அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – இறுதிப் பகுதி

பொதுவாகவே, புறவயவாதிகள் தனிமையானவர்கள் என்றும் அவர்களால் சமுக நீரோடையில் கலக்க முடியாது என்றும் ஒரு கருத்து உண்டு. இந்த கருத்து முற்றிலும் தவறானது இல்லை. ஆனால், இதை ஒரு பொதுக் கருத்தாக வைக்க முடியாது. புறவயவாதிகள் ஒரு குழுவாக இயங்கும் தன்மையும் கொண்டவர்கள். அவர்களிடம் குழு மனப்பான்மை சார்ந்திருக்கும் வாழ்வியல் உத்தியில்லை.

இதையே ஜான் கால்ட் கதாபாத்திரம் Atlas Shrugged-இல் செய்கிறது. ஜான் கால்ட், இரண்டாம் தர ஆளுமைகளிலிருந்து அமெரிக்காவை விடுவிக்க அமெரிக்காவின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் முதலாளிகளை ஒரு அணியாக திரட்டி Strike செய்கிறான். எப்படி என்றால் இந்தியாவில் டாட்டாவும், அம்பானிகளும், சில ஐ டி கம்பெனிகளும், மொத்த விவசாயிகளும் மற்றும் தேசத்தின் வலிமைக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து தொழில் அதிபர்களும் நாளை முதல் இந்த கம்பெனியை நாங்கள் நடத்தப்போவதில்லை என்று உற்பத்தியையும் நிறுத்திவிட்டு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ள முயன்றால் இந்தியா என்ன ஆகும் ? Atlas Shrugged நாவலின் கருவும் இது தான். இந்த நாவலுக்கு முதலில் The Strike என்று தான் தலைப்பு வைப்பதாக நினைத்தாராம் அய்ன் ராண்ட். இப்படி குழு சேர்ப்பதற்காக அவன் அமெரிக்காவின் அதி முக்கியமான படைப்பூக்கம் கொண்ட முதலாளிகளை, கலைஞர்களை, ஆராய்ச்சியாளர்களை, பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறான் – அவர்களைத் தன் திட்டத்திற்குச் சேர்க்கிறான். அதுமட்டுமல்ல, அப்படி பட்டவர்கள் ஒரு பாதுகாப்பான ரகசிய இடத்தில் மறைந்து வாழ்ந்திருப்பார்கள். பின்னர் ஒரு நாள் அவர்கள் வெளிவந்து தங்கள் தேவையை தேசத்திற்கு நிரூபித்து தேசத்தைத் தொடர்ந்து நடத்த முற்படுவார்கள்.

புறவயவாதிகள் எல்லோருக்கும் நண்பர்களாக இருப்பவர்கள் அல்லர். அவர்களுடைய நட்பு முதலான எல்லா உறவுகளுமே மதிப்பீடு சார்ந்ததாகவே அமைவதால் அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்த சிலருடனே நண்பர்களாக இருக்கிறார்கள். மிகச்சிறிய வட்டத்திற்குள் வாழும் அவர்கள், அந்த வட்டத்திலேயே முழுமையடைகிறார்கள். அவர்களுடைய நட்பிற்கும் உறவுகளுக்கும் ஏதோ ஒரு காரணமோ நியாயமோ இருக்கின்றது.

இவர்கள் சகமனிதர்களுடன் கொள்ளும் உறவு நிலையில் எந்த விதமான சரணாகதியோ, சார்பு நிலைகளோ தோற்றுவிக்கப்படுவதில்லை. அதுவே காதலிலும் இருக்கின்றது. அப்படிபட்ட சார்பு நிலைகளைத் தோற்றுவித்தல் மனிதனை முற்றிலுமாக அழித்துவிடும் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள். அவ்வாறு சக மனிதனை அழிக்கும் செயலில் அவர்கள் ஒரு போதும் ஈடுபடுவதில்லை.

Fountain Head-இல் Howard Roark அவனுக்குத் தேவையான ஒரு சிற்பியை தன்னுடைய ப்ராஜெக்டிற்கு பணிக்கு அமர்த்திக் கொள்கிறான். அப்போது அவன் சொல்லும் காரணம்.

“You’re a God-damn fool. You have no right to care what I think of your work, what I am or why I’m here. You’re too good for that. But if you want to know it – I think you are the best sculptor we have got. I think it, because your figures are not what men are, but what men could be – and should be. Because you’ve gone beyond the probable and made us see what is possible, but possible only through you. Because your figures are more devoid of contempt for humanity than any work I have ever seen. Because you have a magnificent respect for the human being. Because your figures are the heroic in man. And so I didn’t come here to do you a favor or because I felt sorry for you or because you need a job pretty badly. I came for a simple, selfish reason – the same reason that makes a man choose the cleanest food he can find. It’s a law of survival, isn’t it? – to seek the best. I didn’t come for your sake. I came for mine.”

ஒருவனை பணிக்கு அமர்த்துவதும் சம்பளம் கொடுத்தலும் கூட அவனுக்கு செய்யும் உதவி அல்ல. ஒரு மனிதனின் ஆற்றலின் அங்கீகாரமே அது. ஒரு மனிதனின் ஆற்றலே பிரதானப்படுத்தப்படுகிறது, பசியோ, உறவோ, அவனது குடும்பமோ – எதுவுமே இல்லை. அத்தகைய ஆற்றலின் அடிப்படையில் பணியமர்த்தலே ஒரு மனிதனுக்கு தரப்படும் கௌரவமாக இருக்க முடியும்.

யோசித்துப் பாருங்கள், உங்கள் பசிக்காகவும் உங்கள் குழந்தைகளின் நோய்க்காகவும், குடும்பத்தின் வறுமைக்காகவும் உங்களுக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அது எப்படி உங்களுக்கு வழங்கப்பட்ட பணியாக இருக்க முடியும் ? அது பசிக்கும், நோய்க்கும், வறுமைக்கும் கிடைத்த வெற்றியே அன்றி மனிதனுக்கு கிடைத்த வெற்றி அன்று. இந்த பசியோ, நோயோ, வறுமையையோ நீங்கள் சாராதிருந்தால் உங்களுக்கு அந்த வேலை கிடைத்திருக்காது. உங்கள் திறமைக்கு வழங்கப்படும் பணியில் தான் உங்களால் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்ற முடியும்.

தான் சார்ந்த சமுகம் தனக்கு உதவாத சமயத்தில் உதவிகளை தட்டிப் பறிக்கும் ஒரு உத்தியாகவும், உதவி என்ற உரிமையைக் கோரலும், சமுகத்தின் ஏற்றத்தாழ்வு நிலைகளில் சமநிலைகள் தோற்றுவித்தலின் பொருட்டு மேடுகளிலிருந்து எடுத்து பள்ளத்தை நிறைக்கும் போராட்டமாகவும் பல சமயம் கலகத்தின் குரல் ஒலிக்கின்றது. இவ்வகைக் கலகங்களை நாம் நம்முடைய குடும்பங்களிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். வேலைக்கு போகும் அண்ணன் வேலைக்கு செல்லாத (கிடைக்காத) தம்பியை பாதுகாக்க வேண்டும் என்பது ஏறக்குறைய எழுதப்படாத சட்டம் – அவ்வகையிலான உதவிகள் மறுக்கப்படும் போது நமது கலாசாரமும், குடும்ப கௌரவமும் முன்னின்று அவ்வகையிலான உதவியை தம்பிக்கு பெற்றுத் தரும். சரி அப்படியெனில் புறவயவாதம் உதவுதலை எதிர்கிறதா ? இல்லை, ஆனால் குடும்ப கௌரவத்திற்காகவும், கடமையாகவும் தம்பிக்கு உதவுதலை எதிர்க்கிறது. இவ்வகை உதவிகள் பிறரை அடிமைப்படுத்தும் ஒரு உத்தியாக நிர்பந்திக்கப்படும் போக்கை எதிர்க்கிறது.

சாதரணமாக ஒரு வாழ்நாளில் ஒரு சராசரி மனிதன் எதிர் கொள்ளவேண்டிய சிக்கல்களும் அவற்றை எதிர்கொள்ள அவன் மேற்கொள்ள வேண்டிய சமரசங்களையும் கருத்தில் கொண்டால் புறவயவாதம் என்பது ஒரு கற்பனாவாதம் என்றோ மேட்டிமைத்தனம் என்றோ அதை எளிதாக நிராகரித்துவிடலாம். ஆனால் புறவயவாதத்தை ஒரு தனிமனிதனின் வாழ்வில் பொருத்திப் பார்த்து ஒதுக்கிவிடுதல் சரியான அணுகல் ஆகாது.  அதை ஒட்டுமொத்த சமுகத்திலும் பொருத்திப்பார்க்க வேண்டும்.

புறவயவாதம் மனிதனை தன்னலவாதியாக அன்பற்ற மிருகமாக மாற்றிவிடும் அபாயம் உண்டு என்ற கருத்தும் உண்டு. ஆனால், புறவயவாதத்தினைப் புரிந்து கொண்டவர்களால் சுயஎழுச்சி கொண்டு பிறரை பகடைக் காயாக்கும் தன்னலப் போக்கினைக் கைகொள்ள முடியவே முடியாது. ஏனெனில் புறவயவாததின் அடிப்படையாக மனித உரிமை இருக்கிறது. அதை மீறி எதுவுமே செய்ய முடியாது. உதாரணத்திற்கு, நான் தொழில் முனைகிறேனென்றால் என்னுடைய தொழிலை விரிவு செய்ய முனைதல் மட்டுமே என் பணியாக இருக்கும். சந்தையில் மற்றவருக்கு ’எதிராக’ ஒரு பண்டத்தை அறிமுகப்படுத்தவும் விளம்பரம் செய்யவும் வியாபாரம் செய்யவும் உரிமை உண்டு. மற்றவரின் பண்டத்தைக் காட்டிலும் என்னுடைய பண்டத்தைப் பல ஆயிரம் மடங்கு சிறப்பானதாக்க முயற்சிகள் மேற்கொள்ள எனக்கு உரிமை உண்டு. என்னுடைய பண்டம் சிறந்தது என்ற காரணத்தால் மற்றவரின் வியாபாரம் பாதிக்கப்பட்டால் அதன் முழுப்பொறுப்பும் மற்றவரையே சாருமே அன்றி என்னைச் சாராது – ஆனால் மற்றவரின் உற்பத்திக்கோ வளத்திற்கோ சேதம் விளைவித்தலின் மூலம் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது என்பது புறவயவாதத்திற்கு எதிரானது. இரண்டு வகையிலும் மற்றவரின் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். இந்த இரண்டில்  எது சுயநயலமானது என்பது படிக்கும் போது உங்களுக்கே புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். தன்னுடைய சுதர்மமான வியாபாரத்தைச் செம்மையாகவும், நேர்மையாகவும் நடத்துததலைக் கைவிட்டு  அடுத்தவரின் தர்மமான, அவரின் வியாபாரத்தை காக்க முற்படுவது ஒருவன் தனக்குத் தானே செய்யும் மிகப்பெரிய அநீதி. பிறருக்குத் தீங்கிழைக்க உரிமையில்லாதவனுக்கு முதலில் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்ளும் உரிமையும் கிடையாது.

தன் சமுகத்தின் கட்டுப்பாடுகளிலிருந்தும் தன்னை பீடிக்கும் உணர்வு நிலைகளிலிருந்தும் முழு சுதந்திரம் அடைந்து விட்ட ஒரு வாழ்வியலை முன்னிறுத்தும் சித்தாந்தமாகவே புறவயவாதம் பார்க்கப்படல் வேண்டும். ஆனால் புறவயவாதம் நிகழ்காலத்தில் ஒருமித்த குரலோடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை, எந்த ஒரு தத்துவத்தைப் போலவும். காரணம் இருக்கிறது. புறவயவாதக் கொள்கைகள் மனிதனின் ஆற்றலை முன்னிறுத்தி நமது சமுகத்தில் அறமாக முன்னிறுத்தப்பட்ட பரிவு, ஈகை போன்ற கொள்கைகளை புறம் தள்ளுகிறது. இது சமுக சிந்தனையோட்டத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பதை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்.

இந்த சிந்தனையோட்டத்தில் வீழ்ச்சிமுனைகளே இல்லாமல் இல்லை. புறவயவாதம் ஒரு துருவம். ஆனால் துருவத்தில் வாழ்தல் என்பது எத்தனை பேருக்கு சாத்தியம்? இன்றைய சமுக அமைப்பில், புறவயவாதத்தை வாழ்க்கை நெறியாக ஒருவர் கொண்டால் அவர் இந்த சமுகத்தால் பழிவாங்கப்படுவராகவே ஆகிறார். ஒருவரால் தன்னுடைய சுதர்மத்தை எந்த காலத்திலும் கைவிடாதிருத்தல் சாத்தியமேயில்லை என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் சமவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது மலைமுகட்டின் அழகு தெரிவதில்லை தான். அந்த மலை முகட்டில் என்ன இருந்து விடப்போகிறது என்று நாம் நிராகரிக்கும் போது அந்த மலை முகட்டை நாம் அடைய முடியாது என்ற நம் உள்மனத் தோற்றத்தை தீவிரமாக ஏற்படுத்திக் கொள்கிறோம். புறவயவாதம் உலகையே மாற்றி விடும் என்று நான் இறுதியாக சொல்லவில்லை – எந்த விதமான ஒரு சித்தாந்தத்தைப் போலவும் காலத்திற்கு ஏற்றார் போல அதன் பொருத்தமும் மாறும் – மக்களின் மனநிலைக்கு ஏற்ப ஏற்கப்படும் அல்லது தூஷிக்கப்படும். ஆனால் அதிலிருந்து நம் வாழ்க்கைக்கு நாம் எடுத்துக் கொள்ள நிச்சயம் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் அய்ன் ராண்டின் பக்கங்களை எடுத்துச் செல்லுங்கள் – ஹோவார்ட் ரோர்க்காகவோ ஜான் கால்ட்டாகவோ அவை உங்களை மாற்றுகிறதோ இல்லையோ நிச்சயம் உங்களைப் பற்றிய மேம்பட்ட புரிதலை ஏற்படுத்தும்.