புப் படிவங்கள் நிலத்தடியில் இருப்பனவற்றில் மின் சக்தியைச் சேமித்து வைக்க முயற்சி செய்கிறார்களாம். உப்புப் படிவங்கள் மீது ஏராளமான நீரைச் செலுத்தி அவற்றைக் கரைத்து அவற்றூடே பெரும் குகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். தரைக்குக் கீழே அரைமைல் தூரத்தில் இந்தக் குகைகள் உள்ளன. உபரி மின் சக்தியைப் பயன்படுத்தி காற்றை அழுத்தத்துக்கு உள்ளாக்கி அதை இந்தக் குகைகளில் சேமிக்கின்றனர். மின்சக்தி உற்பத்தி குறைந்து விட்ட நேரத்தில் குகைக்குள்ளிருக்கும் அழுத்தத்துக்குட்பட்ட காற்றை வெளிப்படுத்தி அதை நிலவாயுவை எரிக்கப் பயன்படுத்தி மின் சக்தியைத் தயாரிக்கிறார்கள். அழுத்தத்தில் இருந்து விடுபடும் காற்று ஆக்ஸிஜனை எரிவாயுவுக்குச் செலுத்துவதில் திறன் அதிகம் உள்ளது என்பதால் இது பயனுள்ள முறையில் மின்சக்தியைச் சேமிக்க உதவுகிறது.

லாஸ் வேகாஸிலிருந்து 200 மைல்கள் தூரத்தில் உள்ள டோனோபா என்கிற ஊரில் மிக நெடிய காங்க்ரீட் ஸ்தூபம் ஒன்றில் நாற்புறமும் பெரும் சுருளாகக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றால் ஒரு 100 அடி குழாய் உஷ்ணப்படுத்தப்படுகிறது. இந்த உஷ்ணம் குவிக்கப்பட்ட சூரிய ஒளி மூலம் மின் சக்தியைத் தயாரிக்கும் முறை. இந்த உஷ்ணம் உப்பை உருக்கி 1050 டிகிரி வெப்பத்தில் அந்த உருக்கை வைக்கிறது. இதை எப்படிப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்பதைக் கட்டுரையில் காணலாம்.

இதர முறைகளையும் படித்தால் இவற்றில் பலவும் இந்தியாவில் பயன்படக் கூடியவை என்பது புலனாகும். நம்மிடமோ சூரிய வெப்பம் ஏராளமாக உள்ளது அதைப் பயன்படுத்துவதுதான் எப்படி என்று நாம் யோசித்துச் செயல்பட வேண்டும். தீர யோசித்துச் செயல்பட்டால் எது நம்மை வறுத்து எடுக்கிறதோ அதையே பெரும் வளமாக நாம் மாற்ற முடியும். செய்வோமா?

https://www.nytimes.com/2017/06/03/business/energy-environment/biggest-batteries.html


இலட்சிய சமுதாயம்

இந்த இதழில் டிஸ்டோபியா பற்றிய குறிப்புகளாகச் சேர்கின்றன. இந்தக் குறிப்பும் லட்சியம் இருண்டு போன ஓர் உலகு பற்றியது. ஆனால் இது புனைவுலகு இல்லை. இன்றைய உலகைத்தான் அப்படிச் சொல்கிறார் கட்டுரையாளர். [பாஸ்டன் ரெவ்யு ஒரு தீவிர இடதுசாரிப் பத்திரிகை, அதற்கு உலகில் எங்கும் நல்லதே கண்ணில் படாது. தினம் காலையில் புலம்பவோ, அல்லது எல்லாரையும் சபிக்கவோதான் அதற்குத் தெரியும் என்று சொல்வீர்களோ என்னவோ. இருந்தாலும் சமீபத்து நடப்புகளைப் பார்க்கையில் உலகெங்கும் டிஸ்டோபியாதான் பரவி வருகிறது என்று உங்களுக்கும் தோன்றவில்லையா என்ன? ]

நவீனத்துவமும், முதலியமும், பெரும் தொழில் துறைச் ‘சாதனைகளும்’ உலகம் பெரும் வளத்தை நோக்கிச் செல்கிறது என்ற பிரமையை 20 நூற்றாண்டின் நடுப் பத்தாண்டுகளில் நமக்குத் தோற்றுவித்தன. ஆனால் 1939 வரை அமெரிக்காவின் பெரும்பகுதி ட்ராலிகளும், கோவேறுகழுதைகளும், ஐஸ் பெட்டிகளும், கெரஸினும், தீர்வு இல்லாத பல வியாதிகளும் நிரம்பிய தண்டமான நாடாகத்தான் இருந்தது என்றே துவங்குகிறார் கட்டுரையை. ஆனாலும் ஒவ்வொரு நியூஸ் ரீலும், செய்தித்தாளும், ஒரு சில மாநகர்களில் மட்டும் எழுப்பப் பட்ட வானளாவிய கட்டடங்களும் புத்துலகம் உதித்து விட்டது என்ற கற்பனையை மட்டும் பரப்பிக் கொண்டிருந்தன.

இந்தப் பெரும் நகரக் கட்டடங்களுக்குக் காரணகர்த்தாவாக ஒருவர் இருந்தாரெனில் அது நார்மன் பெல் கெட்டிஸ் என்பவர். அவருடைய வாழ்வு, சாதனைகள் ஆகியனவற்றை எடுத்துரைக்கும் ஒரு வாழ்க்கைச் சரிதப் புத்தகத்தை இந்தக் கட்டுரை சீர் தூக்கிப் பேசுகிறது. நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கெட்டிஸ் ஆகாயக் கோட்டை கட்டும் ஒரு டிஸைனர் இல்லை. அவர் நாடகங்களுக்கு அரங்கங்களை உருவாக்கத் திட்டம் போட்டுக் கொடுத்தார், ஃப்யூச்சராமா என்கிற 1939 ஆம் வருடத்துக் கண்காட்சி அரங்குகளுக்குத் திட்டம் வரைந்தார், வீடுகளில் இன்று பயன்படுகிற எரிவாயுவைப் பயன்படுத்திச் சமைக்க உதவும் பெரிய ஸ்டொவ் (குக்கிங் ரேஞ்ச் என்று அழைக்கப்படுவன இவை) இவரது டிஸைனில் உருவானது.

இன்னும் என்னவெல்லாம் இவர் சாதித்தார் என்பன கட்டுரையை முழுதும் படித்தால் புலப்படும். புத்தக மதிப்புரைகள் இத்தனை ருசிகரமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோமா என்ன?

http://bostonreview.net/literature-culture/john-crowley-inside-every-utopia-dystopia


உலகம் அமேசானால் வாங்கப்படுகிறது

பப்ளிக் அஃபேயர்ஸ் பிரசுர நிறுவனம் பெர்ஸியஸ் புக்ஸ் என்கிற நிறுவனத்தின் உடைமை. பெர்ஸியஸ் புக்ஸ் நிறுவனத்தை ஹாஷெட் புக்ஸ் என்கிற இன்னொரு நிறுவனம் வாங்கி விட்டது. அந்த நிறுவனம் யாருடையது என்று தெரியவில்லை. ஆனால் இடது சாரி என்பது தெரிகிறது. யூதர்களுடையதாகவும் இருக்கலாம். வைன்ஸ்டைன் புக்ஸுடனும், நேஷன் புக்ஸுடனும் உடன்படிக்கை உள்ள நிறுவனம் என்று சொல்கிற அறிக்கையை இங்கே பார்க்கலாம்.

http://www.perseusbooks.com/

அமேஸானும் ஹாஷெட்டும் ஒருவரோடொருவர் மோதியிருக்கிறார்கள். அமேஸான் ஹாஷெட் பிரசுரப் புத்தகங்களை விற்பனைக்கு எடுத்துக் கொள்ள மறுத்திருக்கிறது. அது பற்றிய ஒரு விடியோ இங்கே.

ஆனால் இது 2014 இல். இன்று நிலைமை மாறி அமேஸான் மறுபடி ஹாஷெட் புத்தக நிறுவனத்தின் புத்தகங்களை விற்கிறது என்று தோன்றுகிறது. அல்லது பப்ளிக் அஃபேயர்ஸ் என்கிற ஹாஷெட் நிறுவனத்தின் பிரிவுப் பிரசுரத்து நூலை ஏன் இன்று விற்க வேண்டும்.

இந்த இரு நிறுவனங்களும் ஏதோ பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதை ஒரு விடியோ சானல் வெளியிட்டிருக்கிறது. அது குறித்த ஒரு விடியோ இங்கே:

நாம் நன்கு அறிய வேண்டிய பல தகவல்களை இந்த விடியோ பேசுகிறது.

Kristine Rusch என்பவர் புத்தகச் சந்தையில் நாம் என்ன காணலாம், எப்படி இயங்க வேண்டும், தானே பிரசுரிக்கும் எழுத்தாளர்கள் எப்படித் தம் புத்தகங்களை விற்கலாம் என்றெல்லாம் விளக்க ஒரு ப்ளாகைப் பிரசுரிக்கிறாராம். அவரே ஒரு அதிபுனைவு எழுத்தாளர்தான். அவர் தானும் பிரசுரிக்கிறவர்.

http://www.kristinekathrynrusch.com/

இங்கே ஒரு சுய பிரசுரகர்த்தர்களுக்கான வழிகாட்டல் கொண்ட ஆடியோ. (காணொளியாக இருக்க வேண்டியது. அப்படி இல்லை. வெறும் ஒலிதான் கேட்கிறது.)

இன்னொரு காணொளி. எல்லாரும் திரும்பத் திரும்ப மிலியன் மிலியன் என்றே ஜபிக்கிறார்கள். (ராமநாமத்தை விட) கிருஸ்து ஜபத்தை விட மிலியன் நாமாவளிக்குத்தான் மேற்கில், குறிப்பாக அமெரிக்காவில் அதிக ஆதரவு இருக்கிறது. இதை எல்லாம் வைத்துக் கொண்டு யாராவது ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.