kamagra paypal


முகப்பு » சிறுகதை

செங்காந்தளின் ஒற்றை இதழ்

ஊரைச்சுற்றியுள்ள சாமிகளுக்கு ஆடும்,கோழியுமாகக் கொடுத்து ஊர்மணக்கும் மும்மாரியின் மூன்றாம் காலகட்டம்.

மழைபெய்து வெள்ளம் நிதானித்திருந்தது. பிடுங்கி நட்ட நாற்றுகள்  தலையெடுத்து மென்னிளம் பசுமையால் கொல்லிமலையின் அடிவாரக்காட்டையடுத்த விளைநிலங்கள் முழுவதும் போர்த்தப்பட்டிருந்தன.

தெற்கு வாய்க்கால் கரையில் மெய்யாயி அம்மாயி  அமர்ந்து கால்களை நீருக்குள் விட்டிருந்தாள்.இளம்சிகப்புக் கல்பதித்த பாம்படம் நீண்டகாதுகளில் ஊஞ்சலாட கொல்லிமலைக் குன்றுகளில் பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.அவளின் இரண்டு பசுக்கள் அறுத்துப் போட்ட புல்லை, “நறுக்க்..நறுக்க்..”கென மென்று கொண்டிருந்தன.

வடக்கு தெற்காக கண்களுக்கு எட்டும்வரை நீண்டிருந்த மலைத்தொடர் மழை தந்த பசுமையில் சிலிர்த்திருந்தது.ஒவ்வொரு மரத்திலும், செடிகொடிகளில், புல்பூண்டுகளி்ன் இளந்தளிர்களிலிருந்து சொட்டிய நீரும் சேர்ந்த மழையோடைகள் மலையின் கண்ணீர் போல வழிந்து ஆற்றில் சேர்ந்து பல வாய்க்கால்களில் பிரிந்து மீண்டும் ஆற்றில் கலந்துகொண்டிருந்தன.

தாண்டவன் தாத்தா வீட்டைவிட்டு இறங்கியபின் இந்தச் சில மழைகாலங்களில் இதுவே மழை பொய்க்காத காலம்.அவர் இல்லாத முதலிரண்டு நாட்களில் சொல்லாமல் சென்றவர், அவரே வரட்டும் என்ற கோபம் வீட்டிலிருந்தது.

மூன்றாம்நாள் சொந்தங்கள்,தெரிந்தவர்களுக்கு அலைபேசியில் மகன்கள் இருவரும் விசாரிக்கத் தொடங்கிப் பதட்டமானார்கள்.

“வந்திடும்….” என்றிருந்த அம்மாயியின் முகம் ஐந்தாம் நாளில் இருளத்தொடங்கியது.

வயசுப்பயல்கள் கோயில்கள், ஆறு, ஓடை, மலையில் தெரிந்த இடங்கள் என்று நாள்கணக்கில் இருசக்கர வாகனங்களில் பறந்தார்கள்.

“அய்யனைப் பாத்தீங்களா?” என்று உறங்குகையிலும் பயல்களின் குரல்கள் முணுமுணுத்தன.

மருமகள்கள், “கொஞ்சமாச்சும் மனசுல ஈரமுள்ளவரா? இந்தவயசுல இப்படி பரதேசம் போயிட்டாரே…ஆம்பிளைகளுக்குப் போகலாம்.பொம்பிளய அப்படி நெனச்சா?” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் பின், “இனிஎன்ன பண்ண? நம்மளும் பொழப்பப் பாக்காம?” என்று அசந்தார்கள்.

அம்மாயியிடம் மேற்கே மலையிறங்கிய மலையாளக் கவுண்டர் ஒருவர்,   “அம்மாவாசை அன்னக்கி இந்த வழி தாண்டவன பாத்தனே!” என்று சொன்னார்.

“அம்மாசி அன்னைக்கு தானே அது இறங்கினதும்?!” என்று அம்மாயி மலையங்காட்டுக்குள் புகுந்தாள்.

இருட்டி வெகுநேரத்திற்கு பிறகு அவளைப் பிடித்த பேரன்கள் வீட்டில் வந்து,  “ஒருத்தருக்கே இன்னும் முடியல, நீயுமா?” என்று கத்தினார்கள்.

“இறங்கிப்போன நாள்ல்ல இருந்து அத கண்ணுலப் பாத்தேன்னு ஒத்த ஆளு இன்னக்கிதானே சொல்லியிருக்காரு..”என்று நெஞ்சிலடித்துச் சுவரில் சாய்ந்துகொண்டாள்.

அன்றிலிருந்து மெய்யாயி அம்மாயியின் அனைத்து சாமிகளும் மேற்குபக்கம் நோக்கு கொண்டன.அவள் வீட்டில் பொழுது சாய்ந்தும் இல்லையெனில் அடிவாரவயலுக்கு ஆள்போயிற்று.

இதை முதலில் துவங்கியது நெலாப்பொட்டுக்காரஅம்மா, “ இன்னும் எதுக்கு எல்லாத்தையும் போட்டுகிட்டு இருக்கணும்?” என்றாள். அனைவருக்கும் முதலில் கேட்க ஒருமாதிரி இருந்தாலும் நாட்கள் செல்லச்செல்ல சரியென்றே தோன்றியது.

வேலையில்லாத நாட்களில் வாயை மெல்ல கிடைத்ததை விட்டுவிட மனசில்லை ஊரின் வாய்களுக்கு. “அவரே இல்ல…யாருக்குன்னு தாலி?”…

மகன்கள் கேட்டும் கேட்காதது போல நடந்தார்கள். அம்மாயியைத் தேடச் சென்ற ஒருநாளில் மருமகள், “ மாமா இருக்குறாருங்கற நெனப்புல தானே மேற்கப் போய் வாய்க்கா, வரப்புல, மலையில நிக்கிறாங்க?…” என்றாள்.

“அதனால..”என்று சீறிய இளையமகனிடம்  இன்னொரு மருமகள், “ சும்மா குதிக்க வேணாம்.ஊர்ஒலகத்துல நடக்காததா..?”என்றாள்.

சொந்தபந்தங்களும் விட்டத்தை, வானத்தை என்று பார்த்துக்கொண்டு நேர்நோக்கைத் தவிர்த்து மகன்களிடம், அம்மாயியின் திருமண மங்கலங்களைக் கலையும் சடங்கை நடத்தச் சொன்னார்கள்.

“அம்மாகிட்ட என்னன்னு சொல்ல?” என்று கலங்கியவர்களிடம் நெருங்கிய சொந்தங்கள் வசதிப்பட்ட ஒருநாளில் வருவதாய் சொன்னார்கள் .

அந்தநாளில் வீட்டுமுற்றத்தில் வயல்காட்டையும், வராதமழையையும், கிணற்றையும் துணைக்கழைத்து பேசிக்கொண்டிருந்தார்கள். அம்மாயி திண்ணையில் தூணில் சாய்ந்து வேம்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.மெல்ல, பேச்சு மாறியது.

“தாண்டவ பெரியப்பா எப்பேர்ப்பட்ட திடமனசுக்காரர்..காஞ்சாலும்,பேஞ்சாலும் மனகொலைய மாட்டாரு. காஞ்ச வெள்ளாமையில விட்டத ,பேயுற வெள்ளாமையில பிடிப்பம் மாப்ள ன்னு சிரிக்கறவரு!”என்று பேச்சு அவரைச் சுற்றி வந்ததும்,அம்மாயியின் கண்களும் அவர்களைச் சுற்றிவந்தது.

“நெல்லு தாள்போர் அடிக்கிறது மாறி சுத்திச்சுத்தி வாரீங்க. வெளியூர்க்காரன் ரெண்டுபேரும் பஸ்ஸ பிடிக்க வேணாமா?…” என்றாள் நெலாப்பொட்டுக்காரம்மா.

“இந்தாத்தா…” என்று அம்மாயியைப் பார்த்த காளிங்கன் திணறி அங்கிருந்தவரிடம் தண்ணீர் கேட்டு திரும்பிக் கொண்டார்.

“அத்த.. சொல்றேன்னு தப்பா நெனக்காத…” என்ற வெள்ளையன் இருமிக்கொண்டு துண்டால் வாயை மூடினார்.

“இங்கபாரு மெய்யாயி…ஊரக்கூட்டியெல்லாம் ஒன்னும் வேணாம்…பொழுது மொளக்கும் முன்ன நெறசொம்பு பாலில மஞ்சகயித்த கழட்டி போட்டுடு. நல்லதுக்கோ,பொல்லாததுக்கோ.. எந்தக் கணக்கிலயும் நம்மகணக்கு மூணு பருவந்தான். மாமா வீட்டவிட்டு இறங்கி அம்மாசி,முழுநெலா கணக்கெல்லாங் கடந்து சுழச்சிக்கணக்கும் வந்துருச்சி. நமக்குன்னு இல்லாட்டியும் நாலுபேரு உண்டுல்ல..”என்ற நெலாப்பொட்டு அம்மாளின் குரல் ஆளில்லா இடத்திலெனத்  தெளிவாகக் கேட்டது.

திண்ணையின் கீழே காலைப்போட்டு ஆட்களைப் பார்த்து அமர்ந்தாள் அம்மாயி.

“ஏவீட்டாளுக்கு நீர்மால எடுக்கப் போனது யாரு?”

“தீப்பந்தம் பிடிச்சக் கை எங்க?”

“பாடைத்தூக்கினத் தோளு எது?”

“கொல்லிவச்ச மகராசன் எவன்?”

மீண்டும் அவர்கள் மனசுகூட்டி வாதம் துவங்குமுன் அம்மாயி,

“இது எம்மனசுக்கு மட்டும் உண்டான ஒண்ணு. கழுத்துல மாட்டிருக்கணுமா?கழட்டி எறியணுமாங்கறது…” என்றபடி எழுந்தவள் தாழ்வாரக் கூரையிடித்துத் தள்ளாடினாள்.

தாவிப்பிடித்த மருமகள் அடிவயிற்றிலிருந்து வந்த கேவலை அடக்க தன்வயிற்றை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டாள்.

அவள் கையை உதறி , “ஒம்மாமன் என்ன செத்தா போயிட்டான்?” என்றபடி அம்மாயி வாசலில் நடந்தாள். பின்னால் பெண்கள்குரல்கள் மெல்ல ஒலித்தன.

சேலைக்கொசுவம் பின்புறம் தளர்ந்தாட  புளியமரத்தைக் கடந்து மாட்டுக்கொட்டகைக்குச் செல்கையில் அம்மாயியின் மனம் ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு ஓடியது.

அந்த காஞ்சகாலத்துலயே நெல்லஞ்சோறு போட்டு புளியம்பூ ரசம் ஊத்தி, செவந்த தறிச்சேலையில பண்ணுன கல்யாணம்.இந்த வாசல்ல ஒக்காந்தி சோறு திங்கயில,மூணாந்தடவ மெய்யாயி சோறு கேட்கவும்,

“ஏம்புள்ள, நெல்லஞ்சோறு புடிக்குமா? இல்ல நெல்லஞ்சோறு தின்னு நாளாச்சா?” என்று சிரித்த அவரிடம் இவள்,

“ரெண்டுந்தான். அதுகிடக்கட்டும் நீ வயித்துக்குப் போட்டு எத்தனநாளாச்சு? அஞ்சுவாட்டி கூப்பிட்டுட்ட!” என்று முதன்முதலாக பேசிச்சிரித்ததை நினைத்துக்கொண்டு செவலைக்கு இரண்டுகை நிறைய கூலத்தை அள்ளிப்போட்டாள்.அது முரட்டுநாவை நீட்டி பச்சைக் குத்தியிருந்த அம்மாயியின் புறங்கையை நக்கியது.

பின்நாட்களில் இதைப்பற்றி யாரும் வாயெடுக்கவில்லை. அம்மாயியும் யாரும் தேடிவர இடம் கொடுக்காமல் மேற்கிலிருந்து வீடுவந்து சேர்ந்தாள்.

மகன்கள் வீட்டை இடித்து இரண்டாகக் கட்டிக்கொண்டிருந்தார்கள்.சாலை ஓரத்திலிருந்த வயல் காலிமனையாக்கி விற்கப்பட்டிருந்தது.வாசலின் மரங்கள் வெட்டப்பட்டு இடம் வீட்டோடு சேர்க்கப்பட்டது.

அவர் இறங்கிய இந்த நாளாவது சுழற்சியில் நல்லமழை.குறைமழையில் பூக்கத்தயங்கிய புல்லு பூண்டெல்லாம் பூத்துநிற்கும் கார்த்திகை இது.பச்சைப்பூக்களென செறிந்து விரிந்திருந்தன புற்கள்.வானம் மெல்ல மழை ஓய்ந்து தெளிந்திருந்தது.

அம்மாயி அமர்ந்திருந்த வரப்பு செதுக்கப்பட்டு மண்தடவி ஈரமாக சுத்தமாயிருந்தது.நாற்று போடக் காத்திருக்கும் வயல்.

“என்ன பண்ணினாலும் ரெண்டுபொழுதுல புல் எட்டிப்பாத்துராது?” என்று நினைத்திருந்த அம்மாயின் கால்களில், வருந்தண்ணியோடு தானும்வந்து மோதிய விரலிப்பூவைக் கையிலெடுத்தாள்.

சிகப்பும்,மஞ்சளும் சரிக்குச் சரியாய் இணைந்திருந்த இதழ் நீண்டு சுருண்டிருந்தது.ஐந்து நீண்ட இதழ்கள்.

“புல்லுபூக்குது பாரு மெய்யா! நல்ல பட்டம்.விதைக்கறதெல்லாம் தப்பாம மொளக்கும்” என்றவரிடம்,மடைவாய்த் திருப்பிய மண்வெட்டியை வரப்பில் போட்டுவிட்டு வந்து,“இது புல்லா?செடியில்லயா!?” என்று தான் கேட்டதை நினைத்துக்கொண்ட அம்மாயி இளம்பசுமைக்காம்பை கையில் பிடித்தபடி மேற்கே கொல்லிமலையைப் பார்த்தாள்.

மலையின் பின்னால் ஆதவன் மறைந்திருந்தான்.அவனின் ஒளிக்கரங்கள் விரிந்து செவ்வெளிச்சமாகப்பரவி மலையை சூழ்ந்து வியாபித்திருந்தது.

Exif_JPEG_420

2 Comments »

  • valava.duraiyan said:

    கதையில் உள்ள சில மறைபொருள்களால் கதை சிறக்கிறது. ஆனாலும் வாசகனுக்குச் சில இடங்கள் குழப்பம் ஏற்படுத்துகின்றன. அம்மாயி கடைசியில்பேசுவது தன் மனத்திடம்தானே? யார் வீட்டிற்கு மலையிலிருந்து இறங்கி வந்து சேர்ந்தாள்?

    # 16 May 2017 at 6:21 am
  • Kamaladevi said:

    நன்றி நண்பரே.மனதிடம் தான் பேசுகிறார்.தன்வீட்டிற்கு வருகிறார்.

    # 18 May 2017 at 10:33 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.