kamagra paypal


முகப்பு » ஆளுமை, சமூக வரலாறு, வரலாறு

பெண்ணுரிமை பேசிய முன்னோடி வ.உ.சி

வ.உ.சிதம்பரனார் பெண்களை மிகவும் மதித்த ஒரு முற்போக்குவாதி

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்வி கற்பதற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. ஆனால் வ.உ.சி. பெண்களும் ஆண்களைப் போலவே கல்வி கற்பதற்கு சம உரிமை உள்ளவர்கள் என்று வலியுறுத்துகிறார். வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூலே “மெய்யறம்” ஆகும். வ.உ.சி. இந்நூலில் புரட்சிகரமான கருத்துக்களையும் முன் வைக்கிறார். இந்நூலில் முதல் அதிகாரத்தில் மாணவர்களைப் பற்றிக் கூறுகிறார். அவ்வதிகாரத்தில் இரண்டாவது வரி “ஆணும் பெண்ணும் அது செய்ய (கல்வி கற்க) உரியர்”. அவ்வரி அவரது இக்கருத்தை விளக்குகிறது. ஏழாவது அதிகாரத்தில் ஆசிரியர்களின் நற்குணங்களைப் பற்றி விளக்குகிறார். இந்த அதிகாரத்தில் இரண்டாவது வரியில் ஆண், பெண் இருவருமே ஆசிரியராகத் தகுதி உடையவர்கள் என்று கூறுகிறார். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் கல்வி கற்பதே சாத்தியக் குறைவான விஷயம். ஆனால் வ.உ.சி. பெண்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் ஆசிரியர்களாகவும் ஆகலாம் என்று சிந்திக்கிறார்.

வ. உ. சி. இல்வாழ்வியலில் “உயிர்த்துணை கொள்ளல்” என்னும் அதிகாரத்தில் (எண்:33) “துணையிழந்தாரை மணப்பது புண்ணியம்”(எண்:326) என்று குறிப்பிடுகின்றார். அவர் மறுமணம் குறித்துப் பேசுகிறார். அது உண்மையில் மிகவும் புரட்சிகரமான கருத்துதான். ஒரு விதவைப் பெண் எவ்வளவு இளம் வயதினளாக இருந்த போதும் தனிமையில்தான் வாழ வேண்டும் என்று சமூகம் எண்ணியிருந்த காலகட்டத்தில் துணையிழந்தாரை மணப்பது புண்ணியம் என்று எழுதியுள்ளார். ‘உடன்கட்டை ஏறுதல், குழந்தை மணம்’ ஆகிய கருத்துக்கள் பரவலாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த அக்காலகட்டத்தில் வ.உ.சி. கூறும் விதவைத் திருமணம் என்பது வெகு சிலரே ஏற்கத் தக்கதாகும். வ.உ.சி. யின் இச்சீர்திருத்த நோக்கு எதிர்ப்பையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. வ.உ.சி. யின் இக்கருத்துக்கு சுப்ரமண்ய சிவம் அவர்கள் மறுப்பு தொ¢வித்துள்ளார்.

“இல்வாழ்வியலில் ‘உயிர்த்துணை கொள்ளல்’ என்னும் அதிகாரத்தில் ‘துணையிழந் தாரை மணப்பது புண்ணியம்’ என்று பிள்ளையவர்கள் எழுதியிருக்கின்றனர். இதனால் இவர் ‘விதவா விவாகம்’ செய்யலாம் என்ற கொள்கையைப் பின்பற்றுபவர் என்று தொ¢கிறது. ‘விதவா விவாகம்’ செய்யலாம் என்று மாத்திரம் அன்று. புண்ணியமென்றும் கூறியிருக்கின்றனர். ஆதலால் நமது தேச நன்மைக்கு விதவா விவாகம் அவசியம் என்பது இவர் கருத்துப் போலும். நாம் இவ்வபிப்பிராயத்திற்கு முற்றிலும் மாறுபடுகின்றோம்.”

முப்பத்து நான்காவது அதிகாரத்தில் முதல் வரி: “இருவருள் அறிவில் பெரியவர் ஆள்க”. இரண்டாவது வரி: “ஆண்பால் உயர்வெனல் வீண்பேச்சு என்க”. வ.உ.சி. அவர் கருத்துகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார். ஆண்களைப் போலவே பெண்களும் அறிவுடையவர்களாக இருக்க முடியும் என்று அவர் கருதுகிறார். ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்பது வீண் பேச்சு என்கிறார். அதனால் ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் கலந்தாலோசித்து எல்லா விஷயங்களையும் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்வது விரும்பத் தகுந்தது என்று கூறுகிறார். அவர் இதை சொல்லுவதுடன் நிறுத்தவில்லை. செயலிலும் காட்டுகிறார். எதையும் மனைவியுடன் ஆலோசித்தே செய்வதை சுயசா¢தையில் வெளிப்படையாகக் கூறுகிறார்.

வ.உ.சி. க்கு 1895-ல் முதல் திருமணம் நடந்தது. மனைவி பெயர் வள்ளியம்மை. அறிவிலும் பண்பிலும் அன்பிலும் சிறந்த மங்கை.   வ.உ.சி. ராமையா தேசிகர் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை வீட்டில் வைத்துப் பராமரிக்கிறார். வ.உ.சி. யின் மனைவியும் தேசிகரை அன்புடன் பராமா¢க்கிறார். அடுத்து, ஊரில் உள்ளவர்கள் ராமையா தேசிகர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சொல்கிறார்கள். வ.உ.சி. க்கு அவரை வீட்டைவிட்டு அனுப்ப மனமில்லை. மனைவியிடம் ஆலோசனை கேட்க செல்கிறார். வ.உ.சி. பிரச்சினை என்னவென்று கூறுவதற்கு முன்பே அவரது மனைவி வ.உ.சி. முன்பு கூறியதையே பதிலாகக் கூறுகிறார். “எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருக்கிறார். உருவம் முதலியவற்றில் எந்த சாதி வேறுபாடும் தெரிவதில்லை. எனவே குலம் என்பது கற்பனையே. குலத்தை வைத்து வேறுபாடு காண்பது பிழை என்று சொல்லிய தூயவரே! ஊரார் சொற்களை நாம் ஏற்க வேண்டாம்.”

வக்கில் தொழிலில் வ.உ.சி. கட்டிக்காத்து வந்த ஒழுக்க நெறிக்கு வள்ளியம்மையும் துணை நின்றார். ஒரு முறை ஓர் உறவினர் ஒரு வழக்கை நடத்துவதற்காக கட்சிக்காரரை அழைத்து வந்துவிட்டு பின் கமிஷன் கேட்கிறார். உடனே அவர் தானாக முடிவு செய்யாமல் மனைவியிடம் ஆலோசனை கேட்கிறார். அவர் மனைவி வள்ளியம்மை “முன்பணத்தைத் திருப்பித் தந்துவிடுங்கள்,” என்று ஆலோசனை கூறுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக 1901- ல் வள்ளியம்மை தலைப் பிரசவத்தில் இறந்துவிட்டார். அவரிடம் இருந்த பாசத்தால் “அவளினம் நீங்கிக் கொள்ளேன்” என்ற தனது தந்தையிடம் கூறினார். அவரின் உறவினரான மீனாட்சி அம்மையாரையே அவரது தந்தை மணம் முடித்து வைத்தார். வள்ளியம்மை பெருமையை சுயசரிதையில் கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம்,

“இதம் உடையவர்குணம் இயம்பல் நன்றென்றும்
முன்னோர் உரைத்ததால் மொழிகுவேன் அவள் குணம்
பின்னோர் அவற்றைப் பேணுதற் பொருட்டே”

இது தவிர தனது முதல் மனைவி பற்றி “வள்ளியம்மை சரித்திரம்” என்ற தனி நூலே வெளியிட்டுள்ளார்.

செட்டி நாட்டு சொற்பொழிவில் வ.உ.சி. கூறுகிறார், “நம் நாட்டில் பெண்மக்களைச் சமைக்கும் இயந்திரமாகச் செய்துவிட்டனர். இந்நாட்டில் (செட்டி நாட்டில்)அது இல்லை என எண்ணுகிறேன். பிள்ளை பெறும் இயந்திரமாக அனைவருமே செய்துவிட்டோம். நம்மைப்போல் பெண்கட்கும் சம உரிமையிருத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்து செய்தல் அவசியமாகும். ஆனால் அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களா என்று பார்க்கின் இல்லை. ஏன்? அவர்கட்கு கல்வி இல்லாமையே. எனவே பெண்கட்கு கல்வி கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்நாட்டில் மனைவியோடு பேசுவது கஷ்டமென்று என் நண்பர் சொன்னார். இது மிக மோசமானது. பெண் மக்களும் தங்கள் கணவர்களை நன்கு மதித்து நடக்க வேண்டும். கணவரின் எச்சில் இலையில் சாப்பிடும் பழக்கம் எங்கள் ஜாதியில் உண்டு. இங்கு உண்டோ என்னமோ தெரியவில்லை. (உண்டு, உண்டு என்று ஜனங்கள் கூறினர்.). எனக்குக் கல்யாணம் ஆனது முதல் எச்சில் இலையில் உண்ணக்கூடாது என்று என் மனைவிக்கு உத்தரவிட்டு விட்டேன். பெண்கட்கு சம சுதந்திரம் கொடுக்க வேண்டும்.”

சுமார் 100 ஆண்டுகட்கு முன்பே வ.உ.சி. பெண் கல்வி குறித்தும் பெண் சுதந்திரம் குறித்தும் பெண்களுக்கான சம உரிமை குறித்தும் முற்போக்காக சிந்தித்துள்ளார்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.