kamagra paypal


முகப்பு » அஞ்சலி, ஆளுமை, இலக்கியம்

அசோகமித்திரன் அஞ்சலி

அசோகமித்திரன் நினைவுகள்

மொழி மயக்கத்தில் கட்டுண்டு, பண்பாட்டுப் பெருமிதங்களில் சிறைப்பட்டு, ஆதாரமற்ற- அதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கைக்கொள்ளவும் கைவிடவும் தக்க கருவியாய் பயன்படும் தன்மை கொண்ட – பகைமைகளால் பிளவுபட்டு, இயல்பு நிலை என்னவென்பதை அறியாத காரணத்தால் இலக்கற்ற திசையில் தமிழகம் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சாதாரண மொழியில் சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை உள்ளபடியே எழுத முற்பட்டவர் அசோகமித்திரன். பெருங்கூட்டமாய் உரத்து ஒலித்த ஆரவார கோஷங்களுக்கு இடையில் சன்னமாய், தனித்து ஒலித்த அவரது குரல் முகமற்ற, நாவற்ற தனி மனிதர்களுக்காக பரிந்துரைத்த குரல், அவர்களுக்குரிய நியாயத்தை எடுத்துரைத்த குரல். எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அவர் முன்வைக்கும் விமரிசனத்தை தமிழகம் எதிர்கொண்டாக வேண்டும் – நீதிக்கான தேவை இருக்கும்வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எளிய மனிதர்களின் எளிய வாழ்வை அகலாது உற்று நோக்கிய அசோகமித்திரனின் பார்வைக்குரிய தீர்க்கம் அவர் தலைமுறையில் மிகச் சிலருக்கே இருந்திருக்கிறது. இன்று அவரை நாம் இழந்திருக்கிறோம், ஆனால் இனி அவரது அக்கறைகள் நம்மோடிருக்கும், அவரது எழுத்துக்கும் பொருளிருக்கும்.

சொல்வனம் அசோகமித்திரனின் பங்களிப்பை தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. அதன் நூறாவது இதழை ‘அசோகமித்திரன் சிறப்பிதழ்‘ என்றே கொண்டாடியிருக்கிறது. தொடர்ந்து அவரையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து சொல்வனம் ஊக்கம் பெறும்.

~oOo~

உண்மையின் அதிராத எழுத்து

வ.ஸ்ரீநிவாசன்

 

நவீன தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த எழுத்தாளர். பணம், புகழ் போன்ற சின்னக் கவலைகளால் தின்னப்படாது, எழுத்து தரும் ஆனந்தத்துக்காகவே எழுதியவர். அதனால்தான் தூய அறிவை, தியாகங்களை, மேதைமையை நலங்கெடப் புழுதியில் எறிந்திடும் சூழலிலும் இறுதிவரை உயர்தர அறிவுத்தளத்தில் இயங்கியவர்.

“இன்றைய மனநிலையில ஒரு வாசகனை வியர்வை சிந்த வைக்காம ஓர் உயரிய நிலையில உற்சாகம் (இது சோகத்துக்கும் பொருந்தும்) தருகிற படைப்புகளா எழுதப்படணும்னு விரும்புவேன்” என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அது போலவே என்றும் எழுதவும் செய்தார். வெவ்வேறு பின்னணி கொண்ட பலதரப்பட்ட மனிதர்களின் மனங்களையும் தொட்டவர்; என்றாலும் “பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுது போக்கியிருக்கேன். (சிரிக்கிறார்) நான் எழுதியதை சிலபேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.” என்று இலேசாகச் சொல்லும் அகங்காரம் அறவே அற்ற மாமேதை. அவர் மறைவின் துயரில் அனைவரோடும் சொல்வனம் பங்கேற்கிறது.

அசோகமித்திரனின் ‘இன்று‘ கதையில் ஒரு பகுதி :-

“முழுப் பிரக்ஞையுடன் எந்தத் தெய்வத்தையும் நினையாமல் யாருக்கும் நன்றி தெரிவிக்காமல் எவரையும் சபிக்காமல், சீதா அந்த மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவரிலிருந்து கீழே குதித்தாள். அப்போதுகூட புடைவை பறந்துவிடக் கூடாதென்று புடைவையின் முன்கொசுவத்தைத் தன் இரு கால்களுக்கிடையில் நெருக்கிப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவள் அந்தரங்கத்தில் ஒரு மாடியளவு தூரம் விழுவதற்குள் அவளுடைய நினைவு தவறிவிட்டது. பிரக்ஞை தவறிய அவளுடைய உடல் இன்னொரு மாடி தூரம் விழுவதற்குள். அவள் விழுவதால் திடீரென்று ஏற்பட்ட காற்றழுத்த மாறுதலைத் தாங்க இயலாத அவளுடைய சுவாசம் மூச்சடைத்து நின்றுவிட்டது. இன்னொரு மாடி கடப்பதற்குள் அவளுடைய தலைப்பாகம் கீழுக்குத் தழைந்து விட்டது. அது தரையில் மோதி சிதறிய போது சீதா இறந்து போய் ஒரு விநாடிக்குச் சற்றுக் குறைவாகவே இருந்தது.”

~oOo~

“எல்லா சிரமங்களையும், துயரங்களையும் அனுபவித்தாயிற்று”

– அக்டோபர் 1991 சுபமங்களா இதழில் அசோகமித்திரன்

முழுநேர தமிழ் எழுத்தாளனாக வாழ்வதை பற்றி சுருக்கமாக அசோகமித்திரன் சொன்னது இது. அவரின் படைப்புகள் போல கச்சிதமாக, வார்த்தைகளை விரயம் செய்யாமல் சொன்னது.

அசோகமித்திரன் எழுத்துக்களை ‘சாதாரணத்துவத்தின் கலை’ என்றுதான் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த ஒரு அடைப்புக்குள் ஒரு எழுத்தாளரால் சுமார் 200+ கதைகளை எழுதமுடியுமா , அப்படி எழுதினாலும் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளால் முன்னோடியாகக் கருதப்படுவாரா என்பது சந்தேகமே. மிகையுணர்ச்சியை மையமாகக் கொண்டவர்களால் மட்டுமே அசோகமித்திரனை மேற்சொன்னபடி வகைப் படுத்தமுடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அவரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் ஆழ்ந்து படிப்பவர்களால், அவர் சொல்லாமல் விட்ட பல அடுக்குகளை (காலம் கடந்தாவது) அறியமுடியும். இது ஒரு வாசகனுக்கு மிகப் பெரும் சவால். அவரின் ‘கண்ணாடி’, ‘விழா மாலைப்போதில்’, ‘இருவருக்கு போதும்’, ‘விடுதலை’, ‘பாவம் டால்பதேடோ’, ‘இன்ஸ்பெக்டர் செண்பகராமன்’ போன்ற படைப்புகளைப் பற்றி பேசாமல் தமிழ் இலக்கிய வரலாறு முடியாது.

அசோகமித்திரனைப் படிக்க ஆரம்பித்தது 1990-களில். 27 வருடங்களாக அவர் படைப்புகளை மீண்டும், மீண்டும் படிக்கும்போது முன்பு தவறவிட்டதை கண்டறியமுடிகிறது. இதை அவர் ஒப்புக்கொண்டதேயில்லை. எந்தப் புகழ்ச்சியையும் அவர் தன் படைப்புகளைப் போலவே மிகையில்லாமல் ஒதுக்கியிருக்கிறார். நேர்காணல்களில் அவர் கதைகளைக் குறிப்பிடும்போது அதைக் கூச்சத்துடன் ”அவை எல்லாம் வெறும் கதைகள் ஐயா. அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை’ (காலச்சுவடு நேர்காணல்) மறுக்கிறார். அவரின் கதைகளும் இதே அடக்கத்துடன்தான் இருக்கின்றன. ஆனால் படைப்பாளியையும் மீறிய பிரம்மாண்டமான உள்ளடக்கத்துடன்.

அவர் படைப்புகள் இருக்கும்வரை அவர் என்னிடமிருந்து மறையப் போவதில்லை.

ராஜேஷ் சந்திரா

 

~oOo~

பயணம்

எழுத்தாளர் அசோகமித்திரனை எப்போது வாசிக்கத் தொடங்கினேன் என நினைவில் இல்லை. தீவிரமான இலக்கியக் கதைகள் எனச் சொல்லி கைக்கு வந்து சேர்ந்த தொகுப்புகளில் அவர் இல்லை. தீவிரம் என்றாலே கடினமான மொழி, திருகலான அகமொழி வெளிப்பாடுகள், நெல்லைத் தெரு ஓரங்களில் கிடந்த கிரிம்ஸன் பூக்களின் அழகு என பூடகமாகவும் அலங்காரமாகவும் மிகுந்திருப்பவை. பல கதைகளை வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் மிகவும் சிரமப்பட்டேன் என்பதே உண்மை. அறிவியல் படிப்பில் நான் அறிந்த தர்க்கக்கட்டுக்குள் வராத வகையில் இலக்கியக்கதைகள் இருந்தன. சராசரியாக இருந்த அன்றாட நாட்களை அளவுக்கதிகமான சோகத்தில் தள்ளின பல கதைகள் . அறிந்திராத வாழ்க்கையைக் காட்டியதில் வெற்றிபெற்ற கதைகளை மனதுக்கு நெருக்கமானதாகவும், உள்ளதை உள்ளபடி காட்டிச் செல்வதாகப் புரிந்திருந்த கதைகள் சலிப்பேற்றுவதாகவும் தோன்றிய காலம்.

அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ அறிமுகமான காலமும் அதுதான். பரிந்துரையின் பேரில் படிக்கத் தொடங்கி பாதியில் நிறுத்தக்கூடாது என்ற வைராக்கியத்தால் தாவித்தாவி கடைசி பக்கத்துக்கு வந்தேன். தண்ணீர் பிரச்சனையைச் சொல்கிறாரா அல்லது சினிமாவினால் சீரழிந்த சகோதரிகளைப் பற்றிக் கோடிக்காட்டுகிறாரா எனும் குழப்பம் தீரவில்லை. நாவலில் அல்ல சிறுகதையே அசோகமித்திரனின் தனித்துவ உலகம் எனும் சொற்கேட்டு ‘வாழ்விலே ஒரு முறை’ சிறுகதைத் தொகுப்பு வாங்கினேன். அதையும் முழுவதுமாகப் படித்தேன் இல்லை. இயற்கையைப் பற்றி அனுசரணையானப் பார்வை இல்லை; கற்பனைவளம் கலந்த நடையுமல்ல; மிகத் தீவிரமான அககொந்தளிப்புக்கு ஆளாகும் மென்மனம் கொண்ட கலைஞனின் ஒரு நாளின் சித்தரிப்பும் அல்ல; ஒரு சமுதாயக்கீழ்மையை அல்லது மானுட மேன்மையைப் பற்றி ஒரு அவதானம் கூட இல்லை. வாசகனான என் மீது அனுதாபப்படக்கூட இல்லை. கதை ஏதோ ஒரு போக்கில் நடந்துபோய் அதுவாக முடிகிறது – சாலை ஓரத்தில் செல்லும் மெல்லிய ஓடையைப் போல. நான் படித்த கதையில், ஏதோ ஒரு ஊர்ச்சிறுவன் தனது பரிட்சையில் தோல்வி அடைந்துவிட்டு சைக்கிளை மிதித்தபடி ரயிலுக்கு சவால் விடும் வேகத்தில் செல்கிறான். ஜெயிக்க முடியாமல் முடிகிறது கதை. குறைந்தபட்சம் அவன் தனக்குள் பேசியபடியேனும் இருக்க வேண்டுமே! அதுவும் இல்லை.

தொடர்ச்சியாகப் பல பரிந்துரைகளில் அசோகமித்திரன் என்னைத் தொடர்ந்தபடி இருந்தார். எந்த எழுத்தாளர் பட்டியல் போட்டாலும் அதில் அவர் வந்துவிடுவார். சிலரது பட்டியலில் அவர் இருக்கமாட்டார் என்றாலும் அவரை எழுத்தாளரின் எழுத்தாளர் எனச் சொல்லிவிட்டுத் தொடங்கியிருப்பார்கள்.

அண்டை மாநில இலக்கிய ஆளுமைகளும் அசோகமித்திரன் புகழ் பாடி குழப்ப வைத்தார்கள். பால் ஸக்கரியா, யு.ஆ.அனந்தமூர்த்தி, அரவிந்த் அடிகா எனப்பலரும் அவரது உலகைப் பற்றி எழுதினார்கள். இந்திய இலக்கியத்தின் ஆகப்பெரிய சொத்து என்பதே எல்லாருடைய பொதுவான அபிப்ராயமாக இருந்தது. இம்முறை நானும் பாராட்டியே தீருவது எனும் முடிவோடு “காலமும் ஐந்து குழந்தைகளும்” எனும் சிறுகதையைப் படிக்கத் தொடங்கினேன். அங்கு சைக்கிள் என்றால் இங்கு ரயில். ரயிலுக்குத் தாமதமான ஒருவன் அதைப் பிடிக்க ஓடுவதாகத் தொடங்கிய கதை பேசின் பிரிட்ஜ் தாண்டும்வரை நினைவுகளிலேயே சஞ்சரிப்பது போலொரு பிரமையை ஏற்படுத்தியது. ரயிலைத் தவறவிட்ட மன உளைச்சலில் இப்படியெல்லாம் கற்பனை செய்கிறான் (ஆசிரியரும்) என நினைத்தபடி கதையைப் படித்து முடித்தேன். பல விமர்சனங்களில் இந்த கதை பற்றி பாராட்டுகள். இக்கதை பற்றி பிற எழுத்தாளர்கள் எழுதியதைப் படித்தேன். நிச்சயம் எங்கோ தப்பு இருக்க வேண்டும் – என்னிடம் தான் – எனப்புரியத் தொடங்கியது.

தமிழிலக்கத்தின் ஆரம்ப நிலை வாசகருக்கு ஏற்படும் இயல்பான நிலைதான் இது. அசோகமித்திரன் கதையின் எளிமை ஏமாற்றும். அதில் வரும் எளிமையான மனிதர்கள் நம் அன்றாட வாழ்வில் உதாசீனத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர் காட்டும் உலகம் நமது மேல்தட்ட வாசிப்பில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவரது கோபம் நம் நரம்புகளைப் புடைக்க வைக்காது. தொடையைத் தட்டி கண்டனம் காட்ட நம்மை எழுப்பாது. நமக்குப் போக்குக் காட்டி ஓடி ஒளிந்துகொள்ளும்.

இலக்கிய வாசிப்பு என்பது ஒரு பயிற்சி எனும் சூட்சுமம் புரிய இன்னும் பல வருடங்களாயின. இலக்கிய நுணுக்கங்களும் வாழ்க்கைப் பார்வையும் பல கதைகளை மீளப்படித்து ரசிக்க வேண்டிய நிர்பந்ததுக்கு உள்ளாக்கியது. விமர்சனங்களும், கதைகளைப் பற்றிய என் பார்வையும், தொடர் வாசிப்பால் எழுத்தாளரின் வாழ்க்கை பார்வையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இன்றும் ஒரு பயணமாகத் தொடர்கிறது. கதைகளின் மூலம் அவரது கலைமனதை ஏதோ ஒருவகையில் புரிந்துகொண்டுவிடமுடியும் எனும் எண்ணத்தோடு கூடிய பயணம்.

‘மழை’, ‘பிரயாணம்’, ‘திருப்பம்’, ‘எலி’, ‘புலிக்கலைஞன்’, ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’, ‘தொப்பி’ என விதவிதமானக் கதைகளில் அசோகமித்திரன் காட்டிய வாழ்வின் நிறங்கள் எண்ணிலடங்காதவை. மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. சிறிய காட்சிகளில் வாசிப்பின்பத்தைக் கணிசமாகக் கூட்டும் இயல்பு அவரது முதல் கதையிலிருந்து அமைந்திருப்பது வியப்புக்குரியது.

ஒரு சிறுகதைத் தொகுப்பை ஒட்டு மொத்தமாகப் படிக்கும்போது எவ்விதமான சலிப்பும் எரிச்சலும் அடையாமல் மிக்க ஊக்கத்தோடும் மன எழுச்சியோடும் படிக்க முடிந்த ஒரே எழுத்தாளராக அசோகமித்திரனை இன்றளவும் நினைக்க வைக்கிறது. என்னளவில் இக்கூற்றை பொய்யாக்ககூடிய மற்றொரு தமிழ் எழுத்தாளர் இல்லை.

மிகக் குறைவான சொற்களஞ்சியத்தைக் கொண்டு பலவித வாழ்க்கை தருணங்களை சிறுகதை, குறுநாவல்கள், நாவல்களாக கடந்த அறுபதாண்டுகளாகத் திரும்பத் திரும்ப மாற்றிய விந்தை தமிழிலக்கியம் உள்ளவரை புலப்படாத புதிராகவே இருக்குமென்று தோன்றுகிறது. கடந்த மாதம் எத்தனை தடவை எனக்கணக்கில் இல்லாத முறையாக படித்த ‘இன்ஸ்பெக்டர் செண்பகராமன்’ குறுநாவலில் வரும் காதலிலும் கொஞ்சம் மிச்சம் இருக்கும் விந்தை அது. காலத்தை நொடிப்பொழுதில் ஒட்டுமொத்த வாழ்க்கை அனுபவமாக வளைத்துக் காட்டும் “காலமும் ஐந்து குழந்தைகளும்” சிறுகதையின் இன்னும் புலப்படாத வித்தை மிச்சம் உள்ளது. ‘தந்தைக்காக..’ நரசிம்மாவின் எரிச்சலில். ‘குகை ஒவியங்கள்’ கதையில் மலையிறங்கும் சுற்றுலாப்பயணிகளின் மெளனத்தில். ‘அவனுக்குப் பிடித்த நஷத்திரம்’ காட்டும் முழுமையில். ‘வரவேற்பறையில்’, ‘விமோசனம்’ கதையில் தெரியும் வாத்ஸல்யத்தில். கதைக்குப் பின்னால் நம் கையில் நழுவும் பிடிபடாத்தன்மையும் புதிர்களனும் ஒவ்வொரு கதையிலும் நமக்குக் கிடைக்கும் அற்புதம். இதுவே இவரது கதைகளை உறைநிலைக்குத் தள்ளாது என்றும் புதிதாக வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. தர்க்கபுத்தியினாலும், மொழியாழத்தின் சாதூர்யத்தாலும் எட்ட முடியாத ஆழத்தைக் கொண்ட புதிர்தன்மை மிக்கக்  இவரது  கதைகள் ஜீவத்துடிப்புடன் என்றென்றும் இருக்கும்.

இலக்கிய அன்பர்கள் சார்பில் எழுத்தாளரின் எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு அஞ்சலி!

ரா. கிரிதரன்

 

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.