kamagra paypal


முகப்பு » கட்டுரை, மருத்துவம்

கற்கால உணவும் தற்கால மனிதர்களும்

புதுமைவாதிகளாக தங்களைக் கருதும் மனிதர்கள் பழங்காலத்தை புகழ்ந்து பேசும் மனிதர்களை ஆதிகாலத்தவர் (நியாண்டர்தால்) என்று பரிகாசம் செய்வதுண்டு. ஆனால் முதியோரும் இளைஞர்களும் உடம்பைக் குறைப்பதற்கும் வலுப்படுத்தவும் வழி காட்டும் உணவு முறைகளில் காட்டும் ஆர்வத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. அமெரிக்காவில் தங்களுடைய உணவு முறையைப் பற்றி பேசுபவதற்கு வயது வரம்பே இல்லை என்று கூட சொல்லலாம். ஒரு ஃப்ரெஞ்சுப் பெண்மணி தொலைக்காட்சியில் பேசும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. எங்கள் நாட்டில் உணவை நாங்கள் ருசித்து சாப்பிடுகிறோம், அமெரிக்காவில் அதே உணவை மருந்து போல் நினைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்கர்கள் உணவை பற்றிப் பேசுவதிலும், படிப்பதிலும், தொலைக்காட்சியில் பார்ப்பதிலும் பாதி நேரத்தை செலவழித்து விடுகின்றனர் என்று சொன்னார். அது உண்மையாகத்தான் தோன்றுகிறது. மேலும், ஒரு புதிய உணவு முறையைப் பின்பற்றலாம் என்று நினைத்து ஒருவர் அதைத் தொடங்கும் முன்னரே அது சரியானதல்ல என்று பத்திரிகைகளோ, நண்பர்களோ அவரை சரிக்கட்டி விடுவார்கள். எல்லா உணவுத்திட்டங்களுமே தொடர்ந்து பின்பற்றுவதற்கு லாயக்கில்லாதவை என்பது யாருமே எந்த ஒரு உணவு முறையையும் ஆறு மாதங்கள் கூட பின்பற்றுவதில்லை என்பதிலிருந்தே கண்கூடாகத் தெரிகிறது. ஆகவே இந்த உணவு முறைகளெல்லாம் வருவதும் போவதுமாகத்தான் இருக்கின்றன.

சமீப காலத்தில் வெகுவாக அடிபடும் உணவு முறைகளில் ஒன்று குகைவாசி உணவு(கேவ்மேன்ஸ் டயட்) எனப்படும் பேலியோலிதிக் டயட் என்பதாகும். வலம் எனும் புதிய தமிழ் சஞ்சிகையை வாங்குவதற்காக வலைதளத்தை திறந்தபோது பேலியோ உணவைப் பற்றி வெளிவந்துள்ள புதிய புத்தகங்களுக்கான விளம்பரத்தை பார்த்தேன். தமிழர்களிடையேயும் இந்த உணவு முறை பிரபலமாகி உள்ளது என்று தெரிய வந்தது. பொதுவாக உணவைப் பற்றி நான் யாரிடமும் பேச்செடுப்பதில்லை. இதற்கான காரணங்களை முன் கூட்டியே சொல்லி விட்டேன். மேலும் இவ்வகையான உணவுகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள், என்னைப்போல் எதையும் சரிவரப் பின்பற்றாதவர்களைச் சற்றுத் தாழ்ந்தவர்களாகப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு. அதற்காகவே நான் எந்த உணவைப்பற்றியும் மற்றவர்கள் கேட்டால் மட்டுமே எனக்கு தெரிந்ததைச் சொல்வேன். ஆனால் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மேயோ மருத்துவ மனையின் மருத்துவர்களுக்கான மாத இதழில், பேலியோலிதிக் உணவினால் கிடைக்கும் நற்பயன்களைப் பற்றிய கட்டுரை என் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமன்றி, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

தாதுப் பொருட்களில் நம் உடல் நலத்திற்கு மிகவும் இன்றியமையாதது பொட்டாசியம் . ஆனால் அமெரிக்கர்களின் உணவில் இதன் அளவு மிகவும் குறைந்து விட்டது இதனால் இரத்த கொதிப்பு,மாரடைப்பு போன்ற இருதய வியாதிகளுக்கு இது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. ஒரு நபர் தினம் உட்கொள்ள வேண்டியது 4700 மில்லிகிராம் பொட்டாசியம். ஆனால் அமெரிக்கப் பெண்மணிகள் 2200 மில்லிகிராம் அளவும், ஆண்கள் 3026 மில்லிகிராம் அளவும் உண்கிறார்கள். ஆதி கால மனிதர்கள் உட்கொண்ட பொட்டாசியம் உப்பின் அளவு 15000 மில்லிகிராம் என்று தெரியவரும்போது, நமது உணவில் பொட்டாசியம் வெகுவாகக் குறைந்து விட்டது என்று தெரிகிறது. மேலும் நமது உணவில் சோடியம் குளோரைடு என்று சொல்லப்படும் சாதாரண உப்பின் அளவு பொட்டாசியத்தை விட மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது. ஆதிவாசிகள் உப்பை மிகக் குறைந்த அளவே உபயோகித்துள்ளனர். அவர்கள் உணவில் பொட்டாசியம், உப்பைவிட ஏழு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. இதற்கு காரணம் ஆதி மனிதர்களின் உணவில் பிரதானமாக இருந்தவை காய்,கனி, பச்சையிலை, கிழங்கு வகைகளே. இவையெல்லாவற்றிலும் பொட்டாசியம் சத்து மிக அதிகம் உப்புச் சத்து மிகக் குறைவு. தற்போதைய உணவு இதற்கு எதிர் மாறு. இந்த உணவு மாற்றத்திற்கு 10,000 வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த வேளாண்மைதான் அடிகோலியது.

எடை அதிகரிப்பு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கல், எலும்புத்தேய்வு போன்ற நீண்ட நாள் வியாதிகளுக்கு உப்பு அதிகமாகவும் பொட்டாசியம் குறைந்தும் உள்ள தற்கால உணவிற்கு பெரும் பங்கு உள்ளது. நாம் உண்ணும் பொருட்களுக்கும் நமது உடலின் சரியான இயக்கத்திற்கு தேவையான பொருட்களுக்கும் பொருத்தமில்லாமலிருப்பதே இதற்கு காரணம். நமது சிறுநீரகங்கள் தினம் 15 கிராம் பொட்டாசியத்தை 20 நாள் வரை உண்டால் கூட அதன் ரத்த அளவை ஒரே நிலையில் நிறுத்தி வைக்கும் சக்தி படைத்துள்ளவை. அதிக அளவு பொட்டாசியம் உணவில் சேர்ந்தால் கூட அதை சிறுநீரகங்களால் வெளிச் செலுத்த முடியும் என்று இதிலிருந்து தெரிகிறது.

முதலில் சிறுநீரகம் எவ்வாறு பொட்டாசியத்தின் அளவை கட்டுப்பாடோடு வைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். பொட்டாசியம் அதிகமாய் உள்ள உணவு வயிற்றை அடைந்தவுடனேயே உணர்விகள் (சென்சார்ஸ்) சிறுநீரகத்திற்கு பொட்டாசியம் அதிகமாய் உள்ளதை அறிவிக்கின்றன. உடனே சிறுநீரகத்தின் சிறுநீரை சேகரிக்கும் மேல் பக்க குழாய்கள் (ப்ராக்சிமல் டிஸ்டல் கலெக்ட்டிங் ட்யூபியுல்ஸ்) சோடியம் உப்பை உள்ளே ஈர்த்துக் கொள்ளாமல் கீழ் பாகத்திற்கு செலுத்துகின்றன.அதே சமயம் கீழ் பாகத்தில் நுழையும் பொட்டாசியத்தின் அளவும் அதிகரிக்கிறது. சோடியம் உப்பும், பொட்டாசியமும் இரண்டுமே அதிக அளவில் சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன. இது ரத்த குழாய் வழியாக செலுத்தப்படும் பொட்டாசியத்தை விட வேகமாக செயல்படுகிறது. அது மட்டுமல்லாமல், சோடியம் உப்பும் பொட்டாசியத்துடன் சேர்ந்து வெளியேறுவதால் பொட்டாசியம் சத்து அதிகமாய் உள்ள உணவு ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பொட்டாசியம் சத்து அதிகமாய் உள்ள உணவின் பயன்கள்

ரத்த அழுத்தம்

பொட்டாசியம் சேர்க்கை ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது; பொட்டாசியம் குறைவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்பதை பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிப்படுத்தியுள்ளன. D.A.S.H. (Dietary Approaches to Stop Hypertension) எனும் ஆய்வு 13/4 கோப்பை வேகவைத்த காய்கறிகள் அல்லது டென்னிஸ் பந்து அளவுள்ள 3 1/2 பழங்கள் (1700 மில்லிகிராம் பொட்டாசியம்) உள்ள உணவோடு 4 1/4 கோப்பை வெந்த காய்கறிகளோ அல்லது 8 1/2 பழங்கள் சேர்ந்த ( 4100 மில்லிகிராம் பொட்டாசியம்) உணவோடு ஒப்பிட்டு இரண்டாம் வகை உணவு ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைத்தது என்று சொல்கிறது.பொட்டாசியம் அதிகமாக சேர்ந்த உணவு ஆப்பிரிக்க இனத்தவரிடையே ரத்த அழுத்தத்தை குறைப்பதில் இன்னும் சிறந்து வேலை செயகிறது. மேலும், பொட்டாசியம் குறைந்தால், உப்பு சிறுநீர் வழியாக வெளியேறுவது குறைந்து உடலில் தங்கி விடுகிறது. இப்போதைய உணவில் பொட்டாசியம் குறைந்தும் உப்பு அதிகமாகவும் இருப்பதால் ரத்த அழுத்த நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பொட்டாசியம் குறைவினால் ரத்த குழாய்களின் சுவர்கள் இறுகி ரத்த அழுத்தத்தை அதிகமாக்குகிறது மூளை, தண்டுவடத்தைச் சூழ்ந்திருக்கும் திரவத்தில் உப்பு அதிகமாயும், பொ ட்டாசியம் குறைந்தும் இருந்தால் ஹைப்போதலாமஸ் எனும் மூளைப்பாகம் இயக்குநீர்கள் (ஹார்மோன்ஸ்) வழியாக ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி மூலம் தெரியவருகிறது.

பக்கவாதம்:

43,000 ஆண்களை 8 வருடங்கள் தொடர்ந்து கவனித்ததில், 4,300 கிராம் பொட்டாசியம் உள்ள உணவை உண்டவர்களிடையே பக்கவாதத் தாக்குதல், 2400 கிராம் பொட்டாசியம் உள்ள உணவை உண்பவர்களோடு ஒப்பிட்டபோது 62% குறைவாக இருந்தது. 12,7000 பேர் கொண்ட 11 ஆய்வுகளும் இதே முடிவுக்குத்தான் வந்துள்ளன. பொட்டாசியம் குறைவாக உள்ள உணவை உண்ட 9,800 பேரிடையே 19 வருஷ காலத்தியக் கவனிப்பில் பக்கவாதம் தாக்குவதற்கு 28 % அதிக வாய்ப்புள்ளது என்று இன்னொரு ஆய்வு சொல்லுகிறது. 50லிருந்து 79 வயதான பெண்மணிகளை 11 வருடங்கள் தொடர்ந்து கவனித்ததில், அதிக அளவு பொட்டாசியம் உள்ள உணவு பக்கவாதத் தாக்குதல் ஏற்படுவதைக் குறைப்பது தெரிய வந்தது. இப்பலன் ரத்த அழுத்தத்தை குறைப்பதினாலும், ரத்த குழாய்களில் கொழுப்பு அடைப்பைக் குறைப்பதினாலுமே என்று தெரிய வருகிறது..

எலும்புத்தேய்வு

காய்கறிகளும் பழங்களும் பொட்டாசியம் மட்டுமல்லாது பைகார்பனேட் என்ற உப்பையும் அதிக அளவில் கொண்டுள்ளவை. தற்கால மேற்கத்திய உணவில் இந்த உப்பு குறைவாகவும், அமிலச் சத்து அதிகமாய் உள்ள மீன், இறைச்சி, பாலாடைக்கட்டி போன்றவை அதிகமாகவும் உள்ளன. இந்த அமிலத்தை ஈடுகட்டுவதற்கு எலும்பில் உள்ள கால்ஷியம் வெளியேறுகிறது. இதனால் எலும்பின் வலு குறைகிறது. மேலும், காய் கனிகளிலுள்ள பொட்டாசியம் எலும்பை வலிமைப்படுத்துகிறது. பொட்டாசியம் அதிகமாய் உள்ள உணவை உண்ணும் 266 முதிய பெண்மணிகளினுடைய எலும்பு அடர்த்தி பொட்டாசியம் குறைவாக உள்ள உணவை உண்ணும் பெண்மணிகளின் எலும்பு அடர்த்தியை விட சிறந்ததாக உள்ளதாகத் தெரிய வருகிறது. உணவில் காய் கனிகளை சேர்ப்பதில் மூலம் எலும்புத் தேய்வை வெகுவாக குறைக்கலாம்.

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரில் கால்ஷியம் அதிகமாகவும், சிட்ரேட் என்ற உப்பு குறைவாகவும் இருந்தால் சிறுநீரில் கற்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அமிலச் சத்து அதிகமாய் உள்ள நவீன உணவு, சிறுநீரில் கால்ஷியத்தை அதிகரிப்பதின் மூலமும் சிட்ரேட் அளவை குறைப்பதின் மூலமும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை அதிகரிக்கின்றன. காய்கறிகள் பழங்கள் உண்ணுவதை அதிகரிப்பதின் மூலம் இதை தவிர்க்க முடியும் என்பது ஆராய்ச்சியின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிறுநீரக நொடிப்பும் பேலியோலிதிக் உணவும்

சிறுநீரகம் பழுதடைந்திருந்தால் பேலியோலிதிக் உணவில் சேர்ந்துள்ள அதிக அளவு பொட்டாசியத்தை வெளியேற்ற முடியாததால் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதிக அளவு பொட்டாசியம் இருதய நாடித் துடிப்பை குறைக்கும்.மிகுந்த அளவு பொட்டாசியம் நாடித் துடிப்பையே நிறுத்தி விடும். ஆனால் சிறுநீரகம் சேதமடைந்தவர்களுக்கு, காய் கனி நிறைந்த உணவினால் தனிப்பட்ட பலன்களும் உண்டு. சிறுநீரகம் சரியாகஇல்லாதவர்களுக்கு வைத்தியம் செய்யும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை புரதச்சத்து குறையாமலிருத்தல்,  பாஸ்ஃபரஸ் உப்பு அதிகமாகாமலிருத்தல், , அமிலத்தன்மை அதிகமாகாமலிருத்தல் ஆகியவையாகும்.

பாஸ்ஃபரஸ் உப்பு புரதத்துடன் இணைந்தே சிறுகுடலிலிருந்து ரத்தத்தில் சேர்கிறது. இறைச்சியில் உள்ள புரதத்தோடு சேர்ந்த பாஸ்ஃபரஸ் முழுவதுமாக ரத்தத்தில் கலக்கிறது.ஆனால் தாவர புரதத்தில் உள்ள பாஸ்ஃபரஸ் பைடேட் என்ற உப்பாக இருப்பதால் பாதி அளவே சிறுகுடலிலிருந்து ரத்தத்தில் சேர்கிறது. சிறுநீரக நொடிப்பு உள்ளவர்களிடம், சம அளவு பாஸ்ஃபரஸ் உள்ள மாமிசப் புரதத்தோடு, தாவரப் புரதத்தை உண்டவர்களை ஒப்பிட்ட போது, சைவ உணவு உண்டவர்களுடைய பாஸ்ஃபரஸ் அளவு அசைவ உணவு உண்டவர்கள் அளவை விட குறைவாகவே இருந்தது. இதனால் புரதச்சத்து நிறைந்த சைவ உணவு, சிறுநீரகம் சேதமடைந்தவர்களின் புரத அளவைப் பாதுகாப்பதுடன் பாஸ்ஃபரஸ் அளவையும் மிகுதியாகாமல் கட்டுப்படுத்துகிறது என்பது புலப்படுகிறது.

பழுதடைந்த சிறுநீரகங்கள் உடம்பில் உற்பத்தியாகும் அமிலத்தை வெளியேற்ற முடியாததால் உடம்பின் அமிலத்தன்மை (மெடபாலிக் அசிடோசிஸ்) அதிகமாகிறது. இதனால், புரதச்சத்து குறைதல், சர்க்கரை அளவு அதிகரித்தல், எலும்புத்தேய்வு, சிறுநீரகப் பழுதடைவு ஆகியவற்றிற்குக் காரணமாகிறது.இதைத் தவிர்ப்பதற்கு ரத்த பைகார்பனேட் அளவு 23-29 mEq/Lக்குள் இருக்க வேண்டும். இதற்காக. சோடியம் பைகார்பனேட் மாத்திரைகளை சிறுநீரக வியாதியுள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் இம்மாத்திகளிலுள்ள சோடியம் உடம்பின் தண்ணீரை கூட்டுவதால் நீர் வீக்கம் அதிகமாகிறது. சிலர் வயிற்றில் வாயு அதிகமாகி கஷ்டப்படுகின்றனர். இந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய ஒரு வழி காய் கனி உண்ணுதலை அதிகரித்தலாகும். சிறுநீரக வியாதி நாலாவது நிலையில் உள்ள எழுபது நபர்களில் ஒரு பாதியினர் சோடியம் பைகார்பனேட் மாத்திரைகள் மூலமாகவும் மற்றொரு பாதியினர் காய்கறி பழங்களை அதிகரிப்பதன் மூலமாகவும் ஒரு வருட காலத்திற்குச் சிகிச்சை பெற்ற பின் காய் கனிகளை அதிகரித்தவர்களின் பைகார்பனேட் அளவு, மாத்திரைகளை விழுங்கியவர்களின் பைகார்பனேட் அளவை விடச் சிறிதே குறைந்திருந்தது புலப்பட்டது.. அது மட்டுமல்லாமல் பொட்டாசியம் அதிகரித்திருந்த உணவினால் அவர்களுடைய ரத்த அழுத்தமும் குறைந்திருந்தது. பொட்டாசியம் அளவு ரத்தத்தில் சரியான நிலையில் இருந்தவர்களே இப்பரிசோதனையில் கலந்து கொண்டனர்.

சிறுநீரகத் தேய்வு மேலும் மேலும் அதிகரிக்கும்போது, ரத்தத்தில் பொட்டாசியம் அளவும் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்தாவிடில், முன் சொன்ன மாதிரி, இருதய ஓட்டததிற்குத் தீங்கு விளைவிக்கின்றது. பொட்டாசியம் அளவு இன்னும் மிஞ்சினால் இருதய ஓட்டமே நின்றுவிட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க பொட்டாசியம் அளவை அதிகரிக்கும் மருந்துகளைத் தவிர்ப்பதும், சிறுநீரகத்தைச் சேதம் செய்யும் மருந்துகளை சேர்க்காமலிருத்தலும் அத்தியாவசியம். இவற்றைக் கடைப்பிடித்த பின்னும் பொட்டாசியம் அளவு அதிகரித்தால், பொட்டாசியத்தை குடலிலிருந்து வெளியேற்றும் மருந்தை உட்கொள்ள வேண்டி வரும். கடந்த 50 வருடங்களாக இதற்காக உபயோகத்திலிருந்த ஒரே மருந்து சோடியம் பாலிஸ்டிரின் சல்ஃபோனேட் என்பதாகும். பெரும்பான்மையோரிடம் இம்மருந்து குடல் உபாதையை உண்டு பண்ணுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தால் குடலையே அரித்து விடும் அபாயம் உள்ளது. இதனால் இம்மருந்தைத் தொடர்ந்து எடுத்து கொள்வது சிலாக்கியமில்லை. சமீபத்தில் பட் டிறோமெர், சோடியம் ஜிர்கோனியம் சைக்ளோசிலிகேட் என்ற இரண்டு மருந்துகள் உபயோகத்திற்கு வந்துள்ளன. இவ்விரண்டுமே முதல் மருந்து போல் குடலை வாட்டுவதில்லை. தொடர்ந்து எடுத்துக் கொள்ள வசதியாய் உள்ளது. மேலும் பொட்டாசியத்தை அதிகரிக்கும் மருந்துகளையும் அவசியமிருந்தால் தொடர்ந்து எடுத்துக்கொள்ள முடிகிறது. இந்த புதிய மருந்துகளைப் பரிசோதனைக்குட்படுத்தியபோது உணவில் பொட்டாசியம் அளவைக் குறைக்கவில்லை என்பது முக்கியமான ஒரு விஷயம். ஏனெனில், இப்புதிய மருந்துகள் மூலம் பொட்டாசியம் அதிகமாய் உள்ள காய் கனி வகைகளை சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதால் சிறுநீரக வியாதியுள்ளவர்களின் வாழ்க்கைத் தரம் செம்மைப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் இருதய நலமும் மேம்பட வாய்ப்புள்ளது.

முக்கியமான கட்டுரைக் குறிப்புகள்:

பொட்டாசியம் அதிகமாய் உள்ள பேலியோலிதிக் போன்ற உணவுவகைகள் பக்கவாதம், ரத்த அழுத்தம்,சிறுநீரகக் கற்கள், எலும்புத்தேய்வு போன்ற வியாதிகளை கணிசமாகக் குறைக்கலாம் என்பதற்கு வேண்டிய அளவு தகவல்கள் உள்ளது.

மேற்கத்திய நாட்டு உணவில் பக்குவப்படுத்தப்பட்ட உணவின் பங்கு அதிகமாகவும், சோடியம் உப்பு அதிகமாகவும், பொட்டாசியம் சத்து குறைந்தும் காணப்படுகிறது.

நமது சிறுநீரகங்கள் தற்போதைய பொட்டாசியம் அளவை விட பன்மடங்கு அளவு பொட்டாசியத்தை வெளியேற்றும் தகுதி படைத்துள்ளது. அதனால் பொட்டாசியம் அளவு ரத்தத்தில் அதிகமாகிவிடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை.

பொட்டாசியம் அளவை உணவில் அதிகரிப்பதினால் பயக்கக் கூடிய நன்மைகள் சிறுநீரகம் பழுதைந்தவர்கட்கு இன்னும் அதிகம் ஆனால் பொட்டாசியம் அளவு ரத்தத்தில் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பும் இவர்களிடையே அதிகம்.

சிறுநீரகம் பழுதடைந்தவர்களுக்கு ரத்த அழுத்தத்திற்காக கொடுக்கப்படும் ஒரு மருந்து வகை பொட்டாசியத்தை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் அவர்களது உணவில் பொட்டாசியத்தை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

சமீபத்தில் நீண்ட கால உபயோகத்திற்காக வந்துள்ள பொட்டாசியம் அளவைக் கட்டுப்படுத்தும் இரண்டு மருந்துகள் சிறுநீரக வியாதிக்காரர்கள் உணவில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், அவர்களின் உடல்நலத்தின் தரத்தையும், இருதய நலனையும் சிறப்புற செய்வதோடு சிறுநீரகத் தேய்வு வேகத்தையும் குறைக்க முடியும் என்று இக்கட்டுரை கூறுகிறது.

ஆதாரம்: ACHIEVING THE BENEFITS OF A HIGH-POTASSIUM, PALEOLITHIC DIET,WITHOUT THE TOXICITY BY BIFF F. PALMER & DEBORAH J.CLEGG,Ph.D; MAYO CLINIC PROCEEDINGS APRIL 2016:91(4) 496-508

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.